பெங்களூரு: இந்தியாவின் பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி - டி.ஆர்.இ (DRE) துறை - இது, உள்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குகிறது, சேமிக்கிறது மற்றும் விநியோகிக்கிறது - வரும் 2022-23 ஆம் ஆண்டுக்குள் 1,00,000 பேருக்கு வேலைகளை வழங்க முடியும் என்று ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

இந்த வேலைகளில் பெரும்பாலானவை நீண்ட காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இத்துறையில் உள்ள தொழிலாளர்களில் பெண்கள் கால் பங்கு மட்டுமே இருப்பார்கள். அத்துடன், மினி கிரிட் சந்தை “விரைவான வேகத்தில் தொடர்ந்து விரிவடைந்தால்”, டி.ஆர்.இ துறையில் தொழிலாளர் எண்ணிக்கை இரு மடங்காக - அதாவது, 2017-18இல் சுமார் 95,000 வேலைகள் என்பது, வரும் 2022-23இல் 190,000 வேலைகள் என- உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

டி.ஆர்.இ துறையில் முறைசாரா வேலைகளின் எண்ணிக்கை சுமார் 210,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று, எரிசக்தி வேலை கணக்கெடுப்பு 2019: எரிசக்தி அணுகல் தொழிலாளர்கள் என்ற பவர் பார் ஆல் என்ற முதல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டி.ஆர்.இ. துறையை அளவிட பிரச்சாரம் செய்யும் இந்த அமைப்பு ஜூலை 15, 2019இல் அறிக்கை வெளியிட்டது.

இந்தியா, 45 ஆண்டுகாலத்தில் இல்லாதபடி, அதிக வேலையின்மை விகிதத்தை எதிர்கொள்ளும் நேரத்தில், இது வருகிறது என்று, மே 2019 இல் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்ட காலநிலை தொழிலாளர் திறன் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 1991 இல் பொருளாதார தாராளமயமாக்கல் தொடங்கி 22 ஆண்டுகளில் இந்தியாவில் கிட்டத்தட்ட 6.1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன; இதில், 92% முறைசாரா பணிகள் என்று, இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு கூறுகிறது.

நீடித்த அபிவிருத்தி இலக்கு -எஸ்டிஜி (SDG) 7 (அனைவருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் நவீன ஆற்றலுக்கான அணுகல்) மற்றும் எஸ்டிஜி 8 (அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் கண்ணியமான வேலை) இடையே இணைப்பை ஆராயும் ஒரு அடிப்படை அமைப்பை நிறுவ, இந்த அறிக்கை 2017-18 ஆம் ஆண்டிற்கான டி.ஆர்.இ வேலைவாய்ப்பு தரவை ஆராய்கிறது.

இந்த அறிக்கை இந்தியா, கென்யா மற்றும் நைஜீரியாவை உள்ளடக்கியது: 2022-23 வாக்கில் இந்த நாடுகளில் டி.ஆர்.இ துறையானது, 260,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் முறைசார்ந்த வேலைகளைச் சேர்க்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த துறையில் 36 நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

புதுப்பிக்கத்தக்க பயன்பாட்டு நிறுவனங்களே “வேலை இயந்திரம்”

கடைசி பயனர் தயாரிப்புகளை வழங்குபவர்கள் - அதாவது பிகோ சூரிய சக்தி சாதனங்களை விற்கும் நிறுவனங்கள் (அவை கால்குலேட்டர்கள், கேமராக்கள் மற்றும் மொபைல் போன் போன்ற கேஜெட்டுகளுக்கு சிறிய அளவிலான ஆற்றலை பயன்படுத்துகின்றன), சூரியசக்தி இல்ல அமைப்புகள் மற்றும் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கான பிற சிறிய ஆப்-கிரிட் உபகரணங்கள் - ஆகியன “இத்துறையின் வேலை இயந்திரம்”, என்று அறிக்கை கூறுகிறது. 2022-23 ஆம் ஆண்டில் அவை, நாடு முழுவதும் 86,000 நேரடி, முறைசார்ந்த வேலைகளை சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017-18 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 95,000 டி.ஆர்.இ வேலைகளில், இந்த நிறுவனங்கள் மட்டுமே 97% ஏற்படுத்தின. அத்துடன் அவை 470,000 "உற்பத்தி-பயன்பாட்டு வேலைகளை" - புதிதாக வாங்கிய அல்லது மேம்படுத்தப்பட்ட மின்சார அணுகலின் விளைவாக டி.ஆர்.இ இறுதி பயனர்களால் உருவாக்கப்பட்ட - அதே ஆண்டில் சேர்த்தன.

"இந்த நேரடி, முறைசார்ந்த வேலைகளில் பெரும்பகுதி (85%) முழுநேர மற்றும் நீண்ட கால அல்லது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும்; ஏனெனில் சராசரி பணியாளர் தக்கவைப்பு காலம் 39 மாதங்கள் ஆகும்," என்று அறிக்கை குறிப்பிட்டது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் 47,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது, 432,000 பேருக்கு வேலை கிடைத்தது என்று, அரசுகளுக்கு இடையிலான சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பின் அறிக்கையை மேற்கோள்காட்டி, ஜூலை 5, 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. சூரிய ஒளி மின்னழுத்தத்தொழில் அனைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்களின் மிகப்பெரியதாக இருந்தது; இது உலகளவில் 34 லட்சம் வேலைகளை கொண்டுள்ளது; இதில் சீனாவில் 22 லட்சம் மற்றும் இந்தியா 164,000 பணிகளை கொண்டிருப்பதாக, அது மேலும் தெரிவித்தது.

திட்ட உருவாக்குநர்கள் மற்றும் நிறுவிகள் - பொதுவாக சில நூறு வாட் முதல் சில கிலோவாட் வரையிலான பெரிய திட்டங்களுடன் பணிபுரியும் நிறுவனங்கள் - சுமார் 770 நேரடி, முறையான வேலைகள் மற்றும் 190 நேரடி, முறைசாரா வேலைகளை 9.5 மெகாவாட் (MW), 2017-18 ஆம் ஆண்டில் முழுமையான மற்றும் சூரிய மின் தொகுப்பில் ஏற்படுத்தின. 2022-23 ஆம் ஆண்டு வாக்கில், இத்துறையில் நேரடி, முறையான வேலைகளின் எண்ணிக்கை 108% இல் இருந்து 1,600 ஆகவும், நேரடி, முறைசாரா வேலைகள் 111% இல் இருந்து 400 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் “நாடு முழுவதும் குறைந்தது 10,000 ஆர்.இ. [RE - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி] அடிப்படையிலான மைக்ரோ மற்றும் மினி தொகுப்பு திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் நிறுவப்பட்ட ஆர்.இ. மெகாவாட் திறன் கொண்ட 500 மெகாவாட் திறன் அடைய இலக்கு வைத்துள்ளது”, என்று, ஆர்.இ. அடிப்படையிலான மினி / மைக்ரோ தொகுப்புகளின் 2016 வரைவு தேசிய கொள்கை தெரிவிக்கிறது.

பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் நம்பகமான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி விநியோக தொகுப்பு நீட்டிப்புக்கு மாற்றாக அல்லது தொகுப்பு வழங்கிய மின்சக்திக்கு கூடுதலாக, குறிப்பாக கிராமப்புறங்களில் வழங்குவதற்கான கணிசமான ஆற்றலைக் கொண்டுள்ளன.

வரும் 2022-23ஆம் ஆண்டுக்குள் 500 மெகாவாட் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படும் உயர் மினி-தொகுப்பு ஊடுருவலின் போது, “மினி-தொகுப்பு ஆபரேட்டர்கள், 90,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் முறையான வேலைகளை வழங்கலாம்” மற்றும் குறைந்த மினி-தொகுப்பு ஊடுருவல் சூழ்நிலையில் “60 மெகாவாட் மதிப்புள்ள மினி-தொகுப்பு ஆற்றல், 11,000 நேரடி, முறையான வேலைகளை வழங்கப்படும்”, என்று அறிக்கை குறிப்பிட்டது.

சூரியசக்தி நீர் உந்துதல் போன்ற உற்பத்தி-பயன்பாட்டு தேவைகளுக்கு அரசு ஆதரவு அளிப்பதால், சுமார் 10,000 கூடுதல் வேலைகளை சேர்க்கக்கூடும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

வரும் 2022-23 வரையிலான ஐந்தாண்டுகளில், கிசான் உர்ஜா சுரக்சா ஏவம் உத்தான் மகாப்யான் (விவசாயிகள் எரிசக்தி பாதுகாப்பு திட்டம்) அல்லது குசம் (KUSUM) திட்டம் வாயிலாக, 1.75 மில்லியன் சூரிய நீர் விசை இயக்க குழாய்களை அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. அரசு “இந்த [KUSUM] இந்திய எரிசக்தி பொருளாதாரத்தில், குறிப்பாக புரட்சியை ஏற்படுத்தும் என்பதை விநியோக நிறுவனங்களுக்கு புரிய வைக்க வேண்டும்; ஏனெனில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் சுமார் 23% ஐ விவசாயத்துறை பயன்படுத்துகிறது; ஆனால் கிட்டத்தட்ட 85% இழப்புகளுக்கு அதுவே காரணமாகிறது,” என்று பொருளாதார வல்லுனரும், பொதுக்கொள்கை நிபுணருமான துஷார் ஷா, மே 7, 2018 நேர்காணலில் இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இலக்காக, 175 ஜிகாவாட் -ஜி.டபிள்யூ (GW) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனில், அரசு 100 ஜிகாவாட் உற்பத்தி செய்ய திட்டம் இட்டுள்ளது. இதில், இந்தியா 30 ஜிகாவாட் பயன்பாடு மற்றும் சூரியசக்தி தகடுகள் மூலம் அடைந்துள்ளது; மீதமுள்ள 70 ஜிகாவாட் இந்த துறையில் 220,000 வேலைகளை சேர்க்கும் என்று, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் (CEEW) கவுன்சில் - சி.இ.இ.டபிள்யு. திட்ட முன்னெடுப்பாளரும், கணக்கெடுப்பின் ஆராய்ச்சி கூட்டாளியுமான நீரஜ் குல்தீப், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். இதில் சுமார் 199,000 தொழிலாளர், தீவிர சூரியஒளி தகடு துறையில் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

"விநியோகிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் வளர்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பினுள் பல்வேறு கட்டங்களில் வேலைவாய்ப்பை வழங்குவதில் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது, இதனால் கிராமப்புற சமூகங்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று இன் சி.இ.இ.டபிள்யு. தலைமை நிர்வாக அதிகாரி அருணபா கோஷ், செய்திக்குறிப்பில் தெரிவித்தார். "வருமான நிலைகளை அதிகரிப்பது இந்த சமூகங்களுக்கான வாங்கும் சக்தியை மேலும் அதிகரிக்கிறது, இதனால் அவை நம்பகமான மின்சார விநியோகத்தை மதிப்பிடுகின்றன, மேலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை சாதகமாக தாக்கம் உண்டாக்குகின்றன" என்று அவர் கூறினார்.

குறைந்த பெண்கள், டி.ஆர்.இ நிறுவனங்களில் இளைஞர் பணித்திறனை அதிகரிக்கும்

ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் போன்ற துறை சேவை வழங்குநர்களைத் தவிர, கிட்டத்தட்ட ஒவ்வொரு வகை டி.ஆர்.இ நிறுவனத்திலும் பெண்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது. இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட குறைவான பெண்கள் உள்ளனர்: கிராமப்புறங்களில் 18% க்கும் அதிகமானோர் வேலை செய்யவில்லை, இது 2011-12 ஆம் ஆண்டில் 25% என்பதை விடவும், நகர்ப்புறத்தில் 15% உடன் ஒப்பிடுகையில் 14% என்றும் குறைந்து இருந்ததாக, இந்தியா ஸ்பெண்ட் ஜூலை 2, 2019 கட்டுரை தெரிவித்தது.

அனைத்து நிறுவனங்களும் "இளைஞர்களைப் பணியமர்த்த அதிக விருப்பம்" காட்டியுள்ளன என்று அறிக்கை கூறியுள்ளது. இந்தியா, ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று, வேலையின்மை வளர்ச்சி குறித்த 2018 உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டது.

இறுதி-பயனர் தயாரிப்பு வழங்குநர் பிரிவில் நேரடி, முறையான வேலைகளில் 25% மட்டுமே பெண்கள் வைத்திருக்கிறார்கள் - அதாவது, கணக்கெடுக்கப்பட்ட மூன்று நாடுகளில் சராசரியாக (23%). இந்தியாவில், உலகளவில் 32% உடன் ஒப்பிடும்போது, சூரியத்தகடு துறை பணியாளர்களில் பெண்களின் பங்கு 11% மட்டுமே என்று கூறப்படுகிறது.

இறுதி-பயனர் தயாரிப்பு வழங்குநர்கள் முறைசாரா முறையில் அதிக பெண்களை - அதாவது, ஏறத்தாழ 60% - பயன்படுத்துகின்றனர். மேலும், இத்தகைய நிறுவனங்கள் உருவாக்கிய நேரடி, முறையான வேலைகளில் 86% உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பாதிக்கும் குறைவானவர்களுடன் ஒப்பிடும்போது திறமையானவை. இந்நிறுவன தொழிலாளர்களில் பாதி பேர் இளைஞர்கள் (15-24 வயது) உள்ளனர்.

டி.ஆர்.இ நிறுவனங்கள் உள்ளூரை சேர்ந்த பெண்களை விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுத்துகின்றன; இந்த பெண்கள் சமூக அமைப்புகள், செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் சமூகத்தில் தொழில்முனைவோராக செயல்படுகிறார்கள் என்று, சி.இ.இ.டபிள்யு. குல்தீப் கூறுகிறார்.

திட்ட உருவாக்குபவர்கள் மற்றும் நிறுவுபவர்கள் நேரடியாக முறையான தொழிலாரளர்களில் 25% பெண்களையும், 44% இளைஞர்களையும் தங்கள் பணியாளர்களாக கொண்டிருக்கும்போது, மினி-தொகுப்பு மின் நிறுவனங்கள் மோசமான பாலின சமநிலையைக் கொண்டுள்ளன; அதாவது, 2% பெண் தொழிலாளர்களை மட்டுமே கொண்டுள்ளன.

உற்பத்தி மற்றும் எதிர் திசையில் செல்லும் சங்கிலி நிறுவனங்கள் தொழில்துறை சராசரியை விட அதிகமான பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன; நேரடி, முறையான வேலைகளில் 37% பெண்கள் உள்ளனர் என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இந்நிறுவனங்கள் முறையே 80% மற்றும் 68% என்ற அளவில் அதிக திறமையான, இளம் தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றன.

இந்த வேலைகள் முதன்மையாக கிராமப்புற இந்தியாவில் அமைந்திருப்பதால், “திறமையான பணியாளர்களை பணியமர்த்துவது மற்றும் தக்க வைத்துக் கொள்வது மிகவும் சவாலானது” என்று குல்தீப் கூறினார். "நிறுவனங்கள் அடிப்படை தொழில்நுட்ப அறிவுள்ளவர்களை - அதாவது சூர்யமித்ராக்கள் [ திறன் மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்றவர்கள்] போன்றவர்களை வேலைக்கு அமர்த்த விரும்புகின்றன - மேலும் அவர்களின் வேலைவாய்ப்பு காலத்தில் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு திறமை அளிக்கின்றன" என்று அவர் கூறினார்.

துறை சேவை வழங்குநர்களாக உள்ள ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கும் நிறுவனங்களில் பாதி தொழிலாளர்கள் பெண்களாக உள்ளனர். தேவையான பணியாளர்களும் மிகவும் திறமையானவர்கள்: சுமார் 96% தொழிலாளர்கள் திறமையானவர்கள், ஆனால் 6% மட்டுமே இளைஞர்கள்.

"இதற்குக் காரணம், துறை சேவை வழங்குநர்கள் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பணிகளைச் செய்வதற்கு குறைந்த அனுபவமுள்ள துறை வல்லுநர்களைக் கொண்டிருக்கின்றனர்," என்று அறிக்கை குறிப்பிட்டது. "எனவே, திறன் நிலை அதிகமாக உள்ளது மற்றும் இளைஞர்களின் பங்கேற்பு குறைவாக உள்ளது" என்கிறது அறிக்கை.

(பல்லீயாத், இந்தியா ஸ்பெண்ட் ஆய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.