லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டத்தில் உள்ள சமுதாய சுகாதார மையத்தில் (CHC), ஒரு வியாழன் அன்று மதியம் 1 மணியளவில் பல பெண்கள் கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும் நிரந்தர கருத்தடை, தற்காலிக கருத்தடை அல்லது ஃபலோபியன் குழாய்களை மூடுவதற்கான ஒரு செயல்முறைக்கு உட்படுத்த தங்கள் முறைக்காக காத்திருந்தனர். உத்தரபிரதேசத்தில் உள்ள பொது சுகாதார மையங்கள் முழுவதும், வியாழன் கிழமைகளில் கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் ஆண்களுக்கான வாஸெக்டோமிகள், இவை விந்தணுக்களை தடுக்கும்--ஆகிய இரண்டு கருத்தடை முறைகள் செய்யப்படுகின்றன.

இம்மையங்களுக்கு பெண்களுடன் சென்ற ஆண்கள் இருந்தனர், ஆனால் மஹோபாவில் உள்ள ஜெய்த்பூர் சமுதாய சுகாதார மையத்திற்கு, இந்தியா ஸ்பெண்ட் தரப்பில் சென்றபோது, அங்கிருந்த ஆண்கள் யாரும் தங்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள காத்திருக்கவில்லை.

பர்கேடா கிராமத்தில் வசிக்கும் ராஜேஷ் குமார் (38), ஏன் வாசெக்டமியை தேர்வு செய்யவில்லை, அவரது மனைவி கொடீயா, ஏன் கருத்தடை செய்யப்பட்டார்? இந்த கேள்வியை கேட்டதும், பின்னால் அமர்ந்திருந்த சில பெண்கள் சிரித்தனர். நீண்ட மவுனத்திற்கு பிறகு ராஜேஷ் சொன்னர்: "எனக்கு பயமாக இருக்கிறது".

கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடையில், ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்புக்காக நாடு முழுவதும் கணக்கெடுக்கப்பட்ட பெண்களில், கிட்டத்தட்ட 38% பேர் கருத்தடை செய்யப்பட்டுள்ளனர், இதுவே ஆண்களின் வாசெக்டமி கருத்தடை முறையானது வெறும் 0.3% என்றளவில் உள்ளது. 0.1% ஆண்களுடன் ஒப்பிடுகையில், உத்தரபிரதேசத்தில் கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் 17% பேர் கருத்தடை செய்யப்பட்டுள்ளனர்.

ஏன் ஆண்கள் வாஸெக்டமிக்கு பயப்படுகிறார்கள்?

"நாங்கள் ஒரு நாளில் 30 குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகளை செய்கிறோம், அவர்கள் அனைவரும் பெண்கள்" என்று ஜெய்த்பூர் சமுதாய சுகாதார மையத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் பி.கே. சிங் கூறினார் . "குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வை ஏற்படுத்த நிறைய பணம் செலவிடப்படுகிறது, ஆனால் ஆண்கள் இன்னும் தயங்குகிறார்கள். 2020 ஆம் ஆண்டில், 545 பெண்கள் எங்களிடம் வந்தபோது, ​​​​மூன்று ஆண்கள் மட்டுமே வாஸெக்டமி கருத்தடை முறையை யை தேர்வு செய்தனர்" என்றார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில், ஜெய்த்பூரில் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைகளைத் தேர்ந்தெடுத்த ஆண்களின் எண்ணிக்கை, மாவட்டத்தில் உள்ள அனைத்து சமுதாய சுகாதார மையங்களில் அதிகமாக இருந்தது என்று, சிங் கூறினார்.

அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்கள், அல்லது ஆஷாக்கள், ஆண்களையும் பெண்களையும் கருத்தடை செய்வதை ஊக்குவிப்பதற்காக வீடுகளுக்குச் செல்லும்போது, ​​ஆண்கள் பெரும்பாலும் தயக்கம் காட்டுவதை அவர்கள் காண்கிறார்கள். "நாங்கள் ஆண்களையும் ஊக்குவிக்கிறோம், ஆனால் பெண்கள்தான் இந்த நடைமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று, ஆண்கள் எங்களிடம் திட்டவட்டமாக சொல்கிறார்கள்" என்று, மஹோபாவில் உள்ள லமோரா கிராமத்தைச் சேர்ந்த ஆஷா பணியாளர் ராம் சதி கூறினார். "பெண்கள் கூட ஆண்களைத் தொந்தரவு செய்ய விரும்பாததால், அதைத் தேர்ந்தெடுப்பதாகச் சொல்கிறார்கள்" என்றார்.

செயல்முறைக்கு பின்னால் உள்ள கட்டுக்கதைகள் ஒரு காரணம். "குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைகளுக்குப் பிறகு, ஆண்கள் பலவீனம் அடைவார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது. இது ஒரு எளிய செயல்முறை என்று நாங்கள் அவர்களிடம் கூறுகிறோம், அவர்கள் தையல் போட வேண்டியதில்லை, ஆனாலு இன்னும் அவர்கள் தயங்குகிறார்கள்" என்று அகோனா கிராமத்தில் வசிக்கும் ஆஷா பணியாளர் ஓம்வதி கூறினார். "பெண்கள் கூட, தங்கள் கணவர்கள் அதைத் தேர்ந்தெடுத்தால் பலவீனமாகிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள்" என்றார்.

குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைகளுக்காக தங்கள் மனைவிகளுடன் வந்த ஆண்களிடம் நாங்கள் பேசியபோது, ​​அவர்கள் ஓம்வதியின் வார்த்தைகளை எதிரொலித்தனர். "இதைத் தேர்ந்தெடுத்த ஒரு மனிதனையும் எனக்குத் தெரியாது, அதனால்தான் நான் பயப்படுகிறேன். பெரும்பாலும் பெண்கள்தான் இந்த நடைமுறைக்கு ஆளாகிறார்கள் என்பதால், என் மனைவியை அதற்குச் செல்லச் சொன்னேன்,"என்று, 42 வயதான மனோஜ் கூறினார். "இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆண்கள் பலவீனமாகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்" என்றார். அந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டபோது, ​​"எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள்" என்றார்.

குடும்பக் கட்டுப்பாடு நடைமுறையைத் தேர்வு செய்ய ஆண்களை ஊக்குவிக்க, அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் நஸ்பந்தி பக்வாடா (வாசெக்டமி விழிப்புணர்வுத் திட்டம்) நடத்துகிறது. இந்த முயற்சிகளில் ஆண்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டாலும் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

பெண்களுக்கு வசதிகள் குறைவு

கடந்த 2021 டிசம்பரில், குளிர்ந்த குளிர்கால இரவில், உத்தரபிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள மெஹ்ரானி சமுதாய சுகாதார மையத்தில், பல பெண்கள் மெல்லிய மெத்தைகளில் தரையில் படுத்துக் கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் போதுமான ஸ்ட்ரெச்சர்கள் இல்லாததால், சில குடும்ப உறுப்பினர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்களைத் தங்கள் முதுகில் சுமந்தனர்.

"சமுதாய சுகாதார மையத்தில் போதிய இடவசதி இல்லை. போதிய படுக்கைகள் இல்லை, அதனால் நோயாளிகளுக்கு மெத்தை கொடுக்கிறோம்," என்றார சமுதாய சுகாதார மையத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் எம்.பி. சிங். "செக்-அப்களுக்குப் பிறகு வீட்டிற்குச் செல்லுமாறு நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம், அவ்வப்போது அவர்களைச் சோதனைக்கு அழைக்கிறோம்" என்றார்.

குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைகளுக்குப் பிறகு பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய கவனிப்பு கிடைப்பதில்லை. லலித்பூரில் உள்ள பிர்கா சிஎச்சியில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண்கள் மெத்தையில் தரையில் படுத்துக் கொண்டிருந்தனர். சமுதாய சுகாதார மையத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் சத்ரபால் சிங் கூறியதாவது: "நாங்கள் ஒரு நாளில் 30 அறுவை சிகிச்சைகளை செய்கிறோம். ஆனால், எங்களிடம் வெறும் 10-12 படுக்கைகள் மற்றும் மெத்தைகளே உள்ளன" என்றார்.

கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பிறகு பெண்கள், சமுதாய சுகாதார மையங்களில் சில நாட்கள் தங்க வேண்டுமா என்று கேட்டபோது, ​​அவர் கூறினார்: "குறைந்தது ஒரு நாள்/இரவு அவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது, ஆனால் எங்களிடம் போதுமான படுக்கைகள் இல்லை. தவிர, அவர்களே சமுதாய சுகாதார மையத்தில் தங்குவது வசதியாக இல்லை; எனவே, வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பினையே தேர்வு செய்கிறார்கள்" என்றார்.

குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஆண்களிடையே குறைவு

இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரங்கள், அதன் பொது சுகாதார அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத் திட்டங்கள் ஆகிய இரண்டாலும் நடத்தப்படும், கிட்டத்தட்ட முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்டது, பெண்கள் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையம் (ICRW) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 2020 இல் எங்களது கட்டுரையின்படி, ஒரு தம்பதியருக்கு எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், எப்போது வேண்டும் என்பதை ஆண்களே தீர்மானிக்கிறார்கள்.

54% ஆண்கள் தங்கள் மனைவிகள் தங்கள் அனுமதியின்றி கருத்தடை பயன்படுத்த முடியாது என்றும் ஐந்தில் ஒரு பகுதியினர் கர்ப்பத்தைத் தவிர்ப்பது ஒரு பெண்ணின் பொறுப்பு என்று நம்புகிறார்கள் - 31% பெண்கள் இதை ஒப்புக்கொண்டனர் - ICRW ஆல் நடத்தப்பட்ட ஆண்மை பற்றிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 2014 இல் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம்.

"குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைகளைத் தேர்ந்தெடுப்பதில் குறைவான ஆண்கள் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கிராமங்களில் ஆண் சுகாதாரப் பணியாளர்கள் அதிகம் இல்லை. ஆஷா பணியாளர்கள் மற்றும் ஏஎன்எம்கள் [துணை செவிலியர் மருத்துவச்சிகள்] முதன்மையான கவனம் பெண்கள். ஆண்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, குறைந்த எண்ணிக்கையிலான வாசெக்டோமிகளுக்கு சுகாதார அதிகாரிகள்/அதிகாரிகள் பொறுப்பேற்க மாட்டார்கள். சுகாதார உரிமைகளுக்காகப் பணியாற்றும் சிவில் சமூக அமைப்புகளின் வலையமைப்பான ஜன் ஸ்வஸ்த்ய அபியானின் தேசிய இணை அழைப்பாளர் அமுல்யா நிதி கூறினார். "நமது அரசியல் சட்டத்தில் ஆண், பெண் பாகுபாடு இருக்கக் கூடாது என்று எழுதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அத்தகைய பாகுபாடு நடக்கும் இடங்களில் தீர்வுகளைக் காண யாரும் கவலைப்படுவதில்லை".

கிராம துணை மையங்களுக்கு 157,000 ஆண் சுகாதார பணியாளர்கள் தேவை. இருப்பினும், 82,857 பணியிடங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டு, 59,348 நிரப்பப்பட்டு, 29,421 காலியாக உள்ளன என்று, பிப்ரவரி 5, 2021 அன்று மக்களவையில் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

மாறாக, இந்தத் துறையில் தேவையானதை விட அதிகமான பெண் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர்: 205,000 பெண் சுகாதாரப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர், அப்போது தேவை 157,000 ஆகவும், அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 183,936 ஆகவும் இருந்தன.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.