நிலம் கையகப்படுத்த காலாவதியான சட்டங்களை மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு எவ்வாறு பயன்படுத்துகின்றன
புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியன, பல தசாப்தங்களாகவே பழமையான நிலம் கையகப்படுத்தும் சட்டங்களை - இப்போது செயல்படாத காலனித்துவ கால சட்டத்தைப் போலவே - பயன்படுத்துகின்றன; பெரிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த, நில உரிமையாளர்களின் ஒப்புதல் மற்றும் நியாயமான இழப்பீட்டை வழங்கும் அண்மைக்கால மத்திய சட்டத்தை தவிர்க்கின்றன.
இருப்பினும், 2019 ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் இதேபோன்ற ஒரு சட்டத்தை "பூஜ்ய மற்றும் வெற்றிடமானது" என்று கூறியது; இது, மூன்று மாநிலங்களின் நடைமுறைகளில் கேள்விக்குறியை ஏற்படுத்தியது. மேலும் மாநிலங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ஆர்வலர்களுக்கு, ஒரு வாய்ப்பை தந்தது.
கடந்த 2013இல் மத்திய அரசு இயற்றிய நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தில் -எல்.ஏ.ஆர்.ஆர். (LARR) நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ள நிலையில், அதற்கு பதிலாக மூன்று மாநிலங்களும் இந்த காலாவதியான சட்டங்களை பயன்படுத்தி இருக்கின்றன. இதுபோன்ற மாநில சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது எல்.ஐ.ஆர்.ஆர் சட்டத்திற்கு ஏற்ப கொண்டு வரப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். மாநிலங்கள் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்த, அவை மீண்டும் இயற்றப்பட வேண்டும் என்று சென்னிய உயர்நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013இன் எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் 1894 ஆம் ஆண்டின் காலனித்துவ கால நில கையகப்படுத்தல் சட்டத்தை மாற்றியது. புதிய சட்டம் நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டை மேம்படுத்தியது, நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு முன், நில உரிமையாளர்களின் ஒப்புதலை கட்டாயமாக்கியது, மேலும் நிலம் கையகப்படுத்துவதன் சமூக தாக்கத்தை முதலில் ஆய்வு செய்ய திட்டங்கள் தேவைப்பட்டன.
ஆனால் அதன் பிறகும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகியன, 1894 காலனித்துவ சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அந்தந்த சட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்தின - மகாராஷ்டிராவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், சென்னை மெட்ரோ ரயில் பணி, கர்நாடகாவில் ஒரு தொழில்துறை பாதை உள்ளிட்ட பெரும் திட்டங்களுக்கு நிலம் கையகம் செய்யப்பட்டன.
ஜூலை 3, 2019இல், சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு தனது நிலம் கையகப்படுத்தும் சட்டங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்தியது, இந்தச் சட்டங்கள் எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் இயற்றப்பட்ட நாளில் இருந்து செல்லாது என்று கூறியது. ஏற்கனவே நிலம் பயன்படுத்தப்பட்ட இடம் தவிர, இந்த சட்டங்களின் கீழ் 2014 முதல் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நில கையகப்படுத்துதல்களையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
இது மகாராஷ்டிராவில், பழைய மாநில சட்டங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது, அம்மாநிலத்தில் இந்த சட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்திலும், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
குடியரசுத்தலைவரின் ஒப்புதல் இருப்பதாகக் கூறி, மாநில சட்டங்களைப் பயன்படுத்துவதை உயர்நீதிமன்றத்தில் தமிழகம் ஆதரித்தது. ஆனால், இந்த வாதத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. தொழில்களுக்கான நிலங்களை கையகப்படுத்தும் மாநில அமைப்பான மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம், எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இதேபோன்ற கூற்றைக் கூறியது. தொழில்களுக்கான நிலங்களை கையகப்படுத்த எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்திற்கு பதிலாக பழைய மாநில சட்டங்கள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன என்ற குறிப்பிட்ட கேள்விக்கு கர்நாடக அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.
2013 எல்.ஐ.ஆர்.ஆர் சட்டம் நடைமுறைக்கு வந்த பின், குஜராத், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றின அல்லது அதன் விதிகளைத் தவிர்ப்பதற்காக புதிய விதிகளை கொண்டு வந்தன. இந்த நீர்க்கச்செய்யும் நடவடிக்கைகள், பரவலாகப் புகாருக்கு உள்ளாகின; போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தன. ஆனால் எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் - 2013 ஐ தவிர்ப்பதற்காக தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவால் காலாவதியான சட்டங்களைப் பயன்படுத்துவது இதுவரை பொதுமக்கள் ஆய்வில் இருந்து தப்பியுள்ளது.
"பெரும்பாலான மாநிலங்கள், சில தேவைகளை நீக்குவதற்காக 2013ஆ ஆண்டு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தன" என்று, தமிழ்நாட்டில் சில மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்திய, சென்னை வழக்கறிஞர் சுஹ்ரித் பார்த்தசாரதி கூறினார். “இது மன்னிக்கத்தக்கதல்ல; ஆனால் இம்மூன்று மாநிலங்களும் செய்தது இன்னும் மோசமானது - 2013 சட்டம் சிறிதும் பொருந்தாது என்று அவர்கள் கூறினர்” என்றார்.
இந்த முடிவுகள் முழுவதும் அரசியல் கட்சிகளால் ஆளப்படும் மாநில அரசுகளால் எடுக்கப்பட்டன: மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா அரசு உள்ளது; தமிழ்நாட்டில் அ.இ. அ.தி.மு.க. தலைமையிலான அரசு; கர்நாடகாவில் இம்முடிவை அரசு எடுத்த போது காங்கிரஸ் கட்சியால் கேள்வி எழுப்பப்பட்டது. இக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான், 2013இல் எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் இயற்றப்பட்டது.
மாநிலங்களின் பழைய சட்டங்கள்
நிலம் கையகப்படுத்தல் இந்திய அரசியலமைப்பின் "ஒருங்கியல் அதிகார" பட்டியலில் உள்ளது: அதாவது, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மாநிலங்கள் தங்களது சொந்த சட்டங்களை உருவாக்க முடியும். மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி தொழில்கள் அல்லது நெடுஞ்சாலைகள் போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்த சட்டங்களை அறிமுகப்படுத்தின.
கடந்த 1966இன் கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு சட்டம் - கியாட் (KIAD) எந்தவொரு நிலத்தையும் ஒரு தொழில்துறை பகுதியாக அறிவித்து அதை உரிமையாளர்கள் கொடுக்க விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கையகப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் அளித்தது. இழப்பீடு என்பது அரசுக்கு நில உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும், அவர்கள் ஒப்புக் கொள்ள முடியாவிட்டால், இழப்பீடு கணக்கிட 1894 சட்டத்தின் கீழ் நடைமுறைகளை இந்த சட்டம் குறிப்பிடுகிறது.
மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுச் சட்டம் -1961 மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்கான தமிழ்நாடு நிலம்-1997, இதே போன்ற ஏற்பாடுகளைச் செய்தன.
இதற்கு நேர்மாறாக, எல்.ஐ.ஆர்.ஆர் சட்டத்திற்கு, நாம் கூறியது போல, ஒரு தனியார் நிறுவனத்தால் அல்லது ஒரு பொது-தனியார் திட்டத்திற்கு நிலம் தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களில் குறைந்தது 70% பேரின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இது நில உரிமையாளர்கள் அல்லாத பங்குதாரர்கள் மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் இழப்பீடு மற்றும் மறுவாழ்வுக்கு தகுதியுடையவர்களாக ஆக்குகிறது, மேலும் தலித் மற்றும் மலைவாழ் குடும்பங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்கிறது.
மாநில சட்டங்களில் இந்த விதிகள் எதுவும் இல்லை.
எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் இயற்றப்பட்ட பின்னர், மாநிலங்கள் எல்.ஏ.ஆர். ஆர். சட்டத்தின் முற்போக்கான கொள்கைகளுக்கேற்ப அவற்றை கொண்டு வருவதற்காக அவர்களின் “மிகவும் பழைய” சட்டங்களைத் திருத்தியிருக்க வேண்டும் என்று அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டுப் பள்ளியின் ஆசிரியரான ஹிமான்ஷு உபாத்யாயா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஆனால் அது ஒருபோதும் செய்யப்படவில்லை" என்றார்.
மாறாக, மாநிலங்கள் இதற்கு நேர்மாறாக செயல்பட்டன: அவை, மாநில சட்டங்களுக்கு, எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்தில் இருந்து விலக்கு அளித்தன.
எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்தில் திருத்தங்கள்
பிப்ரவரி 2014 இல், எல்.ஐ.ஆர்.ஆர் சட்டம் நடைமுறைக்கு வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, மாநிலத்திற்குள் பொருந்தும் வகையில் தமிழக அரசு ஒரு சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. இந்த திருத்தப்பிரிவு 105-ஏ என்ற புதிய பிரிவை செருகியது, இது நிலம் கையகப்படுத்துதலை நிர்வகிக்கும் மூன்று மாநில சட்டங்களுக்கு - தொழில்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் தலித்துகளுக்கு மறுபங்கீடு செய்வதற்கான நிலம் ஆகியவற்றிற்கு எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்தின் விதிகள் “பொருந்தாது” என்று கூறியது.
இந்தத் திருத்தத்திற்கு ஜனவரி 1, 2015 அன்று, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இச்சட்டங்கள், பின்னர் நெடுஞ்சாலைகளுக்கான நிலங்களை கையகப்படுத்த பயன்படுத்தப்பட்டன - உதாரணமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பாலம் கட்டுவதற்காக நெல் வயல்கள் மற்றும் பழத்தோட்டங்கள் - மற்றும் சென்னை நகரின் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக வீடுகள் மற்றும் பள்ளி மைதானங்கள், கையகம் செய்யப்பட்டன.
மூன்று மாநிலங்களின் நிலச் சட்டங்களின் கீழ் கையகப்படுத்துதல் தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் மூன்றில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்று புதுடெல்லியை சேர்ந்த சிந்தனைக் குழுவான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் 2019 ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த கையகப்படுத்துதல்கள் எதிர்ப்பை சந்தித்தன. 2018ஆம் ஆண்டுக்குள், மாநிலத்தின் எல்.ஏ.ஆர்.ஆர். சட்ட திருத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி சுமார் 150 மனுக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மனுதாரர்களில் "அனைத்து தரப்பு மக்களும்" - ஒரு தொழில்துறை பகுதியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முதல் சென்னையில் நகரவாசிகள் வரை அடங்குவர் - என்று வழக்கறிஞர் பார்த்தசாரதி கூறினார்.
ஏப்ரல் 2018 இல், மகாராஷ்டிரா சட்டமன்றம் தமிழகம் செய்ததைப் போலவே எல்.ஆர்.ஆர் சட்டத்தில் - மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டு (எம்ஐடி) சட்டம் மற்றும் அதன் விதிகளிலிருந்து மூன்று சட்டங்களுக்கு விலக்கு அளிக்க பிரிவு 105-ஏ என்பதிய செருகுவதன் மூலம், ஒரு திருத்தத்தை நிறைவேற்றியது. இதன் விளைவாக, தொழில்கள், நெடுஞ்சாலைகள், வீட்டுவசதி மற்றும் பிராந்திய மற்றும் நகர திட்டங்களின் கீழ் உள்ள திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தல் எல்.ஏ.ஆர்.அர். சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்காது. அதற்கு அதே மாதத்தில் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஆனால் இதற்கு முன்பே, இந்த பழைய மாநில சட்டங்களை அரசு நிலம் கையகப்படுத்திக் கொண்டிருந்தது. ரத்னகிரியில் உள்ள ரூ .3 லட்சம் கோடி (44 பில்லியன் டாலர்) மேற்கு கடற்கரை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த 2017 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசு சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த திட்டத்திற்கு 14 கிராமங்களில் இருந்து 15,000 ஏக்கர் தேவைப்பட்டது, இது 30,000 விவசாயிகளையும் மீனவர்களையும் பாதித்தது.
இந்த திட்டம் உள்ளூர் சமூகங்களின் எதிர்ப்பை சந்தித்தது. நில ஆர்வலர் உல்கா மகாஜன் தலைமையிலான ஏராளமான விவசாயிகள் 2017 அக்டோபரில் மும்பையில் உள்ள அரசு செயலகத்தில் மாநில அதிகாரிகளை சந்தித்து, எல்.ஏ.ஆர்.ஆர். சட்டம் நடைமுறையில் இருந்தபோது, அவர்கள் ஏன் எம்.ஐ.டி. சட்டத்தை பயன்படுத்தினார்கள் என்று கேட்டனர். "அவர்களிடம் பதில் இல்லை" என்று மகாஜன், இந்தியா ஸ்பெண்டிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
எம்.ஐ.டி. சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்துவது, மாநிலத்தில் "தொழில்மயமாக்கலுக்கு ஊக்கமளிக்க" அவசியம் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வாதிட்டார், மேலும் ஒப்புதல் பெற அதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக முரணாக கூறினார்.
"எம்ஐடி சட்டத்தில் ஒப்புதலுக்கான எந்தவொரு ஏற்பாடும் இல்லை" என்று மகாஜன் கூறினார். "நாங்கள் ஒரு ஆண்டோலன் [கிளர்ச்சியை] செய்யும்போது தான் அவர்கள் பலவந்தமான கையகப்படுத்தலை நிறுத்தப்படுவார்கள்" என்றார்.
விவசாயிகள் எழுப்பிய ஆட்சேபம் காரணமாக, மே மாதம் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, 2019 மார்ச் மாதத்தில் நிலம் கையகப்படுத்துவதர்கான செயல்முறை ரத்து செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவைப் போலவே கர்நாடகாவும் எல்.ஐ.ஆர்.ஆர் சட்டத்தில் எந்த திருத்தங்களையும் நிறைவேற்றாமல் மாநில சட்டங்களின் கீழ் நிலங்களை கையகப்படுத்தியது. 2014 மற்றும் 2017 க்கு இடையில், இது ஏற்கனவே 4,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, கியாட் சட்டத்தைப் பயன்படுத்தியது என்று இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சி.ஏ.ஜி.) தகவல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.
மார்ச் 2019 இல், மாநில அரசு எல்.ஐ.ஆர்.ஆர் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது, இதன் மூலம் தொழில்கள், வீட்டுவசதி மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஆறு மாநில சட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. எனினும் பின்னர் ஆறு சட்டங்களுக்கு விலக்கு அளித்த உட்பிரிவுகளை நீக்கும் ஒரு திருத்தத்தை அரசு வெளியிட்டது.
எல்.ஏ.ஆர்.ஆர் சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்திய மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர் வி தேஷ்பாண்டே, மாநில சட்டங்களுக்கும் எல்.ஏ.ஆர்.ஆர் சட்டத்திற்கும் இடையில் எந்த "குழப்பத்தையும்" விரும்பாத காரணத்தினால் தான் தாங்கள் ஒரு திருத்தத்தை வெளியிட்டதாகக் கூறினார். "எல்.ஏ.ஆர்.ஆர் ஒரு மத்திய சட்டம். நாங்கள் அதை மாநில சட்டங்களுடன் ஒன்றிணைக்க விரும்பவில்லை" என்று தேஷ்பாண்டே கூறினார். "இந்த பிரிவு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும், நாங்கள் அதைத் தவிர்க்க விரும்பினோம். எனவே நாங்கள் அந்த பிரிவை வாபஸ் பெற்றோம்” என்றார்.
இது, கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டுச் சட்டம் -1966 இல் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர் கூறினார். "எல்.ஏ.ஆர்.ஆரை திருத்துவதற்கான அம்சம் பாதுகாப்பு திட்டங்கள் அல்லது அரசுடன் நிலம் இருக்கும் பிற திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை விரைவுபடுத்துவதாகும்" என்று அவர் மேலும் கூறினார்.
காங்கிரஸ்-ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கூட்டணி அரசு, 2019 ஜூலை மாதம் மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து ராஜினாமா செய்த தேஷ்பாண்டே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து தமக்கு தெரியாது என்றார்.
கியாடா சட்டத்தை இன்னும் பயன்படுத்துகிறோம் என்று கர்நாடக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். "ஆம், நாங்கள் கியாட் சட்டத்தைப் பயன்படுத்துகிறோம். எந்தவொரு நிலத்தையும் தொழில்துறை பகுதியாக அறிவிக்க, கியாட் சட்டத்தின் கீழ் அதிகாரம் கொண்ட கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியத்தின் கே.ஐ.ஏ.டி.பி.(KIADB) நிலம் கையகப்படுத்தும் சிறப்பு துணை ஆணையர் பி. வெங்கடேஷ் கூறினார். நில உரிமையாளர்களிடம் இருந்து அதைப் பெறுகின்றன. தொழில்களுக்கு நிலம் தேவைப்படும் எந்தவொரு அரசு நிறுவனம் அல்லது தனியார் நிறுவனமும் கையகப்படுத்துதலை மேற்கொள்ள கே.ஐ.ஏ.டி.பி.-ஐ அணுகுகின்றன. கே.ஐ.ஏ.டி.பி. ஏன் எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்தை பயன்படுத்தவில்லை என்று கேட்டதற்கு, "கே.ஐ.ஏ.டி.பி. ஒரு தன்னாட்சி அமைப்பு" என்று வெங்கடேஷ் கூறினார்.
எந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்ற அவர் பெயர் எதையும் குறிப்பிடவில்லை.
அத்தகைய ஒரு திட்டம் நன்கு அறியப்பட்டதாகும்: மங்களூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிலையத்திற்கு, அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 960 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. கியாட் சட்டத்தின் கீழ் கே.ஐ.ஏ.டி.பி. ஆல் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இது 2017 ஜனவரியில் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்புகளை வெளியிட்டது. நில உரிமையாளர்களிடம் இருந்து தொடர் எதிர்ப்புகள் காரணமாக கையகப்படுத்தல் இன்னும் நிலுவையில் உள்ளது, அவர்கள் சமூக தாக்க மதிப்பீட்டைச் செய்ய எல்.ஆ.ஆர்.ஆர். சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகராறு ஏற்பட்டால், நில கையகப்படுத்தல் சட்டம் -1894இன் படி சிறப்பு சிவில் நீதிமன்றத்தால் இழப்பீடு நிர்ணயிக்கப்படும் என்று தட்சிண கன்னட மாவட்ட ஆட்சியர், 2018 நவம்பரில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ஏனென்றால், 1894 சட்டத்தின் விதிகளின் அடிப்படையில், அனைத்து மோதல்களும் தீர்க்கப்பட வேண்டும் என்று கியாட் சட்டம் கூறுகிறது.
கே.ஐ.ஏ.டி.பி-யின் நிலம் கையகப்படுத்தும் பொறுப்பாளரான பி. வெங்கடேஷ் இதை இந்தியா ஸ்பெண்டிடம் உறுதிப்படுத்தினார். "ஏதேனும் தகராறு ஏற்பட்டால், 1894நிலம் கையகப்படுத்தும் சட்டம் மூலம் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம்," என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்தின் கீழ், சர்ச்சைகள் ஒரு சுயாதீனமான எல்.ஏ.ஆர்.ஆர். அதிகாரசபையால் தீர்க்கப்பட வேண்டும்.
கர்நாடக நீதிமன்ற உத்தரவு
கர்நாடகாவில், உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஏப்ரல் 2017 இல், கியாட் சட்டத்தின் கீழ் நிலம் வாங்குவதை நிறுத்துமாறு மாநிலத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் இது நீதிமன்றத்தின் மற்றொரு அமர்வால் நிறுத்தப்பட்டது, அதே மாதத்தில் மாநில அரசு மனு அளித்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு இப்போது கர்நாடக மனுதாரர்களுக்கு ஒரு ஆயுதமாக இருக்கும் என்று, வழக்கு நடந்து கொண்டிருப்பதால், பெயர் வெளியிட விரும்பாத இவ்வழக்கு தொடர்புடைய ஒரு ஆர்வலர் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜூலை 3, 2019 அன்று, எல்.ஏ.ஆர்.ஆர். சட்ட திருத்தம் மூலம் பழைய சட்டங்களை "புதுப்பிப்பது" மாநிலத்திற்கு முறையற்றது என்று கூறியது.
ஆனால், அரசின் திருத்தம் குடியரசு தலைவரால் அங்கீகரிக்கப்பட்டதால் அது செல்லுபடியாகும் என்று அரசு தரப்பில் வாதிட்டப்பட்டது. எனினும், நீதிமன்றம் இதை ஏற்கவில்லை, 2013- எல்.ஐ.ஆர்.ஆர் சட்டம் இயற்றப்பட்டபோது மாநில சட்டங்கள் ஏற்கனவே செல்லாததாகிவிட்டது என்று கூறினார். ஏனென்றால், அரசியலமைப்பின் 245வது பிரிவின் கீழ், ஒரே நேரத்தில் பட்டியலின் கீழ் ஒரு விஷயத்தில் புதிய மத்திய சட்டம் இயற்றப்படும்போது (இதில் இரு மாநிலங்களும் மத்திய அரசும் சட்டங்களை உருவாக்க முடியும்), மத்திய சட்டத்திற்கு முரணான ஏற்பாடுகள் உள்ள அனைத்து மாநில சட்டங்களும் தானாகவே வெற்றிடமாகிவிடும். (இருப்பினும், மாநிலங்கள் மத்திய சட்டத்தில் திருத்தங்களைச் செய்யலாம்).
"புதிய சட்டத்தில் பிரிவு 105-ஏ ஐ சேர்ப்பதன் மூலம்," மாநிலங்களால் மூன்று மாநில சட்டங்களை புதுப்பிக்க முடியவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
கையகப்படுத்தப்பட்ட நிலம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை தவிர, 2014 முதல் மாநில சட்டங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அனைத்து நில கையகப்படுத்துதல்களையும் அது ரத்து செய்தது.
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா நிறைவேற்றிய எல்.ஏ.ஆர்.ஆர் சட்ட திருத்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னுதாரணமாக இந்த உத்தரவை நில உரிமை ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி, எம்ஐடி சட்டத்தை மகாராஷ்டிரா தொடர்ந்து பயன்படுத்துகிறது. எல்.ஏ.ஆர்.ஆர். சட்டத்திற்கு இணையான இழப்பீட்டைக் கொண்டு வரும் எம்ஐடி சட்டத்தில் ஒரு திருத்தத்தை அரசு இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட நபர்களின் வரையறையை விரிவுபடுத்துகிறது என்று மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளர் (சட்ட) ஸ்மிதா சாவேர் தெரிவித்தார். இந்தத் திருத்தம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
ஆனால் அதை அங்கீகரிப்பது நீதிமன்றத்தில் இன்னும் எதிர்த்து முறையிடப்படலாம்.
"இச்செயல்களை புதுப்பிக்க, இந்திய அரசியலமைப்பின் 254 (2) வது பிரிவின்படி, இந்த சட்டங்களை அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மேலும் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு தெரிவித்தது.
இது குறித்து கேட்டபோது, சாவேர் அதை மறுத்து, “முழுச் சட்டமும் மறுபரிசீலனை செய்ய வேண்டியதில்லை.நீதிமன்றத்தின் தீர்ப்பானது தவறாக விளக்கப்பட்டுள்ளது என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஒரு முன்னுதாரணமாக பயன்படுத்தி மகாராஷ்டிரா சட்டங்களுக்கு எதிராக விரைவில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று, மாநில சட்டங்களை பயன்படுத்துவதை எதிர்த்து பிரச்சாரம் செய்த நில உரிமை இயக்கங்களின் கூட்டணியான தேசிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பின் மதுரேஷ் குமார் கூறினார்.
"இந்த மூன்று மாநிலங்களும் மத்திய சட்டத்தை மீறியுள்ளன" என்று குமார் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "மத்திய அரசு அதன் மவுனத்தையே இதற்கு ஒப்புதலாக அளித்துள்ளது" என்றார்.
(நிஹார் கோகலே, இந்தியா முழுவதும் நடந்து வரும் நில மோதல்களை ஆவணப்படுத்தும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் சுயாதீன வலையமைப்பான லேண்ட் கான்பிளிக்ட் வாட்ச் அமைப்பின் ஒரு எழுத்தாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.