மும்பை: 2016 ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் அதிக தற்கொலை விகிதம் இந்தியாவில் இருந்ததாக, உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள், நாட்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை மற்றும் காரணங்களை வரைபடமாக்குகின்றன; இது கடந்த மூன்று ஆண்டுகளாக பகிரங்கப்படுத்தப்படவில்லை. இது தற்கொலை தடுப்பு உத்திகள் மற்றும் இது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை செயல்படுத்தும் முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் தற்கொலை விகிதம் 1,00,000 பேருக்கு 16.5 தற்கொலை என்றிருந்தது. இது உலகளாவிய தற்கொலை விகிதமான 10.5 என்பதை விட அதிகம்.

இந்த அறிக்கை 2016 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய சுகாதார மதிப்பீடுகளின் தரவை பயன்படுத்தி, நாடுள், பிராந்தியங்களுக்கான தற்கொலை விகிதங்களை முன்வைத்தது. பிராந்தியத்திற்கும் வருமானத்திற்கும் ஏற்ப வகைப்படுத்தப்படும் போது, இந்தியா தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் நாடுகளின் கீழ் நடுத்தர வருமானக் குழுவாகும். இந்தியாவின் தற்கொலை விகிதம் (16.5) அதன் புவியியல் பகுதியின் வீதத்தை (13.4) மற்றும் அதன் வருமானக் குழுவின் விகிதத்தை (11.4) விட அதிகமாக இருந்தது.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், பெண்களின் தற்கொலை விகிதம் (14.5) மிக அதிகமாக உள்ளது. இந்தியாவின் ஆண் தற்கொலை விகிதம் இப்பகுதியில் மிக அதிகமாக இல்லை; ஆனால் 18.5 என்பது, பெண் விகிதம் மற்றும் ஒருங்கிணைந்த தற்கொலை விகிதத்தை விட அதிகமாக இருந்தது. ஆண்களின் தற்கொலை விகிதத்தில் இலங்கை (23.3) மற்றும் தாய்லாந்து (21.4) நாடுகளுக்கு அடுத்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள்

உலகளாவிய சராசரியை விட தற்கொலை விகிதம் அதிகமாக இருந்தபோதிலும், தற்கொலை தடுப்புக்கான உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி இந்தியா செயல்படவில்லை. 2014இல், வெற்றிகரமான தற்கொலையை தடுப்பது பற்றிய தொடர் பரிந்துரைகளுடன், உலக சுகாதார அமைப்பு, ஒரு அறிக்கையை வெளியிட்டது. தற்கொலை தடுப்புக்கான பொது சுகாதார மாதிரியை பின்பற்ற, இது முன்மொழியப்பட்டது, இதில் நான்கு படிகள் உள்ளன:

  1. கண்காணிப்பு
  2. அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு காரணிகளை அடையாளம் காணுதல்
  3. குறுக்கீடுகளின் வளர்ச்சி மற்றும் மதிப்பீடு
  4. நடைமுறைப்படுத்தல்

தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்த தரவுகளை முறையாக சேகரிப்பது என்ற 2014 அறிக்கையில் வரையறுக்கப்பட்டதன் முதல் படியை கூட, கண்காணிப்புக்கு அப்பால் இந்தியா முன்னேற்றமடையவில்லை.

இருப்பினும், இதில் கூட, தற்கொலை புள்ளிவிவரங்களை அறிவிக்கும் 49 வருட பழமையான தேசிய குற்ற பதிவு பணியகம் - என்.சி.ஆர்.பி (NCRB) 2016 ஆம் ஆண்டில் திடீரென நிறுத்தப்பட்டது (இது 2015 ஆம் ஆண்டிற்கான தற்கொலை புள்ளிவிவரங்களை வெளியிட்டபோது), தற்கொலை புள்ளிவிவரங்கள் அன்றில் இருந்து பகிரங்கப்படுத்தப்படவில்லை.

விவசாயி தற்கொலை

2016 வரையிலான ஒவ்வொரு ஆண்டும், முந்தைய ஆண்டின் தற்கொலைத் தரவை ‘இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்’ - ஏ.டி.எஸ்.ஐ ( (ADSI) என்ற ஆண்டு அறிக்கையில் என்.சி.ஆர்.பி. தொகுத்து வந்தது. இந்த அறிக்கைகள் நாட்டில் மொத்த தற்கொலை இறப்புகளின் எண்ணிக்கையை முன்வைத்தன; இது, காரணம், வழிமுறைகள், தொழில், கல்வி நிலை மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், விவசாயத் துறைக்குள் தற்கொலை பற்றிய தரவுகளுடன் ஒரு தொகுப்பை என்.சி.ஆர்.பி. உள்ளடக்கியது. இந்த தொகுப்பு, ஐந்து மாநிலங்கள் (மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நாட்டில் நடந்த அனைத்து விவசாய தற்கொலைகளிலும் கிட்டத்தட்ட 90% பங்கைக் கொண்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

புதிய தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, என்.சி.ஆர்.பி தனது ஆண்டு அறிக்கையை வெளியிடுவதை நிறுத்தியது.

என்.சி.ஆர்.பி., 2016ஆம் ஆண்டில் சமர்ப்பித்த தரவுகளில் முரண்பாடுகளைக் கண்டறிந்து, தரவை மீண்டும் சரிபார்க்க மாநிலங்களைக் கேட்டுக் கொண்டதாக, நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.

கண்காணிப்பு முறைகள்

2016 ஏ.டி.எஸ்.ஐ அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதாக என்.சி.ஆர்.பி கூறினாலும், உலக சுகாதார அமைப்பின் தற்கொலை தடுப்பு பரிந்துரைகளுக்கு எதிராக அளவிடப்படும் போது, இந்தியாவின் தரவு சேகரிப்பு போதுமானதாக இல்லை.

முக்கிய பதிவு தரவு (பதிவுசெய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை), மருத்துவமனை அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் ஆய்வுகள் போன்ற பல மூலங்களிலிருந்து தரவை நாடுகள் கண்காணிக்க வேண்டும் என, உலக சுகாதார அமைப்பின் 2014 அறிக்கை பரிந்துரைத்தது; என்.சி.ஆர்.பி தனது ஏ.டி.எஸ்.ஐ அறிக்கைகளுக்காக தற்கொலை தரவுகளை ஒரு மூலத்தில் இருந்து - மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல் துறைகள் என -சேகரிக்கிறது.

தற்கொலை மதிப்பீடுகளை தயாரிக்க பல ஆண்டுகளாக உயர்தர முக்கிய பதிவுத் தரவைப் பயன்படுத்தியதாக கூறி, உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கை, இந்தியாவின் இறப்பு பதிவுத் தரவு, உலக சுகாதார அமைப்பின் தரநிலைளை கொண்டு பயன்படுத்தப்படாது என்று கூறியுள்ளது.

உலகளாவிய தற்கொலை மதிப்பீடுகள் குறித்த சமீபத்திய அறிக்கை ஒவ்வொரு நாட்டின் இறப்பு பதிவு தரவு தரத்தையும் ஐந்து என்ற அளவில் மதிப்பிட்டுள்ளது, அங்கு ஒன்று அதிக மதிப்பெண் மற்றும் ஐந்து மிகக் குறைந்த மதிப்பெண். தரப்பிரச்சனை காரணமாக, "பயன்படுத்த முடியாதது அல்லது கிடைக்கவில்லை" என்று கூறப்பட்டு, இந்தியா நான்கு என மதிப்பிடப்பட்டது.

இந்தியாவும் தேசிய அளவில் தற்கொலை முயற்சிகள் குறித்த தரவுகளை தொகுத்து வெளியிடவில்லை. தற்கொலை முயற்சிகளை கண்காணிக்க மருத்துவமனை அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் ஆய்வுகளை பயன்படுத்த, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது.

முந்தைய தற்கொலை முயற்சி என்பது பொதுமக்களில் தற்கொலைக்கான மிக முக்கியமான ஆபத்து காரணி என்று 2014 உலக சுகாதார அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டது. தற்கொலை முயற்சிகளை கண்டுபிடிப்பதில் தோல்வி, மேலும் பலரை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் - தற்கொலை செய்து ஒரு நபர் இறக்கும் சூழலில் 20-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலைக்கு முயல்வதாக, உலக சுகாதார அமைப்பு மதிப்பிடுகிறது.

தேசிய உத்தி தேவை

தற்கொலை விகிதத்தை குறைக்க, இந்தியா முதலில் உயர்தர தரவுகளை சேகரித்து ஒரு விரிவான தற்கொலை கண்காணிப்பு முறையை உருவாக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. ஒரு தேசிய அளவிலான உத்தி மற்றும் செயல் திட்டம், சிறந்த தரவுகளால் தெரிவிக்கப்படுவது, தற்கொலை தடுப்புக்கான நான்கு படி பொது சுகாதார மாதிரியை செயல்படுத்த வழிவகுக்கும்.

இந்தியா ஒரு தேசிய மனநல சுகாதார திட்டத்தை செயல்படுத்தியுள்ள நிலையில், அதற்கு தேசிய அளவிலான மாற்று அமைப்பு இல்லை. தற்கொலை பற்றிய விழிப்புணர்வை, ஒரு பொது சுகாதார பிரச்சினையாக வளர்ப்பதற்கும் தற்கொலை தடுப்புக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், ஒரு தேசிய தற்கொலை தடுப்பு உத்தி தேவை என்று இந்திய குடியரது துணைத்தலைவர் எம். வெங்கையா நாயுடு, 2018 ஆம் ஆண்டில் இந்திய தனியார் உளவியல் சங்கத்தின் உரையில் தெரிவித்தார்.

(அகமது, கென்ட் பல்கலைக்கழக கட்டிடக்கலை பட்டதாரி மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர் ஆவார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.