புதுடெல்லி: இந்தியா தனது புதுப்பிக்கத்தக்க திறனை 175 ஜிகாவாட் என்று இரட்டிப்பாக்க, இன்னும் இரண்டு வருடங்கள் மட்டுமே உள்ளன - மேலும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டில் 450 ஜிகாவாட் என்ற இலக்கை எட்டும் பாதையிலும் அது உறுதியாக உள்ளது. ஆனால், இத்துறையின் வளர்ச்சியை குறைக்கும் நான்கு முக்கிய பிரச்சினைகளை - அதாவது சூரியசக்தி உபகரணங்கள் இறக்குமதிக்கான கட்டணங்கள், ஒழுங்கற்ற நிதி ஓட்டம், நிலப்பற்றாக்குறை மற்றும் மின்சார விநியோக நிறுவனங்களின் மோசமான நிதி ஆகியவற்றை - இந்தியா கவனிக்காவிட்டால் இந்த இலக்குகள் எட்டப்படாமல் போகலாம் என்று நிபுணர்கள் மற்றும் புதிய ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

திறன் நிறுவலின் தற்போதைய வேகம் மற்றும் துறைக்கு ஏற்படும் கொள்கை சிக்கல்களை வைத்து பார்த்தால், வரும் 2034ஆம் ஆண்டில்தான், அதாவது காலக்கெடுவுக்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்தே இந்தியா 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எட்டும் என்று, ப்ளூம்பெர்க் நியூ எனர்ஜி ஃபைனான்ஸ் என்ற ஆலோசனை அமைப்பின் 2020 ஜூன் 26 அறிக்கை தெரிவிக்கிறது. 2034ஆம் ஆண்டு வாக்கில், நாட்டின் மொத்த திறன் கலவையில் சுமார் 48% சூரிய சக்தி, காற்று மற்றும் உயிர்ம ஆற்றல் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

இந்தியா தற்போது 87.67 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க உற்பத்தி திறனை நிறுவியுள்ளது, இது அதன் மொத்த நிறுவப்பட்ட திறன் 371 ஜிகாவாட்டில் கால்பங்கிற்கு அருகில் உள்ளது. பாரிஸ் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதன் மூலம் புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் புதைபடிவ எரிபொருட்களை நாடு சார்ந்திருப்பதை குறைக்க உதவும். தற்போது, இந்த எரிபொருட்கள் இந்தியாவின் 80%-க்கும் மேலான மின்சாரத்திற்கு ஆதாரமாக உள்ளன.

இருப்பினும், ஐந்து ஆண்டுகளில் கூட இந்தியா 175 ஜிகாவாட் என்ற மதிப்பிற்கு பின்னால் இருக்கக்கூடும்: சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்திக்கு இடையில் கிட்டத்தட்ட 5:1 இடைவெளியுடன் 2025 ஆம் ஆண்டில் நாடு 60 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நிறுவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, பிரிட்ஜ் டு இந்தியா என்ற மற்றொரு ஆலோசனை அமைப்பின் ஜூன் 2020 அறிக்கை கூறியது. இது இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க திறனில் சுமார் 150 ஜிகாவாட் வரை கொண்டிருக்கும்.

முக்கிய சவால்களை மதிப்பிடுவதற்காக புதுப்பிக்கத்தக்க துறையைச் சேர்ந்த முன்னணி தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை (சி.இ.ஓ.க்கள்) தி பிரிட்ஜ் டு இந்தியா பேட்டி கண்டது. அதில் நிலம், பரிமாற்றம், கடன் நிதி மற்றும் இறக்குமதி வரி உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து தேவை மற்றும் விநியோக காரணிகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் விரிவாக்கத்தில் முதன்மையாக சூரிய ஆற்றல் நிறுவலால் வழிநடத்தப்படுகிறது - அதாவது 175 ஜிகாவாட் இலக்கில் 100 ஜிகாவாட் அல்லது 57% சூரிய ஆற்றலில் இருந்து வர வேண்டும். இதில் 60 ஜிகாவாட் பெரிய அளவிலான தொகுப்புகளுடன் இணைக்கப்பட்ட சூரிய ஆற்றல் திறன் மற்றும் 40 ஜிகாவாட் தொகுப்பு, சூரிய மேற்கூரை ஆற்றல் திறன் ஆகியவை அடங்கும்.

மேலும், 60 ஜிகாவாட் தொகுப்புடன் இணைக்கப்பட்ட கொள்ளளவில், மே 31 வரை 34.91 ஜிகாவாட் சூரிய சக்தி நிறுவப்பட்டுள்ளது. மேலும் 22.33 ஜிகாவாட் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அத்துடன் 31.99 ஜிகாவாட்டுக்கான டெண்டர்கள் மே 31-க்குள் வழங்கப்பட்டுள்ளதாக டெல்லியை சேர்ந்த எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) வழங்கிய சமீபத்திய தரவுகள் தெரிவிக்கிறது.

கோவிட்-19 தொற்றுநோய் தாக்கம் ஏற்கனவே இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க நிறுவலை பாதித்துள்ளது, மேலும், இந்தியாவின் 80% சூரிய சக்திக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் சீனாவுடன் எல்லைப்பிரச்சனை, இத்துறையின் சிக்கல்களை மேலும் அதிகரித்துள்ளது. ஆற்றல் மாற்றத்தை சீராக வைத்திருக்க இந்தியா எதிர்கொள்ள வேண்டிய குறுகியகால மற்றும் நீண்டகால சவால்கள் இங்கே காண்போம்.

சீன இறக்குமதியைச் சார்ந்திருத்தல்

எல்லை மோதல்களை தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலங்கள் மற்றும் தொகுதிகள் மீது 20% சுங்க வரியை இந்தியா பரிசீலித்து வருகிறது. 2022ம் ஆண்டு இலக்கு நெருங்கியுள்ள நிலையில், இது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியாளர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் இருந்து மலிவான இறக்குமதிகள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஏற்றத்தை தந்தன. இந்தியாவின் ஆண்டு உள்நாட்டு சூரியசக்தி தொகுதி உற்பத்தித்திறன் சுமார் 3 ஜிகாவாட் அல்லது நாட்டின் 20 ஜிகாவாட்டில் 15% தேவைப்படுகிறது."இந்த [உள்நாட்டு சூரிய] உற்பத்தி வசதிகளில் பல வழக்கற்றுப் போன உற்பத்தி உபகரணங்களைக் கொண்டிருக்கலாம் மற்றும் பெரிய அளவிலான திட்டங்களை வழங்க முடியாது," என்று சி.இ.இ.டபிள்யு எரிசக்தி நிதி மையத்தின் சந்தை நுண்ணறிவு மேலாளர் ரிஷாப் ஜெயின், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

இறக்குமதிக்கு இந்தியா கூடுதல் கட்டணத்தை விதிப்பது இது முதல்முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், நாட்டின் எரிசக்தி மாற்ற இலக்குகளை வைத்திருக்காத உள்நாட்டு சூரிய உற்பத்தியை தொடங்க, சீனா மற்றும் மலேசியாவில் இருந்து வரும் சூரிய சக்தி உபகரணங்கள் மீது இரண்டு ஆண்டு 25% பாதுகாப்பு வரியை சேர்த்ததாக இந்தியா ஸ்பெண்ட் ஜூலை 2018 கட்டுரை தெரிவித்துள்ளது. அந்த வரி 2020 ஜூலையில் முடிவடைகிறது.

பாதுகாப்பு வரிகள் விதித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் வருடாந்திர புதிய ஆற்றல் அதிகரிப்பு வேகம் குறைந்தது. 2016-17ல் சூரிய ஆற்றல் கூடுதலாக 16 ஜிகாவாட். 2017-18 ஆம் ஆண்டில் இது 20% குறைந்து, 2018-19 ஆம் ஆண்டில் மேலும் 13% குறைந்ததாக, இன்ஸ்டிடியூட் ஃபார் எனர்ஜி எகனாமிக்ஸ் அண்ட் ஃபைனான்சியல் அனாலிசிஸின் ஆற்றல் பொருளாதார நிபுணர் விபூதி கார்க் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

பாதுகாப்பு வரி -- இது இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மீண்டும் விதிக்கப்படுவது பற்றி இந்தியா பரிசீலித்து வருகிறது -- உள்நாட்டு உற்பத்தி திறனை பெரும்பாலும் அதிகரிக்கத் தவறிவிட்டது; ஏனெனில் இது அறிமுகப்படுத்தப்பட்டபோது பல பெரிய திட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று வந்தன. அவற்றுக்கு விலக்கு தரப்பட்டதாக கார்க் கூறினார். "பாதுகாப்பு வரிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இருந்ததால், உற்பத்தியாளர்களுக்கு நீண்டகால முடிவுகளை எடுக்க போதுமான நம்பிக்கையை அது தரவில்லை" என்று கார்க் மேலும் கூறினார்.

புதிய உற்பத்தித்திறனை அமைப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த “காலவரிசை மிகச் சிறியது” என்று சி.இ.இ.டபிள்யு-வின் ஜெயின் ஒப்புக்கொண்டார். சீனா மற்றும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதற்கு பதிலாக கொள்முதல் மற்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டது. "கூடுதலாக வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற விலக்கு தரப்பட்ட நாடுகளில் இருந்து ஏற்றுமதி அதிகரித்தது, உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்பு வரியின் சாத்தியமான தாக்கத்தை மறுக்கிறது" என்று ஜெயின் மேலும் கூறினார்.

குறுகிய இடையூறு, நீண்ட கால ஆதாயம்?

இந்த வரிகள், உள்நாட்டு புதுப்பிக்கத்தக்க தொழிலுக்கு உதவுமா? தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

சுங்கவரி என்பது உற்பத்தியாளர்களுக்கு நீண்டகால உறுதிப்பாட்டைக் கொடுக்கக்கூடும்; அத்துடன், உள்நாட்டு உற்பத்தியை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்கும் என்ற கார்க், குறுகிய காலத்தில் சூரிய ஆற்றல் தொகுதிகளின் விலை உயரக்கூடும் என்றார். "இருப்பினும், அளவு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் பொருளாதாரம் காரணமாக எதிர்காலத்தில் விலை குறையும்," என்று அவர் கூறினார்.

இந்திய சூரியத்தொகுதிகள் அவற்றின் சீன பதிப்புகளை விட 22% -33% விலை அதிகம் என்று சி.இ.இ.டபிள்யு. தரவு காட்டுகிறது. உள்நாட்டு உற்பத்தி வசதிகளின் திறனை அதிகரிப்பதன் மூலம் இந்த வேறுபாடு குறையும் என்று ஜெயின் தெரிவித்தார். "எனவே, உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு இடையிலான போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கான முதல் படியாக செலவு வேறுபாட்டின் வரம்பில் வரி இருக்கும்" என்று ஜெயின் கூறினார். வரி விதிப்பது சூரிய ஆற்றலின் குறைந்த கட்டண விகிதங்களை அதிகரிக்கச் செய்யும். ஆனால் இது குறுகியகால இடையூறுகளை மட்டுமே குறைந்தபட்ச நீண்ட கால தாக்கத்துடன் உருவாக்கும் என்றார் அவர்.

நிறுவுவதில் குழப்பம் மற்றும் தாமதத்தைத் தவிர்க்க, வரிகளில் தெளிவான காலக்கெடுவை அரசு வழங்க வேண்டும்; இதனால் உற்பத்தியாளர்கள் தங்களது கொள்முதலை ஒத்திவைக்க வேண்டியிருக்காது. இது பாதுகாப்பு வரிகளின் விஷயத்தில் நடந்தது என்று ஜெயின் கூறினார். பாதுகாப்பு வரிகள் 25% இல் இருந்து தொடங்கி, செயல்படுத்தும் காலத்தில் அவ்வப்போது குறைக்கப்படுகின்றன. அதிகரித்த செலவுகளில் இருந்து தங்களைக் காப்பாற்ற, "உற்பத்தியாளர்கள் குறைந்த வரியுடன் சில மாதங்களுக்கு கொள்முதல் தள்ளிவைத்தனர்" என்று ஜெயின் கூறினார்.

எப்படியானாலும், வரிகள் என்பது கொள்கையுடன் ஒத்திருக்க வேண்டும் மற்றும் சூரிய சக்தி பாகங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க புதிய முதலீட்டை ஈர்ப்பதற்கான உறுதியைக் கோர வேண்டும் என்று ஜெயின் கூறினார். உற்பத்தி செய்யப்பட்ட சூரிய சக்தி பாகங்கள், நிலையான மற்றும் நீண்ட கால கொள்கைகள் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதன் மூலம் முன்னுரிமை போன்ற கூடுதல் நடவடிக்கைகளை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும் என்றார்.மற்றொரு தீர்வு என்னவென்றால், “அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதுபோன்ற [சூரிய பாகங்கள் உற்பத்தி] தொழில்களுக்கு வரி விடுமுறை போன்ற வரி சலுகைகளை வழங்குவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அரசு ஊக்குவிக்க வேண்டும்” என்று கார்க் கூறினார்.

இருப்பினும், தயாரிப்பாளர்கள் இறக்குமதி வரிகளை பற்றி நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஜூன் 2020 அறிக்கைக்காக ‘பிரிட்ஜ் டு இந்தியா’ நேர்காணல் செய்த தலைமை செயல் அதிகாரிகளில் பெரும்பாலானோர் (58%) தொகுதிகள் மற்றும் கலங்கள் மீதான இறக்குமதி வரிக்கு ஆதரவாக இல்லை. அவர்களில் 45% பேர் இறக்குமதி வரிகள் உள்நாட்டு உற்பத்தி துறைக்கு உதவாது என்று கருதினர்.

கிடைக்கக்கூடிய நிதி

வரும் 2020ம் ஆண்டில் 175 ஜிகாவாட் என்ற இலக்கை அடைய நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 பில்லியன் டாலர் (ரூ.1.5 லட்சம் கோடி) தேவைப்படுகிறது. நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க 450 ஜிகாவாட் என்ற 2030ம் ஆண்டு இலக்கை அடைய சுமார் 30 பில்லியன் டாலர் (ரூ. 2.2 லட்சம் கோடி) தேவை. ஆனால் தற்போது கிடைக்கும் முதலீடு 2022ம் ஆண்டு இலக்கிற்கு தேவையான பாதி தொகை - சுமார் 10 பில்லியன் டாலர் (ரூ .75,000 கோடி) ஆகும்.

இந்தியாவில், புதுப்பிக்கத்தக்கவைகளுக்கு கிடைக்கும் நிதி அதிக விலை உயர்ந்ததாக உள்ளது: 9-11% என்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான கடனுக்கான சராசரி செலவு, ஆசியாவில் மிக உயர்ந்ததாகும். இந்த விகிதங்கள் தற்போதுள்ள பெரிய அளவிலான தொகுப்புடன் இணைக்கப்பட்ட தூய்மையான எரிசக்தி திட்டங்களின் நம்பகத்தன்மையை அச்சுறுத்துவதாக, உலகளாவிய சிந்தனைக்குழுவான இயற்கை வள பாதுகாப்பு கவுன்சில் (NRDC - என்ஆர்டிசி) 2018 அறிக்கை தெரிவித்தது.

பெரிய அளவிலான திட்ட உருவாக்குபவர்கள், வட்டி மாறுபடும் கடன்களைப் பெறுகிறார்கள் (இது பெரும்பாலும் உயர்வாக உள்ளது); ஆனால் திட்டங்களில் இருந்து அவற்றின் வருவாய் நீண்ட கால மின்கொள்முதல் ஒப்பந்தங்களில் இருந்து கிடைக்கிறது, அங்கு வழக்கமாக கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக என்ஆர்டிசி அறிக்கை விளக்கியது."விகிதங்கள் அதிகரித்தால் இந்த கடன்கள் ஆபத்தானவை, மேலும் சில வங்கிகளுக்கு "அழுத்தப்பட்ட" சொத்துகளாக மாறக்கூடும், இந்தத்துறைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தடுக்கிறது," என்று அது மேலும் கூறியுள்ளது.

நிதி கிடைப்பதை எளிதாக்க, தூய்மையான எரிசக்தி விரிவாக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமும் அரசின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிதியாளரான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் (IREDA), இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டங்களுக்கு நிதியளிக்க ஒரு ‘பசுமை சாளரத்தை’ அமைக்க எதிர்பார்க்கிறது. புதுப்பிக்கத்தக்க திட்டங்களுக்கு போதுமான நிதி ஆதாரங்களை உருவாக்க, இந்த துறையில் முதலீடு செய்வதற்கான அபாயத்தை குறைப்பதன் மூலம் பொது மற்றும் தனியார், தேசிய மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை திரட்ட ஊக்குவிக்க IREDA திட்டமிட்டுள்ளது.

வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்கும் பசுமை எரிசக்தி திட்டங்களில் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அபாயங்கள் இருந்தாலும், இவை பசுமை சாளரத்துடன் சமப்படுத்தப்படலாம் என்று, ஜூலை 7 ம் தேதி ஆன்லைன் மாநாட்டில் இந்தியா ஸ்பெண்ட் எழுப்பிய கேள்விக்கு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் (MNRE) இணைச் செயலாளர் பானு பிரதாப் யாதவ் பதில் அளித்தார். பசுமைத்துறையில் முதலீடு செய்ய விரும்பும் நிதி நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த முயற்சியால் ஒரு உந்துதலைப் பெறுவார்கள் என்று யாதவ் மேலும் கூறினார்.பசுமைச் சாளர மின்கல சேமிப்பு, மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய-காற்று கலப்பு தொழில்நுட்பங்கள் போன்ற குறைவான பசுமை ஆற்றல் பிரிவுகளிலும் "தீவிரமாக கவனம் செலுத்தும்" என்று அவர் கூறினார்.

பரிமாற்ற தடைகள்

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க துறைக்கு மற்றொரு சவால், மின்சாரம் பரிமாற்ற உள்கட்டமைப்பு மற்றும் புதிய இடைப்பட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியின் வருகையை கையாளும் திறன் ஆகும்.

தொகுப்பு உள்கட்டமைப்பின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, நாட்டின் பசுமை எரிசக்தி காரிடார் திட்டத்தின் கீழ் 2020 மார்ச் மாதத்திற்குள் 9,400 சி.கே.எம் [சர்கியூட் கிலோமீட்டர்] மாநிலங்களுக்கு இடையே பரிமாற்ற பாதைகளை அமைப்பதாக அரசு தெரிவித்தது. இது, அதிகரித்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வெளியேற்றுவதற்கும் இடம் அளிப்பதற்கும் இந்தியாவின் பரிமாற்ற அமைப்புகளை பலப்படுத்தும்.

எப்படியானாலும், இத்திட்டம் கால அட்டவணைக்கு பின்னால் இயங்குகிறது, மேலும் நாடாளுமன்ற கீழ்சபையான மக்களவையின் நிலைக்குழுவின் மார்ச் 2018 அறிக்கை, மார்ச் 2020 என்ற இலக்கை அடைவது குறித்து கேள்வியை எழுப்பியது. அரசின் சமீபத்திய தரவுகள்படி இந்தியா 6,258 சி.கே.எம் பரிமாற்ற இணைப்புகளை டிசம்பர் 2019 இறுதிக்குள் சேர்த்தது.

மார்ச் 2020 இலக்கான 9,000 சி.கே.எம். க்கும் மேற்பட்ட பரிமாற்ற இணைப்புகள் என்பது, மார்ச் 2021 வரை ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. “இந்த முடிவு இந்த ஆண்டு ஜனவரியில் எடுக்கப்பட்டது,” என்று எம்.என்.ஆர்.இ.யின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் கோவிட்-19 ஆல் முழு செயல்பாடுகளும் பாதிக்கப்படும் முன்பு, 2019 டிசம்பருக்குப் பிறகு கிட்டத்தட்ட 200 சி.கே.எம் பரிமாற்ற கோடுகள் சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்ட அந்த அதிகாரி, பின்னர் எந்த முன்னேற்றமும் இல்லை என்றார்.

நிலம் தொடர்பான சவால்கள்

தூய்மையான மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொகுப்பு திட்டங்களுக்கு ஒரு பொதுவான தடையாக, நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் உள்ளதாக, நாங்கள் மேலே குறிப்பிட்ட பி.என்.இ.எப். அறிக்கை கூறியது.

ஜூன் 2020 அறிக்கைக்காக பிரிட்ஜ் டு இந்தியா நேர்காணல் செய்த தலைமை செயல் அதிகாரிகளில் 70% பேர், திட்டங்களுக்கான நிலம் கிடைப்பது "சவாலானது" எனவும், "மிகவும் சவாலானது" என்றும் மதிப்பிட்டனர்.

நிலப்பிரச்சினையை தீர்க்க, அனைத்து பங்களிப்பாளர்களுக்கு இடையேயும் சிறந்த ஒருங்கிணைப்பு தேவை என்று பிஎன்இஎஃப் அறிக்கை கூறியுள்ளது. "நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை எளிதாக்குவதும், நிலப்பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவதும் இத்துறையை பாதிக்கும் தடைகளை களையும்" என்று அது கூறியது.

அழுத்தத்திற்குள்ளாகும் மின் பயன்பாடுகள்

மிதமான கட்டண உயர்வு, அதிகரித்து வரும் விநியோக செலவை ஈடுசெய்யாததால், பெரும்பாலான அரசுக்கு சொந்தமான மின்சார விநியோக நிறுவனங்கள் (டிஸ்கோம்கள்) நிதி ரீதியாக வலியுறுத்தப்படுகின்றன: மோசமான அளவீட்டு மற்றும் பில் சேகரிப்பு செயல்திறன் உயர் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளுக்கு வழிவகுப்பதாக, மே 21 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் இழப்புகளால், டிஸ்காம்கள் மின் உற்பத்தியாளர்களுக்கான பட்டுவாடாவை ஒத்திவைத்து, மதிப்பு சங்கிலி மூலம் தொடர் தாமதங்களை உருவாக்குவதாக, பிஎன்இஎஃப் அறிக்கை தெரிவித்துள்ளது. மே 2020 இன் இறுதியில், டிஸ்காம்களின் ‘புதுப்பிக்கத்தக்க’ ஜெனரேட்டர்களுக்கான நிலுவைத் தொகை, சமீபத்திய அரசு தரவுகளின்படி 9,725 கோடி ரூபாயாக (1.3 பில்லியன் டாலர்) இருந்தது.

மேலும், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்களுடன் கையெழுத்திட்ட நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய டிஸ்காம்கள் முயற்சித்தன அல்லது அவற்றின் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்க மின்சக்தியைக் குறைக்கின்றன.

"இது அவர்களின் திட்ட வருமானத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைக்கிறது, மேலும் எதிர்கால முதலீடுகள் குறைக்கக்கூடும்" என்று பிஎன்இஎஃப் அறிக்கை கூறியுள்ளது. இதை மேம்படுத்த, டிஸ்கோம்களின் நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பின்னடைவை சரி வேண்டும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

நாட்டில் அரசு நடத்தும் டிஸ்கோம்கள் 2018-19 ஆம் ஆண்டில் ரூ.61,360 கோடி (8.17 பில்லியன் டாலர்) மொத்த இழப்பை சந்தித்தன, இது 2014-15 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட இழப்புகளை விட எண்ணிக்கையில் அதிகமாகும்; இது உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா என்ற பிணை எடுப்பு மற்றும் சீர்திருத்த திட்டத்தைத் தொடங்க அரசை கட்டாயப்படுத்தியது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.