6 ஆண்டுகளில் இணையதள தடைவிதிப்பால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பில், 1.2 மடங்கு தூய்மை இந்தியா திட்டத்துக்கு செலவிடலாம்
மும்பை: கடந்த 2017ஆம் ஆண்டுடனான 6 ஆண்டுகளில், இந்தியாவில் 16,315 மணி நேரம் இணையதளம் முடக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பின் மதிப்பு, 3.04 பில்லியன் டாலர் (ரூ. 21,336 கோடி). இது, தூய்மை இந்தியா திட்டத்துக்கு 2018-19ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை போல் 1.2 மடங்கு என்று, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின், சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICRIER) அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் மொபைல்போன் இணையதளம் 12,615 மணி நேரம் முடக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு, சுமார் $ 2.37 பில்லியன் (ரூ 16,590 கோடி) ஆகும். கடந்த 2012 முதல் 2017 வரை, 3700 மணி நேரம் மொபைல் இணையதளம் மற்றும் நிரந்தர கம்பிவழி இணையதளம் சேவைக்கு தடை விதித்தால் ஏறத்தாழ 678.4 மில்லியன் டாலர் (ரூ.4,746 கோடி) என்று, இத்தகைய தடைவிதிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார தாகத்தை ஆய்வு செய்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் மொபைல்போன் பயன்பாடு 10% அதிகரிப்பு என்பது, சராசரியாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.6% உயர்த்துகிறது; இந்தியாவின் இணையதள பயன்பாடு 10% அதிகரித்தால் (மொபைல்போன் மற்றும் நிலைத்த இணைப்பு) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.1% அதிகரிக்கும் என்று அறிக்கை ஒன்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், இணையதள தடைவிதிப்பின் மதிப்பு, 2015-16ஆம் ஆண்டில் $ 968 மில்லியன் (ரூ. 6,485 கோடி); இது, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 19 நாடுகளில் அதிகபட்சமாகும். போரால் பாதிக்கப்பட்ட ஈராக் போன்ற 22 நாடுகளிலும் இணையதள பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது என்று, 2016ஆம் ஆண்டு அக்டோபர் 26-ல் இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்திருந்தது.
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டுடனான ஆறு ஆண்டுகளில், இணைய பயனர்களின் எண்ணிக்கை, 324% அதிகரித்துள்ளது; அதாவது, 92 மில்லியன் என்ற எண்ணிக்கை, 390 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் ஒப்பிடும் போது சீனாவில், 60% அதிகரித்து 750 மில்லியன் பேர்; ஜப்பானில் 20% அதிகரித்து, 120 மில்லியன் பயனாளர்கள்; அமெரிக்காவில் 14% உயர்ந்து, 250 மில்லியன்; பிரேசிலில் 63% அதிகரித்து, 130 மில்லியன் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என, சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி, 2018, ஆகஸ்ட் 14-ல் இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.
இணையதள முடக்கத்தை அதிகம் சந்தித்த ஜம்மு காஷ்மீர்
கடந்த 2017ஆம் ஆண்டுடனான 5 ஆண்டுகளில், வேறு மாநிலங்களைவிட அதிகமாக, ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. இம்மாநிலத்தில், 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2017-ல், 10 மடங்கு அதிகரித்து, 32 முறை இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. அதே காலத்தில் இந்தியாவில், 22 மடங்கு அதிகரித்து, 70 முறை தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஜம்மு காஷ்மீரில் 7,776 மணி நேரங்கள் இணையதள சேவை தடை செய்யப்பட்டது; அடுத்து அதிகம் தடை செய்யப்பட்ட மேற்கு வங்கத்தைவிட இது 3 மடங்கு அதிகமாகும். நாடு முழுவதும் 16,315 மணி நேரம், 2017ஆம் ஆண்டின் தடை அளவில் பாதி, இணையதள பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
Source: The Anatomy Of An Internet Blackout: Measuring The Economic Impact Of Internet Shutdowns In India, ICRIER (April, 2018)
தெற்காசிய நாடுகளின் மக்கள், 2017 மே முதல், 2018 ஏப்ரல் மாதத்துக்கு இடையே 97 முறை இணையதள தடைவிதிப்புகளை சந்தித்துள்ளன. இதுபோன்ற தடைவிதிப்புகள் எழுத்து மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது; இந்தியாவில் இத்தகைய 82 வழக்குகள் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அறிக்கையை மேற்கோள்காட்டி, 2018 மே 14-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இணையதள வளர்ச்சி, மின்னணு உள்கட்டமைப்புகளை அரசுகள் ஆதரித்தாலும், தணிக்கை, தடை செய்தல், முடக்குதல், மூட உத்தரவிடுதல் போன்றவையும் இருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 2018 ஜூன் மாதத்துடன் முடிந்த 18 மாதங்களில், 1661 இணையதள பயன்பாட்டு இடங்கள், சமூகவலைதள பதிவுகள் முடக்கப்பட்டதாக, 2018, ஆகஸ்ட் 14-ல் இந்தியா ஸ்பெண்ட் செய்தி குறிப்பிட்டிருந்தது.
இணையதளம் தடைக்கும், வாழ்க்கை மற்றும் சொத்து இழப்புக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்தவொரு வலுவான ஆதாரமும் இல்லாத நிலையில், இணையதள முடக்கம் மட்டும் மக்கள் மத்தியில் வன்முறை கருத்து பரவுவதை எப்படி தடுக்கும் என்று, ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர். அறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 முதல், 2017ஆம் ஆண்டு வரை 4,799 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளதாக, 2018, பிப். 7ல் உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, 2018 மே 18-ல் இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் 2016-ல் இருந்தும், மேற்கு வங்கத்தில் 2017ஆம் ஆண்டில் இருந்தும் இணையதளம் முடக்கப்பட்டது, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
இணையதள முடக்கத்தால் அதிக பொருளாதார பாதிப்பை சந்தித்த குஜராத்
கடந்த 2012-17ஆம் ஆண்டுக்கு இடையே, 10 சந்தர்ப்பங்களில் குஜராத்தில், 724 மணி நேரம் இணையதள சேவை முடக்கப்பட்டது. இது, காஷ்மீர் மாநிலத்தின் 7,776 மணி நேரத்துடன் ஒப்பிடும் போது குறைவு என்ற போதும், பிரதமரின் சொந்த மாநிலத்தில் தான் அதிக பொருளாதார இழப்பு ஏற்பட்டது. 2015ஆம் ஆண்டு மொபைல்சேவை முடக்கத்தால், மாநிலத்தில் 1.12 பில்லியன் டாலர் (ரூ. 7,844 கோடி) இழப்பு ஏற்பட்டது. இது, மாநிலத்தில் பட்ஜெட் தொகையான, ரூ.1.84 லட்சம் கோடியில், 4.3% ஆகும்.
பட்டேல் சமூக தலைவரான ஹர்திக் பட்டேல், 2015 செப். 19-ல் சூரத்தில் அரசால் பிடித்து வைக்கப்பட்டார். அந்நேரத்தில் வன்முறை பரவலை தடுக்க, குஜராத் அரசு, அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் மற்றும் மெஹ்சானா உள்ளிட்ட பிரதான நகரங்களில் மொபைல் இணைய மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை தடை செய்ததை, 2015, செப்.19-ம் தேதியிட்ட பிஸினஸ் ஸ்டாண்டர்ட் இதழ் செய்தி குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2016, ஏப்ரல் 18-ல் குஜராத்தில் இணையதள சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டதால், 90% மொபைல்போன் வழி பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டு, ரூ.1500 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக, 2016 ஏப்ரல் 19-ல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.
Source: The Anatomy Of An Internet Blackout: Measuring The Economic Impact Of Internet Shutdowns In India, ICRIER (April 2018)
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள பயன்பாடு முடக்கம் குறித்த எண்ணிக்கையை விட அதிக அளவில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், ஹரியானா போன்ற மாநிலங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அமலில் இருந்த முடக்க நடவடிக்கைகள் வெவ்வேறு வகையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில், $ 610.24 மில்லியன் (ரூ.4,273 கோடி ரூபாய்) அளவுக்கு பொருளாதார தாக்கத்தை சந்தித்து, இரண்டாவது இடத்தில் உள்ளதாக, ஐ.சி.ஆர்.ஐ.இ.ஆர். தெரிவிக்கிறது. ஹரியானாவில் 429.2 மில்லியன் (ரூ.3,005.6 கோடி); வடகிழக்கு மாநிலங்களில் 148.8 மில்லியன் டாலர் (ரூ. 1,042 கோடி) அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது.
(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.