மும்பை: இந்திய வனப்பகுதிகளில், கடந்த 6 ஆண்டுகளில், ஒன்றரை மடங்கு தீ விபத்து அதிகரித்துள்ளதாகவும், 35,888 காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், 2018ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அரசு சமர்ப்பித்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வறட்சி, குறிப்பாக குளிர்காலம் மற்றும் மழைக்காலத்திற்கு முந்தைய காலப்பகுதியில் ஏற்படும் வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் காட்டுத்தீ ஏற்பட காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவில், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சராசரி வெப்பநிலை 1.20 செல்சியஸ் ஆக அதிகரித்துள்ளது என, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.சி.) கணக்கீடு தெரிவிக்கிறது.

தீயிற்கு உகந்த வறண்ட சூழல்

"காலநிலை மாற்றம் வறட்சியை அதிகரிக்கிறது, " என, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய துணை இயக்குனர் சந்திரா பூஷண், இந்தியா ஸ்பென்ட்டிடம் கூறினார். மண் மற்றும் வளி மண்டலத்தில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் போது, பெரும்பாலான காட்டுத்தீ ஏற்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் (2002- 2016) 13 ஆண்டுகள், வெப்பம் நிறைந்திருந்ததாக, சி.எஸ்.சி. ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளும், (2001- 2010/ 2007- 2016) வெப்பம் மிகுந்திருந்ததாக, 2017 ஆம் ஆண்டு, ஜூன் 5ம் தேதியிட்ட ‘டவுன் டு எர்த்’ இதழ் குறிப்பிட்டுள்ளது.

21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்தியாவில் நான்கு பருவங்களில் மூன்றில் (அல்லது வருடத்திற்கு 9 மாதங்கள்) வெப்பநிலை அதிகரித்து வந்துள்ளதாகவும், 1.50 செல்ஷியசுக்கு மேல் அதிகரித்துள்ளதாக, 1901 முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான, சி.எஸ்.இ. வெப்பநிலை தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 1995 முதல் வெப்ப நிலை அதிகரித்து வருவதால், அடுத்த 20 ஆண்டுகளுக்குள், புவி வெப்பமடைதலை 20 செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பாரீஸ் ஒப்பந்த இலக்கை, இந்தியா மீறும் நிலை உள்ளது.

காட்டுத்தீயால் இந்தியா ஆண்டு தோறும் ரூ.550 கோடியை இழப்பதாக, 2018, பிப்ரவரி 13ஆம் தேதி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோல், 10 மடங்கு அதிகமாக, ஆண்டுக்கு ரூ. 5,600 கோடியை வெள்ளத்தால் நிதி இழப்பை இந்தியா சந்திக்கிறது.

”வனப்பகுதியில் வெப்பம் அதிகரிப்பதால், ஒரு தீய சுழற்சி உருவாகிறது. தாவரங்கள் தீக்கிரையாகும் போது வெளிப்படும் கார்பன் வாயு, புவி வெப்பமயமாதலை அதிகரிக்கிறது,” என, 2015 ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. தீயால் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்பட்டு, புவி வெப்பமயமாகிறது; புவி வெப்பமயமாவதால், அதிக காட்டுத்தீ உண்டாகிறது.

வனப்பகுதியில் ஏற்பட்டு தீ விபத்துகளுக்கு, 90% மனித தவறுகளே காரணமாகிறது. வேண்டுமென்றோ (தனி லாபத்துக்கு அல்லது பழி தீர்க்க), அலட்சியம் அல்லது விபத்து போன்றவையே காட்டுத்தீக்கு வழிவகுக்கிறது.

”உலக பருவநிலை மாற்றம், சூழல் இயக்கத்தில் பெரும் தாக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது,” என, ஆராய்ச்சியாளர்கள் ஜக்தீஷ் கிருஷ்ணசுவாமி, ராபர்ட் ஜான் மற்றும் ஷிஜோ ஜோசப் ஆகியோரின் 2013ஆம் ஆண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தட்பவெப்ப நிலை போக்குகள், தாவர பச்சையத்தின் பருவகால சுழற்சிகள் [பசுமை அல்லது ஒரு மரத்தின் இலைகள்] மற்றும் ஐந்து பல்லுயிர் வனப்பகுதிகளை சேர்ந்த 47 பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகளில், 1982- 2006ஆம் ஆண்டுக்கு இடையிலான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

”தாவரங்கள் மற்றும் வெப்பநிலை இடையிலான உறவு காலப்போக்கில் பலவீனமாக அல்லது, எதிர்மறையாக இருந்ததை நாங்கள் கண்டோம். சாதகமான வெப்பநிலை உணர்திறன் போன்ற இழப்பு மற்ற பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக, புள்ளி விவரங்கள் மேலும் கூறுகின்றன.

”வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் வெப்பமயமாதல் காரணமாக, இமயமலை போன்ற குளிர் பகுதிகளில், மரங்கள் பச்சை நிறத்தில் மறுமொழி கூறுவதாக கருதுவது தவறு,” என்கிறார், 2013 ஆய்வின் இணை ஆசிரியரும், சுற்றுச்சூழல் மற்றும் சூழலில் ஆராய்ச்சிக்கான (ATREE), அசோகா அறக்கட்டளையின் பல்லுயிர் மற்றும் பாதுகாப்புக்கான சூரி செகால் மைய செயல்பாட்டாளருமான ஜகதீஷ் கிருஷ்ணசுவாமி, இந்தியா ஸ்பெண்ட் நிறுவனத்திடம் கூறினார்.

”மாறாக, கோடை, மற்றும் குளிர்கால, வசந்த காலங்களில் அதிகரித்துள்ள வெப்பத்தால், தாவரங்கள் அழுத்தத்திற்கு உள்ளாவதை கண்டுபிடித்தோம்,” என்கிறார்.

கடந்த 2016-17ஆம் ஆண்டு குளிர்காலத்தில் (டிச.- பிப்.), இந்திய வரலாற்றில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. கடந்த 1901-1930ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தைவிட, வெப்பநிலை 2.95o செல்சியஸ்; மற்றும் குளிர்காலத்தில் சராசரி வெப்பநிலை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2o செல்சியஸாக வெப்பம் இருந்தது என, 2017 ஜூன் 5ஆம் தேதியிட்ட, டவுண்ட் டு எர்த் இதழ் தகவல் வெளியிட்டது.

தீ பருவத்தில் வன உயிரி மற்றும் ஈரப்பதம் போன்ற அம்சங்களை சார்ந்து தீ இருக்கின்றன. இந்தியாவில் வனப்பகுதி தீ என்பது, அவ்வப்போது பல்வேறு காரணங்களால் மனிதர்களால் ஏற்படுத்தப்படுகிறது என்கிறார், கிருஷ்ணசாமி. உத்தரகாண்டில் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது போல், கோடை காலத்தில் மேலும் பல காட்டுத்தீ ஏற்படலாம். குளிர்காலத்தில் நிலவும் வறட்சியை பொருத்து, இச்செயல்பாடு அமையும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

கடந்த 2016 ஏப்ரல் 7ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தின் வடக்குப்பகுதி வனத்தில், 4,500 எக்டருக்கு தீ உண்டானது. இந்த பரப்பு, சிம்லா நகரை விட 1.3 மடங்கு அதிகமாகும். கடந்த 2016 பிப்ரவரியில் உத்தரகாண்டில் ஏற்பட்ட 3,185 எக்டர் காட்டுத்தீயை விட, இது 40% அதிகமாகும் என்று இந்தியா ஸ்பெண்ட், 2016 மே 11-ல் தகவல் வெளியிட்டிருந்தது.

“குளிர்கால மழை மிக முக்கியமானது. காலநிலை மாற்றம் மட்டுமே காரணாமாகாது; நீண்ட வறண்ட கோடையும் முக்கிய காரணியாகும். காலநிலை மாறுபாட்டால் ஏற்படும் ஒட்டுமொத்த வெப்பமயமாதலால், தீ மாற்றங்கள் ஏற்படும்” என்று கிருஷ்ணசாமி தெரிவிக்கிறார்.

கடந்த 1990- 2011 கால கட்டங்களில், மோசமான காட்டுத்தீ விபத்துகள் நேரிட்டன. 1995-ல் உத்தரகாண்டில், 3,75,000 ஏக்கரில்; 1999ஆம் ஆண்டில், கங்கை-யமுனை நீர்ப்பகுதியில், 80,000 ஏக்கர்; 2010ஆம் ஆண்டில் இமாச்சல பிரதேசத்தில், 19,109 ஏக்கர்; 2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் 10,000 ஏக்கருக்கு மேல், காட்டுத்தீயால் சாம்பலாகியதாக, 2012ஆம் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

பொதுவாக மார்ச் – மே மாதங்கள் வனத்தீக்கான உச்சகட்ட மாதங்கள் என, கடந்த 2016, மே 3ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.

உத்தரகாண்ட் மற்றும் இமாசலப்பிரதேச காடுகளில் கண்டறியப்பட்ட பைன் மரத்தின் பைன் ஊசிகள், எளிதில் தீப்பற்றக்கூடியவை. அதில் உள்ள அதிகபட்ச ரசாயனம் காரணமாக், வறண்ட காலங்களில் அம்மரங்களில் உள்ள பைன் ஊசிகளை அகற்ற வேண்டும் என்று, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியதாக, கடந்த 2018 ஏப்ரல் 4ஆம் தேதி, இந்தியா கிளைமேட் டைலாக் என்ற இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

காடுகளில் உள்ள பைன் மரங்களை போலவே, யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து வெளியாகும் எண்ணெயும், காட்டுத்தீக்கு காரணமாக இருப்பதாக, சி.எஸ்.இ.-யை சேர்ந்த பூஷன் கூறுகிறார்.

உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் அதிகளவு காட்டுத்தீ ஏற்பட்டாலும், 2017ஆம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

காட்டுத்தீயால் பாதிக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள்

மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தகவலின்படி, 2017ஆம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில், அதிக காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களில், வடகிழக்கு மாநிலங்களாக அசாம், மிஜோராம் அடங்கும். இதே காலத்தில் காட்டுத்தீயை, மேகாலயா, மணிப்பூர் மாநிலங்களும் சந்தித்துள்ளன.

மத்திய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, வடகிழக்கு மாநிலங்களின் வனப்பரப்பு குறைவு; எனினும் கடந்த சில ஆண்டுகளில், மத்திய மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, வடகிழக்கு மாநிலங்களில் இரு மடங்கு அதிகம் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது என்று, இந்திய வனத்துறை ஆய்வு- 2017 தெரிவித்துள்ளது.

இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களின் மொத்த நிலப்பரப்பு விகிதம், மத்திய மற்றும் தெற்கு மாநிலங்களின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

Source: Lok Sabha replies here, here, and here

லட்சத்தீவு (90.3%), மிசோரம் (86.3%) மற்றும் அருணாச்சல பிரதேசம் (79.9%) ஆகியவற்றின் நிலப்பகுதி பெரும்பாலும் காடுகளால் சூழப்பட்டுள்ளன என்று, பேக்ட்செக்கர், ஜூலை 4, 2018ஆம் தேதியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

”அருணாசலப்பிரதேசம், சிக்கிம் மாநிலத்தவர்கள் சிலரிடம் பேசியபோது, கடந்த 20 ஆண்டுகளில் மழைப்பொழிவு, பனிப்பொழிவு மாதிரிகள் மாறிவிட்டதாக கூறினர்,” என்கிறார், காலநிலை மாற்றம் மற்றும் பம்பாய் நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியின் இமாச்சல் திட்ட உதவி இயக்குனராக உள்ள, கிரீஷ் ஜாதர். குளிர்காலம், முன்பு போல் கடுமையாக இருந்ததில்லை; அதிக வெப்பம் நிலவுவதாக, அவர்கள் நம்புகின்றனர் என்று, இந்தியா ஸ்பெண்டிடம் ஜாதர் கூறினர்.

அருணாசல பிரதேசத்தில், 2017உடன் முடிந்த 2 ஆண்டுகளில், காட்டுத்தீ விபத்துகள் இரு மடங்கு பெருகி, 733 ஆகவும்; சிக்கிமில் 2.6 முறை அதிகரித்து, 8 சம்பவங்களும் நடந்துள்ளதாக, நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

வனப்பாதுகாப்பிற்கான அரசு ஒதுக்கும் நிதியில் சரிவு

கடந்த 2015- 17ஆம் ஆண்டுக்கு இடையே காட்டுத்தீ, 125% அதிகரித்த நிலையில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வன பாதுகாப்புக்கு ஒதுக்கும் நிதியின் அளவு, 21% என, ரூ.34.5 கோடியாக குறைந்துவிட்டது.

முன்பிருந்த, தீவிர காடு மேலாண்மை திட்டம் (ஐ.எப்.எம்.எஸ்), கடந்த 2017-ல் காட்டு தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டம் (எப்.பி.எம்.) என்று மாற்றப்பட்டது.

மத்திய அரசிடமிருந்து, யூனியன் பிரதேசங்களுக்கு 100%, வடகிழக்கு மாநிலங்களுகு 90%, பிற மாநிலங்களுக்கு 60% நிதி பருவநிலை மாற்ற வழிகாட்டுதலின் படி அளிக்கப்படுவதாக, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.

பம்பாய் நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியின் ஜாதர் கூறும்போது, இப்பகுதியின் வளர்ச்சிக்காக, நிலப்பகுதிகளை ஒருங்கிணைத்து, குறுக்கு வெட்டு சூழலின்படி பராமரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. முடிவுகளை அரசு பரவலாக்க வேண்டும்; சமூகத்தை ஈடுபடுத்த வேண்டும்” என்கிறார்.

(பலியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர் ஆவார்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.