பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது கற்றல் இழப்பை எவ்வாறு ஈடுசெய்ய முடியும்: உ.பி. ஆய்வு தரும் படிப்பினைகள்
மும்பை: பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது, நீண்டகால ஊரடங்கால் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்ய குழந்தைகள் மத்தியில் -- அடிப்படை வாசிப்பு மற்றும் எண் கணிதம் போன்ற -- அடித்தளத்திறன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று, உத்தரபிரதேச (உ.பி.) மாநில தொடக்கப்பள்ளிகளில் சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் தெரிய வந்த உள்பார்வை குறிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.
அடித்தளத்திறன்களில் வலுவாக கவனம் செலுத்தினால், ஒரு வருடத்திற்கான பள்ளிப்படிப்பின் கற்றல் ஆதாயத்தை, மூன்று மாதங்களில் சரிசெய்ய முடியும் என்று, இலாப நோக்கற்ற அமைப்பான பிரதம் கல்வி அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ருக்மிணி பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். பிரதம் அறக்கட்டளை மற்றும் உத்தரபிரதேச மாநில அடிப்படை கல்வித்துறை ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியால் 2019ஆம் ஆண்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தப்பட்ட கற்றல் திட்டம்’ (GLP - ஜி.எல்.பி) தந்த சான்றுகளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஒரு ‘சரியான நிலையில் கற்பித்தல்’ அணுகுமுறையை பயன்படுத்தியது; இதில் பாரம்பரியமாக உள்ள வயதுவாரியாக அல்லாமல் மாணவர்கள் வாசிப்பு மற்றும் கணிதத்திறன்கள் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். பள்ளிகளில் நிலையான, புதுமையான கற்பித்தல் - கற்றல் நடைமுறைகளை உருவாக்குவதும், ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் கல்வி ஆதரவு திறனை வலுப்படுத்துவதும், இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.
கற்றல் நிலைகள் உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக குறைவாக உள்ளன: அரசு பள்ளிகளில் 3ம் வகுப்பு மாணவர்களில் 60% க்கும் அதிகமானோருக்கு இன்னும் வார்த்தைகள் கூட படிக்க இயலவில்லை என்று, இந்தியாவில் பள்ளி மாணவர்களின் வாசிப்பு மற்றும் எண்கணித திறன்களின் ஆண்டு மதிப்பீடு செய்யும் கல்விநிலை அறிக்கை (ASER) 2018 கூறுகிறது.
கடந்த 2019 ஜனவரி முதல், மே மாதம் வரை நடத்தப்பட்ட தரப்படுத்தப்பட்ட கற்றல் திட்டத்தின் (ஜி.எல்.பி) வெற்றியை உறுதி செய்துள்ளது. இது, 3ம் வகுப்பு மாணவர்களின் வாசிப்பில் 14% புள்ளிகளையும்; 4ம் வகுப்பு மாணவர்களில் 16.1% புள்ளிகளையும் பெற வழிவகுத்தது. இதேபோன்ற ஒரு திட்டம், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை - இது "கோடைகால இழப்பு" ஐ விட அதிகமாக இருக்கும் - சரி செய்யக்கூடும் என்று பிரதம் மதிப்பிடுகிறது. பொதுவாக கோடை விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் மத்தியில் கல்வித்திறனில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படுவதுண்டு. மூன்று மாதங்களுக்கு மேலாக உள்ள ஊரடங்கால் உத்தரப்பிரதேசத்தில் 3ம் வகுப்பு மாணவர்களின் வாசிப்புத்திறன் 7% புள்ளிகள், கோடைகால இழப்பைப்போல் ஏற்பட்டுள்ளதாக, ஜி.எல்.பி.தரவுகள் தெரிவிக்கின்றன.
"பள்ளிகள் எல்லாம் திடீரென மூடப்பட்டு, கடந்த ஆண்டுக்கான பாடங்களை முடிக்காத நிலையில் அடுத்த ஆண்டுக்குத் தயாராவதற்கும் நேரமில்லை; அதே நேரம் மூடப்பட்டு இருப்பது இன்னும் தொடர்வதால், ஒரு சாதாரண பள்ளி ஆண்டில் என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், இம்முறை இழப்பு தீவிரமாக இருக்கும்,” என்றார் பானர்ஜி.கோவிட் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான மார்ச் 24 முதல் போடப்பட்ட ஊரடங்கு - தற்போது பீகார், நாகாலாந்து மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, அவை முழுமையான ஊரடங்கில் உள்ளன - இது நாடு முழுவதும் பள்ளிக்கல்வியை சீர்குலைத்துள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், 32 கோடி இந்திய பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
கல்விநிலை அறிக்கை (ASER) 2018 தேசிய புள்ளிவிவரங்களின்படி, 5ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட அனைத்து குழந்தைகளில் பாதி பேர் மட்டுமே குறைந்தபட்சம் 2ம் வகுப்பு தரத்திலான அடிப்படை எண்கணித செயல்பாடுகளைச் செய்ய முடிகிறது. இது ஒரு சாதாரண பள்ளி ஆண்டில் கூட, அச்சுறுத்தும் தொற்றுநோய் போன்ற பாதிப்பால், தடையின்றி மாணவர்களுக்கு எண் மற்றும் கல்வி அறிவில் அடித்தளத்திறன்களை பெறுவதில் உடனடி உதவி தேவைப்படுகிறது. இந்த குறைந்த அளவிலான கற்றல், தற்போதைய முடக்கத்தால் மேலும் அதிகரிக்கும்; அது பின்தங்கிய குழந்தைகளை பாதிக்கும்.
அடித்தளத் திறன்களுக்கு தினமும் 2-3 மணி நேரம்
கல்விநிலை அறிக்கை திட்டத்திற்காக, ஆசிரியர்கள் ASER உபகரணத்தை பயன்படுத்தி வாசித்தல் மற்றும் எண்கணிதத்தில் மாணவர்களை ஒருவருக்கொருவர் மதிப்பீடு செய்தனர். திட்டட்திற்கு முன் (அடிப்படை) மற்றும் இறுதியில் (எண்ட் லைன்) - ஜனவரி முதல் பிப்ரவரி 2019 வரையிலும், ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து 2019 மே மாத தொடக்கம் வரையிலும் -- தரவு சேகரிக்கப்பட்டது. அத்துடன், 2019-20 கல்வியாண்டில் ‘தரப்படுத்தப்பட்ட கற்றல் திட்டம்’ (GLP) மீண்டும் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில், பல பள்ளிகள் தங்கள் ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு ஆகஸ்ட் 2019 இல் ஒரு புதிய அடிப்படையை சேர்த்தன. இத்தரவுகளில் இருந்து, 3ம் வகுப்பு அல்லது 4ம் வகுப்பு முடித்த மற்றும் ஏற்கனவே 2ம் வகுப்பு (‘கதை’ என்றளவில்) படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு வாசிப்பு திறனில் வழக்கமான “கோடை இழப்பு” குழந்தைகளுக்கு 10% புள்ளிகளுக்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
அடித்தள கற்றல் திறன்களை வளர்ப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட கால அளவு ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று மணிநேரம் வரை பள்ளி போதனைகள் என, 45 நாட்கள் முதல் 70 நாட்கள் வரை இருந்தன. மே 2019 இல் அளவிடப்பட்ட தரவுகளின் சான்றுகள், 3ம் வகுப்பில் 14% புள்ளிகளையும், 4ம் வகுப்பில் 16.1% புள்ளிகளையும் வாசிப்பதில் பலனை தந்தன. ஜனவரி மற்றும் மே 2019க்கு இடையில் குறிக்கப்பட்ட இத்திட்டத்தின் பலன்கள், பொதுவாகக் காணப்படும் ஆண்டுக்கு ஆண்டு பலனுக்கு சமமானது.
ஒவ்வொரு பள்ளிக்கும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை (ஒரு குழந்தைக்கு ரூ.5 க்கு மேல்) சுமார் ரூ.1,000 மதிப்புள்ள கூடுதல் பொருட்கள் அச்சிடப்பட்டன; இவற்றில் கதைகள், பெரிய எழுத்துகள், எழுத்து வரைபடங்கள், பயிற்சி வாசிப்பு அட்டைகள் மற்றும் சொல் வாசிப்பு கையேடுகள் இருந்தன. பல்வேறு கற்பித்தல் நடவடிக்கைகளுடன் குழந்தைகள் கற்றல் நிலைக்கு முன்னேற ஆசிரியர்கள் உதவியதுடன், பள்ளி, ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் அடிக்கடி மதிப்பீடுகள் இருந்தன.
சிறந்த கற்றல் முடிவுகள் மற்றும் வேலைவாய்ப்பு
சிறு வயதிலேயே அடித்தள திறன்களை உருவாக்குவது என்பது, சிறந்த கற்றல் முடிவுகள், தனிப்பட்ட நல்வாழ்வு, பொருளாதார மற்றும் தேசிய செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்று, வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகள் இடையே கல்வியறிவு மற்றும் எண் திறன் குறித்த 2014 ஆய்வு கண்டறிந்தது. ஒரு தரமான ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சித் திட்டத்தில் ஒரு வருடம் பங்கேற்பது கூட உயர்நிலைப்பள்ளிக்கு ஆயத்தநிலைகளை உறுதிப்படுத்த முடியும் என்று, கல்விநிலை அறிக்கை மையம் மற்றும் ஆரம்பகால குழந்தை பருவ கல்வி & மேம்பாட்டு மையம் ஆகியவற்றின் இந்திய ஆரம்பகால குழந்தை பருவ கல்வி தாக்க ஆய்வு தெரிவிக்கிறது.
“ஒருவரால் படிக்க முடிந்தால், அவரால் நிறைய விஷயங்களை சொந்தமாகச் செய்யலாம்; படிக்க முடியாவிட்டால் அவ்வாறு அதிகம் செய்ய முடியாது. அதனால்தான் உங்களுக்கான அஸ்திவாரங்களை வலுவாக அமைப்பது முக்கியம்,” என்று பானர்ஜி விளக்கினார். 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்கப்படவுள்ள தேசிய அடித்தள எழுத்தறிவு மற்றும் எண்பணி இயக்கமும் இதையே எதிரொலிக்கிறது; இத்திட்டம், வரைவு தேசிய கல்வி கொள்கை 2019 உடன், 1-5 வகுப்புகளில் அடித்தள திறன்களை வளர்ப்பதன் அவசியத்தை குறிப்பிடுகிறது.
கற்பித்தல் மறுசீரமைத்தல்
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் பொருட்கள் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று டெல்லியில் உள்ள பூசா சாலை ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியின் முதல்வர் அமீதா முல்லா வட்டாள் தெரிவித்தார். "பள்ளிகள் உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அதே நேரம் அவர்கள் எந்த பாடங்கள் மற்றும் கற்பித்தல் முறைகளில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும். அவர்கள் 1-3 வகுப்புகளுக்கு மொழி மற்றும் கணிதத்தில் கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.
தரப்படுத்தப்பட்ட கற்றல் திட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஆசிரியருக்கும் அடிப்படை மற்றும் இறுதி ஆய்வுகளுக்கான தரவுகளை சேகரிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்சிக்கான நிதி ஆறு ஆண்டுகளில் 87% குறைந்துவிட்டதால், ஜி.எல்.பி போன்ற திட்டங்களுக்கான வளங்களில் பற்றாக்குறை இருக்கக்கூடும். எட்டு மாநிலங்களில் இருந்து பள்ளிக்கான பட்ஜெட்டை ஆராய்ந்த ஒரு ஆய்வில், பள்ளி செலவினங்களில் ஆசிரியர் சம்பளம் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளதை காட்டுகிறது; ஆனால் மேம்பட்ட கற்றல் விளைவுகளுக்கும், பிற முக்கியமான பயிற்சிக்கான நிதி செலவிடுவது மோசமாக உள்ளது.
மும்பையில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 8-12ம் வகுப்புகள் வரை கற்பிக்கும் ஸ்கைன் க்வின்னி, கற்றல் இழப்பின் அளவைப் புரிந்து கொள்வதற்கும், கற்பித்தல் முறைகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் மாணவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கருதுகிறார். "நான் ஆன்லைன் பாடங்களை நடத்துகிறேன், ஆனால் நிச்சயமாக ஆன்லைன் கற்றலுக்கு ஏற்ப ஒரு பாடத்திட்ட மாற்றம் இருக்க வேண்டும், மேலும் கற்பிப்பதற்கு டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்," என்றார் அவர்.
மாணவர்களின் வாழ்க்கையில் அவசியமானவற்றை கற்பிப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் பாடத்திட்டத்தை மறுசீரமைப்பது முக்கியம். "என்னைப் பொறுத்தவரை, எப்படி எதற்கு முன்னுரிமை தருவது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்று பானர்ஜி கூறினார். “இதற்கு முக்கிய பட்ஜெட் தேவைகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை, அதற்கு ஒரு பெரிய மனநிலை மாற்றம் தேவை. பாடத்திட்டத்திற்குள் இப்போதே செல்வதை விட, பின்னால் தங்கிவிட்ட குழந்தைகளுக்கு பிடிக்க உதவும் பணிக்கு நாம் தயாரா?” என்றார். வழக்கமான மதிய உணவு என்பது, குழந்தைக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும், இதனால் பள்ளிக்கு வழக்கமான வருகை கிடைக்கும்.
"வீட்டில் பல கஷ்டங்கள் உள்ளன; எனினும், குழந்தைகளை மீண்டும் வழிக்கு கொண்டு வருவதில் மத்தியஸ்த செல்வாக்கை பள்ளிகள் கொண்டிருக்கலாம்," என்று அவர் கூறினார். மார்ச் 18 அன்று, கோவிட் தொற்றுநோய் பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மூடப்பட்டு பள்ளி குழந்தைகளில் மதிய உணவுக்கு தடங்கல் ஏற்பட்டது. இவ்வாறு மூடியதற்கு பதில் அளிக்கும்படி, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
(இனாம்தர், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.