பெங்களூரு நகரின் கழிவுநீர் கோலருக்கு எவ்வாறு பயன்படுகிறது
பெங்களூரு: பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய நிர்வாக பொறியியாளர் கே.தனஞ்சயா (57) தனது கையால் எடுத்த தண்ணீர் தெளிவாக குடிக்க போதுமானதாக இருந்தது. ஆனால் அது, தனித்துவமான மறுசுழற்சி பரிசோதனையின் ஒரு பகுதியாக, பெல்லந்தூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எஸ்.டி.பி) சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீராகும்.
இங்கு, தினசரி சுத்திகரிப்பு இலக்கு 440 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) - இது மும்பையின் தண்ணீர் தேவையில் 10இல் ஒரு பங்கு அல்லது 176 ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் கொள்ளளவு - ஆகும். தற்போது நாளொன்றுக்கு 300 எம்.எல்.டி அளவுக்கு பெங்களுருவின் கழிவுநீரை இரண்டாம் நிலையில் சுத்திகரித்து, கோரமங்கலா-சல்லகட்டா (கே.சி) திட்டத்தின் மூலம் அருகில் உள்ள கோலார் மாவட்டம் மற்றும் சிக்கபல்லாபூரின் சில பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த தண்ணீர், கோலரை சுற்றியுள்ள 126 வறண்டு போயுள்ள ஏரிகளில் நிரப்பப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட நீரை ஏரிகளில் நிரப்புவதன் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட கோலார் பிராந்தியத்தில், ஏற்கனவே குறைந்துவிட்ட நிலத்தடி நீரை மீண்டும் அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இது, நீர்ப்பாசனத்திற்காக நிலத்தடி நீரையே பெரும்பாலும் நம்பியுள்ள விவசாயிகளுக்கு உதவும் என்றும், இது வெற்றியடைந்தால், இந்தியாவின் வறச்சி பாதித்த பிற பகுதிகளிலும் இத்திட்டத்தை கொண்டு வரலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2016 மே மாதம் ரூ. 1,342 கோடியில் (187 மில்லியன் டாலர்) தொடங்கப்பட்ட இத்திட்டம், 2018 ஜூனில் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியா ஸ்பெண்ட் சேகரித்த தரவுகளின்படி, தற்போது 40 ஏரிகள் நிரப்பப்பட்டுள்ளன.
"விவசாய பயன்பாட்டிற்கு கழிவுநீரை பகிர்ந்து கொள்வதற்கு, இத்திட்டம் நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும்" என்று பெங்களூரை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் எஸ். விஸ்வநாத், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
கோலரை சென்றையும் தண்ணீர், நேரடி நீர்ப்பாசனத்திற்கு விடப்படுவதில்லை. அது ஒரு ஏரியை அடைந்ததும், ஈர்ப்பு அடிப்படையிலான ஓட்டத்தின் மூலம், அடுத்தடுத்த தொட்டிகளில் நிரப்பப்படும். இதன் மூலம் அந்த பிராந்தியத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அதன் மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு பயனளிக்கிறது.
வரும் 2025இல், இந்தியாவில் தனிநபருக்கு 1,341 கன மீட்டர் (ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டருக்கும் குறைவாக தனிநபர் தண்ணீர் கிடைக்கும் பகுதி, நீர் நெருக்கடி பிராந்தியமாக கருதப்படுகிறது. 1,000 கன மீட்டருக்கும் குறைவாக இருப்பின் நீர் பற்றாக்குறை உள்ள பகுதி) தண்ணீர் கிடைக்கும் என்ற மதிப்பீடு கிடைத்துள்ள தருணத்தில், இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கிடைக்கும் அளவு, 2050இல் 1,140 கன மீட்டராக சரிய வாய்ப்புள்ளது. இது இந்தியாவை தண்ணீர் பற்றாக்குறையை நோக்கி நகரச்செய்யும் என்று, நீர்வள அமைச்சகத்தின் 2017 மதிப்பீட்டை மேற்கோள்காட்டி, டிசம்பர் 30, 2017இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. 2011 உடன் முடிந்த தசாப்தத்தில், இந்தியாவின் நீர் கிடைக்கும் தன்மை 15% குறைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய நிலத்தடி நீரை நுகரும் நாடாக உள்ள இந்தியா, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட இருமடங்கு அதிகம் உறிஞ்சுகிறது. இந்தியா 2010 இல் 250 கன கி.மீ நிலத்தடி நீரை (உலகின் மிகப்பெரிய அணையின் கொள்ளளவை போல் 1.2 மடங்கு), உறிஞ்சி 89% பாசனத்திற்கு பயன்படுத்தியது.
சுத்திகரித்து மறுசுழற்சி செய்த தண்ணீரை சிறப்பாகப் பயன்படுத்தவும், பற்றாக்குறையைத் தடுக்கவும், கோலார் போன்ற பரிசோதனைகள் வேறு இடங்களில் உள்ளன. நாக்பூர் மாநகராட்சி, தனது 525 எம்.எல்.டி கழிவுநீரில் 90% ஐ சுத்திகரித்து மறுபயன்பாடு செய்து, நாட்டில் முதன்மையானதாக உள்ளது என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா 2019 ஜனவரி 12 செய்தி கூறுகிறது. மகாராஷ்டிரா மாநில மின் உற்பத்தி நிறுவனம், தனது நீரில் 190 எம்.எல்.டி.யை அதன் வெப்ப ஆலைகளுக்கு பயன்படுத்த விரும்புகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டா நகரம், அதன் கழிவுநீரில் 100% மறுசுழற்சி செய்வதன் மூலம் ‘ஜீரோ-டிஸ்சார்ஜ்’ நகரமாக மாறுவதற்கான சுத்திகரிப்பு திறனை அதிகரித்து உள்ளது.
தேசிய அளவில் உற்பத்தியாகும் 61,754 எம்.எல்.டி கழிவுநீரில் கிட்டத்தட்ட 63% சுத்திகரிக்கப்படுவதில்லை; தேசிய சுத்திகரிப்பு திறன் 22,963 எம்.எல்.டி ஆக உள்ளதாக, கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகள் மற்றும் தொழில்நுட்பத்தரவு குறித்த அரசால் நடத்தப்படும் என்விஸ் (ENVIS - சுற்றுச்சூழல் தகவல் அமைப்பு) சுகாதார மையத்தின் 2019 மே மாதம் தரவு தெரிவிக்கிறது.
KC Valley Project Aims To Transfer 440 MLD Of Secondary Treated Domestic Sewage Water From Bengaluru | ||||
---|---|---|---|---|
Million Litres per day (Overall) | TMC Per Year | Quantum Of Water Pumped (million cubic feet) | Avg Quantum Of Daily Pumping In MLD | Tanks Filled |
440 | 5.67 | 2008 | 290 | 30 |
Source: Minor Irrigation and Ground Water Development Department (As on October 3, 2019)
ஆனால் நகர்ப்புற கழிவுநீர் பயன்பாட்டை மறுசுழற்சி செய்யும் கோலார் திட்டம் போன்றவற்றில் சவால்களும் உள்ளன. மறுசுழற்சி நீரில் கனரக உலோகங்கள் இருப்பதாகவும், நிலத்தடி நீர் ஆதாரங்களை அது பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் வழக்கு தொடரப்பட்டதால், 2019 ஜனவரியில் உச்ச நீதிமன்றம் இதை நிறுத்த உத்தரவிட்டது. நீதிமன்றம் 2019 ஏப்ரல் மாதம் இந்த தடையை நீக்கியது.
பெங்களூருவின் கிழக்கே 70 கி.மீ தொலைவில் கோலாரில் உள்ள பெல்லூர் - நர்சபுரா ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுடன் உரையாடியதில் இத்திட்டம் குறித்த அவர்களின் கருத்தை புரிந்து கொண்டோம். தங்களது கிணற்றில் நீர் மட்டம் அதிகரிப்பதைக் கண்டு அவர்களில் சிலர் மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும் சிலர் நீரின் தரம், நீர் ஆதாரங்களை அது மாசுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கவலையை தெரிவித்தனர்.
வறட்சி காலத்தில் விவசாயம்
கோலார் மாவட்டம், கர்நாடகாவில் மிகப்பெரிய காய்கறி சாகுபடி செய்யப்படும் பகுதியாகும். இது ஆசியாவின் இரண்டாவது பெரிய தக்காளி சந்தையைக் கொண்டுள்ளதாக ஜனவரி 18, 2017இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது; அத்துடன், மாநிலத்தின் மா உற்பத்தியில் பாதிக்கும் மேல் இங்கு விளைகிறது. ஆனால் இங்குள்ள விளைச்சல் வறட்சியால் மீண்டும் பாதிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரில் உள்ள பெல்லந்தூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் முடிவில் கிடைக்கப்பெற்ற கழிவுநீர்.
இந்தியாவில் அதிக வறட்சி பாதிப்புக்குள்ளான 24 மாவட்டங்களில் 16 கர்நாடகாவில் தான் உள்ளன. அவற்றில் நிரந்தரமாக வறட்சி பாதிப்புக்குள்ளான ஆறு மாவட்டங்களில் கோலாரும் ஒன்று என, மாநில அரசு 2018 டிசம்பரில் சட்டசபையில் தெரிவித்தது. 2019இல், கோலார் உட்பட 13 மாவட்டங்களில் 30 தாலுகாக்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டன.
கடந்த 2015 வரையிலான 15 ஆண்டுகளில், கர்நாடகாவில் 2005, 2007 மற்றும் 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டுமே வறட்சி இல்லை என்று, கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு மையத்தின் வறட்சி பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை-2017 தெரிவிக்கிறது. 2018 மே 8-இல் வெளியான இந்த அறிக்கையை இந்தியா ஸ்பெண்ட் மேற்கோள் காட்டியுள்ளது. எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த மாவட்டம் பூஜ்ஜிய என்ற நிகர நிலத்தடி நீரைக் கொண்டுள்ளது; மேலும் மாநிலத்தில் அதிகளவு ( 211% ) நிலத்தடி நீர் உறிஞ்சுவதாக, இந்திய டைனமிக் நிலத்தடி நீர்வள மதிப்பீடு - 2017 அறிக்கை தெரிவிக்கிறது.
பெங்களூரு பெல்லந்தூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் இரண்டாம் நிலைக்கு சுத்திகரிக்கப்படுகிறது.
மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் புதுமையான சொட்டு மற்றும் நுண்நீர் பாசனத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் கே.சி. சுத்திகரிப்பு திட்டம் “ஆட்டத்தை மாற்றக்கூடியது” என்று கோலார் துணை ஆணையர் ஜே மஞ்சுநாத் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "பயன்பாடற்றா போர்வெல்களின் விகிதம் (கோலாரில் சராசரி ஆழம் கிட்டத்தட்ட 1,500 அடி) 30%-க்கும் அதிகமாகவும், கோடையில் சில பகுதிகளில் இது 50% ஆகவும் உள்ளது" என்றார் அவர். "மோட்டார், குழாய் மற்றும் பிற உள்கட்டமைப்பு உள்ளிட்ட புதிய போர்வெல் தோண்டுவதற்கு விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார்.
இதுவரை, நுண்நீர்ப்பாசனத் துறை 2.5 டி.எம்.சி.டி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பம்ப் செய்துள்ளது; மேலும் இந்தாண்டுக்குள் 5.5 டி.எம்.சி.டி என்ற இலக்கை கொண்டுள்ளதாக, நுண்நீர்ப்பாசனத் துறை செயலாளர் சி.மிருத்யூஞ்சய சுவாமி 2019 நவம்பர் 12இல் தி இந்துவிடம் தெரிவித்தார். "பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தினமும் சுத்திகரிக்கும் 310 எம்.எல்.டி.நீரும் இத்திட்டத்தில் செலுத்தப்படுகிறது; இதில் முதல் வெளியேற்ற புள்ளியாக லட்சுமிசாகர் ஏரி உள்ளது," என்று அவர் கூறினார். (நேர்காணல் செய்வதற்காக இந்தியா ஸ்பெண்ட் பலமுறை விடுத்த கோரிக்கைக்கு சுவாமி பதில் அளிக்கவில்லை).
இந்த இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் நேரடி நீர்ப்பாசன பயன்பாட்டிற்கானது அல்ல; நேரடி நுகர்வுக்கு அது பொருந்தாது என்பதில் அதிகாரிகள் தெளிவாக இருந்தனர். "பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், நகரின் கழிவுநீரை மட்டுமே சேகரிக்கிறது மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தகைய சுத்திகரிப்புக்கு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று தனஞ்சயா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
ஏரிக்கு செல்லும் நீரை பம்பு வைத்து உறிஞ்சும் விவசாயிகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
முதன்மை சுத்திகரிப்பு என்பது கழிவுநீரானது பாசனத்திற்கு உகந்தளவுக்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு குறித்த உணவு மற்றும் வேளாண் அமைப்பின் குறிப்பின் படி சுத்திகரிக்கப்படுவதாகும். "மனிதர்களால் நுகரப்படாத பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய அல்லது பழத்தோட்டங்கள், திராட்சைத் தோட்டங்கள் மற்றும் சில பதப்படுத்தப்பட்ட உணவுப் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் அளவுக்கு இதில் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது" என்று குறிப்பு கூறுகிறது. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு என்பது, கழிவுநீரில் எஞ்சியுள்ள உயிரிகள் திடப்பொருட்களை அகற்றுவதற்காக சுத்திகரிப்பு முறையாகும்.
உள்ளூர் கழிவுநீர் பெல்லந்தூரில் அரசு நிறுவனங்கள் நிர்ணயித்த தரங்களுக்கு சுத்திகரிக்கப்படுகிறது என்று தனஞ்சயா கூறினார். "இது ஒரு சிக்கலான நிறுவன அமைப்பாகும்" என்று பல நிறுவனங்களை சுட்டிக்காட்டி விஸ்வநாத் கூறினார்: இந்த சுத்திகரிப்பு, பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு, நுண்நீர்ப்பாசனத் துறையால் எடுத்து செல்லப்படுகிறது. நீர் நிரப்பப்படும் ஏரிகள் ஊராட்சிகளுக்கு சொந்தமானவை. நிலத்தடி நீரானது நிலத்தடி நீர் அதிகாரிகளின் கீழ் உள்ளது. ஒழுங்குமுறை கட்டமைப்பு அனைத்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது.
"இது விவசாயத்திற்கு ஏற்றவாறு கழிவுநீரை மிகப்பெரிய அளவில் மாற்றும் ஒன்றாகும்" என்ற விஸ்வநாத், "விவசாயிகள் இதை மகிழ்ச்சியுடன் பயன்படுத்துகின்றனர்" என்றார்.
‘மகசூல் அதிகரித்துள்ளது’
பெல்லூர் ஊராட்சியை சேர்ந்த 32 வயதான சுதா ராம்லிங்கையா. இவர், தனது குடும்பத்தின் இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில், அக்டோபர் மாத இதமான சூரிய வெப்பத்திலும் கடினமாக உழைத்து கொண்டிருக்கிறார். பெங்களூருவில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர், லக்ஷ்மிசாகர் ஏரியில் இருந்து திறந்து விட்டதும் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள இவரது நிலத்தை தான் முதலில் வந்து தொடுகிறது. இங்கு, அதிக தண்ணீர் தேவைப்படாத ராகி (விரல் தினை) மற்றும் சில காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர்.
அவரை இந்தியா ஸ்பெண்ட் குழு சந்தித்த போது "கிணறுகளில் நீர் அதிகரித்துள்ளது," என்றார். “ஆரம்பத்தில் கொஞ்சம் துர்நாற்றம் வீசியது. இப்போது அது சுத்தமாக தெரிகிறது. ஆனால் கொசுக்கள் அதிகரித்துள்ளன” என்றார். ஏறக்குறைய வறண்டு போயிருந்த அவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் இப்போது தண்ணீரை பார்க்க முடிகிறது.
நீர் மட்டம் அதிகரித்திருக்கிறது இதனால், எங்களால் அதிக பயிர்களை சாகுபடி செய்ய முடிகிறது என்று, கோலாரின் பெல்லூர் ஊராட்சியை சேர்ந்த 32 வயது விவசாயி சுதா ராம்லிங்கையா கூறினார்.
"போர்வெல்லில் 1,800 அடியில் கூட தண்ணீரை நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் இந்தாண்டு நாங்கள் இரண்டு சாகுபடி செய்திருக்கிறோம். இனி மற்றவர்களின் விவசாய நிலத்தில் நாங்கள் வேலை செய்ய வேண்டியதில்லை. அதிக தண்ணீர் கிடைப்பதால், அதிகளவில் காய்கறி சாகுபடி செய்ய முடியும் " என்று சுதா ராம்லிங்கையா கூறினார். விளைச்சல் அதிகரித்ததால் இந்தாண்டு விவசாய உற்பத்தி ரூ.50,000 அதிகரித்துள்ளது. ஆனால் இது மற்ற விளை நிலங்களிலும் உள்ளது. இது, இப்பகுதியில் தொழிலாளர் பற்றாக்குறையை உருவாக்குகிறது.
தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், கேரட் மற்றும் ரோஜாக்களை வளர்க்கும் 3.5 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை வைத்துள்ள பெல்லூரை சேர்ந்த மற்றொரு விவசாயி உதய்குமாருக்கு, இத்திட்டம் பயனளித்துள்ளது. "முன்பெல்லாம் மழை பெய்தால் தான் கோலாரில் உள்ள ஏரிகளில் தண்ணீரை பார்க்க முடியும். இப்போது எல்லா நேரத்திலும் ஏரியில் தண்ணீர் உள்ளது," என்று அவர் கூறினார். "எங்களுக்கு இப்போது போர்வெல்லில் 1000 அடியிலேயே தண்ணீர் கிடைக்கிறது. முன்பெல்லாம் இது நினைத்து பார்க்க முடியாத ஒன்று" என்றார் அவர்.
விளைபொருட்களின் விற்பனையின் மூலம் ரூ.30,000 வரை திரட்டக்கூடிய விவசாயிகள், நாம் உயர்த்தும் பயிர் மற்றும் சந்தை வீதத்தைப் பொறுத்து ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்றார்.
போர்வெல்களில் நீர்மட்டம் அதிகரிப்பதால் விவசாயம் செழித்து விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. இப்போது 1,000 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. முன்பு இப்படி இல்லை என்று கோலாரை சேர்ந்த சிறு காய்கறி விவசாயியான உதய்குமார் கூறுகிறார்.
‘நாற்றம் இருப்பதால் கொஞ்சம் பயனில்லை’
ஆனால் ஹோசகேர் ஏரியை ஒட்டி ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துள்ள 46 வயதான நாராயணசுவாமி அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரால் தனது கிராமத்தில் கொசுக்கள் பெருகி அது நோய்களை கொண்டு வருவதாக அவர் கூறுகிறார். “ஆரம்பத்தில் ஏரி நிரம்பி வருவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அதில் நாற்றம் வீசுகிறது. விலங்குகள் கூட அதை நுகர்வதில்லை" என்றார்.
லக்ஷ்மிசாகரில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள நர்சபுரா பகுதியை சேர்ந்த ராஜா ராவ், 71 மற்றும் நர்சபுரா ஏரியின் அருகே நிலம் வைத்துள்ள வி. வெங்கடேஷ், 48 ஆகியோரும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பார்த்து முகம் சுளிக்கின்றனர்.
"இந்த தண்ணீர் சுத்தமாக இல்லை; வடிகட்ட வேண்டும்: இது எங்களுக்கு எந்தவகையிலும் பயனில்லை," என்று, கேரட், பீன்ஸ் மற்றும் பீட்ரூட் சாகுபடி செய்துள்ள ஒரு ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் வெங்கடேஷ் கூறினார். "இந்த தண்ணீர் விவசாயத்திற்காக எங்களுக்கு தரப்படவில்லை. இது பயனுள்ளதாக இல்லை" என்று, ஒரு ஏக்கர் மற்றும் இரண்டு குண்டு (0.05 ஏக்கர்) நிலத்தை வைத்திருக்கும் ராவ் புலம்புகிறார். அவர் முள்ளங்கி, கேரட், வெள்ளரி மற்றும் ராகி போன்ற காய்கறிகளை வளர்க்கிறார்.
இந்த ஏரியை மேலும் ஆழப்படுத்த வேண்டும், மேலும் நிலத்தடி நீரை மேம்படுத்துவது தான் நோக்கமாக இருந்தால் தண்ணீர் கால்வாய்களை அமைக்க வேண்டும் வெங்கடேஷ் கூறினார்.
கோலார் நர்சபுரா கிராமத்தில் உள்ள காய்கறி சாகுபடி செய்யும் ராஜா ராவ், 71, “அழுக்கான நீர்” விடுவதால் மகிழ்ச்சியடையவில்லை. பயன்படுத்திய கழிவு நீரை நர்சபுரா ஏரிக்குள் விடுவதற்கு முன்பு, அதை “வடிகட்ட வேண்டும்” என்றார் அவர்.
நரசபுர கிராம ஊராட்சி, உள்ளூர் ஏரியை சுற்றியிருக்கும் போர்வெல்களில் இருந்து தண்ணீரை பயன்படுத்த வேண்டாமென்று எச்சரிக்கும் துண்டுப்பிரசுரங்களை, ஜூலை 2018 இல் மக்களுக்கு விநியோகித்தது, ஏனெனில் அது மாசடைந்து கெட்டுப் போயிருந்தது.
"எங்கள் வீட்டு தேவைகளுக்காக மழை காலத்தில் ஏரி நீரை நாங்கள் இதுவரை பயன்படுத்தி வந்தோம்," என்று கூறிய ராவ், "இப்போது யாரும் ஏரி மீன்களை கூட யாரும் சாப்பிடுவதில்லை; ஏரி நீரில் நாங்கள் கால்களை கூட நனைப்பதில்லை" என்றார். சுத்திகரித்த நீரால் கிராமத்தின் நீர்நிலைகளை மேம்படுத்த முடியவில்லை; ஏனெனில் மண் அதை ஊடுருவ அனுமதிக்காது என்றார்.
நாங்கள் முன்பு விளக்கியது போல, ஏரிகளில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரை பம்ப் செய்ய விவசாயிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இது, இப்பகுதியில் திட்டத்திற்கு எதிராக, சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. "நாங்கள் பம்ப் செய்து தண்ணீரை எடுக்க முயன்றால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். பிறகு இது எப்படி எங்களுக்கு பயனளிக்கும்" என்று வெங்கடேஷ் கேட்டார்.
இந்த நீரை நேரடியாக உறிஞ்சி எடுத்தது தொடர்பாக விவசாயிகள் மீது சுமார் 30 வழக்குகள் உள்ளன. "நாங்கள் விவசாயிகளை எச்சரித்தோம். மேலும் சோதனை நடத்தியதில் முறைகேடு புரிந்தவர்களின் பம்ப் அல்லது மோட்டாரை பறிமுதல் செய்தோம்" என்று துணை ஆணையர் மஞ்சுநாத் கூறினார். "இதே போல் திரும்ப செய்வோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறோம். இப்போது நுண் நீர்ப்பாசனத் துறையானது இளைஞர்களை அல்லது வீட்டு காவலர்களை கொண்டு ஏரிகளை கண்காணித்து வருகிறது” என்றார்.
அமைப்பு எவ்வாறு திறம்பட செயல்பட முடியும்? "ஒரேவழி, நீர் சுத்திகரிப்பை கண்காணிப்பதில் அரசுடன் இணைந்து செயல்படுவது மற்றும் நீரின் தரத்தை மேம்படுத்த உதவுவது, ”என்றார் விஸ்வநாத். "மற்றொன்று விவசாயிகளுக்கு நீரை நியாயமாகப் பயன்படுத்த உதவுவது. இதில், பொருளாதார மீளுருவாக்கம் செய்வதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியங்கள் உள்ளன” என்றார் அவர்.
சட்ட சவால்கள்
ஜூலை 2018 இல், ஆஞ்சநேய ரெட்டி தொடர்ந்த வழக்கில், கோலாருக்கு இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை அரசு அனுப்ப, கர்நாடக உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது; இவர், சிக்கபல்லாபூரை சேர்ந்த குடியிருப்பாளர்; சாஷ்வத நீராவரி ஹொரட்டா சமிதியின் (அல்லது நிரந்தர நீர்ப்பாசன போராட்டக்குழுவின் ) தலைவராக உள்ளார். செப்டம்பர் 2018 இல், உயர்நீதிமன்றம் கோலாருக்கு தண்ணீர் அனுப்ப அனுமதி தந்தது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, 2019 ஜனவரியில் உச்சநீதிமன்றம் தடை விதித்தது; 2019 ஏப்ரலில் இந்த தடையை விலக்கியது. உலகெங்கிலும் இதேபோன்ற நடைமுறைகள் உள்ளதாக குறிப்பிட்டு சுத்திகரித்த கழிவுநீரை அனுப்ப அனுமதித்தது; மேலும், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரரை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
"இந்த வழக்கால் தண்ணீர் நிறுத்தப்பட்டதில், நாங்கள் 175 நாட்களை இழந்துவிட்டோம்," என்று மஞ்சுநாத் கூறினார்.
ஆனால் வழக்கு தாக்கல் செய்த மனுதாரர் இது நியாயமானது என்று நம்புகிறார். "கோலார் பிராந்தியத்தில் ஏற்கனவே தண்ணீரில் தர சிக்கல்கள் உள்ளன. இந்த தண்ணீர் நிலத்தடி நீரை மாசுபாட்டை ஏற்படுத்தும்" என்று இந்தியா ஸ்பெண்டிடம் ரெட்டி கூறினார்.
இங்கு சேகரிக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கனமான உலோகங்கள் (காட்மியம், குரோமியம், தாமிரம், ஈயம், கோபால்ட், துத்தநாகம்) அனுமதிக்கப்பட்ட தரத்திற்கு அதிகமாக உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட நீரில் அதிக ஆர்த்தோ - பாஸ்பேட் (மாசுபாட்டைக் குறிக்கிறது), நைட்ரேட் மற்றும் கரிம துகள்கள் உள்ளதாக, செப்டம்பர் 2019 இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இவற்றை அகற்றும் திறன் இல்லாததால் மாசு ஏற்படுகிறது என்று சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானியும் அறிக்கையின் முதன்மை ஆசிரியருமான டி வி ராமச்சந்திரா கூறினார். "கொள்கையளவில் நான் இத்திட்டத்திற்கு எதிரானவன் அல்ல. கழிவுநீரை முறையற்ற வகையில் சுத்திகரிக்கும் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே நான் எதிரானவன்" என்று அவர் கூறினார்.
ஆனால் இதுபோன்ற விமர்சனங்களை பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் மறுத்துள்ளது. "சுத்திகரிக்கப்படாத நீர் வெளியேற்றப்படுகிறது என்ற சந்தேகமே வேண்டாம்" என்று அதன் தலைமை பொறியாளர் (கழிவுநீர் மேலாண்மை) ஈ நித்யானந்த குமார், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "குடிப்பதைத் தவிர, இதை [இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர்] எதற்கும் பயன்படுத்தப்படலாம்" என்றார் அவர்.
ஆனால் கவலை என்னவென்றால், நீர் நிலத்தடி நீர் ஆதாரங்களில் இது கலந்து, நீர்நிலைகளை மாசுபடுத்தும் என்று, ரெட்டியின் வழக்கறிஞரான இளவரசர் ஐசக் கூறுகிறார். "இது இப்போது இல்லாவிட்டாலும் அடுத்த சில ஆண்டுகளில் நடக்கலாம். "மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீர் வழங்கினால் கொஞ்சம் திருப்தி அடையலாம்" என்று அவர் கூறினார்.
கே.சி கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய இந்திய அறிவியல் நிறுவனம் கோரப்பட்டுள்ளதாக, மாநில அரசு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது என்று, தி இந்து 2019 நவம்பர் 12இல் செய்தி வெளியிட்டுள்ளது.
"இத்திட்டத்தில் முன்னேற்றம் தேவைப்படும் அம்சங்கள் உள்ளன, ஆனால் விவசாய பயன்பாட்டிற்கு கழிவுநீரை பகிர்ந்து கொள்வதில் இத்திட்டம் நாட்டிற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்" என்று விஸ்வநாத் கூறினார். தற்போதைய கற்பனை எல்லாம் நகரம் அதன் சொந்த [கழிவுநீரை] பயன்படுத்துகிறது என்பது தான். இது இந்தியாவுக்கு பொருந்தக்கூடிய மாதிரி தான்" என்றார்.
(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர். ரத்தோட், பெங்களூரைச் சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.