சென்னை: கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து வெறும் 11 மெகாவாட் (MW) சூரிய மின்சக்தியை மட்டுமே பெற்ற நிலையில், ஜூன் 2020 நிலவரப்படி இந்தியா 35.1 ஜிகாவாட் (GW) சூரிய மின்சக்தியை நிறுவி உள்ளது - இது ஒரு தசாப்தத்திற்குள்ளாகவே அதன் சூரியமின்சக்தி திறனை 3,000 மடங்காக அதிகரித்துள்ளது. அரசியல் ஆதரவு, வணிக ஆர்வம் மற்றும் மக்களின் நேர்மறையான கருத்து அத்துடன் கார்பன் உமிழ்வைத் தணிப்பது போன்றவற்றால், பெரிய அளவிலான சூரியமின் திட்டங்கள் இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு எளிய தீர்வாக பார்க்கப்படுகின்றன.

இந்தியாவின் ஒட்டுமொத்த சூரிய மின்சக்தித் திறனில் 32.3 ஜிகாவாட் பங்கை உருவாக்கும் பெரிய அளவிலான சூரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் செயல்பாடுகள் மற்றும் பொது விசாரணைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. மிகப்பெரிய திட்டங்கள் விரைவாக கண்காணிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்கப்படுத்தப்படுகின்றன. சூரிய மின்சக்தி பூங்காக்களுக்காக மாநில அரசு நிலத்தை கையகப்படுத்துகிறது, துணை உள்கட்டமைப்பை அமைக்கிறது மற்றும் பல தனியார் நிறுவனங்களை கர்நாடகாவின் பாவகடா சூரிய பூங்காவில் உள்ளதைப்போல் ‘பிளக் அண்ட் ப்ளே’ என நிறுவல்களுக்கு ஏலம் எடுக்கவும் அழைபு விடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கமுதியை போல் தனித்து இயங்கும் திட்டங்களும் உள்ளன; அங்கு ஒரு தனியார் நிறுவனம் கட்டமைத்து செயல்படுவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றது. (இதற்கு மாறாக, சூரிய மின்சக்தி கூரை நிறுவல்கள், பொதுவாக சிறிய அளவிலானவை, மொத்தம் 2,817 மெகாவாட் வரை).

இந்தியாவின் சூரிய மின்சக்தித் துறையின் வேகமான வளர்ச்சியை மேம்பாட்டுத்துறை வல்லுநர்கள் பாராட்டும் போது, காலநிலை வல்லுநர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில், கருத்து வேறுபாடும் முணுமுணுப்பும் நிலவுகிறது.

இந்த கட்டுரையில், பெரிய அளவிலான சூரிய மின்சக்தித் திட்டங்கள், பேனல்கள் மற்றும் பேட்டரிகளுக்கான கனிம பொருட்களை சுரங்கப்படுத்துவதில் தொடங்கி, பல தசாப்தங்களாக சூரிய ஒளி மற்றும் நீரை இழந்த நிலங்களை விட்டு வெளியேறுவது, வாழ்வாதாரங்களில் ஏற்படும் பாதிப்புகள் வரை, அதிகரித்து வரும் கவலைகளை ஆராயவுள்ளோம். பெரிய சூரிய மின்சக்தி மையங்களுக்கான இடங்களை தேர்வு செய்யும் போது உள்ளூர் கள யதார்த்தங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்: மேய்ச்சல்காரர்கள், நிலமற்ற தொழிலாளர்கள் மற்றும் பிறர், தங்களது வாழ்வாதாரத்திற்கு இத்தகைய பொதுநிலங்களை சார்ந்துள்ள நிலையில், சூரிய மின்சக்தித் திட்டம் அமைக்கப்படுவதற்கு முன்பு, அதுபற்றி ஆலோசிக்கப்படுவதில்லை அல்லது அவர்களின் இழப்புகள் ஈடுசெய்யப்படுவதில்லை.பெரிய அளவிலான மரபுசார்ந்த மின்சக்தி திட்டங்களில் கடந்த காலத்தில் செய்த தவறுகளைத் தவிர்த்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மாற்றத்தை ஏற்படுத்த முழுமையான வழிகளை பரிந்துரைக்கும் நிபுணர்களிடமும், இதுபற்றி நாங்கள் பேசியுள்ளோம்.

புதிய பிரம்மாண்ட திட்டங்கள், பழைய சிக்கல்கள்

"கால்நடை மேய்ச்சல் சமூகங்களில் இருந்து பொதுவான நிலங்களை பறிப்பதன் மூலமும், வறண்ட மற்றும் பகுதியளவு வறண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளையும், பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட பாரம்பரிய நீர் பாதுகாப்பு நுட்பங்களையும் அழிக்கும் பெரிய சூரியசக்தி மின் நிலையங்களுக்கு, கார்பன் உமிழ்வைத் தணிக்கிறது என்பதற்காகவே இலவசமாக சலுகைகள் வழங்கப்படுகிறது," என்று சுற்றுச்சூழல் ஆதரவு குழுவில் பணிபுரியும் பெங்களூரைச் சேர்ந்த ஆர்வலர் லியோ சல்தான்ஹா கூறினார்; இக்குழு, இந்தியாவில் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதி தொடர்பான பிரச்சினைகளில் செயல்படும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.

சல்தான்ஹா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் இருந்து (EIA- இ.ஐ.ஏ) சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் (MoEFCC), தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விளக்கம் கோரியது. ஆனால் 2017ம் ஆண்டில், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் இருந்து விலக்கு அளிக்கும் தனது நிலைப்பாட்டை சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்தத்திற்கான 2020 வரைவு அறிவிப்பு, பெரிய 39 சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களுக்கு விதிவிலக்கு அளிக்கிறது. "கார்பன் உமிழ்வைத் தணிப்பது ஒன்றே குறிக்கோள் எனில், சூரிய மின்சக்திக்கான பேனல்களை ஊக்குவிக்க காரணம்,அவை தூசுக்கு ஆளாவதில்லை, நீண்ட ஆயுளை கொண்டிருக்கும், கூடுதல் நிலம் தேவையில்லை என்பதான பொருளை தருகிறது" என்று சல்தான்ஹா கூறினார். "ஆனால் அரசு அதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை, ஏனெனில் தனியார் துறை அதில் இறங்க விரும்பவில்லை" என்றார்.

பெரிய சூரியமின்சக்தி திட்டங்களில், கூரை சூரியசக்தி பயன்பாடு மெதுவாக உள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டில் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை நிறுவ, 2015ஆம் ஆண்டில் இந்தியா இலக்கு நிர்ணயித்தது. இதில், 100 ஜிகாவாட் சூரியசக்தி ஒளியாக இருந்தது; அதில் நிலத்தில் பொருத்தப்பட்ட சூரிய மின் திட்டங்களில் 60 ஜிகாவாட், கூரை சூரிய சக்தியில் 40 ஜிகாவாட் என்று பிரிந்தது. அப்போது இருந்து நிலத்தில் பொருத்தப்பட்ட சூரிய மின் சக்தி 32 ஜிகாவாட்டிற்கு மேல் அதிகரித்துள்ள நிலையில், கூரையின் திறன் 2.8 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. சூரியசக்தி மின் உற்பத்தியைத் தவிர, சூரிய விளக்குகள், சோலார் தெரு விளக்குகள் மற்றும் சோலார் பம்புகள் போன்ற பிற பயன்பாடுகளும் ஊக்குவிக்கப்பட்டுள்ளன, மேலும் மிதவை சூரிய மின் நிலையங்கள் குறித்தும் இந்தியா ஆராய்ந்து வருகிறது.

தற்போதுள்ள சுற்றுச்சூழல் விதிமுறைகள், நவீன ஆற்றல் மூலத்திற்கு பொருத்தமின்றி மிகவும் காலாவதியானவை மற்றும் சிக்கலானவை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்; அதனால் சூரியசக்தித் துறையின் வளர்ச்சியை சரியான முறையில் தடுக்க முடியும். "சூரிய மின் உற்பத்தி நிலையங்களின் வடிவமைப்பில் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்புகள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசிய கட்டாயம் உள்ளது; ஆனால் தற்போதைய சட்ட கட்டமைப்பு, அதாவது சுற்றுச்சூழல் அனுமதி (EC) செயல்முறை, இச்சிக்கலை தீர்க்க போதுமானதாக இல்லை,” என்று சுற்றுச்சூழல், நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்திர பூஷண் கூறினார்.

சுற்றுச்சூழல் அனுமதிக்கான செயல்முறை நீண்ட காலமாக வரையப்பட்டு இருக்கிறது, மோசமாக கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது; அத்துடன் சூரியசக்தி போன்ற நவீன பசுமைத்துறைக்கு இது பொருந்தாது என்று பூஷன் கூறினார். எவ்வாறாயினும், பெரிய அளவிலான சூரிய சக்தி திட்டங்களுக்கு சூரியசக்தி கூரைகள் சிறந்தவை என்றாலும், அவை மட்டுமே நாட்டின் முழு எரிசக்தி தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது என்று அவர் கூறினார்.

கொள்கை வலையில் சிக்கிய கூரை சூரியசக்தி

வீட்டு வசதித்துறை, வணிக மற்றும் தொழில்துறை (C&I - சி&ஐ) துறையால் கூரை சூரியசக்திக்கு தேவையானது முழுமையாக தரப்படவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். "குடியிருப்பு நுகர்வோர் ஏற்கனவே டிஸ்காம் (அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனங்கள்) இருந்து மானிய விலையில் மின்சாரம் பெறும்போது, சூரிய கூரைகளைத் தேர்வு செய்ய எந்தவிதமான ஊக்கமும் அவசியமும் இல்லை, அவை அதிக மூலதனச் செலவைக் கொண்டுள்ளன மற்றும் மானியங்களை பெறுவதில் குழப்பமான அதிகாரத்துவ நடைமுறைகளை கொண்டுள்ளன," என்று, இன்ஸ்டிடியூட் ஃபார் எனர்ஜி எகனாமிக்ஸ் அண்ட் ஃபைனான்சியல் அனாலிசிஸ் (IEEFA- ஐஇஇஎஃப்ஏ) உடன் ஆற்றல் பொருளாதார நிபுணர் விபூதி கார்க் கூறினார்.

வீட்டு வசதித்துறை, வணிக மற்றும் தொழில்துறையில் கூரை சூரிய சக்தியை, அரசுக்கு சொந்தமான டிஸ்காம்கள் தீவிரமாக ஊக்கமளிப்பதில்லை என்று கார்க் விளக்கினார்: "தொகுப்பில் இருந்து அதிக கட்டணங்களை செலுத்தும் வணிக தொடர்புகளை டிஸ்காம்கள் இழக்க விரும்பவில்லை; மேலும் பெரும்பாலும் [கூரை சூரியசக்தி நிறுவ விரும்பும் வணிக நிறுவனங்கள்] கூடுதல் கட்டணங்களை சுமக்கின்றன" என்றார்.

போட்டியை தீவிரப்படுத்தும் பெரிய நிறுவனங்கள்

கடந்த ஜூலை 10 ம் தேதி, மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் சுமார் 1,590 ஹெக்டேர் பரப்பளவில் 750 மெகாவாட் திறன் கொண்ட அல்ட்ரா மெகா சூரிய மின்சக்தி பூங்காவை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். "சூரிய ஆற்றல் இன்று மட்டுமல்ல, 21ம் நூற்றாண்டிலும் ஒரு முக்கிய ஆற்றல் தேவையாக இருக்கப்போகிறது; சூரிய ஆற்றல் நிச்சயமானது, தூய்மையானது மற்றும் பாதுகாப்பானது," என்று, பூங்காவை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நாட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8 ஜிகாவாட் சூரிய மின்சக்தியை நிறுவுவதற்காக, அதானி கிரீன் எனர்ஜி ரூ.45,000 கோடி (6 பில்லியன் டாலர்) உரிமையை வென்றதன் மூலம் இந்த சூரியப்பூங்கா அமைக்கப்படுகிறது. இது, உலகின் மிகப்பெரிய தனிநபர் ஏலம் என்று அந்த நிறுவனம் கூறுகிறது, மேலும் அதன் பணித்திறனை தற்போதுள்ள 15 ஜிகாவாட் என்பதில் இருந்து 25 ஜிகாவாட்டிற்கு 2025ஆம் ஆண்டுக்குள் கொண்டு செல்லும்.

இந்தியாவில் பல மில்லியன் டாலர் சூரிய மின்சக்தித் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் கையெழுத்திட்டதற்கு, அதானி சமீபத்திய உதாரணமாகும்; இந்த நிறுவனம் துணிகர மூலதனம் மற்றும் தனியார் பங்கு முதலீடுகளுக்கான மிகப்பெரிய சந்தையாக வளர்ந்து வருகிறது; முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019 ஆம் ஆண்டில் 169% அதிகரிப்பு 1.4 பில்லியன் டாலராக இருந்தது என்று காலநிலை மற்றும் நீடித்த எரிசக்தி நிதிக்கான பிராங்பேர்ட் பள்ளி-யுஎன்இபி (UNEP) ஒத்துழைப்பு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான முதல் ஐந்து முதலீடுகளில் நான்கு இந்தியாவில் செய்யப்பட்டன. "இரண்டாவது இடத்தில், 8% குறைந்து 797 மில்லியன் டாலருட்ன அமெரிக்காவும், மூன்றாமிடத்தில் 14% அதிகரித்து, 443 மில்லியன் டாலர்கள் என ஐரோப்பாவும் இருந்தன" என்று அந்த அறிக்கை தெரிவித்தது. 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நாட்டில் பெரிய சூரிய மின்சக்தி நிலையங்களில் முதலீடுகள் 8% அதிகரித்துள்ளன; அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகள் 14% குறைந்துள்ளன. முதலீடுகள் கிட்டத்தட்ட 50% குறைந்துவிட்டதால், காற்றாலை மின்சாரம் மிகப்பெரிய பாதிப்பை அடைந்ததாக, யு.என்.இ.பி. அறிக்கை தெரிவித்துள்ளது.

முன்னுள்ள பாதை: தாக்கம் குறித்த ஆய்வுகளை கட்டாயமாக்க வேண்டும்

பெரிய சூரிய மின்சக்தி நிலையங்களுக்கு ஒரு மெகாவாட்டிற்கு 7,000 முதல் 20,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது - சராசரி தண்ணீர் டேங்கர் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்டது, மேலும் ஆண்டுக்கு இருமுறை கழுவுவதற்கு தேவைப்படுகிறது. இந்த நிலையங்கள் பெரும்பாலும் வறண்ட மற்றும் பகுதியளவு வறண்ட சுற்றுச்சூழல் பகுதிகளில் அமைந்திருப்பதால், அவை உள்ளூர் பகுதிகளில் தண்ணீர் நெருக்கடியை அதிகரிக்கின்றன. ஒரு மெகாவாட்டிற்கு சராசரியாக ஐந்து ஏக்கர் தேவைப்படும், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களும் நிலம் சார்ந்த ஆற்றல் மூலங்கள் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

"பயன்பாட்டு அளவிலான சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் உள்ளூர் பொருளாதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று சுதந்திர எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான நித்யானந்த் ஜெயராம் தெரிவித்தார்; இவர், மனித உரிமைகளுக்கான சட்ட விதிகளுக்காக 2018இல் பிராங்கோ-ஜெர்மன் பரிசு வென்றவர். "உள்ளூரில் வெப்பநிலையை அதிகரிப்பது முதல் தண்ணீர் நெருக்கடியைஅதிகரிப்பது மற்றும் பயிர் அல்லது மேய்ச்சல் நிலங்களை அந்நியப்படுத்துவது வரை என, சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் தவறான தீர்வுகளாக இருக்கும், கடும் சுற்றுச்சூழலால் அவை பொது விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படாவிட்டால் அவற்றால் தீரும் பிரச்சனைகளைவிட சிக்கல்களே அதிகமாக ஏற்படுத்தும்" என்றார்.

எப்படியானாலும், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம், விவாதத்திற்குரியது மற்றும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றாலும், அவற்றை நிலக்கரி அல்லது நீர் மின் திட்டங்களுடன் ஒப்பிடுவது நியாயமில்லை என்று வேறுசில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

"அதிக கார்பனை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, நிலக்கரியின் பயணம் ஒவ்வொரு அடியிலும் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தில் பலவீனமான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது," என்று எரிசக்தி மற்றும் தூய காற்று தொடர்பான ஆராய்ச்சி மையத்தின் (CREA) நந்திகேஷ் சிவலிங்கம் கூறினார். "சுரங்கத்தில் இருந்து போக்குவரத்து, கனரக உலோகங்கள் மற்றும் சாம்பலால் ஏற்படும் காற்று மற்றும் நீர் மாசுபாடு வரை, நிலக்கரியால் பூமிக்கு ஏற்படும் உண்மையான செலவு ஆழமானது" என்றார்.

ஆயினும்கூட, பெரிய சூரிய திட்டங்களின் தாக்கங்களை புறக்கணிக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல என்று சிவலிங்கம் கூறினார். "முதல் கட்டமாக, சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களுக்கு பிராந்தியங்களின் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார உணர்திறன் அடிப்படையில், அவை அமைக்க முடிந்த மற்றும் அமைக்க முடியாத வகையில் செல்லக்கூடிய / செல்லக்கூடாத மண்டலங்களை ஒதுக்க வேண்டும். எந்தவொரு மேம்பாட்டு திட்டத்திற்கும் ஒரு நியாயமான மற்றும் வெளிப்படையான பொது விசாரணை செயல்முறை முக்கியமானது,” என்று அவர் கூறினார்.

Source: Mercom India (here and here); Tumkur district, Government of Karnataka; Andhra Pradesh Solar Power Corporation Private Limited, Rewa Ultra Mega Solar Limited, Adani Renewables

(கார்த்திகேயன், சென்னையைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர். நில உரிமைகள், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் விவசாயம் குறித்து எழுதி வருகிறார். கிராமியம் தொடர்பான கட்டுரைக்காக, 2018ம் ஆண்டில் ஸ்டேட்ஸ்மேன் விருதை வென்றவர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.