எர்ணாகுளம் (கேரளா): ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் இருந்து குடியேறிய சுப்ரியா தேப்நாத், 24, மத்திய கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், எடப்பள்ளியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நீல மற்றும் வெள்ளை சல்வார் கமீஸில் அமர்ந்திருக்கிறார். அவரது நெற்றியை சந்தனக்கோடும், மெல்லிய குங்குமச் சாந்தும் அலங்கரிக்கிறது. அவருக்கு அடுத்து அமர்ந்திருக்கும் மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது ஹசினா கதுன், கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட தனது சகாவிடம் பேச்சை கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.ரோஷினி என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளியில் மலையாளம் அதன் மூலம் சொந்த மொழி கற்று தேர்ச்சி பெற உதவுகிறது.

ரோஷ்னி திட்டத்தின் 40 கல்வி தன்னார்வலர்கள், டெப்நாத் மற்றும் ஹசினா போன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பூர்வீக மலையாள மொழி பேச கற்றுக் கொடுக்கிறார்கள். கேரளாவில் உள்ள 38 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ளூர் மொழி கற்பித்தல் மற்றும் தேர்வுகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

கேரளாவின் மக்கள் தொகையில் சுமார் 8% பேர், அதாவது 25 லட்சம் பேர் புலம்பெயர்ந்தோர் என, கேரள தொழிலாளர் துறைக்கான குலாத்தி நிதி மற்றும் வரிவிதிப்பு நிறுவனம் மேற்கொண்ட 2013 ஆய்வு தெரிவிக்கிறது. மொத்த இந்திய மக்கள்தொகையில் சுமார் 38% வேலை அல்லது குடும்பத்திற்காக புலம் பெயருகின்றனர் என, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள், அவர்களின் குடும்பங்கள் தங்கள் சொந்த இடத்தில் இருந்து முன்னும் பின்னுமாக பயணிக்கின்றன, இதனால் பள்ளியை விட்டு நிற்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன; இது எதிர்காலத்தில் அவர்களின் திறன்களையும் வாய்ப்புகளையும் பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கேரளாவில் குடியேறியவர்களில் அதிகமானோர் மேற்கு வங்கம் (20%), பீகார் (18.10%), அசாம் (17.28%) மற்றும் உத்தரபிரதேசம் (14.83%) ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று 2013 ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் மலையாளத்தை கற்பித்தல் பாடமாக படிப்பது பெரும் சவாலாக இருக்கும். ரோஷ்னி போன்ற நிகழ்ச்சிகள் புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கான கல்வி இடைவெளியைக் குறைக்க உதவும்.

ரோஷ்னி திட்டட்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 1,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மலையாளத்தை பல மொழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளின் தாய்மொழி உட்பட கற்றுக்கொள்ள உதவுகிறார்கள். அதன் காலை உணவு கூறு குழந்தைகளுக்கு பசி வராமல் இருப்பதை உறுதி செய்கிறது, வருகையை ஊக்குவிக்கிறது, மேலும் உள்ளூர் கலாச்சாரத்தை ஒருங்கிணைக்க உதவுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட ரோஷ்னி திட்டம், 1,265 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கீழ்நிலை முதல் உயர்நிலைப்பள்ளி வரை ஆதரவளித்துள்ளது. 2017-18 உடன் ஒப்பிடும்போது, 20 பள்ளிகளில் பள்ளிப் படிப்பு கைவிடுவோர் எண்ணிக்கை, 2018-19இல் கிட்டத்தட்ட பாதி (48%) குறைந்து 65 ஆக இருந்ததாக, திட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்ந்தோரைச் சார்ந்துள்ள கேரள பொருளாதாரம்

கேரளா அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது -அபிவிருத்தி ஆய்வுகள் மையத்தின் மே 2018 அறிக்கையின் அடிப்படையில் 2013இல் 24 லட்சம் பேர் - இதனால் கேரளாவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு, பிற இந்திய மாநிலங்களில் இருந்து புலம்பெயர்பவர்கள் தேவை என்கிறார், எர்ணாகுளத்தை சேர்ந இலாப நோக்கற்ற அமைப்பான புலம் பெயர்வு மற்றும் உள்ளடக்கிய மேம்பாட்டு மையம் - சிஎம்ஐடி (CMID) சேர்ந்த பெனாய் பீட்டர்.

"புலம் பெயர்ந்தவர்களால் கேரளா பெரிதும் பயனடைந்துள்ளது" என்று பீட்டர் கூறினார். "ஆனால் படித்தவர்கள் மத்தியில் நிலவும் வேலையின்மை மற்றும் எதிர்காலத்தில் எதிர்மறை வளர்ச்சியைக் காணும் மக்கள்தொகை (இரு மாவட்டங்கள் ஏற்கனவே செய்துள்ளன) ஆகியவற்றால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களே மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகளை பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார் அவர். கேரளாவுக்கு வரும் புலம்பெயர்ந்தோர் குறித்த சரியான எண்ணிக்கை தெரியவில்லை. சி.எம்.ஐ.டி 2017 ஆய்வு மதிப்பீடுகளின்படி, இப்போது 11% மக்கள் (35 லட்சம் முதல் 40 லட்சம் இடையே ) புலம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம்.

"மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது அரசு மிகவும் செயல்பாட்டில்உள்ளது" என்று பீட்டர் மேலும் கூறினார். அப்னா கர் போன்ற புலம்பெயர்ந்தோர் நலத்திட்டங்களுடன், மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகை அடிப்படையில் தங்குமிடம், மற்றும் ஆவாஸ் என்ற சுகாதார காப்பீட்டு திட்டம், ரோஷ்னி போன்ற கல்வித் திட்டங்கள் உள்ளன.

புலம்பெயர்ந்த குழந்தைகள் பள்ளியில் தங்குவதை எளிது

"எனிக்கு மலையாளமானு ஈஸி (எனக்கு மலையாளம் கற்பது சுலபமானது)" என்று சுஸ்மிதா கூற, அவரது பள்ளித்தோழி அஞ்சலியும் அதை ஏற்பது போல் தலையசைத்தார். "பாஞ்ச் சால் ஹோ கயா ஹை முஜே யஹான், இஸ்லியே மலையாளம் ஈஸி ஹை (நான் இங்கு ஐந்து ஆண்டுகளாக இருக்கிறேன், எனவே மலையாளம் எளிதாக பேச முடிகிறது)" என்று, முதலில் இந்தியில் பேச தயங்கிய அஞ்சலி கூறினார். உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து இங்கு வந்தாலும், எர்ணாகுளத்தின் மலையாள மொழிப்பாட பினானிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 10 வயது குழந்தைகள் இருவருக்கும் தங்களது தாய்மொழியான இந்தியை விட உள்ளூர் மொழி பேசவதே வசதியாக உள்ளது. இருவரின் தந்தையரும் வேலைக்காக இங்கு வந்ததில் இருந்து, அரை தசாப்தத்திற்கும் மேலாக கேரளாவில் வசித்து வருகின்றனர். வீட்டில் பெற்றோருடன் தவிர, அவர்களின் பெரும்பாலான உரையாடல்கள் மலையாளத்தில் தான் உள்ளன.

ரோஷ்னி திட்டம் 2017 இல் தொடங்கப்படுவதற்கு முன்னர், 2015-16ஆம் ஆண்டு சிறப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் முதல் குழுவில் சுஸ்மிதாவும் அஞ்சலியும் இடம் பெற்று, மலையாளத்தைக் கற்றனர் என்று, ரோஷ்னி திட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் கே ஜெயஸ்ரீ, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

சுஸ்மிதா (இடது) மற்றும் அஞ்சலி இருவரும் உத்தரபிரதேசத்தின் வாரணாசியை சேர்ந்தவர்கள். தாய்மொழியான இந்தியை விட மலையாளத்தில் உரையாடுவது மிகவும் வசதியானது என்று இருவரும் கூறுகின்றனர்.

எர்ணாகுளம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புலம் பெயர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2019-20உடனான ஒரு வருடத்தில் 44% அதிகரித்து 3,985 ஆக உள்ளது என்று, அரசு கல்வி இணையதளமான சமக்ரா சிக்ஷா கேரளா - எஸ்.எஸ்.கே (SSK) தரவுகள் தெரிவிக்கின்றன.

"ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கணக்கெடுப்பில், பள்ளிக்கு செல்லாத 150-200 புலம்பெயர்ந்த குழந்தைகளை காண்கிறது. இந்த ஆண்டு [2019-20] நாங்கள் 160 குழந்தைகளை கண்டோம்,” என்று எர்ணாகுளம் மாவட்ட எஸ்.எஸ்.கே. திட்ட அலுவலர் சஜோய் ஜார்ஜ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "பெரும்பாலும் இந்த குழந்தைகள் முதல் தலைமுறை பள்ளி படிப்பவர்கள்" என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் 150-200 புலம்பெயர்ந்த குழந்தைகள் பள்ளி செல்லாதவர்களாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை பள்ளி செல்வோர் என்று சமக்ரா ஷிக்ச கேரளாவின் மாவட்ட திட்ட அலுவலர் சஜோய் ஜார்ஜ் கூறுகிறார்.

புலம்பெயர்ந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு சவாலாக இருப்பது, அவர்களது குடும்பத்தின் வேலைத்தன்மை ஆகும். பெரும்பாலும் புலம் பெயர்ந்த குடும்பங்களின் செயல்பாடுகள் அல்லது பண்டிகைக்கு சொந்த மாநிலத்திற்கு சென்று திரும்பி வருவது அல்லது வரதது, அல்லது அவர்கள் திரும்பி வந்தாலும் குழந்தைகளை ஊரில் விட்டு வருவது போன்ற இடர்பாடுகள் உள்ளன.

மேலும், 2018 ஆகஸ்ட் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகள், புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. 2018-19 ஆம் ஆண்டில் மட்டும், வெள்ளத்தால் குடும்பத்திற்கு வேலை இழப்பு ஏற்பட்டு 26 மாணவர்கள், குடும்ப பிரச்சினை காரணமாக 24 பேர்மற்றும் பண்டிக்கால விழா காரணமாக 15 மாணவர்கள், பள்ளிக்கு செல்வதை நிறுத்தி உள்ளனர்.

“இங்கு மூன்று வகை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்; ஒன்று, வேலைக்காக வந்து குடியேறுபவர்கள்; அடுத்து, தற்காலிகமாக வேலை தேடுபவர்கள்; மூன்றாவது, பருவகாலத்தில் மட்டும் குடியேறுபவர்கள். புலம்பெயர்ந்த மாணவர்களின் வெளியேற்ற விகிதம் இடம்பெயர்வின் தன்மையைப் பொறுத்தது, ”என்றார் ஜார்ஜ்.

குழந்தை முகமது தில்ஷாத்தின் குடும்பம் பல ஆண்டுகளாக கேரளாவில் வசித்து வருகிறது, இந்த திட்டத்தின் மூலம் அக் குழந்தை பயனடைந்துள்ளது. அவர், அனைத்து பாடங்களிலும் ஏ+ கிரேடு பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். 2015 இல் சிறப்பு தொடங்கியபோது அவருக்கு மலையாளம் தெரிந்திருந்தாலும், "பாடல்கள், கவிதைகள் கற்றுக்கொண்டு, தமது மலையாள மொழித்திறன்களை மேம்படுத்த அவருக்கு இத்திட்டம் உதவியது".

பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு புலம் பெயர்ந்துள்ள குடும்பத்தின் மூத்த மகனும், முதல் தலைமுறை மாணவருமான தில்ஷாத், வருங்காலத்தில் ஒரு பொறியியலாளராக விரும்புகிறார். அவரது தந்தை முகமது சாஜித், படிக்காதவர்; எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஷூ தொழிற்சாலையில் பணிபுரிகிறார். ஏழு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரே வருவாய், உணவு ஆதாரம் அவர் மட்டுமே. தில்ஷாத்தின் தாய் அபிதா கதுன், சமஸ்திபூரில் உள்ள தனது கிராமத்தில் மதரஸா (இஸ்லாமிய போதனை பள்ளி) ஒன்றில் பயின்றவர்.

முகமது தில்ஷாத், பினானிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மலையாள மொழியில் பயின்ரு 10 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்தார். பீகாரின் தர்பங்காவை சேர்ந்த கல்வியறிவு பெறாத பெற்றோரின் ஐந்து குழந்தைகளில் இவர் மூத்தவர்.

"மலையாளம் பேசுவதை நான் இன்னமும் கடினமாகவே பார்க்கிறேன். ஆனலும் முன்பை விட அது இப்போது சிறந்தது," என்று, இரண்டு தசாப்தங்களுக்கும் மேல் கேரளாவில் வசித்து வரும் கத்துன், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். பீகாருடன் ஒப்பிடும்போது "இங்கே அமைதியாக இருக்கிறது", என்று கூறும் அவர் ஐந்து ஆண்டுகளாக அங்கு செல்லவே இல்லை. மட்டுப்படுத்தப்பட்ட கல்வி என்றாலும், அபிதா தனது குழந்தைகள் படிக்க வைக்க விரும்புகிறார்.

“தில்ஷாத் பள்ளிக்கு செல்ல தொடங்கும்போது ஒரு மாதத்திற்கு ரூ. 200 செலவழித்தோம். எங்களிடம் எந்த சேமிப்பும் இல்லை,”என்று அபிதா கூறினார். “அபி பீ வோஹி ஹலாத் ஹை (சூழ்நிலைகள் மாறவில்லை). ஆனால் எனது குழந்தைகள் அனைவரும் நன்கு படித்து, அவர்கள் விரும்பியவாறு தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.

"பீகாரில் இருந்து வந்த பின் 5ஆம் வகுப்பில் பினானிபுரம் பள்ளியில் சேர்ந்தபோது, படங்கள் மற்றும் வரைபடங்கள், மலையாள மொழி கற்க உதவியது" என்று தில்ஷாத்தின் பள்ளித் தோழரான, அருகில் இருந்த தராக் பர்வீன் கூறினார். ஆடை வடிவமைப்பாளர் படிப்பு கற்கும் பர்வீன் போன்ற புலம் பெயர்ந்தவர்களுக்கு, ரோஷ்னி கல்வி திட்டம் உதவுகிறது என்று அவர் நம்புகிறார். பெற்றோருடன் பேசும்போது தவிர, அவர்களில் இருவருமே இந்திக்கு முன்னுரிமை தருவதில்லை.

ரோஷ்னியின் தோற்றம்

“நான் 2014 இல் பினானிபுரம் உயர்நிலை பள்ளி முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டபோது, பள்ளியில் 50% க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த குழந்தைகள், மலையாள மொழியைக் கற்றுக்கொள்வதில் சிக்கல் இருப்பதை நான் கவனித்தேன்; கற்பிக்கும் மொழி காரணமாக பள்ளியில் பிற பாடங்களும் அவர்களுக்கு சிரமமாக இருந்தது” என்று, ரோஷ்னி திட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ கூறினார்.

அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த குழந்தைகள் குறித்து தலைமை ஆசிரியர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகும் பிரச்சினைகள் நீடித்தன, எனினும், இந்த மாணவர்களுக்கு மலையாளத்தைப் புரிந்துகொள்ள, தன்னார்வலர் ஒருவர் உதவுவார். 2008 முதல், சர்வ சிக்ஷா அபியான் -எஸ்.எஸ்.ஏ (SSA) மூலம், ஏராளமான புலம்பெயர்ந்த குழந்தைகளைக் கொண்ட பள்ளிகளில் பள்ளி ஆசிரியர்களை மாணவர்கள் தொடர்பு கொள்ள, தன்னார்வலர்கள் அமர்த்தப்பட்டனர். இருப்பினும் கூட, புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு பாடம் புரிந்துகொள்வது என்பது கடினமாகவே இருந்தது.

செப்டம்பர் 2015 இல், தலைமை ஆய்வாளர், வகுப்பு ஆசிரியர், எஸ்.எஸ்.ஏ.வைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர் மற்றும் ஆசிரியர் ஆராய்ச்சியாளராக ஜெயஸ்ரீ ஆகியோர் அடங்கிய ஒரு ஆய்வுக் குழு பினானிபுரம் பள்ளியில் 11 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு - பெரும்பான்மையானவர்கள் இந்தி பேசுபவர்கள் - மலையாளம் கற்றுக் கொள்ள உதவும் ஒரு சிறப்பு திட்டத்தை உருவாக்கியது.

“இதில் உள்ள சவால் என்னவெனில், பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைக்கு தெரிந்த மொழியில் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம் என்பது தான். இது இன்னும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது; ஆனால் தன்னார்வலர்கள் உதவுகிறார்கள், ”என்றார் ஜெயஸ்ரீ. “மொழி, உரையாடல்களால் வாழ்கிறது. புதிதாக பிறந்த குழந்தைகளிடம் பாடல்கள் அல்லது தாலாட்டு மூலம் நாம் பேசுகிறோம். அதேபோல், ஒரு குழந்தை பள்ளியில் சேரும்போது அவர்களுக்கு எழுத்து அட்டவணை கற்பிப்பதன் மூலம் ஒரு மொழியை கற்றுக் கொள்ளும் என்று என்று எதிர்பார்க்க முடியாது. இது அறிவியலற்றது” என்றார்.

பைலட் திட்டத்தின் போது, ஒவ்வொரு நாளும் வகுப்பு இடைவினைகள் மற்றும் ஆசிரியர்களின் பிரதிபலிப்புகளின் அடிப்படையில் கற்பித்தல் தொகுதி மற்றும் கற்பித்தல் முறையை ஜெயஸ்ரீ மெதுவாக உருவாக்கினார். “கேரளாவில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மலையாளத்தை கற்பிப்பதற்கான ஒரு திட்டம் [மலையாள திலக்கம்] ஏற்கனவே இருந்தது. புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கான கிராஃபிக் வாசிப்பைச் சேர்க்க, பாடத்தின் தொகுதிக்கூறுகளை மாற்றியமைக்க முடிந்தது, ”என்றார் ஜெயஸ்ரீ. மொழியியலாளர் கே என் ஆனந்தனின் வழிகாட்டுதலின் கீழ் கற்பித்தல் (ரோஷ்னி திட்டத்திற்கு) உருவாக்கப்பட்டது.

இந்த முறையில், ஆசிரியர் புலம்பெயர்ந்தோரின் மொழியிலிருந்து மலையாளத்திற்கு “குறியீடு மாறுகிறார்” மற்றும் வாக்கியங்களை எழுதுகிறார், கிராஃபிக் பிரதிநிதித்துவங்கள், வரைபடங்கள், பாடல்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார். இதனால் குழந்தைகள் ஒரு வாக்கியத்தில் எழுத்துக்களை அடையாளம் கண்டு தேர்ச்சி பெற முடியும்.

டிசம்பர் 2015 உடனான மூன்று மாதங்களில், மலையாளத்தில் உள்ள 56 எழுத்துக்களில் 16 எழுத்துக்களுக்கு ஒலிப்பு விழிப்புணர்வை (பேச்சு வடிவில் வார்த்தையில் கேட்கும், கையாளும் திறன்) குழந்தைகள் உருவாக்கியதாக ஜெயஸ்ரீ தெரிவித்தார். இந்த சிறப்பு திட்டம், பின்னர் ரோஷ்னி என்ற திட்டமாக மாறியது.

“பிறந்த குழந்தைகளிடம் பாடல்கள் அல்லது தாலாட்டு மூலம் நாம் பேசுகிறோம். அதேபோல், பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு எழுத்து அட்டவணை கற்பிப்பதன் மூலம் ஒரு மொழியை கற்றுக் கொள்ளும் என்று என்று எதிர்பார்க்க முடியாது. இது அறிவியலற்றது” என்று, ரோஷ்னி திட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ கே கூறுகிறார். இவர், தன்னார்வலர்களுக்கும் கற்பிதத்திற்கும் பாடத்தொகுதிக்கூறுகளை உருவாக்க உதவியவர்.

2017 அக்டோபரில், எர்ணாகுளத்தின் அப்போதைய மாவட்ட ஆட்சியர் முகமது சஃபிருல்லாவுக்கு, இத்திட்டம் குறித்து தகவல் கிடைத்தது. ரோஷ்னி திட்டத்தின் முதல் கட்டமாக பினானிபுரத்தில் உள்ள ஒரு பள்ளி உட்பட நான்கு பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ரோஷ்னி திட்டத்திற்கு பிறகு, மொழிப்பாட அடிப்படையிலான தலையீடுகள், மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வந்துள்ளது, மாநில கல்வித்துறையல்ல.

"இது அவர்களின் [குழந்தைகளின்] செயல்திறனை அதிகரிப்பதற்கான கூடுதல் தொகுப்பாகும்; இது பள்ளிப்படிப்பு செயல்முறைக்கு இணையான முறை அல்ல" என்று சஃபிருல்லா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "தொடக்கத்தில், அதிகமான மாணவர்களை சென்றடைவதில் கவனம் செலுத்தப்பட்டது" என்றார்.

"இத்த்திட்டத்தில் புலன் பெயர்ந்தோரின் நலனுக்கே முன்னுரிமை தரப்பட்டது" என்று சஃபிருல்லா கூறினார். "புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் ஏராளமானோர் பள்ளிக்கு செல்லாமல் இருந்தனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நாளானது பெரும்பாலும் அதிகாலையிலேயே ஆரம்பமாகிவிடும். இதனால், சில நேரங்களில் குழந்தைகளுக்கு போதுமான சத்தான உணவு கிடைக்கவில்லை. இத்திட்டத்தில், உணவு ஒரு கூறாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த நான் விரும்பினேன்” என்றார்.

ஆண்டுதோறும் ரூ.1 கோடி செலவாகும் இந்த திட்டத்திற்கு, மாவட்டத்தின் கல்வி நிதியுதவியுடன், பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியும் கிடைக்கிறது. உணவுக்கான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.20 மற்றும் ஒருநாளைக்கு ஒரு பள்ளிக்கு சமையல் கட்டணமாக ரூ.100 ஆகியன இதில் அடங்கும். எழுது பொருள், கைவினைப் பொருட்கள் என்று சராசரியாக ஒரு குழந்தைக்கு ரூ.20 இதில் சேருகிறது.

"காலையில் 10 மணிக்கு வழக்கமான வகுப்புகள் தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே, ரோஷ்னி திட்டத்தில் வகுப்புகள் தொடங்குவதால், குழந்தைகள் ஊக்கம் பெறும் வகையில், காலையில் பள்ளியில் உணவு இருக்க வேண்டும்" என்று ஜெயஸ்ரீ கூறினார்.

"ரோஷ்னியை ஒரு முதன்மை திட்டமாக நாங்கள் பார்க்கிறோம்," என்று பிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் மேலாளர் அன்சி ஜான்சன், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "பெரும்பாலும் நிறுவனங்கள் மூலதன செலவினங்களில் முதலீடு செய்கின்றன, ஆனால் இங்கே, உடல் உள்கட்டமைப்பின் அடிப்படையில் வெளிப்படுத்த எதுவும் இல்லை என்றாலும், இதன் தாக்கம் அதிகம்" என்றார்.

இந்த திட்டம் 2018-19 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டத்தில் 20 பள்ளிகளாகவும், 2019-20ல் மூன்றாம் கட்டத்தில் 38 ஆகவும் விரிவடைந்தது.

இருப்பினும், “நோக்கம் நேர்மறையானது” என்று, சி.எம்.ஐ.டி.-இன் பீட்டர் போன்ற வல்லுநர்கள் நம்புகிறார்கள். ரோஷ்னி திட்ட தாக்கம் பற்றி மதிப்பிடுவது மிக விரைவாக இருக்கலாம்; இதன் தாக்கம் ரோஷ்னி திட்டம் மற்றும் 2008 முதல் இயங்கும் அரசு திட்டத்தை அளவிடும்.

இரண்டு திட்டங்களும் (2008 இல் மூன்று தன்னார்வலர்களுடன் தொடங்கப்பட்டது, மற்றும் ரோஷ்னி) புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு உதவுவதற்கான ஒரே நோக்கத்தைக் கொண்டிருப்பதால், அவை "ஒத்திசைவு மற்றும் நகலெடுப்பைத் தவிர்த்தல்" என்பதை உறுதி செய்வதற்காக பிற்காலத்தில் அவை ஒன்றிணைக்கப்படலாம் என்று எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுஹாஸ் கூறினார்.

மொழி கற்றலை எளிதாக்குதல்

“மலையாளம் கற்றுக்கொள்வது கடினம்” என்று கல்வி தன்னார்வலரான டெப்நாத் கூறினார். “ஆமாம், நாலு என்பது நான்கு என்று பொருள்; நாள என்பது நாளை என்றும் பொருளுண்டு. இதேபோல் வல்லம் என்பது படகு மற்றும் வெள்ளம் என்பதற்கு தண்ணீர் பொருள். “இது முதலில் மிகவும் குழப்பமாக இருந்தது” என்று புன்னகையுடன் ஹசீனா ஒப்புக் கொண்டார். "மொழிப்பிரச்சனை காரணமாக நான் வீட்டிற்குள் அடைந்து கிடந்தேன்," என்று அவர் கூறினார்.

சுப்ரியா தேப்நாத் (இடது), ஒடியா மொழி பேசுகிறார்; ஹசினா கத்துன், வங்க மொழி பேசுபவர். புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு, ரோஷ்னி திட்டத்தின் மூலம் மலையாளம் கற்பிக்கும் தன்னார்வலர்கள் இவர்கள்.

பெண்களின் இடம் பெயர்வுக்கு திருமணம் மிகப்பெரிய காரணம். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவலின்படி, 21.1 கோடி திருமணமான 97% பேர், பெண்களின் புலன்பெயர்வுக்கு திருமணம் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி தனது மகளை பல குழந்தைகள் வங்காள மொழி பேசும் பள்ளியில் சேர்க்க வேண்டியிருந்தபோது விஷயங்கள் மாறியது, மேலும் தலைமை ஆசிரியர் அவளுக்கு உதவி கோரினார். “ஆரம்பத்தில் எப்படி, என்ன கற்பிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. வங்கமொழி பேரும் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள உதவுமாறு என்னிடம் கேட்கப்பட்டது.

இவ்வாறு, நான் வகுப்பு ஆசிரியருக்கு உதவத் தொடங்கியதும் நான் மேலும் கற்றுக்கொண்டேன். மலையாளத்தின் அடிப்படைகள் கற்பிக்கப்படும் 1 ஆம் வகுப்பில் நான் அதிக நேரம் செலவிட்டேன் என்பதை உறுதி செய்தேன், ”என்று மலையாளத்தில் பதிலளிக்க விரும்பும் ஹசீனா கூறினார்.

இதேபோல், பிளைவுட் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணி புரியும் ன பிரசாந்த் சமலை திருமணம் செய்தபிறகு கேரளாவுக்கு தனது தேப்நாத் முதல் வருகையின் போது, ஒடியா மாணவர்களுக்கு பள்ளிகளில் மலையாளம் கற்பிக்க உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

"என்னால் மலையாளத்தை மிகக்குறைவாகவே பேச முடிந்தது," என்று அவர் கூறினார். "ஆனால் குழந்தைகளுக்கு ஒடியா கற்பிப்பது அவர்களுக்கு எதிர்காலத்தை வழங்காது என்று நினைத்தேன். ரோஷ்னி திட்ட தன்னார்வலர்களுக்கு நேர்காணல் அழைப்புகளைப் பற்றி நான் அறிந்தபோது, யூ டியூப் வீடியோ பார்த்து மலையாளம் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டேன்” என்றார்.

"புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஹசினா மற்றும் சுப்ரியா போன்ற தன்னார்வலர்கள் இந்த திட்டத்திற்கு மிக முக்கியமானவர்கள்" என்று ரோஷ்னி திட்டத்தின் ஜெயஸ்ரீ கூறினார்.

தற்போது இத்திட்டத்தில், 38 பள்ளிகளில் 40 தன்னார்வலர்கள் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த மாணவர்களைக் கொண்ட இரண்டு பள்ளிகளில், தலா இரண்டு தன்னார்வலர்கள் உள்ளனர். ரோஷ்னி திட்ட தன்னார்வலர்கள் பன்மொழி (இந்தி, ஆங்கிலம், தமிழ் பேசுபவர்கள்) தெரிந்தவர்களாகவும் கேரளாவைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்; இதில், ஹசீனா மற்றும் டெப்நாத் விதிவிலக்கு. எஸ்.எஸ்.ஏ மற்றும் பிபிசிஎல் நிதியில் இருந்து அவர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படுகிறது.

தொண்டர்களுக்கு கற்பித்தல் பாடத்தொகுதிகள் வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. வர்க்க தொடர்புகளின் அடிப்படையில், அவர்கள் ஒவ்வொரு வாரமும் தங்கள் பிரதிபலிப்பை, கருத்துகளை வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்து கொள்கிறார்கள், இது மற்ற தன்னார்வலர்கள் கற்றுக்கொள்ளலாம். "தன்னார்வலர்களின் பிரச்சினைகளின் அடிப்படையில் அவர்களுக்கு உதவ மாத காலப்பகுதியில் நான் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்" என்று ஜெயஸ்ரீ கூறினார்.

சக புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கு மலையாளம் கற்பிப்பதன் மூலம் ஹசீனா தனது திறமையை மேம்படுத்திக் கொண்டிருக்கையில், தனது மகள் அலிவா பள்ளியில் சிறப்பாகச் செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறார். “அவர் விருதுகளை பெற்றுள்ளார். முக்கியமாக அவருக்கு மலையாளம் மற்றும் பிற நான்கு மொழிகள் (இந்தி, ஆங்கிலம், பெங்காலி மற்றும் அரபு) தெரியும். நான் அடிக்கடி மலையாளத்தில் பேசி, அவளுடைய உதவி செய்து தருகிறேன்,” என்றார் ஹசீனா.

எர்ணாகுளத்தில் உள்ள 38 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 40 கல்வி தன்னார்வலர்கள் கற்பிக்கின்றனர். அவர்களின் பணி 1,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு உள்ளூர் மொழியைக் கற்கவும் பள்ளியில் படிக்கவும் உதவியுள்ளது.

அளவிடுதல் மற்றும் நிலைத்தன்மை

மாவட்ட நிர்வாகத்தில் இருக்கும் முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், இத்திட்டத்திற்கான நிதி மற்றும் அதன் வேகம் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துவதில் பிரச்சினையாக இருக்கக்கூடாது என்று முன்னாள் மாவட்ட கலெக்டர் சஃபிருல்லா தெரிவித்தார். சி.எஸ்.ஆர் நிதி கிடைப்பதால், கல்வி தன்னார்வலர்களின் சம்பளத்திற்கான நிதி, ஒரு பிரச்சினையாகவே இருக்கக்கூடாது. "தேவைப்படும் நிதி சிறியது; இது அரசால் தர முடிந்தால், இத்திட்டத்திற்கான விளைவுகள் மிகப்பெரியது" என்று சஃபிருல்லா கூறினார்.

"மொழி [உள்ளூர்] கலாச்சாரத்தின் நுழைவாயிலாகும், மேலும் இரண்டாம் தலைமுறை புலம்பெயர்ந்தோர் உள்ளூர் கலாச்சாரத்தில் ஒன்றிணைக்க ரோஷ்னி திட்டம் உதவும்" என்றார். இத்திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டால், “இது பல கட்டங்களாக நிறைவேற்றப்பட வேண்டும்”, என்றார்; புலம்பெயர்ந்தோர் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கவனம் செலுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹசீனா மற்றும் டெபந்த் போல், புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த அதிகமான கல்வித் தன்னார்வலர்கள் அல்லது குழந்தைகளின் மொழி பேசக்கூடியவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று சி.எம்.ஐ.டி-யின் பீட்டர் குறிப்பிட்டார்.

அரசு கல்வித்துறையான சமக்ரா சிக்ஷா கேரளா, பெரம்பவூரில் ஒரு இணைப்பு பாலமாக ஒரு திட்டத்தை உருவாக்குகிறது. இது புலம்பெயர்ந்த குடும்பங்கள், சீசன் காலத்தில் புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் பள்ளிகளில் சேர உதவுகிறது, மேலும் தற்போது ரோஷ்னி திட்டத்தின் கீழ் இல்லாத, எர்ணாகுளத்தை சேர்ந்த 2,700 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த மாணவர்களுக்கும், இது ஆதரவளிக்கிறது. அடுத்த சில மாதங்களில் ரோஷ்னி திட்டத்தில், பிற மாவட்டங்களில் பகிர்ந்து கொள்ள சிறந்த நடைமுறைகள் உட்பட பாலம் பொருட்களை உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்று சமக்ர ஷிக்ஷா கேரளாவின் மாவட்ட திட்ட அலுவலர் ஜார்ஜ் கூறினார்.

"ரோஷ்னி திட்டத்தை அடுத்த ஆண்டு அல்லது அதற்கு மேலாகவோ, மாவட்டம் முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தால், அதை ஏன் மாநிலம் முழுவதும் செய்ய முடியாது என்று நான் கருதவில்லை" என்று எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் சுஹாஸ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.