நொய்டா: 2022-23 ஆம் ஆண்டிற்கான மொத்த பட்ஜெட்டில், 5.2% நாட்டின் உணவு மானியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஒரு முக்கியமான பாதுகாப்பு வலையமைப்பாக உணவு மானியமானது, குறைந்த சந்தை விலையில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், பொது விநியோக முறை (PDS) மூலம் நுகர்வோருக்கு மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், உணவு மானியம் அதன் போதியளவு பயன்படுத்தாதது மற்றும் இடையில் கசிவுகளுக்காக விமர்சிக்கப்பட்டுள்ளது, மேலும் திட்டத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று நிபுணர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். உணவு மானியங்கள் குறைவடைந்துள்ள பல்வேறு வழிகள், மற்றும் அதன் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்க என்ன செய்யலாம் என்பதை, எங்கள் விளக்கமளிப்பவர் ஆராய்கிறார்.

உணவு மானியம் எவ்வாறு செயல்படுகிறது

உணவு மானியம் என்பது, நுகர்வோர் மற்றும் தயாரிப்பாளருக்குமானது. இது விவசாயிகளிடம் இருந்து தானியங்களை விலைக்கு வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, அது விவசாயத்தை லாபகரமானதாக ஆக்குகிறது, பின்னர் குறைந்த விலையில் அல்லது சில சந்தர்ப்பங்களில், தானியங்களை ஏழை வீடுகளுக்கு விற்கிறது. மானியத்தின் ஒரு பகுதி பராமரிப்பு மற்றும் பிற நிர்வாகச் செலவுகளுக்கும் செலவிடப்படுகிறது.

மத்திய அரசும், மாநில அரசும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை வாங்குகின்றன. "மையப்படுத்தப்பட்ட கொள்முதல்" என்பதன் கீழ் இந்திய உணவுக் கழகம் (FCI) மூலம் மையம் அதை வாங்குகிறது மற்றும் பல மாநில முகமைகள் "பரவலாக்கப்பட்ட கொள்முதல்" பகுதியாக அந்தந்த மாநிலங்களுக்கு வாங்குகிறது.

மையப்படுத்தப்பட்ட கொள்முதலின் கீழ், இந்திய உணவுக் கழகம் விவசாயிகளிடம் இருந்து அரிசி மற்றும் கோதுமையை, குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) வாங்குகிறது. மத்திய வெளியீட்டு விலையில் (சிஐபி-CIP) (அரசால் நிர்ணயிக்கப்படும் குறைந்த விலை மற்றும், குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக இருக்க வேண்டும்), பொதுவினியோக முறையில் கடைகள் மூலம் விற்கிறது. இந்த தானியங்களில், சில நலத் திட்டங்களுக்கும் (மதிய உணவுத் திட்டம் மற்றும் வளரிளம் பெண்களுக்கான திட்டம் போன்றவை), ஆயுதப்படைகளுக்கு உணவு தானியங்களை வழங்கவும், மந்தமான காலங்களில் சந்தையில் விற்கவும் பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களில் உள்ள பள்ளிகளில், மதிய உணவை வழங்கும் தொண்டு நிறுவனமான அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு, இந்திய உணவுக்கழகம் அரிசி வழங்குகிறது.


மத்திய வெளியீட்டு விலையானது, குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருப்பதால், உணவு மானியத்தின் மூலம் வேறுபாடு ஈடுசெய்யப்படுகிறது, இது ஒவ்வொரு ஆண்டும் இந்திய உணவுக்கழகத்திற்கு மாற்றப்படும்.

1964 ஆம் ஆண்டின் இந்திய உணவுக் கழகச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பு, "உணவு தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை வாங்குதல், சேமித்தல், இயக்கம், போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனை" ஆகியவற்றிற்காக, இந்திய உணவுக்கழகம் (FCI) நிறுவப்பட்டது. அரசிடம் இருந்து நேரடியாகப் பணத்தைப் பெறுவது மட்டுமின்றி, கடந்த காலங்களில் தேசிய சிறுசேமிப்பு நிதியில் இருந்து (NSSF), வங்கிகளில் இருந்தும், பத்திரங்களை வழங்குவதன் மூலமும் பணம் திரட்டி உள்ளது.

கடந்த 2013 இல், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) இயற்றப்படுவதற்கு முன்பு, பொது வினியோக முறை என்பது, ஒரு நிர்வாகத்திட்டமாக இருந்தது என்று, திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினர் என்.சி.சக்சேனா கூறினார். " தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பயனாளிகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகளை வழங்கியது மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையை பழைய 25-30% இலிருந்து 67% [மக்கள் தொகையில்] அதிகரித்தது. கடந்த, 1997ம் ஆண்டில், 17 மில்லியன் டன்னில் இருந்து 2020ஆம் ஆண்டில், 60-90 மில்லியன் டன்னாக முன்பை விட, இப்போது அதிக உணவு தானியங்களை விநியோகித்துள்ளது.

பொது வினியோகத் திட்டம் என்பது செலவினங்களின் அடிப்படையில், நாட்டின் மிகப்பெரிய நலத்திட்டங்களில் ஒன்றாகும்: உணவு மானியங்கள், மொத்த செலவில் 5.2% ஆகும், நாம் மேலே கூறியது போல். பாதுகாப்பு, போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடமாற்றம் மற்றும் ஓய்வூதியங்களுக்குப் பிறகு அரசாங்கத்தின் முதல் ஐந்து செலவினங்களில் (வட்டித் தொகையைத் தவிர்த்து) இதுவும் ஒன்றாகும். இது 903 மில்லியன் மக்களை உள்ளடக்கும் (2020 இல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 67%).

பட்ஜெட் ஒதுக்கீடுகள்

நடப்பு 2022-23 ஆம் ஆண்டில், உணவு மானியத்திற்காக மத்திய அரசு ரூ.2.06 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது பொது விநியோகத் துறைக்கு பொறுப்பான உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கான பட்ஜெட்டில் 97% ஆகும். இது நடப்பு நிதியாண்டிற்கான (ரூ. 2.9 லட்சம் கோடி) மதிப்பிடப்பட்ட செலவில் இருந்து 28% குறைவு ஆகும், இது 2020-21ல் (ரூ. 5.41 லட்சம் கோடி) செலவிடப்பட்ட தொகையை விட 47% குறைவாகும்.

கடந்த 2016-ம் ஆண்டு, தேசிய சிறுசேமிப்பு நிதியில் இருந்து இந்திய உணவுக் கழகம் வாங்கிய கடனை, அரசாங்கம் செலுத்தியதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.


சொந்த வருமானம் இல்லாமல், இந்திய உணவுக்கழகம் முற்றிலும் உணவு மானியத்தையே சார்ந்துள்ளது. அதன் இணையதளத்தில் உள்ள நிதி அறிக்கைகள், அது வங்கிகளில் இருந்து (பணக் கடன் வரம்புகள் மற்றும் குறுகிய கால கடன்கள் மூலம்), பத்திரங்களை வழங்குவதன் மூலம் மற்றும், தேசிய சிறுசேமிப்பு நிதியில் இருந்து (NSSF) கடன் வாங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்தக் கடன், அரசின் இருப்புநிலைக் குறிப்பில் பிரதிபலிக்காததால், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க அனுமதித்தது.

ஜனவரி 31 நிலவரப்படி, இந்திய உணவுக்கழகம், ரூ. 47,649 கோடி செலுத்த வேண்டியுள்ளது, இதில் பெரும்பகுதி (ரூ. 45,000) பத்திர உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த 2019-20 ஆம் ஆண்டில், தேசிய சிறுசேமிப்பு நிதிக்கு, இந்திய உணவுக்கழகம் ரூ. 2.54 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளது, இது உணவு மானியத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய இந்திய அரசின் சார்பில் கடன் பெற்றது. இந்த கடன்கள் 2020-21 நிதியாண்டில் அனுமதிக்கப்பட்டன, இது அந்த ஆண்டு உணவு மானிய மசோதாவின் பாரிய அதிகரிப்பை விளக்குகிறது என்று சர்வதேச பொருளாதார ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் மூத்த உறுப்பினரும் முன்னாள் தலைவரும் இந்திய உணவுக்கழகத்தின் நிர்வாக இயக்குனருமான சிராஜ் ஹுசைன் கூறுகிறார். "இது [கடன்களை திருப்பிச் செலுத்துதல்], இந்திய உணவுக்கழகம் வட்டியைச் சேமிக்க அனுமதித்தது, இது உணவு தானியங்களின் பொருளாதாரச் செலவைக் குறைத்தது" என்று ஹுசைன் விளக்கினார்.

உணவு மானியம் 2019-20ல் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது, கடந்த ஆண்டு, இந்திய உணவுக்கழகம், அரசுக்கு "பட்ஜெட் வழியே அல்லாத" கடன் வாங்கியது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இந்திய உணவுக்கழகம், 21.41 மில்லியன் டன் உணவு தானியங்களின் இடையக இருப்பை பராமரிக்க வேண்டும். உபரி பங்குக்கு இந்தியா உணவுக்கழகம், சேமிப்பில் செலவழிக்க வேண்டும். தற்போது, ​​சமீபத்திய இருப்பு அறிக்கையின்படி, இந்திய உணவுக்கழகத்திடம் சுமார் 55 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை, 49 மில்லியன் டன்கள், அரைக்கப்படாத நெல் மற்றும் 2.8 டன் தானியங்கள் உள்ளன. மேலும், இந்திய உணவுக்கழகம், 2020-21ல் சேமிப்புக்காக (உணவு மானியத்தில் 1.7%) 9,102 கோடி ரூபாய் செலவிட்டது.

பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் போதிய பாதுகாப்பு இல்லை

அந்தோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள் (ஒரு மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களில் மிக ஏழ்மையானவர்கள்) மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியத்திற்கு உரிமை உண்டு. முன்னுரிமை குடும்பங்கள் ( அந்தோதயா அன்ன யோஜனா (AAY) பட்டியலில் சேர்க்கப்படாத ஏழைகளில் இருந்து மாநில அரசால் அடையாளம் காணப்படுகின்றன) ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியம் பெற உரிமை உண்டு. அவர்களுக்கு தானியங்கள் மானிய விலையில் ஒரு கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும், அரிசி ஒரு கிலோ 3 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு விகிதம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தால், 67% ஆக நிர்ணயிக்கப்பட்டது, இது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கிராமப்புறங்களுக்கு 75% மற்றும் நகர்ப்புறங்களுக்கு 50% என பிரிக்கப்பட்டது. முன்னதாக, நுகர்வு செலவின கணக்கெடுப்பின் வறுமை மதிப்பீட்டின் அடிப்படையில், உணவு மானியம் பெறும் மாநில வாரியான முன்னுரிமை குடும்பங்கள் குறித்து திட்டக் கமிஷன் முடிவு செய்யும் என்று ஹுசைன் கூறினார். ஆனால், 2017-18ல், கணக்கெடுப்பு கைவிடப்பட்டது, இப்போது "நிதி ஆயோக், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கவரேஜ் விரிவாக்கம் குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

மக்கள் தொகைக்கு கூடுதலாக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கவருவதை தீர்மானிக்க, கொள்முதல் செய்ய கிடைக்கும் உணவு தானியங்களின் அளவு பயன்படுத்தப்பட்டது என்று, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் பற்றிய விவாதங்களின் ஒரு பகுதியாக இருந்த, ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான, ஜீன் டெசி கருத்தாகும். "அப்போது, ​​ஆண்டு உணவு தானிய கொள்முதல் 60 மில்லியன் டன்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற கருத்தை மத்திய அரசு எடுத்தது. எனவே அது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பயனுள்ள அளவுகோலாக மாறியது.

இருப்பினும், இந்திய உணவுக் கழகம் 60 மில்லியன் டன்களுக்கு மேல் வாங்க முடியும், மேலும் கடந்த 10 ஆண்டுகளில் வாங்கப்பட்ட தொகைகள் அதிகரித்துள்ளன (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்). இந்த ஆண்டு 43 மில்லியன் டன் அரிசியையும் அதற்கு இணையான கோதுமையையும் வாங்க உள்ளது. இருப்பினும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் காரணமாக விநியோகம் 60 மில்லியன் டன்களுக்கு மேல் செல்ல முடியாது, இது உபரிகளுக்கு வழிவகுக்கிறது.


மேலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு முரணாக, இந்த 2020 அறிக்கையின்படி, அரசாங்கத்தின் சொந்தத் தரவுகளின்படி, 59% பயனாளிகள் மட்டுமே தற்போது பொது வினியோக முறையின் மூலம் பாதுகாக்கப்படுகிறார்கள். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்தி, வழங்கப்பட வேண்டிய ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்ததன் விளைவாக 100 மில்லியன் மக்கள், பொதுவினியோகத் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று, 2020 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கூடுதல் அரிசி அல்லது கோதுமை மற்றும் 1 கிலோ பருப்பு வகைகளை உள்ளடக்கிய நிவாரணத் தொகுப்பானது, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனாவில் கூடுதலாக சேர்க்கப்பட்டு, தொற்றுநோய் பரவிய ஆண்டுகளில் உணவு தானியங்களின் விநியோகம் அதிகரித்தது. 2020-21ல் 94 மில்லியன் டன்களும், 2021-22ல் 80 மில்லியன் டன்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தத் திட்டம் நீட்டிக்கப்படவில்லை.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருவோர் மற்றும் உரிமையை அதிகரிப்பது குறித்து கருத்து அறிய, இந்தியா ஸ்பெண்ட் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தை அணுகியது. அவர்களது பதில் கிடைத்ததும், இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

அதிக தானியங்களைச் சேர்த்து, கிராமப்புறங்களில் பொதுவினியோகத் திட்டத்தை பரவலாக்குங்கள்: நிபுணர்கள்

இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் பொது வினியோகத் திட்டத்தின் முக்கியத்துவத்தை பல ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. 2014 இல் உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் ஆதரிக்கப்பட்ட ஆறு-மாநிலக் கணக்கெடுப்பில் 90%க்கும் அதிகமான வருமைக்கோடு மற்றும் அந்தோதயா அன்ன யோஜனா குடும்பங்கள் தங்களது பொது வினியோகத் திட்ட அட்டைகளைப் பயன்படுத்தி தானியங்களை வாங்குவதைக் கண்டறிந்தது. பொதுவினியோகத் திட்ட தானியங்களுக்கான அணுகல், ஆந்திரப் பிரதேசத்தில் குடும்பங்கள் அரிசி மற்றும் சர்க்கரையை பயன்படுத்த உதவியது, இந்த ஆய்வின் படி, ஊட்டச்சத்து மற்றும் பொதுவினியோகத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் கண்டறியவில்லை. இந்த 2020 ஆய்வின்படி, பொது வினியோகத் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்ட குடும்பங்களில், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருந்தது.

2004ல் இருந்து அதிகரித்துள்ள "கசிவுகள்" (மொத்த தானியத்தில் சுமார் 47%) காரணமாக, பொது வினியோகத்திட்டம் விமர்சிக்கப்பட்டது. திறமையின்மை மற்றும் திருட்டுத்தனத்தை அகற்றும் நடவடிக்கையாக, ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைத்தது அரசு. இந்தியா ஸ்பெண்ட் 2018 இல் வெளியிட்ட கட்டுரையின்படி, இந்த நடவடிக்கையின் நன்மைகள் தெளிவாக இல்லை. ஆகஸ்ட் 2018 இல் எங்கள் கட்டுரை தெரிவித்தது போல், ஆதார் அங்கீகாரப் பிழைகள் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் உணவுப்பொருள் மறுக்கப்படுவதற்கு வழிவகுத்தது; இது, 2018 இல் பதினான்கு இறப்புகளில் ஏழு இறப்புகளுக்கு வழிவகுத்திருக்கலாம்.

அதன் தற்போதைய வடிவத்தில், இந்திய உணவுக்கழகம் அரிசி மற்றும் கோதுமையை மட்டுமே கொள்முதல் செய்வதால், தானியங்களுக்கு மட்டுமே, பொதுவினியோகத் திட்டத்தில் மானியம் அளிக்கிறது.

"சில மாநிலங்கள் மதிய உணவில் தினைகளை வழங்குகின்றன, மேலும் கோவிட் நெருக்கடியின் போது, பொது வினியோகத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு பருப்புகளை வழங்கியது. அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு பருப்பு வகைகள் எளிதாக வழங்கப்படலாம், குறைந்தபட்சம்," என்று டிரேஸ் கூறினார்.

"தினை போன்ற பிற தானியங்களை அதிக நேரம் சேமித்து வைக்க முடியாது, அதைத் தவிர, நாங்கள் அதை அதிகம் உற்பத்தி செய்வதில்லை. பருப்பு வகைகளும் இறக்குமதி செய்யப்படுவதால், அவற்றை இந்திய உணவுக்கழகத்தால் வழங்க முடியாது" என்று திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினர் சக்சேனா கூறினார். "ஆனால், அவற்றை பொது வினியோகத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்" என்றார்.

அரிசி மற்றும் கோதுமையை நம்பியிருப்பதைத் தவிர, கிராமப்புறங்களுக்கு (கிராமப்புறங்களுக்கு 75% மற்றும் நகர்ப்புறங்களுக்கு 50% கவரேஜ்) அதிக ஒதுக்கீடு இருந்தபோதிலும், பொதுவினியோகத் திட்டம், நகர்ப்புற சார்பு கொண்டதாக விமர்சிக்கப்படுகிறது.

2011-12 ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (NSSO) நுகர்வு கணக்கெடுப்பில் இருந்து ஒரு மாநிலத்தில் தானியங்களுக்கு உரிமையுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது. ஆனால் வறுமையின் பிற மதிப்பீடுகள் (பல பரிமாண வறுமைக் குறியீடு போன்றவை) வறுமையின் நிகழ்வு நுகர்வு கணக்கெடுப்பின் மூலம் மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. நிதி ஆயோக் டிசம்பர் 2021 இன் பல பரிமாண வறுமை பற்றிய அறிக்கை, நகர்ப்புறங்களில் 8.8% உடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 32.75% ஏழைகள் என்று கண்டறிந்துள்ளது.

"ரேஷன் கார்டுகளின் கிராமப்புற-நகர்ப்புற விநியோகத்தில் மாநிலங்கள் சிலவற்றைச் சொல்ல வேண்டும். சில ஏழை மாநிலங்களில், உதாரணமாக, கிராமப்புறங்களில் பொது வினியோகத் திட்டத்தை, பரவலாக்குவது ஒரு நல்ல நடவடிக்கையாக இருக்கும்" என்று ட்ரேஸ் கூறினார்.

2021 ஆம் ஆண்டில் அதிகப்படியான தானியத்தின் ஒரு பகுதியை விற்பதற்கான ஒரு கொள்கை வகுக்கப்பட்டது, இதில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும் விலையைக் காட்டிலும் குறைவான விலையில் எத்தனாலை தயாரிக்க, மதுபான ஆலைகளுக்கு அரிசி விற்பனை செய்வதும் அடங்கும். " தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கவரேஜை 2021 இன் மக்கள் தொகை மதிப்பீட்டிற்கு கூட அதிகரிக்க அரசாங்கம் ஒப்புக்கொள்ளவில்லை. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு தானியங்களை விற்றிருக்கலாம். தொற்றுநோய்களின் போது, ​​குறைந்தபட்ச ஆதார விலையின் 50% வெளியீட்டு விலையை செலுத்த தயாராக பலர் இருப்பார்கள்," ஹுசைன் மேலும் கூறினார்.

பொது வினியோகத் திட்டத்தில் உள்ள திறமையின்மையால், பயனாளிகள் நேரடியாக தானியங்களை இலவசமாகப் பெறுவதற்குப் பதிலாக நியாய விலைக் கடைகளில் இருந்து தங்களுக்குத் தேவையான தானியங்களை வாங்க அனுமதிக்கும் பணப் பரிமாற்றத்திற்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் பொருளாதார வல்லுநர்கள் வாதிட்டனர். இருப்பினும், உணவு மானியத் திட்டம் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் இருவருக்கும் ஒரு அத்தியாவசிய சமூக பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்று சக்சேனா விவரித்தார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.