புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டம் (ஸ்வச் பாரத் மிஷன் -எஸ்.பி.எம்) மூலம் கட்டப்படும் புதிய கழிப்பறைகள், கையால் மனித கழிவுகளை அகற்றும் முறை உயரக்கூடும்; இது ஒரு களங்கப்படுத்தும் மற்றும் அபாயகரமான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பிரச்சாரத்தை தடுப்பதாக, புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

"துப்புரவுப் பணிகளை பற்றிய கவலைகள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. தற்போது தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பல கழிப்பறைகள், அவ்வப்போது கழிவுகளை அகற்றுதல் மற்றும் கழிவுகளை சுத்திகரிக்கும் தொழில்நுட்பங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன" என்று, Health, Safety and Dignity of Sanitation Workers: An Initial Assessment என்ற 2019 அறிக்கை தெரிவிக்கிறது. இது உலக சுகாதார அமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு, உலக வங்கி மற்றும் வாட்டர் எய்ட் ஆகியவற்றால் வெளியிடப்பட்டது. இந்த சூழல், "கையால் கழிவு அகற்றும் வெறுக்கத்தக்க அமைப்பை" விரிவுபடுத்தி "துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பாதிப்பை" அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில் 1,686 கையால் கழிவு அகற்றுவோரும் உள்ளனர். இவர்களில் 423 செப்டிக்-டேங்க் துப்புரவாளர்கள், 286 ஓப்பன்-டிரைன் துப்புரவாளர்கள் மற்றும் 956 உலர்கழிவு துப்புரவாளர்கள் உள்ளனர்; அவர்களில் 92.35% பெண்கள். இத்தொழிலாளர்களில் 36% பேர் வன்முறையை அனுபவிப்பதாகவும், 50% பேர் தீண்டாமை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

இந்தியாவில் கையால் மனிதக்கழிவு அள்ளும் பணித்தடை மற்றும் உலர் கழிவறைகள் (தடை) சட்டம் 1993இன் கீழ், துப்புரவுத் தொழிலாளர்களால் மனித கழிவுகளை நேரடியாக கையாள்வது தடை செய்யப்பட்டுள்ளது; உலர்ந்த கழிவறைகளை கட்டுவது, பராமரிப்பதற்கு தடை விதித்தது. ஆனால், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் ஜூலை 2019 அன்று அளித்த பதிலில், 18 மாநிலங்களில் உள்ள 170 மாவட்டங்களில் 54,130 கையால் மனிதக்கழிவு அகற்றுவோர் உள்ளதாக தெரிவித்தது.

தூய்மை இந்தியா திட்டத்தில் 9.5 கோடிகழிப்பறைகளை கட்டப்பட்டதாகவும், 93.1% குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அவ்வப்போது கழிப்பறை தொட்டியை காலி செய்ய வேண்டிய மற்றும் மலக்கழிவுகளை சுத்திகரித்து கையால் அகற்ற வேண்டிய தொழில் நுட்பத்தில் பெரும்பாலானவை கட்டப்பட்டுள்ளதாக, புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

தூய்மை இந்தியா திட்ட பிரச்சாரத்தில், ‘இரட்டை குழி’ கழிப்பறை தொட்டி தொழில்நுட்பத்தை அரசு ஊக்குவிக்கிறது; இது மலக்கழிவை மனிதர்கள் கையாளுவதற்கான தேவையை, ஒரு உர அறைக்கு நகர்த்துவதன் மூலம் தவிர்க்கிறது. “கடந்த ஆண்டு (2017) கட்டப்பட்ட அனைத்து கழிப்பறைகளிலும் சுமார் 90% இரட்டை குழி கழிப்பறைகள்” என்று குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் பரமேஸ்வரன் ஐயர், 59, அக்டோபர் 2018 இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

எவ்வாறாயினும், தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகளில் 13%- க்கும் அதிகமானவை இரட்டை குழிகளைக் கொண்டிருக்கவில்லை; 38% பேர் தேக்கும் குழிகளுடனான செப்டிக் தொட்டி; 20% ஒற்றை குழியை (இதில் கழிவு அகற்ற துப்புரவாளர் தேவை) கொண்டிருப்பதாக, பேக்ட்செக்கர்.இன் (FactChecker.in) பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இது, தேசிய வருடாந்திர கிராமப்புற சுகாதார கணக்கெடுப்பு - 2017-18 இன் மூலத்தரவை கொண்டு, அக்டோபர் 2018 இல் வெளியிடப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பெரும்பாலும் அரசால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சுயாதீன சரிபார்ப்பு கணக்கெடுப்பாகும். இது, 6,136 கிராமங்களில் 92,040 வீடுகளை ஆய்வு செய்தது.

"அவர் (பரமேஸ்வரன் ஐயர்) 85% இரட்டைக் குழி கழிப்பறை அல்ல என்பதையும் அறிந்திருக்கிறார்," என்று 53 வயதான பெஸ்வாடா வில்சன், அக்டோபர் 2019 இல் இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில் கூறினார். இவர், கையால் கழிவு அகற்றும் முறையை ஒழிக்கவும், துப்புரவாளர்களின் மறுவாழ்ய்வுக்காகவும் செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பான சஃபாய் கர்மாச்சாரி அந்தோலனின் தேசிய அழைப்பாளர் ஆவார். இந்திய காலநிலை சூழலில் இரட்டை குழி கழிப்பறைகள் கூட சரிவர இயங்காது என்று அவர் கூறினார்.

கழிவுநீர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளுக்கு கூட துப்புரவு சங்கிலியின் பிந்தைய கட்டங்களில் கையால் சுத்தம் செய்பவர் தேவைப்படுகிறார் என்று சுதாரக் ஓல்வே கூறினார்; இவர், இந்தியா முழுவதும் கையால் கழிவு அகற்றுவோரின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியதற்காக விருது பெற்ற புகைப்பட பத்திரிகையாளர்.

இந்தியாவின் நகர்ப்புற வீடுகளில் 56.4% க்கும் அதிகமான (37.7 கோடி பேர் வசிக்கின்றனர்), கழிப்பறைகள் கழிவுநீர் அமைப்புடன் இணைக்கப்படவில்லை; 83.3 கோடி மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களில் 36.7% வடிகால் வசதியே உள்ளது என, சமீபத்திய தரவான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் 2017 அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், நகர்ப்புறங்களில் உற்பத்தியாகும் கழிவுநீரில் 37% மட்டுமே சுத்திகரிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.

"நாம் இன்னும் கையால் கழிவு அகற்றுவதை ஒழிப்பது; அவர்களுக்கான மறுவாழ்வு மூலம் வாழ்க்கையை மாற்றியமைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்," என்ற ஓல்வே "தூய்மை இந்தியா திட்டம் மூலம் கட்டப்பட்ட கழிப்பறைகளை சுத்தம் செய்ய, நாம் இன்னொரு தலைமுறை கையால் கழிவு அகற்றும் துப்புரவாளர்களை உருவாக்க தேவையில்லை" என்றார்.

முகமின்மை மற்றும் புறக்கணிப்பு

நடப்பு 2019 ஆம் ஆண்டு ஆய்வுக்காக கணக்கெடுக்கப்பட்ட கையால் கழிவு அகற்றுவோரில் பெரும்பான்மையானவர்கள் அரசு திட்டங்களுக்கு வரம்புடன் கூடிய அணுகலை கொண்டிருந்தனர். மறுவாழ்வு, மாற்று வேலைவாய்ப்பு மற்றும் குழந்தைகளின் கல்வி தொடர்பான சலுகைகளை பெற அவர்கள் தவறவிட்டனர். ஏனெனில் அவர்களின் பெயர் அரசு ஆய்வுகளில் சேர்க்கப்படவில்லை என்கிறது அறிக்கை.

கடந்த 2013இல், கையால் மனிதக்கழிவு அள்ளும் பணித்தடை சட்டம் - 2013 (பிஇஎம்எஸ்ஆர்) மாற்றியமைக்கப்பட்டு, பெரும்பாலான அபாயகரமான துப்புரவுப்பணிகள் அதில் சேர்க்கபப்ட்டு அதன் வரையறை விரிவுபடுத்தப்பட்டது. கையால் மனிதக்கழிவு அள்ளும் பணியில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பது, அவர்களின் விடுதலை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான பணியையும், இது அரசுக்கு கட்டாயப்படுத்தியது.

ஒரு வருடம் கழித்து, 2014 இல், உச்சநீதிமன்றம் கையால் மனிதக்கழிவு அள்ளுவது சர்வதேச மனித உரிமை கடமைகளை மீறுவதாகும் என்று தீர்ப்பு அளித்தது."95%-க்கும் அதிகமானவர்கள் தலித்துகள் (பட்டியலின மக்கள்), அவர்களின்" பாரம்பரிய தொழில்" என்பதன் கீழ் இந்த இழிவான பணியை மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்," என்று நீதிமன்றம் கூறியது.

துப்புரவுத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது குறித்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெளிவான உத்தரவுகளுடன், சாக்கடைகள் மற்றும் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான நிலையான இயக்க முறைமையை (எஸ்ஓபி) 2018 இல் அரசு அறிமுகம் செய்தது. ஆகஸ்ட் 2019 இல், அவசரகால மறுமொழி துப்புரவு பிரிவு (ஈ.ஆர்.எஸ்.யூ) என்ற அமைப்பு, நெருக்கடி நேரங்களில் உரிய உடனடி நடவடிக்கைகள் எடுக்க அமைக்கப்பட்டது. ஆனால் இதற்கான உத்தி இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

இத்தகைய பிரச்சாரங்கள் இருந்தபோதும், கையால் மனித கழிவு அள்ளும் பணியை தங்கள் உயிரைப் பணயம் வைத்து துப்புரவாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்; இதை பல களநிலவர கட்டுரைகள் (இங்கே, இங்கே மற்றும் இங்கே) உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அவ்வாறு இருப்பதை பல மாநிலங்கள் மறுக்கின்றன. "நாட்டில் துப்புரவுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, அன்றாட வேலைகளில் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாதிப்புகள் மற்றும் ஆபத்துகளையும்விட மேலானது, அவர்களின் பணியை அரசுகள் கூட கணக்கிடவில்லை என்பது தான் உண்மை" அறிக்கை கூறியது.

கையால் மனிதக்கழிவு அள்ளும் பணியில் ஈடுபடுவோர் மற்றும் வேலையின் போது ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் முரண்படுகின்றன. இந்தியா முழுவதும் பல்வேறு நகரப்பகுதிகளில் 50 லட்சம் துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்று 2018 ஆம் ஆண்டு உத்திகள் மற்றும் கொள்கை ஆலோசனை நிறுவனமான டால்பெர்க் அசோசியேட்ஸ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறந்த வாழ்க்கை மற்றும் பணிச்சூழலை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன; புனர்வாழ்வு, குடும்ப நலன் மற்றும் பணியில் இருக்கும்போது மரணம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்குதல் ஆகியன இதில் அடங்கும். ஆனால் நம்பகமான தரவு இல்லாதது அவற்றின் செயல்பாட்டை பாதிக்கிறது.

பணியின் போது உயிரிழக்கும் கையால் கழிவு அகற்றும் துப்புரவாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள சிக்கல்களை கவனிக்க வேண்டும். இந்தியாவில், ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கு மூன்று துப்புரவுத் தொழிலாளர்கள் வேலையின் போது இறக்கின்றனர். கடந்த 1993 முதல் பணியில் இறந்த அனைத்து கையால் மனிதக்கழிவு அள்ளுவோரை அடையாளம் கண்டு, ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுகளுக்கு 2014 ஆம் ஆண்டு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கையால் மனிதக்கழிவு அள்ளும் துப்புரவாளர்களின் குறைகளை தீர்க்கும் சட்டபூர்வமான அமைப்பான தேசிய சஃபை கரம்ச்சாரி ஆணையம், பணியின் போது இறப்பு துப்புரவாளர்கள் குறித்த தகவல்களை மாநில அரசுகளிடம் கேட்டது. இந்த தரவுகளில், இறந்தவரின் பெயர்கள், அவர்கள் இறந்த தேதி மற்றும் இடம், இழப்பீடு வழங்கப்பட்ட நபரின் பெயர், இழப்பீட்டுத் தொகை மற்றும் பணம் செலுத்தும் முறை ஆகியவை அடங்கும். பலமுறை நினைவூட்டப்பட்ட பிறகும் கூட, மாநிலங்கள் இந்தத் தரவை முழுவதுமாக பகிர்ந்து கொள்ளவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

மொத்தம் உள்ளவற்றில் 20 மாநிலங்கள் மட்டுமே இந்த தரவை ஓரளவு பகிர்ந்துள்ளன; மற்றவை இதற்கு பதிலளிக்கவில்லை என்று, செய்தி இணையதளமான தி வயர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனு குறித்து நவம்பர் 18, 2019 அன்று கட்டுரை தெரிவித்தது. இதுபோன்ற பல மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டும் ஆர்வலர்களால் மாநில அரசுகள் குறிப்பிடும் துப்புரவாளர் இறப்பு குறித்த எண்ணிக்கையும் சர்ச்சைக்குரியது என்கின்றனர். இழப்பீடு வழங்கிய மாநிலங்கள் கூட, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக ரூ.10 லட்சத்துக்கும் குறைவாகவே வழங்கியுள்ளன.

குறைந்த ஆயுள், நோய் மற்றும் இறப்பு ஆபத்து

துப்புரவுத் தொழிலாளர்கள் தங்களது வேலையில் உள்ள அன்றாட அபாயங்களால் வாழ்நாளை குறைத்துக் கொண்டுள்ளனர். சராசரி மக்களைவிட அவர்களுக்கு ஆயுட்காலம் குறைவாகவே உள்ளது. அவர்களில் சிலர் தான் 60 வயதுக்கு அப்பால் வாழ்கின்றனர்; அத்துடன், 50 வயதுக்கு மேல் வாழ்வோரின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது என, 2005 இல் டெல்லியில் 200 கழிவுநீர் தொழிலாளர்களிடம் கல்வி மற்றும் தொடர்பு மையம் (சி.இ.சி) நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.

டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் (டிஐஎஸ்எஸ்) 2015இல் ஆய்வுக்காக கிரேட்டர் மும்பை மாநகராட்சியின் (எம்சிஜிஎம்) தொழிலாளர்களை நேர்காணல் செய்ததில், அவர்களில் 69.1% பேர் முகமூடி மற்றும் கையுறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பெற்றிருந்ததாக தெரிவித்தனர். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அதை பயன்படுத்தவில்லை; ஏனெனில் அது தரமற்றது மற்றும் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லாதிருந்தது தான்.

சாக்கடைகள் மற்றும் செப்டிக் டாங்குகள், அம்மோனியா, கார்பன் மோனாக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களின் அறைகளாகும்; இதன் நேரடி முடிவு, நினைவிழப்பு அல்லது இறப்பை ஏற்படுத்துகிறது. எண்ணற்ற துப்புரவு தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் நோய்த்தொற்று மற்றும் காயங்களுக்கு ஆளாகிறார்கள். இருதய சிதைவு, தசைக்கூட்டு கோளாறுகள், நோய்த்தொற்றுகள், மஞ்சள் காமாலை, தோல் பிரச்சினைகள் மற்றும் சுவாச கோளாறு போன்றவை ஏற்படும் அபாயங்கள் உள்ளன.

"எந்த நாட்டிலும், மக்களை இறக்கச்செய்ய வாயு அறைகளுக்கு அனுப்பப்படுவதில்லை" என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 18, 2019 அன்று காட்டமாக கூறியது. "ஒவ்வொரு மாதமும் நான்கு முதல் ஐந்து பேர் கையால் கழிவு அள்ளும் போது தங்கள் உயிரை இழக்கின்றனர்" என்றது நீதிமன்றம்.

கையால் மனிதக்கழிவு அள்ளுவோரின் போராட்டம் ஒரு தனிநபருக்கானது மட்டுமல்ல; துப்புரவு பணிகளுடன் தொடர்புடைய களங்கம், அதன் உடல்நல விளைவுகள் மற்றும் இறப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பங்கள் போராடுகின்றன.

தெற்கு பீகாரின் ரோதாஸ் மாவட்டம் டெஹ்ரி-ஆன்-சோனில் உள்ள உலர்ந்த கழிவறைகளை சுத்தம் செய்யும் 58 வயதான மீனாதேவி, “ஆரம்பத்தில், எனக்கு குமட்டல் ஏற்பட்டது” என்றார். அவரது மாமியார் கூட உலர்ந்த கழிவறைகளை சுத்தம் செய்து, அந்த வேலையின் போது இறந்தவர். “நான் இப்பணிக்கு தயாராக இல்லை. அந்த வேலையுடன் இணைந்திருக்கும் களங்கம் காரணமாக வேலை செய்ய வெட்கப்பட்டேன். ஆனால் இப்போது நான் துர்நாற்றத்திற்கு பழக்கப்பட்டு விட்டேன். வறுமை வேறு வழியில்லாமல் எல்லாவற்றையும் ஏற்கச் செய்கிறது. நாம் பாகுபாட்டை எதிர்கொண்டாலும், வயிற்றுக்கு உணவளிக்க வேறு என்ன செய்ய முடியும்?” என்றார்.

கையால் மனிதக்கழிவு அகற்றுவோரின் மறுவாழ்வு சுய வேலைவாய்ப்பு திட்டத்திற்கான (எஸ்ஆர்எம்எஸ்) மத்திய பட்ஜெட் ஒதுக்கீட்டில், 2013-14 மற்றும் 2018-19 க்கு இடையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கிடைக்கக்கூடிய பட்ஜெட் நிதிகூட முறையாக, உகந்த வகையில் பயன்படுத்தப்படவில்லை.

சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கான (எம்.எஸ்.ஜே.இ) மொத்த பட்ஜெட் ரூ .6,908 கோடியில் இருந்து 2017-18இல் எஸ்ஆர்எம்எஸ்-க்கு ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டது. இது, 2013-14ல் ரூ.70 கோடி என்ற ஒதுக்கீட்டில் 93% குறைவு என, கொள்கை ஆராய்ச்சி சிந்தனை மையமான அக்கவுண்டபிளிட்டி இனிஷியேடிவ் ஆய்வு கூறியது.

நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பதோடு, திட்டத்தின் கீழ் 2014-15 முதல் 2017-18 வரை ரூ. 56.12 கோடி மட்டுமே இத்திட்டத்தின் கீழ் செலவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 2017 நிலவரப்படி, கழிவுநீர் சுத்தம் செய்யும் போது 323 இறப்புகள் பதிவாகியுள்ளன; ஆனால், ரூ.10 லட்சம் இழப்பீடு 63% அல்லது 204 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

மோசமான ஒன்பது நாடுகள்

ஆய்வில், துப்புரவுத் தொழிலாளர்கள் மிக மோசமான பணிச்சூழலை எதிர்கொள்ளும் ஒன்பது நாடுகளில் இந்தியாவும் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் வங்கதேசம், பொலிவியா, புர்கினா பாசோ, ஹைதி, கென்யா, செனகல், தென்னாப்பிரிக்கா மற்றும் உகாண்டா அடங்கும்.

பல அளவுருக்களில், இந்த நாடுகளில் இந்தியா மிக மோசமானதாக உள்ளது. கையால் மனித கழிவுகளை அள்ளும் துப்புரவுப்பணிகள் இந்திய அரசின் கொள்கைகள் அல்லது உத்திகளில் கூட ஒப்புக் கொள்ளப்படவில்லை; ஆனால், , அது வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவில் இருப்பதாக, அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் மூன்றாம் தரப்பு துணை ஒப்பந்தம் செய்தால் கூட, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைப்பதில்லை; அதே நேரத்தில் இது தென்னாப்பிரிக்காவில் கிடைக்கிறது.

இந்தியாவில், தரமான இயக்க நடைமுறைகள் அல்லது துப்புரவு தொடர்பான வழிகாட்டுதல்கள் இருப்பதை நிரூபிக்க எந்தவொரு ஆதாரத்தையும் இந்த அறிக்கையால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரம் இவை தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும்; ஓரளவு வங்கதேசம், பொலிவியா, ஹைதி மற்றும் கென்யாவிலும் உள்ளன.

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மோசமான பணிச்சூழல் கொண்ட 9 நாடுகளில் இந்தியா

Source: Health, Safety and Dignity of Sanitation Workers

உலக மக்கள்தொகையில் 45% பேருக்கு மட்டுமே தனிப்பட்ட கழிப்பறை அணுகும் வசதி உள்ளது. அங்கு மனிதக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த முடியும். 200 கோடி மக்கள் அடிப்படை கழிப்பிட சேவை வசதியின்றி உள்ளனர். அவர்கள் திறந்தவெளியில் மலம் கழித்தல், குழிகளைப் பயன்படுத்துதல் அல்லது ஆறுகள் அல்லது ஏரிகளை பயன்படுத்துதல் அல்லது பல வீடுகளில் உள்ள கழிப்பறையை பகிர்ந்து கொள்வது போன்றவற்றை செய்வதாக, கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2000 - 2017 ஆம் ஆண்டுக்கு இடையில், 210 கோடி மக்கள் அடிப்படை துப்புரவு சேவையை அணுகினர்; இதன் விளைவாக உலகளாவிய திறந்தவெளி மலம் கழிப்போர் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. எண்ணிக்கை மேம்பட்டு வருகின்றன; ஆனால் இந்த முன்னேற்ற வேகம் போதுமானதாக இருக்காது. "தற்போதைய முன்னேற்ற விகிதத்திலேயே சென்றால் ஆப்பிரிக்க துணை கண்டத்தில் உள்ள அனைவருக்கும் 2403ஆம் ஆண்டு வரை பாதுகாப்பான சுகாதார கழிப்பிட வசதிகளை அணுக முடியாது - இது 373 வருட கால பிந்தைய அட்டவணை என்பது அதிர்ச்சியான ஒன்று" என்று அறிக்கை கூறியுள்ளது.

(திவாரி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.