பாலாடா பஜார், கபிர்தாம் (கவார்தா), ராஜ்நாந்த்கான், மஹாசமுந்த், கங்கர் (சத்தீஸ்கர்): “முதலில் எனக்கு வேலைவாய்ப்பு கொடுங்கள்; பிறகு வாக்களிப்பது குறித்து நான் யோசிக்கிறேன் என்று அவர்களிடம் கூறுவேன்” என்று கண்ணீரை துடைத்தபடி சொல்கிறார், 28 வயதான கெக்தி வர்மா. “எனக்கு 3 மகள்கள்; மூத்தவளுக்கு 10 வயது; இளையவளுக்கு 4 வயதாகிறது. இன்று வரை அரசிடம் இருந்து எனக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை” என்று, இரு ஏக்கர் நிலத்தை உழுது விவசாயம் செய்து வந்த கணவர் தல்சிங் வர்மாவை இழந்த விதவை கெத்தி குற்றம்சாட்டுகிறார்.

பலாடா பஜார் தொகுதிக்குட்பட்ட சராரிதி எனப்படும் இப்பகுதி, தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 50 கி.மீ. வடகிழக்கில் உள்ளது. ரூ.6,00,000 கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையிஅல் தல்வர் சிங், 2017 அக். 30-ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 30.

2017 அக்.30ஆம் தேதியுடனான இரண்டரை ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 1,344 விவசாயிகள் - அதாவது ஆண்டுக்கு 519 பேர் அல்லது நாளொன்றுக்கு ஒருவருக்கு மேல், தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று இந்து பிஸினஸ் லைன் இதழ், 2017 டிச. 21-ல் செய்தி வெளியிட்டிருந்தது. இதில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாக பலாடா பஜாரில் 210 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த எண்ணிக்கையை இந்தியா ஸ்பெண்டால் உறுதிப்படுத்த இயலவில்லை.

இது, 2016-ல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள்/சாகுபடியாளர்களின் எண்ணிக்கையை போலவே இருக்கிறது என, மக்களவையில் அரசு அளித்த பதிலை அடிப்படையாகக் கொண்டு, 2018 மார்ச் 21-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது. அந்த ஆண்டில் தற்கொலை செய்த 6351 விவசாயிகளில் இம்மாநிலத்தின் பங்கு 9%; இது நாட்டின் 5வது பெரிய விகிதமாகும்.

இம்மாநிலத்தில் நீண்டகாலம் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. சார்பில் முதல்வராக ரமன்சிங், 66, தொடர்ந்து நான்காம் முறையாக வரும் சட்டசபைத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென்ற முனைப்பில் உள்ளார். 4.3 மில்லியன் விவசாயிகள் உள்ள நிலையில், 77% கிராமப்புறங்களை கொண்டுள்ளது. மாநில மொத்த உற்பத்தியில் 17% விவசாயத்தில் இருந்தே பெறப்படுகிறது. விவசாயிகள் தற்கொலை, உரிய கொள்முதல் விலை இல்லாதது, கடந்த தேர்தலின் போது அறிவித்த குவிண்டாலுக்கு ரூ.300 (ஒரு குவிண்டால் என்பது 100 கிலோ கிராம்) வழங்குவதில் தாதமம் போன்றவை ரமன்சிங்கிற்கு பெரும் தலைவலியாக இருக்கலாம். அத்துடன் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா அல்லது பி.எம்.எப்.பி.ஒய் (பிரதம மந்திரி விவசாய காப்பீடு திட்டம் - PMFBY) திட்ட நிதியும் போதுமானதாக தரவில்லை என்ற அதிருப்தி உள்ளது.

வேளாண்மைக்கான மாநில அரசின் பணிகள் ஏமாற்றமளித்த போதும், 42% விவசாயிகள் பா.ஜ.க.வுக்கும்; 36% பேர் காங்கிரஸுக்கும் வாக்களிக்கப் போவதாக, 2018 அக். மாதம் லோக்நிதி- சி.எஸ்.டி.எஸ். - ஏ.பி.பி. நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் சூழலில், பா.ஜ.க.வுக்கு 45 தொகுதிகள், காங்கிரஸுக்கு 38 தொகுதிகள் கிடைக்கும் என நான்கு கருத்துக்கணிப்பு முடிவுகளை சுட்டிக்காட்டி, 2018 நவ.8ல் பூம்பெர்க் குவிண்ட் தகவல் தெரிவித்திருந்தது.

விவசாயம் ஏன் முக்கியம்? நவ. 12 மற்றும் நவ.20 என இருக்கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் சத்தீஸ்கரின் பாலாடா பஜார், கபிர்தாம், ராஜ்நாந்த்கான், மகாசமுந்த், கங்கர் ஆகிய 5 மாவட்டங்களில், விவசாயிகளின் கவலையை அறிய, இந்தியா ஸ்பெண்ட் பயணம் மேற்கொண்டது. மொத்தமுள்ள 15 மாவட்டங்களில் இந்த ஐந்தில் உள்ள 4.8 மில்லியன் ஹெக்டேரின் 69%, மொத்த விதைப்பு பகுதியாகும். இது ஹரியானா மாநிலத்திற்கு சமமானதாகும்.

அரிசியின் கிண்ணம் எனப்படும் சத்தீஸ்கர் மாநிலம், 2017 காரீப் பருவத்தில் (பருவமழை காலம்) 8.2 மில்லியன் டன் நெல் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்து. இம்மாநிலம் 2016-ல் அதிக நெல் உற்பத்தி செய்த மூன்று மாநிலங்களுல் ஒன்று என, 2017 ஜூன் 26ல் பிஸினஸ் ஸ்டேண்டர்ட் செய்தி தெரிவித்திருந்தது.

ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல், வேளாண்துறை இயக்குனரக இணையதள தகவலின்படி, மாநிலத்தின் 25.5 மில்லியன் பேரில் 70% பேர் விவசாயிகள். இவர்களில் 46% பேர் சிறு மற்றும் குறுவிவசாய நிலங்களை (0.5 ஹெக்டரில் இருந்து 2 ஹெக்டருக்குள்) வைத்திருப்பவர்கள் என, 2015-16 விவசாய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

தேர்தல் ஆண்டின் பட்ஜெட்டில் கூட, மொத்த நிதியில் (ரூ.83,179 கோடி) 14%ஐ விவசாயம், அதுசார்ந்த துறைகளுக்கு அரசு ஒதுக்கியது. இது, நாட்டின் பிற 18 மாநிலங்களை விட (சராசரி 6.4%) அதிகம் என்று, பி.ஆர்.எஸ். லெஜிஸ்லேடிவ் ரிசர்ச் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. சத்தீஸ்க்கரில் 2017-18ஆம் ஆண்டில் வேளாண் துறைக்கு ஒதுக்கிய 12%ஐ விட இது சற்று அதிகம்.

Source: PRS Legislative Research
Note: 2017-18 (BE), 2017-18 (RE), and 2018-19 (BE) figures are for Chhattisgarh

கடந்த 2013 தேர்தலில், சத்தீஸ்கரின் 27 மாவட்டங்களை உள்ளடக்கிய 90 தொகுதிகளில், பா.ஜ.க.வின் வாக்குகள் சராசரி 55% ஆகவும், காங்கிரஸுக்கு 13% குறைந்து 42%

அரசு உரிய ஆதரவு விலை தராதது, போனஸ் தாமதம், எதிர்ப்புகள்

ஜில்லா கிஸான் சங்கத்தில் (மாவட்ட விவசாயிகள் சங்கம்) உறுப்பினராக இருக்கும் ஸ்வதேஷ் திகாம், 50, அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக உள்ளார்.

முதல்வர் ரமன்சிங்கின் ராஜ்நாந்த்கார்க் தொகுதியை சேர்ந்த விவசாய தலைவரான ஸ்வதேஷ் திகாம், அரசின் கொள்கையால் விவசாயிகள் மகிழ்ச்சியற்று உள்ளனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம் என்கிறார்.

கடந்த 2017 செப். 18 ஆம் தேதி அதிகாலையில், அவரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டு, அண்டை மாவட்டமான துர்க் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான விவசாயிகள், அடுத்த நாள் காலை விவசாயக்கடன் தள்ளுபடி, 2013 தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதியின்படி விவசாய ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாநிலம் தழுவிய போராட்டம், பேரணி நடத்த திட்டமிடிருந்தனர்.

“போராட்டங்களின் போது நான் ஏற்கனவே பலமுறை கைதாகி இருக்கிறேன்; ஆனால், போராட்டதிற்கு முதல்நாள், வீட்டில் நான் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை” என்கிறார், தலையில் இறுக்கமாக முண்டாசு கட்டியுள்ள ஸ்வதேஷ் திகாம். 2013-ல் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம். ஆனால், விவசாயிகளுடன் பேச்சு நடத்த இந்த அரசு விரும்பவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் வேறும் எந்த கட்சிக்கும் நாங்கள் ஆதரவளிக்க தயார்” என்கிறார் அவர்.

திகாமிற்கு, 9 ஏக்கர் நெல் வயல் உள்ளது; விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணிக்கு அடிக்கடி அவர் வெளியே சென்றுவிடுவதால், அவரது நண்பர்களே சாகுபடிக்கு உதவுகின்றனர். விவசாயத்தில் கிடைக்கும் வருவாய் போதவில்லை. வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நெல் சாகுபடியில் இருந்து நாங்கள் காய்கறி நடவுக்கு மாறினோம். ஆனால், காய்கறி மண்டியில் (சந்தை) தரகர்களின் ஆதிக்கத்தால் குறைந்த விலையே கிடைத்ததை உணர்ந்தோம். எனவே, பழையபடி மீண்டும் நெல் சாகுபடிக்கே திரும்பிவிட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

அவருக்கு ஒரு ஏக்கரில் 13 குவிண்டால் கிடைத்தது. மழை போதுமானதாக இருந்திருந்தால், அவருக்கு கூடுதலாக 7-10 குவிண்டால் கிடைத்திருக்கும். ஒரு ஏக்கருக்கு விதை, உரம், தொழிலாளர் கூலி என ரூ.20 ஆயிரம் வரை செலவானது என்று கூறும் அவர், பொய்துவிடும் மழை, குறைந்த கொள்முதல் விலை போன்றவற்றால், முதலீடு செய்த தொகையை எடுப்பதே பெரும் சவாலாக உள்ளது என்கிறார்.

இந்திய விவசாய குடும்பங்களுக்கு மாத சராசரி வருமானம் ரூ .1,375 ஆகும், அதாவது 50% குடும்பங்களில், ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு அதற்கு குறைவான தொகையே செலவிடப்படுகிறது என்று, 2018 செப். 24-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

”ராஜ்நாந்த்கான் நகரில் ஒவ்வொரு நாளும் சைக்கிளில் மதிய உணவுவோடு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காத்துக்கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள்; விவசாயத்தில் போதிய வருவாயின்றி, பிற கூலி வேலைக்கு செல்கின்றனர்” என்று திகாம் தெரிவித்தார்.

பஸ்தார் மண்டலத்தின் கன்கெர் மாவட்டத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில், நெல் விவசாயிகளான மனீஷ் சின்ஹா (40), துமேந்த்ரா சாஹு (32) இருவரும் திகாமுடன் இணைகின்றனர். முறையே 8 மற்றும் 3 ஏக்கர் நிலம் இருந்தும் சின்ஹா ஒரு உணவகத்திற்கும், மின்சாரம் மற்றும் இதர வேலைக்கும் செல்கின்றனர்.

சின்ஹா, தனது நந்தன்மரா கிராமத்தில் உள்ள 8 ஏக்கருடன் கூடுதலாக ஐந்து ஏக்கர் குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்தார். குத்தகை ஒப்பந்தத்தின்படி, சின்ஹா நில உரிமையாளருக்கு விளைச்சலில் கிடைக்கும் தொகையில் ஒரு பங்கை தர வேண்டும். ”எனக்கு ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் நெல் கிடைத்தது. எல்லா செலவினமும் போக ரூ.4000 மட்டுமே எனக்கு கிடைக்கிறது” என்றார் சின்ஹா. “டிராக்டர் வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000, தினக்கூலி ஒரு நபருக்கு நாளொன்றுக்கு ரூ.180 முதல் ரூ.200 ஆகிறது. அத்துடன், நடப்பு காரீப் பருவத்திற்கு கூட்டுறவு வங்கியில் நான் வாங்கிய கடன் ரூ.40,000. முதலீடு செய்த தொகையை நான் மீட்டு எடுத்துவிட்டால் நான் அதிர்ஷ்டசாலி தான்” என்கிறார் அவர்.

அத்துடன் புதியதாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1,00,000 செலவாகும்; இல்லையெனில் பிற விவசாயிகளிடம் இருந்து தண்ணீரை அவர் நம்பியிருக்க வேண்டும். தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிகாரத்தில் இருப்பவர் மாறினாலும் விவசாயிகளின் நிலையில் பெரியளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது என்று சின்ஹாவும் சாஹுவும் கூறினர்.

கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கான நெல் ஊக்கத்தொகையாக 60 குவிண்டாலுக்கு ரூ.18,000 சின்ஹா பெற்றார். ஆனால், 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான ஊக்கத்தொகை இன்று வரை கிடைக்கவில்லை. சத்தீஸ்கர் சட்டசபை, 2018 ஆம் ஆண்டில் நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தருவதற்காக, ரூ. 2,400 கோடிக்கான துணை பட்ஜெட்டை நிறைவேற்றியது. இதன் மூலம், சத்தீஸ்கர் சந்தை கூட்டமைப்பின் கீழ் இயக்கும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள 1.3 மில்லியன் விவசாயிகள் பயன் பெறுவர் என, 2018 செப்.12-ல் பிஸினஸ் ஸ்டேண்டர்ட் செய்தி தெரிவித்திருந்தது. கொள்முதல் விலையை காட்டிலும் கூடுதல் மதிப்பை இந்த ஊக்கத்தொகை தருகிறது.

”தேர்தலின் போது வாக்கு தேவை என்பதை அறிந்து 2018 ஊக்கத்தொகையை பா.ஜ.க. வழங்கியிருப்பதை விவசாயிகள் நன்கு அறிந்துள்ளனர். 2014 மற்றும் 2015க்கான ஊக்கத்தொகை வழங்கப்படுமா என்று பார்ப்போம்” என்றார் திகாம்.

ஏக்கருக்கு 15 குவிண்டால் நெல் அரசால் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஏக்கருக்கு 25 குவிண்டால் என்றிருந்தது என, 2015 ஜன. 17-ல் பைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. 15 குவிண்டாலுக்கு மேல் உள்ள விளைச்சலை, வெளியே தனியாருக்கு குறைந்த விலையில் விவசாயிகள் விற்க வேண்டியிருந்தது.

கடந்த 2018 ஜூலையில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, 13% உயர்த்தி ரூ. 1,750 ஆகவும்; கிரேடு ஏ-வுக்கு 11% உயர்த்தி, ரூ. 1,770 எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆனால், வர்த்தகத்தை தக்கவைக்க இது போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கூறினர்.

”2013 தேர்தல் அறிக்கையில், நெல்லுக்கான ஆதாரவிலையை குவிண்டாலுக்கு ரூ.2,100 என உயர்த்த மத்திய அரசை வற்புறுத்துவோம்; குவிண்டாலுக்கு ரூ.2,400 நெல் ஊக்கத்தொகை வழங்குவோம் என்று பா.ஜ.க. உறுதி அளித்திருந்தது” என்று கூறும் திகாம் “இன்றுவரை இது நடக்கவில்லை. நெல்லுக்கு குறைந்தபட்ட ஆதார விலை ரூ.2,500 வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.

அர்த்தமற்ற பயிர்க்காப்பீடு

ராய்ப்பூரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள மஹாசாமுந்த் மாவட்டம் மொகாவை சேர்ந்தவர் விவசாயில் கன்ஷியாம் திவான். இவர், தனது 20 ஏக்கர் நெல் சாகுபடிக்கு பயிர்க்காப்பீடு தொகை பெறுவதற்காக கிராம கணக்கு அதிகாரிகளை தொடர்ந்து அணுகி வந்துள்ளார். அவரது பயிர்கள், மஹோ எனப்படும் பூச்சி தாக்குலால் சேதமடைந்தது. ”முதல்முறையாக எனக்கு இவ்வாறு நடக்கிறது; இது விவசாய வயல் முழுவதும் பரவிவிட்டது” என்று அவர் தெரிவித்தார். பூச்சி தாக்குதலை எதிர்கொள்ள, ஏக்கருக்கு ரூ.4000 வீதம் அவர் செலவிட்டும் எந்த பலனுமில்லை; எல்லா பயிர்களும் நாசமாகின.

கன்ஷியாம் திவானின் 20 ஏக்கர் நெல், மஹோ பூச்சி தாக்குதலால் பாதித்தது. பி.எம்.எப்.பி.ஒய். திட்டத்தில் பயிர்க் காப்பீடு பெற முயற்சித்துள்ளார்.

மற்றொரு விவசாயி தனிராம் துருவ், சேதமடைந்த தனது 2 ஏக்கர் நெல் சாகுபடிக்கு பி.எம்.எப்.பி.ஒய். திட்டத்தில் 2017ஆம் ஆண்டு வெறும் ரூ.40 ஐ மட்டுமே பெற்றார். அவரது மகன் பிரேம் துருவ், கூட்டுறவு சங்க தலைவராக இருந்த நிலையில் உள்ளூர் அதிகாரிகள் காப்பீடு தொகையாக வெறும் 40 ரூபாயை எப்படி நிர்ணயித்தனர் என்பது ஆச்சரியமான ஒன்று என்று, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். எனினும், தொழில்நுட்ப பிரச்சனையால், இந்த புள்ளி விவரங்களை அவரால் நம்மிடம் பகிர இயலவில்லை.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் இதேபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். தங்கள் வங்கிக் கணக்கில் பணம் பிடிக்கப்படுவதாகவும், முன்அறிவிப்பின்றி பி.எம்.எப்.பி.ஒய். திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாக, 2017 மார்ச் 31-ல் தி வயர் செய்தி வெளியிட்டிருந்தது.

பயிர் கடன் கணக்கு/கிசான் கிரெடிட் கார்ட் கணக்கை (கடன் பெற்ற விவசாயிகள் எனப்படுவர்) அறிவிக்கப்பட்ட பகுதி விவசாயிகளின் பயிர் வரம்புக்கு அனுமதி வழங்கல்/புதுப்பித்தல் செய்யப்பட வேண்டும் என பி.எம்.எப்.பி.ஒய். வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எம்.எப்.பி.ஒய். வகுத்த வழிகாட்டுதலின்படி “குறிப்பிடப்பட்ட விவசாய பயிர் சாகுபடியில் இயற்கை சீற்றத்தாலோ அல்லது பூச்சி, நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டாலோ விவசாயிகள் காப்பீடு தொகை கோரலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 காரீப் பருவத்தில், பி.எம்.எப்.பி.ஒய். காப்பீடு மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றின் கீழ், மழை, வறட்சி, ஈரப்பதம் உள்ளிட்ட பிரிவுகளில் 1.4 மில்லியன் விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்திருந்தனர். அரசு புள்ளி விவரங்களின்படி, 6% விவசாயிகள் இதனால் பயனடைந்தனர். அதேபோல் 2017 காரீப் பருவத்தில் காப்பீடு திட்டத்தில் பயனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை, 36%-ல் இருந்து 43%ஆக அதிகரித்தது. இது 1.3 மில்லியன் விவசாயிகளில் 7% ஆகும்.

PMFBY And RWBCIS For Kharif 2016 & 2017
Year State Farmers Insured (In Million) Area Insured (In million ha) Sum Insured (In Rs Crore) Farmers Premium State GOI Gross Premium Claim Paid Farmers Benefitted (In Million)
2016 Chhattisgarh 1.4 2.2 6681 127 72 72 271 133 0.09
All India 40 37 131117 2918 6764 6592 16275 10424 25
2017 Chhattisgarh 1.3 1.9 6546 128 89 89 306 1303 0.56
All India 40 37 131117 2918 6764 6592 16275 10424 12

Source: Pradhan Mantri Fasal Bima Yojana (data till October 2018)

சத்தீஸ்கர் அரசு, 21 மாவட்டங்களின் ஆட்சியர்கள் அளித்த அறிக்கையில் படி, 96 வட்டாரங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்தது என, 2017, செப். 12-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. “அரசு உடனடியாக ரூ.5.46 பில்லியன் (ரூ.546 கோடி) மாவட்டங்களுக்கு வழங்கியது. அதன்பின் இதுவரை ரூ.3.30 பில்லியன் (ரூ.330 கோடி) வழங்கப்பட்டுள்ளது” என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் பிரேம் பிரகாஷ் பாண்டே கூறியதாக, 2017, செப். 15-ல் பிஸினஸ் ஸ்டேண்டர்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

வறட்சி பாதிக்கப்பட்ட கிராமமான கவார்தாவின் பதுருகாசார் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான ஜீவன் யாதவ். கரும்பு மற்றும் நெல் விவசாயியான இவர், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ்) இணைந்த பாரதிய கிசான் சங்கம் (பி.கே.எஸ்.) வட்டார தலைவர். இவருக்கும் 2017-ல் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. 12 ஏக்கரில் கரும்பு, 4 ஏக்கரில் நெல் சாகுபடி செய்ததில், அதில் 10 ஏக்கர் வறட்சியால் பாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

”கூட்டுறவு சங்கத்தின் கீழ் வரும் 16 கிராமங்களில் எனது கிராமம் காப்பீடு பெற தவறிவிட்டது. இங்கு ஒருவருக்கு மட்டுமே அரசிடம் இருந்து நிவாரணம் கிடைத்தது” என்று யாதவ் தெரிவித்தார்.

பயிர்க்காப்பீடு மதிப்பீடு, வேளாண் துறையின் சராசரி மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டது என, பிகேஎஸ் மாவட்ட செயலாளரும், கவார்தாவின் பத்தாரா கிராமத்தில் கரும்பு மற்றும் நெல் சாகுபடி செய்துள்ள தோமன் சந்திரவன்ஷி தெரிவித்தார். மதிப்பீட்டைவிட பயிர் உற்பத்தி குறைந்திருந்தால் தான் காப்பீடு பரிசீலிக்கப்படுகிறது. அத்துடன், காப்பீடு கோரும் விவசாயிக்கு அந்த கிராமத்தில் குறைந்தது 15 ஏக்கரில் குறிப்பிட்ட பயிரை சாகுபடி செய்திருக்க வேண்டும்.

கவர்த்தாவில் நெல் சாகுபடி ஏக்கருக்கு சராசரி ஏழு குவிண்டால் ஆகும். விதை, உரங்களின் தரம், மழையளவு அதிகம் இருந்தாலும், பயிர்க்காப்பீடு கேட்டு முறையிட முடியாது.”இதன் பொருள், பயிர் சாகுபடி இழப்பீடு இருந்தாலும் இழப்பீட்டை கோர முடியாது என்பதால், காப்பீடே அர்த்தமற்றதாகிவிடுகிறது” என்று சந்திரவன்ஷி தெரிவித்தார்.

ஏழு ஆண்டுகள் மொத்த மகசூலை அடிப்படையாகவோ, அல்லது குறிப்பிட்ட பகுதியின் அடிப்படையாகவோ கொண்டு காப்பீடு மதிப்பிடப்படுகிறது என்று, சத்தீஸ்கர் வேளாண்துறை இணை இயக்குனர் டி.கே. மிஸ்ரா தெரிவித்தார். “உண்மையான மகசூல் என்பது, பஞ்சாயத்து அளவில் 4 பருவத்தின் அறுவடையை அடிப்படையாக கொண்டது. சேதம் ஏற்பட்டால், உண்மையான மகசூல் என்பது சராசரியில் இருந்து குறைக்கப்படும், "என்று அவர் கூறினார்.

மேலும் "பயிர்க் காப்பீடு வழங்கப்படும் சில குறிப்பிட்ட நிலங்களுக்கு மட்டும் விவசாயிகள் கடன் வாங்கியிருப்பார்கள்" என்று ராய்பூரில் உள்ள பொதுத்துறை பயிர் காப்பீட்டு நிறுவனமான ’வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனத்தின்’ மண்டல மேலாளர் விஷால் கர்படே தெரிவித்தார். “விவசாயிகள் பலதரப்பட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். அனைத்து பயிர்களுக்குமே பாதிப்பு ஏற்பட்டிருக்காது. சில நேரம் விவசாயிகள் இந்த விவரங்களை அறிந்திருக்க மாட்டார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஜீவன் யாதவ் (வலது), சந்திரவன்ஷி (நடுவில்) இருவரும் கவார்த்தாவில் உள்ள பாரதிய கிஸான் சங்க உறுப்பினர்கள். விவசாய பிரச்சனையில் கட்சி நலம் சார்ந்திருப்பதில்லை என்று கூறும் அவர்கள் இதுவரை 20 போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

விவசாயிகள் சந்தை ஆதிக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை ஆலை தேவையை விட கரும்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படும் போது, உரிய விலை கிடைக்காமல் கிடைத்த விலைக்கு சந்தையில் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடந்தாண்டு சில விவசாயிகள், கரும்பை குவிண்டால் ஒன்று ரூ. 80-க்கு விற்றதாக, யாதவ் கூறினார். கரும்பை அரசு கொள்முதல் செய்வதில்லை.

கரும்பு சாகுபடிக்கு விதை, தண்ணீர், உரம், தொழிலாளர் கூலி என, ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 முதல், ரூ.40,000 வரை யாதவ் செலவிட்டார்; அவருக்கு 2017ஆம் ஆண்டில் கிடைத்த வருவாயோ, ரூ.91,000 மட்டுமே.

ஆர்.எஸ்.எஸ். கீழ் இயங்கும் சங்கமாக இருந்த போதும் யாதவின் சங்கம், பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராட தயங்கியதில்லை. 2013-ல் இருந்து நாங்கள் 20 முறை போராடியிருக்கிறோம் என்று யாதவ் கூறினார்.

”2015ஆம் ஆண்டு ஏறத்தாழ் 10,000 விவசாயிகள், நிறுத்தப்பட்ட ரூ.50 ஊக்கத்தொகை மற்றும் கரும்புக்கான போக்குவரத்து செலவினத்தொகை கேட்டு போராடினோம்” என்று, பி.கே.எஸ். மாவட்ட செயலாளரான சந்திராவன்ஷி தெரிவித்தார். ”விவசாய பிரச்சனையில் நாங்கள் கட்சி நலன் சார்ந்து செயல்படுவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.

சந்திரவன்ஷி மற்றும் யாதவும் விவசாய பிரச்சனை என்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உருவெடுக்கும் என்று கூறும் அதேவேளை, தாங்கள் தங்கள் வாக்கு பற்றி யாருக்கும் உறுதியளிக்க இயலாது என்று கூறிவிட்டனர்.

கடன் மற்றும் தற்கொலை சுழற்சி

ரூ.4474.15 கோடியில் 71% விவசாயிகளுக்கு 2016 ஜூலை 1 மற்றும் 2017 மே 31-க்கு இடையே திரும்ப தரப்பட்டுவிட்டதாக, மாநில வேளாண் துறை, கூட்டுறவு சங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, 2017 ஜூன் 26-ல் பிஸினஸ் ஸ்டேண்டர்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், முறைப்படுத்தப்படாத தனியாரிடம் அதிக வட்டிக்கு விவசாயிகள் வாங்கும் கடனை, இது கணக்கில் எடுத்துக் கொள்ளாது.

ராய்ப்பூர் மாவட்டம், அராங்க் கிராமத்தை சேர்ந்தவர் 28 வயதான கஜேந்திர சிங் கோஷல்; இளங்கலை அறிவியல் பட்டதாரியான இவர், ரூ.26 லட்சம் கடன் பெற்று அதில் ஒருபகுதியை, 2013-ல் தனது தந்தையின் சிகிச்சைக்கு பயன்படுத்தினார். வேளாண் கூட்டுறவு சங்கத்தில் அவர் தந்தை பெற்ற கடன், டிராக்டர் வாங்க வங்கியில் பெற்ற கடன், விவசாயத்திற்கு பெற்ற தனியார் கடன் சகோதரர்களின் திருமண கொண்டாட்டங்களுக்கான செலவினமும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார். 10 ஏக்கர் சொந்த நிலம் வைத்துள்ள கோஷல், மேலும் 15 ஏக்கரை குத்தகைக்கு எடுத்துள்ளார். அரசின் வேளாண் கொள்கைக்கு எதிரான போராட்டங்களிலும் இவர் பங்கெடுத்தவர்.

ராய்ப்பூரின் அராங்க் பகுதியின் கஜேந்திர சிங் கோஷல், நெல் சாகுபடிக்காக ரூ.26 லட்சம் கடன் பெற்றார். டிராக்டர் வாங்குதல், திருமணச்செலவு, பழைய கடன் செலுத்துதல் ஆகியன அடங்கும்.

கடந்த 2015-ல் அவர் சாகுபடி செய்திருந்த பல்வேறு நெல் ரகங்கள் வறட்சியால் விளைச்சலை தரவில்லை. அவரது குளிர்க்கால பயிர்சாகுபடியும் மஹோ பூச்சி தாக்குதலால் சேதமடைந்தது. இதற்கு அவர் காப்பீடு தொகையையும் பெற இயலவில்லை. மேலும் காரீப் பருவ நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையும் அவருக்கு கிடைக்கவில்லை; நெல்லுக்கு கூடுதல் ஆதாரவிலை கிடைக்காதது அவரது நிலையை மேலும் மோசமடைய செய்தது.

"கடன் சிலவற்றை செலுத்துவதற்காக என் நிலத்தை விற்க முடிவு செய்தேன். வாங்குபவர்களுடன் பேச்சு நடத்திய நேரத்தில் பெரும் போராட்டம் நடந்தது; வாங்க யாரும் முன்வராமல் சென்றனர்” என்று அவர் தெரிவித்தார். மாதத்திற்கு “5% வட்டிக்கு கடன் வாங்கி, வட்டி அதிகரித்த நிலையில் அதை செலுத்துவதில் பெரும் மன அழுத்தம் உண்டாகிறது” என்றார்.

மஹாசமுந்த் மாவட்டம் மோகா கிராமத்தில், ரூ.6,00,000 கடன் வாங்கிய 60 வயது விவசாயி மந்தீர்சிங் துருவ், மன அழுத்தத்திற்கு ஆளாகி, 2017 ஆக. மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ”அவர் வங்கி மற்றும் கூட்டுறவு சங்கத்தில் இருந்து கடன் வாங்கியிருந்தார். ஆனால் வறட்சி மற்றும் உரிய நேரத்தில் ஊக்கத்தொகை கிடைக்காதது போன்றவை சிக்காலாக்கிவிட்டது” என்று அவரது 29 வயது மகன் மோகன் தெரிவித்தார். அவர் தனது ஏழு ஏக்கர் நெல் சாகுபடிக்காக, ரூ.70,000 செலவில் ஆழ்துளை கிணறுகூட தோண்டி இருந்தார்.

மகாசமுத் மாவட்டம் மோகாவை சேர்ந்த மந்திர்சிங் துருவ் தற்கொலை செய்து கொள்ள, மகன் மோகன் துருவிற்கு எந்த இழப்பீடும் அரசிடம் இருந்து இதுவரை கிடைக்கவில்லை. அவருக்கு காங்கிரஸ் கட்சி ரூ.50 ஆயிரம் வழங்கியது.

“காங்கிரஸ் கட்சி சார்பில் எங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி கொடுத்தனர். ஆனால், இழப்பீட்டுக்கான உரிய ஆவணங்கள், சான்றுகள் அளித்த பிறகும் கூட, மாநில அரசிடம் இருந்து எவ்வித உதவியும் வரவில்லை” என்று கூறிய மோகன் துருவ், அதற்கான ஆவணங்களையும் காட்டினார். தேர்தலில் அரசுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

அதேபோல், 2017-ல் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட கவார்த்தாவை சேர்ந்த விவசாயி சந்தோஷ் சாஹுவின் குடும்பமும் அதிருப்தியில் உள்ளது. ”என் தந்தையின் தற்கொலையும், அரசின் அலட்சியமும் எனது வாக்கை தீர்மானிக்கும் காரணியாகும்” என்று, 21 வயது விகாஷ் சாஹு டெஹ்ரி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். சந்தோஷுக்கு, வெல்லம் தயாரிக்கும் அமைப்பை ஒன்றை நிறுவியது உட்பட, ரூ.15 லட்சம் கடன் உள்ளது.

கவர்த்தாவின் தெஹ்ரி பகுதி விவசாயியான சந்தோஷ் சாஹு தற்கொலை செய்து கொள்ள, அவரது மகன் விகாஷ் சாஹுவுக்கு (21) காவல்துறை பணி தருவதாக அரசியல்வாதிகள் உறுதி அளித்தனர். ஆனால் இன்று வரை அவ்வாறு நடக்கவில்லை என்கிறார் விஷாஷ்.

“கடனை திரும்ப செலுத்துமாறு இன்னமும் வங்கி அதிகாரிகள் நெருக்கடி தருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் நேரில் பார்த்தனர்; காவல்துறை பணி தருவதாக, அரசு உறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை” என்று கூறும் விகாஷ் தனது வீட்டை தனது தாய், சகோதரர்கள், மாமா உள்ளிட்ட 18 பேருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சந்தோஷின் 2 ஏக்கர் நிலம் இப்போது, கடன் கொடுத்தவர்களின் வசம் உள்ளது.

'விவசாயம் ஒரு பொருளாதார நடவடிக்கையாக கருதப்படவில்லை'

"விவசாயம் என்பது ஒரு பொருளாதாரம் சார்ந்த செயல்பாடாக பார்க்கப்படுவதில்லை” என்று வேளாண் துறை வல்லுனர் தேவீந்தர் சர்மா இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். “வேளாண் துறைக்கு நீங்கள் ஊக்கமோ, ஊதியமோ தரவில்லை என்றால், மக்கள் விவசாயத்தை கைவிட்டுவிடுவார்கள். இக்கொள்கையை தொடர்ந்து வரும் அரசுகள் பின்பற்றுகின்றன” என்றார். விவசாயிகள் ஒரு நிரந்தர வருவாயை எதிர்பார்க்கின்றனர். எனவே, நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென்பது அவர்களின் எண்ணம்” என்றார்.

மத்திய அரசும் மாநில அரசாங்கமும் விவசாயக் கொள்கைகளை மேம்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன. குறைந்த வருவாய், கடன் பிரச்சனை போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழலில், கொள்முதல் விலையை அரசு அறிவிப்பது மட்டும் போதாது; அவற்றை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று வல்லுனர் கருதுகின்றனர்.

குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.- அரசு கொள்முதல் விலை) என்பது அரசால் வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்துவிடக்கூடாது; பயனுள்ள கொள்முதல் மூலம் அதை செய்து காட்ட வேண்டும்” அஹமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM-A) விவசாய மேலாண்மை மைய பேராசிரியர் சுக்பால் சிங் தெரிவித்தார். ”குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் சில பயிர்களும், சில மாநிலங்களும் கொள்முதல் செய்யாதவரை, அதைப்பற்றி பேசுவதில் அர்த்தமில்லை” என்ற அவர், சத்தீஸ்கர் மாநிலம் கொள்முதல் செய்வதிலும், பொதுவினியோக திட்ட நடைமுறையிலும் சிறப்பாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பி.எம்.எப்.பி.ஒய். குறித்து தனது கவலையை தெரிவித்த அவர், விழிப்புணர்வு, பணம் செலுத்துவதில் தாமதம், காப்பீடு மதிப்பீடு ஆகியன வட்டார அல்லது கிராம/ஊராட்சிகள் அளவில் செய்வதால் மட்டுமே தனிப்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். அரசு செலுத்தும் பிரீமியம் தொகை அதிகமானாலும், மதிப்பீடு செய்தல், காப்பீடு கோருவதற்கான வழிமுறை உள்ளிட்ட சரியான தகவல் பகிரப்படாததால், விவசாயிகளுக்கு வரம்புக்குள்ளாக மட்டுமே இத்திட்டம் பயனளிக்கிறது என்று சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கம் பெற, வேளாண் அமைச்சரும், முன்னாள் அமைச்சக செயலாளருமான ராதாமோகன் சிங்கிற்கு, இந்தியா ஸ்பெண்ட் சார்பின் மின்னஞ்சல் மற்றும் நினைவூட்டல் அனுப்பப்பட்டது. அவரிடம் இருந்து பதில் கிடைத்ததும், இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

அத்துடன், மாநிலத்தின் வேளாண் வளர்ச்சியில் உள்ள நிலையற்ற தன்மை, வல்லுனர்களை கவலையடைய செய்துள்ளது. இவ்விஷயத்தில் தண்ணீர் பயன்பாடு, பூச்சிக்கொல்லி மற்றும் விவசாய கடன் போன்றவற்றில் சிறந்து விளங்கும் பஞ்சாப்பை சத்தீஸ்கர் பின்பற்ற வேண்டும். “இதுவொரு சுற்றுச்சூழல் ரீதியாக காடுகளை உள்ளடக்கிய நீடித்த விவசாய முறை உருவாக்குவதற்கான வாய்ப்பு” என்று ஷர்மா தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாய வருவாயை இரட்டிப்பாக்குவது என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஏழு சிமெண்ட் ஆலைகளை கொண்ட பாலாடா பஜாரில், விளை நிலங்கள் சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளன. கடன் தொல்லையால் தூக்கிட்ட விவசாயி மனைவியான கேக்தி, தற்போது கூலித்தொழிலாளியாக விவசாய நிலப்பணிகள் வேலை செய்து ரூ.100 தினக்கூலி பெற்று வருகிறார். “நான், 12ம் வகுப்போடு என் படிப்பை முடித்துக் கொண்டேன். என் மகள்களுக்காக நான் வேலைக்கு செல்ல விரும்புகிறேன்” என்றார்.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.