திரும்பி வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவ கிராமப்புற வேலைத்திட்டத்தை எவ்வாறு மேம்படுத்தப்படலாம்
மும்பை: கோவிட்-19 பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் துயருக்கு மத்தியில் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிய பல லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க, அரசு தனது கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGS) வலுப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த திட்டத்திற்கு கூடுதல் நிதிகளை அளித்தல், உத்தரவாதத்துடன் வேலை அளிக்கப்படும் நாட்களை இரட்டிப்பாக்குவது மற்றும் புதிய வகை வேலைகளைச் சேர்ப்பதன் மூலம் இதை வலுப்படுத்தலாம் என்று, எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது.
மே மற்றும் ஜூன் மாதங்களில், புலம் பெயர்ந்தோர் திரும்பி வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் வேலைக்கான தேவை, 2013-14ம் ஆண்டில் இருந்து இல்லாத அளவாக மிக அதிபட்ச நிலையை தொட்டது. ஆகஸ்ட் 2020 இல் 2.42 கோடி கிராமப்புற குடும்பங்கள் வேலை கோருகின்றன, இது 2019 ஆகடு மாதத்துடன் ஒப்பிடும் போது 66% அதிகரிப்பு என்று வேலை உத்தரவாத திட்டத்தின் இணையதள தரவுகள் காட்டுகின்றன. பல மாவட்டங்கள் ஏற்கனவே தங்கள் வருடாந்திர வேலை உத்தரவதாக திட்டத்தில் வேலை உருவாக்கும் இலக்குகளை கடந்துவிட்டன.
வேலை தேடும் கிராமப்புற மக்களுக்கு, ஒரு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உத்தரவாத திட்டம் (MGNREGS), தொற்று காரணமாக இடம்பெயர்வுகளை தடுப்பதிலும், கிராமப்புறங்களில் சொத்துக்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆனால் அதன் செயல்படுத்தல் முறை, பல்வேறு சவால்களால் தடைபட்டுள்ளது என்பதை, இடம்பெயர்வு போக்குகள் குறித்த தற்போதைய ஆய்வுகள் காட்டுகிறது.
புலம்பெயர்ந்தோர், தாங்கள் பணிபுரிந்த நகரங்களை விட்டு வெளியேறிய ஐந்து மாதங்களுக்குப்பிறகு, சிலர் கிராமங்களில் வேலை வாய்ப்புகள் இல்லாததால் நகரங்களுக்கு மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளதை, துரித மதிப்பீட்டு கணக்கெடுப்பு காட்டுகிறது. நகரங்களில் வேலை தேடுவோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, புலம்பெயர்ந்தோர் திரும்பி வருவதால், அரசு இப்போது நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தில் ரூ.35,000 கோடி (4.8 பில்லியன் டாலர்) நகர்ப்புற திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்று ப்ளூம்பெர்க் செப்டம்பர் 2ம் தேதி கட்டுரை தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடி எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்திற்கு வழங்கப்படும் நிதியை மேம்படுத்துவதற்கும், வேலைவாய்ப்பு நாட்களை 100 முதல் 200 ஆக உயர்த்துவதற்கும், தொழிலாளர் திறனை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் இந்த திட்டத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர். எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் சுமார் 6,60,000 தொழிலாளர்கள் ஏற்கனவே தங்கள் 100 நாள் வேலைகளை நிறைவு செய்துள்ளதாக, திட்டம் தொடர்பான இணையதள தரவு காட்டுகிறது.
நான்கு மாதங்களில் தீர்ந்த நிதி
நாங்கள் மேலே மேற்கோள் காட்டிய விரைவான மதிப்பீட்டு கணக்கெடுப்பு, ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் 25%-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் தங்கள் கிராமங்களில் வேலை தேடுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், காரீப் விவசாய பருவம் கிராமங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கியதால் இந்த திட்டத்தின் தேவை குறைந்தது, ஆனால் முந்தைய ஆண்டை விட இது இன்னும் அதிகமாகவே உள்ளது என்பதை கீழே உள்ள அட்டவணை காட்டுகிறது. 2019 ஜூலை மாதத்தை விட 2020 ஜூலை மாதத்தில் 72% அதிகமான குடும்பங்கள் வேலை கோரியுள்ளன; ஆகஸ்ட் 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஆகஸ்டில் 66% அதிகமான குடும்பங்கள் வேலை கோரியுள்ளன.
பீப்புள்ஸ் ஆக்சன் குழு வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு உத்தரவாத அறிக்கையின் படி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி நிலவரப்படி, வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 17% பேர் அதைப் பெறவில்லை. 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் பட்ஜெட்டில் (திருத்தப்பட்ட) கிட்டத்தட்ட இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏற்கனவே செலவிடப்பட்டுள்ளது என்று அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகள் சாத்தியமான செலவினங்களின் நடுப்பகுதியில் மதிப்பாய்வு ஆகும், மீதமுள்ள செலவுகள் மற்றும் புதிய சேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.
கிராமப்புறங்களில் வேலைக்கான அதிகரித்த தேவையை சமாளிக்க, திறமையான திரும்பும் புலம்பெயர்ந்தோருக்கு, 25 பிரிவுகளின் கீழ் பணிகளை வழங்குவதற்காக அரசு ஜூன் 20 அன்று கரிப் கல்யாண் ரோஜ்கர் யோஜனாவை (GKRY - ஜி.கே.ஆர்.ஒய்) அறிமுகப்படுத்தியது. ரூ.50,000 கோடி (6.82 பில்லியன் டாலர்) திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்பை உருவாக்குதல், கிராமங்களில் இணைய வசதிகளை வழங்குதல் மற்றும் கிராமப்புற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன்களை வரைபடமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உத்தரபிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 116 மாவட்டங்கள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, இந்த அளவிலான நெருக்கடியைச் சமாளிக்க போதுமானதாக இல்லை மற்றும் ஜி.கே.ஆர்.ஒய் இன் கீழ் ஒரு பெரிய எண்ணிக்கையிலான குடும்பங்கள் இதுவரை நன்மைகளைப் பெறவில்லை என்று, மனித மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஆய்வுகள் மையத்தின் இயக்குனர் பொருளாதார நிபுணர் ரவி ஸ்ரீவாஸ்தவா, மே மாதம் இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டினார். கூடுதலாக, வேலைக்கான அதிக தேவை மற்றும் வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ள பல மாவட்டங்களை ஜி.கே.ஆர்.ஒய் தவிர்த்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
மேலும், 691 மாவட்டங்களில் செயல்படும் இத்திட்டம் மாற்றியமைக்கப்படலாம் மற்றும் அதிகப்படியான வேலை தேவையை ஈர்க்கும் வகையில் மேம்படுத்தலாம் என்று கள வல்லுநர்கள் வாதிடுவதால் கிராமப்புற மறுமலர்ச்சிக்கான நம்பிக்கை இப்போது எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் மீது அதிகரித்துள்ளது.
வேலை நாட்கள் இரட்டிப்பாக வேண்டும்
ஊரடங்கின் காரணமாக புலம்பெயர்ந்தோர் திரும்பி வருவது ஏழை கிராமப்புற தொழிலாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது; மேலும் இது ஊதியங்கள் மற்றும் வேலை மற்றும் தொழிலாளர் ஒதுக்கீட்டை பாதிக்கும் என்று ஸ்ரீவஸ்தவா, இந்த ஜூன் 2020 ஆய்வறிக்கையில் வேளாண் ஆய்வுகள் மதிப்பாய்வில் வெளியிட்டார்.
"முன்பு கிராமப்புற உழைப்பை உள்வாங்கிய அமைப்புசாரா துறையில் கட்டுமானம் மற்றும் பிற பணிகளின் மந்தநிலையால், இவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன," என்று, ஆந்திராவைச் சேர்ந்த செயற்பாட்டாளரும் லிப்டெக் இந்தியா ஆராய்ச்சியாளருமான சக்ரதர் புத்தர் கூறினார், இது, இந்தியாவில் பொது சேவை விநியோகத்தை மேம்படுத்துவதற்காக பணியாற்றும் பொறியாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் குழுவாகும். “டிசம்பரில், வேளாண் பணிகள் கூட நிறுத்தப்படும். நூறு நாள் வேலை உத்தரவாத திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கான பணிகள், 200 நாட்களாக நீட்டிக்கப்பட வேண்டும். தேசிய சராசரி [MGNREGS] ஊதியம் 198 ரூபாயாக இருப்பதால், முழு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.19,800 மட்டுமே பெற முடியும்”. எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் வழங்கப்பட்ட 100 நாள் என்பது அகற்றப்பட்டு தேவைக்கேற்ப வேலை வழங்கப்பட வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்களான ஜெயதி கோஷ் மற்றும் பிரபாத் பட்நாயக் மற்றும் ஆராய்ச்சியாளர் ஹர்ஷ் மந்தர் ஆகியோர் மே மாதம், தி இந்து இதழில் எழுதிய கட்டுரையில் வாதிட்டனர். சானிடிசர்கள், முகக்கவசங்கள் மற்றும் சோப்புகளை உற்பத்தி செய்தல், வீட்டு அடிப்படையிலான செயல்பாடுகள் மற்றும் சமையலறை தோட்டங்களில் வேலை செய்வது மற்றும் சட்டத்தின் கட்டமைப்பின் கீழ் ஒருவரின் சொந்த பண்ணைகளில் வேலை செய்வது போன்ற யோசனைகள், வேகத்தை பெறத் தொடங்கியுள்ளன.
ஒடிசா மற்றும் கேரளா போன்ற சில ஆதாரவளமுள்ள மாநிலங்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பதிவு, திறன் வரைபடம் மற்றும் வேலைவாய்ப்புக்கான திட்டங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. கிராமப்புற மேம்பாட்டுக்காக ரூ.17,000 கோடி (2.32 பில்லியன் டாலர்) திட்டத்தையும், நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புத்துயிர் மற்றும் வளர்ச்சியையும் அறிவித்த முதல் பெரிய மாநிலம் ஒடிசா ஆகும். ஒடிசா தனது எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் நிதிகளை பயன்படுத்திக் கொண்டதோடு, ஆகஸ்ட் தொடக்கத்தில் 3% க்கும் அதிகமான எதிர்மறை இருப்புடன் இருந்தது. உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்கள் ஒதுக்கிய நிதியில் 5%-க்கும் குறைவாகவே கொண்டுள்ளன. உத்தரபிரதேசம் மற்றும் ஆந்திராவில் முறையே 27% மற்றும் 14% க்கும் அதிகமான வேலைவாய்ப்பு தேவை பூர்த்தி செய்யப்படவில்லை.
உத்தரவாதமளிக்கப்பட்ட வேலை நாட்களை இரட்டிப்பாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பதற்கான பரிந்துரைகள், ஊராட்ட்சிக்கான வேலைத் திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், ஊதிய விகிதத்தை அதிகரித்தல், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் பணியின் பரப்பை விரிவுபடுத்துதல், விநியோக முறையை வலுப்படுத்துதல் மற்றும் திட்டத்தின் நோக்கத்தில் ஒற்றைப் பெண்களை உள்ளடக்குதல் திரும்பும் புலம்பெயர்ந்தோரின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
துயரமான இடம்பெயர்வை ஊக்கப்படுத்தக்கூடாது
கிராமப்புற - நகர்ப்புற இடம்பெயர்வு முதன்மையாக வளர்ச்சி மற்றும் அதிக உற்பத்தித்திறன் மற்றும் நகர்ப்புற தொழில்துறை துறையில் வருமானம் ஆகியவற்றின் வேறுபாடுகளின் விளைவாகும். 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ், மற்றவற்றுடன் துயர இடம்பெயர்வுகளைத் தடுப்பதற்கும், கிராமப்புறங்களில் சொத்துக்களை உருவாக்குவதையும் நோக்கமாக இருந்தது.
குறுகிய கால துன்பகரமான இடம்பெயர்வுகளைக் குறைப்பதில் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது. வருமானத்தின் மிகக் குறைவான மக்களிடையே இத்தகைய இடம்பெயர்வு அதிக நிகழ்தகவு இருப்பதால், இந்தத் திட்டம் குறைந்த வருமானக் குழுக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நிரூபித்துள்ளது என்று, இந்திய தொழிலாளர் பொருளாதார இதழின் 2018 ஆய்வில் காட்டப்பட்டுள்ளது.
அரசின் நூறுநாள் வேலை உத்தரவாத திட்டம் காரணமாக குறுகிய கால இடம்பெயர்வு வீதம் 20% வீழ்ச்சியடைந்துள்ளதாக, Research Institute for Compassionate Economics (RICE -ரைஸ்) கணக்கெடுப்பு மாதிரியில் என மதிப்பிடப்பட்டுள்ளது. குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் எல்லைகளில் உள்ள கிராமங்களில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு தரவுகளில் 44% என்று, க்ளெமென்ட் இம்பெர்ட் மற்றும் ஜான் பாப் ஆகிய ஆராய்ச்சியாளர்களின் 2016 பகுப்பாய்வைக் காட்டியது. பல மாநிலங்களில் உள்ள உள்ளூர் செயல்பாட்டாளர்களின் பொதுவான கருத்து என்னவென்றால், எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் என்பது பருவகால இடம்பெயர்வுகளை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று, இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஜி.ஐ.டி.ஆர்) உதவி பேராசிரியர் சுதா நாராயணன், 2020 ஆம் ஆண்டு இந்தியா ஃபோரம் கட்டுரையில் எழுதினார்.
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகியன, மிகப்பெரிய இடம்பெயர்வுள்ள மாநிலங்களாக உள்ளன; அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கம் ஆகியன உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. கூடுதலாக, ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் இந்த தொற்றுநோய்களின் போது அதிக எண்ணிக்கையில் திரும்பி வரும் புலம்பெயர்ந்தவர்களை கண்டன. இதன் விளைவாக, 2020 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் பணிக்கான அதிகபட்ச தேவை இருந்ததை, கீழேயுள்ள வரைபடத்தின் தரவு காட்டுகிறது.
ஆதார வளமுள்ள மற்றும் இலக்கு பகுதிகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார நிலைமைகள் இடம்பெயர்வு போக்குகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று, இகனாமிக் அண்ட் பொலிடிகல் வார இதழில் வெளியிடப்பட்ட 2020 கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள் அஜய் தண்டேகர் மற்றும் ராகுல் காய் ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பருவகால இடம்பெயர்வுகளை குறைக்க எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் உதவியுள்ளது என்று ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தில் அதிக நாட்களை வழங்கும் மாநிலங்கள் குறுகிய கால இடம்பெயர்வுக்கு குறுகிய காலங்களைக் கொண்டுள்ளன; பொது வேலைவாய்ப்பின் ஒவ்வொரு கூடுதல் நாளும் குறுகிய கால இடம்பெயர்வுகளை 0.6 நாட்கள் குறைக்கிறது, அதிக இடம்பெயர்வு பகுதிகளில் ரைஸ் (RICE) கணக்கெடுப்பு பகுப்பாய்வு (மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) காட்டியது.
பிற ஆய்வுகள் மூலம் இது உறுதிப்படுத்தப்படுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மற்றும் ஜஜ்பூர் மாவட்டங்களில், பருவகால இடம்பெயர்வுகளை குறைப்பதில் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் தெளிவான பங்கைக் கொண்டிருந்ததை, ஜஜாதி கேஷரி பரிதாவின் 2016 ஆய்வு கண்டறிந்தது. விவசாய காலங்களில் (ஏப்ரல்-மே), இந்த திட்டம் ஏழைகளுக்கு, குறிப்பாக பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) மற்றும் பட்டியல் சாதி (எஸ்சி) குடும்பங்களுக்கு வேலை வழங்கியது, அவர்களில் பலர் நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். எஸ்.டி மற்றும் எஸ்சி குடும்பங்களுக்கு, பருவகால வெளியேற்றம் முறையே 82.5% முதல் 10.2% மற்றும் 71.5% முதல் 9.7% வரை குறைந்தது.
முன்னதாக சுமார் 67% குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக அறிவித்திருந்தாலும், இந்த எண்ணிக்கை 2006 மற்றும் 2011 க்கு இடையில் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் செயல்படுத்தப்பட்ட பின்னர் சுமார் 9.5 சதவீதமாகக் குறைந்தது.
நிலம் இல்லாத வீடுகள் மற்றும் மிகக் குறைந்த நிலம் கொண்ட வீடுகள் (1 ஏக்கருக்கும் குறைவானது) வெளியேறுவதில் பெரும் சரிவை -- முறையே 87.3% முதல் 7.2% வரை மற்றும் முறையே 84.7% முதல் 12.5% வரை -- கண்டன. இந்த முறை நாள்பட்ட ஏழைகள் மத்தியில் இடம்பெயர்வு அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது. அத்துடன், தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதங்கள் (வேலை அட்டைகளை வைத்திருப்பவர்களில்) எஸ்.டி.க்கள் மற்றும் எஸ்.சி.க்களுக்கு முறையே 99.3% மற்றும் 98.1% ஆகும் - அவர்களில் பெரும்பாலோர் நிலமற்றவர்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் மற்றும் எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் ஒரு பயனுள்ள வாய்ப்பை நிரூபித்தனர்.
கிராமப்புறங்களில் சொத்துக்களை உருவாக்குவதற்கு எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் உதவியாக இருந்தது என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன, இது கிராமப்புற பொருளாதாரங்களை உயர்த்தியுள்ளது மற்றும் துன்ப இடம்பெயர்வுகளை குறைத்துள்ளது. குறிப்பாக பீகார், உ.பி.யின் கிழக்கு பகுதிகள், ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற இடம்பெயர்வு மூல பகுதிகளில் இது உண்மை; அவை, நாள்பட்ட வறட்சி, காடழிப்பு நிலப்பரப்புகள், மோசமான நீர் பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் அழிந்த வேளாண் சூழலியல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் அஜய் தண்டேகர் மற்றும் ராகுல் காய் ஆகியோர் இகனாமிக் அண்ட் பொலிடிகல் 2020 இதழில் வெளியான கட்டுரையில் எழுதியுள்ளனர். இந்த தோல்வியுற்ற வளர்ச்சி, இந்த பகுதிகளில் மோசமான வள தளங்கள் மற்றும் சொத்துக்களின் தொடர்ச்சிக்கு பங்களிக்கிறது.
எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் பணிகள் நீர் பாதுகாப்பு மற்றும் அறுவடை, வறட்சி தடுப்பு மற்றும் தோட்டக்கலை, வெள்ள கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு, நில மேம்பாடு, நுண் பாசன பணிகள், பாரம்பரிய நீர்நிலைகளை புதுப்பித்தல், நீர்ப்பாசன வசதி, கிராமப்புற இணைப்பு போன்றவை அடங்கும். கிராமப்புறங்களில் சொத்து உருவாக்கத்தின் முக்கிய இயக்கியாகும்.
செயல்படுத்தல் தடைகள்
எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் வேலைவாய்ப்பு நாட்கள் மற்றும் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் ஆகியவற்றால் குடியேறுவதற்கான முடிவுகள் பாதிக்கப்படுகின்றன, 2015 ஆம் ஆண்டு டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஆய்வு காட்டுகிறது. 2010-11 ஆம் ஆண்டில் கூச் பெஹார் மாவட்டத்தின் இரண்டு தொகுதிகளில் மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், புலம்பெயர்ந்த குடும்பங்களில் குறைந்தது 71% பேர் அதிக நாட்கள் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தால் பிற பகுதிகளுக்கு புலம்பெயர மாட்டார்கள். 50 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த மக்கள், பலநாட்களுக்கு தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காவிட்டால், வேறு இடங்களில் அவர்கள் புலம்பெயர்ந்துவிடுவார்கள் என்று கூறினர்.
இருப்பினும், வேறு பல காரணிகள் எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் திட்டத்தை கோரிக்கை அடிப்படையிலான திட்டத்தில் இருந்து வேலை கிடைக்கும் அடிப்படையிலான திட்டமாக மாற்றியுள்ளன. "நூறு வேலை உத்தரவாத திட்டம் தொழிலாளர்களை ஈர்க்கிறது, வேறு வழியும் இல்லை. எப்படியிருந்தாலும், அது ஏழ்மையான மாநிலங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதுதான் ”என்று பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரூஸ், மே 2020 தி இந்து இதழ் கட்டுரையில் கருத்து தெரிவித்தார். வேலைகளின் நிர்வாக பங்கீடு (வேலை தேடும் அனைவரும் அதை பெறவில்லை) மற்றும் ஊதியம் வழங்கலில் தாமதங்கள் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் பணிக்கான அடுத்தடுத்த கோரிக்கையை ஊக்கப்படுத்துவதாக, சமூக அறிவியல் ஆராய்ச்சி வலையமைப்பின் 2016 ஆய்வு கண்டறிந்தது.
இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்துவது நிர்வாக கட்டமைப்புகளைப் பொறுத்தது -- அதாவது ஊழியர்களின் திறன், சரியான நேரத்தில் நிதி வழங்கல், நிர்வாக பங்கீடு போன்றவை-- அந்த மாநிலங்கள் வைக்கப்படுகின்றன, எனவே அவை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. உதாரணமாக, வறுமையில் உள்ள மாநிலங்களில் நிர்வாக மதிப்பீடு அதிகமாக இருந்தது என்பதை, 2012 இல் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வார இதழில் வெளியான ஆய்வு காட்டுகிறது. ராஜஸ்தானில், திட்டத்தின் வினியோக உந்துதல், மேல்-கீழ் தன்மை போன்றவை, "தொழிலாளிக்கு ஊக்கம் தராத" போக்கிற்கு வழிவகுத்தது --தொழிலாளர்கள் வேலையைக் கோருவதில் அக்கறை காட்டவில்லை, அதற்காக செயலற்ற முறையில் காத்திருந்தனர் -- என்று எகனாமிக் அண்ட் பொலிடிகல் வார இதழ் வெளியிட்ட 2015 ஆய்வு காட்டியது. ஆய்வின் படி, 2010 முதல் (2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பின்னர்) நீர்த்தலுக்கு, இது பங்களித்தது.
தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது -- பதிலளித்தவர்களில் சுமார் 60% பேர், நியாயமான ஊதியங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை-- மோசமான நிர்வாகத்திறன், ஊழல் மற்றும் அதிகாரத்துவ வர்க்கம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் அதிகாரிகளின் நலன்களை இணைத்தல் - இவை அனைத்தும் திட்டத்தின் மோசமான செயல்பாட்டிற்கு பங்களித்ததாக, ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தால் 2017-18 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வு அறிக்கை கூறியது.
தற்போது “புதிய ஒப்பந்தம்”, “பல லட்சம் பணி இடங்கள்” மற்றும் “உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான சாசனம்” ஆகியவற்றுக்கான தேவைகள் உள்ளன, அவற்றை சமாளிக்க வேண்டிய சிக்கல்கள் - எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்-இன் சிக்கலான ஆன்லைன் பதிவு செயல்முறை இ-மஸ்டர் ரோல்கள் மூலம் , தற்செயலான பண நெருக்கடி மற்றும் வரையறுக்கப்பட்ட வங்கி வசதிகள்-போன்றவை உள்ளன. தொழிலாளர்களுக்கு இடையே போதுமான தொழில்நுட்ப அறிவு ஒரு முக்கிய பிரச்சினையாக காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்ப்பது, பணம் செலுத்துவதில் கடின முறை மற்றும் தொழிலாளர்களை தளத்தில் பதிவு செய்வது போன்றவற்றை, ரித்திகா கெரா போன்ற முன்னணி வளர்ச்சி பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
(மியாடம் மற்றும் ரமேஷ், மும்பையை சேர்ந்த தென்கிழக்கு இடம்பெயர்வு அறக்கட்டளை முயற்சியான மிக்ரேஷன் நவ் ஆராய்ச்சியாளர்கள்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.