பெங்களூரு: 2020 மார்ச் 24 அன்று நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படும் ஒருநாள் முன்னதாக, "புலம்பெயர்ந்த தொழிலாளர் பணியாளர்களின் பதிவு / தரவுகளை வைத்திருப்பது சாத்தியமில்லை" என்று பாராளுமன்றத்தில் அரசு கூறியது, ஏனெனில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை தேடி அடிக்கடி இடம் பெயருகின்றனர். ஆனால், ஊரடங்கின் அடுத்த 68 நாட்களில், இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாதபடி புலம்பெயர்ந்த தொழிலாளர் கடும் நெருக்கடியை சந்தித்ததால், பயனுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் கொள்கையை உருவாக்குவதற்கு நம்பகமான தகவல்கள் முக்கியமானவை என்ப உணரப்பட்டது.

மார்ச் 25 முதல், மே 1, 2020 வரை, வேலைகள், சேமிப்பு, தங்குமிடம், உணவு, போக்குவரத்து அல்லது எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட ஆதரவு முறையுமின்றி சிக்கித் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் குடும்பங்களுடனும், சிதறிய பொருட்களுடனும் நீண்ட நடையை தொடங்கினர். சுமார் 11.4 மில்லியன் உள்நாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் -- இது உத்தரகண்ட் மக்கள்தொகையை விட அதிகம் -- நடந்தே தங்கள் பகுதிக்கு திரும்பத் தொடங்கியதில், ரயில் விபத்தில் 96 பேர் இறந்தது உட்பட, 971 கோவிட் அல்லாத இறப்புகளுக்கு காரணமாக அமைந்தது.

புலம்பெயர்ந்தவர்கள், தாங்கள் பணிபுரிந்த நகரங்களை விட்டு வெளியேறிய ஐந்து மாதங்களுக்குப் பிறகு, கிராமங்களில் வேலைவாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் திரும்பத் தொடங்கியதாக, விரைவான மதிப்பீட்டு கணக்கெடுப்பு காட்டியது. இருப்பினும், தொற்றுநோய் ஒரு பொருளாதார சுருக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் ஏழை இந்தியர்களின் எண்ணிக்கை (ஒரு நாளைக்கு 2 டாலர் அல்லது அதற்கும் குறைவான வருமானத்துடன்) 75 மில்லியன் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2020 இல் மட்டும் 122 மில்லியன் இந்தியர்கள் வேலை இழந்தனர், இது முந்தைய ஆண்டின் வேலையில் 30% சரிவு ஆகும்.

இந்த காலகட்டத்தில், இந்தியாவின் உள்நாட்டு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான இடம்பெயர்வு மற்றும் அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து பல விவாதங்கள் கவனம் செலுத்தியுள்ளன: புலம்பெயர்ந்தோரின் பணிச்சூழல்கள் மற்றும் ஊதியங்கள், வீட்டு சிரமங்கள், அவர்களது குடும்பங்களுக்கான வசதிகள் மற்றும் மாநில எல்லைகளை கடந்த பலன்கள் ஆகியன.

இந்த நடவடிக்கைகள் எந்த அளவிற்கு போதுமானவை, மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிய இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர் ஆராய்ச்சியாளர்களுடன் பேசினோம். ஒட்டுமொத்த ஒருமித்த கருத்து: இந்தியா நம்பகமான தரவுகளை ஒன்றிணைக்க வேண்டும், வேலைகளை உருவாக்க வேண்டும், மற்றும் முறையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போதுள்ள மற்றும் புதிய தொழிலாளர் விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்பது ஆகும்.

விரைவான திருத்தங்கள்

மார்ச் 2020 இல், 800 மில்லியன் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக 5 கிலோ கோதுமை அல்லது அரிசி மற்றும் ஒரு கிலோ விருப்பமான பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இது நவம்பர் 2020 வரை தொடர்ந்தது.

ஜூன் 2020 இல், கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் என்ற திட்டத்தை அரசு அறிவித்தது, இது சில மாநிலங்களில் திரும்பி வருபவர்களை வேலைக்கு அமர்த்த கிராமப்புற பொதுப்பணித் திட்டமாகும்.

இவை நிவாரண நடவடிக்கைகள், மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை. 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நீடித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அறிவிக்கப்பட்ட சில நடவடிக்கைகளில் ரேஷன் கார்டு இடம் பெயர்வு மற்றும் புலம்பெயர்ந்தோர் பொதுவாகப் பயன்படுத்தும் மலிவு வாடகை வீட்டுத் திட்டங்களுக்கான வரி விடுமுறை ஆகியவை அடங்கும். ஆனால் இவை புதியவை அல்ல - இந்த நடவடிக்கைகளில் சில சிறிது காலமாக இருந்தன, மற்றவை நிறுவப்பட்ட நடைமுறைகளின் விரிவாக்கமாகும், பிப்ரவரி 2021 இந்தியாஸ்பெண்ட் பகுப்பாய்வு காட்டுகிறது.

ஒடிசாவின் காந்தமஹாலில் இருந்து குடியேறிய தொழிலாளி ராஜேஷ்*, 36, கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில், ஒரு பிளைவுட் தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிகிறார். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, ​​அவரது தொழிற்சாலையும் மூடப்பட்டது, அவரது வேலையும் வருமானமும் நீடிக்குமா என்று யோசிக்க வைத்தது. அவரது நடமாட்டம் தடைசெய்யப்பட்டது, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது கடினமானது. "அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் எனக்கு ஒரு முறை மட்டுமே அரசு உதவித்தொகுப்பு கிடைத்தது, எனது நிறுவனத்திடமிருந்து 2 கிலோ அரிசி சில முறை கிடைத்தது," என்று அவர் கூறினார். அரசு நிவாரணம் அல்லது திட்டங்களைப் பற்றி யாரும் தமக்கு தெரிவிக்கவில்லை, எனவே எந்த ஆதரவையும் தாம் கேட்கவில்லை என்றார். "பொது முடக்கத்தின் போது எனது நிறுவனம், மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கு வாரத்திற்கு ரூ.1,000 கொடுத்தது, தேவை இருந்தால் சம்பள அட்வான்ஸ் தருவதாக சொன்னார்கள்" என்று அவர் கூறினார்.

நீடித்த பிரச்சினைகள்

புலம்பெயர்ந்தோரைப் பாதுகாக்க பல சட்டங்களும் விதிமுறைகளும் இருந்தபோதும், பொது முடக்கமானது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆபத்தான பணிச்சூழல்கள் குறித்து கவனத்தை ஈர்த்தது. தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக 2019 மற்றும் 2020 க்கு இடையில் நிறைவேற்றப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயனளிக்காது என்று இடம்பெயர்வு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 1979 ஆம் ஆண்டில், இந்தியா மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாக்க, மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தை (ISWM - ஐ.எஸ்.டபிள்யூ.எம்) இயற்றியது. இது ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒப்பந்தக்கார அமைப்புகளுக்கும் பொருந்தும், ஆனால் அது சரியாக செயல்படுத்தப்படவில்லை என்று லாப நோக்கற்ற நிறுவனமான மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD - ஐ.எச்.டி) வேலைவாய்ப்பு ஆய்வுகள் மையத்தின் இயக்குனர் ரவி ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். இந்த சட்டம் இப்போது தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் (OSH) விதிமுறைகள் - 2020 இன் கீழ் உட்பட்டது.

தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதிமுறைகளானது சுயதொழில் செய்பவர்கள் அல்லது சொந்தமாக குடியேறுபவர்களைச் சேர்க்க, 'ஊழியர்கள்' என்ற வரையறையுடன் இதை விரிவுபடுத்தியுள்ளது, மற்றும் விதிமுறைகளில் பொருந்தக்கூடிய தன்மையைக் குறைத்துவிட்டது - குறைந்தது ஐந்து நபர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களில் இருந்து 10 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்று பயன்படுத்துகிறது, இதன் மூலம் 10 க்கும் குறைவான ஊழியர்களைப் பயன்படுத்தும் நுண் நிறுவனங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இந்த சட்டத்தின் நோக்கம் விரிவுபடுத்துவதில்லை.

மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டமானது (ISWM) "வழக்கற்றுப் போயிருந்தது மற்றும் தற்போதைய பொருளாதார யதார்த்தங்களில் இருந்து துண்டிக்கப்பட்டது" என்று, அஜீவிகா பணியகத்தின் இடம்பெயர்வு மற்றும் தொழிலாளர் தீர்வுகளுக்கான மையத்தில் ஆலோசகர் திவ்ய வர்மா கூறினார். தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் (OSH) விதிக்களின் கீழ் அதை உட்படுத்துவது மற்றும் பணியாளர் எண்ணிக்கையில் "தன்னிச்சையாக" வரம்புகளை உருவாக்குவது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவாது.

மற்றொரு சட்டமான, கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் சட்டம்- 1996 (BOCWA), மாநில அரசுகள் கட்டுமானத்திற்காக மாநில நல வாரியங்களை உருவாக்க வேண்டும் மற்றும் பிற தொழிலாளர்கள் நலத்திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும் என்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% பங்களிக்கும் கட்டுமானத் துறையில் அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அதாவது 55 மில்லியன் பேர் பணியாற்றுகின்றனர். கட்டுமான செலவினங்களில் 1% செஸ் உள்ளடக்கிய நலவாரிய நிதியம், மாநிலங்களால் வசூலிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு மத்திய நிதிக்கு அனுப்பப்படுகிறது. பொது முடக்க காலத்திலும் அதற்குப் பின்னரும் மாநில வாரியங்கள் சுமார் 18.3 மில்லியன் கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 5,000 கோடி ரூபாய் (690 மில்லியன் டாலர்) வழங்கியுள்ளதாக மத்திய அரசு கூறியது.

"கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் சட்டம்- 1996 (BOCW) இருப்புக்களைக் குவித்துள்ளது, ஆனால் மோசமான பதிவு உள்ளது மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் சட்டம், நல வாரியத்தின் ஒரு பகுதியாக இல்லை" என்று ஸ்ரீவஸ்தவா கூறினார். தொழிலாளர்கள், குறிப்பாக பயணம் செய்யும் புலம்பெயர்ந்தோர், ஆண்டு அடிப்படையில் தங்கள் பதிவை புதுப்பிப்பது கடினம் மற்றும் சவாலானது என்று வர்மா கூறினார்.

அரசின் நடவடிக்கை 'போதாது'

புலம்பெயர்ந்தோர் நெருக்கடி விவகாரத்தில் அரசின் நடவடிக்கை தாமதமானது மற்றும் பகுதியளவே இருந்ததாக, குடியேற்றத்துறையில் பணிபுரிபவர்கள் தெரிவித்தனர். "பெரும்பாலும் கொள்கைகள் காகித அளவில் மாறுகின்றன, ஆனால் கணிசமான முதலீடு, வலுவான அரசியல் விருப்பம் மற்றும் முன்னேற்றத்தை முழுமையாக கண்காணித்தல் இல்லாவிட்டால் அடிமட்ட யதார்த்தங்கள் மாறாவே மாறாது" என்று, இடம்பெயர்வு மற்றும் உள்ளடக்கிய மேம்பாட்டு மையத்தின் (CMID -சிஎம்ஐடி) நிர்வாக இயக்குனர் பெனாய் பீட்டர் கூறினார்.

ஆகஸ்ட் 2020 இல் சுமார் 84% தொழிலாளர்கள், ஏதோவொரு பணிக்கு திரும்ப முடிந்தது, எனினும் அனுபவ வயது, பாலினம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகியவற்றில் பரவலாக வேறுபாடு உள்ளதாக, இந்தியாஸ்பெண்ட் ஜனவரி 2021 கட்டுரை தெரிவித்தது. ஆனால் இந்தியாவின் நடுத்தர வர்க்கம் (ஒரு நாளைக்கு 10.01 முதல் 20 டாலர் வரை சம்பாதிப்பவர்கள்) 32 மில்லியன் என்று சுருங்கிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகளாவிய பின்வாங்கலில் 60% ஆகும் என்று பியூ ஆராய்ச்சி (Pew Research ) பகுப்பாய்வு கூறுகிறது.

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் அல்லது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (MGNREGS) தேவை அதிகரிப்பது உள்ளதில் இருந்தே, ஊரடங்கின் தாக்கத்தை காணலாம். 2020-21 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 133 மில்லியன் மக்கள் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலை கோரினர், இது முந்தைய ஆண்டை விட 43% அதிகரிப்பு. 2020-21 ஆம் ஆண்டில் 110 மில்லியன் மக்கள் வரை இந்த திட்டத்தில் பணிபுரிந்தனர், இது 2019-20 முதல் நான்கு ஆண்டுகளில் சராசரியாக 78 மில்லியனாக இருந்தது.

2020-21 ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்கான கூடுதல் ரூ .40,000 கோடி (5.5 பில்லியன் டாலர்) நிதி அதிகரித்த போதிலும், முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டோடு ஒப்பிடும்போது 2021-22 ஆம் ஆண்டில் அரசு 35% குறைவான - செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட தொகை (நிதியாண்டின் தொடக்கத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு மாறாக) பணத்தை ஒதுக்கியுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் - ரூ .50,000 கோடி (6.9 பில்லியன் டாலர்) திட்டத்தை அறிவித்தது, உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், ஆறு மாநிலங்களின் 116 மாவட்டங்களில் வேலைக்கு திரும்புவதற்கும் தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான 25 இலக்கு உந்துதல் பணிகளுக்காக செலவிடப்படும். கரிப் கல்யாண் யோஜனா போன்ற திட்டங்கள் தற்போதுள்ள திட்டங்களை மட்டுமே மாற்றுகின்றன, மேலும் கவனமாக மறுசீரமைப்பு தேவைப்படுவதால் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஸ்ரீவாஸ்தவா குறிப்பிட்டார்.

அத்துடன், 6 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் சென்ற ஷ்ராமிக் ரயில்கள் போன்ற சில முயற்சிகள் தொழிலாளர்களுக்கு உதவியது, இது தொடர்ந்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பீட்டர் கூறினார்.

2013 யுனெஸ்கோ மற்றும் யுனிசெஃப் அறிக்கை "இந்தியாவில் உள்நாட்டு இடம்பெயர்வுக்கு ஒரு நிர்வாக முறையை உருவாக்க வேண்டிய அவசியத்தை" வலியுறுத்தியது. உள்நாட்டு இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பதற்கான ஒரு பிரத்யேக நிறுவனங்கள், சட்ட கட்டமைப்புகள், வழிமுறைகள் மற்றும் நடைமுறைகள் இதில் அடங்கும்.

கேரளா, கோவா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா ஆகியவை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதில் மிகவும் வெற்றிகரமாக உள்ளன, அதே நேரத்தில் டெல்லி உள்ளிட்ட முக்கியமான புலம் பெயர்ந்த மாநிலங்கள் மோசமாக செயல்பட்டுள்ளன என்று இந்தியாஸ்பெண்ட் 2020 நவம்பர் கட்டுரை தெரிவித்துள்ளது. சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக்காக புலம்பெயர்ந்தோரை மையமாகக் கொண்ட திட்டங்களை செயல்படுத்த கேரளாவால் முடிந்தது.

நம்பமுடியாத தரவு

கடந்த 2020ம் ஆண்டில் தரவு தொடர்பான இரண்டு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது: முதலாவதாக, புலம்பெயர்ந்தோரைப் பற்றிய அகில இந்திய கணக்கெடுப்பை மேற்கொள்ள முடிவு செய்தது. நம்பகமான தரவு அல்லது புலம்பெயர்ந்தோரின் பதிவு இல்லாதது, துயரமடைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகம் போன்ற நலத்திட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகளுக்குத் தடையாக இருந்தது. பின்னர், அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளத்தை உருவாக்கி தொடங்குவதற்கான செயல்முறையை அரசு தொடங்கியது.

"சரியான நேரத்தில், நல்ல தரவு இல்லாதது நல்ல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கையை உருவாக்குவதற்கு ஒரு தடையாகும். இடம்பெயர்வு விஷயத்தில், நாம் அறிவார்ந்து செயல்படவில்லை, "என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

தேசிய மாதிரி கணக்கெடுப்பின் கடைசி இடம்பெயர்வு கணக்கெடுப்பு 2007-08 இல் நடத்தப்பட்டது. (இதில், ஒரு புலம்பெயர்ந்தவர் ஒரு நபராக வரையறுக்கப்பட்டார், அவரின் கடைசி வசிப்பிடம் தற்போதைய இடத்திலிருந்து வேறுபட்டது, அவர் கடைசி இடத்தில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் தொடர்ந்து தங்கியிருந்தார்). கணக்கெடுப்பில் கணக்கிடப்பட்டவர்களில் சுமார் 29% குடியேறியவர்கள் என்று கண்டறியப்பட்டது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு-2011 இடம்பெயர்வு பற்றிய தரவுகளைக் கணக்கிட்டிருந்தாலும், அது 2020 ஆம் ஆண்டில் ஓரளவு மட்டுமே பகிரப்பட்டது ஏனெனில் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் அதன் வெளியீட்டைத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்ததாக, ஐ.எச்.டி.யின் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

ஊரடங்கின் ஆரம்ப மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றது தொடர்பான எந்த தகவலையும் பராமரிக்கவில்லை என்று 2020 செப்டம்பரில், பாராளுமன்றத்தில் அரசு அறிவித்தது. ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த வேலை இழப்புகள் குறித்து எண்ணிக்கைகளும் இல்லை என்றும் அது கூறியது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய அளவில் கணக்கிடப்படாமலும் அங்கீகரிக்கப்படாமலும் இருக்கிறார்கள் என்று, அஜீவிகா பணியகம் மற்றும் சி.எம்.ஐ.டி உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட, டிசம்பர் 2020 சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) அறிக்கை தெரிவித்தது. அனைத்து மட்ட நிர்வாகங்களிலும் நம்பகமான தரவுத்தளங்கள் இருந்தால் மட்டுமே தொழிலாளர்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு இடையில் ஒரு இடைமுகத்தை நிறுவ முடியும் என்று அறிக்கை கூறியுள்ளது.

ஊரடங்கின் போது 11.4 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் வீடு திரும்பியிருப்பது ஒரு "கட்டுக்கதை" என்று அரசு மதிப்பிடுகிறது, ஏனெனில் இது பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களை மட்டுமே உள்ளடக்கியது என்று ஐ.எச்.டி ஸ்ரீவத்சவா கூறினார். "உண்மையான புள்ளிவிவரங்கள் மிகவும் அதிகமானவை," என்று அவர் கூறினார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் என்எஸ்எஸ் ஆகியன, வேலைக்கு குடியேறுபவர்களின் உண்மையான எண்ணிக்கையை ஒருபோதும் கண்டறியவில்லை. குறிப்பாக பருவகால குடியேறியவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் அவர்களின் வாழ்க்கையில் சமூக பாதுகாப்பு இல்லை என்று, அஜீவிகா பணியகத்தின் வர்மா கூறினார். புலம்பெயர்ந்தோரின் நடமாட்டத்தைப் பதிவு செய்வதற்கான நிறுவன வழிமுறைகளை உருவாக்குவதன் மூலமும், பல்வேறு சட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கான பதிவுகளைச் செயல்படுத்துவதன் மூலமும், இது சரி செய்யப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய தேசிய தரவுத்தளம், திரும்பி வரும் புலம்பெயர்ந்தவர்களின் பதிவுகள் மற்றும் அவர்களின் ஆதாரம் மற்றும் இலக்கு பற்றிய விவரங்கள், முந்தைய வேலைவாய்ப்பு விவரங்கள் மற்றும் அவர்களின் திறன்களின் தன்மை ஆகியவை பதிவு செய்வது விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று, டிசம்பர் 2020 பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்தது. நிதி ஆயோக் தயாரித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான முதலாவது வரைவுக் கொள்கை, இடம்பெயர்வு தொடர்பான 2017 செயற்குழு அறிக்கையாக, தரமான தரவுகளின் தேவை குறித்து இதே போன்ற பரிந்துரைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மத்திய தொழிலாளர் அமைச்சகம் தற்போது சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை வழங்குவதற்காக அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுத்தளத்தை உருவாக்கி வருவதாக, மார்ச் 2021 மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் அரசு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுத்தளத்தின் வெளியீடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இடம்பெயர்வு தரவுகளைப் போல தாமதப்படுத்தக்கூடாது என்று சிஎம்ஐடியின் பீட்டர் எச்சரித்தார்.

இருப்பினும், தொழிலாளர்களின் இயக்கம் "டைனமிக் தரவுத்தளத்தை உருவாக்குவது" ஒரு சவாலாக மாறும் என்று ஐ.எச்.டி.யின் ஸ்ரீவாஸ்தவா சுட்டிக்காட்டினார். ஏனென்றால், தரவுத்தளத்தில் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்கள் அனைவரையும் பதிவு செய்ய வேண்டியிருக்கும், மேலும் பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முறைசாரா வேலைகளில் ஈடுபடுவதால் இது சாத்தியமில்லை, என்றார்.

சொந்த மக்களுக்கு வேலை ஒதுக்கும் மாநிலங்கள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மெதுவாக நடந்து கொண்டாலும், சில மாநிலங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, தங்கள் சொந்த மாநில மக்களுக்கு வேலைகளை ஒதுக்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. மார்ச் 2021 இல், ஹரியானா அரசு தனியார் வேலைகளை உள்ளூர் மக்களுக்கு 75% ஒதுக்குவதற்கான சட்டத்தை அறிவித்தது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகியனவும், ஏற்கனவே இதே போன்ற ஏற்பாடுகளை செய்துள்ளன அல்லது முன்மொழியப்பட்டுள்ளன.

இந்தியாவின் அரசியலமைப்பின் 19வது பிரிவானது, குடிமக்கள் நாட்டின் எந்த பகுதியிலும் சுதந்திரமாக குடியேறவும் வேலைவாய்ப்பு பெறவும் அடிப்படை உரிமையாக அனுமதிக்கிறது. ஆனால் குடியேற்றம் தொடர்பான விதிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்துவதோடு, 2017 ஆம் ஆண்டின் பணிக்குழுவின் பரிந்துரைக்கு எதிராகச் செல்லும், இது மாநிலங்கள் "விரைவாக வேலை செய்வது தொடர்பான சட்டங்களில் குடியேற்ற விதிகளை தீவிரமாக அகற்ற வேண்டும்" என்று கூறியது.

ஆனால் முறையான வேலைவாய்ப்புக்கு மாநில வேலை ஒதுக்கீடு பொருந்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் முறைசாரா துறையில் பணிபுரிவதால், அவர்கள் குறைவாக பாதிக்கப்படுவார்கள் என்று பீட்டர் கூறினார். 1991 ல் தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய 22 ஆண்டுகளில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சுமார் 61 மில்லியன் வேலைகளில், 92% முறைசாரா வேலைகள் ஆகும்.

நூறு நாள் வேலை உத்தரவாதத் திட்டம் போன்ற நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் ஊதியம் தாமதமின்றி மத்திய அரசின் நகர்ப்புற திட்டங்கள், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை சிதைக்காமல், குறைந்த திறமையான நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைகள் மற்றும் வருமான பாதுகாப்பை வழங்க முடியும். இத்தகைய திட்டங்களின் நோக்கத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேண்டுமென்றே சேர்க்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வர்மா மேலும் கூறினார்.

ஒரு சிறந்த இடம்பெயர்வு கொள்கையில் என்ன இருக்கும்

இந்தியாஸ்பெண்ட் நேர்காணல் செய்த இடம்பெயர்வு அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒரு வலுவான புலம்பெயர்ந்த கொள்கையை உறுதிப்படுத்த பின்வரும் நடவடிக்கைகளை பரிந்துரைத்தனர்:

  • அனைத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களும், முறைசாரா தொழிலாளர்களும் உலகளாவிய, சிறிய சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வர வேண்டும்.

  • அவர்கள் வழங்கும் பணிச்சூழல்களுக்கு அவர்களது முதலாளிகளை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.

  • தொழிலாளர் சட்டங்கள் கடுமையானதாக இருக்கக்கூடாது, மாறாக கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தீர்வு நீதியை அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும்.

  • கொள்கை சீர்திருத்தங்கள் மாநில மற்றும் மத்திய துறைகள் முழுவதும் நலத்திட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த மனிதவளங்கள் உட்பட போதுமான உள்கட்டமைப்பு மற்றும் வளங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

  • நகர்ப்புற ஏழைகளுக்கு ஆதரவளிக்கும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்க வேண்டும்.

  • புலம்பெயர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் தேவைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

*அடையாளத்தை பாதுகாக்கும் பொருட்டு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

(பிரியங்கா குலாட்டி, இந்தியாஸ்பெண்ட் பயிற்சியாளர். இக்கட்டுரைக்கு உள்ளீடுகளை வழங்கியுள்ளார்).


உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.