மும்பை: கார்பன் டை ஆக்சைடு (CO2) க்குப் பிறகு இரண்டாவது மிக அதிகமான பசுமை இல்ல வாயு மீத்தேன் ஆகும். இது, வளிமண்டலத்தை வெப்பமாக்குவதில் கார்பன் டை ஆக்சைடை விட 28 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது, மேலும் இது புவி வெப்பமடைதலின் கிட்டத்தட்ட கால் பகுதிக்கு காரணமாகிறது. உலகளவில் 50% மீத்தேன் உமிழ்வுகள், மனித நடவடிக்கைகளால் ஏற்படுகிறது, பெரும்பாலும் விவசாயம், கழிவுகள் மற்றும் புதைபடிவ எரிபொருள் உற்பத்தி மற்றும் நுகர்வு போன்றவற்றால் உண்டாகிறது. தற்போது சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக உலகில் மீத்தேன் வெளியிடும் நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என்று, காலநிலை தரவு இணையதளம் கூறுகிறது. இது, உலக வள நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் காலநிலை கண்காணிப்பாகும்.

செப்டம்பர் 2021 ல், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் ஆற்றல் மற்றும் காலநிலை தொடர்பான முக்கிய பொருளாதார மன்றத்தில் (Major Economies Forum -MEF) உலகளாவிய மீத்தேன் உறுதிமொழிக்கு ஆதரவை அறிவித்தன, நவம்பர் 2021 இல் கிளாஸ்கோவில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) கட்சிகளின் 26வது மாநாட்டில் (COP26) தொடங்கப்படும். கிளாஸ்கோவில், 103 நாடுகள், உறுதிமொழியில் கையெழுத்திட்டன, இது 2020ம் ஆண்டின் அளவுகளில் இருந்து 2030 இல் மீத்தேன் உமிழ்வை 30% குறைக்க இலக்கு வைத்துள்ளது. ஆனால் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு பெரிய மீத்தேன் உமிழும் நாடுகள், மூன்று உறுதிமொழியில் கையெழுத்திடவில்லை, நவம்பர் 2021 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது.

மீத்தேன் தொடர்பான உறுதிமொழியானது, முக்கிய பொருளாதார மன்றத்தில் (MEF) முன்மொழியப்பட்டது மற்றும் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு (UNFCCC) மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் "வரம்புக்கு அப்பாற்பட்டது" என்று இந்திய அரசு டிசம்பர் 2021 இல், இந்தியா ஏன் இந்த உறுதிமொழியில் கையெழுத்திடவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்தது. இருப்பினும், இந்த உறுதிமொழி COP26 இல் தொடங்கப்பட்டு கையொப்பமிடப்பட்டது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பநிலை உயர்வை 1.5-2 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை அந்த ஆண்டுக்குள் மீத்தேன் வெளியேற்றத்தை 40-45% குறைக்காமல் நியாயமான செலவில் அடைய முடியாது என்று, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் உலகளாவிய மீத்தேன் மதிப்பீடு 2021 கூறுகிறது. (அக்டோபர் 2021 விளக்கத்தில், பாரிஸ் ஒப்பந்தத்தைப் பற்றி மேலும் படிக்கவும்).

இந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி எகிப்தில் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெறவுள்ள இரண்டு வார கால COP-27 மாநாட்டுக்கு முன்னதாக, CO2 மற்றும் மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்களை குறைப்பது உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட மற்றும் கூடுதலான இலக்குள்ள காலநிலை உறுதிமொழிகளை சமர்ப்பிக்குமாறு, நாடுகளை ஐநா வலியுறுத்தி உள்ளது. எவ்வாறாயினும், மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதாக இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொள்வது கடினம், ஏனெனில் அது சிறு விவசாயிகள் மீது சுமத்தும் சுமை என்று, அரசும் மற்றும் காலநிலை ஆராய்ச்சியாளர்களும் கூறியுள்ளனர்.

"இந்தியாவில் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வுகள் பெரும்பாலும் விவசாயத் துறையில் இருந்து பதிவாகியுள்ளன, ஏனெனில் கால்நடை உர மேலாண்மை மற்றும் விவசாயம் ஆகியவை மீத்தேன் ஆதாரங்களாக உள்ளன" என்று, பெங்களூருவை சேர்ந்த சிந்தனைக் குழுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் (CSTEP) காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையின் துறைத் தலைவர் இந்து மூர்த்தி, இந்தியா ஸ்பெண்டிடம் இடம் கூறினார்.

"பெரும்பாலான இந்திய விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள். ஒழுங்கற்ற மழைப்பொழிவு முறைகள் காரணமாக அவர்கள் ஏற்கனவே சவால்களால் கடும் சுமையில் உள்ளனர், இது பயிர் உற்பத்தியை நம்பமுடியாததாக ஆக்குகிறது. மீத்தேன் உமிழ்வைக் குறைப்பதற்கான உறுதிமொழியுடன் அவர்களை மேலும் சுமக்க வைப்பது, அதாவது பயிர்கள் அல்லது விவசாய வகைகளை மாற்றுவது புத்திசாலித்தனமானது அல்ல, மக்கள் மீது நியாயமானது அல்ல" என்று மூர்த்தி கூறினார்.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) மீத்தேன் உறுதிமொழியில் கையெழுத்திடாததன் காரணங்களில் சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலையே மேற்கோள் காட்டியுள்ளது, மேலும் மீத்தேன் உமிழ்வைக் குறைக்க எடுத்த பல முயற்சிகளை சுட்டிக்காட்டி இருப்பதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பதில் கூறுகிறது. எவ்வாறாயினும், இந்தியாவின் மீத்தேன் உமிழ்வின் அளவைக் கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் வரையறுக்கப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்தத் திட்டங்கள் மற்றும் அவற்றின் தாக்கம் குறித்து ஜூலை 5ஆம் தேதி சுற்றுச்சூழல் அமைச்சகத்தை அணுகினோம். அங்கிருந்து பதிலைப் பெறும்போது, இக்கட்டுரையை புதுப்பிப்போம்.

நாங்கள், இந்தியாஸ்பெண்டில், இந்திய நகரங்களில் தொழில்துறை மீத்தேன் உமிழ்வைக் கண்காணிக்க, நிகழ்நேர காற்றின் தரத் தரவைக் கண்காணித்து பராமரிக்கும் அட்மாஸ் (Atmos) உடன் இணைந்து உருவாக்கப்பட்ட, மீத்தேனை வெல்லுதல் (Chasing Methane) என்ற புதிய திட்டத்தைத் தொடங்குகிறோம். இந்தியாவின் விவசாயத் துறையில் 80% இருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, அந்தத் துறையின் மீத்தேன் வெளியேற்றத்தில் கவனம் செலுத்துவது சவாலானது மற்றும் நியாயமற்றது என்பதால், நகர்ப்புற தொழில்துறை மீத்தேன் உமிழ்வைக் கண்காணிக்கத் தொடங்குகிறோம். இந்தத் திட்டத்தின் மூலம், மீத்தேன் உமிழ்வுத் தரவை திறந்த, வெளிப்படையான முறையில் பகிரக்கூடிய ஒரு பெரிய அமைப்பை உருவாக்கலாம் என்று, இந்தியா ஸ்பெண்ட் நம்புகிறது, இது இந்த முக்கியமான பிரச்சினையில் பொது விவாதத்தை ஊக்குவிக்கிறது.

முதல் கட்டத்தில், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல் 5-பி செயற்கைக்கோளில் இருந்து 1110-மீட்டர் தெளிவுத்திறனில் உள்ள தரவையும், கோப்பர்நிகஸ் அட்மாஸ்பியர் கண்காணிப்பு சேவையின் உமிழ்வுப் பட்டியலையும் வழங்குகிறோம். அடுத்த சில வாரங்களில், குறைந்த விலை சென்சார்களைப் பயன்படுத்தி மும்பை முழுவதும் மீத்தேன் வெளியேற்றத்தைக் கண்காணித்து, தரவை பகுப்பாய்வு செய்வோம். #மீத்தேனை வெல்வோம் (#ChasingMethane) பற்றிய வழக்கமான புதுப்பிப்புகளுக்கு @IndiaSpendAir- ஐ நீங்கள் பின்தொடரலாம்.



மீத்தேன் பிரச்சனை

கார்பன் டை ஆக்சைடுக்கு (CO2) பிறகு, புவி வெப்பமடைதலில் மீத்தேன் இரண்டாவது பெரிய பங்களிப்பாகும். மீத்தேன் தாக்கம் குறுகிய காலமே உள்ளது, ஏனெனில் இது வளிமண்டலத்தில் சுமார் ஒரு தசாப்த காலமாக உள்ளது, கார்பன் டை ஆக்சைடுடன் ஒப்பிடும்போது, ​​அதன் தாக்கம் பல தசாப்தங்களாக நீடிக்கும். இருப்பினும், மீத்தேன் கார்பன் டை ஆக்சைடை விட அதிக வெப்பப்பொறி திறனைக் கொண்டுள்ளது. 20 ஆண்டுகளில், மீத்தேன் கார்பன் டை ஆக்சைடை விட 80 மடங்கு அதிக வெப்பத்தை பிடிக்கும். குளோபல் மீத்தேன் பட்ஜெட் 2020 இன் படி, 100 ஆண்டு காலக்கட்டத்தில், மீத்தேன், கார்பன் டை ஆக்சைடைவிட 25 மடங்கு ஆற்றல் வாய்ந்தது.

மீத்தேன் இயற்கையாகவும் மனித செயல்பாடுகளாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கையில், நீருக்கடியில் அல்லது சதுப்பு நிலங்கள் போன்ற குறைந்த அல்லது ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் கரிமப் பொருட்கள் சிதைவடையும் போது மீத்தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அமேசான் நதிப் படுகை போன்ற சதுப்பு நிலங்கள் மீத்தேன் உமிழ்வுகளுக்கு மிகப்பெரிய இயற்கை பங்களிப்பாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்று, மீத்தேன் வெளியேற்றத்தில் பாதிக்கும் குறைவானது இயற்கை மூலங்களிலிருந்து. மீத்தேன் மனித உமிழ்வுகள் வளிமண்டலத்தில் அதன் செறிவை அதிகரித்துள்ளன, இது புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கிறது. குடல் நொதித்தல், கால்நடைகளின் செரிமான செயல்முறை, மீத்தேன் வெளியிடுகிறது. நெல் சாகுபடி மீத்தேன் மற்றொரு முக்கிய ஆதாரம். மீத்தேன் நிலத்தடி புதைபடிவ எரிபொருள் வைப்புகளிலும் காணப்படுகிறது, மேலும் இவை வணிக ரீதியாக வெட்டப்படும்போது வெளியிடப்படுகிறது. புதைபடிவ எரிபொருள் உற்பத்தி மற்றும் நுகர்வு மனிதனால் ஏற்படும் உமிழ்வுகளில் 35%, கழிவுகள் 20% மற்றும் விவசாயம் 40%, யுஎன்இபி-க்கு. (எங்களது ஆகஸ்ட் 2021 விளக்கத்தில், மீத்தேன் பற்றி மேலும் படிக்கவும்).

இந்தியாவின் மீத்தேன் உமிழ்வு மற்றும் குறைப்பு முயற்சி

உலகின் மிகப்பெரிய கால்நடைகள் மற்றும் இரண்டாவது பெரிய அரிசி உற்பத்தி செய்யும் இந்தியாவில், எரிசக்தி துறையை விட ஐந்து மடங்கு அதிக மீத்தேன் வாயுவை விவசாயத் துறை வெளியிடுகிறது. உலகளாவிய மீத்தேன் டிராக்கர் 2022 இன் படி, மொத்த மீத்தேன் வெளியேற்றத்தில் விவசாயம் 61% ஆகும், அதே நேரத்தில் இந்தியாவின் ஆற்றல் துறை 16.4% மற்றும் கழிவு 19.8% ஆகும்

கீழே உள்ள படங்கள், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல் 5-பி செயற்கைக்கோளில் இருந்து 1,110 மீட்டர் தெளிவுத்திறனில் இருந்து இந்தியா முழுவதும் மீத்தேன் வெளியேற்றத்தைக் காட்டுகின்றன. ஜனவரி முதல், மே 2022 வரையிலான சராசரி ஐந்து மாதங்களின் அடிப்படையில் தரவுகள் உள்ளன. கீழே இடம்பெற்றுள்ள படங்களின் வரிசையானது, துறை வாரியாகப் பிரிக்கப்பட்ட இந்தியா முழுவதும் மீத்தேன் புளூமைக் கண்டறிவதைக் காட்டுகிறது.

மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, 2021 டிசம்பரில் பாராளுமன்றத்தில் அளித்த பதிலில், பல்வேறு துறைகளில் மீத்தேன் குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பல முயற்சிகளை சுட்டிக்காட்டினார். 2018 இல் தொடங்கப்பட்ட கால்வனிசிங் ஆர்கானிக் பயோ-வேளாண் வளங்கள் (கோபர்-தன் / Gobar-Dhan ) திட்டம் மற்றும் 2017 முதல் செயல்படுத்தப்பட்ட புதிய தேசிய உயிர்வாயு மற்றும் கரிம உரத் திட்டம், உயிர் ஆற்றல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் கால்நடை கழிவுகளை மீட்டெடுப்பதற்கான ஊக்கத்தொகைகளை விவசாயிகளுக்கு வழங்குகிறது. 2014 ஆம் ஆண்டு முதல், தேசிய கால்நடை இயக்கம் கால்நடைகளுக்கு சமச்சீர் உணவுகளை வழங்குவதை உள்ளடக்கியது, இது "கால்நடைகளில் இருந்து மீத்தேன் வெளியேற்றத்தைக் குறைக்க உதவும்" என்று சௌபே கூறினார்.

மீத்தேன் உமிழ்வைக் குறைக்கக்கூடிய ஆரம்ப நெல் சாகுபடியின் போது, குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தும் நேரடி விதை அரிசி உட்பட பல திட்டங்கள், மற்றும் மீத்தேன் உமிழ்வை மறைமுகமாக குறைக்கும் விவசாய, நகர்ப்புற, தொழிற்சாலை மற்றும் நகராட்சி திடக்கழிவுகளில் இருந்து பயோகேஸ்/பயோமீத்தேன் அல்லது பயோ-சிஎன்ஜியை உருவாக்கும் கழிவு முதல் ஆற்றல் ஆலைகள் ஆகியவை அமைச்சகத்தின் பதிலில் பட்டியலிடப்பட்டுள்ளன.

"அத்தகைய திட்டங்கள் (அந்த திசையில் செயல்படலாம் மீத்தேன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில்), ஆனால் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தக்கூடும்" என்று மூர்த்தி கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.