லக்னோ: "நான் நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். நான் ஒவ்வொரு மாதமும் அங்கன்வாடியில் இருந்து உலர் உணவுகளைப் பெற வேண்டும். ஆனால் இந்த முறை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறைதான் உணவுப்பொருட்கள் கிடைத்தன. நான் எப்படி சமாளிப்பது?" என்று, லக்னோவில் உள்ள ஹபீப்பூர் கிராமத்தில் வசிக்கும் ரோஷ்னி ராவத், 27, ஜூன் மாதம், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். ரோஷ்னிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், நான்கு வயது மற்றும் ஒரு வயது குழந்தை, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.

பரவலான ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க, உத்தரப்பிரதேசத்தில் உலர் உணவுகள், அதன் 189,000 அங்கன்வாடி மையங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. அனுபூரக் புஷ்தஹார் அல்லது துணை ஊட்டச்சத்து என அழைக்கப்படும், இவை ஆறு மாதங்கள் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் 11 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம்பெண்களுக்கு வழங்கப்படுகிறது. குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்கும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளின் ஒரு பகுதியாக இது உள்ளது.

ராவத் ஒவ்வொரு மாதமும் அங்கன்வாடியில் இருந்து 1.5 கிலோ கோதுமை தாலியா, 1 கிலோ அரிசி, 1 கிலோ சனா பருப்பு (பிளந்த கொண்டைக்கடலை) மற்றும் 500 மில்லி சமையல் எண்ணெய் ஆகியவற்றைப் பெறுவதற்கு உரிமை பெற்றவர். இருப்பினும், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, ஜூன் மாதத்தில் ராவத் இந்த உணவுப் பொருட்களை பெற்றார்.

உத்தரப்பிரதேச பால் விகாஸ் சேவா ஏவம் புஷ்டஹர் விபாக் (UP BVSEPV) வழிகாட்டுதல்களின்படி, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் ஒவ்வொரு நாளும் 600 கலோரிகள் மற்றும் 20-25 கிராம் புரதத்தைப் பெற வேண்டும். இருப்பினும், பயனாளிகளுக்கு முறையாக உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால், இந்த தரநிலைகளை பூர்த்தி செய்வது கடினம்.


கடந்த 2019-21ல் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்பின்படி (NFHS-5), நாடு முழுவதும் 6-23 மாத வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 11% மட்டுமே "குறைந்தபட்ச ஏற்றுக்கொள்ளக்கூடிய உணவு" – உணவுப் பன்முகத்தன்மை மற்றும் குறைந்தபட்ச உணவு முறை ஆகியவற்றின் கலவை– பெறுகின்றனர். உத்தரப்பிரதேசத்தில், 6% குழந்தைகள் மட்டுமே குறைந்தபட்ச ஏற்றுக் கொள்ளக்கூடிய உணவைப் பெறுகிறார்கள்.

இருப்பினும், உத்தரப்பிரதேசத்தின் பல மாவட்டங்களில் – ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 39% வயதுக்குக் குறைவானவர்களாகவும், வயதுக்குட்பட்ட எடை குறைவாகவும் உள்ளனர்– அங்கன்வாடிகள் பெறும் ரேஷன்களி32%ன் எண்ணிக்கை மையங்களில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவாக உள்ளது என்று, பல மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

போதிய ரேஷன் கிடைக்காததால், பயனாளிகள் அவதி

எட்டு மாதங்களுக்கு முன், லக்னோவில் உள்ள ஹபீப்பூர் கிராமத்தில், 23 வயதான ரோமா யாதவ், ஸ்ரீஷ்டி என்ற குழந்தையைப் பெற்றெடுத்தார். அவர் பிறந்தபோது, ​​ஷ்ரிஷ்டி வெறும் 1.5 கிலோ எடையுடன் இருந்தது - உலக சுகாதார அமைப்பின் அளவுகோல்களின்படி (பிறக்கும் போது 2.5 கிலோவுக்கும் குறைவாக) குறைந்த எடையுடன் இருந்தது. எனவே, கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர் அவரை 'தீவிர ஊட்டச்சத்து குறைபாடு' பிரிவில் சேர்த்தார். அத்துடன், விதிமுறைகளின்படி, ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஸ்ரீஷ்டி 1.5 கிலோ கோதுமை தாலியா, 1.5 கிலோ அரிசி, 2 கிலோ உளுத்தம்பருப்பு மற்றும் 500 மில்லி சமையல் எண்ணெய் பெற ஆரம்பித்திருக்க வேண்டும்.


லக்னோவின் ஹபீப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரோமா யாதவ் தனது மகளுடன்.

இந்தியா ஸ்பெண்டிடம் யாதவ் கூறுகையில், "இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே நாங்கள் ரேஷன்களைப் பெற்றுள்ளோம்" என்றார். அங்கன்வாடி பணியாளர் கூறுகையில், "விநியோகத்திற்கு குறைவான ரேஷன்தான் கிடைக்கிறது. உண்மை என்னவென்று கடவுளுக்குத் தெரியும்" என்றார்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரேஷன் விநியோகம் சவாலாக உள்ளது

அங்கன்வாடி பணியாளர்கள் குறைந்த அளவு உலர் உணவுகளை பெறுவதாக கூறுகின்றனர். எனவே, பயனாளிகளுக்கு அதை எவ்வாறு விநியோகிப்பது என்பதை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும், மேலும் கிராமவாசிகளின் கோபத்தை அடிக்கடி சமாளிக்க வேண்டியுள்ளது.

"மக்கள் நியாயமற்ற முறையில் எங்களைக் குற்றம் சாட்டுகிறார்கள், மேலும் நாங்கள் அவர்களுக்கான உணவு ஒதுக்கீட்டை பறிக்கிறோம் என்று கூறுகிறார்கள். அது உண்மை இல்லை. நாங்கள் பெறும் அனைத்து ரேஷன்களையும் நாங்கள் விநியோகிக்கிறோம்," என்று லக்னோவின் ஹபிப்பூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர் ஊர்மிளா மவுரியா கூறினார்.

"மே மாதத்தில் 66 பேருக்கு ரேஷன் கிடைத்தது. எனக்கு கீழ் 100 பயனாளிகள் உள்ளனர். ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான 74 குழந்தைகள், 22 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் மற்றும் நான்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இதில் அடங்குவர். யாருக்கு உணவுப்பொருட்கள் கொடுப்பது?" என்றார்.


அங்கன்வாடி பயனாளிகளுக்கு உணவுப்பொருட்கள் விநியோகம் செய்வதற்காக, ஊர்மிளா, மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான உணவுப் பொருட்களை விநியோகித்தார். இதைச் செய்வதன் மூலம், எல்லா குடும்பங்களும் இன்னும் சில உணவுப் பொருட்களை பெறுவதை அவர் உறுதி செய்தார். பயனாளிகள் அவரிடம் அளவு பற்றி கேட்டபோது, ​​வினியோகிக்க குறைந்த அளவு உணவுப்பொருள் கிடைத்ததாகக் கூறினார்.

ஊர்மிளாவைப் போலவே, கோரக்பூரில் உள்ள சிடௌனி கிராமத்தில் அங்கன்வாடி ஊழியரான கீதா பாண்டேயும் மக்களுக்கு வழங்க வேண்டியதை விட குறைவான ரேஷன்களை விநியோகிக்க வேண்டியுள்ளது. அவர் பயனாளிகளில் பாதிப்பேருக்கு - அல்லது 12 கர்ப்பிணிப் பெண்களில் ஆறு பேருக்கும், ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரை உள்ள 60 குழந்தைகளில் 30 பேருக்கும், மூன்று வயது முதல் ஆறு வயது வரை உள்ள 48 குழந்தைகளில் 16 பேருக்கும் உணவுப்பொருட்களை பெறுகிறார்.

"நாங்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. நாங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவுப்பொருட்களை தேர்வு செய்து விநியோகிக்க வேண்டும்," என்று பாண்டே கூறினார். "ஒவ்வொரு முறையும், நாங்கள் அரசிடம் இருந்து குறைவான உணவுப்பொருட்களை பெறுகிறோம் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும்" என்றார்.

பயனாளிகளின் தரவு உள்ளீட்டில் சிக்கல்கள்

உத்தரப்பிரதேசத்தின் 180,000 அங்கன்வாடிகளில், கிட்டத்தட்ட 15 மில்லியன் பயனாளிகள், இந்த அங்கன்வாடி மையங்கள் மூலம் ஜூலை 2021 இல் உலர் உணவுகளைப் பெற்றனர் என்று, உத்தரபிரதேச பால் விகாஸ் சேவா ஏவம் புஷ்தஹர் விபாக் மூலம் இந்தியா ஸ்பெண்டிற்கு வழங்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, எனவே ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும், புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டு தகுதியற்றவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.


அங்கன்வாடி மையத்தில் இருந்து கூடுதல் சத்துணவு வழங்கப்பட வேண்டும்.

"போதுமான உணவுப்பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும், நாங்கள் நிலைமையைக் கணக்கிட்டு, பயனாளிகளின் பட்டியலை எங்களது வினியோகஸ்தர்களுக்கு வழங்குகிறோம்" என்று, உத்தரப்பிரதேச பால் விகாஸ் சேவா ஏவம் புஷ்டஹர் விபாக் (UP BVSEPV) இயக்குனர் சரிகா மோகன் கூறினார். "சில மாவட்ட திட்ட அலுவலர்கள், டேட்டா என்ட்ரி பணியை சீரியஸாக எடுத்துக் கொள்ளாததை நாங்கள் கவனித்துள்ளோம், அதனால்தான் நாங்கள் இந்த சிக்கலை எதிர்கொள்கிறோம்" என்றார். மாவட்டங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை புதுப்பிக்குமாறு திட்ட அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால், பலமுறை கோரிக்கை விடுத்தும், சில மாவட்ட திட்ட அலுவலர்கள் அவ்வாறு செய்வதில்லை, இந்த பழைய பதிவுகளே பிரச்னைக்கு காரணம் என அவர் கூறினார்.

பயனாளிகள் இன்னும் போஷாஹர் அலகுகளுக்காக காத்திருக்கிறார்கள்

முன்பெல்லாம் அங்கன்வாடி மையங்களில், பஞ்சிரி என்றழைக்கப்படும் தானியங்களின் கலவையை குழந்தைகள் பெறுவார்கள். ஆனால் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் முறைகேடுகள் நடந்ததால், செப்டம்பர் 2020 இல், உத்தரப்பிரதேச பால் விகாஸ் சேவா ஏவம் புஷ்டஹர் விபாக் (UP BVSEPV) இந்த பஞ்சிரியை விநியோகிக்கும் நிறுவனங்களின் 29 ஆண்டுகால ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, சுயஉதவி குழுக்களின் பெண்களின் உதவியுடன் உலர் உணவுகளை விநியோகிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த புதிய ஏற்பாட்டின்படி, பல்வேறு மாவட்டங்களில் போஷாஹர் பிரிவுகள் அமைத்து, தாளி தயாரித்து அங்கன்வாடிகளுக்கு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இவை அமைக்கப்படும் வரை, அங்கன்வாடிகள் மூலம் உலர் உணவுகளை விநியோகிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், போஷாஹர் அலகுகள் இன்னும் கட்டுமானத்தில் உள்ளன. உத்தரப்பிரதேச மாநில வாழ்வாதார இயக்கம் 43 மாவட்டங்களில் 204 அலகுகளை அமைக்க இருந்தது. இந்தியா ஸ்பெண்ட் செப்டம்பர் 2021 வெளியிட்ட கட்டுரையின்படி, இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பிறகு, ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் இரண்டு அலகுகள் மட்டுமே அமைக்கப்பட்டன.

உத்தரப்பிரதேச பால் விகாஸ் சேவா ஏவம் புஷ்டஹர் விபாக் (UP BVSEPV) இயக்குனர் சரிகா மோகன், செப்டம்பர் 2021 இல், 43 மாவட்டங்களில் போஷாஹர் விநியோகம் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தொடங்கும் என்று எங்களிடம் கூறியிருந்தார். இருப்பினும், ஜூலை 2022 இல், நாங்கள் அவரைத் தொடர்பு கொண்டபோது, ​​போஷாஹர் யூனிட்களை செயல்படுத்துவதற்கு உத்தரப் பிரதேச மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (UPSRLM) பொறுப்பேற்றுள்ளது என்று அவர் கூறினார். வழங்கப்பட்ட தகவலின்படி, ஜூன் மாத இறுதிக்குள் 34 அலகுகள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச பால் விகாஸ் சேவா ஏவம் புஷ்டஹர் விபாக் போஷாஹர் யூனிட் திட்டத்தின் தலைவரான அடீல் அப்பாஸ், ஜூலை 2022 இல் இந்தியா பெண்டிடம் கூறினார்: "முப்பத்தி நான்கு போஷாஹர் அலகுகள் தயாராக உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் அவை செயல்பாட்டுக்கு வரும். தற்போது, ​​ரேஷன் கொள்முதல் செய்து, பெண்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.

(இந்தக் கட்டுரையின் பதிப்பு முதலில் ஜூன் 2022 இல், இந்தியா ஸ்பெண்ட் ஹிந்தியில் வெளிவந்தது).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.