பெல்லாரி, தும்கூர் மற்றும் மைசூரு: ரேகா. எம், 30, தனது இரண்டாவது முறையாக ஆறு மாத கர்ப்பம் தரித்துள்ளார்; தனது கிராமத்தில் உள்ள ஷங்கர்பந்த் அங்கன்வாடிக்கு (கிராமப்புற குழந்தைகளுக்கான மையம்) ஒவ்வொரு நாளும் இலவசமாக வழங்கப்படும் சத்தான உணவுக்காக வருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன், முதல்முறையாக அவர் கர்ப்பம் தரித்த போது, இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

கடந்த 1975இல் இந்திய அரசு, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் - ஐசிடிஎஸ் (ICDS) துவக்கியபோது, கர்நாடகம் முதல் பயனாளிகளில் ஒன்றாக இருந்தது. இத்திட்டம் ஊட்டச்சத்து, சுகாதார கல்வி, தாய்- சேய் இருவருக்கும் துணை ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு, சுகாதார சோதனை மற்றும் பரிந்துரைப்பு சேவைகளை தாய் மற்றும் சேய்க்கு வழங்குவதன் மூலம் தாய்வழி ஊட்டச்சத்து மற்றும் நோயுற்ற தன்மை போன்றவற்றை கையாள்கிறது.

இருப்பினும், ஐ.சி.டி.எஸ் அறிமுகமாகி 40 ஆண்டுகளுக்கு பிறகு, 2015-16ல் தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது கர்நாடகா அதிக தாய்வழி இறப்பு விகிதம் -எம்.எம்.ஆர். (MMR அதாவது, 1,00,000 பிரசவங்களில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை) 108 என்று இருந்தது.

அதேபோல், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சி குறைபாடு (வயதுகேற்ற உயரமின்மை), மெலிந்து இருத்தல் (உயரத்திற்கேற்ற எடையின்மை) விகிதங்கள் அதிகம் கொண்டுள்ளது - அதாவது மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் (36%) வளர்ச்சி குறைபாட்டாலும், நான்கில் ஒரு பங்கு (26%) மேலான குழந்தைகள் எடையின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக, தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை- 4, 2015-16 (NFHS-4) சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.

இந்த நிலைமையை மேம்படுத்த, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய. கர்நாடகா 2017இல் மாத்ருபூர்ணா என்ற திட்டத்தை தொடங்கியது.

ஐ.சி.டி.எஸ். திட்டம் போலவே மாத்ருபூர்ணா திட்டமும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் (பிரசவத்திற்கு பிறகு, ஆறு மாதங்கள் வரை) ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்படுகிறது. இதில் உள்ள வேறுபாடு: ஐ.சி.டி.எஸ். திட்டத்தில் ஒரு மாதத்திற்கு ஒருமுறை பயனாளிகளுக்கு உலர் உணவு வழங்கப்படுகிறது. மாத்ருபூர்ணா திட்டத்தில் பயனாளிகளுக்கு சூடான ஊட்டச்சத்து உணவு, வாரத்திற்கு ஆறு முறை தரப்படுகிறது. மாநிலத்தில் 65,911 அன்கன்வாடி மையங்களில் இவ்வாறு உணவு பரிமாறப்படுகிறது. ஒன்பது மாத கர்ப்பிணி அல்லது பிரசவத்திற்கு பின் 45 நாள் வரை பெண்கள் அங்கன்வாடிகளின் உணவு உட்கொள்ளலாம்.

இரண்டு ஆண்டுகள் நடவடிக்கைக்கு பிறகு, மாத்ருபூர்ணா திட்டம், ரூ. 645 கோடி ஆண்டு செலவில் ($ 91.4 மில்லியன்). அதன் இலக்கில் 75% மக்களை சென்றடைந்தது என, கர்நாடகாவின் பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத் துறை (WCD) தரவுகள் கூறுகின்றன.

மாறுபட்ட அணுகுமுறை

அது ஒரு வெயில் நிறைந்த உச்சி வேளை. வறட்சி மிகுந்த பெல்லாரி மாவட்டத்தின் ஷங்கர்பந்த் கிராம அங்கன்வாடியில் 11 பெண்கள் - எட்டு கர்ப்பிணிகள், 3 பேர் பாலூட்டும் தாய்மார்கள் - குழுமியுள்ளனர். வந்தரம்மா, 62, ஒரு பெயருடன் உள்ள அவர், கையில் காலி டிபன்பாக்ஸுடன் அக்குழுவில் இணைகிறார். இவர்கள், மாத்ருபூர்ணா திட்டத்தில் பயனடைய குழுவி இருக்கிறார்கள்.

அங்கன்வாடி ஊழியர் சுலோச்சனா மற்றும் அவரது உதவியாளர் சுமித்ரா இருவரும் பெரிய அலுமினிய பாத்திரத்தில், புதிதாக சமைக்கப்பட்ட மதிய உணவுடன் வருகின்றனர். சுமித்ரா, சுத்தப்படுத்தப்பட்ட சில்வர் தட்டுகளை ஒவ்வொருவர் முன்பாக வைக்கிறார்; சுலோச்சனா சூடான சாதம் மற்றும் சாம்பார் (காய்கறி, பருப்புடன் செய்யப்படும் தென்னிந்திய உணவு) மற்றும் பாயசம் (அரிசி அல்லது சேமியாவுடன் பாலை சேர்த்து செய்யப்படும் இனிப்பு) பரிமாறுகிறார். அந்த பெண்களிடம் சுமித்ரா, சாம்பாரில் காய்கறிகளுடன் கீரை வகைகளை "அதிக ஊட்டச்சத்து கிடைப்பதற்காக" சேர்த்திருப்பதாக கூறுகிறார். அந்த பெண்களுக்கு சிக்கி எனப்படும் கடலை உருண்டை (வெல்லம் மற்றும் நிலக்கடலை சேர்ந்தது), சூடான பால், வேகவைத்த முட்டை வழங்கப்படுகிறது. முட்டை வேண்டாதவர்களுக்கு முளைகட்டிய பயிரின் சாலட் தரப்படுகிறது.

பெண்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, சுலோச்சனா அதே உணவை வந்தாரம்மாவின் டிபன் பாக்ஸில் நிரப்புகிறார். இது, பிரசவித்து 15 நாட்களான, வீட்டில் தங்கியுள்ள அவரது மகளுக்கு கொடுப்பதற்காக அனுப்பப்படுகிறது.

நாகர்ஹோல் புலிகள் சரணாலயம் பகுதி ஒட்டியுள்ள மைசூரு மாவட்டம் எச்.டி. கோட் தாலுகாவில் (துணை மாவட்டம்) உள்ள பழங்குடியின கிராமம் மலாடஹடி கிராம அங்கன்வாடி மையத்தில் மாத்ருபூர்ண திட்ட பயனாளிகள். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, அவர்களின் தினசரி கலோரி, புரதம் மற்றும் கால்சியம் உட்கொள்ளலில் 40-45% இருக்கும் வகையில், வாரத்திற்கு ஆறு முறை இங்கு ஊட்டச்சத்து உணவு தரப்படுகிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள ஊட்டச் சத்துணவு திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, கர்நாடகாவில் உருவான மாத்ருபூர்ணா திட்டத்தில், இலக்கு கொள்ளப்பட்டவர்களுக்கு தினமும் கலோரி, புரதம் மற்றும் கால்சியம் என 40-45% உணவு தருவதாகும். மாத்ருபூர்ண திட்டம் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் மாத்திரைகள், தட்டமை ஊசி, பெண்களின் எடை கண்காணிப்பு மற்றும் ஆலோசனை ஆகியவற்றை நிர்வாகத்திலும் கவனம் செலுத்துகிறது.

முன்னதாக செயல்படுத்தப்பட்ட ஐ.சி.டி.எஸ். துணை ஊட்டச்சத்து திட்டம், கர்ப்பிணிகளுக்கும் மூன்று வயது வரை குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் 1,300 கிராம் அரிசி மற்றும் சோயா கலவை, 1,200 கிராம் கோதுமை மற்றும் சோயா கலவை, 900 கிராம் பெங்கால் பருப்பு, 460 கிராம் பச்சை பயிறு மற்றும் 1 கிலோ வெல்லம் வழங்குகிறது. இது ஊட்டச்சத்து இடைவெளிகளில் சிலவற்றில் ஈடுபட்டிருந்தாலும், குடும்ப உறுப்பினர்களால் பெரும்பாலும் உணவுப் பொருள்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சில நேரங்களில் வழங்கப்படுவதில் பற்றாக்குறை அல்லது இல்லாமை இருந்தன. மாத்ருபூர்ணா திட்டத்தில் பெண்கள் சாப்பிடுவதற்கு அங்கன்வாடிக்கு கட்டாயம் வரவேண்டும்; ஏனெனில் அப்போது தான் உதவிகள் முழுமையாக அவர்களை சென்றடையும்.

மாத்ருபூர்ணா திட்டம் மாநிலத்தில் சுமார் 1 மில்லியன் (10,23,956) பெண்களை சென்றடைய அடைய விரும்புகிறது. தற்போது ​​இது 7,72,104 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு (அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட) உதவுகிறது என, இத்திட்டத்தை செயல்படுத்தும் டபிள்யு.சி.டி. தரவுகள் கூறுகின்றன.

இதில், ஒரு உணவுக்கு ரூ.21 என்ற தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. ஐ.சி.டி.எஸ். திட்டத்தில் ரூ. 9.50 செலவிடப்படும் நிலையில், மீதமுள்ளவை கர்நாடகா அரசால் தரப்படுகிறது. "மாத்ருபூர்ணா திட்டம் செயல்படுத்த செலவு அதிகமாகலாம். இருப்பினும், அதன் செயல்திறனானது செலவைவிட மிகவும் அதிகமாக உள்ளது," என, டபிள்யு.சி.டி. முன்னாள் முதன்மை செயலாளர் உமா மகாதேவன் தெரிவித்தார்.

கடந்த 2017 பிப்ரவரியில், டபிள்யு.சி.டி. மாத்ருபூர்ணா திட்டத்தை கர்நாடகாவின் நான்கு தாலுகாக்களில் - ரைச்சூர் மாவட்டம் மான்வி, மைசூர் மாவட்டம் எச்.டி. கோட், தும்கூர் மாவட்டம் மதுகரி மற்றும் பாகல்கோட் மாவட்டம் ஜம்ஹண்டி தாலுகா - தொடங்கப்பட்டது. "இந்த முக்கிய திட்டத்திற்கான பணம், துறைகளின் சேமிப்பில் இருந்து வந்தது" என்றார் மகாதேவன். 2017 அக்டோபர் 2இல், இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த முடிவெடுத்தது. இதில், மகாதேவன் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.

சிக்கல் தரும் உண்மைகள்: குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எடை குறைபாடு

வாழ்க்கையின் முதல் 1,000 நாட்களில் தனித்துவமாக தரப்படும் சுகாதாரம், வளர்ச்சியானது ஆயுட்காலம் முழுவதுவதற்குமான வளர்ச்சியின் சிறந்த அடித்தளம் என்று, உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. "ஊட்டச்சத்துகளிய சமாளிக்க, தேவையான ஊட்டச்சத்துகளை பெற வாழ்க்கையின் முதல் 1000 நாட்கள் மிக முக்கியமானது" என்று கர்நாடகாவின் டபிள்யு.சி.டி.யின் மாத்ருபூர்ணா திட்டம் நிறைவேற்றலில் உதவும் யுனிசெப் ஆலோசக உதவியாளர் அபித் அகமது தெரிவித்தார்.

கர்நாடகாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சி குறைபாடு (வரைபடத்தை காண்க: கர்நாடகாவின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை) - 36% பேர் வளர்ச்சிக் குறைபாட்டாலும், 26% பேர் எடையின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக, என்.எப்.எச்.எஸ்.- 4 தரவுகள் தெரிவிக்கின்றன. என்.எப்.எச்.எஸ்.- 3 (2005-06) மற்றும் என்.எப்.எச்.எஸ்.- 4 [2015-16] இடையில், எடை குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மாநிலத்தில் அதிகரித்தது கவலைக்குரிய ஒன்றாக பார்கப்பட்டது என அகமது தெரிவித்தார். வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் எண்ணிக்கையில் பிராந்திய ரீதியான ஏற்றத்தாழ்வுகள் அப்பட்டமாக இருந்தன. (வரைபடம் -1ஐ பார்க்கவும்: கர்நாடகாவில் மாவட்ட வாரியாக 'வளர்ச்சி குறைபாடு' உள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை).

கர்நாடக மாநிலத்தில் 5 வயதுக்குட்பட்ட வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை

"கர்நாடகாவில் குழந்தை வளர்ச்சி குறைபாடு பிரச்சனை கவலைக்குரிய ஒன்றாகும். இதையடுத்து, அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் வாரத்திற்கு 3 நாட்கள் குழந்தைகளுக்கு சூடான பால் (குழந்தை ஒன்றுக்கு 150 மிலி) வழங்கும் திட்டமான க்ஷீரா பாக்யாவை, 2013இல் மாநில அரசு தொடங்கியது. இது 2017-18இல், வாரத்திற்கு ஐந்து முறை என்று அதிகரிக்கப்பட்டது. இது, மதிப்புமிக்க கால்சியம், புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துகளை வழங்குகிறது" என்றார் மகாதேவன். மேலும், அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை முட்டைகள் கொடுக்கப்படுகின்றன. முட்டை உயர் தர புரதம் மற்றும் கொலைன் (உடலின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு அவசியம்), இளம் குழந்தைகளுக்கு தேவையானது.

சூடான பாலின் பயன்

"எங்களைப் போன்ற தினக்கூலித் தொழிலாளர்களால் பால், முட்டைகளை வாங்க முடியாது", என்று, ஷங்கர்பந்த் அங்கன்வாடியில் இருந்த பட்டியலினத்தை (தாழ்த்தப்பட்ட வகுப்பு) சேர்ந்த வந்தாரம்மா தெரிவித்தார். "நாங்கள் வேலை செல்லாமலும், சம்பாதிக்காமலும் இருந்தால், குடும்பத்தினர் கூட எங்களுக்கு உணவு கொடுக்க மாட்டார்கள்" என்றார் அவர்.

மம்தா. ஜி, ஒன்பது மாத கர்ப்பிணி. வறட்சியால் பாதிக்கப்பட்ட தும்கூர் மாவட்டம், மதுகிரி ஒன்றியம், துங்கோடி கிராம அங்கன்வாடிக்கு தொடர்ந்து சென்று வந்தார். சூடான உணவைத் தவிர, தினமும் அங்கன்வாடிக்கு வரும் மற்ற பெண்களுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடும் வாய்ப்பும் உள்ளது. அங்கன்வாடியில் பிற பெண்களுடன் பேசுவது, மகப்பேறுக்கு பிறகு பெருமளவு உதவியாக உள்ளது என்று அவர் கூறினார். அவரது முதல் குழந்தைக்கு தற்போது இரண்டரை வயதாகிறது.

சுதா ரமேஷ் ஒன்றரை மாத குழந்தையின் தாய்; அங்கன்வாடிக்கு வழக்கமாக வந்து செல்பவர்களில் ஒருவர். "எங்கள் வீட்டில் பிரசவத்திற்கு பிறகே பிரசவ பெண்களுக்கு அரிசி மற்றும் தண்ணீர் சாம்பார் வழங்கப்படுகிறது; வேறு ஒன்றும் கிடைப்பதில்லை. அங்கன்வாடியில் எங்களுக்கு காய்கறிகள், முட்டை மற்றும் சூடான பால் கிடைக்கிறது" என்றார்.

இதுபோன்ற குரல்கள், 250 கி.மீ. தொலைவில் உள்ள, மைசூரு மாவட்டம் எச்.டி. கோட் தாலுகா மலாடாஹடி கிராமத்திலும் ஒலிக்கிறது; இது, நாகர்ஹோல் தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தின் எல்லையில், ஜெனு குருபா பழங்குடியினர் கிராமப்பகுதியில் அமைந்துள்ளது.

யமுனா ரமேஷ், கிராமவாசி; அவர் தனது கர்ப்பத்தின் ஆரம்பத்தில் இருந்து மாத்ருபூர்ணா திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டார். ஒரு மாதத்திற்கு முன், 3 கிலோ எடை கொண்ட ஒரு ஆரோக்கியமான குழந்தை பெண்ணுக்கு அவர் பெற்றார். "வழக்கமாக, ஒருநாளைக்கு இருவேளை மட்டுமே சாப்பிடுகிறோம்; காலையில் சாதம் மற்றும் சாம்பார்; மாலையில் ராகி [தினை] உருண்டைகள்" என்றார். அங்கன்வாடிகளில், இளம் தாய்க்கு அவருக்கு பிடித்தமான முட்டைகள், காய்கறி கீரைகள் கிடைக்கிறது. அங்கன்வாடி தொழிலாளர்களும் கர்ப்பிணி எடை இழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்காணித்து, கை சுற்றளவை அளவிட்டு கண்காணித்து வருகின்றனர். "பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை உண்ணும்படி பழங்குடியின பெண்களை அறிவுறுத்துகிறோம்," என அங்கன்வாடி பணியாளர் ருக்மணி கூறினார்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சூடான பால் தருவதோடு, அங்கன்வாடிகள் இரும்பு மற்றும் போலிக் அமிலம் மாத்திரைகள், குடற்புழு நீக்கம், தட்டம்மை ஊசி, உடல் எடை கண்காணித்தல் மற்றும் ஆலோசனைகளையும் வழங்குகிறது. படத்தில் பயனாளி ஒருவரின் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்காணிக்க, கை சுற்றளவு கணக்கிடப்படுகிறது.

சவால்கள்

கர்நாடகாவில் 75% கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை மாத்ருபூர்ணா திட்டம் உள்ளடக்கி இருந்தாலும், மாவட்ட வாரியாக இதில் மாறுபாடு உள்ளது. உதாரணமாக, பாகல்கோட் மாவட்டத்தில், இது 92% ஆகும், அதேநேரம் ,தக்சின கன்னடா மாவட்டத்தில் இது 27% (வரைபடத்தை காண்க: மாவட்ட வாரியாக மத்ருபூர்ணா திட்டம்).

Source: Department of women and child development, Karnataka

"பரவலான வேறுபாடு பல்வேறு மாவட்டங்களின் பல வேறுபாடுகள் மற்றும் சமூக-பொருளாதார சூழல்களை பிரதிபலிக்கிறது" என்று, மகாதேவன் தெரிவித்தார். "கர்நாடகாவில் மாவட்ட அளவில் வறுமை, மனித வளர்ச்சி குறிப்பிலும் முக்கிய பிராந்திய வேறுபாடுகளை கொண்டுள்ளது" என்றார்.

வேலைக்காக இடம் பெயருதல் உள்ளிட்ட தடுமாற்றங்கள் இதில் அடங்கும்.

பெல்லாரி தாலுகா, இப்ராஹிம்புரா கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் ஏராளமான பெண்கள் உள்ளனர். தினக்கூலியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் அவர்களில் ஒருவர் பஷீரா. இங்கு, ஏழு கர்ப்பிணி மற்றும் நான்கு பாலூட்டு தாய்மார்கள் மாத்ருபூர்ணா திட்டத்தில் சேர்ந்தனர். வடக்கு கர்நாடகாவின் இந்தப் பகுதியில் குழந்தைகள் வளர்ச்சியின்மிய, ஊட்டச்சத்து குறைபாடு அதிகம். தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து குறைவு உள்ளது. "இங்கு பதிவு செய்த பெண்கள், கோடையில் தங்கள் குடும்பத்தினருடன் வேலை தேடி பெங்களூருவுக்கு சென்று விடுவதால், அங்கன்வாடி அமைப்பில் இருந்து வெளியேறும் நிலை உள்ளது" என்றார் பஷீரா.

இத்தகைய பிரச்சனைகளை தடுக்க, கர்நாடகா அரசு தாயி அட்டை என்ற திட்டத்தை (தாய் அட்டை / தாய் மற்றும் குழந்தை பதிவு கையேடு) அறிமுகப்படுத்தியது. இதை வைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எந்த மாவட்டத்திலும் மாத்ருபூர்ணா திட்டத்தில் பயனடையலாம். இருப்பினும், ஏழை பெண்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

பெல்லாரி மாவட்டம், ஷங்கர்பந்த் கிராமத்தை சேர்ந்த எட்டு மாத கர்ப்பிணியான லக்ஷ்மி போன்ற தினக்கூலிகள், மாத்ருபூர்ணா திட்ட பலன்களை முழுமையாக அனுபவிக்கவில்லை. லக்ஷ்மி காலையில் ஏழு மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறி மாலை ஐந்து மணியளவில் தான் திரும்புகிறார். ஒரு விவசாய கூலியான அவர், தினமும் ரூ 200 சம்பாதிக்கிறார்; ஆண்கள் ரூ 300 சம்பாதிக்கிறார்கள். "எனக்கு மதிய வேளையில் உணவு உட்கொள்ள அங்கன்வாடிக்கு செல்வது என்பது சாத்தியமற்றது" என்றார். வேலை செய்யாத போது, அரிதான சந்தர்ப்பங்களில் அவர் அங்கன்வாடிக்கு செல்கிறார்.

சமூகத்தாவல்கள், குடியேறுதல் மற்றும் பல்வேறு வறுமை நிலைகள் ஆகியன மாத்ருபூர்ணா திட்டத்தின் முக்கிய இடர்பாடுகள். எனினும் குறைந்த ஊதியம் பெற்று, அதிக நேரம் அங்கன்வாடி தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். சுகாதார துறை ஆர்வலர்களின் கூற்றுப்படி, அரசு வேலைத்திட்டம் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களின் சுமையை அதிகரித்துள்ளது.

கலாச்சாரம் மற்றும் சமூக சூழல் ஆகியன, இத்திட்டத்தை பெண்கள் பயன்படுத்தி கொள்வதை தடுக்கின்றன. "ஐந்து மாத கர்ப்பம் நிறைவடையும் வரை பெண்கள் வெளியே செல்வதை உள்ளூர் கலாச்சாரம் அனுமதிப்பதில்லை. எனவே, அங்கன்வாடி சற்றே தொலைவில் இருந்தால் கூட, அந்த குடும்பம் கர்ப்பிணி பெண்ணை அங்கு அனுப்பாது "என்று பாஷிரியா தெரிவித்தார். இன்னும் சில பகுதிகளில் உணவுக்காக கர்ப்பிணியை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதை ஒரு "கவுரவ பிரச்சனை" ஆக பார்க்கின்றனர். ஷங்கர்பந்த் கிராமத்தில், மூன்று கர்ப்பிணிகள், இரண்டு பாலூட்டும் தாய்மார்கள் அங்கன்வாடிக்கு ஒருபோதும் வந்ததில்லை. "ஆலோசனைகள் வழங்கப்பட்ட பிறகும் கூட, அவர்களது குடும்பங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை" என்று, அங்கன்வாடி தொழிலாளி சுலோச்சனா கூறுகிறார்.

"சூடான உணவை வழங்குவதோடு ஊட்டச்சத்து அடிப்படை அணுகலை வழங்குவதற்கும், பரவலாக்கப்பட்ட சமையலறைகளில் வரவேற்பு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் மாத்ருபூர்ணா திட்டம் நல்லதொரு திட்டம்" என்று, பெங்களூரை சேர்ந்த பொது சுகாதார மருத்துவர் மற்றும் ஆராய்ச்சியாளரான சில்வியா கற்பகம் தெரிவித்தார். "ஆனாலும், அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீதான அதிக பணிச்சுமை மற்றும் வறுமை, சாதி காரணிகள் காரணமாக சில பெண்களை விலக்கிக் கொள்ளுதல் போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளன" என்றார். அங்கன்வாடிகள் முதன்மையாக குழந்தை பராமரிப்பு மையங்கள் உள்ளன. அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது மாத்ருபூர்ணா திட்டம் கூடுதல் சுமைகளை ஏற்படுத்தி உள்ளது என்று கற்பகம் கூறினார். "அவர்கள் அதிக நேரம் சமையல் செய்கிறார்கள்; பின்னர் உணவு பரிமாறுவதில் நேரம் செலவிடுகின்றனர். அங்கன்வாடி பிள்ளைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தொழிலாளர்களின் ஊதியமும் குறைவாக உள்ளது" என்றார் அவர்.

பணியாளர்களின் சுமையை எளிதாக்க, அரசு இரட்டை பர்னர் கொண்ட அடுப்புகள், கூடுதல் எல்பிஜி சிலிண்டர்கள், பிரஷர் குக்கர் மற்றும் பெரிய சமையல் பாத்திரங்களை அங்கன்வாடிகளுக்கு வழங்கியுள்ளது. அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களின் மாதாச்சம்பளம் ரூ. 4,000 மற்றும் ரூ. 3,000 என்பது முறையே ரூ. 8,000 மற்றும் ரூ. 4,000 என்று உயர்த்தப்பட்டு உள்ளது. "அத்துடன் அவர்களுக்கு ரூ .50,000 மருத்துவ உதவியும் பெறுகின்றனர்," என்றார் மகாதேவன்.

இருப்பினும், அங்கன்வாடி தொழிலாளர்கள் முன்னணி தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் - அதாவது, அங்கன்வாடி பணியாளருக்கு மாதம் ரூ.18,000 மற்றும் உதவியாளர்களுக்காக ரூ.12,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இத்தகைய பெரிய அளவிலான சுகாதார திட்டத்தின் வெற்றியானது அதன் முன்னணி பணியாளர்களை சார்ந்துள்ளது என்று, கற்பகம் கூறினார். மாத்ருபூர்ணா திட்டத்தை, 64,800 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 60,207 அங்கன்வாடி உதவியாளர்கள், மாநிலத்தின் தொலைதூர பகுதிகள், வன பகுதிகளில் கூட செயல்படுத்துகின்றனர். இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த கணிசமான இழப்பீடு மற்றும் ஒழுங்குமுறை பயிற்சிகள் அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Looking Ahead

From speaking to WCD officials, UNICEF consultants, and staff at 15 anganwadis across four districts, here are some steps that could improve Mathrupoorna's reach and effectiveness:

  • Regular training of anganwadi workers and helpers is crucial for pregnant and lactating women's health monitoring, administering of calcium and folic acid tablets, etc.
  • Adequate compensation of the frontline staff, primarily anganwadi workers. This is particularly true of anganwadi workers in villages with less than 300 population, where there is only a mini anganwadi centre staffed by one woman who acts both as an anganwadi worker and helper.
  • Digitisation of health records (at present anganwadi workers maintain numerous registers and growth monitoring charts).

(நிதி ஜம்வால், கான் கனெக்ஷன் சூழலியல் ஆசிரியர் ஆவார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.