பெங்களூரு: கோவிட்-19 தொற்றுநோய் உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய மற்றும் நீடித்த பொருளாதார அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தியாவில், இதன் விளைவை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம் - 2020 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு தழுவிய ஊரடங்கின் தாக்கம் மற்றும் தாக்கத்தின் (சிறிய பரவல் மற்றும் ஊரடங்கு மூலம்) அடுத்த பரிணாமம் சில மீட்புடன் இணைந்தது.

பல சிறிய ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள், ஊரடங்கு காலத்தில் மட்டுமல்லாமல், பெரிய வேலைவாய்ப்பு மற்றும் வருமான இழப்புகள் பொதுவாக இருந்ததாக காட்டுகின்றன; அத்துடன் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்தால், ஆகஸ்ட் 2020 முதல் காணப்பட்ட வேலைவாய்ப்பு மீட்டெடுப்பது என்பது சீரற்றதாக உள்ளதாக, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் நுகர்வோர் பிரமிடுகள் வீட்டுக் கணக்கெடுப்பின் (CMIE-CPHS) தரவு தெரிவிக்கிறது.

ஆகஸ்ட் 2020 க்குள், கோவிட்-19 க்கு முந்தைய பணியாளர்களில் 80% பேர் மீண்டும் பணியில் இருந்தனர். ஆனால் இந்த ஒட்டுமொத்த எண்ணிக்கை, குறிப்பிட்ட குழுக்களுக்கு தனித்துவமான அனுபவங்களை மறைக்கிறது என்பதை, CMIE-CPHS தரவு வெளிப்படுத்துகிறது. விகிதாசாரத்தில், அதிகமான இளம் தொழிலாளர்கள் வேலை இழந்து, அவற்றை மீண்டும் பெற போராடினார்கள், இதில் பெண் தொழிலாளர்களும் அடங்குவர். மேலும், வேலைவாய்ப்பு விகிதங்கள் மீட்கப்பட்டாலும், வேலைவாய்ப்பு தரம் மோசமடைந்தது, தனிநபர்கள் விவசாயம், கட்டுமானம் மற்றும் சிறிய அளவிலான வர்த்தகம் ஆகியவற்றில் குறைந்த பாதுகாப்பான மற்றும் மாறுபட்ட சுய வேலைவாய்ப்புகளுக்கு நகர்ந்தனர்.

கோவிட்-19 வேலைவாய்ப்பு பாதைகள்

ஆண்டுக்கு மூன்று முறை 170,000 வீடுகளை, CMIE-CPHS நேர்காணல் செய்கிறது. பொதுவாக வீட்டுக்கு வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும் சூழலில், இது கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்கு காரணமாக, தொலைபேசி வழியாக நடத்தப்பட்டது. ஏப்ரல் 2020 இல் நேர்காணல் செய்யப்பட்ட ஒரு வீடு, இதற்கு முன்னர் 2019 டிசம்பரிலும் பின்னர் ஆகஸ்ட் 2020 இல் நேர்காணல் செய்யப்பட்டிருக்கும். எனவே, 2019 டிசம்பரில் (ஊரடங்கிற்கு முன்) தொழிலாளர்களை, ஏப்ரல் 2020 (ஊரடங்கின் போது) மற்றும் ஆகஸ்ட் 2020 (ஊரங்கிற்கு பின்) மூலம் கண்காணிக்க முடியும். வேலையின்மை அல்லது தொழிலாளர் திறனில் இருந்து வெளியேறிய எந்தவொரு செயல்பாடும் வேலை இழப்பு ஆகும். கோவிட்-19 தொற்றுநோய் போன்ற தனித்துவமான சூழ்நிலைகளின் பின்னணியில், வேலைவாய்ப்பு துயரத்தின் முழு அளவையும் நிலையான வேலைவாய்ப்பு அளவீடுகள் தெரிவிக்காததால், அத்தகைய வரையறை அவசியமானது. தொழிலாளர் திறனை விட்டு வெளியேறும் நபர்களை இவை தவறவிடக்கூடும், மேலும் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை அதிகமாக மதிப்பிடலாம்.

டிசம்பர் 2019 இல் பணிபுரியும் எவரும் அப்போது மற்றும் ஆகஸ்ட் 2020 க்கு இடையில் சாத்தியமான நான்கு பாதைகளில் ஒன்றை அனுபவித்திருக்கலாம்: பாதிப்பு இல்லை, மீட்பு இல்லை, மீட்பு அல்லது வேலை இழந்து பின்தங்குதல் (கீழே உள்ள படம் 1 ஐ காண்க). இந்த பாதைகளை அனுபவிக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை, முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதாவது டிசம்பர் 2018, ஏப்ரல் 2019 மற்றும் ஆகஸ்ட் 2019 ஆகியன, கோவிட்-19 விளைவை அடையாளம் காண அனுமதிக்கிறது. இந்த பாதைகளில் தொழிலாளர்களின் விநியோகத்தை ஆராய்வது, தாக்கத்தின் தன்மை மற்றும் பல்வேறு குழுக்களில் அடுத்தடுத்த மீட்பு பற்றி சொல்கிறது.


ஒட்டுமொத்தமாக, 2019 டிசம்பரில் 54.3% தொழிலாளர்கள் கோவிட்-19 ஊரடங்கால் பாதிக்கப்படவில்லை. ஊரடங்கின் போது சுமார் 30% பேர் வேலைகளை இழந்தனர், ஆனால் பின்னர் வேலைக்கு திரும்ப முடிந்தது. மொத்தத்தில், டிசம்பர் 2020 தொழிலாளர்களில் 84% பேர், ஆகஸ்ட் 2020 இல் மீண்டும் பணியில் இருந்தனர் என்பதை இது குறிக்கிறது. குறைந்தபட்சம் வேலை வகை அல்லது வருமானம் இல்லாவிட்டால் கூட வேலைவாய்ப்பு நிலையைப் பொறுத்தவரை, இது மிகவும் வலுவான மீட்சியைக் குறிக்கிறது. இருப்பினும் அனுபவங்களானது வயது, பாலினம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை ஆகியவற்றால் பரவலாக வேறுபடுகின்றன.

அதிக இளம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்

ஊரடங்கு காலத்திலும் அதற்கு பிறகு வந்த மாதங்களிலும் இளம் தொழிலாளர்கள் தங்கள் பழைய சகாக்களுடன் ஒப்பிடும்போது, மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15-24 வயதுடைய தொழிலாளர்களில் சுமார் 59% பேர் ஊரடங்கு காலத்தில் அல்லது அதன் பின்னர் வேலைவாய்ப்பை இழந்தனர், இது, 25-34 வயது மற்றும் 35-44 வயதுடையவர்களில் முறையே 40% மற்றும் 35% என்ற ஒப்பிடாக உள்ளது (கீழே உள்ள படம் 2 ஐ காண்க). மேலும், வேலை இழந்ததாலும் வயதான தொழிலாளர்கள் ஆகஸ்டில் வேலைக்கு திரும்புவது நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2020 மே மாத கொள்கை சுருக்கத்தின்படி, குறைந்த அனுபவம் கொண்ட இளம் தொழிலாளர்கள் பொதுவாக, "மலிவானவர்கள்". சிறந்த வேலை தேடல் திறன்களுடன் நல்ல அனுபவம் வயதான தொழிலாளர்கள் வேலைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், வேலைகளை இழந்தால் புதிய வேலையைக் கண்டறியவும் அனுமதிக்கிறது. இதன் விளைவாக, ஆகஸ்ட் 20-க்குள் வயதான தொழிலாளர்களில் 10இல் ஒன்பது பேர் மீண்டும் பணிக்கு வந்தனர், இது இளம் தொழிலாளர்களில் 10 ஐந்து பேர் மட்டுமே என்ற ஒப்பீடாக உள்ளது.


அதிகமான பெண் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்

வேலை இழப்புகளைப் பொறுத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் வித்தியாசமான அனுபவங்கள் இருந்தன. ஆகஸ்டில், 2019 டிசம்பரில் பணிபுரிந்த ஒவ்வொரு 100 ஆண்களில் 36 பேர் ஊரடங்கின் போது வேலைகளை இழந்தனர்; ஊரடங்கிற்கு பிறகு மற்றொரு நான்கு பேர் வேலையை பறிகொடுத்தனர். அதன்படி பார்த்தால், 60 பேர் வேலையை இழக்கவில்லை. ஊரடங்கின் போது அவ்வாறு பணி இழந்த 36 பேரில் 28 (78%) பேர், ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிக்குத் திரும்பினர், எட்டு பேர் (22%) வேலைக்கு சேரவில (கீழே உள்ள படம் 3 ஐப் பார்க்கவும்). இதன் பொருள், 2019 டிசம்பரில் பணிபுரிந்த ஆண்களில் சுமார் 88% பேர் 2020 ஆகஸ்டில் பணிக்கு செல்ல தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் இந்த பாதைகளை ஒப்பிடுகையில், - 2018 டிசம்பரில் பணிபுரிந்த 100 ஆண்களில் 97 பேர் 2019 ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பணியில் இருந்தனர்- இது ஒரு அசாதாரண முறை என்பது தெளிவாகிறது.

மறுபுறம், 2019 டிசம்பரில் பணிபுரிந்த ஒவ்வொரு 100 பெண்களில், ஊரடங்கின் போது 74 பேர் வேலைகளை இழந்தனர், ஆகஸ்ட் 2020 க்குள் அதாவது ஊரடங்கிற்கு பின்னர், மேலும் 11 பெண்கள் வேலைகளை இழந்தனர். ஆக, 2019 டிசம்பரில் பணிபுரிந்த பெண்களில் 15% மட்டுமே ஊரடங்கு மூலமாகவும் அதன் பின்னரும், 60% ஆண்களுக்கு எதிராக தங்களது வேலைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஊரடங்கின் போது வேலை இழந்த 100 பெண்களில் 74 பேரில், 24 பேர் மட்டுமே தேசிய ஊரடங்கு தளர்வின் போது மீண்டும் வேலைக்கு திரும்ப முடிந்தது. இதன் விளைவாக, 2019 டிசம்பரில் பணிபுரிந்த பெண்களில் 40% மட்டுமே ஆகஸ்ட் 2020 வரை இன்னும் வேலை செல்ல முடிந்தது, இது ஆண்களில் 88% உடன் ஒப்பிடும்போது குறைவு.

இந்தியாவில் சாதாரண காலங்களில் கூட, பெண்கள் தங்கள் தொழிலாளர் சந்தை நிலைகளில் அதிக இளகும் தன்மையை கொண்டுள்ளனர், ஆண்களை விட பெரும்பாலும் வேலைவாய்ப்புக்கு வெளியே செல்கின்றனர். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், டிசம்பரில் பணிபுரிந்த பெண்களில் சுமார் 15% பேர் தொழிலாளர் தொகுப்பிலிருந்து வெளியேறிவிட்டனர், இது இந்த காலகட்டத்தில் காணப்பட்ட 60% க்கும் குறைவாகவே உள்ளது. ஆகவே, இந்த மாதங்களில் காணப்படும் அளவில் தொழிலாளர் தொகுப்பில் இருந்து பெண்கள் வெளியேறுவது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது மிகப் பெரிய அளவில் உள்ளது.

சாதாரண தராதரங்களின்படி பெண்களின் வெளியேற்றத்தின் அளவு பெரியது மட்டுமல்ல, இது ஆண்களுக்கான அனுபவத்திற்கு மாறாக உள்ளது. ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் ஊரடங்கின் போது அல்லது அதற்குப் பிறகு இரண்டு மடங்கு அதிகமாக வேலை இழக்கும் வாய்ப்பிருந்தது. மேலும், வேலைகளை இழந்த பெண்களுடன் ஒப்பிடும்போது ஊரடங்கிற்கு பின்னர் ஆண்கள் மீண்டும் எட்டு மடங்கு வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.


பெண்கள் மற்றும் இளம் தொழிலாளர்கள் மீதான இந்த மாறுபட்ட தாக்கங்கள், அவர்கள் ஈடுபட்டுள்ள பணி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்பாடுகளுக்குக் கணக்கிடப்பட்ட பின்னரும், நீடிக்கின்றன.

கோவிட்-19 ஊரடங்குக்கு பிறகு 'குறைந்த பாதுகாப்புள்ள' சுயதொழிலின் எழுச்சி

அடுத்து எழும் கேள்வி என்னவென்றால்: ஊரடங்கின் போது வேலை இழந்து பின்னர் வேலையை திரும்பப் பெற்றவர்கள், தொற்றுநோயின் பொருளாதார அதிர்வலைக்கு முன்பு இருந்ததைப் போன்ற வேலைக்குத் திரும்பினார்களா? CMIE-CPHS பணியின் பாதுகாப்பின் அடிப்படையில் தொழிலாளர்களை வகைப்படுத்துகிறது - நிரந்தர சம்பள வேலை என்பது மிகவும் பாதுகாப்பான ஏற்பாடாகும், அதைத் தொடர்ந்து தற்காலிக சம்பள வேலை மற்றும் சுய வேலைவாய்ப்பு, அதன்பிறகு தினசரி கூலி வேலைகள் மிகக் குறைந்த பாதுகாப்பானவை.

ஊரடங்குக்கு முன்னர், டிசம்பர் 2019 இல், சுமார் 48% தொழிலாளர்கள் சுயதொழில் புரிந்தவர்கள். ஆகஸ்ட் 2020 க்குள் இது 64% என்று உயர்ந்தது. புதிதாக சுயதொழில் புரியும் இந்த தொழிலாளர்கள் முன்பு என்ன வகையான வேலைகளைச் செய்தார்கள்?

2019 டிசம்பரில் வேலைவாய்ப்பு ஏற்பாட்டை ஒப்பிடுகையில், ஆகஸ்ட் 2020 இல், 40% நிரந்தர சம்பளத் தொழிலாளர்கள் மற்றும் 35% தற்காலிக சம்பளத் தொழிலாளர்கள், சுயதொழில் செய்யத் தொடங்கினர் (கீழே உள்ள படம் 4 ஐ காண்க). இவ்வாறு, இவ்வளவு பெரிய பொருளாதார அதிர்வலைகளை எதிர்கொண்டு நிரந்தர சம்பளம் பெறும் தொழிலாளர்கள் கூட, தங்கள் வேலையில் பாதுகாப்பாக இருக்கவில்லை. தினக்கூலித் தொழிலாளர்களில் சுமார் 42% பேர், சுய வேலைவாய்ப்புக்கு மாறினர். பொருளாதார நடவடிக்கைகளின் மந்தநிலை மற்றும் ஊதிய வேலைவாய்ப்பு இல்லாததால், அதிகமான தொழிலாளர்கள் சுயதொழில் செய்வதன் மூலம் தங்களது சொந்த வாழ்வாதார வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு ஏற்பாடுகளுக்கான செயல்பாடு 'சாதாரண' காலங்களிலும் காணப்படுகின்றன, ஆனால் இந்த அளவில் இல்லை. உதாரணமாக, கடந்த ஆண்டு இதே நேரத்தில், 70-80% தினக்கூலி தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் நிரந்தர சம்பளம் பெறும் தொழிலாளர்கள் ஒரே மாதிரியான வேலையில் இருந்தனர்.


இந்த கட்டமைப்பு சரிசெய்தல் -- அதாவது மக்கள் சம்பள வேலைகள் என்ற தொழிலாளர் திறனில் இருந்து ஒழுங்கமைக்கப்படாத வேலைகள் அல்லது சுய வேலைவாய்ப்புகளுக்கு மாறுவது -- வருத்தமளிக்கிறது என்று சி.எம்.ஐ.இ நிர்வாக இயக்குனர் மகேஷ் வியாஸ், இந்தியாஸ்பெண்ட் பேட்டியில் தெரிவித்தார்.

கட்டுமானம், உணவுத் தொழிலில் வேலைவாய்ப்பு நிலையற்றது, குறைவான வாய்ப்புகள்

CMIE-CPHS தரவைப் பற்றிய எங்கள் பகுப்பாய்வின்படி, பல்வேறு தொழில்களில் வேலை இழப்பு மற்றும் மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. தொழில் வல்லுநர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலைவாய்ப்பில் குறைந்த நிலையற்ற தன்மையை எதிர்கொண்டனர், அதே நேரத்தில் கட்டுமான மற்றும் சிறிய அளவிலான உற்பத்தித் துறைகளில் (எடுத்துக்காட்டு: உணவு, கைவினைப்பொருட்கள், சோப்புகள் போன்றவற்றில்) உள்ளவர்கள் அதிக வேலை இழப்புகளை எதிர்கொண்டனர். ஆனால், இந்த பிந்தைய தொழில்களும் ஒப்பீட்டளவில் விரைவாக மீட்கப்பட்டன (கீழே உள்ள படம் 5 ஐப் பார்க்கவும்).

கோவிட்-19 ஊரடங்கு மற்றும் நெருக்கடியின் தன்மை ஆகியவற்றின் விளைவாக, சுகாதார மற்றும் கல்வித்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப மாதங்களில், நிலைமை குறித்த அச்சத்தில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 'தன்னார்வமாக' ராஜினாமா செய்ததன் விளைவாக சுகாதாரத் துறையில் வேலை இழப்பு அதிகரித்தது. அதே நேரத்தில், ஆரம்ப மாதங்களில் பல மாநிலங்கள் பிற மாநிலங்களில் உள்ள தங்கள் சுகாதாரப் பணியாளர்கள் திரும்பி வர வேண்டும் என்றது, பல பகுதிகளில் செவிலியர்கள் பெருமளவில் பணி விலகலுக்கு வழிவகுத்தன. இருப்பினும், ஆரம்ப வேலை இழப்பு தொற்றுநோய்களின் அச்சத்தால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்றாலும், மெதுவாக மீட்கப்படுவது சுகாதாரத்துறையின் ஒட்டுமொத்த கருத்தின் விளைவாக இருக்கலாம். பல ஆதரவு சேவைகள் மற்றும் விமர்சனமற்ற துறைகள் குறைவான நோயாளிகளைக் கண்டன, ஏனெனில் மக்கள் மருத்துவமனைகளில் இருந்து விலகி இருக்கிறார்கள். CMIE-CPHS தரவுகளின்படி, குறைந்தது 20% சுகாதாரத்துறை தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் நிரந்தர வேலை இழப்பை சந்தித்துள்ளனர், ஏப்ரல் மாதத்தில் வேலை இழந்து ஆகஸ்ட் மாதத்தில் வேலைக்கு சேர்ந்த நிலையில், இது சுகாதாரத்துறையில் மிகக் குறைவு.

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளதால், ஆசிரியர்கள் மற்றும் அதன் பணியாளர்கள் வேலை இழப்புக்கு ஆளாகின்றனர், கல்வித்துறை தொழிலாளர்களில் கால் பங்கினர், ஏப்ரல் அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வேலை இழந்தனர். இந்தத் துறையில் சுமார் 12% தொழிலாளர்கள் ஊரடங்கிற்கு பிறகு வேலைக்கு செல்ல முடியவில்லை.


தொழில்துறைக்கு இடையிலான இயக்கங்களைப் பொறுத்தவரை, கிராமப்புறங்களில் விவசாயம், மற்றும் நகர்ப்புறங்களில் சிறு சேவைகள் (தொழில் அல்லாத சேவைகள், வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களை உள்ளடக்கியது) மிகக் குறைந்த நிலையற்ற தன்மையைக் கண்டன. வேளாண்மை என்பது கிராமப்புறங்களில் குறைந்து வரும் துறையாகும், இது கட்டுமானத் தொழிலாளர்களில் 42% மற்றும் சுகாதார மற்றும் கல்வித் தொழிலாளர்களில் 40% ஐ உறிஞ்சியது. நகர்ப்புறங்களில், சிறு சேவைகள் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து விவசாயம் சாரா துறைகளில் இருந்தும் 30% -35% தொழிலாளர்களைக் கொண்ட தொழிலாளர்கள் பெருமளவில் வந்துள்ளன (கீழே உள்ள படம் 6 ஐப் பார்க்கவும்). தொழில்களின் அடிப்படையில் இந்த மாற்றத்தை ஆராயும்போது, இது முக்கியமாக ஆசிரியர்கள், பியூன்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சிறிய அளவிலான வர்த்தகம், கடைகள் மற்றும் தெரு-விற்பனை போன்றவற்றை நோக்கி நகர்வதை பிரதிபலிக்கிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள தொழிலாளர்களை உள்வாங்கும் மற்றொரு துறை, கட்டுமானத் துறையாகும்.


கோவிட்-19 அதிர்வலைகளால் ஏற்பட்ட வேலை இழப்பு மற்றும் வருவாய் இழப்புகளால், உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது. மீட்டெடுப்பு நடவடிக்கையின் போது வாழ்வாதாரத்தை ஆதரிக்க, பல கொள்கை நடவடிக்கைகளை வல்லுநர்கள் முன்மொழிந்துள்ளனர். அவை, பொது விநியோக முறையின் உலகளாவியமயமாக்கல் உட்பட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் (MGNREGS) கீழ் வேலை கிடைக்கும் நாட்களை அதிகரித்தல், மற்றும் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தணிக்க, வேலை உத்தரவாத திட்டத்துடன் இணைந்து நகர்ப்புறங்களுக்கான -- ஏற்கனவே சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது-- ஒரு பொது வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதாகும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.