பதனம்திட்டா: தென்கிழக்கு கேரளாவில் உள்ள பதனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி. நூஹ், 39, மாவட்டத்தின் முதல் கோவிட் -19 நோயாளி கண்டறியப்பட்ட 2020 மார்ச் 8 முதல் பரபரப்பாகவே இருந்து வருகிறார். பதனம்திட்டா மாவட்டத்தில் இப்போது ஒன்பது உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்- இது, மாநில மொத்த எண்ணிக்கையில் 30%; மாவட்டங்களில் அதிகபட்சமாகும். கொரோனோ வைரஸ் மானிட்டர் என்ற ஹெல்த் செக் தரவுத்தளத்தின் தகவலின்படி, கேரளாவில் 28 நோயாளிகள் (மார்ச் 20 அன்று மாலை 5 மணி நிலவரப்படி) உள்ளனர்; இது, இந்தியாவின் 223 என்ற எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 13%, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கேரளா உள்ளது.

கேரளா, இந்தியாவின் வலிமையான சுகாதார அமைப்புகளை கொண்ட ஒன்றாகும் மற்றும் நிதி ஆயோக்கின் 2017-18 சுகாதார குறியீட்டின்படி, 21 மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது; இது கோவிட் -19 தொற்று காய்ச்சலை சமாளிக்க வலுவான நிலையில் உள்ளது.

பதனம்திட்டாவில் கொரோனா பரவல் என்பது, இத்தாலியில் இருந்து திரும்பிய ஒரு குடும்பத்தினரின் வருகையில் தொடங்கியது; இதையடுத்து மாவட்ட கண்காணிப்புக்குழு ஒவ்வொரு நாளும் வெளிநாடுகளில் இருந்து வரும் அதிகளவிலான மக்களை கண்காணித்து வருகிறது, ஏனெனில் “அவர்களில் சிலர் கொரோனோ தொற்று இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் எப்போதும் உள்ளன” என்று, ஆட்சியர் நூஹ், இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

ஒவ்வொரு இல்லத்திலும் தனிமையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட அனைவரும், மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது பார்வையிடப்படுவதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு வார்டிலும் ஒரு குழுவை இம்மாவட்டம் உருவாக்கியுள்ளது. மக்கள் தனிமைப்படுத்தலை மீறுவதை கண்டால் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்குமாறு, பொதுமக்களை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. கட்டாய நடவடிக்கைகளை எடுக்க மாவட்டம் விரும்பவில்லை, ஆனால் மக்கள் தனிமைப்படுத்தலை கடைபிடிக்காவிட்டால் "நாங்கள் அவ்வாறு செய்ய நிர்பந்திக்கப்படுவோம்" என்று அவர் கூறினார்.

நூஹ், ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் ஒரு தீவிர முற்றிவிட்ட நெருக்கடி கையாளுபவர்; பத்தனம்திட்டாவில் ஏற்பட்ட 2018 வெள்ளம் மற்றும் பதனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை கோயில் பெண்களை அனுமதித்தபோது ஏற்பட்ட சிக்கல்களை திறமையாக கையாண்டார். அவர் பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றப்பாலத்தில் துணை ஆட்சியராகவும், மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இயக்குநராகவும் இருந்துள்ளார்.

மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அவரது அணுகுமுறை குறித்து இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில், நூஹ் பேசினார். அவரது நேர்காணலின் திருத்தப்பட்ட பகுதிகள்:

கேரளாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களில் கிட்டத்தட்ட 30% பேர், பதனம்திட்டாவில் தான் உள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்கான உத்தி என்ன, முதல் வழக்கு கண்டறியப்பட்டதில் இருந்து அதற்காக என்ன மாதிரி உத்திகளை எவ்வாறு உருவாகியுள்ளீர்கள்?

முதல் விஷயம், இத்தாலியில் இருந்து வந்த குடும்பத்துடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்காணிப்பது [அதில் அனைத்து மூன்று உறுப்பினர்களும் கோவிட் -19 உறுதி செய்யப்பட்டது]. 95% முதல் 98% மக்களை நாங்கள் கண்காணிக்க முடிந்தது. தற்போது, குடும்பத்துடன் முதன்மை அல்லது இரண்டாம் நிலை தொடர்பு கொண்டிருந்த 1,254 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் [மார்ச் 19, 2020 வரை]. அவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும், 16 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

ஆனால், கடந்த 14 நாட்களில் வெளிநாட்டில் இருந்து பதனம்திட்டாவுக்கு வந்தவர்களைக் கண்காணிப்பதில் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். இது வளர்ந்து வரும் எண்ணிக்கை. ஒட்டுமொத்தமாக 1,894 பேர் உள்ளனர்; அவர்களில் 636 பேர் [மார்ச் 18, 2020 அன்று தரவுத்தளத்தில்] சேர்க்கப்பட்டனர்; மேலும் 236 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

அடுத்த இரண்டு நாட்களில் 1,500 பேர் வரை இதில் சேர்க்கப்படுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது ஒட்டுமொத்தமாக 3,000 க்கும் மேற்பட்ட நபர்களாக இருக்கும். மாவட்டத்தில் ஏராளமான புலம்பெயர்ந்த இந்தியர்கள் உள்ளனர்; இது பரவத் தொடங்கியதில் இருந்து பலர் திரும்பி இருக்கிறார்; பலர் அடிக்கடி பயணிப்பவர்களும் உள்ளனர்.

சமூகத்தவர்களின் இத்தகைய நடமாட்டம் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா?

அது நடந்தால், அதை எவ்வாறு தடுப்பது என்பதை [நாம் தெரிந்து கொள்ள] வேண்டும்.

ஆனால் நீங்கள் கண்காணிப்பதன் மூலம் நிறைய தரவுகளைக் கொண்டுள்ளீர்கள்; வாய்ப்பு இருந்தால் அதுபற்றி தீர்மானிக்கும் நல்லதொரு சிறந்த நிலையில் நீங்கள் இருக்கலாம்.

எங்களிடம் இத்தாலியைச் சேர்ந்த மூன்று பேர், கொரோனாவை 1,254 பேருக்கு பரப்பியுள்ளனர். நோய் பரவியதாக நான் கூறவில்லை, ஆனால் தொடர்பு உள்ளது. இப்போது, 1,894 பேர் நாடுகளுக்குச் சென்றுள்ளனர், அவர்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் சில நேர்மறையானதாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் எப்போதும் உள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்துதல் என்பதை நாங்கள் கண்டிப்புடன் செயல்படுத்துகிறோம். எங்களுக்கு மாவட்டத்தில் 920 கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சி வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் வார்டு உறுப்பினர்கள் தலைமையில் ஒரு துப்புரவுக்குழு உள்ளது; ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் ஆஷாக்கள் [அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்], அங்கன்வாடி மற்றும் குடும்பஸ்ரீ தொழிலாளர்கள் உள்ளனர். அத்துடன், ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஐந்து போலீஸ் அதிகாரிகள் உள்ளனர்.

இவர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது இக்குழுவினர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களை சந்திப்பதே, அவர்களுக்கான பணியாகும்.

இதை கண்டிப்பாக செயல்படுத்த, வருவாய் நிர்வாகத்தை நாங்கள் சேர்த்துள்ளோம். மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட எவரையும் சமூகத்தவர்கள் பொதுவெளியே பார்த்தால், அவர்கள் எங்களது தொலைபேசி எண்ணை அழைத்து கூற முடியும் என்பதை உறுதிப்படுத்த, இரண்டு பிரத்யேக தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளோம். மேலும், அந்த நபர் தனது வீட்டுக்கு செல்வதை உறுதி செய்ய, இந்த தகவலை நாங்கள் தாசில்தார் அல்லது காவல் நிலையத்திற்கு அனுப்புவோம்.

கட்டாய கண்டிப்பு நடவடிக்கைகள் எடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

உண்மையில், நாங்கள் எந்தவொரு கட்டாய நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. நீங்கள் வீட்டிற்கு பத்திரமாக திரும்புவதை [தனிமைப்படுத்தலின் கீழ் இருக்குமாறு மக்கள்] அரசு மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது என்ற செய்தியை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். அவர்கள் அதை சுயமாக செய்யாவிட்டால், நாங்கள் அதை செய்ய நிர்பந்திக்கப்படுகிறோம். அதிகாரத்தை பயன்படுத்துவது என்பது கடைசி ஆயுதமாக இருக்கும்.

எங்களுக்கு தகவல் தெரிவிக்க சமூகத்தை நாங்கள் ஈடுபடுத்துகிறோம்; பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதிகாரிகளின் ஆலோசனையை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். குறைந்தபட்சம் கேரளாவில் இது நடக்கும்.

சமூகத்தினரின் போக்குவரத்து அல்லது கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், மருத்துவமனை படுக்கைகள் அல்லது மருத்துவ ஊழியர்கள் போன்றவற்றின் பற்றாக்குறையை எவ்வாறு சமாளிப்பீர்கள்?

கொரோனாவை எதிர்கொள, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 100 க்கும் மேற்பட்ட படுக்கைகளை ஏற்பாடு செய்துள்ளோம். மூடப்பட்ட மருத்துவமனைகளில் (கடந்த ஆண்டில்) மேலும் 100 படுக்கைகளை நாங்கள் தயார் செய்துள்ளோம்; அவற்றை தனிமை வார்டுகளாக மாற்றலாம்.

நான், தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணிபுரிகிறேன்; ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 100-150 படுக்கைகள் தயார் நிலையில் வைக்க திட்டமிட்டுள்ளேன்; அவை ஒரு விடுதியாகவோ பள்ளி அல்லது வேறு எந்த கட்டிடமாகவும் கூட இருக்கலாம். ஒரு வாரத்தில் 500-750 படுக்கைகள் வைக்க முயற்சிக்கிறேன். [2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில் சுமார் 1.2 மில்லியன் மக்கள் உள்ளனர்].

நான் இந்திய மருத்துவச்சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனையை மேற்கொண்டிருக்கிறேண். எங்களுடன் பணியாற்றத் தயாராக இருக்கும் மருத்துவர்களின் பட்டியலைக் கோரியுள்ளேன் [தேவை ஏற்படும் போது].

கடந்த 2018 வெள்ளம் மற்றும் சபரிமலை பிரச்சினை ஆகியவற்றை நீங்கள் கையாண்டுள்ளீர்கள்; இவை இரண்டும் பொதுமக்களின் உணர்வில் தாக்கத்தை ஏற்படுத்தின. கொவிட்-19 மேலும் கவலையை ஏற்படுத்துகிறதா?

கொவிடி [SARS-CoV-2] வைரஸ் எவ்வாறு உருவாகிறது என்பதற்கான எந்த தகவலும் இதுவரை நம்மிடம் இல்லை. இது சீனாவில் அல்லது இத்தாலியில் இருப்பதை போல் இங்கு அதிகரித்தால், நாம் நிச்சயமாக கவலைப்பட வேண்டிய ஒன்று இருக்கிறது. அதே நேரம், இந்த விவகாரத்தில் வளர்ந்த நாடுகளை விட நாம் கொரோனாவை நிர்வகித்த மற்றும் கையாண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது; எனவே, மேலும் சிறந்த முடிவுகள் நமக்கு கிடைக்கும் என்று நம்புவோம்.

தொடர்பு இருப்பவர்களை அறிதல் என்பது உட்பட கொரோனா கண்காணிப்பில் நீங்கள் நிறைய நேரம் செலவிட்டீர்கள். கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்பது கோவிட் -19 (2020 மார்ச் 19 நிலவரப்படி) பாதிப்பு உள்ளது. கேரளாவின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய குழுக்கள் உள்ளனவா? அல்லது, தற்போதுள்ள நோயாளிகள் கண்டுபிடிப்பால், இதில் பதனம்திட்டா மட்டும் ஒரு விதிவிலக்காக உள்ளதா?

மற்ற மாவட்டங்களை பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் இங்கே நாங்கள் படிப்படியாக [தேவையின் அடிப்படையில்] கண்காணிப்புக்கு செல்கிறோம். குடும்பஸ்ரீ சமூக ஆலோசகர்கள் போன்றவர்களை கொண்டு, வெளிநாட்டு பயணிகளை நாங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்துகிறேஓம். அவர்கள் மனநல ஆலோசனைக்கு உதவுவார்கள். பிரச்சினை எவ்வாறு உருவாகிறது என்பதை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறோம்.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.