பெங்களூரு: இந்த மழைக்காலத்தில் பெய்த ஒழுங்கற்ற மழைப்பொழிவு, தெற்கில் உள்ள கர்நாடகாவின் உள்பகுதியில் இருக்கும் காவிரி நதிப்படுகை மாவட்டங்களில், விதைக்கப்பட்ட 25% காரீப் (கோடை) பயிர்களை நாசம் செய்ததாக, உள்ளூர் விவசாயிகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. இங்குள்ள விவசாயிகள் பயிர் விதைப்பதை ஆகஸ்டுக்கு ஒத்திவைத்திருந்தனர், ஏனெனில் பாரம்பரிய விதைப்பு மாதங்களான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மிகக் குறைந்த மழைப்பொழிவே இருந்தது. ஆனால் ஆகஸ்டில் பெய்த மழையால் வளரும் மற்றும் வளர்ந்த பயிர்களில் கால் பகுதி சேதமடைந்தன.

காவிரி படுகையின் தெற்குப்பகுதிகளில் 28%, மத்திய பகுதிகளில் 22% மழை பற்றாக்குறை இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை -ஐஎம்டி (IMD) தெரிவித்துள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் 102% என்ற “அதிகளவாக” பதிவாகி இருந்தது.

"கர்நாடகாவில் நான்கு மாதங்களுக்கும் மேலாக மழை பெய்தால் கிடைக்க வேண்டிய மழையின் அளவு, இம்முறை இரண்டு மாதங்களில் பெறப்பட்டுள்ளது" என்று பெங்களூரு இந்திய அறிவியல் கழகம்- ஐ.ஐ.எஸ்.சி (IISc) சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் மற்றும் நீர் ஆராய்ச்சி மையத்தின் -ஐ.சி.டபிள்யூ.ஏ. ஆர் (ICWaR) துறை பேராசிரியர் சேகர் முது தெரிவித்தார்.

காவிரி படுகையில் மழை ஒழுங்கின்மை, ஜூன் 2019. நன்றி: ராஜ் பகத் பழனிச்சாமி.

காவிரி படுகையில் மழை ஒழுங்கின்மை, ஜூலை 2019. நன்றி: ராஜ் பகத் பழனிச்சாமி.

காவிரி படுகையில் மழை ஒழுங்கின்மை, ஆகஸ்ட் 2019. நன்றி: ராஜ் பகத் பழனிச்சாமி.

"ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் காவிரிக்கு வறட்சி போன்ற சூழல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது," என்று ஜி.ஐ.எஸ் (புவியியல் தகவல் அமைப்பு) மற்றும் இந்தியாவின் உலக வள நிறுவனம் -டபிள்யூ.ஆர்.ஐ (WRI) உடன் இணைந்துள்ள தொலைநிலை உணர்திறன் ஆய்வாளர் ராஜ் பகத் பழனிச்சாமி கூறினார். "ஒரேயொரு நிகழ்வில் [ஆகஸ்ட் மாத மழை] படுகையில் உள்ள அனைத்து அணைகளும் நிரப்பின. இதுபோன்ற தீவிரங்களுக்கு, விவசாயிகள் தயாராக இருக்க முடியாது” என்றார் அவர்.

முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் ஹசன் ஆகியன, மிகப்பெரிய ஏற்ற இறக்கத்தைக் கண்டன. இந்த கூர்மையான பகுதிகள், "சிக்கலானவை, ஏனெனில், இந்த பகுதியில் நதி உருவாகிறது, அதன் தாக்கங்கள் படுகை முழுவதும் உணரப்படுகின்றன" என்றார் அவர்.

காவிரி படுகையில் மழையின் ஒழுங்கின்மையானது, ஒரு பெரிய போக்கின் ஒரு பகுதியாகும்; அது, காலநிலை மாற்றம், பரவலான காடழிப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் போன்ற காரணிகளுடன் தொடர்புடையது; பெய்யும் மழையின் தாக்கம், வழக்கத்திற்கு மாறாக வறண்ட காலங்களுடன் குறுக்கிடுகின்றன. இந்த மழைப்பொழிவு இந்தியாவின் பிற பகுதிகளின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என்று, இந்தியா ஸ்பெண்ட் 2019 மே மாதம் ராஜஸ்தானில் இருந்து வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளது.

மத்திய இந்தியாவில் தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள், 1950ஆம் ஆண்டு முதல் 2015 வரை மும்மடங்காக அதிகரித்துள்ளன என்று புனே, இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின்- ஐ.ஐ.டி.எம் (IITM) ஆராய்ச்சியாளர்களின் 2017 ஆய்வு தெரிவிக்கிறது. இது, ஏறக்குறைய 82.5 கோடி மக்களை பாதித்தது, 1.7 கோடி மக்களை வீடற்றவர்களாக்கியது; 69,000 உயிர்களை பலி கொண்டதாக, ஆகஸ்ட் 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

ஜூன், ஜூலையில் மண்ணின் குறைந்த ஈரப்பதம்

காவிரி படுகை 85,000 சதுர கி.மீ பரப்பளவில் - நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் சுமார் 2.5% - ஆக உள்ளது; நதி மற்றும் அதன் துணை நதிகளுக்கும் செறிவூட்டும் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த படுகையானது, சுமார் 5 கோடி மக்களை ஆதரிக்கிறது; கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் சுமார் 81,155 சதுர கி.மீ பரப்பளவில் நீர்ப்பாசனம் செய்கிறது.

காவிரி படுகையில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்கள் கர்நாடகாவில் ஹாரங்கி, கபினி, ஹேமாவதி மற்றும் கிருஷ்ண ராஜ சாகரா (கே.ஆர்.எஸ்); தமிழ்நாட்டில் மேட்டூர் மற்றும் பவானி.

காவிரி படுகை. நன்றி : India Water Portal

காவிரி படுகையானது, ஏறத்தாழ 66% விவசாய நிலங்களால் சூழப்பட்டுள்ளது; இது பெரும்பாலும் கர்நாடகா - தமிழகத்திற்கு இடையில் பரவியுள்ளது. ஒட்டுமொத்தமாக, காவிரி படுகையில் தற்போதைய பருவமழை சீசனில் மழை 5% அதிகமாகவே பதிவானது. படுகையின் ஒரு பகுதியாக, கர்நாடகாவில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும், 2019 செப்டம்பர் 19 நிலவரப்படி முழுகொள்ளளவை எட்டியதாக, மத்திய நீர் ஆணையம் -சி.டபிள்யூ.சி (CWC) தெரிவித்தது.

“கர்நாடக பகுதியில் காரிப் பயிர்களுக்கு நடவு காலம் மே முதல் ஜூலை இடையே தொடங்குகிறது. ஆனால் பல இடங்களில், இந்தநேரத்தில் மண்ணின் ஈரப்பதம் மிகக்குறைவாக இருந்தது, ”என்று ஐ.சி.டபிள்யூ.ஏ.ஆர். முது தெரிவித்தார். இந்த கருத்தானது, இப்பகுதியின் முழுவதும் ஈரப்பதம் பரவுவதை காட்டுகிறது மற்றும் இது தற்போதைய மழை வடிவங்களைக் குறிக்கிறது.

ஜூன் 2019 இல் மண் ஈரப்பதம். நன்றி : சேகர் முது

ஜூலை 2019 இல் மண் ஈரப்பதம். நன்றி : சேகர் முது

ஆகஸ்ட் 2019 இல் மண் ஈரப்பதம். நன்றி : சேகர் முது

“ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் மிகவும் வறண்டவை” என்று கர்நாடகாவில் உள்ள விவசாய நல கூட்டமைப்பின் மாநில தலைவர் சாந்தகுமார் கூறினார். "எங்கள் விவசாயிகள் இந்த மாதங்களில் பயிர்களை பயிரிடவில்லை" என்றார்.

மாண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், மடிகேரி மற்றும் ஹாசன் முழுவதும் நெல், கரும்பு, ராகி போன்ற பயிர்களை விதைப்பது ஆகஸ்ட் மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. "தாமதமான சாகுபடியால், சுமார் 25% விளைச்சல் இழப்பு ஏற்பட்டுள்ளது," என்று அவர் கூறினார்.

ஜூன் 2019 இல் தாவர ஒழுங்கின்மை. நன்றி: ராஜ் பகத் பழனிச்சாமி

ஜூலை 2019 இல் தாவர ஒழுங்கின்மை. நன்றி: ராஜ் பகத் பழனிச்சாமி

முதிர்ந்த பயிர்களும் பாதிப்பு

தாமதமான மழையானது, முந்தைய பருவங்களில் பயிரிடப்பட்ட பயிர்களையும் பாதித்தது.

"கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட மற்றும் ஜூன் மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிறைய கரும்புகள் காயந்தன; ஏனெனில் மழை பெய்யவில்லை ”என்று மாண்டியாவை சேர்ந்த விவசாயி கே எஸ் சுதிர் குமார் கூறினார், அவர் அகண்ட கர்நாடக ராஜ்ஜிய விவசாயிகள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார். "எந்த மழையும் பெய்யாததால, நாங்கள் அடுத்த பருவத்திற்கு [ஜூன் மற்றும் ஜூலை, 2019] பயிர்களை பயிரிடவில்லை" என்றார் அவர்.

தமிழ்நாட்டின் காவிரி படுகை பகுதிகளில், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு மத்தியில் தான் மழைப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால், இப்போதே மதிப்பீடு செய்வது என்பது ஒரு முன்கூட்டிய செயலாக இருக்கும் என்று முது கூறினார். தற்போதைய மண்ணின் ஈரப்பதம் வரைபடங்கள் தமிழ்நாட்டின் காவிரி படுகையில் குறைந்த ஈரப்பதத்தைக் காட்டினாலும், இது வரவிருக்கும் வறட்சி அல்லது மோசமான விளைச்சலைக் குறிக்காது, ஏனெனில் மாநில விவசாயமானது பெரும்பாலும் அக்டோபர் - டிசம்பர் மழைப்பொழிவை கொண்டுள்ளன என்று அவர் விளக்கினார்.

ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையால் சில விவசாய நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, மேலும் பல விவசாயிகள் வீடுகளை இழந்தனர் என்று சாந்தகுமார் கூறினார். இந்த வெள்ளத்தில் கர்நாடகாவில் சுமார் 76 பேர் இறந்ததாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் பல நீர்த்தேக்கங்கள் முழு கொள்ளளவை எட்டினாலும், முந்தைய இரண்டு மாதங்களில் மழைப்பொழிவு குறைந்ததால் நிலத்தடி நீர் நெருக்கடியை இது குறைக்கவில்லை.

தாவர பரப்பு இழப்பு மற்றும் காலநிலை மாற்றம்

"காலநிலை மாற்றம், தாவர பரப்பை இழக்கச் செய்வதோடு, அதீத வெள்ளத்தை ஏற்படுத்துகிறது, இது மழைநீர் நிலத்தினுள் செல்வதை தடுக்கிறது" என்று ஐ.ஐ.எஸ்.சி.-யின் எரிசக்தி மற்றும் ஈரநில ஆராய்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் டி.வி. ராமச்சந்திரா கூறினார். "தண்ணீரை தக்கவைக்க எந்தவொரு நீர்ப்பிடிப்பு பகுதிக்கும் பசுமை பரப்பு தேவை" என்றார்.

தாவரங்கள், குறிப்பாக பூர்வீக உயிரினங்களை உள்ளடக்கியவை, நிலத்தினுள் தண்ணீரை ஊடுருவ அனுமதிக்கிறது. "நிலத்தடி நீர் செறிவூட்டப்படுதல் என்பது இதுதான்" என்று ராமச்சந்திரா விளக்கினார். "எனவே, பருவமழை குறையும் போது, நிலத்தடி அடுக்குகளில் சேமிக்கப்படும் நீரானது ஆறு மற்றும் நீரோடைகளில் பாயும்; ஆண்டு முழுவதும் நாம் இப்படிதான் நீரை பெறுகிறோம்" என்றார்.

கடந்த சில தசாப்தங்களாக காவிரி படுகை முழுவதும் தாவரங்களின் பரப்பு குறைந்துவிட்டது என ராமச்சந்திரா மேலும் கூறினார். 1965 ஆம் ஆண்டில் காவிரி படுகையின் பசுமை பரப்பு கவர் 20% ஆக இருந்தது. இன்று இது சுமார் 13% ஆக உள்ளது,” என்றார். காவிரி படுகையில் 1965 ஆம் ஆண்டில் 35,020 சதுர கி.மீ அடர்த்தியான தாவரங்கள் இருந்தன. ராமச்சந்திரா மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வின்படி, இது 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி 22,747.17 சதுர கி.மீ. ஆக குறைந்துவிட்டது.

அதே பகுதியில் சீரழிந்த தாவரங்களின் அளவும் 1965 மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கு இடையில் 21,369 சதுர கி.மீ என்பது, 7,915.91 சதுர கி.மீ ஆக குறைந்துள்ளதாக, குழு முடிவுக்கு வந்தது.

Note: Figures in sq km

"ஒரு நதிப் படுகையை நிர்வகிப்பதில் நீர்ப்பிடிப்பு ஒருமைப்பாடு என்பது முக்கியமானது" என்று ராமச்சந்திரா கூறினார். "முதலாவதாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு மேல் - பூர்வீக இனங்களுடன் - பசுமை பரப்பை நாம் பராமரிக்க வேண்டும். இரண்டாவதாக, பொருத்தமற்ற பயிர் முறைகள் காரணமாக நீர் மேலாண்மை உள்ளது - வறண்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி; முன்பு கம்பு, பருப்பு வகைகள் மற்றும் நிலக்கடலை உற்பத்தியை மட்டுமே இது ஆதரிக்கும்” என்றார்.

காலநிலை மாற்றம் இந்த காரணிகளால் ஏற்படும் சிக்கல்களை மேலும் மோசமாக்குகிறது" என்று ராமச்சந்திரா கூறினார்.

(பர்திகர், பெங்களூரை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org . என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.