புதுடெல்லி: உலகின் 181 நாடுகளில், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதன் ஏழை மக்கள் அதிக ஆபத்தில் உள்ளதாக, 2019 டிசம்பர் 4இல் வெளியான புதிய அறிக்கை கூறுகிறது. மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் ஜப்பான், அதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ், ஜெர்மனி மற்றும் மடகாஸ்கர் உள்ளன.

காலநிலை மாற்றம் (புயல், அதிக மழைப்பொழிவு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள்) காரணமாக ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளால் 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக (2,081) இறப்புகள் நிகழ்ந்ததாக, பான்னை (Bonn) சேர்ந்த ஜெர்மன்வாட்ச் அமைப்பு தயாரித்த உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டு 2020இன் 15வது பதிப்பு கண்டறிந்தது.

ஒட்டுமொத்தமாக, காலநிலை மாற்றத்தால் இந்தியாவின் பொருளாதார இழப்புகள், உலகின் இரண்டாவது அதிகபட்சமாக ரூ.2.7 லட்சம் கோடி (37 பில்லியன் டாலர்) என்று - இத்தொகை, 2018 ஆம் ஆண்டின் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை விட அதிகம் - அறிக்கை கூறியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஒரு அலகிற்கு சுமார் 0.36% இழப்பதை, இது குறிக்கிறது.

உலகம் முழுவதும் உள்ள 197 நாடுகளின் பிரதிநிதிகள், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடக்கும் வருடாந்திர ஐ.நா.வின் காலநிலை மாற்ற கட்டமைப்பு மாநாட்டின் (COP25) 25வது கட்சிகளின் அமர்வில் பங்கேற்ற தருணத்தில் இந்த அறிக்கை வந்துள்ளது.

உலகளாவிய காலநிலை இடர் குறியீடானது, ஜெர்மன் மறுகாப்பீட்டாளர் முனிச்ரேயின் நாட்காட் சர்விஸ் (NatCat SERVICE) வழங்கிய தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்த உலகளாவிய தரவுகளின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது - இது இயற்கை பேரழிவுகளின் விரிவான தரவுத்தளமாகும். காலநிலை மாற்றம் உயர்ந்து வரும் கடல் நீர்மட்டம், பனிப்பாறை உருகுதல் அல்லது அதிக அமிலத்தன்மை வாய்ந்த மற்றும் வெப்பமான கடல்களின் மெதுவான செயல்முறைகளை, இக்குறியீடு கணக்கில் கொள்ளவில்லை.

2018 இல் மேலும் தீவிரமான வானிலை நிகழ்வுகள்

இக்குறியீட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த தரவரிசை, தீவிர வானிலை நிகழ்வுகளால், 2017 இல் 14வது இடத்தில் இருந்த நிலையில், ஒன்பது புள்ளிகள் சரிந்து 2018இல் 5வது இடத்தில் உள்ளது.

"ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலம், 2018இல் இந்தியாவை கடுமையாக பாதித்தது," என்பதை அந்த அறிக்கை குறிப்பிட்டு, தரவரிசை சரிவுக்கான காரணத்தை விளக்குகிறது. கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவால் 324 பேர் இறந்தனர்; 2,20,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. 20,000 வீடுகள் மற்றும் 80 தடுப்பணைகள் அழிந்தன. சேத மதிப்பு ரூ. 20,000 கோடி (8 2.8 பில்லியன்) என்கிறது அந்த அறிக்கை.

இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதி, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் முறையே டிட்லி மற்றும் கஜா புயல்களால் தாக்கப்பட்டது. மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசிய டிட்லி புயலின் வேகத்தில், குறைந்தது எட்டு பேர் இறந்தனர்; 4,50,000 பேர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2018இல் மிக அதிக வெப்ப அலைகள் பதிவாகி மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை தொட்டு, அனல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான இறப்புகள் ஏற்பட்டன. இதனால் தண்ணீர் பற்றாக்குறை, நீடித்த வறட்சி, பயிர் விளைச்சல் பாதிப்பு, வன்முறை - கலவரங்கள் மற்றும் இடம்பெயர்வுகள் அதிகரித்தன. மோசமான பாதிப்பை சந்தித்த நாட்டின் மத்திய, வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் ஏற்கனவே ஏழ்மையான பிரதேசங்கள் ஆகும்.

கடந்த 2004 முதல், 15 வெப்பமான ஆண்டுகளில் இந்தியா 11-ஐ அனுபவித்தது (1901இல் இருந்து இந்த சாதனை அளவு தொடங்கியது). கடந்த 1992 முதல் வெப்ப அலைகளால் 25,000 இந்தியர்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது என்கிறது அறிக்கை.

குறைந்த தனிநபர் வருமானம், சமூக சமத்துவமின்மை, விவசாயத்தை மட்டுமே அதிகம் நம்பியிருப்பது போன்றவற்றால் கடும் வெப்ப விளைவுகள் இந்தியாவை மோசமாக பாதிக்கிறது. வரும் 2050ஆம் ஆண்டளவில் வெப்ப அழுத்தத்தால் இந்தியா தனது வேலைநேரத்தில் 5.8% ஐ இழக்க நேரிடும்; இது உலகளவில் மொத்தம் 80 மில்லியனில், 34 மில்லியன் முழுநேர வேலைகளுக்கு சமம். இந்தியாவில், அதிகளவில் விவசாயம் மற்றும் கட்டுமானத்துறை உரிமையாளர்கள், அதன் உற்பத்தித்திறன் இழப்பைச் சுமப்பார்கள் எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இக்குறியீட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த தரவரிசை கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்ற இறக்கமாக இருந்துள்ளது. எனினும், அது காலநிலை மாற்றத்தால் பாதிக்கும் ஐந்து உயரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாகவே எப்போதும் இருந்து வருகிறது. ஐந்து ஆண்டுகளில் நான்கில், தீவிர வானிலை நிகழ்வுகளால் இந்தியா அதிக இறப்புகளை சந்தித்துள்ளது.

India’s Ranking On The Global Climate Risk Index, 2014-2018
Assessment Year Index Rank Fatalities (Rank) Fatalities Per 100,000 Inhabitants (Rank) Economic Losses Rank
2018 5 1 34 2
2017 14 2 29 4
2016 6 1 30 3
2015 4 1 24 1
2014 10 1 36 2

Source: Global Climate Risk Index
Note: The index ranked 181 countries in 2018, 124 in 2017, 182 in 2016, 135 in 2015 and 138 in 2014.

மோசமான பாதிப்புக்குள்ளான ஏழை நாடுகளால் இழப்பை தாங்க முடிவதில்லை

கடந்த 1999 மற்றும் 2018-க்கு இடையே 20 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த தரவுகளின் அடிப்படையில், காலநிலை மாற்ற பாதிப்புக்கான நீண்டகால குறியீட்டை ஜெர்மன்வாட்ச் அமைபு உருவாக்கியது. மிகவும் பாதிக்கக்கூடிய நாடுகளில் இந்தியா 17வது இடத்தில் உள்ளது. பியூர்டோ ரிக்கோ மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடமாக இருந்தது; அடுத்து மியான்மர், ஹைதி, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உள்ளன.

நீண்ட கால குறியீட்டின்படி, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 10 நாடுகளில் ஏழு குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்டவை; இரண்டு (தாய்லாந்து மற்றும் டொமினிகா) உயர் நடுத்தர வருமானமும் மற்றும் ஒன்று (பியூர்டோ ரிக்கோ) அதிக வருமானம் கொண்ட நாடு.

காலநிலை மாற்றத்தால், குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன; அவற்றை சமாளிக்கும் திறனும் குறைவாக உள்ளது என்று ஜெர்மன் வாட்ச் அறிக்கை தெரிவித்துள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகளின் மற்றொரு சமீபத்திய அறிக்கை, புவி வெப்பமடைதலுக்கு காரணமான கார்பன் உமிழ்வின் பெரும்பகுதிக்கு அமெரிக்காவையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளையும் குற்றம்சாட்டியதாக, இந்தியா ஸ்பெண்ட் டிசம்பர் 2, 2019 கட்டுரை தெரிவித்தது.

உலகில் தெற்கில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு காலநிலை மாற்ற பாதிப்பு என்பது அன்றாட நெருக்கடி என்பது உண்மை. இந்த ஆண்டு இரண்டு கடும் புயல்களால் இந்தியாவில் உள்ள சமூகங்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை நாசமாக்கின; மேலும் ஆறுகளில் அதீத வெள்ளப்பெருக்கு, கொடித்தீர்க்கும் மழையை அதிகரிக்கிறது என்று, காலநிலை மாற்றம் தொடர்பான, இலாப நோக்கற்ற அமைப்பான ஆக்சன் ஏய்டு சேர்ந்த ஹர்ஜீத் சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தால் இழப்பு, சேதங்களை அனுபவிக்கும் நாடுகளுக்கு உதவும் நோக்கில், அவற்றுக்கு நிதி ஆதாரங்களை கிடைக்கச் செய்யவும், காலநிலை மாற்றத்திற்கு உகந்த நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியது என்று ஜெர்மன் வாட்ச் அறிக்கை பரிந்துரைத்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு செலவில் 54% பொறுப்பாகும் என்று, சிவில் சமூக அறிக்கை கூறுகிறது.

காலநிலை மாற்றங்களுக்கு பொறுப்பான பணக்கார நாடுகளும், மாசுபடுத்தும் தொழிற்சாலைகளும் காலநிலை பேரழிவுகளில் தப்பிப்பிழைப்பவர்களுக்கு உதவ, புதிய நிதியை ஒன்றிணைக்க வேண்டும் என்று சிங் கூறினார். "நாடுகளையும் சமூகங்களையும் மேலும் வறுமை மற்றும் கடனுக்குத் தள்ளும் தற்போதைய நியாயமற்ற முறையை மாற்றுவதற்கு சி.ஓ.பி. 25 (COP25) ஒரு முக்கியமான வாய்ப்பாகும்" என்றார் அவர்.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப் பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.