மறுவாழ்வுக்காக நீண்ட காலம் காத்திருப்பது, ஆயிரக்கணக்கானவர்களை கையால் கழிவு அள்ள வழிவகுக்கும்
அரசு துறைகளின் அக்கறையின்மை மற்றும் கையால் கழிவு அள்ளுவோர் குறித்த நம்பகமான தரவு இல்லாதது, மறுவாழ்வு முயற்சிகளுக்கு ஒரு தடையாக உள்ளது என்று பங்கேற்பாளர்கள் கூறுகின்றனர்.
பெங்களூரு: பாலா* எந்த வயதில் குழி துப்புரவாளர் வேலையை செய்யத் தொடங்கினார் என்பது நினைவில் இல்லை. அவர், 15 வயதை எட்டியபோது, கையால் கழிவு அள்ளி வந்த தனது தந்தைக்கு உதவத் தொடங்கினார். பெங்களூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள கோலாரில் உள்ள அவர், 2020 டிசம்பரில் இந்தியாஸ்பெண்டிடம் கூறுகையில், "என் குடும்பத்தினர் இந்த வேலை செய்ததை, நான் நினைவில் வைத்திருக்கிறேன்" என்று கூறினார்.
இப்போது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக, பாலா உள்ளூர் அரசு மற்றும் நிர்வாக அலுவலகங்களின் தயவில் இருக்கிறார். அவர் ரூ.40,000 பெற காத்திருக்கிறார், இது 2013 சட்டத்தின் விதிகளின்படி ஒரு கையால் கழிவு அள்ளும் தோட்டி என அடையாளம் காணப்பட்ட பின்னர், மறுவாழ்வுக்கான ஒருமுறை தரப்படும் பண உதவி (OTCA) என்ற வகையில் அவருக்கு இதற்கான உரிமை உண்டு. 'கையாள் அள்ளும் தோட்டி' என்பதே ஒரு தவறான பெயர். இது, உலர்ந்த கழிவுகள் மற்றும் சாக்கடைகளில் இருந்து எந்த வகையிலும் மனித கழிவுகளை கைமுறையாக சுத்தம் செய்தல், எடுத்துச் செல்லுதல், அப்புறப்படுத்துதல் அல்லது கையாளுதல் ஆகியவற்றில் ஈடுபடுவோரைக் குறிக்கிறது.
மேடிகா சமூகத்தைச் சேர்ந்த 45 வயதான முன்னாள் கையால் கழிவு அள்ளும் தோட்டியான அவர், ஒரு பட்டியல் சாதி (எஸ்சி) என பட்டியலிடப்பட்டுள்ளது, 1993 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா கையால் கழிவு அள்ளுவதை தடைசெய்து, அப்பணியில் ஈடுபடுத்துவோரை குற்றவாளி என்று கூறியபோது, தங்கள் வாழ்க்கை சிறப்பாக மாறும் என்று எதிர்பார்த்த பல ஆயிரம் பேரில் ஒருவர்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, கையால் கழிவு அள்ளுவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம்- 2013 (PEMSR Act- 2013), கையாள் கழிவு அள்ளுவோருக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தை விரிவுபடுத்தியது - அவர்களில் 95% க்கும் மேற்பட்டவர்கள் தலித் - மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் சார்ந்தவர்களுக்கு பண உதவி, தன்னார்வ திறன் மேம்பாட்டு பயிற்சி, மூலதன மானியம் மற்றும் சலுகைக் கடன்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவித்தொகை ஆகியவற்றை வழங்குவதன் மூலம் மறுவாழ்வு தரப்படும். இந்த சட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் மத்திய மற்றும் மாநில அளவிலான குழுக்களை அமைப்பதை, சட்டம் கட்டாயப்படுத்தியது.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், 2007 ஆம் ஆண்டில், 'முன்னாள்' கையால் கழிவு அள்ளுவோர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சுய வேலைவாய்ப்பு திட்டத்தை (SRMS - எஸ்ஆர்எம்எஸ்) அறிமுகப்படுத்தியது. கையால் கழிவு அள்ளுவதை அகற்றுவதற்காக நிறுவப்பட்ட அரசு நிறுவனமான தேசிய சஃபை கரம்சாரிஸ் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSKFDC - என்.எஸ்.கே.எஃப்.டி.சி) செயல்படுத்தும் இத்திட்டத்திற்கு, மத்திய அரசு 100% நிதி வழங்குகிறது.
வீட்டில் கையால் கழிவு அள்ளும் தோட்டியில் வீட்டில் ஒரு நபருக்கு, மறுவாழ்வுக்கான ஒருமுறை தரப்படும் பண உதவி (OTCA) ரூ .40,000 வழங்குவதன் மூலம், கையாள் கழிவு அள்ளுவோர் தங்களை மாற்றுத் தொழில்களில் அமைத்துக் கொள்வதற்கு உதவுவதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை படிப்புகள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியையும் வழங்குகிறது, அந்த நேரத்தில் அவர்கள் மாதாந்திர ரூ .3,000 உதவித்தொகையை பெற முடியும். மேலும், இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு உபகரணங்கள் அல்லது வாகனங்களை வாங்குவதற்காக அவர்களுக்கு சலுகை விகிதத்தில் ரூ.15 லட்சம் வரை கடன்களையும், கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம் ரூ.3.25 லட்சம் வரை வழங்குகிறது. (உதாரணமாக, ரூ .10-15 லட்சம் உபகரண செலவுக்கு, என்.எஸ்.கே.எஃப்.டி.சி ரூ .6.75-11.75 லட்சத்திற்கு கடனை வழங்கும், மீதமுள்ள பணம் மானியமாக வழங்கப்படும்).
கையால் கழிவு அள்ளுவதை தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம், மற்றும் அமைச்சகத்தின் மறுவாழ்வு திட்டம் ஆகியன, 2016 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் ஒரு கையால் கழிவு அள்ளும் தோட்டி என 'அடையாளம் காணப்பட்ட' பாலாவுக்கு, நன்மைகளைப் பெறுவதற்கான முக்கிய அளவுகோல் மிகக்குறைவாகவே இருந்தது.
"இந்த ஆண்டுகளில் எனக்கு எந்த பண பயனும் கிடைக்கவில்லை ... எனது வங்கிக் கணக்கில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று பாலா கூறினார். தென் மாநிலமான கர்நாடகாவில், இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரான பெங்களூரில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள கோலார் தங்க வயல் பகுதியில் உள்ள கிராமத்தில் பாலா வசிக்கிறார்.
எட்டு ஆண்டுகள் பழமையான சட்டம் இருந்தபோதிலும், பாலா போன்ற கையால் கழிவு அள்ளுவோர், போதுமான பயிற்சி உள்ளிட்ட ஆதரவைக் கொண்டிருக்கவில்லை மற்றும் சலுகை உரிமைகளை தாமதத்தை அனுபவிக்கின்றனர். தரவு முரண்பாடுகளானது, அவர்களுக்கான மாற்று தொழிலுக்கு விரைவான பாதையை மறுக்கின்றன. "இந்த வேலையை அரசு தடை செய்திருப்பது நல்லது தான், ஆனால் அவர்கள் என்ன மாற்று வழியை எங்களுக்கு வழங்குகிறார்கள்?" அவர் கேட்டார்.
மோசமான பாதை
இந்தியாஸ்பெண்ட் உடன் அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 63,246 கையால் கழிவு அள்ளுவோரில் 91% க்கும் அதிகமானோருக்கு (மார்ச் 2020 க்குள்) பிப்ரவரி 2021 வரை, மறுவாழ்வுக்கான ஒருமுறை தரப்படும் பண உதவி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தில் ஒருவர் (13,547) மாதத்திற்கு ரூ .3,000 உதவித்தொகையுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சியைப் பெற்றுள்ளனர், மேலும் 2% (1,158) பேர் எஸ்ஆர்எம்எஸ் கீழ் கடன்களுக்கான மூலதன மானியத்தைப் பெற்றுள்ளனர்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான மக்களவை நிலைக்குழுவின் செப்டம்பர் 2020 அறிக்கை, அனைத்து கையால் கழிவு அள்ளுவோருக்கும் மறுவாழ்வுக்கான ஒருமுறை தரப்படும் பண உதவி வழங்கப்படவில்லை என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. "அரசின் உறுதிப்பாட்டின் படி அனைத்து கையால் கழிவு அள்ளுவோர்களுக்கும் மறுவாழ்வுக்கான ஒருமுறை தரப்படும் பண உதவி வழங்கப்பட வேண்டும்" என்று அறிக்கை குறிப்பிட்டது. மேலும் இந்த திட்டத்தை "மிகவும் அறியும் வகையில்" விளம்பரப்படுத்தவும், சிறந்த வேலைவாய்ப்புகளுக்காக "அதிகபட்ச எண்ணிக்கையிலான கையாள் கழிவு அள்ளுவோர்களை, திறன் பயிற்சிக்கு தேர்வு செய்து ஊக்குவிக்கவும்" என்று, துறைகளிடம் கேட்டுக் கொண்டது.
முன்னாள்' கையால் கழிவு அள்ளுவோர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சுய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு (SRMS) பிப்ரவரி மாதம் பட்ஜெட் ஒதுக்கீட்டை அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 9% குறைத்து 2021-22 ஆம் ஆண்டிற்கு ரூ .100 கோடி என (13.7 மில்லியன் டாலர்) அறிவித்துள்ளார்.
"கையால் கழிவு அள்ளும் தொழிலில் இருந்து விடுவிக்கப்பட்ட நபர்கள், சட்டத்தின் கீழ் தங்களுக்கான நியாயமானவற்றைப் பெறுவதற்கு இடையூறுகளை கடக்க வேண்டியதில்லை" என்று உச்சநீதிமன்றம் 2014 தீர்ப்பில் குறிப்பிட்டது (சஃபாய் கரம்ச்சாரி அந்தோலன் மற்றும் மற்றவர்கள் யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் பிற).
மறுவாழ்வு பணியானது, தடைகள் மற்றும் இடர்களால் சிக்கியுள்ளது என்று முன்னாள் கையால் கழிவு அள்ளுவோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற பங்களிப்பாளர்கள் கூறுகின்றனர். ஒன்று, பல தரவு ஆய்வுகள் மற்றும் கையால் கழிவு அள்ளுவோரின் எண்ணிக்கையில் தொடர்புடைய தரவு முரண்பாடு ஆகியன அடையாளம் காணாதது, மறுவாழ்வு செயல்முறையை சிக்கலாக்கியுள்ளன. மாற்று வாழ்வாதாரங்களுக்கு செல்ல போதுமான கையிருப்பு ஆதரவு மற்றும் பயிற்சியானது நிர்வாக மற்றும் அதிகாரத்துவ தடைகளால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதனால் பலர் ஆபத்தான நிதி சூழ்நிலைகளில் உள்ளதாக, கோலார் மாவட்டத்தில் உள்ள பல முன்னாள் கையால் கழிவு அள்ளுவோர் மற்றும் அவர்களுக்காக பணிபுரியும் ஆர்வலர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
உதாரணமாக,கையால் கழிவு அள்ளுவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து கர்நாடகாவில் 3,000 க்கும் மேற்பட்ட கையால் கழிவு அள்ளும் தோட்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கர்நாடகாவின் கையால் கழிவு அள்ளுவோருக்கான கண்காணிப்புக் குழுவின் உறுப்பினரும், கையால் கழிவு அள்ளுவதை ஒழிக்கும் அமைப்பான சஃபைக்கராம்ச்சாரி காவலு சமிதியின் (எஸ்.கே.கே.எஸ்) மாநில அழைப்பாளருமான கே.பி.ஒபாலேஷ் கூறினார். "மறுவாழ்வுக்கான ஒருமுறை தரப்படும் பண உதவி, மாற்று வேலைவாய்ப்புக்கான பயிற்சி, வேலைவாய்ப்புக்கான நிதி உதவி, குழந்தைகளுக்கான கல்வி உதவி அல்லது வீட்டுவசதி உள்ளிட்ட சரியான மறுவாழ்வு யாருக்கும் கிடைக்கவில்லை" என்றார் அவர்.
கோவிட்-19 காலம், பாலாவிற்கும் அவரது நோய்க்கும் ஒரு மாற்ற முடியாததாகிவிட்டது. கோவிட்டுக்கு முந்தைய நாட்களில் செருப்பு தைப்பது, பெயிண்டிங் தொழில் மற்றும் கிளீனராக மாறிமாறி வேலை செய்த 45 வயதான பாலாவுக்கு, தனது குடும்பத்திற்காக இப்போது நிலையான ஒரு வேலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. "யாராவது வேலையாக வழங்கினால், அது சாக்கடை குழியை நான் சுத்தம் செய்வதாகத்தான் இருக்கும்..." என்று பாலா கூறினார், "அதுவும் இல்லையெனில் என்னால் என் குடும்பத்திற்கு உணவளிக்க முடியாது" என்றார்.
எந்தவொரு நபருக்கும் சாதகமற்ற வேலையை மேற்கொள்ள எந்தவொரு கட்டாய சூழ்நிலையும் இல்லை என்று, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் பொருளாதார ஆலோசகர் யோகிதா ஸ்வரூப் கூறினார். "கையால் கழிவு அள்ளுவது தடைசெய்யப்பட்டதால், பழையபடி கையால் கழிவு அள்ளுவது தொடர்பான கேள்வி எழுவதில்லை" என்று என்.எஸ்.கே.எஃப்.டி.சி யின் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பைக் கொண்டிருக்கும் ஸ்வரூப் கூறினார்.
எஸ்.கே.கே.எஸ் உறுப்பினர் சித்தார்த் கே. ஜே. "பணம் [ரொக்க உதவி] வராவிட்டால், அவர்கள் கையால் கழிவு அள்ளும் வேலையைத்தான் செய்வார்கள்," என்று கூறினார். மறுவாழ்வுக்கான ஒருமுறை தரப்படும் பண உதவி உள்ளிட்ட மறுவாழ்வு ஆதரவு சரியான நேரத்தில் இல்லாவிட்டால், அவர்கள் மீண்டும் குழியில் இறங்கி கையால் கழிவு அள்ளும் போக்கு அதிகரிக்கும். "மறுவாழ்வுக்குப் பிறகு எத்தனை பேர் இந்த வேலையைச் செய்தார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் எந்த நிறுவனமும் இல்லை" என்றார்.
நம்பகமான புள்ளிவிவரங்கள் இல்லை
கையால் கழிவு அள்ளும் நபர்களின் எண்ணிக்கை குறித்து அரசுக்கு நம்பகமான தரவுகள் இல்லாவிட்டால், ஏற்கனவே உள்ள மற்றும் முன்னாள் கையாள் அள்ளுவோரின் மறுவாழ்வு முடிக்க முடியாது. வெவ்வேறு ஆய்வுகளில் கையாள் கழிவு அள்ளுவோரின் கணக்கீடு தரவு வேறுபாட்டிற்கு வழிவகுத்தது, இது பல ஆண்டுகளாக தரவுகளின் மாறுபாட்டில் காணப்படுகிறது.
நாடு தழுவிய இரண்டு கணக்கெடுப்புகள் நடத்தப்பட்ட பின்னர், தற்போது மொத்தம் 63,246 கையால் கழிவு அள்ளுவோரின் எண்ணிக்கை கிடைத்துள்ளது: 2013 இல் ஒன்று மற்றும் மிகச் சமீபத்தியது 2018 இல். பிந்தையது 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.
2018 கணக்கெடுப்பு அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அதன் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட முடியும் என்று துப்புரவுத் தொழிலாளர் இயக்கத்தின் தேசிய அழைப்பாளர் சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (எஸ்.கே.ஏ) பெஸ்வாடா வில்சன், அக்டோபர் 2019 நேர்காணலில் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இந்தியாவில் 160,000 பெண்கள் மனித கழிவுகளை எடுத்துச் செல்கிறார்கள் என்று நாங்கள் கூறுகிறோம்," என்று அவர் கூறினார். "ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் முதல் முன்னுரிமை உலர்ந்த கழிவறை துப்புரவாளர்களிடம் செல்ல வேண்டும், அவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் சுதந்திரத்திற்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை" என்றார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2.6 மில்லியன் சுகாதாரமற்றா கழிவறைகள் உள்ளன, அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கையாள் கழிவுகளை அகற்றக்கூடியவை. சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு (SECC- எஸ்.இ.சி.சி) 2011 நாடு முழுவதும் 168,066 கிராமப்புற கையால் கழிவு அள்ளுவோரின் குடும்பங்களை அடையாளம் கண்டுள்ளது. ஆனால், 2016 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் 167,487 கையால் கழிவு அள்ளுவோரின் வீடுகள் இருப்பதாகக் கூறினார். ஜூலை 2016 இல், இது 182,505 கையால் கழிவு அள்ளுவோரின் வீடுகளை அடையாளம் கண்டு அறிவித்தது.
பின்னர் 2011 எஸ்.சி.சி-ரூரல் கிராமப்புற கர்நாடகாவில் 15,000 கையால் கழிவு அள்ளுவோர்களும், 100,000 க்கும் மேற்பட்ட சுகாதாரமில்லாத கழிவறைகள் இருந்ததாக, எஸ்.கே.கே.எஸ் உறுப்பினர் சித்தார்த் தெரிவித்தார். "2016 ஆம் ஆண்டில் மாநில கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மேற்கொண்ட சரிபார்ப்புப் பயிற்சி 434 ஆகக் குறைக்கப்பட்டது. தும்கூர் எஸ்.இ.சி.சி-கிராமப்புறத்தில் 3,000 என்று அறிவித்தது, இது 2016 இல் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது" என்றார்.
எஸ்.சி.சி தரவு சரிபார்க்கப்படவில்லை, அவை உண்மையானவை என்று கருத முடியாது என்று என்.எஸ்.கே.எஃப்.டி.சியின் ஸ்வரூப் கூறினார். "எஸ்.சி.சி.யின் கீழ் தொகுக்கப்பட்ட தரவு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கணக்கீட்டாளருக்கு அறிவித்ததன் அடிப்படையில் அமைந்துள்ளது. இத்தகைய கூற்றுக்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படவில்லை," என்று ஸ்வரூப், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "யாராவது ஒரு கையால் கழிவு அள்ளும் தோட்டி என்று கூறினால், குறைந்தபட்ச சரிபார்ப்பு, அந்த நபர் கையால் கழிவு அள்ளும் ப்பணியைச் செய்ததாகக் கூறும் வீடுகளில் இருந்து சரிபார்க்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பில், அத்தகைய சரிபார்ப்பு எதுவும் செய்யப்படவில்லை. நபர் அளித்த அறிக்கை சரிபார்ப்பு இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மறுபுறம், ஒரு கணக்கெடுப்பில், அந்தக் கோரிக்கையை கணக்கெடுப்புக் குழுவின் மேற்பார்வையாளர் சரிபார்க்கிறார். எனவே மாறுபாடு. சரியான சரிபார்ப்புடன் முழுமையான கணக்கெடுப்புக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட தரவு மட்டுமே உண்மையானதாக எடுத்துக் கொள்ள முடியும்" என்றார்.
நாட்டில் கையால் கழிவு அள்ளுவோர் / வீடுகளின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்கான ஆர்வம் இல்லாதது தேசிய மனித உரிமைகள் ஆணையத்துடன் சரியாகப் போகவில்லை. ஜனவரி 2021 இல், பல மாநிலங்கள் தங்களுக்கு கையால் கழிவு அள்ளுதல் மற்றும் சுத்தமில்லாத கழிவறைகள் இல்லை என்று "அதிகபட்சமான கூற்று" என்று குறிப்பிட்டன, ஆனால் அத்தகைய கூற்றுக்கள் "உண்மையில் இருந்து வெகு தொலைவில் உள்ளன". "சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறான அறிக்கை அளித்தால் பொறுப்புக்கூறல் சரி செய்யப்பட வேண்டும்" என்றும், மற்ற அபாயகரமான துப்புரவுகளை உள்ளடக்குவதற்கு வரையறை விரிவாக்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது.
கர்நாடகாவில் அதிகாரத்துவம் மற்றும் மறுவாழ்வு
கர்நாடகாவில் முன்னாள் மற்றும் ஏற்கனவே உள்ள கையால் கழிவு அள்ளுவோரின் மறுவாழ்வு மற்றும் ஆதரவு அதிகாரத்துவ தடைகளால் சிக்கியுள்ளது என்று உரிமை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் மறுவாழ்வில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன. மறுவாழ்வுக்கான ஒருமுறை தரப்படும் பண உதவியை வழங்குவதற்கு பொறுப்பான ஏஜென்சிகளில் தலைமை மற்றும் பணியாளர்களின் பற்றாக்குறை, உரிமையை வழங்குவதில் தாமதம் மற்றும் மாநிலத்தின் தளர்வான மேற்பார்வை அணுகுமுறை ஆகியவை இடையூறுகளில் ஒன்றாகும்.
உதாரணமாக, கையால் கழிவு அள்ளுவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டத்தை செயல்படுத்த கர்நாடக மாநில சஃபாய் கர்மாச்சாரி மேம்பாட்டுக் கழகம் (KSSKDC) சேனலைசிங் நிறுவனம் எந்த மாநில நிறுவனம் என்பதில் தெளிவு இல்லை . என்.எஸ்.கே.எஃப்.டி.சி மாநிலத்தில் மறுவாழ்வுக்கான ஒருமுறை தரப்படும் பண உதவிகளை எதிர்த்து பி.ஆர். அம்பேத்கர் மேம்பாட்டுக் கழகம் 2017-18 வரை,. என்.எஸ்.கே.எஃப்.டி.சி மற்றும் சமூக நீதித்துறை பின்னர் கே.எஸ்.எஸ்.கே.டி.சி யை ஒரு சேனலைசிங் ஏஜென்சியாக பரிந்துரைக்கும் விஷயத்தை எடுத்துக் கொண்டன, ஆனால் "இதுவரை [மாநில] இந்த விஷயத்தில் தனது முடிவை தெரிவிக்கவில்லை" என்று ஸ்வரூப் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
பெயர் கூற விரும்பாத கே.எஸ்.எஸ்.கே.டி.சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பிப்ரவரி 12 நாளது வரை, கே.எஸ்.எஸ்.கே.டி.சி ஒரு அரசு சேனலைசிங் நிறுவனம் என்று கூறும் அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் இல்லை என்றார். பிப்ரவரி 12, 2021 வரை என்.எஸ்.கே.எஃப்.டி.சி-யின் இணையதளத்தில் இந்த நிறுவனம் ஒரு சேனலைசிங் ஏஜென்சியாக பட்டியலிடப்பட்டது. இந்தியாஸ்பெண்ட் என்.எஸ்.கே.எஃப்.டி.சி யிடம் விளக்கம் கோரிய ஒரு நாள் கழித்து, பிப்ரவரி 13 அன்று, வலைத்தளம் மீண்டும் பி.ஆர். அம்பேத்கர் மேம்பாட்டுக் கழகம் அதன் சேனலைசிங் நிறுவனமாக பட்டியலிட்டது. "இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பரில் [KSSKDC இல்] ஒரு தலைவர் நியமிக்கப்பட்டார். இது [நியமனம் தாமதமானது] விண்ணப்பங்களை செயலாக்குவதில் மறுவாழ்வுப்பணி தாமதத்திற்கும் வழிவகுத்தது "என்று ஒபலேஷ் கூறினார்.
கர்நாடகாவில் 65,505 கையால் கழிவு அள்ளும் தொழிலாளர்கள், குழிகள் மற்றும் செப்டிக் தொட்டிகள், கழிவறைகளை சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ளதாக ஜனவரி 2020 எஸ்.கே.கே.எஸ் அறிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. திறந்தவெளியில் மலம் கழிக்கும் இடங்கள், பொது கழிவறைகள் மற்றும் பாதாள சாக்கடை சுத்தம் செய்வோரையும் இதில் சேர்த்தால், மக்களின் எண்ணிக்கை 75,000 முதல் 80,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
"கர்நாடகாவில் மார்ச் 2020 இல் [மறுவாழ்வுக்காக] ஒரு ஆன்லைன் செயல்முறை தொடங்கப்பட்டது, ஆனால் [கோவிட்19 பரவலால் ஏற்பட்ட ] ஊரடங்கு, இதனை தாமதப்படுத்தியது. செப்டம்பர் வரை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன, ஆனால் எதுவும் அனுமதிக்கப்படவில்லை,"என்றார் சித்தார்த். "ஒரு நபர் கூட கே.எஸ்.எஸ்.கே.டி.சி யிடம் இருந்து கடன் பெறவில்லை. அது முடங்கி இருந்தது" என்றார்.
இந்தியாஸ்பெண்டஅணுகிய தரவுகளின்படி, திட்டங்களுக்காக கே.எஸ்.எஸ்.கே.டி.சி 2019-20 மற்றும் 2020-21 (ஜனவரி 2021 வரை) 1,063 ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விண்ணப்பங்களைப் பெற்றது. அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறித்து அவர்களிடம் உடனடியாக எந்த தகவலும் இல்லை என்று கே.எஸ்.எஸ்.கே.டி.சி அதிகாரி கூறினார். "அவர்கள் [முன்னாள் கையால் கழிவு அள்ளுவோர்] தங்களுக்கு ஆதரவைக் காணவில்லை என்று ஏன் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை," என்று அந்த அதிகாரி கூறினார்.
கையால் கழிவு அள்ளுவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் -2013 இன் கீழ், மாநில கண்காணிப்புக் குழு, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை கூடி, சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவது மற்றும் பல்வேறு நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆராய வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், 2016 முதல் மூன்று சந்தர்ப்பங்களில் - அதாவது டிசம்பர் 14, 2016 அன்று ; ஜூன் 20, 2017 மற்றும் ஆகஸ்ட் 28, 2020 - கூடியது; இந்தியாஸ்பெண்ட் அணுகிய மாநில அரசு பிரமாணப் பத்திரம் கூறியுள்ளது. கூட்டத்தை நடத்துவது அரசுக்கோ அல்லது குழு உறுப்பினர்களுக்கோ முன்னுரிமை தருவதில்லை, குழு உறுப்பினர்கள் மீது செயல்திறன் இல்லாத மற்றும் கூட்டங்கள் நடத்தாதற்கு நடவடிக்கை எடுக்க சட்டத்தின் கீழ் எந்த ஏற்பாடும் இல்லை என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
"கடந்த ஏழு ஆண்டுகளில், கர்நாடக மாநிலத்தில் கையால் கழிவு அள்ளுதல் சட்டத்தின் விதிமுறைகளுடன் எந்தவொரு செயல்பாடும் இல்லை" என்று கர்நாடக உயர்நீதிமன்றம் பிப்ரவரி 2 ம் தேதி ஒரு உத்தரவில் குறிப்பிட்டது. கையால் கழிவு அள்ளுவ்வோரின் மறுவாழ்வுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாவட்ட மற்றும் மாநில அளவில் கையால் கழிவு அள்ளுவோர் குறித்த இறுதி பட்டியல், மாநிலத்தில் சுத்தமில்லாத கழிவறைகளின் விரிவான கணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டங்கள் போன்ற இணக்க விவரங்களை நீதிமன்றம் கோரிய மனுக்கள் தொடர்பாக இந்த உத்தரவு இருந்தது. முந்தைய உத்தரவில் "வழங்கப்பட்ட உத்தரவுகளுக்கு இணங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கடுமையான உத்தரவை பிறப்பிப்பதற்கு" முன் புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் மார்ச் 1 வரை நீட்டிப்பு வழங்கியது.
பூர்த்தி செய்யாத தேவைகள்
கையால் கழிவு அள்ளுவோர், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் அவர்கள் திறமையற்றவர்களாக இருந்தால் அல்லது உதவித்தொகையுடன் திறன் பயிற்சிக்கு உட்பட்டு வேலைவாய்ப்பைப் பெறலாம் அல்லது சலுகை விகிதங்கள் மற்றும் மானியத்தில் வழங்கப்படும் நிதி உதவியுடன் சிறு முயற்சிகளைத் தொடங்கலாம் என்று என்.எஸ்.கே.எஃப்.டி.சியின் ஸ்வரூப் கூறினார்.
மாற்று வேலைவாய்ப்பை அதிகரிக்கும் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் முயற்சியாக என்.எஸ்.கே.எஃப்.டி.சி 22 பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்துகிறது மற்றும் அழகு மற்றும் ஆரோக்கியம், ஜவுளி, சிறு வணிக மற்றும் தொழில்முனைவோர், காலணி வடிவமைப்பு போன்ற பல்வேறு திறன் பயிற்சிகளை அடையாளம் கண்டுள்ளது.
பயிற்சிக்கு எடுப்பவர்கள் குறைவாகவே உள்ளனர். தனிநபர்கள் அல்லது வீடுகளின் தேவைகள் மதிப்பீடு இருந்தால், ஏற்றம் அதிகரிக்கும். "குடும்பம் அல்லது நபரின் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கான இந்த செயல்முறை உண்மையில் [கர்நாடகாவில்] நிகழ்ந்ததில்லை. தேவைகள் மதிப்பீடு செய்ய ஏஜென்சிகளுக்கு சாய்வோ அல்லது மனித வளமோ இல்லை" என்று சித்தார்த் கூறினார்.
"சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார பின்னணி காரணமாக இலக்கு குழுவின் [கையால் கழிவு அள்ளுவோர்] தரப்பில் விருப்பமின்மை, அதிகபட்ச எண்ணிக்கையில் திறன் பயிற்சி அளிப்பதற்கான முயற்சிகளை நோக்கம் கொண்டதாக அடைய முடியாது" என்று ஸ்வரூப் கூறினார்.
பாலா போன்ற ஒரு நபருக்கு, திறன் பயிற்சி நீண்ட காலத்திற்கு ஒரு நிலையான வருமானத்தை உறுதி செய்யாது. "காலணி [வடிவமைப்பு] சில பயிற்சிகள் உள்ளன, ஆனால் அதற்கான சந்தையை உற்பத்தி செய்வதற்கும் உறுதி செய்வதற்கும் நான் மக்களைச் சார்ந்து இருக்க வேண்டும்," என்று அவர், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "அதற்கு பதிலாக, நான் தோட்டக்கலை விளைபொருட்களை வளர்க்கக்கூடிய மற்றும் சுய சார்புடையதாக இருக்கும் சில நிலங்களை சொந்தமாக்க விரும்புகிறேன்" என்றார்.
*அடையாளத்தை பாதுகாக்க, தனிநபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன/
(என். ஆஷா மொழிபெயர்ப்புக்கு உதவினார். திருத்தியவர், மரிஷா கார்வா ).