மும்பை: கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஒரு புதிய சவாலை எதிர்கொள்கின்றனர் - வெளிநாடுகளில் உள்ள சுரண்டல் முதலாளிகளிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்க அரசு கட்டாயப்படுத்திய, குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களில் (MRW - எம்.ஆர்.டபிள்யூ) குறைப்புதான். குறைவாக படித்த, குறைந்த திறனுள்ள நீல காலர் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் பொருந்தும், அவர்கள் வேலைக்காக 18 நாடுகளுக்கு குடிபெயர முற்படும்போது குடியேற்ற பரிசோதனை தேவை (ECR - ஈ.சி.ஆர்) கொண்டு பாஸ்போர்ட்டை தயாரிக்க வேண்டும்.

குடியேற்ற பரிசோதனை தேவைக்கான அனுமதி கோரும் நாடுகளில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் சூடான், இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜோர்டான் போன்றவை அடங்கும். ஆனால் இந்த நாடுகளில் குறைந்தபட்ச ஊதிய முறைகள் இல்லாததால் வளைகுடாவின் -- இது, இந்திய குடியேறுபவர்களுக்கு விருப்பமான இடம்-- குறைந்தபட்ச பரிந்துரை ஊதியம் மிகவும் முக்கியமானது.

செப்டம்பர் 2020 இல், வெளிவிவகார அமைச்சகத்தின் (MEA) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு குறைக்கப்பட்ட குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களை சரிசெய்ய, இரண்டு சுற்றறிக்கைகளை வெளியிட்டது: பஹ்ரைன், ஓமன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மாதத்திற்கு 200 டாலர், சவுதி அரேபியா 324 டாலர் மற்றும் குவைத் வேலை-விசா வைத்திருப்பவர்களில் 245 டாலர் மற்றும் வீட்டுத் தொழிலாளர்களுக்கு 196 டாலர். அனைத்து திறன் நிலைகள் மற்றும் தொழில்களில் செயல்படுத்தப்பட்டது, குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களில் குறைப்பு 30% முதல் 50% வரை இருந்தது.

இந்த குறைப்பானது, கோவிட் -19 காரணமாக பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப, இந்திய தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று அரசு அதை நியாயப்படுத்தியது. இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் தெற்காசிய சகாக்களை விட அதிக ஊதியங்களைக் கொண்டுள்ளனர், இது வளைகுடாவில் இந்தியர்களைச் சேர்த்துக் கொள்வதை குறைவதற்கும், தெற்காசிய நாடுகளான பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து ஆட்சேர்ப்பு அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது. எவ்வாறாயினும், குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் குறைப்பது உண்மையில் வேலை இழப்புகள், சுரண்டல் மற்றும் நீண்ட காலமாக, குறைந்த போட்டி கொண்ட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர் தொகுப்பிற்கு வழிவகுக்கும் என்று சிவில் சமூக அமைப்புகளும், புலம்பெயர்வு துறை நிபுணர்களும் அஞ்சுகின்றனர்.

குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களைக் குறைப்பது குறுகிய காலத்தில் இந்தியத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று இடம்பெயர்வு நிபுணர்களும் சிவில் சமூக அமைப்புகளும் நம்புகின்றன, ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பிற நாடுகளும் இதைச் செய்யும் வரை மட்டுமே இந்த ஆதாயங்கள் நீடிக்கும். இது இந்தியத் தொழிலாளர்கள் வைத்திருக்கும் போட்டி விளிம்பைத் தாக்கும். குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களை குறைப்பதற்கு முன்னர் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தொழிலாளர்கள் இப்போது குறைந்த ஊதியத்தை ஏற்க வேண்டும் அல்லது வேலை வாய்ப்பை விட்டுவிட வேண்டும் என்றும் புலம்பெயர்ந்த தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களின் குறைப்பு சீரானது, அதாவது இது ஒரு நாட்டில் உள்ள தொழில்களில் ஒரே ஊதிய அளவை நிர்ணயிக்கிறது, இது ஈமிகிரேட் போர்ட்டலில் (eMigrate portal) இருந்து ஒருங்கிணைந்த குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் பற்றிய சமீபத்திய தரவுகளால் காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு சமையல்காரர், ஒரு செவிலியர், ஒரு வீட்டுப் பணியாளர் மற்றும் ஒரு இயந்திர ஆபரேட்டர், அனைவருக்கும் பஹ்ரைனில் குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் ரூ.14,575 உள்ளது. சவுதி அரேபியாவில் இந்த வரிசையில் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் ரூ .14,083 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாறுபாடுகள் வாழ்க்கைச் செலவைப் பொறுத்தது.


தெலுங்கானா எதிர்ப்புக்கள்

சிவில் சமூக அமைப்புகள், குறிப்பாக புலம்பெயர்ந்தோர் நலன்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகளுக்கான இலாப நோக்கற்ற அமைப்பான, தெலுங்கானாவின் புலம்பெயர்ந்தோர் நல மன்றம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த கவலையை எழுப்பிய முதல் அமைப்பான இது, மாநில வெளிநாடுகள்வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது, இது பின்னர் குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களை உயர்த்தவும், "புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை" உறுதிப்படுத்தவும் வெளிவிகாரத்துறைக்கு முறையீடு செய்தது.

தெலுங்கானா வளைகுடா தொழிலாளர் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (வளைகுடா ஜேஏசி - Gulf JAC) 10 பேர் கொண்ட குழு, அரசின் சுற்றறிக்கைகளை ரத்து செய்யக் கோரி, 2021 மார்ச் தொடக்கத்தில் 'சாலோ டெல்லி' என்ற போராட்டத் திட்டத்தை ஏற்பாடு செய்தது. இது தொடர்பாக புலம்பெயர்ந்தோர் நல மன்றம், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளையும் (PIL) தாக்கல் செய்துள்ளது.

ஆனால், பரிந்துரைத்த ஊதிய விகிதங்களை மறுஆய்வு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று, மத்திய வெளிவிவகார அமைச்சர் வி.முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களவையில் பினாக்கி மிஸ்ராவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தொற்றுநோயைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி காரணமாக குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டதாகக் கூறினார்.

சுரண்டலில் இருந்து பாதுகாப்பு

கோவிட் -19 பரவல் மற்றும், அடுத்தடுத்த நாடு தழுவிய ஊரடங்கு நடவடிக்கைகளால் இந்திய புலம்பெயர்ந்த மக்கள் -- 450 மில்லியன் உள்நாட்டில் புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் 18 மில்லியன் வெளிநாட்டில் குடியேறியவர்கள்-- பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில், புலம்பெயர்ந்தோர் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மற்றும் வருமான இழப்புக்கள் மற்றும் விலை அதிகமுள்ள நகர்ப்புறங்களில் அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் சர்வதேச அளவில், பல்வேறு நாடுகளில் இருந்து தவிக்கும் குடியேறியவர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, இந்திய அரசு வந்தே பாரத் மிஷன் திட்டத்தை செயல்படுத்தியது. ஏப்ரல் 2020 இல், ஆட்சேர்ப்புத் தொழில் மற்றும் மாநில அளவிலான பாதுகாவலர்களுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, இந்த பணி வெளிநாட்டில் இருந்து இந்தியர்களை திருப்பி அனுப்பத் தொடங்கியது. மார்ச் 2021 நிலவரப்படி, 14,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் உட்பட 10 கட்டங்களாக, இந்த பணி நிறைவு செய்துள்ளது. ஊரடங்கு காரணமாக அவர்களின் பணியிடங்கள் மூடப்பட்ட நிலையில், வளைகுடா நாடுகளில் குடியேறிய இந்தியர்கள் தங்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதைக் கண்டனர் அல்லது கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டனர், ஊதியங்கள் அல்லது சமூக பாதுகாப்பு சலுகைகள் எதுவும் அவர்களுக்கு இல்லை.

வளைகுடா உட்பட சில நாடுகளில் வேலை தேடும் புலம்பெயர்ந்தோருக்கு, 1983 ஆம் ஆண்டின் இந்திய குடிவரவு சட்டம், குடியேற்ற பரிசோதனை தேவை பிரிவில் உள்ளவர்கள் குடியேறுவதற்கு முன்னர் புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். (இதில் குறைந்த கல்வித் தகுதி உள்ளவர்கள் அல்லது பகுதி திறமையானவர்கள் அல்லது திறமையற்றவர்கள் உள்ளனர்.) இந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகவே, இந்திய அரசு குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் என்ற முறையைத் தொடங்கியது, இது குறைந்தபட்ச ஊதியங்கள் என்ற கருத்தில் இருந்து உருவானது.

இந்தியாவுக்கு வெளியே குடியேற்ற அனுமதிக்கு, குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் இந்திய அரசாங்கத்திற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச ஊதியத்தை பரிந்துரைக்கின்றன. இந்திய குடியேறியவர்களுக்கான பல முக்கிய பணி இடங்களுக்கு, தேசிய குறைந்தபட்ச ஊதிய முறைகள் இல்லை என்று, அரபு நாடுகளில் ஊதிய முறைகள் குறித்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2018 கொள்கை சுருக்கம் தெரிவிக்கிறது. எடுத்துக்காட்டாக, அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டரீதியான குறைந்தபட்ச ஊதியம் கொண்ட ஒரே ஜி.சி.சி நாடு கத்தார் ஆகும், இது கத்தார் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகத்தின் அறிக்கையின் மூலம் 2020 இல் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் குறைந்தபட்ச ஊதியச் சட்டம்-1948, ஆக்கிரமிப்பு வகைகள், அட்டவணைகள் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் உள்நாட்டு குறைந்தபட்ச ஊதியங்களை நிர்ணயித்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் திருத்துவதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. ஆனால் குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கLuக்கு சட்டரீதியான அடித்தளம் இல்லை, அவை பெரும்பாலும் வெளிவிவகார அமைச்சின் நிர்வாக உத்தரவுகளின் மூலம் சரி செய்யப்படுகின்றன. குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களை நிர்ணயிக்கும் போது, செல்லக்கூடிய நாடுகளில் வாழ்க்கை செலவுகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட ஊதிய விகிதங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தொழில்கள் அல்லது திறன் நிலைகளில் பரிந்துரைக்கப்பட்ட ஊதிய விகிதங்களுக்கு ஒரே மாதிரியான அளவுகோல்கள் இல்லை என்று தெரிகிறது, ஐ.எல்.ஓ இந்தியா அமைப்பின் குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் 2016 மதிப்பீட்டில் குறிப்பிட்டது.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் நாடுகளில் நிலவும் ஊதிய விகிதங்களை விட இந்தியாவின் பரிந்துரை ஊதியங்கள் கணிசமாக உயர்ந்ததாக, 2016 ஐஎல்ஓ அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் குறைந்த திறனுள்ள தொழில்களில் "தெரிவிக்கப்பட்ட உண்மையான ஊதியங்கள்" --அதாவது புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் களத்தில் கூறப்பட்ட ஊதியங்கள்-- பரிந்துரைக்கப்பட்ட ஊதியங்களை விட குறைவாக உள்ளன. இந்த நாடுகளில் முதலாளிகளின் ஊதிய விருப்பத்தேர்வுகள் இந்தியாவின் குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களுக்கு கீழே இருப்பதை இது காட்டுகிறது என்று அறிக்கை கூறுகிறது. இது ஒப்பந்த மாற்றீட்டின் சிக்கலையும் கோடிட்டு காட்டியது - இலக்கு வெளியிடப்பட்ட நகல் ஒப்பந்தங்களின் நடைமுறை, இது குடியேற்ற அனுமதியின்போது கையெழுத்திடப்பட்ட குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களுடன் இணக்க ஒப்பந்தத்தை விட குறைந்த ஊதியத்தை பிரதிபலிக்கிறது.

'ஆலோசனைகள் இல்லை'

வெளியுறவு அமைச்சகத்தின் செப்டம்பர் 2020 சுற்றறிக்கைகளின்படி, வளைகுடாவிற்கு குடியேறுபவர்களுக்கான குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் 30-50% குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய பரிந்துரை ஊதியங்கள், திறன் நிலைகள் மற்றும் தொழில் வகைகளுக்கு குறிப்பிட்டவை, ஆனால் தற்போதைய அடுக்குகள், திறன் / தொழில் மட்டங்களில் உள்ள அனைத்து இந்திய குடியேறியவர்களுக்கும் பொருந்தும்.

புலம்பெயர்ந்தோருக்கான நடைமுறையில் உள்ள ஊதிய விகிதங்களைக் குறைக்க, புலம்பெயர்ந்தோர் சென்ற நாடுகளுக்கு இது ஒரு காரணத்தை வழங்கும் என்ற அடிப்படையில் தெலுங்கானா அரசு இந்த நடவடிக்கையை விமர்சித்தது. "குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் குறைப்பதற்கு முன்பு அரசு யாரையும் கலந்தாலோசிக்கவில்லை என்பது எங்களது முக்கிய கவலை. குறைப்புக்கு காரணம் என்ன, வெளிநாட்டு நாடுகள் அதைக் கேட்டனவா, 200 டாலர்களாகக் குறைக்கப்பட்டதன் அடிப்படை என்ன? "என்று தெலுங்கானாவின் புலம்பெயர்ந்தோர் நல மன்றத்தின் தலைவர் பீம் ரெட்டி கூறினார்.

அரபு பிராந்தியத்தில் 52% தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு இல்லை

சர்வதேச தொழிலாளர் சந்தையில் நியாயமான மற்றும் நெறிமுறையில் ஆட்சேர்க்கும் அரசாங்கங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு ஆர்வமுள்ள ஒரு பகுதியாக மாறியுள்ளது. நெறிமுறை ஆட்சேர்ப்பு என்ற கருத்துக்கு உலகளாவிய வரையறை இல்லை மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் அதை வித்தியாசமாக விளக்கியுள்ளன. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) சர்வதேச ஆட்சேர்ப்பு ஒருமைப்பாட்டு அமைப்பு (ஐஆர்ஐஎஸ்), ஏழு கொள்கைகளைக் கொண்டுள்ளது: அடிப்படை தொழிலாளர் உரிமைகள், நெறிமுறை மற்றும் தொழில்முறை நடத்தை, நடமாட்ட சுதந்திரத்தை மதித்தல், வேலைவாய்ப்பு, இரகசியத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மை, தீர்வுக்கான அணுகல் மற்றும் வேலை தேடுபவர்களுக்கான ஆட்சேர்ப்பு கட்டணங்களை தடை செய்தல் என்பனவாகும்.

மனித உரிமைகள் மற்றும் வணிகம் அமைப்பால் உருவாக்கப்பட்ட 2012ம் ஆண்டின் புலம் பெயர்ந்தோர் கண்ணியத்துடன் இடம்பெயர்வது தொடர்பான புலம்பெயர்ந்தோரின் டாக்கா நெறிமுறை வெளிநாட்டு ஆட்சேர்ப்பிற்கான ஒரு வரைபடத்தையும் வழங்குகிறது. டாக்கா கோட்பாடுகளில் ஐந்தாவது "ஊதியங்கள் தவறாமல், நேரடியாகவும், சரியான நேரத்திலும் வழங்கப்பட வேண்டும்" என்றும், முதலாளிகள் குறைந்தபட்சம் அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டபூர்வமான குறைந்தபட்ச ஊதியத்தையோ அல்லது பொருத்தமான நடைமுறையில் உள்ள ஊதியத்தையோ செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறது.

சமீபத்திய 2020-21 ஐ.எல்.ஓ உலகளாவிய ஊதிய அறிக்கை, ஐ.எல்.ஓ உறுப்பு நாடுகளில் 90% குறைந்தபட்ச ஊதியங்களைக் கொண்டுள்ளது என்றும், ஜி.சி.சி நாடுகள் அவற்றை மிகக் குறைவாக செயல்படுத்துகின்றன என்கிறது. ஜி.சி.சி-க்குள், குவைத் மற்றும் ஓமான் குறைந்தபட்ச ஊதிய விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளன, ஆனால் அவர்களின் நாட்டினருக்கு மட்டுமே. சவூதி அரேபியா, பஹ்ரைன் அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குறைந்தபட்ச ஊதிய முறை இல்லை. குறைந்தபட்ச ஊதியம் இல்லாத அரபு நாடுகளில் வசிக்கும் கூலித் தொழிலாளர்களின் பங்கு 52% என்றும் ஐ.எல்.ஓ அறிக்கை கூறுகிறது.

நேபாளத்தின் குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களை விட குறைவு

இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நேபாளம் மற்றும் பங்களாதேஷின் இரண்டு அண்டை நாடுகளில் இருந்து, வேலைச்சந்தையில் நேரடி போட்டியை எதிர்கொள்கின்றனர். அவற்றில், நேபாளம் மட்டுமே குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களை கொண்டுள்ளது.

கடந்த, 2020 நேபாள தொழிலாளர் இடம்பெயர்வு அறிக்கையானது, வாழ்க்கைச் செலவுகள், நடைமுறையில் உள்ள ஊதியங்கள் மற்றும் இலக்கு நாடுகளில் உள்ள பிற நாட்டினரின் பரிந்துரை ஊதியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பரிந்துரை ஊதியங்களைக் கணக்கிடும் செயல்முறையை கோடிட்டுக் காட்டுகிறது. 2016 ஐ.எல்.ஓ அறிக்கையின்படி, குறைந்த திறமையான தொழிலாளர்களுக்கான நேபாளத்தின் குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள், இந்தியா நிர்ணயித்ததை விட குறைவாக இருந்தது. ஆனால் சமீபத்திய திருத்தங்களுடன், இந்திய குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள், நேபாளத்தின் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இப்போது நேபாளத்தை விட கீழே உள்ளன.


"கட்டுமானம் மற்றும் வசதி பராமரிப்பு போன்ற தொழில்கள் மற்றும் வர்த்தகங்கள் மட்டுமே வெளிநாட்டு சந்தை உண்மையில் செலுத்துவதை விட குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் அதிகமாக உள்ளது, இந்த வர்த்தகங்கள் எப்போதும் அதிக தேவையில் உள்ளன," என்று, இந்தியாவின் பழமையான தனியார் ஆட்சேர்ப்பு நிறுவனங்களில் ஒன்றான அம்பே இன்டர்நேஷனலின் தலைவரும், இந்திய புலம்பெயர்ந்தோர் மேலாண்மை கவுன்சில்கள் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பின் (FIMCA - ஃபிம்கா) இயக்குநருமான அமித் சக்சேனா கூறினார். "இந்த குறிப்பிட்ட வர்த்தகங்களுக்கு மற்ற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை விட இந்தியத் தொழிலாளர்கள் அதிக விலை கொண்டவர்கள். பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து ஆட்சேர்ப்புடன் ஒப்பிடும்போது, ஜி.சி.சி ஆட்சேர்ப்பு சந்தையில் இந்திய தொழிலாளர்களின் பங்கு வீழ்ச்சியடைவதில் இது பிரதிபலிக்கிறது" என்றார்.


இந்திய புலம்பெயர்ந்தோர் ஆதரவை இழந்ததால், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் காலடி எடுத்து வைத்தன - 2016 ல், பங்களாதேஷில் இருந்து சவுதி அரேபியாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்கு 2015 ல் 7% என்பதில் இருந்து 19% ஆக உயர்ந்தது. அதே ஆண்டில், சவுதி அரேபியாவுக்குச் செல்லும் பாகிஸ்தான் தொழிலாளர்களின் பங்கு 2014 இல் 48% ஆக இருந்து 60% ஆக அதிகரித்துள்ளது என்று அவுட்லுக் இந்தியா இதழில் வெளியான 2017 கட்டுரை குறிப்பிட்டது.

இந்திய அரசின் (வெளிநாடு வாழ் இந்தியர் விவகார அமைச்சகத்தின்) முன்னாள் செயலாளரும், புலம்பெயர்ந்தோர் துறை நிபுணருமான ஏ. திதார் சிங், குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களில் திருத்தம் நல்ல நோக்கத்துடன் இருந்தாலும், மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கருதினார். "அரசால் குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் குறைக்கப்படுவது வளைகுடாவிற்கு குடிபெயரும் தொழிலாளர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என்று முழுமையாகப் பாராட்டப்பட்டாலும், இது உண்மையில் பல ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்திய பிராண்டைக் குறைக்கிறது," என்று அவர் கூறினார். "பல்வேறு காரணங்களால் வளைகுடாவில் குடியேறிய தொழிலாளர்களாக இந்தியர்கள் விரும்பப்படுகிறார்கள், அரசு இந்த விருப்பத்தை வளர்த்து செயல்படுத்த வேண்டும்" என்றார்.

'பணம் அனுப்புதல் குறையும்'

அதிக பரிந்துரை ஊதியங்கள், இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான விருப்பத்தை குறைக்கக்கூடும் என்றாலும், குறைந்தபட்ச ஊதியங்கள் குறைக்கப்படும் என்பது அதிகரித்த வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்குமா? குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களை குறைப்பதற்கான முடிவு இந்தியத் தொழிலாளர்களின் தேவை அதிகரிக்கும், ஆனால் இது தற்காலிகமாக இருக்கலாம் என்று புலம்பெயர்ந்தோர்கள் தொடர்பான ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

"சர்வதேச தொழிலாளர் சந்தையில் முக்கியமானவர்கள், குறிப்பாக மற்ற தெற்காசிய நாடுகள், நிச்சயமாக அவர்களின் குறைந்தபட்ச பரிந்துரை ஊதியத்தை குறைக்கும் அல்லது அதே செலவில் திறமையான மனிதவளத்தை வழங்குவர். பரிந்துரை ஊதியங்களைக் குறைப்பது இந்தியத் தொழிலாளர்களின் தற்போதைய பாதிப்புகளை அதிகரிக்கும், " என்று, கேரளாவை சேர்ந்த சிவில் சமூக அமைப்பான புலம்பெயர்ந்தோர் நலனில் பணியாற்றும் இந்திய புலம்பெயர்ந்தோர் ஆய்வு மையத்தின் நிறுவனர் ரபீக் ரவுதர் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடியில், அதிகமான புலம்பெயர்ந்தோர் வேலை இழக்க நேரிடலாம், ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமல் இருக்கலாம் அல்லது குறைந்த ஊதியத்தை ஏற்க நிர்பந்திக்கப்படலாம் என்று ரெட்டி கூறினார். "தொழிலாளர்களுக்கு இரண்டு வழிகள் உள்ளன - அவர்கள் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள் அல்லது இந்தியாவுக்குத் திரும்புவார்கள். இந்த குறைப்பால் பணம் அனுப்புவதும் பாதிக்கப்படும்" என்றார்.

குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் அமைப்பதில் துறைகள், திறன் நிலைகள், சந்தை போக்குகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகள் போன்ற காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். "இழப்பீட்டுக்கான நிறுவனத்திற்கான செலவையும் கருத்தில் கொண்டால் இன்னும் விஞ்ஞானமான எம்.ஆர்.டபிள்யூ உதவும் - இதில் சம்பளம், உணவு, தங்குமிடம், போக்குவரத்து, வழங்கப்பட்ட அல்லது செலுத்தப்படும் மருத்துவ செலவு ஆகியவை அடங்கும்" என்று, சக்ஸேனா கூறினார். "இப்போதே, குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் இந்தியர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை இணைக்கவில்லை, குறிப்பாக அவர்களுக்கு ஊதிய விடுப்பு, கிராச்சுட்டி, தங்குமிடம், கூடுதல் நேரம், பயண இழப்பீடு, ஊதிய விடுமுறை போன்ற வசதிகள் கிடைக்கக்கூடும்" என்றார்.

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் போன்ற பங்குதாரர்கள் குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்கள் செயல்பாட்டில் இந்திய புலம்பெயர்ந்தோரை சுரண்டலில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ரவுதர் கூறினார். "நாடு சார்ந்த மற்றும் துறை சார்ந்த குறைந்தபட்ச பரிந்துரை ஊதியங்களை அரசு சாரா நடிகர்கள் மற்றும் அடிமட்ட மட்ட அமைப்புகளின் உதவியுடன் மட்டுமே உருவாக்க முடியும்" என்றார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.