நியூயார்க்: 11 வயது ரிதிமா பாண்டே, இன்ஸ்டாகிராம் என்ற செயலியை பதிவிறக்கம் செய்ததால் உற்சாகமடைந்தார்; காரணம், ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) அவரது இணை மனுதாரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மற்றும் உலகத்தோடு தொடர்பில் இருக்க உதவியது.

பாண்டேயின் இந்த நண்பர் குழுவில் ஸ்வீடனை சேர்ந்தவரும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட காலநிலை மாற்ற ஆர்வலருமான கிரெட்டா துன்பெர்க் மற்றும் உலகெங்கிலும் உள்ள 14 குழந்தைகள் இடம் பெற்றிருந்தனர். இவர்கள், அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் துருக்கி ஆகிய ஐந்து நாடுகள், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க போதுமான அளவு செய்யத் தவறியதாக குற்றம்சாட்டி, நடவடிக்கை எடுக்கக்கோரி ஐ.நா. சிறுவர் உரிமைகள் தொடர்பான மாநாட்டில் மனு அளித்துள்ளனர்.

ஐ.நா.வில் நேரடியாக மனு செய்ய குழந்தைகளுக்கு அனுமதிக்கும் மாநாட்டிற்கு 45 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியா - மிகப்பெரிய கார்பன் உமிழ்வைக் கொண்ட மூன்று நாடுகள் - இம்மாநாட்டை அங்கீகரிக்கவில்லை; இதனால் மனு கொடுக்க முடியாது.

ஆனால் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த பாண்டே,தனக்கு முன்பு அரசை எடுத்துக் கொண்டார்.

கடந்த 2017இல், இந்திய அரசுக்கு எதிராக இந்தியாவின் சுற்றுச்சூழல் நீதிமன்றமான, தேசிய பசுமைத்தீர்ப்பாயம் -என்ஜிடி (NGT) முன், குற்றம் சாட்டினார். அதில், தனது சொந்த மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுக்கு பிறகு, அரசு போதுமானதை செய்யத் தவறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கை என்.ஜி.பி. தள்ளுபடி செய்தது. அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, பாண்டே இப்போது உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளார். இந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்படவில்லை.

நியூயார்க்கில் இந்தியா ஸ்பெண்ட் உடன் பேசிய பாண்டே, உலகத் தலைவர்கள் காலநிலை குறித்து நடவடிக்கை எடுக்காததை விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிடாமல், இந்திய தலைவர்கள் "அதிகமான கூற்றை" கூறுகிறார்கள்; ஆனால் "களத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை" என்றார் பாண்டே.கங்கைக்கு அருகில் வசிக்கும் பாண்டே, பணம் செலவழிக்கப்பட்டாலும் கங்கை இன்னமும் மாசாகவே உள்ளது என்றார்.

இந்த மனுவை, அமெரிக்காவைச் சேர்ந்த அரசுசாரா அமைப்பான எர்த் ஜஸ்டிஸ் மற்றும் சட்ட நிறுவனமான ஹவுஸ்ஃபீல்ட் ஒருங்கிணைத்து வருகின்றனர். மனித உரிமைகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய இதுபோன்ற முதல் வழக்கு இதுவாகும், மேலும் இங்கிருந்து வழக்கு எவ்வாறு தொடரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:

16 மனுதாரர்களும், எட்டு முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள். அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, பலாவ், மார்ஷல் தீவுகள், நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, சுவீடன், துனிசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். இந்தியாவின் ரிதிமா பாண்டே, இடதுபுறத்தில் இருக்கிறார்.

உங்கள் முதல் மனு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) இந்திய அரசுக்கு எதிராக இருந்தது. காலநிலை மாற்றம் என்ற விஷயத்தில் உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது? அரசுக்கு எதிராக ஏன் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்தீர்கள்?

கடந்த 2017 ல் உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. நிறைய சேதம் ஏற்பட்டது. பலர் உயிர் இழந்தனர். பல குழந்தைகள் பெற்றோரை இழந்திருந்தனர். மக்கள் விவசாய நிலங்களை இழந்தனர்; அவர்களின் ஊர்கள் அழிக்கப்பட்டன. இது ஒரு பெரிய இழப்பு மற்றும் தொடர்ந்து மழை பெய்ததால் மக்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்கவில்லை.

ஊடகங்கள் அங்கு சென்றன, அதையெல்லாம் தொலைக்காட்சியில் செய்தி வழியே பார்த்தோம்.எ ன் தந்தை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார், அவரும் அங்கு உதவினார். அவர் வனவிலங்கு அறக்கட்டளை (WTI) இல் பணியாற்றுகிறார். அவர் தனது குழுவுடன் அங்குள்ள விலங்குகளை மீட்கச் சென்றார். அதையெல்லாம் நான் பார்த்தேன், காலநிலை மாற்றம் குறித்து எனது பெற்றோர் நடத்திய விவாதங்களைக் கேட்டேன். காலநிலை மாற்றம் குறித்து நான் எனது தந்தையிடம் கேட்டேன், புவி வெப்பமடைதல் பற்றிய கருத்தையும் அது நமது எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் அவர் விளக்கினார்.

வெள்ளம் மற்றும் வறட்சி அதிகரிப்பதை நாம் ஏற்கனவே கண்டிருக்கிறோம். சில இடங்கள் அதிக குளிர்ச்சியடைகின்றன; மற்றவை மிகவும் வெப்பமடைந்து, அது மரணங்களுக்கு வழிவகுக்கிறது.

இதுதான், உங்களை வழக்கு தொடரச் செய்ததா?

ஆமாம், எனவே இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம் என்று நான் கண்டறிந்தபோது, புவி வெப்பமடைதல் நமது எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டேன். நான் மேலும் ஆராய்ச்சி செய்தபோது, மனித நடவடிக்கைகள் மட்டுமே இதை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்தேன். இது தொடர்ந்தால், நமக்கு எதிர்காலம் கிடைக்குமா என்பது தெரியாது. அப்போது தான், நா வாழ விரும்புவதால் இதுபற்றி ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். எல்லோரும் ஒரு நல்ல காலநிலையுடன், நல்ல வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். நன்றாக வாழ்வதும், சுவாசிக்க சுத்தமான காற்றும், குடிக்க தண்ணீரை சுத்தப்படுத்துவதும் நமது உரிமை. இவை நமது உரிமைகள், நமது உரிமைகளுக்காக நான் போராட விரும்பினேன். நமக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காக, நாம் செய்யக்கூடிய ஏதாவது இருக்கிறதா என்று, என் தந்தையிடம் கேட்டேன். நான் ஏதாவது செய்ய விரும்பினால், என்ஜிடியில் வழக்குத் தாக்கல் செய்யலாம் என்று அவர் என்னிடம் கூறினார்.

நான், இதுபற்றி சில நாட்கள் யோசித்தேன், பிறகு இதை செய்வது என்று முடிவு செய்தேன். நான் ஒரு நல்ல எதிர்காலம் வேண்டும் என்று விரும்பினேன். நான் 2017 இல் ஒன்பது வயதில் இருந்தபோது, நாங்கள் என்ஜிடி-யில் வழக்குத் தாக்கல் செய்தோம்.

அந்த வழக்கில் என்ன நடந்தது?

இந்திய அரசு நல்ல வேலை செய்கிறது என்று அவர்கள் சொல்லி, எங்களின் மனுவை அவர்கள் அங்கே ஏற்கவில்லை. நாங்கள் இப்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். இது இன்னும் நிலுவையில் உள்ளது, விசாரணை கட்டத்திற்கு வரவில்லை.

ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்ட இம்மனு அளிப்பதில், நீங்கள் எவ்வாறு இணைந்து கொண்டீர்கள்?

நான் ஒரு நிகழ்ச்சிக்காக நார்வே செல்லவிருந்தேன். அந்த நிகழ்விற்கான விசா நடைமுறையின் போது, ஒரு வழக்கறிஞரை சந்திக்க சென்ற போது தான், ஐ.நா.வில் ஒரு மனுவை தாக்கல் செய்ய உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் ஒன்றிணைந்து வரும் இந்த முயற்சி பற்றி அறிந்தேன். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், இம்முயற்சியை ஒருங்கிணைத்து வந்தது; அவர்கள், இதில் ஆர்வம் கொண்டிருந்த குழந்தைகளை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேடிக் கொண்டிருந்தனர். நான் எனது ஆர்வத்தை வெளிப்படுத்தினேன், ஏனென்றால் நாங்கள் அதை உலக அளவில் செய்யும்போது தான் உலகளாவிய தலைவர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று நான் உணர்ந்தேன். ஒரு தனிநபராக இதை எதிர்த்துப் போராடினால், மக்கள் நம்மீது கவனம் செலுத்துவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் நாம் ஒன்றுபட்டால் அவர்கள் (தலைவர்கள்) நம்மீது கவனம் செலுத்துவார்கள் என்று நினைக்கிறேன். அதை தொடர்ந்து நான், நேர்காணல் செய்யப்பட்டேன், பின்னர் நான் மனுதாரர்கள் குழுவில் ஒரு பகுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டேன். அதன் பிறகு மனுவிற்காக இங்கு வந்தேன்.

காலநிலை அவசர உச்சி மாநாட்டில் பேச ஐ.நா.வில் உலகத் தலைவர்கள் கூடியிருந்த நாளான செப்டம்பர் 23இல், மனுவை அளிப்பதற்காக நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசும் ரிதிமா பாண்டே.

ஐ.நா.வில் அளிக்கப்பட்ட இந்த மனுவின் மூலம் நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

இதைச் செய்ய குழந்தைகள் அனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம். உலகளாவிய தலைவர்கள் எங்களை புறக்கணிக்க மாட்டார்கள், அவர்கள் எங்கள் மீதும் கவனம் செலுத்துவார்கள், வேலை செய்வார்கள், அதனால் எங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை பின்பற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவில் நிறைய உரையாடல்கள் மற்றும் மிகக் குறைந்த வேலைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். ஸ்வச் பாரத், ஸ்வச் கங்கா போன்ற நிறைய திட்டங்கள் உள்ளன, ஆனால் நான் கங்கை நதிக்கு அருகில் வசிக்கிறேன், செலவிடப்பட்ட பணத்தின் அளவுடன் ஒப்பிட்டால், இந்த வேலை பயனுள்ளது என்று நான் நினைக்கவில்லை. வேலை நல்லபடியாக முடிந்தால், நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்; பணமும் பயனுள்ள பயன்பாட்டுக்கு வரும்.மக்கள் அதிகம் பேசுகிறார்கள், ஆனால் மிகக் குறைவான வேலைகள் மட்டுமே செய்யப்படுகிறது. நான் எல்லோரிடமும் சொல்ல விரும்புகிறேன்: பேச்சை குறைத்து, செயலில் காட்டுங்கள் என்பது தான்.

உங்களுக்கு 11 வயது தான் ஆகிறது. உலகளாவிய தலைவர்களுக்கு எதிராக நீங்கள் பேசுகிறீர்கள். உங்களுக்கு பயம் எதுவும் இல்லையா?

இல்லை. எனக்கு எந்த பயமும் இல்லை. அவர்களால் என்னை எதுவும் செய்ய முடியாது. நான் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை. நான் செய்வது சட்டபூர்வமானது. நம் உரிமைகளுக்காக நாங்கள் போராடுவது சட்டபூர்வமானது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் - ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் - குழந்தைகளுக்கு மனு கொடுக்க எங்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்ற விதிகளை உருவாக்கியுள்ளனர். அத்தகைய உரிமைகளை தந்திருந்தால், அவர்களும் அதிய பின்பற்ற வேண்டும், அதை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் திருப்தி அடையும் வரை நான் தொடர்ந்து போராடுவேன்.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்தி பணியாளர்; மற்றும் ரெஹாம் அல்-ஃபர்ரா மெமோரியல் ஜர்னலிசம் பெல்லோஷிப் சார்பில், ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து கட்டுரை வழங்கியுள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.