யவத்மால், அமராவதி, நாக்பூர், மும்பை: 39 வயதான பேபி கினகே, 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது வாழ்க்கையை தொடங்கிய போது, தமது கணவரின் நடத்தையில் எந்த வித்தியாசத்தையோ அல்லது தவறான மாற்றத்தையோ கண்டிருந்ததாக, அவருக்கு நினைவில் இல்லை.

கிழக்கு மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் மங்குர்தா என்ற மலைவாழ் (அல்லது பழங்குடி) கிராமத்தில், 10 பேரை கொண்ட ஒரு கூட்டு குடும்பத்திற்கு பொறுப்பான அவரது கணவர் சத்ருகன், மனநிலையில் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை, அனைவரிடமும் பணிவுடன் பேசினார். 2007 ஆம் ஆண்டில் ஒரு நாள், தனது வயல் வழியே நடந்து சென்ற அவர், விஷத்தை விழுங்கினார்; தனது இளம் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடன்களையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை தந்துவிட்டதற்கு காரணம் மன அழுத்தம் என்பது பேபி கினகே உள்ளிட்ட யாருக்கும் தெரியவில்லை.

மங்கூர்டாவில் உள்ள தன்னார்வ சுகாதார ஊழியரான ஷோபா கினகே, சில ஆண்டுகளுக்கு முன்பு பேபி கினகேவுக்கு ஆலோசனை வழங்கத் தொடங்கிய பிறகே, மறைக்கப்பட்ட மனச்சோர்வுதான் சத்ருகனின் உயிரைப் பறிக்க வழிவகுத்திருக்கக்கூடும் என்பதை அவர் புரிந்துகொண்டார். எதைக் கவனித்திருக்க வேண்டும் என்பது அவருக்கு தெரிந்திருந்தால், ஒருவகையில் கணவருக்கு உதவியிருக்கலாம் என்று அவள் இப்போது நினைக்கிறார்.

40 வயதான ஷோபா கினகே, கிராமப்புற சமூகங்களில் காணப்படும் மனநோயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்; இது மகாராஷ்டிரா அரசு மற்றும் விதர்பா பிராந்தியத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தொகுப்பால் மேற்கொள்ளப்படுகிறது. இது விதர்பா உழவர் தற்கொலைகள் பிரபலமடையாத ஒரு முயற்சி; ஆனால் பெண்கள், விவசாயிகள் அல்லாதவர்கள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடமும் பரவலாக உள்ளது.

தன்னார்வ மனநல ஆர்வலரான ஷோபா கினகே, யவத்மால், மங்குர்தா கிராமத்தில் உள்ள மக்களை தினமும் சந்தித்து ஆலோசனை தருகிறார்.

மகாராஷ்டிரா முழுவதும், 2019 ஜனவரி முதல் ஜூன் வரை 1,300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக டெக்கான் ஹெரால்டு 2019 செப்டம்பர் செய்தி தெரிவித்துள்ளது. விதர்பாவின் யவத்மால் மாவட்டத்தில் மட்டும், இந்த ஆண்டு 139 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக, 2019 ஜூலை வரை பதிவு செய்யப்பட்ட அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

அரசு, பிரேர்னா பிரகல்ப் உழவர் ஆலோசனை சுகாதார சேவை திட்டத்தை துவக்கியுள்ளதுடன், தற்போது விவசாயிகளின் தற்கொலைகள் அல்லது தொல்லை தரும் குடும்பங்களில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடிய மனநோய்களுக்கு தீர்வு காண தற்போதுள்ள மாவட்ட மனநல திட்டத்தை - டி.எம்.எச்.பி (DMHP) அதிகரித்துள்ளது. அவர்கள் கினகே போன்ற உள்ளூர் தன்னார்வலர்களை நம்பியிருக்கிறார்கள், அவர்கள் ஆலோசகர்களாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர், மேலும் கிராமத்தில் இருந்து கிராமத்திற்குச் சென்று உதவி இருப்பதை உறுதிசெய்கிறார்கள்.

பிரேர்னா பிரகல்ப் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் 36 மாவட்டங்களில் 14 இல் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷாக்கள்), அதாவது உள்ளூர் சுகாதார ஊழியர்களாக பணியாற்ற மாநில அரசுடன் தன்னார்வத் தொண்டு செய்யும் பெண்கள், 12 கேள்விகள் கொண்ட கணக்கெடுப்பின் மூலம் மனநோய்களின் பொதுவான அறிகுறிகளைக் கண்டறிய பயிற்சி பெற்றனர்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள்

ஒருவர் நன்றாக சாப்பிடுகிறாரா, நன்றாக தூங்குகிறாரா, பணிகளில் கவனம் செலுத்த முடியுமா, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேச முடியுமா? ஒருவர் பயிர்கள் அல்லது நிதி குறித்து அதிகம் கவலைப்படுகிறாரா? ஒருவர் திரும்பப் பெறப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறாரா?

எதிர்மறையான பதில்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அந்த நபருக்கு உதவி தேவைப்படும் வாய்ப்பு அதிகம் என்று மகாராஷ்டிராவின் சுகாதார சேவைகளின் இயக்குநர் சாத்னா தயாடே தெரிவித்தார்.

ஆஷா தொழிலாளி யார் குறித்தாவது கவலைப்பட்டால், அந்த நபருக்கு பயிற்சி பெற்ற ஆலோசகர்களின் குழு சிகிச்சை தர, மாநிலத்தின் 104 ஹெல்ப்லைனை அழைக்கிறார். அறிகுறிகளின் தீவிரத்தின் அடிப்படையில், அவர் ஒரு நபரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஒரு மருத்துவ அதிகாரியிடமோ அல்லது மாவட்ட மருத்துவமனையில் ஒரு மனநல மருத்துவரிடமோ சேர்க்கலாம்.

யவத்மாலில் உள்ள மாதர்ஜூன் கிராமத்தை சேர்ந்த ஆஷா அனிதா ஜங்கர்மேட், தினசரி அடிப்படையில் பிரேர்ணா பிரகல்ப் திட்டத்திற்காக கிராமவாசிகளை கணக்கெடுக்க வேண்டும்.

அவரது பரிந்துரைகளை கையாள, மருத்துவ ஊழியர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவ உளவியலாளர்கள், மனநல சமூக சேவையாளர்கள் மற்றும் மனநல செவிலியர்கள் ஆகியோருடன் ஒரு மனநல மருத்துவர் இருப்பதை டி.எம்.எச்.பி. கட்டாயமாக்குகிறது. இத்திட்டம் 1997 இல் ராய்காட் மாவட்டத்தில் தொடங்கியது, கடந்த ஆண்டு மாநிலத்தின் 36 மாவட்டங்களில் 34 ஆக விரிவாக்கப்பட்டது. இரண்டு திட்டங்களின் கீழ், மனநல மருத்துவர்கள் தங்கள் மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவிலும் மாதாந்திர முகாம்களை நடத்த வேண்டும்.

ஆஷா பணியாளரை போலவே, கினகே ஒவ்வொரு நாளும் முதல் பாதியை மங்கூர்டாவில் உள்ள குடும்பங்களுடன் செலவிடுகிறார். ஆயினும், ஆஷாவை போலல்லாமல், கினகே நோயாளிகளுக்கு ஆலோசகர்கள் அல்லது மனநல மருத்துவர்களை பரிந்துரைப்பது மட்டுமில்லை; முடிந்தவரை அவரே அறிவுரிய வழங்குகிறார். "மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை பாகல் (பைத்தியம்) என்று குறிப்பிட வேண்டாம் என்று குடும்பங்களுக்கு நான் சொல்கிறேன்," என்று கினகே கூறினார்."நான் அவர்களைப் பார்த்து சிரிக்கவோ அல்லது அவர்களிடம் கோபப்படவோ கூடாது என்று நான் சொல்வேன்" என்றார்.

பாகலுக்கு பதிலாக, கிராமவாசிகளுக்கு ‘மான்சிக் தனவ்’ (மன நோய்) என்று கற்பிக்கப்படுகிறது. "மனநிலை நோயாளி" என்ற சொல் மாவட்டங்களில், கிராமங்களில் மெதுவாக ஊடுருவி, ஆழமான வேரூன்றிய களங்கத்தைத் தூண்டிவிடுகிறது.

அவரால் மட்டுமே செய்ய முடியும் என்பது மட்டுப்படுத்தப்பட்டதால், கினகே குடும்பங்களுக்குள் பல்வேறு பராமரிப்பாளர்களுக்கு (காத்ஜி) பயிற்சி அளித்துள்ளார். மங்குர்தாவில் உள்ள இருபது வயதான கீதா, அவரது தாயார் ஜிஜா மனச்சிடைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவரது நல்வாழ்வுக்கு பொறுப்பானவர். ஜிஜாவின் மனச்சிதைவு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது சகோதரர் வேறு கிராமத்தில் உள்ள மற்ற உறவினர்களுடன் தங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் வெளிப்பட்டது.அவர் தனது சகோதரனை தொடர்ந்து கேட்டாள்.

கடைசியில், சாப்பிடுவதையும் தூங்குவதையும் ஜிஜா நிறுத்திவிட்டு அரை நிர்வாணமாக கிராமத்தை சுற்றி நடக்க ஆரம்பித்தார். கினகே பயிற்சியளித்த பிறகு, கீதா தனது தாய் சாப்பிடுவதையும், தூங்குவதையும், குளிப்பதையும், ஆடைகள் உடுப்பதையும் உறுதி செய்கிறார், மேலும் வீட்டுப் பணிகள் சிலவற்றையும் செய்கிறார். "நான் அவரை தனிமையில் விடாமல் இருக்க முயற்சிக்கிறேன்," என்று கீதா கூறினார். "நான் எப்போதும் அவருடன் இருக்கிறேன்" என்றார்.

நவீன மருத்துவத்திற்கு பலியான கோழிகள்

கீதா மற்றும் ஜிஜாவின் வீட்டில் லிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ள குந்தி கிராமத்தை சேர்ந்த பருத்தி விவசாயி பாப்பு ராவ் பிந்தருக்கு, அவரது மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட மகனை கவனித்துக் கொள்ளக் கற்றுக் கொடுத்ததாக, தன்னார்வலர் சுரேகா விகால் சவுத்ரிக்கு பெருமிதம் பொங்க தெரிவித்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப் முதன்முதலில் நோய்வாய்ப்பட்டபோது, அவர் தனது தந்தையை அடித்து துன்புறுத்தியது, இரவில் தெருக்களில் அலைந்து திரிவது, பொதுமக்களுடன் சண்டையிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். பிந்தர், அவரை ஒரு உள்ளூர் நம்பிக்கை அடிப்படையிலான குணப்படுத்தும் நபரிடம் அழைத்துச் சென்றார். அவரது அறிவுறுத்தலின் பேரில் கோழிகளையும் பலியிட்டார். அவரது மகனின் நிலை மேம்படாதபோது, சிகிச்சைக்கு செல்வதற்கான நகரம் வெகு தொலைவில் இருந்த நிலையில், யவத்மாலில் உள்ள தனியார் கிளினிக்குகளுக்கு அவர் சென்றார்.

கிராமத்தின் குடும்ப ஆதரவு குழுவில் அங்கம் வகித்த சவுத்ரியை 2013 இல் சந்திக்கும் வரை, இது இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. மனச்சிதைவின் தன்மையை அவரிடம் விளக்கினார் மற்றும் மாதாந்திர தாலுகா முகாமுக்கு வருகை தருமாறு பிந்தரை, அவர் ஊக்குவித்தார், இதன் மூலம் பிரதீப் தொடர்ந்து மருந்து வழங்கப்பட்டு வந்தார். மருந்து உட்கொண்ட பிறகு, பிரதீப் கோபமாகவோ, தகராறோ செய்வதில்லை. அவர் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடுவதில்லை; இப்போது பருத்தி மற்றும் சோளம் சாகுபடி செய்த குடும்ப வயல்களில் வேலை செய்ய முடிகிறது.

யவித்மாலின் குந்தி கிராமத்தில், பருத்தி விவசாயி பப்பு ராவ் பிந்தர் தன்னுடைய மனச்சிதைவுக்குள்ளான மகனை கவனித்துக்கொள்வது என்பதை தன்னார்வ மனநல ஆர்வலர்கள் கற்பித்ததற்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.

அரசு திட்டங்களை தவிர, இப்பகுதியில் உள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாநிலத்தின் முன்முயற்சிகளுக்கு துணையாக மனநல சுகாதாரத்தில் தீவிரமாக செயல்படுகின்றன. உதாரணத்திற்கு, நாக்பூரை சேர்ந்த பிரகிருதி மற்றும் கோவாவை சேர்ந்த் சங்கத் ஆகிய இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தலைமையிலான விஷ்ரம் என்ற திட்டம் - நாக்பூருக்கு மேற்கே 165 கி.மீ தொலைவில் உள்ள விதர்பாவின் அமராவதி மாவட்டத்தில் கட்லாட்கி கிராமத்தில் வசிக்கும் விவசாயி தினேஷ் இங்கோலுக்கு உதவியது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இங்கோல் முதன்முதலில் நோய்வாய்ப்பட்டபோது, அவர் தனது வீட்டிற்கு வெளியே திரியத் தொடங்கினார், எல்லோரும் அவரை மோசமாகப் பேசுவதாக சந்தேகித்து, அவரது குடும்பத்தினருடன் அவர் சண்டையிட்டுக் கொண்டார்; தெருக்களில் மக்களை அவமதித்தார்.

இங்கோல் தனது நண்பர்கள் மற்றும் பிறருடனான உறவுகளை முறித்துக் கொண்டார். அவர்கள், அவரை பைத்தியமாகவும் ஆபத்தானவராகவும் பார்த்தார்கள். அவர் உடல்நிலை சரியில்லாமல், உடல் ரீதியாக பலவீனமடைந்து, வேலை செய்ய முடியாமல் போனார். உள்ளூர் மனநல தன்னார்வலரான சையத் யூனிஸ், 2014 ஆம் ஆண்டில் விஷ்ராம் - விதர்பா மன அழுத்தம் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் உதவியைப் பெற்றுத் தரும் வரை, அவரது குடும்பம் அமராவதியில் விலை உயர்ந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு போராடி வந்தது. மருந்து, ஆலோசனை மற்றும் புரிந்து கொள்ளக்கூடிய வகையிலான ஆலோசனைகளால் குடும்பத்துடன் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு இங்கோல் திரும்பப் பெறுகிறார்.

மனநோயை ஆரம்பத்தில் கவனிக்க வேண்டும்

மனநல நோய்களை முன்கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சையளிப்பது தான் அரசு திட்டங்கள் மற்றும் இங்கு பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் குறிக்கோள். இத்தகைய விருப்பம் உள்ளது, ஆனால் பெரும்பாலும் போதுமான ஊழியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லை.

உதாரணமாக, மனநல மருத்துவர்கள் பணியமர்த்தப்படும் மாவட்ட மருத்துவமனைகள் பெரும்பாலும் வெகுதொலைவில் உள்ளன, இதனால் நோயாளிகளின் வழக்கமான வருகை கடினமானது. தெலுங்கானா எல்லைக்கு அருகிலுள்ள கேலாப்பூர் தாலுகாவின் மங்குர்தாவிற்கு, 70 கி.மீ தூரத்தில் யவத்மால் நகரத்தில் மாவட்ட மனநல மருத்துவமனை அமைந்துள்ளது.

ஆகஸ்ட் 2019 வரை பதிவு செய்யப்பட்ட தயாடே அலுவலகத்தில் இருந்த தரவுகள், பிரேர்னா பிரகல்ப் திட்டத்தின் கீழ் மனநல மருத்துவர்களுக்கான 14 பதவிகளில் நான்கு தற்போது காலியாக உள்ளன என்பதைக் காட்டுகிறது. இது மனநல நிபுணர்கள் மட்டுமல்ல; பணியாளர்களின் பற்றாக்குறை உள்ளூர் அளவிலான தொழிலாளர்கள் வரை நீண்டுள்ளது.

"அரசு திட்டங்களில் சுமார் 60% பதவிகள் காலியாக உள்ளன. மனித வளங்களின் இப்பிரச்சினையை தீர்க்க, சமூக மட்டத்தில் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சிக்கிறோம்,” என்று தயாடே கூறினார்.

மாநிலத்தில் உள்ள 60,000 ஆஷா தொழிலாளர்களில், பாதிக்கும் குறைவானவர்கள் பிரேர்ணா பிரகல்ப் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள். ஆகஸ்ட் 2019 வரை மாநில தரவுகளின்படி, ஏப்ரல் 2018 முதல் ஆகஸ்ட் 2019 வரை வெறும் 45.48% ஆஷாக்கள் மனநல சுகாதாரத்திற்காக பயிற்சி பெற்றவர்கள். 2015-16 ஆம் ஆண்டில், இது ப்ரெர்னா பிரகல்ப் திட்டத்தின் முதல் ஆண்டில் 20,185 ஆஷாக்கள் திட்டத்தின் கீழ் பணியாற்றின; நான்கு ஆண்டுகளில், பிரேர்ணா பிரகல்பின் கீழ் ஆஷா தொழிலாளர்களின் எண்ணிக்கை 740 மட்டுமே அதிகரித்துள்ளது.

டி.எம்.எச்.பி-யின் கீழ் பணியாளர்களுக்கான பயிற்சியை 45.36% ஆஷாக்கள், 34.57% துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் 48.39% மருத்துவ அதிகாரிகள் பெற்றதாக, மாநில தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக விவசாயிகளை கண்காணிக்க, 2019 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 34 மாவட்டங்களில் நாற்பத்தி ஆறு அமர்வுகள் நடத்தப்பட்டன. கலந்துகொண்ட 2,079 விவசாயிகளில், 261 பேர் மனநோயால் பாதிக்கப்பட்டு டி.எம்.எச்.பி நெறிமுறையின்படி சிகிச்சை பெற்றனர். கூடுதலாக, பள்ளி குழந்தைகளுக்கு 282 அமர்வுகள் இருந்தன, அங்கு 298 பேர் சிகிச்சை பெற்றனர்; 103 அமர்வுகளில் 394 வயதானவர்கள் சிகிச்சை பெற்றனர்; 96 அமர்வுகளில் 1,390 பேர் சிகிச்சை பெற்றனர். விவசாயிகளைப் பிடிப்பது கடினம். டி.எம்.எச்.பி ஊழியர்கள் வயல்களில் விவசாயிகள் தங்கள் வேலையை முடிக்கும் வரை அவர்களுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில், இந்த கண்காணிப்புகளில் கலந்து கொள்ள அவர்களை சமாதானப்படுத்த அவர்கள் அவர்களைத் தேட வேண்டும்.

Source: Data shared with IndiaSpend by director, health services, Maharashtra

வலைபின்னல் கட்டமைப்பின் சவால்கள்

கடந்த 2014 மற்றும் 2015-க்கு இடையில் 18 மாதங்களுக்கும் மேலாக, அமராவதியின் 30 கிராமங்களில் விஷ்ரம் இயங்கினாலும், மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்களது சொந்த மனநல திட்டங்களுடன் செயல்படுகின்றன. சவுத்ரி மற்றும் கினகே, நாக்பூரை மையமாகக் கொண்ட கிராம மற்றும் நகர கூட்டு நடவடிக்கைகளுக்கான சங்கம் அல்லது ஸ்ருஜன் மற்றும் மங்குர்தாவில் இணைக்கப்பட்டுள்ளன, இதில் யவத்மால் முழுவதும் 12 மனநல சுகாதார ஆர்வலர்கள் உள்ளனர்.

இந்த அமைப்பு 2000 ஆம் ஆண்டு முதல் யவத்மாலில் தாய் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளது, அவர்கள் உதவிய குழந்தைகள் இளம் பருவத்தினர் மற்றும் மனச்சோர்வுள்ள இளைஞர்களாக வளர்ந்து வருவதை உணர்ந்துள்ளனர். ஆஷாக்கள் தங்களை மிக மெல்லியதாக நீட்டிக்கும் வகையில் காலடி எடுத்து வைக்கக்கூடிய சமூக சுகாதார ஊழியர்களின் வலையமைப்பை உருவாக்குவதை ஸ்ருஜன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

"சமூகம் சார்ந்த நலனை அரசு புரிந்து கொள்ள வேண்டும்," என்று ஸ்ருஜன் இணை நிறுவனர் அஜய் டோல்கே கூறினார். "மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு குடும்பம் மற்றும் அருகில் இருப்பவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். கவனிப்பை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். ஒருவர் ஒரு மனநல மருத்துவரை சந்திக்க வேண்டியிருந்தால், அவரது வயல் அல்லது கால்நடைகளை அன்றைய தினத்துக்கு கவனித்துக் கொள்வதாக, அண்டை வீட்டுக்காரர் சொல்ல முன்வர வேண்டும். மன நோய் உண்மையில் ஒரு நோய் என்பதை மக்கள் அங்கீகரிக்கும்போது தான் இது நிகழ்கிறது” என்றார்.

ஆஷாவை விட தாங்கள் சிறந்த பயிற்சி பெற்றவர்கள் என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன. அவர்கள் தங்கள் நேரத்தை அவதிப்படுபவர்களுக்கு மட்டுமல்ல, பராமரிப்பாளர்களுடனும், அன்பானவர்களை தற்கொலையால் இழந்தவரின் துயரங்களுடனும் செலவிடுகிறார்கள். அவர்கள் மனநிலையைச் சுற்றியுள்ள மூடநம்பிக்கை மற்றும் களங்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் சோக மொழியை மாற்றுகிறார்கள். யவத்மாலில், குடும்ப ஆதரவு குழுக்கள் - ஸ்ருஜனின் உதவியுடன் தொடங்கப்பட்டன - பராமரிப்பாளர்களுக்கு அவர்களின் சுமைகளைப் பற்றி பேசவும் ஆதரவைப் பெறவும் இடம் கொடுத்தது.

நாக்பூர் மாவட்ட மருத்துவமனையின் மனநல மருத்துவர் அபிஷேக் மமார்டே, விஷ்ராமிற்காக கட்லாட்கி மற்றும் அசேகான் கிராமங்களில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார். "நாங்கள் தன்னார்வலர்களிடம் பாதிக்கப்பட்டவரின் பேச்சை கேளுங்கள், கடுமையாக நடக்காதீர்கள் என்றோம். தங்கள் வாழ்க்கையைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுடன் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் பற்றி திறந்த கேள்விகளைக் கேட்க வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார்.

‘பதற்றம்’ என்ற வார்த்தையின் உலகளாவிய பயன்பாட்டிற்கு கடுமையான கவலை அல்லது மனச்சோர்வு போன்ற பல நோய்களை மறைக்க முடியும் என்ற உண்மையை தன்னார்வலர்கள் எடுக்க வேண்டும். அமராவதி, காட்லாட்கி கிராமத்தில் விவசாயி ஜாஹிர் சவுதகர், 40, நான்கு குடும்பங்களின் திருமண செலவுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தது; இதனால், வறட்சிக்கு மத்தியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கடும் தலைவலியை அனுபவிக்கத் தொடங்கினார். அவர் ‘பதற்றத்தால்’ அவதிப்படுவதாக எல்லோரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். "நான் எப்போதுமே ஒரு சுமையை உணர்ந்தேன். என் இதயமும் உடலும் கனமாக இருந்தது. எனக்கு ஒரு பெரிய நோய் வரும் என்று நான் பயந்தேன், ”என்று அவர் கூறினார்.

பயிர்கள் மற்றும் கடன்களைத் தவறவிடுவது மட்டுமல்ல, அவரைப் போன்ற கிராமவாசிகளை விரக்தியில் ஆழ்த்துகிறது, இது குடும்பத்திற்கு வழங்குதல் அல்லது திருமணங்களுக்கு பணம் செலுத்துதல் போன்ற அபிலாஷைகளை நிறைவேற்றத் தவறிவிடுகிறது. தன்னைச் சுற்றியுள்ளவர்களைத் தவறிவிடுவதாக உணர்ந்ததால் சவுதகர் நிரந்தரமாக பரிதாபமாக உணர்ந்தார். விஷ்ராமின் ஆலோசனையானது அவரது தலைவலிக்கு காரணம் கவலை என்பதை அவருக்குப் புரிய வைத்தது. 18 மாத காலப்பகுதியில் மனச்சோர்வு உள்ளவர்களின் எண்ணிக்கை 4.3% முதல் 27.2% வரை உயர்ந்ததாக திட்டத்தின் முடிவுகள் காண்பித்தன.

பொறுப்பின் சுமை

பயிற்சி மற்றும் உணர்திறன் இருந்தபோதிலும், சமூக சேவையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆஷாக்கள் தங்கள் மீது வைக்கப்பட்டுள்ள மகத்தான பொறுப்பை பற்றி கவலைப்படுகிறார்கள்.

32 வயதான ஆஷா அனிதா ஜங்கர்மேட், ஜாரி ஜமானி தாலுகாவின் மாதர்ஜுன் கிராமத்தில் உள்ள குடும்பங்களை தினமும் சந்திக்கிறார். மனநலம் குறித்த 12 கேள்விகளுக்கான கணக்கெடுப்பு பதில்களுடன் அவரது பதிவு, அவரது சுற்றுகளுக்கு சான்றாகும். எனினும், நீல நிற மையில் பதிவுசெய்யும் ‘ஆம்’ மற்றும் ‘இல்லை’ பதில்களை அவர் தவிர்க்கிறார்.

ஒரே வார்த்தையில் பதில் பெறுவது, ஒருநபரின் மனநிலையை பற்றி ஓரளவுக்கு மட்டுமே சொல்லும். இது தற்கொலை இருப்பதற்கான வாய்ப்புகளை திறந்து விடுவதாக, அவரது குற்றச்சாட்டுகளில் ஒன்று. "ஒருவரின் எண்ணங்கள் அந்த திசையில் சென்றால், அல்லது அவர் வீட்டில் சண்டையிட்டு பூச்சிக்கொல்லி மருந்து குடித்தால், அவர் இறப்பதை நான் எவ்வாறு தடுப்பது?" என்று அவர் கேட்டார்.

மனநல மருத்துவர்கள் தங்கள் பதவியில் இல்லாதபோது அவர்கள் கிராமவாசிகளின் கோபத்தையும் எதிர்கொள்கின்றனர்.யவத்மால் மாவட்டத்தில், ஏராளமான வனப்பகுதிகள் நம்பமுடியாத தொலைபேசி நெட்வொர்க்குகளை உருவாக்குகின்றன, ஆனால், மாவட்ட மருத்துவமனைகளிலும், மாதாந்திர தாலுகா முகாம்களிலும் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க வழி இல்லை. அவர்கள், முகாம் திட்ட நாட்களில் வரத்தவறினால், “அது நம்மீது உள்ள மக்களின் நம்பிக்கையை ஆட்டம் காணச் செய்தது”, என்று, மனநல மருத்துவரையும் காணாமல் நீண்ட தூரம் பயணித்த மக்களின் கோபத்தை எதிர்கொண்ட கினகே கூறினார்.

தாலுகா அளவிலான நகர மருந்தகங்களில் கடுமையான மனநோய்களுக்கான மருந்துகள் கிடைக்காதது மற்றொரு குறைபாடாகும். உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் மொத்தமாக ‘அட்டவணை எச்’ மருந்துகளை சேமிக்க அனுமதிக்கப்படவில்லை, அவை கவுண்டருக்கு மேல் வாங்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பவர்களும், மருந்துகளை வாங்குவதற்கு, யவத்மாலுக்கு பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல மாதங்களாக மருந்து இல்லாமல் பலர் செல்கிறார்கள், அவர்களின் நிலை மோசமடைகிறது.

இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்தும் ஒருங்கிணைந்த பதில் தேவை என்பதை தயாடே போன்ற அதிகாரிகள் அறிந்திருக்கிறார்கள், குறிப்பாக தற்போதைய காலியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசால் கட்டளையிடப்பட்ட ஒரு நடவடிக்கை, நீண்ட காலத்திற்கு மட்டுமே, பயிற்சியளிக்கப்பட்ட மனிதவளத்தை உருவாக்க உதவக்கூடும், தானே, புனே மற்றும் நாக்பூரில் உள்ள மாநிலத்தின் நான்கு மனநல மருத்துவமனைகளில் மூன்றை சிறந்த மையங்களாக மாற்றும் திட்டம் இதுவாகும். இது அடுத்த ஆண்டு முதல், மனநல மருத்துவம், மருத்துவ உளவியல், மனநல சமூக பணி மற்றும் மனநல நர்சிங்கிற்கு அதிக இடங்களை வழங்கும்.

இக்கட்டுரை, தாகூர் குடும்ப அறக்கட்டளை ஆதரவுடன் எழுதப்பட்டது. இக்கட்டுரையின் உள்ளடக்கங்களில் தாகூர் குடும்ப அறக்கட்டளை எந்த தலையங்க கட்டுப்பாட்டையும் செலுத்தவில்லை.

இக்கட்டுரை, முதன்முதலில் இங்கே சுகாதாரம் சரிபார்ப்பு தளத்தில் வெளியிடப்பட்டது.

(வால், புதுடெல்லியை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.