விளக்கம்: உலகளாவிய வர்த்தகத்தில் சம அளவில் கார்பன் நீக்கம் செய்வது எப்படி
வளர்ந்த நாடுகள், நிதி மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்களை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவை உமிழ்வைக் குறைக்கவும், சுத்தமான உற்பத்தி செயல்முறைகளுக்கு மாறவும் உதவ வேண்டும் என்று பல்வேறு பங்குதாரர்கள் கூறுகின்றனர்.
மும்பை: எஃகு, சிமென்ட் மற்றும் உரங்கள் அனைத்தும் வளரும் நாடுகளின் முக்கிய ஏற்றுமதிகள், அவற்றின் உற்பத்தி மிகவும் மாசுபடுத்துகிறது. வளரும் நாடுகளில் இந்தத் தொழிற்சாலைகள் வெளியிடும் உமிழ்வைத் தண்டிக்க பணக்கார நாடுகள் கார்பன் எல்லை வரியை விதிக்க வேண்டுமா, பசுமையான தொழில்நுட்பங்களைப் பின்பற்ற ஊக்குவிக்க வேண்டுமா? அல்லது வளரும் நாடுகளின் மீது செலவுகளை மட்டும் சுமத்தி, இந்தத் தொழில்களை பசுமையாக்க பணமோ தொழில்நுட்பமோ இல்லாமல் அவர்களைத் தவிக்கவிடுமா?
பாரிஸ் ஒப்பந்தத்தின் 6 வது பிரிவின் கீழ், கார்பன் சந்தைகள் தொடர்பான விதிகள் குறித்து, உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் அமைப்புகளின் தற்போதைய 26வது மாநாட்டில், இது போன்ற கேள்விகள் விவாதிக்கப்படுகின்றன. இந்த விதிகள், கார்பன் உமிழ்வுகளின் விலையை நிர்ணயிக்கும் மற்றும் கார்பன் வரவுகளின் சர்வதேச விற்பனையை அனுமதிக்கும்.
கார்பன் எல்லை வரி என்பது வளர்ந்த நாடுகள் பரிந்துரைத்த கார்பன் விலை நிர்ணய கருவிகளில் ஒன்றாகும். ஆனால், இந்தியா போன்ற வளரும் பொருளாதாரங்களுக்கு சுத்தமான மாற்று வழிகளை மாற்றுவதற்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்பத்தை அணுக பணக்கார நாடுகள் உதவாத வரையில், கார்பன்-அடர்த்தியான எஃகு மற்றும் சிமென்ட் போன்ற பொருட்களின் ஏற்றுமதிக்கு அபராதம் விதிக்கும் கார்பன் எல்லை வரி நியாயமற்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது வளரும் நாடுகளில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பாதிக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சர்வதேச வர்த்தகத்தை கார்பன் நீக்கம் செய்தல்
உலகளாவிய வர்த்தகத்தில் கார்பன் நீக்கம் செய்வது ஏன் இன்றியமையாததாக மாறியது? 2020 இல் வெளியிடப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) ஆய்வு அறிக்கையின்படி, 2015 ஆம் ஆண்டில் உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில், 27% சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்புடையது. இந்த உமிழ்வுகள் ஏழு தொழில்களின் ஏற்றுமதியில் குவிந்துள்ளன -அவை, சுரங்கம் மற்றும் ஆற்றல் உற்பத்தி பொருட்களை பிரித்தெடுத்தல்; ஜவுளி மற்றும் ஆடை பொருட்கள்; இரசாயனங்கள் மற்றும் உலோகம் அல்லாத கனிம பொருட்கள்; கணினிகள், மின்னணு மற்றும் மின் உபகரணங்கள்; இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்; மற்றும் மோட்டார் வாகனங்கள்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, ஏற்கனவே கார்பன் வரி விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஒரு உமிழ்வு வர்த்தக அமைப்பை (ETS) கொண்டுள்ளது, அங்கு தொழில்துறை அலகுகளுக்கான பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் அவற்றின் உமிழ்வைக் கட்டுப்படுத்தத் தவறியவர்கள், தீவிரமான குறைப்பு செய்தவர்களிடம் இருந்து "அலவன்ஸ்" வாங்கலாம்.
இருப்பினும், உள்நாட்டு கார்பன் வரி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் வேறுபடுகிறது. உதாரணமாக, ஸ்வீடனின் கார்பன் வரி ஒரு மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடுக்கு சுமார் $137 (ரூ. 10,191) செலவாகும், சுவிட்சர்லாந்து $101 (ரூ. 7,521) வசூலிக்கிறது.
'ஏழை நாடுகளுக்கு சுமை'
கார்பன் வரி என்பது, ஒரு பொருளை உற்பத்தி செய்யும் போது கார்பன் அடிப்படையிலான எரிபொருளை எரிக்க விதிக்கப்படும் கட்டணமாகும். ஒரு நாடு கார்பன் மிகுந்த பொருட்களை விற்கும் போது, இறக்குமதி செய்யும் நாட்டின் எல்லையில் வரி விதிக்கப்படுகிறது.
ஜூலை 2021 இல், ஐரோப்பிய யூனியன், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயு உமிழ்வை, குறைந்தது 55% குறைக்கும் அதன் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக கார்பன்-தீவிரமுள்ள பொருட்களின் இறக்குமதியின் மீது, எல்லை வரியை விதித்தது. ஆனால் இந்த நடவடிக்கையை இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் சீனா நாடுகள், "பாரபட்சமானது" என்று விமர்சிக்கப்பட்டன.
ஐரோப்பிய யூனியன், இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகும், மேலும் 2020 ஆம் ஆண்டில் €62.8 பில்லியன் ($74.5 பில்லியன்) மதிப்புள்ள பொருட்களின் வர்த்தகம் செய்தது, இது இந்தியாவின் மொத்த உலக வர்த்தகத்தில் 11.1% ஆகும். ஐரோப்பிய யூனியனில் இந்தியத் தயாரிப்புப் பொருட்களின் விலையை அதிகரிப்பதன் மூலம், இந்த வரி இந்தியப் பொருட்களை வாங்குபவர்களின் ஈர்ப்பை குறைக்கும் மற்றும் தேவையைக் குறைக்கும் என்று ஜூலை 2021 கட்டுரையில் தெரிவித்தோம்.
வளர்ந்த நாடுகளால் விதிக்கப்பட்ட கார்பன் எல்லை வரி பற்றிய யோசனை, 2021 அக்டோபரில் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டிற்கான ஐ.னா. மாநாட்டால் விமர்சிக்கப்பட்டது, இது வளரும் பொருளாதார நாடுகளுக்கு சுமையாகும், அவை இன்னும் நிலக்கரியையே பெரிதும் நம்பியுள்ளன, அவற்றின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான பட்ஜெட்டைக் கட்டுப்படுத்துகின்றன. வரி விதிக்கப்பட்ட நாடுகள் ஏற்றுமதியின் மீது விதிக்கப்படும் வரிகளால், கணிசமான வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும், அவற்றின் போட்டித்தன்மையை இழக்க நேரிடும் மற்றும் மோசமான உற்பத்தி திறன் கொண்ட நிகர இறக்குமதியாளர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அறிக்கை கூறுகிறது, 2019 ஆம் ஆண்டில், வளரும் நாடுகளின் ஏற்றுமதி வரி வருவாய் $15 பில்லியன் ஆகும்.
கார்பன் வரியின் நன்மைகள்
ஐரோப்பிய யூனியனின் அனுபவம் காட்டியுள்ளபடி, உள்நாட்டு கார்பன் வரி, உலக அளவில் விதிக்கப்பட்டதற்கு மாறாக, ஒரு சிக்கலைக் கொண்டுள்ளது. இது கார்பன் கசிவுக்கு வழிவகுக்கிறது: இதன் பொருள், சில வணிகங்கள் ஐரோப்பிய யூனியனுக்குள் செயல்படுவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, அவை மிகவும் தளர்வான உமிழ்வு வரம்புகளைக் கொண்ட நாடுகளுக்கு இடம் பெயர்கின்றன.
இதை சமாளிக்க, ஐரோப்பிய யூனியன், கார்பன் வரியை எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு நீட்டிக்க பரிந்துரைத்தது, ஏனெனில் இது நாடுகள் தங்கள் போட்டி விளிம்பில் வைத்திருக்க அனுமதிக்கும்.
உலக வங்கியின் கூற்றுப்படி, கார்பன் எல்லை வரியின் வலிமையானது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதத்தைத் தணிப்பதற்கான சுமையை உண்மையில் அதற்குப் பொறுப்பான சந்தையாளர்களுக்கு மாற்றும் திறன் ஆகும். இது உற்பத்தியாளர்களை தூய்மையான தொழில்நுட்பங்களையும், சந்தை புதுமைகளையும் பின்பற்ற ஊக்குவிக்கும்.
ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய பொருளாதாரத்தில், உற்பத்தி மற்றும் நுகரப்படும் உமிழ்வுகள் உள்ளன என்று, கொள்கை ஆராய்ச்சி மையத்தின் அமன் ஸ்ரீவாஸ்தவா கூறினார். வரியானது உமிழ்வுகளின் சரியான தோற்றத்தைக் குறிக்கும் மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட உமிழ்வுகளின் நிகழ்வுகளைக் குறைக்கும்.
கார்பன் எல்லை வரியின் தீமைகள்
கார்பன் எல்லை வரியானது, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளால் நிர்ணயிக்கப்பட்ட, சுற்றுச்சூழல் தரநிலைகளை கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இது பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ள 'பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்பு' (CBDR) கொள்கையை மீறுகிறது என்று, அக்டோபர் 2021 UNCTAD அறிக்கை கூறியது. காலநிலை நெருக்கடிகளின் தாக்கங்களால் அதிகம் பாதிக்கப்படும் ஏழை நாடுகளை விட, பணக்கார நாடுகள் வரலாற்று ரீதியாக அதிக கார்பனை வெளியேற்றியுள்ளன என்ற உண்மையை, இந்தக் கொள்கை ஒப்புக்கொள்கிறது மற்றும் ஈடுசெய்கிறது.
வளரும் நாடுகளுக்கு, நாம் முன்பு கூறியது போல், கார்பன் வர்த்தக வரி பல ஆபத்துக்களைக் கொண்டுள்ளது. 2021 ஜூலை UNCTAD அறிக்கையின்படி, முக்கிய எஃகு மற்றும் சிமென்ட் ஏற்றுமதியாளர்களைப் போலவே, பொருளாதார கட்டமைப்புகள் ஆற்றல்-தீவிர செயல்பாடுகளைச் சார்ந்து இருக்கும் நாடுகளில், சர்வதேச சந்தைகளில் உள்ள போட்டித் தீமைகள், வேலை இழப்பை ஏற்படுத்தலாம் என்றது. இந்த அறிக்கையானது, வளரும் நாடுகளில் ஐரோப்பாவின் கார்பன் எல்லை வரியின் தாக்கங்களை ஆய்வு செய்தது.
"ஐரோப்பிய யூனியனின் கார்பன் எல்லை வரியுடன், வளரும் நாடுகள் உட்பட நாடுகள், தங்கள் சொந்த உள்நாட்டு நுகர்வுக்குக் கூட பங்களிக்காத உமிழ்வுகளுக்கு வரி விதிக்கப்படுகின்றன. இது வர்த்தகம் மற்றும் பிற காலநிலை சமபங்கு கவலைகளுக்கு கூடுதலாக அநீதியின் ஒரு அங்கத்தை சேர்க்கிறது" என்று கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஸ்ரீவஸ்தவா கூறினார்.
கார்பன் எல்லை வரி எப்படி இருக்கும் என்பதற்கான நெறிமுறைகள் எதுவும் இதுவரை இல்லை, ஆனால் அவை வளரும் பொருளாதாரங்களின் தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். "வளரும் நாடுகள் ஏற்கனவே தங்கள் உமிழ்வைக் குறைக்கும் பணக்கார நாடுகளின் தோல்வியாலும், நிதிக் கடமைகளுக்கு ஏற்ப வாழத் தவறியதாலும் பாதிக்கப்பட்டுள்ளன" என்று, நிதி அமைப்புகளில் காலநிலை நெருக்கடியின் தாக்கம் குறித்து செயல்படும், பெங்களூருவை சேர்ந்த க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசன்ஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் பெர்னாண்டஸ் கூறினார். "வளரும் நாடுகளில் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் கார்பன் எல்லை வரி, காயத்தில் உப்பைத் தேய்க்கும் செயல்" என்றார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் நாங்கள் தெரிவித்தபடி, வளர்ந்த நாடுகள் 2020 ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் வருடாந்திர காலநிலை நிதியை, வளரும் நாடுகளுக்கு வழங்குவதாக உறுதியளித்தன. ஆனால் வாக்குறுதியளிக்கப்பட்ட 100 பில்லியன் டாலர்களில், 65% மட்டுமே வளர்ந்த நாடுகளால் சராசரியாக 2013 மற்றும் 2019 க்கு இடையில் வழங்கப்பட்டுள்ளது மற்றும் இதில் பெரும்பாலானவை அதிக தொகையுள்ள கடன்களாக உள்ளன.
மாற்று அணுகுமுறைகள்
கார்பன் வரி விதிப்பில் அனைவருக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை சமமாக இருக்காது என்று கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஸ்ரீவஸ்தவா கூறினார். போட்டியைக் கையாள்வதில் நாடுகள் வெவ்வேறு திறன்களைக் கொண்டுள்ளன.
அக்டோபர் 2021 - UNCTAD அறிக்கை, வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு மிகவும் சமமானதாக இருக்கும் வேறுபட்ட அணுகுமுறையையும் பரிந்துரைத்துள்ளது. இதற்கு வளர்ந்த நாடுகள் சுத்தமான தொழில்நுட்பத்தை இன்னும் அணுகக்கூடியதாக மாற்ற வேண்டும் - உதாரணமாக அறிவுசார் சொத்துரிமை அல்லது காப்புரிமைகளை நீக்குதல் அல்லது ஏழை நாடுகளுக்கு ஆதாரம் பெறுவதற்கான அதிகரிக்கும் செலவை ஈடுகட்ட நிதியுதவி வழங்குதல் என்று அறிக்கை கூறுகிறது.
நாடுகளும், போக்கு காட்டும் கார்பன் வரி முறையை உருவாக்கலாம் என்று காலநிலை ஆபத்து ஹொரைஸனின் பெர்னாண்டஸ் கூறினார். உதாரணமாக, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது படிப்படியான உமிழ்வு குறைப்பு இலக்குகளை அமைக்கலாம், அதன் அடிப்படையில் அவை நிதிக்கான அணுகலை வழங்க முடியும்.
மலிவான சோலார் பேனல்கள், பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மற்றும் கடல் அலைகளில் இருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்கும் முறைகள் போன்ற புதிய தூய்மையான தொழில்நுட்பங்கள், காலநிலை நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், ஏனெனில் உலகளாவிய உமிழ்வை தற்போதுள்ள தொழில்நுட்பங்களுடன் உறுதிப்படுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான தொழில்நுட்ப வளர்ச்சிகள் நிகழும் வளர்ந்த நாடுகளில், காப்புரிமைகள் புதுமைகளை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் இவை ஏழைப் பொருளாதாரங்களுக்கு கட்டுப்படியாகாத வகையில் முடிவடைகின்றன. உதாரணமாக, பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான எஃகு ஏற்கனவே, ஆர்சிலர் மிட்டல் மற்றும் Thyssenkrupp போன்ற ஐரோப்பிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது என்று செப்டம்பர் 2021 கட்டுரையில் நாங்கள் தெரிவித்தோம். ஆனால், இந்தியாவில், இந்த மாற்றத்தை பொருளாதார ரீதியில் போட்டித்தன்மையுடனும், வணிக ரீதியாகவும் சாத்தியமானதாக மாற்றுவது சவாலாக உள்ளது.
ஐரோப்பிய யூனியனின் கார்பன் வரி குறித்த கருத்து அறிவதற்காக, வர்த்தக மற்றும் வர்த்தக அமைச்சகத்தை, நவம்பர் 3 அன்று அணுகினோம். பதில் கிடைக்கும் போது, இக்கட்டுரையை புதுப்பிப்போம்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.