சிகிச்சை முதல் மருத்துவ உபகரணங்கள் வரை, கோவிட் நேரத்தில் அதிக தொகை செலுத்தும் நோயாளிகள்
புதுடெல்லி: சாந்தினி பி பெங்களூரில் வசிக்கிறார், அவரது வயதான அத்தை மற்றும் மாமா இருவரும், மும்பையில் தனிமையில் வசிக்கின்றனர். சாந்தினியின் 76 வயதான மாமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்பட்ட தருணத்தில், கோவிட்-19 அறிகுறி தென்பட்டதால், அவர்கள் ஒரு கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வயதான தம்பதிக்கு மும்பையில் குடும்ப உறவுகள் என்று யாருமில்லை. எனவே, பெங்களூருவில் உள்ள சாந்தினிதான், தொலைதூரத்தில் இருக்கும் தனது மாமாவுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனையை ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது. கொரோனா தொற்றுநோயால் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை வழங்குவதை, அவர்களது வழக்கமான சிகிச்சை மையம் நிறுத்திவிட்டதால், புதிய டயாலிசிஸ் மையத்தை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு, அந்த குடும்பத்தினர் வழக்கமான தங்களது மையத்தில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு ரூ.2,500 மட்டுமே செலுத்தினர். ஆனால் மே 2020 இல், டயாலிசிஸ் செய்ய, புதிய மையத்தில் ஆம்புலன்சிற்கு ரூ.10,000 மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை ஒன்றுக்கு ரூ.39,000 செலுத்த வேண்டி இருந்தது. டயாலிசிஸ் செலவில் ஏற்பட்ட கிடுகிடு உயர்வு, அந்த குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சில நாட்களுக்கு பிறகு, சாந்தினியின் 66 வயதான அத்தைக்கு கோவிட்-19 இருப்பது தெரியவந்தது, இருவரும் வேறு மருத்துவமனைக்கு சென்று விட்டனர், அந்த மருத்துவமனையோ, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருந்தவாறு டயாலிசிஸ் செய்ய வலியுறுத்தியதுடன் ஐ.சி.யு.-வுக்கும், டயாலிசிஸ் சிகிச்சைக்கும் தொகை செலுத்தும்படி நெருக்கடி தந்தது.
தொகையில் வெளிப்படை (இன்மை)
இந்தியாவில் தனியார் மருத்துவத்துறையில் சிகிச்சைகளுக்கு அதிக செலவு பிடிக்கும் என்பது பொதுவாக எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் கோவிட் அல்லாத பராமரிப்புக்கான தொகை, கட்டணங்களை கிடுகிடுவென்று அதிகரிக்கச் செய்துள்ளது.
மத்திய அரசும் நீதிமன்றங்களும், ஒருசில விலைகளை ஒழுங்குபடுத்துவதில் இறங்கியுள்ளன. உதாரணமாக, ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உச்ச நீதிமன்றம் ரூ.4,500 என்ற தொகையை நிர்ணயித்தது, டெல்லி உயர்நீதிமன்றம் நோயெதிர்ப்பு உபகரணங்களை ரூ.400-க்கு தான் விற்பனை செய்ய வேண்டும் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு கட்டளையிட்டது. கையுறை மற்றும் அறுவை சிகிச்சைக்கான முகக்கவசங்களின் விலையை அரசு நிர்ணயித்தது.
ஆனால் பல முக்கிய பொருட்கள் விலை, நிர்ணயிக்கப்பட்டதைவிட வெளியே அதிகவிலையில் இருந்தன; இதில் என்.95 முகக்கவசங்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ), முகக்கவசங்கள், முக பாதுகாப்பு கண்ணாடி, தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கான கட்டணங்கள் மற்றும் ஒட்டுமொத்த சிகிச்சை கட்டணங்கள் ஆகியன அடங்கும்.
விலையுயர்ந்த கோவிட்-19 பரிசோதனைகள்
தனியார் மருத்துவமனைகள், அரசின் அளவுகோல்களுக்கு பொருந்தாத நோயாளிகளுக்கு கூட, கோவிட்-19 சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக, பொது சுகாதாரக்குழுக்களின் வலையமைப்பான ஜான் ஸ்வஸ்தியா அபியானின் சுகாதார ஆர்வலர் இனாயத் சிங் கக்கர் கூறினார்.
"சில சந்தர்ப்பங்களில் மருத்துவமனைகள் கோவிட் அல்லாத நோயாளிகளும், அவர்களை சந்திக்கச் செல்லும் குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு நோயாளியைப் பார்க்க ஒவ்வொரு முறை வந்து செல்லும்போதும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. இத்தகைய கட்டணங்கள் சிகிச்சையின் ஒட்டுமொத்த செலவை அதிகரிக்கின்றன; இது டயாலிசிஸ் போன்ற வழக்கமான சிகிச்சை தேவைப்படும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மிகவும் கடினமாக உள்ளது,” என்று கக்கர் கூறினார்.
கோவிட்-19 சோதனைகளுக்கான கட்டணத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், கோவிட்-19 சோதனையைச் சுற்றியுள்ள குழப்பமான மற்றும் அதிக தொகை என்ற சூழ்நிலை இந்தியாவில் நீடித்து வருகிறது.
மருத்துவ பரிசோதனை ஆய்வகங்களை கொண்ட தைரோகேர், கோவிட்-19 சோதனைகள் உள்ளடக்கிய கண்டறிக்கூடிய சுருக்கமாக தொகுப்புகளை வெளியிட்டது. கக்கர் கூறியதற்கேற்ப, அனைத்து நோயாளிகளுக்கும் கோவிட் பரிசோதனையை கட்டாயமாக்கிய பல தனியார் மருத்துவமனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தைரோகேர் இந்த தொகுப்புகளை வழங்கியதாக, அதன் தலைவர் ஆரோக்கியசாமி வேலுமணி கூறினார். ‘பல தனியார் மருத்துவமனைகள் பிற சிகிச்சைகளை மேற்கொள்ள வரும் நோயாளிகளுக்கும் கூட, கோவிட் பரிசோதனைகளை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வந்தன" என்று வேலுமணி கூறினார்.
தைரோகேர் மருத்துவமனைகள், பரிசோதனைக்கு ரூ.4,500 க்கும் குறைவாகவே வசூலிக்கிறது; ஆனால் நோயாளிகளோ, உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது மாதிரிகள் சேகரிப்பது போன்றவற்றின் சேவைக்கட்டணங்களை சேர்த்து, மருத்துவமனைகளுக்கு அதிக கட்டணம் செலுத்துவதாக அவர் மேலும் கூறினார்.
ஆர்டி-பி.சி.ஆர் சோதனையின் விலைகள் குறையக்கூடும் என்று வேலுமணி கூறுகிறார். "சோதனையின் செலவு சோதனைகளின் அளவு மற்றும் இந்த பரிசோதனையை செய்வதற்கான திறனைப் பொறுத்தது. அரசு அதன் சோதனை அளவை அதிகரித்து, ஆய்வகங்கள் பரிசோதனைக்கான திறனை அதிகரித்தால், கட்டண விகிதங்கள் குறையக்கூடும். ஆர்டி - பி.சி.ஆர் சோதனைகளுக்கான விலைகள், ஒவ்வொரு இரட்டிப்பிற்கும் 10% குறையக்கூடும் என்று நாங்கள் நினைக்கிறோம், ”என்று அவர் கூறினார்.
பலன் தரும் முகக்கவசம்
நோயாளிகள் அதிக கட்டணம் என்ற சுழலில் சிக்கிய நிலையில், மருத்துவமனைகள் மலிவு விலையில் தரமான உபகரணங்களை வாங்குவது என்பதும் கடினமானது. அத்தகைய தரமானவற்றில் ஒன்று, என்.95 முகக்கவசம் ஆகும்.
"இந்த தொற்றுநோய்களின் போது [ஒரு] மருத்துவமனையில் பணிபுரிவது ரஷ்ய சில்லி போன்றது" என்று மும்பையில் உள்ள காமா மருத்துவமனையின் சிறுநீரகவியல் கவுரவ இணை பேராசிரியர் அபர்ணா ஹெக்டே கூறினார். "கோவிட்-19 வார்டில், ஒவ்வொரு நோயாளியும் நேர்மறையானவர் என்பது எங்களுக்கு தெரியும்; ஆனால் சாதாரண வார்டில், யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியாது. எனவே, சுகாதார ஊழியர்களை எல்லா நேரங்களிலும் பாதுகாக்க வேண்டும். அதற்கு என்.95 முகக்கவசம் முக்கியமானது" என்றார்.
இருப்பினும், அதிகவிலை மற்றும் என்.95 முகக்கவசங்களை வாங்குவதில் உள்ள சிரமம், பயன்படுத்திய முகக்கவசங்களை சுகாதார ஊழியர்கள் மீண்டும் பயன்படுத்த கட்டாயப்படுத்தி இருக்கிறது. "நாங்கள் ஒவ்வொரு சுகாதார ஊழியருக்கும் ஐந்து முகக்கவசங்களை வழங்கியுள்ளோம், அவற்றை சுழற்றி முறையில் அதை ஒவ்வொன்றாக அணியச் சொன்னோம். ஆறு நாட்களுக்குப் பிறகு மீண்டும் முதல் முகக்கவசத்தையே அணிய வேண்டும்,” என்று ஹெக்டே கூறினார்.
என்.95 முகக்கவசங்கள் உண்மையில், சுகாதார ஊழியர்களுக்கு மிக முக்கியமான விஷயம்," என்று அவர் கூறினார். “தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கோவிட்-19 நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் மட்டுமே இவற்றை அணிய வேண்டும். எல்லா சுகாதார ஊழியர்களுக்கும் அது தேவையில்லை. ஆனால் என்.95 முகக்கவசங்கள் இன்னும் பல சுகாதார ஊழியர்களுக்கும், மருத்துவமனையின் பெரும்பாலான பிரிவுகளுக்கும் தேவைப்படுகின்றன” என்றார்.
என்.95 முகக்கவசங்களுக்கு இத்தகைய தேவை உள்ள நிலையில், அவற்றின் விலையை உடனடியாகக் குறைக்க அரசுக்கு உத்தரவிடுமாறு பம்பாய் உயர்நீதிமன்றத்தில் பத்திரிகையாளர் சுசேதா தலால் மற்றும் ஊழல் தடுப்பு ஆர்வலர் அஞ்சலி தமானியா ஆகியோர் வழக்கு தொடர தூண்டியது.
சுகாதார ஊழியர்களுக்காக என்.95 முகக்கவசங்களை வாங்க முயற்சித்ததாகவும், “என்.95 முகக்கவசங்கள் பரவலாக கறுப்புச்சந்தையில் அதிக விலைக்கு விற்று லாபம் ஈட்டப்படுவதை கண்டு தாங்கள் அதிர்ச்சியடைந்ததாகவும்” தலால் மற்றும் தமானியா ஆகியோர் தங்கள் வாக்குமூலத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரமாணப் பத்திரம், இந்தியா ஸ்பெண்டிடம் உள்ளது. இந்தியாவில் என் 95 முகக்கவசங்களின் முக்கிய உற்பத்தியாளர்களில் ஒருவர் அவற்றை ரூ.40 மற்றும் ரூ.60 க்கு விற்றார், அத்துடன், பொருட்கள் மற்றும் சேவை வரி தனி. மனுதாரர்கள், அந்த விலையில் மற்றொரு முகக்கவச தொகுதியை வாங்க விரும்பியபோது, உற்பத்தியாளரோ பின்வாங்கினார். பின்னர், மனுதாரர்களுக்கு மற்ற டீலர்களிடம் இருந்து சலுகைகள் கிடைத்தன, அதே முகக்கவசங்கள் ரூ.210க்கு விற்கப்பட்டன; அவை முன்பு ரூ.17க்கு விற்கப்பட்டவை.
இந்த மனுவானது, என்.95 முகக்கவங்சங்களின் விலையை ஈடுசெய்ய அரசு முனையவில்லை என்று, நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியது - சில நேரம், சுகாதார ஆர்வலர்கள் இதை விசித்திரமாகக் கருதுகின்றனர். மார்ச் 2020ல், என்.95 முகக்கவசங்கள், இரண்டு மற்றும் மூன்று அடுக்கு முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்கள் அனைத்தும் அத்தியாவசிய பொருட்கள் என்று வரையறை செய்து அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இது உபகரணங்களின் விலையை தணிக்க உதவியது, ஆனால் என்.95 முகமூடிகளின் விலையை குறைக்கவில்லை.
இத்தகைய விலை உயர்வு மற்ற சுகாதார மற்றும் மருத்துவச் சாதனங்களிலும் காணப்படுகிறது. "எங்கள் தொழிற்சாலையில் தொழிலாளர்களைக் கண்காணிக்க வெப்பமானிகளை நாங்கள் வாங்க வேண்டியிருந்தது. ஜனவரி மாதத்தில் சுமார் 1,000 ரூபாய்க்கு கிடைத்த தெர்மோமீட்டர்கள், மார்ச் மாதத்தில் ஒன்றின் விலை ரூ.10,000 வரை உயர்ந்துள்ளது” என்று இந்திய மருத்துவ சாதனங்கள் தொழில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், இந்துஸ்தான் சிரிஞ்ச்ஸ் மற்றும் மெடிக்கல் டிவைஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் நாத் கூறினார்; இந்த நிறுவனம், பரவலாக பயன்படுத்தப்படும் டிஸ்போ வான் சிரிஞ்சுகளை தயாரிக்கிறது.
இருப்பினும், குடிசைத்தொழில்கள் இப்போது நாடு முழுவதும் வளர்ச்சி அடைந்துள்ளன, அவை, தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முகக்கவசங்கள், சானிடைசர்கள் போன்றவற்றை உள்ளூரிலேயே தயாரிக்க முயற்சிக்கின்றன. உள்நாட்டு உற்பத்தியிலும் அரசு ஆர்வமாக உள்ளது, இது பற்றாக்குறையை குறைக்கவும் விலைகளை குறைக்கவும் உதவும், ”என்று அவர் மேலும் கூறினார்.
“இது, தற்போது விற்பனையாளரின் சந்தை. யார் வேண்டுமானாலும் எந்த விலையையும் நிர்ணயம் செய்யலாம். மக்கள் தரம் அல்லது அவற்றை தயாரிப்பது யார் என்பதை கவனிப்பதில் ஆர்வம் காட்டாமல் தொகையை தருவார்கள்”என்று அகில இந்திய மருந்து செயல்பாட்டு வலையமைப்பின் இணை அழைப்பாளர் மாலினி ஐசோலா கூறினார்.
மெதுவாக செயல்படும் அரசு
இந்த தொற்றுநோய்களின் போது, விலைகளை கட்டுப்படுத்துவதில் இந்தியா மெதுவாக செயல்படுவதாக, இந்திய மருந்து விலை கட்டுப்பாட்டு தேசிய மருந்து விலை ஆணையத்தின் முன்னாள் தலைவர் பூபேந்திர சிங் கூறினார்.
"தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், கை சுத்திகரிப்பான் மற்றும் கையுறை போன்ற ஒரு சில வெகுஜன நுகர்வு பொருட்களின் விலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும்," என்று அவர் கூறினார்.
பூபேந்திர சிங் தலைவராக இருந்த காலத்தில், இருதய அறுவை சிகிச்சைக்கான ஸ்டெண்டுகள் மற்றும் முழங்கால் மூட்டு உள்வைப்புகள் உள்ளிட்ட பல மருந்து சாதனங்களின் விலைகள் 2017 மற்றும் 2018 க்கு இடையில் மட்டுப்பட்டிருந்தன. இந்தியாவில், சில மருந்துகள் மற்றும் சாதனங்களின் விலை, தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலின் கீழ் கொண்டுவரப்பட்டால் அவை கட்டுப்படுத்தப்படுகின்றன. சிங் மேற்பார்வையிட்ட 2018 ஆம் ஆண்டில் அரசு அறிக்கையானது, நோயாளிகளுக்கு விதிக்கப்படும் சில பொருட்களில் தனியார் துறை 1,737% வரை லாபம் ஈட்டுவதாகக் கூறியது.
சுகாதாரப் பொருட்களின் விலையை நீதிமன்றங்கள் நிர்ணயிக்கும் முடிவை சிங் ஏற்கவில்லை. ஏனென்றால், “நீதிமன்றங்களால் நிர்ணயிக்கப்பட்ட விலைகள் நடைமுறைக்கு ஏற்றதாகவோ அல்லது இல்லாமலும் போகலாம். இது ஒரு குறுகியகால நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கலாம், ஆனால் இறுதியாக அந்த பணிகளில் நிபுணத்துவம் பெற்ற அமைப்புகள் தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றார்.
விலை ஒழுங்குமுறைக்கு மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டும் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். "சிகிச்சையில் ஈடுபடுவோர், நுகர்பொருட்களின் விலையை நிர்ணயிப்பது உதவாது, ஏனெனில் மருத்துவமனைகள் ஒட்டுமொத்த சிகிச்சை செலவை முடிவற்ற வழிகளில் உயர்த்தக்கூடும்" என்றார்.
எடுத்துக்காட்டாக, தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், சானிடைசர்கள், கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் போன்றவை மற்றும் நுகர்பொருட்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும் என்று சிங் விளக்கினார். ஆனால், மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை. மருத்துவமனைகளில் நோயறிதல் மற்றும் ஒட்டுமொத்த சிகிச்சையின் விலையை நிர்ணயிக்க, அந்தந்த மருத்துவ நிறுவன சட்டங்களைப் பயன்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பாகும்.
(பூயான், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.