இமயமலை, நெருக்கடியான வாழ்க்கை என எச்சரிக்கும் ஐபிசிசி அறிக்கை
ஹம்தா பாஸ், இமாச்சல பிரதேசம்: “ப்ருத்வி கரம் ஹோ ரஹி ஹை” (பூமி வெப்பமடைகிறது) என்று, இமாச்சல பிரதேசத்தின் லாஹுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் இருக்கும், 20,000 அடி உயர இந்திரசன் என்ற இமயமலை உச்சியை சுட்டிக்காட்டி, மலையேற்ற வழிகாட்டி கரண் சர்மா தெரிவிக்கிறார். கடந்தாண்டு பனி மூடியிருந்த அந்த உச்சிப் பகுதியில் இருந்து தற்போது பாறைகளும், கற்துகள்ளும் வெளிவருகின்றன. “அப் மங்கள் கா ஹி சஹாரா ஹை” என்று சிரித்தபடி அவர் சொல்கிறார்; அதாவது, ”இனி நாம் செவ்வாய் கிரகத்துக்கு தான் போக வேண்டும்”.
இந்திரசன் மலையுச்சி, செப். 2018
இமாச்சல பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற மணாலியில் இருந்து 2 மணி நேர பயண தூரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 4,000 அடி உயரத்தில், அவரது பனரா கிராமம் உள்ளது. இப்பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை, ரம்யமான காட்சி, பனிபடர்ந்த மலையுச்சிகளை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், ஷர்மாவின் குடும்பமும் சக கிராமவாசிகளும் சமையல் செய்து வழங்குதல், ஓட்டுனர்களாக செயல்படுதல், வழிகாட்டியாக இருத்தல் போன்றவற்றின் மூலம் வாழ்க்கை நடத்துகின்றனர். அத்துடன், பிராந்தியத்தில் உள்ள ஆப்பிள் தோட்டங்களும் கொஞ்சம் வருவாய் தருகின்றன.
வெப்பமயமாதலால் ஆப்பிள் சாகுபடியும், சுற்றுலா தொழிலும் பாதிக்கப்படுகிறது.
“கடந்தாண்டு நாங்கள் 150 பெட்டிகள் ஆப்பிள் தயாரித்தோம். இம்முறை 50 பெட்டிகளே கிடைத்தன” என்று இந்தியா ஸ்பெண்டிடம் ஷர்மா தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வாரத்திலேயே இந்த பிராந்தியத்தில் முன்கூட்டியே பனிப்பொழிவு ஏற்பட்டது. உறைந்து போன நதிகளும், நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கி தவிக்க நேரிட்டதும் சுற்றுலாவாசிகளுக்கும் மலையேற்றத்தினருக்கும் பெரும் ஆபத்தாக உள்ளது.
உலகளவில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ள 600 மில்லியன் இந்தியர்களில் ஷர்மாவும், அவரது சக கிராமவாசிகளும் அடங்குவர்.
ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் பூமியின் வெப்பநிலை 0.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்து வருவதாக, ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றத்திற்கான அரசு குழு (ஐ.பி.சி.சி.) , 2018 அக்.6ல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள், அதாவது நூற்றாண்டின் முற்பகுதிக்குள் புவியின் வெப்பநிலை, தொழில்துறைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது, 1.5 டிகிரி செல்ஷியஸ் உயரும், இது தண்ணீர், உணவு மற்றும் நோய் அபாயங்களுக்கு வழிவகுக்கும், வாழ்வாதாரங்களையும் உயிர்களையும் பாதிக்கும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.
காலநிலை மாற்றம் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பது தொடர்பான எங்களில் முதல் கட்டுரை இது. பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் பின்னணி, கள நிலவரம், அங்குள்ள மக்கள் தங்களை சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வது என, சமீபத்திய அறிவியல் ஆய்வு முடிவுகளோடு ஒப்பிட்டு விவரிக்கும் தொடராகும்.
ஏன் இமயமலையை பார்க்க வேண்டும்?
இமயமலையானது மேற்கில் இருந்து கிழக்காக, 2,500 கி.மீ.க்கு, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கதேசம் மற்றும் மியன்மாருடன் பரவிக் கிடக்கிறது. உயரமான சிகரமான எவரெஸ்ட் உட்பட உலகின் 10 உயர்ந்த சிகரங்களில் 9 இங்குள்ளன. சிந்து, இந்தியா வழியாக பாயும் கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா உட்பட ஆசியாவின் பெரும் நதிகள் இம்மலையில் உற்பத்தியாகின்றன.
சிந்து மற்றும் கங்கை நதியின் 70% தண்ணீர், கோடையில் இமயமலையின் பனிப்பாறைகள் உருகுவதாலும், மீதமுள்ளவை பருவமழையாலும் கிடைக்கிறது.
இமயமலை பிராந்தியத்தில் வசிக்கும் ஷர்மா போன்ற 50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், வேளாண் நீர்பாசன ஆதாரமாகவும் இது விளங்குகிறது. 1.5 பில்லியன் மக்கள் தண்ணீர், உணவு, ஆற்றல் உள்ளிட்டவற்றுக்கு இமயமலையையே நம்பியுள்ளனர்.
தற்போது, பருவநிலை மாற்றம் அவர்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைக்கான வழிகள், பிழைப்புகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
பருவநிலை மாற்றத்தால் தனக்கும் தனது சக கிராமத்தினருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துரைத்த, கரன் ஷர்மா, 23.
“இமயமலையில் பருவநிலை மாற்றம் விரைவாக நிகழ்ந்து வருகிறது” என்று, 2013 முதல் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள தம்பன் மெல்த், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். அண்டார்டிகா மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCAOR) மற்றும் டெல்லியில் உள்ள இந்திய வானிலை துறை (IMD)விஞ்ஞானிகள் கூட்டாக, இந்திய அரசுக்காக ஆய்வு நடத்தினர். இமயமலையில் உள்ள 9,579 பனிப்பாறைகள், பருவநிலை மாற்றத்தால் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்வது இதன் பணியாகும்.
இப்பிராந்தியத்தின் வானிலை சுழற்சியிலும் இமயமலை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று, டெல்லி ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் ஏ.பி. திம்ரி தெரிவிக்கிறார். இவர், இப்பிராந்தியத்தை கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருபவர். “இமயமலை துடிப்பான ஒன்று. இங்கு மாற்றத்திற்கான நிறைய இயக்கிகள் உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
அதிகரிக்கும் பனிச்சரிவு; உருகும் பனிப்பாறைகள்
மாதத்திற்கு பலமுறை ஷர்மா 14,000 அடி உயர உச்சிக்கு மலையேற்றமாக சென்று வந்துள்ளார். மலைப்பகுதிகளில் பல மாற்றங்கள் அப்பட்டமாக தெரிகின்றன. இதற்கு முன் பார்த்திராத செடிகளும், மரங்களும் முளைத்துள்ளன. ஆப்பிள் பழத்தோட்டங்கள் அடிக்கடி பூச்சி தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இமயமலையின் கோடைகாலம், உள்ளூர் மக்களுக்கு இப்போது வெப்பமாக இருக்கிறது. குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஒழுங்கற்றதாக இருப்பதாக, அவர் மேலும் கூறுகிறார். ”நான் குழந்தையாக இருந்த போது பனிப்பொழிவு என் இடுப்பு அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும்; பனிப்பொழிவால் வீடு மூடப்பட்டிருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அங்குல அளவுக்கு கூட பனிப்பொழிவு அரிதாகவே இருக்கிறது” என்றார்.
பனிச்சரிவு போன்ற தீவிர நிகழ்வுகளில் கூட முரண்பாடுகளை பருவநிலை மாற்றம் ஏற்படுத்துவதை ஆய்வுகள் காட்டுகின்றன.
“இமயமலைத்தொடரில் இருந்து பனிக்கோடுகள் மேல் நோக்கி விலகிச் செல்வதை உள்ளூர்வாசிகள் கவனித்து வருகின்றனர்” என்று, பெங்களூருவை சேர்ந்த மலையேற்ற அமைப்பான இந்தியா ஹைக்ஸின் லட்சுமி செல்வகுமரன் தெரிவிக்கிறார். இவரது அமைப்பு இமயமலைப்பகுதியில் இரு டஜன் முறை மலையேற்றத்தை இயக்கியுள்ளதோடு, இப்பிராந்திய சுற்றுச்சூழல்களை ஆவணப்படுத்தியுள்ளது. பனிக்கோடு என்பது மலைப்பிராந்தியங்களில் பனிப்பொழிவு நிகழுமிடங்களை உணர்த்துவதற்கு சித்தரிக்கப்படும் கற்பனையானது. இப்போதெல்லாம் இதை காண, மிக உயரமாக செல்ல வேண்டும்.
பூமியில் உள்ள நன்னீரில் 75% இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில், உறைந்த நிலையில் உள்ளன. பனிப்படலம் (cryosphere) என்றழைக்கப்படும் இது, உலக பருவநிலை அமைப்பில் இரண்டாவது மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்துகிறது; ஆனால், குறைந்தபட்ச ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. வடக்கு மற்றும் தென் துருவங்களுக்கு வெளியே, இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் மிக முக்கியமான பனிப்பகுதியை உருவாக்குகின்றன.
துருவங்களில் காணப்படும் இமயமலை பனிப்பாறைகள் தெளிவான பனிக்கட்டிகளை கொண்டிருக்கவில்லை. அதில் தூசிகளும், குப்பைகளும் நிறைந்துள்ளன. இன்னும் சில பகுதிகளில் குப்பைகளால் பனிப்பாறைகள் மறைக்கப்பட்டுள்ளன.
“தூசிகள் மற்றும் குப்பைகள் அதிக சூரிய ஒளியை உறிஞ்சி பனி வேகமாக உருக காரணமாகிறது” என்று இந்தியா ஸ்பெண்டிடம் மெலோத் தெரிவித்தார். அதேநேரம் குப்பை கழிவுகள் தடிமனாக இருந்தால், அதுவே வெப்ப கதிர்வீச்சுகளில் இருந்து பனிக்கட்டிகளை பாதுகாத்து, உருகச் செய்து, சிக்கலான உறவை ஏற்படுத்துகிறது.
ஒருசில பனிமலைகள் கிரிக்கெட் மைதான அளவிலும், மற்றவை நகரங்களை போல் பல நூறு கி.மீட்டர்களுக்கும் பரந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் புது பனிப்பொழிவை பொருத்து, மிக மெதுவாக அவை பின்வாங்கவோ அல்லது முன்னோக்கியோ நகர்த்தப்படுகின்றன.
சில பகுதிகளில் பனிச்சரிவு ஒவ்வொரு ஆண்டும் மூன்று மீட்டர் நீளத்திற்கும், மற்ற பகுதிகளில் 12 மாடி கட்டிடத்தின் உயரத்திற்கு சமமாக, 40 மீட்டர் அளவுக்கு கூட உருகியிருப்பது, மெலோத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பனிப்பாறை மீதான பனிக்கட்டியின் பருமனை துல்லியமாக கணக்கிடுவது சிரமம்; அறிவியலாளர்களால் மட்டுமே இதை செய்ய முடியும்.
நியூயார்க் எர்த் கல்வி நிறுவன ஆராய்ச்சி மாணவரான ஜோஸ் மோரர், பனிப்போர் காலத்திய அமெரிக்க ராணுவ செயற்கைக்கோள் புகைப்படங்களை பயன்படுத்தி. 2000 ஆம் ஆண்டில் நேபாளம், சிக்கிம் இடையே பனிப்பாறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளார். ”1975- 2000 ஆம் ஆண்டு வரையிலான பனி உருகும் வேகம், 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலத்துடன் ஒப்பிடும் போது, இரு மடங்கு அதிகரித்துள்ளது” என்று மோரர் தெரிவிக்கிறார்.
Credits: Josh Maurer, The Earth Institute - Columbia University
நதிப்படுகைகளுக்கு அச்சுறுத்தல்
இமயமலை பனிப்பாறைகள் தந்த ஆறுகள் என்பதன் பொருள் என்ன?
”ஆய்வு முடிவுகளின்படி, தற்போதைய வெப்பமடைதல் விகிதம், கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் சிந்து ஆகிய முக்கிய ஆறுகளில் பனி மற்றும் பனிக்கட்டி உருகும் அளவு வரும் 10 ஆண்டுகளில் அதிகரிக்கும், "என, இந்தியா ஸ்பெண்ட்டிடம் மெலோத் கூறினார். "ஆனால் 21 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில்,பெரும்பாலான பனிப்பாறைகள் உருகி ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை குறைக்க முடியும். பனி உருகுவதால் இமயமலை நதிகளில் ஏற்படும் இதுபோன்ற பெரும் மாற்றங்கள் நீரின் பாதுகாப்பையும், தீபகற்ப பிராந்தியத்தில் நீர் கிடைப்பதையும் பெரிதும் பாதிக்கக்கூடும்".
பனிப்பாறை உருகுவதால் ஏற்படும் தண்ணீர் உயரமான பகுதிகளில் ஏரிகளாக சேகரமாகிறது; இது இயற்கையான அணை போன்றது. இது நிரம்பும் போது வெள்ளச்சேதம் போன்றவை ஏற்படுகின்றன.
மாறிவரும் பருவநிலை மாற்றங்களை தீவிரமாக, நெருக்கமாக கண்காணிக்கும் வகையில், 13,500 அடி உயரத்தில் உள்ள ஸ்பிதியில் ஹிமான்ஷ் என்ற பெயரில் இந்திய அரசு அமைத்துள்ள ஆய்வு நிலையம்.
இந்த மாற்றங்கள், இப்பிராந்தியத்தில் ஆப்பிள் விளைவிக்கும் விவசாயிகளை பாதிக்கிறது. காரணம், ஆப்பிள் விளைய நீண்ட குளிர்காலம் தேவைப்படுகிறது. பனிக்கட்டிகள் நகரும் போது ஆப்பிள் தோட்டங்களும் நகர வேண்டும்; ஆனால் நடைமுறையில் இது சாத்தியமற்றது.
caption: ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள, கடல் மட்டத்தில் இருந்து 16,000 அடி உயரத்தில் உள்ள சந்திராடல் ஏரி இது. பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் தண்ணீர், இவ்வாறு இயற்கை அணை போல் சேகரமாகிறது. இது நிரம்பி வழியும் போது வெள்ள பாதிப்பு உண்டாகிறது.
வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது; ஆப்பிள் உற்பத்தியை கைவிடுகிறது
2013-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இமயமலை பிரதேசத்தில் ஆப்பிள் உற்பத்தி குறைந்துவிட்டதாகவும், அறுவடை பாதிப்புக்கு பனிப்பொழிவு குறைந்ததே காரணம் என்று பெரும்பாலான விவசாயிகள் தெரிவித்தனர். 8,000 அடி உயரத்தில் வாழும் விவசாயிகளில் 80% பேர் பனிப்பொழிவு குறைந்து போயுள்ளதாக கூறினர்; 9,800 அடி உயரத்தில் இருந்த விவசாயிகளில் 90% பேரும் இதே கருத்தை தெரிவித்தனர்.
உலகில் இந்தியா ஆப்பிள் விளைச்சலில் 5வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு விளையும் 2.3 மில்லியன் மெட்ரிக் டன் ஆப்பிளில் 60% ஜம்மு காஷ்மீரிலும் மற்றவை, இமாச்சல பிரதேசம், சிறிதளவு உத்தரகண்டிலும் விளைகின்றன.
இமாச்சல பிரதேசத்தின் மொத்த பழ உற்பத்தியில் 80% ஆப்பிள்; ஆப்பிள் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ள போதும் ஹெக்டேருக்கு விளைச்சல் சரிவை சந்தித்துள்ளது ஆய்வில் தெரிய வருகிறது.
வெப்பநிலை அதிகரிப்பே பழ உற்பத்தியை பாத்தித்து வருகிறது. இமயமலை பகுதியில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
”இமயமலை பகுதியில் பனிப்பொழிவு நிகழும் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்று கூறும் திம்ரி, வெப்பமயமாகும் விகிதம் அதிகரித்து வருகிறது என்ற்கிறார்.
வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை, புவி வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் பாதிக்கும் என்று, 2018 ஐ.பி.சி.சி. அறிக்கை தெரிவிக்கிறது. இதன் பொருள், ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் ஏராளமான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இந்த மாற்றங்களை இந்தியா தடுக்க விரும்பினால், உலகத்தோடு இணைந்து அடுத்த 10 ஆண்டுகளில் கார்பன் வெளியேற்றத்தை பாதிக்கும் மேற்பட்ட அளவில் குறைக்க வேண்டும் என ஐ.பி.சி.சி. அறிக்கை தெரிவிக்கிறது. . நிலக்கரி பயன்பாட்டை 78% அளவுக்கு குறைத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம், 60% மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும்.
எனினும் மெலத் ஒரு யதார்த்தமான ஒரு உண்மையை தெரிவிக்கிறார்: பருவநிலை மாறி வருகிறது; சமூகம் அதற்கேற்ப தயாராக வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடிய உத்திகள், தனித்துவமான வழிகளை முன்னோக்கி செல்ல வேண்டும். உதாரணமாக லடாக் பகுதியில், பொறியாளரும் கண்டுபிடிப்பாளருமான சோனம் வாங்க்சக் ஒரு வழியை தெரிவிக்கிறார். அதாவது குளிர்காலத்தில் பனிச்சறுக்கு வடிவில் இந்த நீரை சேமித்து வைத்து, கோடையில் பயன்படுத்தலாம் என்கிறார்.
(திஷா ஷெட்டி, கொலம்பியா இதழியல் கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்; இந்தியா ஸ்பெண்ட்டில் பருவநிலை மாற்றம் குறித்த செய்திகளை வழங்குகிறார்.)
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.