புலம்பெயர்ந்தோரை நகரின் ஒதுக்குப்புறத்துக்கு தள்ளும் அரசு கொள்கைகள்

மும்பை: புலம்பெயர்ந்தவர்களுக்கு நட்புறவான கொள்கைகள் இல்லாதது, சமூக பாகுபாடு, மோசமான நகர திட்டமிடல், அதிக வாழ்க்கைச்செலவினம் ஆகியன, இந்தியாவின் ஆறு பெரிய நகரங்களில் உள்ள புலம்பெயர்ந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை, நகரின் ஒதுக்குப்புறத்திற்கு தள்ளிவிட்டதாக, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து பகுப்பாய்வு செய்யப்பட்ட, புலம்பெயர்ந்தோர் குறித்த தரவுகள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் நகரங்களில் ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் வீட்டு உதவியாளர்கள் என அத்தியாவசிய சேவையை வழங்குகின்றனர்; நகரின் பொருளாதாரத்தை உயர்த்துகின்றனர். இருப்பினும், 2011இல் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி நகரங்களில் குடியேறிய 6.26 கோடி புலம்பெயர்ந்த மக்களில், 3.34 கோடி பேர் நகரின் ஒதுக்குப்புறங்களுக்கு தள்ளப்பட்டதாக, மும்பையை சேர்ந்த லாப நோக்கற்ற அமைப்பான இந்தியா மிக்ரேஷன் நவ் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.
இத்தகைய நகர்ப்புற ஒதுக்குப்புறங்களில் மட்டுப்படுத்தப்பட்டஉள்கட்டமைப்பு, மற்றும் வசதிகளை தான் கொண்டுள்ளன; நகரின் அனைத்து வசதி வாய்ப்புகளை புலம்பெயர்ந்தோர் அணுகுவதை தடுக்கின்றன. மேலும், அவர்களை மோசமான உடல்நலம் மற்றும் வாழ்க்கை நிலைக்கு தள்ளுகிறது.
ஒரு மாநிலத்திற்குள் அல்லது இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இடையே நிகழும் இடம்பெயர்வு என்பது, அவர்களது வீடுகளின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது; மேலும் மக்கள் குடியேறும் பகுதி மற்றும் அவர்களின் சொந்தப்பகுதிக்கும் பயனளிக்கிறது என்று, ஆகஸ்ட் 2019இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. பணம் அனுப்புவது என்பது, புலம்பெயர்ந்தோரின் சொந்த ஊரின் வறுமையை குறைக்க உதவும்.
சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களை, நகரங்களுக்கு இடம் பெயரச் செய்வதன் மூலம், நகரின் உள்கட்டமைப்பை குறைந்த செலவில் வழங்கி, அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். தொலைதூர மற்றும் அணுக முடியாத பகுதி மக்களின் இயக்கத்தை, இவ்வாறு எளிதாக்குவது, அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று.
பொருளாதார வளர்ச்சியின் இதே கட்டத்தில் இந்தியாவில் காணப்படும் மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்வு என்பது, மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. 2016இன் உலக வங்கி ஆய்வு, நாட்டின் பல பகுதிகளிலும் புலம்பெயர்வோருக்கு உகந்த கொள்கைகள் இல்லாததே இதற்கு ஒரு காரணம் என்கிறது. இது புலம்பெயர்ந்த மக்களை புறநகருக்கு குடியேற கட்டாயப்படுத்துகிறது.
விரிவடையும் புறநகரங்கள்
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில், அதன் அருகாமையில் இருக்கும் வளர்ச்சியடைந்த பகுதிகள் - மும்பையில் உள்ள மத்திய ரயில்வே காலனி - அல்லது டெல்லியின் நொய்டா) நகரங்களாக விரிவடைகின்றன. இந்திய நகர்ப்புற விரிவாக்கம் பெரும்பாலும் பல மாவட்டங்களில் பரவுகின்றன; இவை, 70 லட்சத்திற்கும் மேலான மக்களை கொண்டவை; பல்வேறு நகராட்சி நிறுவனங்களை உள்ளடக்கியவை மற்றும் நகரின் மையப்பகுதி மற்றும் பரந்த எல்லைப்பகுதி சுற்றளவை கொண்டுள்ளன என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்தியா மிக்ரேஷன் நவ் அமைப்பின் பகுப்பாய்வானது, நகரின் மையப்பகுதிக்கான தூரம், மக்கள் தொகை, மாநகர இருப்பு, விவசாயம்சாரா பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர் விகிதம் மற்றும் பிராந்திய நகரமயமாக்கலின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், புறநகர் மற்றும் பெரு நகர்ப்புறம் என்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுத்தி உள்ளது.
உதாரணத்திற்கு, கொல்கத்தா பெருநகரப்பகுதியில், கொல்கத்தா மற்றும் ஹவுரா மாவட்டங்கள் புறநகர்ப்பகுதி. அவை, அதிக கட்டமைப்பு சதவீதம் மற்றும் குறைந்த கிராமப்புற மக்கள் அடிப்படையில் புறநகர் பகுதி மையங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. வடக்கு 24 பர்கானாக்கள், தெற்கு 24 பர்கானாக்கள், நாடியா மற்றும் ஹுக்லி ஆகிய மாவட்டங்கள், அதிக கிராமப்புற மக்கள் தொகை மற்றும் மாநகராட்சி எதுவுமில்லாமல், குறைந்த சதவீத கட்டமைக்கப்பட்ட பகுதி கொண்ட பெரு நகர்ப்புறங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நிறைவுற்ற நகரங்கள்
கடந்த 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை நகர்ப்புற சுற்றுப்பகுதிகளில் குடியேறியவர்களை விட மற்றும் நகர்ப்புற மையப்பகுதியில் குடியேறியவர்கள் அதிகமாக இருந்தது.
டெல்லி (மாநகரப்பகுதியில் 1.25 கோடி, புறநகரில் 13 லட்சம் ) மற்றும் பெங்களூரு (மாநகரில் 51 லட்சம் மற்றும் புறநகரில் 8,59,030) ஆகிய நகரங்களில் பெருநகரப்பகுதிகளைவிட புறநகரங்களில் அதிகமானவர்கள் குடியேறினர்.
பெங்களூரு நகர்ப்புற ஒருங்கிணைப்பு ஒப்பீட்டளவில் புதிய நிகழ்வு ஆகும், சமீபத்தில் பெங்களூரு நகர்ப்புறத்தைத் தாண்டி பெங்களூரு ஊரகம் மற்றும் ராமநகர மாவட்டங்களிலும் இது பரவி வருகிறது. புலம்பெயர்ந்தோரை ஈர்க்கும் வகையில் நகரம் ஏன் அதன் நிறைவு நிலையை இன்னும் அடையவில்லை என்பதை இது விளக்கக்கூடும்.
டெல்லி தேசிய தலைநகரப்பகுதி (என்.சி.டி) உள்ளிட்ட தேசிய தலைநகர் பிராந்தியத்தில், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள 23 நகரங்கள், என்.சி.ஆர் திட்டமிடல் வாரியத்தின்படி உள்ளடக்கியது. இந்த பகுப்பாய்வு, டெல்லி நகர்ப்புற ஒருங்கிணைப்பு, டெல்லி என்.சி.டி மற்றும் அதன் உடனடி எல்லைக்குட்பட்ட மாவட்டங்களை மட்டுமே உள்ளடக்கியது. டெல்லி என்.சி.டி-இல் இருந்து பல்வேறு நகர்ப்புற மையங்களுக்கு (குருகிராம், காஸியாபாத், கவுதம் புத்தா நகர்) இடம்பெயர்ந்தவர்கள் 6.3% (783,474) ஆகும்.

மும்பையின் மையப்பகுதிக்கான இடம்பெயர்வு பெரும்பாலும் 2001 மற்றும் 2011ஆம் ஆண்டுக்கு இடையில் (52 லட்சத்தில் இருந்து 55 லட்சமாக) மாறாமல் இருந்தது; ஆனால் அதன் புறநகரப்பகுதிகளுக்கு இடம்பெயர்வு என்பது, 2001இல் 56 லட்சத்தில் இருந்து 2011இல் 89 லட்சமாக அதிகரித்தது. வேறு எந்த முக்கிய நகரின் புறநகர்ப்புறத்திலும் இடம்பெயர்வு என்பது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்தளவே அதிகரித்தது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின், 2009 மும்பை மனித மேம்பாட்டு அறிக்கையின்படி, மும்பையின் பிரம்மாண்ட வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல், 1800ஆம் ஆண்டுகளில் இருந்தே புலம் பெயர்வுகளால் உந்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சமீபத்திய ஆண்டுகளில் மக்கள்தொகை விகிதம் பிரதான நகரை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, இது குடிசைப்பகுதிகளை வளர்ப்பதற்கும், மக்கள் நெரிசலுக்கும் வழிவகுக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.
Source: India Migration Now
இந்தியா மிக்ரேசன் நவ் வழங்கும் இந்த தகவல் தொகுப்புகள் 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு நகர்ப்புற மற்றும் பெருநகர்ப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததைக் காட்டுகிறது.
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பாகுபாடு
பெருநகரங்க்களில் அதிகமான புலம்பெயர்ந்தோரை (மற்றும் சில உள்ளூர்வாசிகள்) புறநகருக்கு விரட்டுவது, நகர்ப்புற மையப்பகுதியில் வீடுகளுக்கான செலவினம் தான் என்று, டெல்லியை சேர்ந்த அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனின் 2019 ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதிக வாழ்க்கைச் செலவுடன் மட்டுமின்றி தற்காலிக மற்றும் நிரந்தர வீட்டுவசதி செய்து தருவதில் புலம்பெயர்ந்தோரை விலக்கி வைக்கும் மாநில அரசின் திட்டங்களும் காரணமாகிறது என, இந்தியா மிக்ரேசன் நவ் அமைப்பின் இன்டர்ஸ்டேட் மிக்ரண்ட் பாலிசி இன்டெக்ஸ் 2019 (IMPEX 2019) தெரிவிக்கிறது. இது, மாநிலம் கடந்து குடியேறியவர்களை ஒருங்கிணைப்பதற்கான மாநில அளவிலான கொள்கைகளை பகுப்பாய்வு செய்கிறது.
புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் குடிசைப்பகுதிகளிலும், தற்காலிக குடியிருப்புகளிலும் தங்கி இருக்கிறார்கள்; மறுவாழ்வு, இழப்பீடு அல்லது முன்அறிவிப்பு எதுமின்றி கட்டாயமாக வெளியேற்றம் செய்யப்படுகிறார்கள்.
உதாரணமாக, நகர சொத்துகள் மீதான சச்சரவு மற்றும் நகர்ப்புற ஏழைகள் சட்டவிரோதமானவர்கள்; அவர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கின்றனர் என்ற கருத்து உள்ளது. “நகரின் அழகுபடுத்துதல்” போன்ற காரணங்களுக்காக மற்றும் குடிசை மறுவாழ்வு திட்டங்களின் வடிவத்திற்காக, அவர்கள் கவனிக்கப்படுவதில்லை என டெல்லியை சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வலையமைப்பின் 2018 அறிக்கை கூறுகிறது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில், இத்தகைய வெளியேற்றங்கள் நடந்தன.
சாதி- மற்றும் மத அடிப்படையிலான குடியிருப்புகளை பிரித்தல் என்பது, பெரும்பாலும் புலம்பெயர்ந்தோர் நிலையுடன் தொடர்பு உடையது. புலம்பெயர்ந்தோரை, குடியிருப்பு விலை குறைந்த பெருநகர்ப்புற பகுதிகளுக்குச் செல்லுவதை கட்டாயப்படுத்துகிறது என, 2012இல் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வும், பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐ.ஐ.எம்.) 2018 ஆய்வறிக்கையும் கண்டறிந்தது.
முஸ்லிம்கள் மற்றும் இந்து தலித் (பின்தங்கிய சமூகங்கள் என்று வரலாற்று ரீதியாக அறியப்படுபவர்கள்) சமூகங்கள் இடையே இடம்பெயர்வு போக்குகள், வீடு ஒதுக்கீட்டில் பாகுபாடு போன்ற காரணிகளால், புறநகர்ப்பகுதி இடத்திற்கான அணுகல் குறைவை வெளிப்படுத்துவதாக, ஏரியா டெவலப்மெண்ட் அண்ட் பாலிசி 2019 பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
பல பெரிய மாநிலங்களில் அரசு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சேவை வழங்குதலில் உள்ள இட ஒதுக்கீடு முறைகள், புலம்பெயர்ந்தோருக்கு எதிராக உள்ளன. உதாரணமாக ஆந்திர அரசு, தொழிற்சாலை மற்றும் பிற வேலைவாய்ப்புகளில் சொந்த மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற மசோதாவை 2019 ஜூலையில் நிறைவேற்றியது; இது, 75% தனியார் தொழில்துறை வேலைகளை மண்ணின் மைந்தர்களுக்கு ஒதுக்குகிறது.
மகாராஷ்டிராவில், 2008ஆம் ஆண்டு முதல், மேற்பார்வை அல்லாத வேலைகளில் 80% மற்றும் மேற்பார்வை வேலைகளில் 50% சொந்த மாநிலத்தவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளன; பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி, இந்த ஒதுக்கீடு மேலும் சிறப்பாக செயல்படுத்துவதையும், ஒப்பந்த அடிப்படையிலால வேலைகளுக்கு நீட்டித்து விரிவாக்குவதையும் கண்காணிக்கும் சட்டத்தின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயப்படும் என்று கூறியதாக, ஆகஸ்ட் 2019 டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.
டெல்லியில், ஆம் ஆத்மி கட்சி 2019 தேர்தல் அறிக்கையில் 85% வேலைகளை உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கப்படும் என்று உறுதி அளித்தது. கர்நாடக அரசு தனியார் நிறுவனங்களில் 100% உள்ளூர் இடஒதுக்கீடு பின்பற்றப்பட உள்ளதாக, 2019 பிப்ரவரி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது. இந்த மாநிலங்கள் அனைத்தும் பல நகர்ப்புற ஒருங்கிணைப்புகளின் சுற்றளவில் வாழும் மற்றும் பணிபுரியும் பல புலம்பெயர்ந்தோரின் சொந்த மாநிலமாகும்.
சுகாதாரம், துப்புரவில் சமமற்ற அணுகல்
புலம்பெயர்ந்தோருக்கு மாநில அளவிலான சுகாதாரத் திட்டங்கள், சுகாதார வசதிகள் போதுமானதாக இல்லை. மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களில் மாநிலங்களுக்கு இடையே புலம்பெயர்ந்தோர் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை என, 2019 ஐ.எம்.பி.இ.எக்ஸ் பகுப்பாய்வு கூறுகிறது.
மும்பையில் உள்ள புலம்பெயர்ந்த பெண்கள், பிரசவத்திற்கான சுகாதார வசதிகளை அங்கு குறைவாகவே பயன்படுத்தினர், மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவான பிரசவங்களே உரிய முன்கண்காணிப்பை பெற்றிருந்ததாக 2016 ஆய்வு கண்டறிந்தது.
புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு அரசின் மானிய விலை உணவு பொருட்கள் கிடைக்காததால், அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் அவர்களின் குடும்பத்தினருக்கு எட்டாததால், பாதுகாப்பற்று இருக்கின்றன; மேலும் அவர்களது குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்று, அகமதாபாத்தில் உள்ள ஒரு கட்டுமானத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட புலம்பெயர்ந்தோர் பற்றிய 2019 ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பெருநகரின் மையப்பகுதியில் இருந்து புலம்பெயர்ந்தோர் விலகிச் செல்வதற்கு உள்கட்டமைப்பு சேவைகளுக்கான அணுகல் (நீர் வழங்கல், கழிவு மேலாண்மை, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள்) குறைவு காரணம் என்று, உலக வங்கியின் 2013 அறிக்கை கூறுகிறது. இத்தகைய உள்கட்டமைப்பின் பற்றாக்குறை, சுற்றுச்சூழல், உளவியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியை சுற்றுவட்டாரங்களில் வசிப்பவர்களுக்கும் ஏற்படுத்துகிறது.
உதாரணத்திற்கு, பெங்களூரு நகர மையப்பகுதியில் குழாய் நீர் போன்ற சேவைகளுக்கான அணுகல் அதிகரித்துள்ளது; அதே நேரம் புறநகர்ப்பகுதியில் அதன் அணுகல் அளவு சரிந்துள்ளதாக, அறிக்கை கூறுகிறது.
"ஹைதராபாத்தில், புறநகர்ப்பகுதிகளில் நீர்வளங்கள் அதிகம் இருக்கும் நிலையில் நகரின் மையப்பகுதியில் இருப்பவர்கள் தண்ணீர் பெறுவதற்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது என்ற நிலையானது, வசதி வாய்ப்புள்ள மக்கள் தவிர மற்றவர்கள் நீர் அணுகல் அல்லது அதிக கொள்முதல் திறனை இழக்கின்றனர்” என்று, ஹைதராபாத்தை சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான இன்டர் டிசிபிலினரி வாட்டர் ரிசோர்ஸ் ஸ்டடி அமைப்பின் தெற்காசியா கூட்டமைப்பு நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளிலும் குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை, நிலத்தடி நீர் குறைவு மற்றும் உப்புத்தன்மை என இதே போன்ற பிரச்சினைகள் உள்ளதாக, அமெரிக்காவின் ஹவாயை சேர்ந்த யுனைடெட் ஸ்டேட்ஸ் ஈஸ்ட் -வெஸ்ட் சென்டர் நடத்திய 2014 ஆய்வு தெரிவித்தது.
நகர்ப்புறங்களில் காவல் மற்றும் போக்குவரத்து நிர்வாகம் மோசமாக உள்ளது என்கிறது, அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் 2019 அறிக்கை.
புறக்கணிக்கப்பட்ட புறநகர் பகுதிகள்
நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிர்வாகங்களால் பெரிதும் புறக்கணிக்கப்பட்ட புறநகர்ப்பகுதிகள், பொதுச்சேவைகளுக்கு யார் பொறுப்பு என்பதில் அடிக்கடி குழப்பம் நிலவுகிறது: ஊராட்சியா அல்லது நகராட்சி நிர்வாகமா என்று சர்வதேச பொறியியல் தொழில் நுட்பம் ஆராய்ச்சி இதழில் வெளியான 2015 ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய நகரங்களுக்கான முதன்மைத் திட்டங்கள் பெரும்பாலும் சுற்றுவட்டாரங்களை முன்னிலைப்படுத்துகின்றன; ஆனால் அவற்றை முறைப்படுத்தாமல் விட்டுவிடுகின்றன என்று, பெங்களூருவில் உள்ள சமூக மற்றும் பொருளாதார மாற்ற நிறுவனத்தின் மிருனாலினி கோஸ்வாமி எழுதிய 2018 கட்டுரை தெரிவிக்கிறது. நகர்ப்புற திட்டமிடல் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் யதார்த்தங்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாதது இதற்கு ஒரு காரணம்.
எடுத்துக்காட்டாக, 1985ஆம் ஆண்டின் மாதிரி பிராந்திய மற்றும் நகர திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ், பெருநகரத் திட்டக் குழுக்களின் எம்.பி.சி (MPC) தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் நகர்ப்புறங்களுக்கான பிராந்திய வளர்ச்சித் திட்டங்களை வகுக்க வேண்டும். அரசியலமைப்பின் 74வது திருத்தம், எம்.பி.சி-இல் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினர் தேர்வு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது அப்பகுதியில் உள்ள நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆயினும்கூட, பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் தேர்ந்தெடுக்கப்படாத அதிகார அமைப்பு, தொடர்ந்து மாஸ்டர் திட்டங்களை வகுக்கும் பொறுப்பில் உள்ளது. இதனால் திட்டமிடல் நிலையான மற்றும் பொது பங்களிப்பு இல்லாமல், நகர சுற்றுவட்டாரங்கள் மற்றும் மக்களின் தேவைகளுக்கான மாற்று வழியைப் முறையாக கணக்கிட முடியவில்லை. பல்வேறு அரசு அமைப்புகளுக்கு இடையேயான போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது குடிமக்களுக்கு சேவைகளை வழங்குவதையும் பாதிக்கிறது என்று 2013 உலக வங்கி ஆய்வு கூறுகிறது.
சமூக பாகுபாடு
பெரும்பாலும் நகர்ப்புற மையப்பகுதிகள் மிகவும் மாறுபட்டதாக இருந்தாலும், புறநகர்ப்புற பகுதிகள் சாதி அல்லது மத பாகுபாட்டை அதிகரித்துள்ளன.
உதாரணமாக, மும்பையின் புறநகர் பகுதி மாவட்டமான ராய்கர், சாதி அடிப்படையிலான மோதல்கள் மற்றும் பாகுபாடுகளின் தளமாக விளங்குகிறது என்று ஏப்ரல் 2019 இந்தியா டுடே கட்டுரை தெரிவித்துள்ளது.
இதேபோல், மும்பையின் புறநகர் மாவட்டமான தானேயில், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அரசியல் கட்சிகளின் பிற அளவுகோலைவிட, சாதி தான் ஆதிக்கம் செலுத்துவதாக, ஏப்ரல் 2019 டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
மாநிலங்களுக்குள்ளான புலம்பெயர்வு மெதுவாக அதிகரிக்கிறது
கடந்த 1991 மற்றும் 2011 க்கு இடையில், முந்தைய தசாப்தத்தை விட அதிகமான இந்தியர்கள் புலம்பெயர்ந்ததாக, தரவு காட்டுகிறது. 2011 இல், 45.36 கோடி மக்கள் குடியேறியது, 2001 ல் குடியேறிய 31.45 கோடி என்பது, 1.4 மடங்கு அதிகம்.
இருப்பினும், கடந்த இரு தசாப்தங்களில் இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையிலான இடம்பெயர்வு மெதுவாக வளர்ந்தது; 2001இல் 4.1 கோடியில் இருந்து 32% அதிகரித்து 2011இல் 5.4 கோடியாக இருந்தது. இது 1991 மற்றும் 2001 க்கு இடையில் 55% அதிகரித்துள்ளது என்று தரவு காட்டுகிறது.
நகர மக்களின் தேர்வு அவர்களின் சொந்த ஊருக்கு அருகாமையில் இருப்பது, உணரப்பட்ட கிடைக்கும் தன்மை மற்றும் வேலையின் அணுகல் போன்ற காரணிகளை பொறுத்தது. உதாரணமாக, கர்நாடகாவின் குல்பர்கா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவுக்கு அருகில் உள்ளது; இது, மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு புலம்பெயருவோரை அனுப்புகிறது.
வரலாற்று இடம்பெயர்வு போக்குகள், புலம்பெயர்ந்தோர் வலையமைப்புகள் மற்றும் நகர உள்கட்டமைப்பு ஆகியன புலம்பெயர்ந்தோர் செல்லும் நகரங்களை பாதிக்கின்றன.
அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து பலர் டெல்லிக்கு குடிபெயர்கின்றனர்; உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து மும்பைக்கும்; ராஜஸ்தானில் இருந்து சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதை, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 தரவுகள் காட்டுகின்றன.
அரசின் புதிய கொள்கைக்கான தேவைகள்
ஏழைகளுக்கு உயிர்வாழ்வதற்கான இடமாக நகர்ப்புற மையங்களுக்கு மாறுவது என்பது, புலம்பெயர்ந்த-நட்புறவற்ற கொள்கைகளால் கடினமாகிவிட்டது. நகரங்கள் மற்றும் பெரிய புறநகர்ப்பகுதிகளில் குடியேறுபவர்கள் எதிர்கொள்ளும் பல விலக்குகளை நிவர்த்தி செய்யும் நீண்டகால உள்ளடக்கம் கொண்ட கொள்கை உருவாக்கம் மட்டுமே இந்தியாவுக்கு இடம்பெயர்வு வாய்ப்புகளைப் பயன்படுத்த உதவும்.
வாடகை வீடுகளை வழங்குதல், நகர்ப்புற மற்றும் புற நகர்ப்புற பகுதிகளில் சேவை வழங்கல் முறையை மேம்படுத்துதல், நகர்ப்புற நிர்வாக அமைப்புகளுக்கு இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியன, பொருளாதார ரீதியாக வேகமாக வளரவும், புலம்பெயர்ந்த மக்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்கவும் உதவும்.
(மித்ரா, டாம்லே மற்றும் வர்ஷ்னி ஆகியோர், மும்பையை சேர்ந்த லாப நோக்கற்ற அமைப்பான இந்தியா மிக்ரேசன் நவ் ஆராய்ச்சியாளர்கள்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.