அகமதாபாத்: கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது எழுச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலங்கள் விதித்த பகுதி ஊரடங்கின் போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு இல்லாமல் ஓடி, சுகாதார சேவையை அணுக போராடி, கடுமையான வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்கொண்டதாக, தொழிலாளர் உரிமைகள் அமைப்பான, அஜீவிகா பணியகத்தின் சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது.

2020 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோர் சந்தித்த நெருக்கடியைப் போலல்லாமல், ஊடகங்களில் பரவலாக இதை வெளிச்சம் போட்டு காட்டினாலும், மாநில ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் மற்றும் சமூகப் பாதுகாப்பு வழங்குவதில், அதிக கவனம் செலுத்தப்படவில்லை என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் பகுதியளவு என்பதால், சில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அலைகளின் ஆரம்ப நாட்களில் வீடு திரும்பும் வாய்ப்பை தேர்வு செய்தனர். ஆனால், விரைவாக இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கையில் பலர் அங்கேயே இருக்கலாம் என்ற முடிவை தேர்வு செய்தனர்.

இருப்பினும், நகரத்திலேயே தங்கிவிடுவது என்ற வாய்ப்பை தேர்ந்தெடுத்த குடும்பங்கள், இம்முறை உயிர்வாழ போராடியது என்று, 2021 மே மாதம் அகமதாபாத்தில் 195 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய அஜீவிகா மேற்கொண்ட துரிதமான தொலைபேசி கணக்கெடுப்பு காட்டியது. அகமதாபாத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 75% பேர், நகரத்தில் தங்கிவிடுவது என்ற வாய்ப்பை தேர்வு செய்தனர் அல்லது வெளியேறிய உடனேயே திரும்பி வந்தனர். இந்த நகரம் 1.3 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்கிறது மற்றும் அதன் கட்டுமானம், ஜவுளி மற்றும் மருந்துத் தொழில்கள் மற்றும் உள்நாட்டு வேலைத் துறை ஆகியவற்றால் பிரபலமான வேலை இடமாகவும் திகழ்கிறது.

ஏப்ரல் 28, 2021 முதல், ஜூன் 11, 2021 வரை நீடித்த குஜராத்தின் பகுதி ஊரடங்கின் போது, ​சிறிதளவோ அல்லது எந்த வேலையுமோ கிடைக்கவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். வாராந்திர வருவாய் 30% வீழ்ச்சியடைந்தது, மற்றும் நேர்காணல் செய்யப்பட்ட புலம்பெயர்ந்த குடும்பங்களில் 60% பேர், 15 நாட்களுக்குள் பணமும் உலர் உணவு பொருட்கள் வைத்திருப்பதாகக் கூறினர். பதிலளித்தவர்களில் 27% பேர் வரை, தங்களுக்கு கோவிட் -19 தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறினர். தடுப்பூசிகளுக்கான அணுகல், ஒரு நிலையான கவலையாக உள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே பசி மற்றும் வேலைவாய்ப்பை இலக்காக கொண்ட திட்டங்கள் எதுவும், தற்போதைய அலைகளில் அவர்களின் துயரத்தைத் தணித்ததாகத் தெரியவில்லை. இதுபற்றி பின்னர் நாங்கள் விளக்குகிறோம்.

இரண்டு பகுதிகள் கொண்ட இத்தொடரில், அகமதாபாத்தின் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் ஆராய்கிறோம். இந்த முதல் பகுதியில், அவர்கள் வாழ்வாதாரத்துக்காகவும் பிழைப்புக்காகவும் எவ்வாறு போராடினார்கள் என்பதைப் பார்க்கிறோம். இரண்டாவது பகுதியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வழக்கமாக விலக்கும் நகர்ப்புற சுகாதார அமைப்புகள், ஊரடங்கின்போது அவர்களை எவ்வாறு மேலும் பாதிக்கக்கூடும் என்பதைப் பற்றி நாங்கள் தெரிவிக்கிறோம்.

கடைசி அதிர்ச்சியில் இருந்து மீள அவகாசம் இல்லை

சமீபத்திய நெருக்கடி தொழிலாளர்களை பாதித்தது, கடந்த ஆண்டு பொருளாதார அதிர்வலையில் இருந்து பலர் இன்னும் மீளவில்லை, அது அவர்களின் சேமிப்பைக் குறைத்து, கடன்களை உயர்த்தியது. மே 21, 2021 இல் புலம்பெயர்ந்த வளக் குழுவான ஸ்ட்ராண்டட் வொர்க்கர்ஸ் ஆக்சன் நெட்வொர்க்-இன் பகுப்பாய்வு, புலம்பெயர்ந்த குடும்பங்களில் 58% பசியால் வாடும் நாட்கள் என்பதைக் காட்டுகிறது.

2021 மே மாதத்தில் மட்டும், 15 மில்லியன் வேலைகள் இழக்கப்பட்டுள்ளன என்று சிந்தனைக் குழுவான சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்திய பொருளாதாரம் (CMIE - சி.எம்.ஐ.இ) அறிக்கை தெரிவித்துள்ளது. "இது ஏப்ரல் 2020 இல் 114 மில்லியனை இழந்ததைப்போல மோசமானதல்ல, ஆனால் இது ஒரு முழுமையான நாடு தழுவிய ஊரடங்கின் கடுமையான மாதங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது," என்று, சி.எம்.ஐ.இ நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ் எழுதினார்.

இந்தியாஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில், பொருளாதார வல்லுநர்கள் அமித் பாசோல் மற்றும் நிலையான வேலைவாய்ப்பு மையத்தின் (CSE) ரோசா ஆபிரகாம், ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவு நடவடிக்கைகளை முன்வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். "கடந்த ஆண்டில் இருந்து மிக முக்கியமான பாடம் என்னவென்றால், ஊரடங்கு ஏழைகளை மிகவும் பாதித்தது," என்று அவர்கள் கூறினர்.

இது இன்னும் உடனடியாகத் தெரியாமல் போகலாம், ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மோசமான பொருளாதார நிலைமைகளின் தாக்கங்கள் நீண்ட காலத்திற்கு உணரப்படும், இது அவர்களின் வாழ்க்கைச் சுழற்சியை கடுமையாக பாதிக்கும் என்று, இந்திய மனித குடியேற்ற நிறுவனத்தில் (IIHS) ஆராய்ச்சியாளர் திவ்யா ரவீந்திரநாத் கூறினார்.

2-3 நாட்களுக்கே வேலை கிடைக்கிறது, இன்னும் ஊதியம் வழங்கவில்லை

ஏப்ரல் 28, 2021 முதல், குஜராத்தில் கூட்டமாக கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவர்களில் தினக்கூலிகள் முதன்மையானவர்கள் என்று, அகமதாபாத்தில் உள்ள அஜீவிகா தொழிலாளி மகேஷ் கஜேரா கூறினார். சி.எம்.ஐ.இ. அறிக்கை "ஏப்ரல்-மே [2021] இல் இழந்த மொத்த 22.5 மில்லியன் வேலைகளில், 17.2 மில்லியன் தினக்கூலிகள் " என்று கண்டறிந்தது.

கட்டுமான தளங்களில் வேலை வேண்டி, ஒப்பந்தக்காரர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தொழிலாளர் நகாக்கள், சந்திப்புகளில் காத்திருப்பதன் மூலம் தினசரி கூலிகள் வேலை பெறுகிறார்கள். "ஆஜ் காம் நஹி மிலா, கல் மேரா சுல்ஹா நஹி ஜலா (இன்று எனக்கு வேலை கிடைக்கவில்லை, நாளை என் வீட்டில் அடுப்பு எரியாது)" என்று தினக்கூலிகளின் ஆபத்தான இருப்பைப் பற்றி கஜேரா கூறினார்.

கணக்கெடுப்புக்காக நேர்காணல் செய்யப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்கள், ஒரு வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே வேலை பெற முடிந்ததாகவும், அதற்கும் கூட இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் கூறினார். தினக்கூலிகளின் வார சம்பளத்ஹ்டில், 51% சரிவு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரோலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பணிபுரியும் சமூகத் தலைவரான துர்காரம் (அவர் ஒரு பெயரையே பயன்படுத்துகிறார்), அதே பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் கொதிகலன் இயந்திரத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட பருவகால பழங்குடி குடியேறியவர்களின் குழுவின் கஷ்டங்களை விவரித்தார்.

"சுமார் ரூ .3 லட்சம், அவர்களுக்கு தரவேண்டிய தொகை, ஆறு மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்தது, மேலும் தொழிற்சாலையின் கொதிகலனின் அவ்வப்போது பராமரிப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே தங்குமாறு முதலாளி, தங்களது தொழிலாளர்களை வற்புறுத்தினார். தொழிற்சாலையின் எஞ்சிய பகுதிகள் இயங்காதபோது இது நிகழ்ந்தது," என்றார் துர்காரம். தொழிலாளர்கள் இந்த தொகையை விட்டுவிட்டு, மற்றொரு உள்ளூர் ஆலையில் தினக்கூலி வேலைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. உள்ளூர் தொழிலாளர் நீதிமன்றத்தில் தங்கள் முதலாளிக்கு எதிராக ஊதியம் வழங்காததற்காக, அவர்கள் இப்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொழிற்சாலைகள் மற்றும் தையல் அலகுகள், 2021 ஜூன் 7 வரை, 50% திறனில் மட்டுமே இயங்க முடியும். இரவு ஊரடங்கு உத்தரவு இரவு ஷிப்டுகளில் பணிபுரிபவர்களை பாதித்துள்ளது, இது ஜூன் 26 வரை தொடரும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவுளி பதப்படுத்தும் துறையில் பணியாற்றி வரும் அனில் குமார் *, தனது தொழிற்சாலை மற்றும் இந்த துறையில் உள்ள பலருக்கு இல்லை என்று தெரிவித்தார். ஒரு மாதத்திற்கும் மேலாக வேலை இல்லை.

ஏற்றுமதி சார்ந்த அலகுகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடிந்தது. குஜராத்தில் ஜவுளித்தொழில் 2021 ஆம் ஆண்டில் இரண்டாவது அலை தொடங்குவதற்கு முன்னர் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிப்பை கண்டது, ஆனால் ஏப்ரல் மாத இறுதியில், ஊரடங்கு விதிக்கப்பட்டதால் உற்பத்தியில் 25% சரிவு காணப்பட்டது.

"இந்த காலத்தில் முழுவதும், மாற்று நாட்களில் மட்டுமே நாங்கள் வேலைக்கு அழைக்கப்படுகிறோம். மற்ற நாட்களில் ஒற்றைப்படை வேலைகளை நான் காண்கிறேன், "என்று அனில் குமார் கூறினார். அவர் ஒரு ஊதியப் பணியாளராக இருந்தபோதிலும், அவர் வேலைக்கு அழைக்கப்பட்ட நாட்களுக்கு மட்டுமே அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டது, இது சாதாரண காலங்களில் அவரது மாத ஊதியத்தில் பாதி மட்டுமே. ஒப்பந்தத்தில் இருந்த தனது சக ஊழியர்கள் சிலர் வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.


இது, அகமதாபாத்தில் உள்ள, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடியேறிய வசனா பகுதி. இரண்டாவது அலையின் போது நகரத்திலேயே தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு இல்லாமல் அதற்காக ஓடி, சுகாதாரத்துக்காக போராடி, கடுமையான வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆடை யூனிட்டுகள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 10-50 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது மற்றும் பெரிய தொழிற்சாலைகளின் ஆர்டர்களை நம்பியிருப்பது, புதிய ஆர்டர்கள் எதுவும் வராததால் முற்றிலும் மூடப்பட்டுவிட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், இரண்டாவது அலையின் போது நிலுவையில் உள்ள ஆர்டர்களை முடிக்க அழைக்கப்பட்டனர், இந்த வேலைக்கு ஊதியம் வழங்கப்படாததால் வாராந்திர ஊதியத்தில் 47% வீழ்ச்சி ஏற்பட்டது. முதலாளிகள், நிதி துயரத்தை ஒரு தவிர்க்கவும் - அல்லது வாங்குபவர்கள் பணம் தரும்போது சம்பளம் தருவதாகவும் உறுதி அளித்தனர்.

வீட்டுத் தொழிலாளர்கள், உணவக ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு

நூற்பு மற்றும் காலர் மற்றும் பொத்தான் தையல் போன்ற அவுட்சோர்ஸ் மதிப்பு கூட்டல் பணிகளை நம்பியுள்ள வீட்டுத் தொழிலாளர்கள், கடந்த ஆண்டு ஊரங்கில் இருந்து கணிசமான ஆர்டர்கள் எதுவும் இல்லை.

"அபி டு சப் பேண்ட் ஹை. ஏக் சால் சே டு போஹோத் கம் காம் ஹை. (எல்லாம் மூடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் மிகக் குறைவான வேலைகள் இருந்தன), "என்று சாயா ஷிண்டே என்ற வீட்டுத் தொழிலாளி கூறினார். நூற்பு பணி ஆர்டர்களின் பாதிப்பு, ஒரு மாதத்திற்கு ஒரு முறை குறைந்துள்ளது என்றும், ஒப்பந்தக்காரர்கள் வழங்கும் தற்போதைய வீதம் மிகக் குறைவாக இருப்பதால், நூல் மற்றும் மின்சார கட்டணங்களின் செலவைக் கூட ஈடுகட்ட முடியாது என்றும் அவர் கூறினார். (கடந்த ஊரடங்கின் போது, குஜராத்தில் மின்சாரக்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது).

ஹோட்டல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் இரண்டாவது அலைகளின் போது வாராந்திர ஊதியத்தில் 20% சரிவைக் கண்டனர். குஜராத் முழுவதும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களின் சங்கங்கள், ஊரடங்கு உத்தரவு மற்றும் விருந்தினர்கள் வருகையில் பெரிய பின்னடைவால் பாதிப்பை கண்டன என்றும், ஊரடங்கால் கடையை மூட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் புகார் கூறினர். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றி வரும் லக்ஷ்மன் சிங் *, வீட்டு விநியோகத்திற்காக மட்டுமே இயங்கும் உணவகங்களுக்கு, நான்கைந்து தொழிலாளர்கள் மட்டுமே தேவை என்று கூறினார். மீதமுள்ளவர்கள் ஊரடங்கிற்கு முன்பு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

பகுதி ஊரடங்கின் போது கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவாக இல்லை மற்றும் கடந்த ஆண்டு தீபாவளிக்கு பின்னர் இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படவில்லை. பல அகமதாபாத் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் நீண்ட காலமாக வேலையில்லாமல் இருக்கிறார்கள், அவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்று, உணவகத்தின் பொது மேலாளராக இருந்த, கோவிட் -19 தொற்றை கண்ட லக்ஷ்மன் சிங் கூறினார். அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு படுக்கையைப் பெற முடிந்தது, அங்கு அவர் ரூ .2.5 லட்சம் வரை செலவு செய்தார். அவரது அழைப்புகளுக்கு பதில் அளிப்பதை நிறுத்திக் கொண்ட தனது முதலாளியிடம் இருந்து, அவருக்கு எவ்வித ஆதரவும், உதவியும் கிடைக்கவில்லை. அவரது கிராமத்தைச் சேர்ந்த சிலர், ராஜஸ்தானில் உள்ள பாலி, அகமதாபாத்தில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்தவர்கள், அண்டை சுரங்கத் தளங்களில் வேலை தேட நிர்பந்திக்கப்பட்டதாக கூறினர்.


தலைகீழ் போக்கு: பழங்குடி இளைஞர்கள் நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர்

தொற்றுநோய்களின் போது திரும்பும் இடம்பெயர்வு பரவலாக இருந்தபோதிலும், 2021 ஏப்ரல் மாதம் அகமதாபாத்தில் இரண்டாவது அலை உச்சத்தை அடைந்தபோது, நிலைமை தலைகீழாக இருந்ததாக, அஜீவிகா பணியகத்தின் கஜெரா அறிவித்தது. குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தின் பழங்குடியினரின் பகுதிகளில் இருந்து பருவகாலமாக குடியேறிய பலர் நகரத்திற்கு இன்னும் அதிக எண்ணிக்கையில் குடியேறினர். அவர்களில் பெரும்பாலோர், 14-17 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று அவர் கூறினார். அவர்களின் பள்ளிப்படிப்பு தடைபட்டு அவர்கள் வேலை தேடிக்கொண்டிருந்தனர்.

இது ஏன் நடந்தது? இந்த அளவிலான நெருக்கடியில், பழங்குடியினர் பகுதிகளில் முக்கியமாக இரண்டு குறையுள்ள வழிமுறைகள் உள்ளன: (1) தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்- 2013 (NFSA) இன் கீழ் உறுதி செய்யப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறை (PDS) மூலம் ஏழை குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மானிய விலையில் கிடைக்கும் ரேஷன்கள், மற்றும் (2) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்- 2005 (MGNREGA - எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ) வழங்கிய ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் 100 நாட்கள் கூலி உழைப்புக்கான உத்தரவாதம்.

2020 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் துயரத்திற்கு விடை தரும் வகையில், கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் போன்ற திட்டங்களைத் தொடங்குவதன் மூலம் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு கவனம் செலுத்துகிறது. ஆனால் பதிவு செய்தல் சிக்கல்கள் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு வெட்டுக்கள் காரணமாக இந்த திட்டங்கள், வேலைகளாக மொழிபெயர்க்க வேண்டிய அவசியமில்லை என்று கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், குஜராத்தில் கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகள் தொற்றுநோயின் இரண்டாவது அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஜூன் 8 டவுன் டு எர்த் பகுப்பாய்வு, ஏப்ரல் முதல், ஒவ்வொரு நொடியும், இந்தியாவின் கிராமப்புற மாவட்டங்களில் இருந்து ஒரு புதிய வழக்கு அல்லது இறப்பு பதிவாகி இருந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் மூடப்பட்டதால், அது இளைஞர்களை கிராமங்களுக்கு வெளியே தள்ளின.

'போதுமான சாப்பாடு அரிது'

நகரங்களில், புலம்பெயர்ந்தோர் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு, சம்பாதிக்கும் திறனை நம்ப வேண்டியிருக்கிறது. தொற்றுநோய்க்கு முன்னர், 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நகர்ப்புற நிர்வாக அமைப்புகளுக்கான புலம்பெயர்ந்தோரின் அணுகல் குறித்த ஒரு ஆய்வில், உள்நாட்டு கட்டுப்பாடுகளால் பொதுவினியோக முறை திட்டத்தில் உணவுப்பொருட்கள் அணுகல் தடுக்கப்பட்டதால், அவர்களின் வருமானத்தில் 50% க்கும் அதிகமானவை, உணவு மற்றும் சமையல் எரிபொருளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதிலும்கூட, அவர்களால் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே வாங்க முடிந்தது. கடந்த ஆண்டு ஊரடங்கின்போது, ​​தொழிலாளர்கள் தங்கள் உணவு உட்கொள்ளலைக் குறைக்க வேண்டியிருந்தது. இந்த ஆண்டும், நாங்கள் பேட்டி கண்ட புலம்பெயர்ந்தோர் உயிர்வாழ்வதற்கு உணவு நுகர்வு குறைக்க வேண்டும் என்று கூறினர்.


புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதற்கு முன்பு, அதிகாலையில் சமைப்பதைக் காணலாம் -இந்த புகைப்படம் சூரத்தில் எடுக்கப்பட்டது. கடந்தாண்டு ஊரடங்கின் போது, தொழிலாளர்கள் தங்களுக்கு உணவு எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டியிருந்தது. இந்த ஆண்டும் கூட, நாங்கள் பேட்டி கண்ட புலம்பெயர்ந்தோர், உயிர்வாழ்வதற்கு உணவு நுகர்வு குறைக்க வேண்டும் என்று கூறினர்.

அஜீவிகா அமைப்பின் கணக்கெடுப்பில், புலம்பெயர்ந்தோருக்கு 17 நாட்கள் மதிப்புள்ள சேமிப்புகளே உள்ளன, அதாவது பணம் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் நகரத்தில் உள்ளன. பகுதி நிரந்தர குடியேறியவர்கள், நகரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்கள், கடந்த ஆண்டை விட மோசமான சூழ்நிலையில் தங்களைக் கண்டனர்.


"பாஸ் கா ரஹே ஹை, குச் பச்சாட் டு ஹை நஹின், (எங்களால் சாப்பாட்டுக்கு மட்டுமே கவனிக்க முடிகிறது, சேமிப்பு இல்லை)" என்று சாயா ஷிண்டே கூறினார். சமையல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன, ஆனால் அவரது கணவரின் வருமானம் இல்லை என்று அவர் மேலும் கூறினார். அவரது கணவர் ஒரு ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிகிறார், ஆனால் அவருக்கு இந்த ஆண்டு எந்தவிதமான சம்பள உயர்வு அல்லது கடைசியாக தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை.

புலம்பெயர்ந்த குடும்பங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த சிரமப்படுகிறார்கள். கடந்த ஆண்டு 2.5 மாத ஊரடங்கின் போது காலத்தை தள்ளுவதிலேயெ, அவர்களின் மொத்த சேமிப்பும் தீர்ந்துவிட்டது. "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விகிதத்திற்கான வீட்டுக் கடன் படிப்படியாக அதிகரித்து வருகிறது: காலாண்டு1: 2018-19 முதல் காலாண்டு 2: 2020-21 [ஜூலை-செப்டம்பர் 2020] இல் 37.1% ஆக உயர்ந்தது. காலாண்டு 1: 2020-21 [ஏப்ரல்-ஜூன் 2020] இல் 35.4% ஆக இருந்தது, " என்று, மார்ச் 19, 2021 அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் மாதாந்திர அறிக்கை கூறியது. இந்த தகவல்கள் உறவினர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் பணக் கடன் வழங்குவோர் போன்ற நிறுவனம் சாரா கடன் அளிப்பவர்களுக்கு வீடுகளின் கடன்பாட்டைக் கைப்பற்றவில்லை என்று அறிக்கை ஒப்புக் கொண்டது.

அகமதாபாத்தில் உள்ள, தொழிலாளர் கூட்டுத் தலைவரான ரஞ்சன்பென் பர்மர், தனது அண்டை வீட்டாரில் சிலர் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்கு மாதந்தோறும் 10% வட்டிக்கு தனியாரிடம் கடன்களை பெற வேண்டும் என்று கூறினார். இப்போது அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த உறவினர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் கடன் வாங்குகிறார்கள், என்று அவர் கூறினார். நிவாரணத் திட்டங்கள் புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் இந்த கடனை நிவர்த்தி செய்யாது.

பிழைப்புக்கு ஆதரவை நாடுதல்

அகமதாபாத்தில் தங்கி இருந்த தொழிலாளர்கள் முக்கியமாக இரண்டு வகையில் நிவாரணம் எதிர்பார்க்கிறார்கள் - ரேஷன் வழங்கல் (57%) மற்றும் பணப் பரிமாற்றம் (49%). நிவாரண எதிர்பார்ப்புகளைப் பற்றி கேட்டபோது, ​​ஒரு தையல் பிரிவில் பணிபுரியும் சவிதா டியூப் கூறினார்: "டில்லி மே, ஹம்னே சமச்சார் மே சுனா, கர்-கர் ரேஷன் டென் ஜா ரஹே ஹைன். யஹான் பெ கபி ஈசா குச் நஹின் ஹுவா (டெல்லியில் வீட்டுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் செய்யப் போவதாக செய்திகளில் கேள்விப்பட்டோம். [குஜராத்தில்] இங்கு எதுவும் நடக்கவில்லை" என்றார்.

கர்நாடகா மற்றும் டெல்லி போன்ற சில மாநிலங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இரண்டாவது அலையின் தாக்கத்தை உணர்ந்து, பணப்பரிமாற்றம், உணவு மற்றும் மருந்துகளை வழங்கின. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிவாரண நடவடிக்கைகள் கடந்த ஆண்டு புலம்பெயர்ந்தோரின் மீட்பு தாமதமான நிகழ்வுகளையே மீண்டும் செய்கின்றன. உதாரணமாக, கர்நாடக அரசு, பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ .3,000 மற்றும் மாநிலத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ரொக்கப் பரிமாற்றத்தை அறிவித்தது.

ஏப்ரல் 23 அன்று, பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் என்எஃப்எஸ்ஏ (NFSA ) பயனாளிகளுக்கு கூடுதல் இலவச உணவு தானியங்களை 2021 மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஒதுக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், ரேஷன் அல்லாத அட்டை வைத்திருப்பவர்களுக்கு அல்லது எந்தவிதமான அடையாளமும் இல்லாதவர்களுக்கு கடந்த ஆண்டு ஆத்மா நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதைப் போல எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.

பயனாளிகளை அடையாளம் காணும் செயல்முறையில் உள்ள சிக்கல்களை மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும், நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ள வகை செய்யும் ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டம், நிவாரணம் கிடைப்பதில் உள்ள தற்போதைய சிக்கல்களுக்கு தீர்வைத் தரவில்லை. முதலாவது ஊரடங்கின் போது, ​​குஜராத்தின் அன்ன பிரம்மா திட்டம் ஆதார் அட்டையின் அடிப்படையில் மட்டுமே விநியோகிக்கும், ரேஷன் அல்லாத அட்டைதாரர்களை அணுக முயற்சித்தது. இருப்பினும், இது ஜூன் 2020 க்கு அப்பால் நீட்டிக்கப்படவில்லை. பொதுவினியோகத்திட்டத்தில் அல்லாத பயனாளிகளுக்கு ரேஷன் விநியோகத்திற்கான வழிகாட்டுதல்களை டெல்லி வெளியிட்டது, ஆனால் இது 2,00,000 பயனாளிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு முறை நடவடிக்கை மட்டுமே, இது கடந்த ஆண்டை விட மூன்று மில்லியனாக இருந்தது.

ஒரு நாடு - ஒரு ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாக, ஜூன் 11 அன்று லைவ் லா (LiveLaw ) வெளியிட்டுள்ளது. பதிவு செய்யப்படாத அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் பதிவு செய்தல் பணிகளை விரைவில் முடிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது. ஜீன் ட்ரூஸ், யாமினி அய்யர் மற்றும் ஹிமான்ஷு போன்ற பல வல்லுநர்கள் பொது வினியோகத் திட்டத்தை, உலகளாவிய உடனடி தீர்வாக முன்மொழிந்தனர். அமர்த்தியா சென், அபிஜித் பானர்ஜி மற்றும் ரகுராம் ராஜன் ஆகியோர், மாதாந்திர ஒதுக்கீட்டிற்கு வரிசையில் நிற்க விரும்பும் எவருக்கும், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தற்காலிக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பரிந்துரைத்தனர்.


தொழிலாளர்கள் என்ன விரும்புகிறார்கள்

பரந்த அளவிலான ஆதரவு முயற்சிகளுக்கான தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. உதாரணமாக, தொழிலாளர்கள் வாடகை (38%), பள்ளி கட்டணம் (34%) மற்றும் மருத்துவ பில்கள் (39%) செலுத்த ஆதரவு தேவை என்று கூறினர். நாம் முன்னர் குறிப்பிட்டது போல, மின்சார கட்டணங்களையும் (34%) தள்ளுபடி செய்ய அவர்கள் முயன்றனர்.

"அபி சி.எம் நே ரெஸ்டாரன்ட்கள், மால்கள், ஹோட்டல்கள் அவுர் சார்-பஞ்ச் கா [சொத்து] வரி மாஃப் கியா ஹை எக் சால் கே லியே, ஹுமாரே லியே கியுன் நஹி? மஜ்தூர் கோ ஜயாடா சிக்கல் ஹை (சமீபத்தில் உணவகங்கள், மால்கள், ஹோட்டல்கள் மற்றும் 4-5 க்கு ஒரு வருடத்திற்கு வரி விலக்கை முதல்வர் அளித்துள்ளார். எங்களுக்கு ஏன் இல்லை? தொழிலாளர்கள் அதிக சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்), " என்று, குஜராத்தில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், மால்கள் மற்றும் நீர் பூங்காக்களுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஓராண்டு சொத்து வரி விலக்கு குறித்து, அனில் குமார் கூறினார்.

பதிலளித்தவர்களில் 51% பேர் வரை, நகரத்தில் வேலை வழங்கப்பட வேண்டும் என்று கோரினர். கிராமப்புறங்களில் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ வழங்கிய வரிகளில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம் சிவில் சமூகத்தால் மீண்டும் மீண்டும் கோரப்படுகிறது. வறுமை, குறிப்பாக தொற்றுநோய், மற்றும் சமூக சமத்துவமின்மை போன்ற துன்ப காலங்களில் நிவர்த்தி செய்யக்கூடிய நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்காக, ட்ரூஸ் வாதிடுகிறார். எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ.வின் நகர்ப்புற பிரதிநிதியாக கருதப்படும் கேரளாவின் அய்யங்கலி நகர வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம், 2010 முதல் இயங்கி வருகிறது.

கடந்த ஆண்டு, ஒடிசா அரசு தேசிய ஊரடங்கு விதிக்கப்பட்டதில் இருந்து ஒரு மாதத்திற்குள் நகர்ப்புற ஏழைகளுக்கான நகர ஊதிய வேலைவாய்ப்பு முயற்சியை அறிமுகப்படுத்தியது, ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வரின் ஷ்ராமிக் யோஜனாவைத் தொடர்ந்து வந்தது. பரவலான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இல்லை.

* அடையாளம் வெளிப்படுத்தாமல் இருக்க, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

நேர்காணல்கள் மற்றும் கணக்கெடுப்புக்கு உதவிய திப்தி மக்வானா, துர்காரம், கீதா பர்மர், முகேஷ் பர்மர், பன்னலால் மேக்வால், ராஜேந்திர குமார் பாலாய், ரஞ்சீத் கோரி மற்றும் அஜீவிகா பணியகத்தின் அகமதாபாத் மையத்தின் சுவாதி சாக்தவத் ஆகியோருக்கும், கட்டுரையாசிரியர் நன்றி தெரிவித்துள்ளார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.