கோஹிமா/சுமவுகெடிமா/திமாபூர்/கவுஹாத்தி: நாகாலாந்தின் தலைநகர் கோஹிமாவில் உள்ள லோக்கல் கிரவுண்ட் பகுதியில் தினமும் காலையில், 42 வயதான லோனி, யாலி காய்கறிகள், பழங்கள், உலர் மீன்கள் மற்றும் பலவகையான உண்ணக்கூடிய அசைவங்களை நேர்த்தியாக வைக்கிறார். தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு, பள்ளி செல்லும் தனது மூன்று குழந்தைகளுக்கு யாலி மட்டுமே உணவளித்து வந்துள்ளார். "எனக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது" என்று லோதா பழங்குடி இனத்தைச் சேர்ந்த யாலி, இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "எனவே, நான் விரும்பி இருந்தாலும், தெரு வியாபாரத்தைத் தவிர வேறு எந்த வேலையும் செய்திருக்க முடியாது" என்றார்.

யாலி, தெருவில் வியாபாரம் செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிறது. அவர், ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதிக்கிறார். "இது கடினமானது. ஆனால் நாங்கள் சரிசெய்ய முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார். அவர் வேலையில் ஓரளவு திருப்தி அடைந்துவிட்டதாகவும், ஆனால் அது ஆபத்தான வாழ்க்கை என்றும், "நாங்கள் நாள் முழுவதும் தெருக்களில் இருக்கிறோம்" என்றும் கூறுகிறார்.

பெண் தெரு வியாபாரிகளுக்கு, இது கடினமாக உள்ளதாக, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் கூறினார். "சில நாட்களில், கட்டுக்கடங்காத உள்ளூர்வாசிகள் என் பொருட்களை திருடுவார்கள், இது ஒரு பெண் தெரு வியாபாரியாக சகிக்க வேண்டிய ஒன்று" என்றார். பெண் தெருவோர வியாபாரிகள் வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சத்தில் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்கின்றனர், மேலும் கழிவறை வசதியின்றி சுகாதாரமற்ற இடங்களில் தங்கள் விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இதனால் அவர்கள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் தெருவோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) சட்டம்- 2014, சரியாக செயல்படுத்தப்பட்டிருந்தால் யாலி மற்றும் அவரைப் போன்ற பலருக்கு விஷயங்கள் வித்தியாசமாக இருந்திருக்கும். நாகாலாந்தில், சட்டமானது, 2019-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இது தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, விற்பனைக்கான மண்டலங்களை நியமித்தல் மற்றும் இந்தியா முழுவதும் தெரு வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல். தெருவோர வியாபாரிகளை அடையாளம் காணவும், விற்பனைச் சான்றிதழ்களை வழங்கவும், விற்பனையாளர்களின் பதிவுகளை வைத்திருக்கவும், நகராட்சி அதிகாரிகள் முதல் விற்பனையாளர் சங்கங்கள் வரை பங்குதாரர்களைக் கொண்ட நகர விற்பனைக் குழுக்களை (TVC) இது கட்டாயப்படுத்துகிறது.

நகர்ப்புற வளர்ச்சிக்கான நிலைக்குழுவின் 2021 அறிக்கை, விற்பனைச் சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் நகர விற்பனைக் குழுக்களை (TVC) உருவாக்குதல் உள்ளிட்ட சட்டத்தின் பல விதிகள் இன்னும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டது. இந்தியா ஸ்பெண்ட் நாகாலாந்தில் உள்ள தெரு வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பேசியது, அவர்கள் மாநிலத்தில் சட்டத்தை அமல்படுத்துவது மந்தமாக இருப்பதையும், அதன் விதிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துகிறது.

எண்ணிக்கைகள் மூலம்

இந்தியாவில் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை என்பது சரிவரத் தெரியவில்லை. காரணம், பல ஆண்டுகளாக வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டில், நகர்ப்புற தெரு விற்பனையாளர்களுக்கான தேசியக் கொள்கை, பல நகரங்களில், தெரு வியாபாரிகள் அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 2% என்று மதிப்பிட்டுள்ளது. 2017-18ன் காலமுறை தொழிலாளர் திறன் கணக்கெடுப்பை மேற்கோள் காட்டும் ஒரு மதிப்பீடு, இந்தியாவில் 11.9 மில்லியன் தெருவோர வியாபாரிகள் இருப்பதாகவும், அதில் 1.2 மில்லியன் பெண்கள் என்றும் கூறுகிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் 3,257 நகரங்கள் மற்றும் நகரங்களில் தெரு வியாபாரிகள் கணக்கெடுப்பின் அடிப்படையில் மற்றொரு மதிப்பீடு, கிட்டத்தட்ட 5 மில்லியன் தெரு வியாபாரிகளை அடையாளம் கண்டுள்ளது.

50% தெரு வியாபாரிகள் உணவை விற்கிறார்கள், அதே நேரத்தில் 20% பேர் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், முத்திரை இல்லாத பாத்திரங்கள், கட்லரிகள் மற்றும் வீட்டுப் பொருட்களை விற்கிறார்கள் என்று, தேசிய ஹாக்கர்ஸ் கூட்டமைப்பு (The National Hawkers Federation) மதிப்பீடு கூறுகிறது.

கோஹிமா நகரில், தெருவோர பெண் விற்பனையாளர்கள் நடைபாதைகளில் திரளாக வந்து, பலவிதமான உள்ளூர் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். தொழில்முனைவோர் அசோசியேட்ஸ் என்ற நாகாலாந்தில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு நடத்திய ஒரு கணக்கெடுப்பு, மாநிலம் முழுவதும் சுமார் 30,000 பெண்கள், தெருவோர விற்பனையில் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்வதாக மதிப்பிடுகிறது.

கோவிட்-19 தொற்றுநோய் தெரு வியாபாரிகள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை அதிகப்படுத்தியது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஊரடங்கால் தெருவோர வியாபாரிகளால் இயங்க முடியவில்லை, அதாவது அவர்கள் தங்கள் சொற்ப சேமிப்பை நம்பி இருக்க வேண்டியிருந்தது. டெல்லியில், 2020 ஆம் ஆண்டில் இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் ஸ்டடீஸ் டிரஸ்ட் (ISST - ஐஎஸ்எஸ்டி) நடத்திய பெண் தெருவோர வியாபாரிகளின் விரைவான மதிப்பீட்டுக் கணக்கெடுப்பில், 97% பெண் விற்பனையாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

தொற்றுநோய்க்குப் பின், யாலி மற்றும் பிற விற்பனையாளர்கள் விளைபொருட்களை வாங்கும் மொத்த சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்ததால், தங்கள் லாபத்தை குறைத்தாக தெரிவித்தனர். கோஹிமா நகரில் தெருவோர பெண் வியாபாரியான ஐம்பது வயதான ஷெகோசோலு வதேயோ, தான் சம்பாதிப்பது மிகக் குறைவு என்றார். அவரிடம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டபோது, அதை ​​எங்களிடம் சொல்ல தயங்குவதாகக் கூறினார்.

கோஹிமாவில் உள்ள மற்றொரு தெரு வியாபாரியான அதோலோ எசுங்கிற்கு, முக்கிய பிரச்சனை என்னவென்றால், தொற்றுநோய்க்குப் பிறகு, அவரால் தனது பொருட்களை விற்க முடியவில்லை. சில நாட்களில் ரூ.2,000 ஆகவும், மற்ற நாட்களில் ரூ.250-300 ஆகவும் வியாபாரம் இருக்கும்.

விற்பனை கூடம், கழிப்பறைகள் வசதி இல்லை

ஒரு குளிர்ந்த செப்டம்பர் மாத காலை நேரத்தில், கோஹிமா நகரில் உள்ள லோக்கல் மைதானத்தில் நடைபாதைக்கு கீழே, தெருவின் ஒரு மூலையில் வியாபாரி வாதேயோ அமர்ந்தார். யாலியைப் போலவே, ஒற்றைத் தாயான வாதேயோ, பழங்கள், காய்கறிகள் மற்றும் பலவிதமான அசைவங்களை விற்கிறார்.

கோடைக்காலம், மார்ச் முதல் மே வரை, மலைப்பாங்கான கோஹிமாவில் ஈரப்பதமாக இருக்கும். இந்தியா ஸ்பெண்ட் தரப்பிடம் பேசிய பல விற்பனையாளர்கள், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட வழக்கத்தை விட அதிக ஈரப்பதம் இருப்பதாகக் கூறினார்கள். "சரியான கொட்டகை இல்லை, கான்கிரீட் அமைப்பு இல்லை, வெயில் மிகவும் கடுமையாக உள்ளது," என்று வாதேயோ கூறினார், மழைக்காலங்களில் இது மோசமாக இருக்கும். "மழையின் போது, எனது பொருட்கள் சேதமடையும் வாய்ப்பு எப்போதும் உள்ளது" என்றார்.


நாகாலாந்தின் கோஹிமாவில் ஷெகோசோலு வாதேயோ காய்கறிகள், பழங்கள் மற்றும் பலவற்றை விற்பனை செய்கிறார். 2014 தெருவோர வியாபாரிகள் சட்டம், அவரைப் போன்ற தெருவோர வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும், ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மெதுவாக உள்ளது.

கோஹிமாவில் இருந்து சுமார் 62 கிமீ தொலைவில் சமூகெடிமா நகரம் உள்ளது - நாகாலாந்தின் முக்கியமான நகர்ப்புற மையமாகும். சுமவுகெடிமாவில் உள்ள சந்தையில் 17 ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் மற்றொரு தெரு வியாபாரியான அடோலி செமாவிடம், இந்தியாஸ்பெண்ட் பேசினார். நாற்பத்தைந்து வயதான செமா முன்பு நாகாலாந்தில் உள்ள சுயதொழில் பெண்கள் சங்கத்தின் (SEWA) துணைத் தலைவராக இருந்தார். அவர் தற்போது நாகாலாந்தின் சுய தொழில் பெண்கள் சங்கத்தின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

சுமவுகெடிமா மற்றும் அருகிலுள்ள நகரமான திமாபூர் ஆகியவற்றில், கோடை காலம் கோஹிமாவை விட வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். "எங்களிடம் விற்பனைக் கொட்டகை இல்லை, நாள் முழுவதும் இங்கே உட்காருவதற்கு எங்களுக்கு மிகவும் சூடாக இருக்கிறது" என்று பதிவு செய்யப்பட்ட தெரு வியாபாரி செமா கூறினார்.

சுமவுகெடிமா சந்தையில், 70-80% விற்பனையாளர்கள் நடைபாதைகள் மற்றும் தெருக்களில் வெளியே அமர்ந்துள்ளனர் என்று செமா கூறுகிறார். இதுகுறித்து நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். பாதுகாக்கப்பட்ட கொட்டகைக்கு ஏற்பாடு செய்வதாக எங்களிடம் கூறி வருகின்றனர் ஆனால் இதுவரை அவர்கள் எதுவும் செய்யவில்லை.


நாகாலாந்தின் சமூகெடிமா நகரில் தெருவோர வியாபாரியான அடோலி செமா, பதினேழு ஆண்டுகளாக சமூகெடிமா சந்தையில் விற்பனை செய்து வருகிறார். இன்னும் தெருவோர வியாபாரிகளுக்கு விற்பனை மண்டலம் உருவாக்கப்படாததால், அவர்கள் வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது.

சில பகுதிகளில் தெரு வியாபாரிகள் வசதியாக இருக்கும் இடத்தில் சரியான கொட்டகைகள் உள்ளன என்று, கோஹிமாவில் உள்ள தொழில்முனைவோர் அசோசியேட்ஸின் தகவல் தொடர்புத் தலைவர் நெய்குலே டூலோ கூறுகிறார். "ஆனால் பக்கத்து கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து வரும் பாதிக்கப்படக்கூடிய பெண்கள் அதிகம். அவர்கள் வழக்கமாக தெருக்களில் உட்காருவார்கள், நகராட்சி நிறுவனம் அவர்களை விரட்டுகிறது அல்லது நடைபாதைகள் மற்றும் நடைபாதைகளில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறது" என்றார்.

கோஹிமாவில் உள்ள தெரு வியாபாரியான எசுங், விற்பனையாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு என்று கழிப்பறைகள் எதுவும் இல்லாததை சுட்டிக்காட்டினார். "நாங்கள் எங்களை கழிப்பறைக்குள் அனுமதிக்கும் ஹோட்டல்களைத் தேட வேண்டும் அல்லது சில நேரங்களில் நாங்கள் பலமணி நேரங்களுக்கு கழிப்பறைக்குச் செல்லாமல் இருக்கிறோம்," என்று எசுங் கூறினார். கிடைக்கும் கழிப்பறைகளும் கூட பெரும்பாலும் அழுக்காகவும், சுகாதாரமற்றதாகவும் இருப்பதாக செம கூறுகிறார்.

நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் உள்ள பெண் தெருவோர வியாபாரிகளின் நிதி கல்வியறிவில் கவனம் செலுத்தும் டவுலோ, சில பெண்கள் நல்ல அண்டை வீட்டாரை சந்திக்கிறார்கள், அவர்கள் அன்பானவர்கள் மற்றும் அவர்கள் கழிப்பறைகளை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கிறார்கள் என்று கூறினார். ஆனால் சில பெண்கள் கழிப்பறைக்குச் செல்வதைத் தவிர்க்க தண்ணீர் குடிப்பதில்லை.

தெரு வியாபாரிகளின் சர்வதேச கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி, பெண் தெருவோர வியாபாரிகள், ஆண்களை விட பொது கழிப்பறைகளின் பற்றாக்குறையால் நோய்களுக்கு அதிகம் சாய்ந்துள்ளனர். "பொது கழிப்பறைகள் இல்லாததால், பெரும்பாலான பெண்கள் தெரு வியாபாரிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர்" என்று கட்டுரை குறிப்பிட்டது.

விற்பனை மண்டலங்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட விஷயங்களைத் தீர்ப்பதற்கு, உள்ளூர் அதிகாரிகள் தெரு விற்பனைத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தபோதிலும், விற்பனைக் கொட்டகைகள் மற்றும் வசதிகளின் பற்றாக்குறை தொடர்கிறது.

வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் உரிமை அமைப்பான வடகிழக்கு நெட்வொர்க்கின் (NEN) நாகாலாந்து மாநில ஒருங்கிணைப்பாளர் அகோல் சுஹா, 2013 ஆம் ஆண்டு முதல், "பெண்கள் தெருவோர வியாபாரிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது, விற்பனை செய்யும் இடங்களை பாதுகாத்து தக்க வைத்துக் கொள்வதுதான் என்பதை நாங்கள் கவனித்துள்ளோம்" என்று விளக்கினார். சரியான விற்பனை மண்டலங்களின் தெளிவான எல்லை இன்னும் இல்லை, அதாவது விற்பனையாளர்கள் விருப்பப்படி வெளியேற்றப்படலாம் என்பதால் இது முக்கியமானது என்று சுஹா கூறினார்.

முக்கியமாக, அண்டை மாநிலமான அஸ்ஸாமில் பணிபுரியும் இந்தியாவின் தெரு வியாபாரிகள் தேசிய சங்கத்தின் (NASVI) கூட்டாண்மையான உம்மே ஹனி, அசாமில் கூட இந்த சட்டம் "வெளிப்படையாக" செயல்படுத்தப்படவில்லை என்று கூறினார். "அரசாங்கம் அதன் வழியிலிருந்து வெளியேறுவதை நாங்கள் விரும்பவில்லை, ஆனால் அவர்களால் குறைந்தபட்சம் செய்ய முடியும்... பல விற்பனையாளர்கள் தெருக்களை அடைத்து கடை போடுவதை காணலாம், இது போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது, பின்னர் போலீசார் அவர்களை விரட்டுகிறார்கள். இது ஒரு சுழற்சியாகும், இது மீண்டும் மீண்டும் மற்றும் நியமிக்கப்பட்ட விற்பனை மண்டலங்கள் சிக்கலை தீர்க்கும்" என்றார்.

நகர விற்பனைக்குழுக்கள் இல்லை

முக்கியமான விதிகளில் ஒன்று என்று சுஹா குறிப்பிடுவது, பெண்கள் உட்பட தெருவோர வியாபாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நகர விற்பனைக் குழுக்களை (TVC) உருவாக்குவது ஆகும். "ஆனால் அது அரிதாகவே செய்யப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

நாகாலாந்தில் 2019 இல் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, முக்கிய மாவட்டங்களான சமூகெடிமா, திமாபூர், கோஹிமாவில் டவுன் விற்பனைக் குழுக்கள் உருவாக்கப்பட்டதாக கூறும் சுஹா, ஆனால் அதனை செயல்படுத்தல் சரியானதாக இல்லை என்றார்.

உதாரணமாக, சுயதொழில் பெண்கள் சங்க (SEWA) உறுப்பினர்கள் பல மாவட்டங்களில், நகர விற்பனைக் குழுக்கள் (TVC) என்றால் என்ன என்று நகர சபை அதிகாரிகளுக்குத் தெரியாது என்று, அதன் நாகாலாந்தின் பொதுச் செயலாளர் அங்குனவ் மியாரி கூறினார். "கோஹிமா மற்றும் திமாபூர் போன்ற நகர்ப்புற மாவட்டங்களில், அவர்கள் [அரசு அதிகாரிகள் மற்றும் தெரு வியாபாரிகள்] நகர விற்பனைக் குழுக்கள் (TVC) பற்றி அறிந்திருக்கிறார்கள், ஆனால் மற்ற உள் மற்றும் கிராமப்புற மாவட்டங்களில்,நகர விற்பனைக் குழுக்கள் (TVC) இருக்க வேண்டும் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாது" என்றார்.

கோஹிமாவில், நகர விற்பனைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் நடத்த வேண்டிய மூன்று மாதக் கூட்டங்களை நடத்துவதில்லை. "கடந்த ஆண்டு அவர்கள் இரண்டு முறை நடத்தினார்கள், ஆனால் இந்த ஆண்டு ஒரு கூட்டம் கூட அழைக்கப்படவில்லை" என்று மியாரி கூறினார். சுயதொழில் பெண்கள் சங்கத்தின் (SEWA) உறுப்பினர்கள் கோஹிமா மாநகராட்சிக்கு சென்றபோது, ​​'அமைச்சகத்தின்' எந்த தகவலும் இல்லாமல், இந்த கூட்டங்களை நடத்த முடியாது என்று அவர்களிடம் கூறப்பட்டது.

"கோஹிமாவில், அதிகாரிகள் மற்ற வேலைகளில் மும்முரமாக இருப்பதால் எங்களால் கூட்டங்களை தவறாமல் நடத்த முடியவில்லை… ஆனால் நகர விற்பனைக்குழு இங்கு அமைக்கப்பட்டுள்ளது, சில நாட்களுக்கு முன்பு நாங்கள் சுயதொழில் பெண்கள் சங்க (SEWA) உறுப்பினர்களைச் சந்தித்தோம், அது பலனளித்தது. கே.எம்.சி-யின் நிர்வாகி டி லானுசென்லா லாங்குமர் கூறினார். நகராட்சி மன்றங்கள் சரிபார்த்து விற்பனை அட்டைகளையும் வழங்குகின்றன என்று, கே.எம்.சி நிர்வாகி கூறினார். "நாகாலாந்தில் பல சிக்கல்கள் உள்ளன, நகராட்சிக்கு முழுமையான கட்டுப்பாடு இல்லை, எனவே நாங்கள் எங்கள் வரம்பிற்குள் செயல்பட்டு எங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும்" என்றார்.

2021 நிலைக்குழு அறிக்கை பல மாநிலங்களில் நகர விற்பனைக் குழுக்கள் (TVC) அமைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டது- "தெரு வியாபாரிகளை வெளியேற்றும் வாய்ப்பு உள்ளது".

இந்திய தெரு வியாபாரிகள் தேசிய சங்கத்தின் (NASVI) ஹனி, நகர விற்பனைக் குழு (TVC) உறுப்பினர்களில் 5% பெண்களாக இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். ஆனால், "பெண்களின் குரல்கள் ஊக்குவிக்கப்படவில்லை", நகர விற்பனைக் குழுக்கள் ஒட்டுமொத்த செயலாக்கம் "மிகவும் மெதுவாக உள்ளது" என்று அவர் கூறினார்.

மேலும், நகர விற்பனைக்குழுக்களின் கீழ் விற்பனைச் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்றாலும், அதைச் சுற்றி வெளிப்படைத்தன்மை இல்லை. தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை வைத்திருக்கும் சமூகெடிமாவைச் சேர்ந்த சேமா கூறுகையில், தெருவோர வியாபாரிகளுக்கு கூட நகராட்சி அமைப்பு கார்டுகளை வழங்கி வருகிறது. பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டத்தின் (PM SVANidhi scheme)கீழ்– தெரு வியாபாரிகள் தங்கள் வணிகங்களை முறைப்படுத்த உதவும் அரசு மைக்ரோ கிரெடிட் திட்டம்– ரூ. 10,000 கடனாகப் பெறலாம் என்பதை விற்பனையாளர்கள் அல்லாத பலர் அறிந்திருப்பதே இதற்குக் காரணம் என்று அவர் கூறினார். "கடனைப் பெற முடியாத அசல் தெரு விற்பனையாளர்கள் உள்ளனர், ஆனால் தெருவோர வியாபாரிகள் அல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன" என்று செமா கூறினார்.

அவர்களின் கருத்துக்கு நாங்கள் நகராட்சி நிர்வாகத்தை அணுகினோம், ஆனால் பதில் கிடைக்கவில்லை. பதில் கிடைத்ததும் இந்த கட்டுரையை புதுப்பிப்போம்.

தெருவோர வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய கண்காணிப்புக் குழுவை அமைக்குமாறு நிலைக்குழு பரிந்துரைத்தது. "இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதை நான் காணவில்லை. அதற்கான பொறுப்பும் உரிமையும் இல்லை" என்று சுஹா கூறினார். மேலும் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அதன் செயல்திறனைச் சரிபார்க்கவும் அரசாங்க அதிகாரிகள் மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிலாளர் சங்கங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.

நகராட்சி விவகாரங்கள் இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் ஏ. செனிதுங் லோதாவை நாங்கள் தொடர்பு கொண்டு, நாகாலாந்து நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பினோம். ஆனால் எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அங்கிருந்து பதில் கிடைத்ததும் இந்த கட்டுரையை புதுப்பிப்போம்.

இந்தக் கட்டுரை, டெல்லியில் உள்ள நிதிப் பொறுப்புணர்வு மையத்தின் ஸ்மிதுகோதாரி பெல்லோஷிப்பின் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்டது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.