புதுடெல்லி: 22 வயதான வித்யா கவுசல், சொந்த ஊரான உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள ஜகதீஷ்பூரில், சொந்தமாக ‘ஷி’ என்ற பெயரில் அழகு நிலையம் அமைப்பதற்கு முன்பு, அத்துறையில் தொழில்முனைவோராவதற்கு ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார். கடந்த ஆண்டு பட்டம் பெற்ற கவுசல், அவரது குடும்பத்தினர் விரும்பியபடி ஆசிரியராக மாறியிருக்கலாம், ஆனால் அதற்கு பதிலாக ஒரு சுதந்திர தொழில்முனைவோர் வாய்ப்பை தேர்வு செய்தார்.

தனது அழகு நிலையத்திற்கான மாத வாடகையாக ரூ .5,000 செலவிட வேண்டும். ஒரு காலத்தில் காந்தி குடும்பத்தால் மேம்படுத்தப்பட்டு, தொழில்துறை மையமாக இருந்த ஜகதீஷ்பூரில், கடந்த தசாப்தத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் வளமின்றி காணப்படுகிறது. ஆனால் கவுசலின் அழகு நிலையம் 2020 மார்ச் மாதத்தில் தொடங்கியபோது, வாடிக்கையாளர்களின் வருகை நிலையாக இருந்தது.

அவர் அழகு நிலையம் தொடங்கிய இரு வாரங்களுக்குப் பிறகு, கோவிட்-19 தொற்று பரவலை தடுக்க, நாடு தழுவிய ஊரடங்கு இந்தியாவில் அமலானது. கடுமையான சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகள் நடைமுறையில் இருப்பதால், அழகு நிலைய வணிகம் செய்ய முடியாததாக நிலை ஏற்பட்டது. ‘ஷி’ அழகு நிலையத்தை மூட வேண்டியிருந்தது, கவுசல் தனது இரு உறுப்பினர்களைக் கொண்ட குழுவை கலைக்க வேண்டியிருந்தது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதும், ஜூலை மாதம் அவரது அழகு நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது, எனினும் முன்பு போல் இல்லாமல் வெகுசில வாடிக்கையாளர்களே வருவதாக, கவுசல் கூறினார், எனினும் கை சுத்தம் மற்றும் சமூக இடைவெளியை அவர் உறுதி செய்து கொள்கிறார்.

“ஒரு நல்ல நாள் என்றால், ஐந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள்; ஆனால், பெரும்பாலான நாட்களில், அப்படி இருப்பது அரிது. உண்மையில் இங்கு வர மக்கள் பயப்படுகிறார்கள். நான் பல மாதங்களாக இழப்புகளையே சந்தித்து வருகிறேன். நான் கட்டணத்தை உயர்த்தினால், வாடிக்கையாளர்கள் அதை கொடுக்க மறுக்கிறார்கள். அழகு நிலையத்தை நான் மட்டுமே நடத்துவதும் கடினம்,”என்றார் அவர். தற்போதைய திருமண சீசன், தனது தொழிலை மேம்படுத்தும் என்று அவர் நம்புகிறார்.

பெண்கள் மத்தியில், இவ்வாறு சவால்கள் நிறைந்த போராட்டத்தை சந்திப்பது தொழில் முனைவோர் மட்டுமல்ல என்பது லக்னோ, அலகாபாத், சீதாபூர் மற்றும் அமேதி உள்ளிட்ட உத்தரபிரதேசத்தின் பல மாவட்டங்களில் நாங்கள் ஆய்வு செய்ததில் கண்டறிந்தோம். நகரங்களில் வீட்டு உதவியாளராக இருப்பவர் தொடங்கி, கட்டுமான தளங்கள் மற்றும் கால் சென்டர்களில், கைவினைப்பொருட்கள் மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகளில் பணியாற்றும் பெண்கள் வரை பலரும் வேலை இழந்துள்ளனர். ஊரடங்கின் போது நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய ஆண்களால், கிராமங்களில் பொது வேலைவாய்ப்பு திட்டங்களில் பெண்களின் பங்களிப்பு குறைந்துவிட்டது.

பெண்களின் வேலைவாய்ப்பில் ஊரடங்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்த ஆரம்பகால ஆராய்ச்சி, இதை உறுதிப்படுத்துகின்றன: வேலைவாய்ப்பு வீழ்ச்சி என்பது பாலின நடுநிலையை கொண்டிருக்கவில்லை. "வேலைவாய்ப்பில் முன்பே இருக்கும் பாலின இடைவெளிகளைக் கருத்தில் கொண்டு, முழுமையான வகையில் பெண்களை விட அதிகமான ஆண்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். எவ்வாறாயினும், ஊரடங்கிற்கு முன்பிருந்த பணிச் சூழல், ஊரடங்கிற்கு முன் பணிபுரிந்த ஆண்களை விட பெண்கள் வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு சுமார் 20 சதவீதம் குறைவாக இருந்தது, ” என்று, வணிக தகவல் நிறுவனமான இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் தரவுகளை ஆராய்ந்த அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் அஸ்வினி தேஷ்பாண்டே அறிக்கை தெரிவிக்கிறது.

மூன்று பகுதிகளை கொண்ட தொடரில், இந்தியா ஸ்பெண்ட் இந்தியா முழுவதும் வேலை மற்றும் வாழ்வாதாரங்களில் கோவிட்-19 ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய்கிறது. முதல் பகுதியில், தெற்கு ராஜஸ்தானை சேர்ந்த கிராமங்களில் மீண்டும் தங்கியிருந்த தொழிலாளர்களின் நிலை குறித்து பார்த்தோம். இரண்டாவது பகுதியில், ஒடிசாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சூரத் மற்றும் பிற புலம்பெயர்ந்த இடங்களுக்கு திரும்புவது குறித்தும், அவர்கள் திரும்பி வந்தபின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறித்தும் ஆராய்ந்தோம். இந்த மூன்றாவது மற்றும் நிறைவுப்பகுதியில், இந்தியாவின் தொழிலாளர் திறனில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம், கோவிட் தொற்றுநோயால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராயவுள்ளோம். இதற்காக நாங்கள், வேலைவாய்ப்பில் அதிக பாலின வளைவு இருப்பதாகக்கூறப்படும் உத்தரபிரதேசத்தின் மீது கவனம் செலுத்துகிறோம்

தொற்றுநோய்க்கு முன்பே, சமூக மற்றும் கலாச்சார காரணங்களால் இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது என்று, இந்தியா ஸ்பெண்ட் தனது @பணியிடத்தில் பெண்கள் (Women@Work) என்ற தொடரில் தெரிவித்துள்ளது. பொருளாதார கணக்கெடுப்பு 2017-18 படி, பணி புரியும் பெண்களுக்கான இந்தியாவின் விகிதம் வெறும் 24%, இது தெற்காசியாவில் மிகக் குறைவான ஒன்றாகும்.

பெண் வேலைவாய்ப்புகளில் மிகக்குறைந்த விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் பீகார் (2.8%), உத்தரப்பிரதேசம் (9.4%), அஸ்ஸாம் (9.8%) என்று, புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே (2017-18) நடத்திய மாநில வாரியான ஆய்வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்கள் நடத்தும் தொழில்களை தாக்கும் சரிவு

வித்யா கவுசலின் தொழிலானது, ஒரு தசாப்தத்திற்கு முன்பே இந்தியாவின் சிறிய நகரங்களின் நுகர்வு அதிகரிப்புக்கு பின்னால் எழுப்பப்பட்ட தொழில்களில் ஒன்றாகும். அவரை போன்றவர்கள் மேற்கொள்ளும் குறு வணிகங்களில் 20% பெண்களுக்கு சொந்தமானவை, தற்போதைய தொற்றுநோய் நெருக்கடியால் அவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை தரவு காட்டுகிறது.

இந்தியாவின் அழகு மற்றும் ஆரோக்கியத்துறையில் உள்ளவர்கள் பெரும்பாலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களாக (MSME) செயல்படுபவர்கள்; ஊரடங்கு காலத்தில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் அரசின் ஆதரவைக் கோரினர். மூன்று பேரில் இருவர் பெண்கள் அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கொண்டிருக்கும் இவ்வகை தொழிலில், தற்போது ஏழு மில்லியன் வேலைகள் ஆபத்தில் இருப்பதாக, அவர்கள் தெரிவித்தனர்.

கோவிட் தொற்று நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள துறைகள் -- அதாவது உணவகங்கள், சில்லறை விற்பனை, அழகு நிலையம், சுற்றுலா, கல்வி, வீட்டு வேலை, மற்றும் இளைஞர்கள் மற்றும் முதியோருக்கான பராமரிப்புப் பணிகள் போன்றவை -- அதிகம் பெண்களுக்கான வேலைவாய்ப்பைக் கொண்டுள்ளதாக, வாழ்வாதாரங்களை செயல்படுத்தும் ஒரு சமூக நிறுவனமான லேபர்நெட் (Labournet) தலைவர் காயத்ரி வாசுதேவன் கூறினார்.

தனது குடும்பத்தின் சேமிப்புடன் தனது தொழிலைத் தொடங்கிய கவுடல், அரசிடம் இருந்து எந்த ஆதரவையோ, உதவியையோ எதிர்பார்க்கவில்லை. "என்னைச் சுற்றியுள்ள அனைத்து தொழில்களூம் அழிக்கப்பட்டுவிட்டன, நாங்கள் சுயமாக சொந்தமாக வாழ்ந்தாக வேண்டும்," என்று அவர் கூறினார்.

ஊரடங்கு மற்றும் தொற்றுநோயால், 73% பெண்கள் தொழில்முனைவோர் பின்னடைவுகளை எதிர்கொண்டு சமாளித்துள்ளனர், 21% வருவாயை இழக்கும் தொலைவை தொட்டுவிட்டனர் என்பது, இந்திய நகரங்களில் உள்ள தனி மற்றும் சிறு நிறுவனங்களின் பெண்கள் வணிக உரிமையாளர்களை நேர்காணல் செய்த மேலாண்மை ஆலோசனையான பெயின் & கம்பெனியின் அறிக்கை ஒன்று கூறியுள்ளது. நேர்காணல் செய்யப்பட்ட பெண்களில் 35% வரை வணிக வருவாயில் குறிப்பிடத்தக்க சரிவு (25% -75%) பதிவாகியுள்ளது. ஊரடங்கு காலத்தில் கூடுதல் வீட்டு வேலைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததால் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

கைவினைப்பொருள் அலகுகள் மூடல்

ஊரடங்கின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, பாலின ஏற்றத்தாழ்வுகளை மோசமாக்கியுள்ளதை பல அறிக்கைகள் காட்டியுள்ளன (இங்கே, இங்கே மற்றும் இங்கே). வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்களை பெண்கள் இழந்துவிட்டனர், பல பெண்கள், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு முன்வரிசை ஊழியர்களாக உள்ள அதே நேரத்தில், வீட்டிலும் அதிகரித்த பணிச்சுமையை சந்திக்கிறார்கள்.

இந்தியாவில் பெண்களுக்கான ஊதியம் தொடர்புடைய குறைந்த வளர்ச்சிப்பணிகள், குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட துறைகளில், முக்கியமாக விவசாயம் அல்லது வீட்டு அடிப்படையிலான முறைசாரா வேலைகளில் குவிந்துள்ளது. லக்னோவில் 250,000 சிக்கன்கரி மற்றும் சர்தோஜி உடை தயாரிக்கும் தொழிலாளர்களாக இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது - சிறந்த எம்பிராய்டரி திறன் தேவைப்படும் கைவினைத் துறையாகும் இது. இந்த கைவினைஞர்களில் பெரும்பாலோர் பெண்கள், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கான தேவை, ஊரடங்கின் போது தேவை குறைந்ததால் வேலைகளையும் வருவாயையும் இழந்துவிட்டனர். ராணி, 35 என்ற சர்தோஜி தொழிலாளியின் யூனிட் ஊரடங்கின் போது மூடப்பட்ட சோகக்கதையை நாங்கள் பின்னர் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், தனது நான்கு இளம் குழந்தைகளுக்கு உணவு மற்றும் கல்வி செலவுகள் இருப்பதால், கையில் எடுத்த ஊசியை தம்மால் இன்னும் ஒதுக்கி வைக்க முடியவில்லை என்றார்.

“ஊரடங்கில் இருந்து இந்த பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அதை சார்ந்தே பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் அவர்களோ கண்ணுக்கு புலப்படாதவர்கள்”என்று உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆர்வலரும், தன்னார்வ தொண்டு நிறுவனமான நேஷனல் அலையன்ஸ் ஆஃப் பீப்பிள்ஸ் மூவ்மென்ட்ஸ் அமைப்பாளருமான அருந்ததி துரு கூறினார்.

இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் பெண்கள் பங்கேற்பது சுதந்திரத்திற்குப் பின்னர் மிகவும் வீழ்ச்சி அடைந்ததாக, கடந்த 2018ம் ஆண்டில் - 18.6% - என்றளவில் இருந்ததாக, பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் 2018-19 கணக்கெடுப்பு தெரிவிக்கிறது; ஆனால் தற்போதைய தொற்றுநோய் இந்தியாவில் பெண்களது வேலைவாய்ப்பில் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

"தொற்றுநோய்களின் சமூக-பொருளாதார தாக்கத்தின் எண்ணிக்கையை பொருத்தவரை, பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் மேம்பட்ட பெண்கள் மையத்தின் முன்னாள் பேராசிரியர் விபூதி படேல் கூறினார். “இது அதிகரித்த பராமரிப்புப் பணிகளின் காரணமாக மட்டுமல்ல, உரிமையின் காரணமாகவும் இருக்கிறது - வேலையின்மை விகிதம் அதிகமாக இருக்கும்போதெல்லாம், ஆண்கள் [வேலைகளுக்கு] முன்னுரிமை பெறுகிறார்கள், ஏனெனில் பெண்களை உணவுப்பொருட்களை வீட்டில் தயாரிப்பவராகவே ஆண்கள் பார்க்கிறார்கள். பொருளாதார செழிப்பு காலங்களில், பெண்கள் கடைசியாகவே பணி அமர்த்தப்படுகிறார்கள், அதேபோல் ஒரு நெருக்கடி காலத்தில் பெண்கள்தான் முதலில் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்” என்றார் அவர்.

‘வேலைச்சந்தையில் ஆண்கள் நுழைந்தவுடன், வெளியேற்றப்படும் பெண்கள்’

பெண்களின் நடமாடுவதேற்கே சமூக மற்றும் கலாச்சார கட்டுப்பாடுகளை கொண்டுள்ள உத்தரபிரதேசம் போன்ற ஒரு மாநிலத்தில், தற்போதைய நெருக்கடியின் விளைவுகள் இன்னும் பாலின இடைவெளியை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். 2017-18 ஆம் ஆண்டு மாநிலத்தின் நகர்ப்புற தொழிலாளர் திறனில் 8.2% பெண்கள் மற்றும் கிராமப்புறங்களில் 9.7% மட்டுமே இருந்தனர். தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, ​​கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பெண்களுக்கான தொழிலாளர் பங்களிப்பு வீதம் முறையே எட்டு மற்றும் ஒன்பது சதவீத புள்ளிகள் என குறைவாக இருந்தன.

இந்த ஆண்டு மே மாதம், உத்தரப்பிரதேச அரசு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் பெண்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை அறிவித்தது. இதில் ஒன்று, மாநிலத்தின் 58,000 ஊராட்சிகளில் உள்ள வங்கிகளுக்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான இணைப்பாக செயல்பட ‘வங்கி தொடர்பு நண்பர்’ (Banking Correspondent Sakhis) நியமிக்கும் திட்டம் ஆகும். முகக்கவசம் தயாரித்தல், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரித்தல் மற்றும் பள்ளி சீருடைகளை தைத்து கொடுத்தல் போன்ற சுய உதவிக்குழுக்கள் தொடர்பான பிற திட்டங்கள் இதில் செயல்படுத்தப்படும்.

“பெண்கள் பணியில் பங்கேற்பதற்கான மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் உத்தரபிரதேசம் ஒன்றாகும். எங்களிடம் [சமீபத்திய] எண்ணிக்கை இல்லை, ஆனால் ஊரடங்கில் இருந்து கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பார்கள் என்று நாங்கள் கருகிறோம், ” என்று, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணியை சேர்ந்த துரு கூறினார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தில் (MGNREGS) பெண்கள் பங்கேற்பதில் ஊரடங்கு என்னவகை தாக்கத்தை தந்துள்ளது என்பதை மதிப்பிடுவதற்காக சீதாப்பூர், ஹர்தோய் மற்றும் உன்னாவ் மாவட்டங்களில், அதிகாரபூர்வமற்ற முறையில் துரு பயணம் செய்தார். இந்த திட்டத்தில் பணிபுரிந்த பெண்களுக்கு பதிலாக அந்த இடத்தில், நகரில் இருந்து புலம்பெயர்ந்த அவர்களது கணவர் பணி புரிந்து கொண்டிருந்ததை கண்டார். "வேலைவாய்ப்புச் சந்தையில் ஆண்கள் நுழைந்தவுடன், பெண்கள் வெளியேற்றப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசத்திற்கு, 21 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பியுள்ள நிலையில், இந்த ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தில் வேலைகளுக்கு இதுவரையில்லாதபடி தேவை இருந்தது. ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்ட மாநில அரசின் புள்ளி விவரங்களில் குறிப்பிட்டபடி, இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் - 57 லட்சம் தொழிலாளர்களுடன் உ.பி. முதலிடத்தில் உள்ளது. தலைநகர் லக்னோவுக்கு அடுத்து - அதிகபட்ச எண்ணிக்கை சீதாப்பூர் மாவட்டத்தில் சுமார் 191,000 பேர் உள்ளனர்.

பெரும்பாலான நூறு நாள் வேலை உத்தரவாதத் திட்டப் பணிகள் ஆண்களுக்கே செல்வதாக, சீதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாங்டின் கிசான் மஜ்தூர் சங்கதன் அமைப்பின் ரிச்சா சிங் கூறினார், அவர் சீதாபூர் மாவட்டத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதார பிரச்சினை தொடர்பாக பணியாற்றி வருகிறார். "பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்ட போதும், எங்கள் மாவட்டத்தில் நூறுநாள் வேலை உத்தரவாதத் திட்டத்தில் உள்ள பெண் தொழிலாளர்களின் விகிதம், நாட்டில் மிகக் குறைவானதாக 5% க்கு அருகில் உள்ளது. இது தற்போது மேம்பட்டு 20% க்கு அருகில் உள்ளது. இந்த பிராந்தியத்தில் பெண்கள் வேலை செய்வது எளிதல்ல. அதை ஏற்றுக் கொள்வதும் கிடையாது,” என்றார்.

கடந்த 2006ம் ஆண்டில், இந்தியாவில் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது, ​​சீதாபூர் மாவட்டத்தை சேர்ந்த 46 வயது ராம்பேட்டி, தனது கிராமத்தில் வேலை கோரிய முதல் பெண்களில் ஒருவர். அவரது கிராமமான அலிபூரில் இருந்து பெரும்பாலான குடும்பங்கள் வேலைக்காக நகரங்களுக்கு குடிபெயரத் தொடங்கின, ஆனால் அவர் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் அங்கேயே தங்கியிருந்தார். குடும்பம் தனது ஏழு பிக்ஹாக்கள் (சுமார் 1.4 ஏக்கர்) நிலத்தை பயிரிட்டது; அத்துடன் நூறு நாள் வேலை உத்தரவாதத் திட்டத்தில் பணி புரிந்தனர். இத்திட்டத்தின்கீழ் ராம்பேட்டிற்கு ஒரு மாதத்திற்கு சராசரியாக 10-12 நாட்கள் வேலை கிடைக்கிறது. தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒருநாள் காலையில், இந்தியா ஸ்பெண்ட் அவரை தொடர்பு கொண்டபோது, ​​அவர் தனது கிராமத்திற்கு வெளியே நூறுநாள் வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

“நகரத்திற்குச் சென்றுவிட்டால், கிராமத்தில் வேலை செய்வது எளிதல்ல. ஊராட்சியில் பணிபுரியும் உங்கள் உரிமைக்காக நாங்கள் போராட வேண்டும். நீண்ட தூரம் நடந்து சென்று, கொளுத்தும் வெயிலில் கடினமாக உழைக்க வேண்டும், ”என்றார் ராம்ட்டி; சாங்டின் கிசான் மஜ்தூர் சங்கதனின் ஒரு பகுதியாக நூறு நாள் வேலை உத்தரவாதத் திட்டத்தில் பணிபுரிய தனது கிராமத்தில், பெண்களை திரட்டுகிறார்.

ராம்பேட்டி அணி திரட்டிய பெண்களில் ஒருவரான சுனிதா தேவி, ஜூலை மாதம் ஜெய்ப்பூரில் இருந்து அலிபூர் திரும்பியபோது, ​​கணவர் ஒரு தனியார் நிறுவனப் பணியை இழந்திருந்தார். இவருக்கு 10, ஏழு மற்றும் இரண்டு வயது என்று மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர்; தற்போது அவரது வாழ்க்கையில் முதல் முறையாக ஊதியம் பெறும் வேலையை மேற்கொள்கிறார். “மண்ணில் குழி தோண்டுவதும், வேலை செய்வதும் எனக்கு மிகவும் கடினமானதுதான், ஆனால் எனக்கு வேறு வழியில்லை. எங்கள் குழந்தைகளை படிக்க வைத்தாக வேண்டும், என் கணவர் தனது வேலையை இன்னும் திரும்பப் பெறவில்லை,” என்று அவர் கூறினார். இந்த குடும்பத்திற்கென இரண்டு பிக்ஹாக்கள் (0.4 ஏக்கர்) நிலம் உள்ளது, அதில் அவர்கள் கோதுமை மற்றும் நிலக்கடலை பயிரிடுகிறார்கள். “மண் வறண்டு, போதுமான தண்ணீர் இல்லாததால் மகசூல் குறைவாக இருக்கும். எனவே இது போதாது, ”என்றார்.

வருவாய் இழக்கும் துணை ஒப்பந்தத்தின்கீழ் பணிபுரியும் பெண்கள்

இந்தியாவில் குறைந்த ஊதியத்திற்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்கள், கண்ணுக்கு புலப்படாதவர்கள், ஆனால் உள்நாட்டு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் முக்கிய பகுதி அவர்கள்தான். இந்தியாவின் தொழிலாளர் சங்கிலியின் மிகக் குறைந்த மட்டத்தில் அவர்கள் உள்ளதாக இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்த நிலையில், ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலில் துணை ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் வேலைகளை செய்கின்றனர். உதாரணமாக, அவர்களுக்கு ஊதியம் பீஸ் ரேட் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மற்ற வீட்டு வேலைகளில் அப்பளம் தயாரிப்பு, அகர்பத்தி செய்தல், பீடி சுற்றுதல் உள்ளிட்டவை அடங்கும். இந்தியாவில் 3.7 கோடிக்கும் அதிகமான வீட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 40-50 வரை ஈட்டிய இந்த பெண்கள், தொற்று நோய் பரவலால் இப்பணியை இழந்து விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் அமைப்புசாரா பொருளாதாரத்தில் பணிபுரியும் 15 லட்சம் பெண்களுக்கான சங்கமான சுயதொழில் மகளிர் சங்கத்தின் (Self-Employed Women’s Association - SEWA) மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையிலான மதிப்பீடு, கைவினைப்பொருட்கள், சேவைகள் மற்றும் நிதித்துறைகளில் பணிபுரியும் பெண்களின் வருவாய் சுருங்கிவிட்டதால் நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்பட்டன அல்லது பணித்திறனை 50% க்கும் கீழ் குறைத்ததாக தெரிவித்தது. "அமைப்புசாரா பெண் தொழிலாளர்களை ஆதரிப்பதில் கூட்டாளர்களின் பங்கு முன்னெப்போதையும் விட முக்கியமானது. கூட்டாக இருந்தவர்கள் இந்த நெருக்கடியை கண்டனர்,” என்று சேவா (SEWA) மூத்த ஒருங்கிணைப்பாளர் சலோனி முரளிதரா ஹிரியூர் கூறினார்.

சர்தோஜி வேலை எப்படி செய்வது என்று கற்றுக் கொண்டு ராணி, தனது குடும்பத்தை ஆதரிக்கத் தொடங்கியபோது, அவருக்கு எட்டு வயதுதான். கடந்த 15 ஆண்டுகளில் இந்த ஆண்டில்தான் முதல் முறையாக தனது தையல் ஊசியை கீழே வைத்துள்ளார். லக்னோவின் சர்தோஜி தையல் வேலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது, ஆனால் அதுதொடர்பான வேலைக்கு எந்த மதிப்பும் இல்லை என்றார் அவர்.

“நான் ஏழு மணி நேரம் வேலை செய்து ரூ.150 சம்பளம் பெறுவேன். வேலை மிகவும் சிக்கலானது மற்றும் கடினமானது என்பதால் என் கண்கள் எரிச்சலடைந்து வலிக்கிறது. இனியும் என்னால் இதைச் செய்ய முடியாது,” என்று அவர் கூறினார். அடுத்த ஆண்டு இச்சந்தை புத்துயிர் பெறும் என்று அவர் நம்புகிறார், எனவே அவரால் பணிப்பட்டறையை அவரால் திறக்க முடியும்.

(குமார், டெல்லியைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர். அவர் சமூக நீதி மற்றும் பாலினம் குறித்து எழுதுகிறார்).