புதுடெல்லி: கவுரவ் குமார் சர்மா, மனம் உடைந்த மனிதர். இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு, அவரது வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்ட நிலையில், விஷயங்கள் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பியபோது அவர் சற்று நிம்மதியடைந்தார்: கடைகளும் சந்தைகளும் மீண்டும் திறக்கப்பட்டன, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கினர். ஆனால் ஊரடங்கால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளால் உணவு பணவீக்கம் அதிகரித்தது, புதுடெல்லியில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி வரும் 43 வயதான ஷர்மா, தனது நம்பிக்கை அனைத்தும் இருண்டுவிட்டதாக கூறினார். அக்டோபரில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தக்காளி, காலிஃபிளவர் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்தது.

"நான் காலையில் தொடங்கி, இரவு வரை வாகனம் ஓட்டுகிறேன், ரிக்‌ஷாவிற்கு எரிபொருள் மற்றும் வாடகைக்கு பணம் செலுத்திய பின்னர் [இந்த நாட்களில்] நான் சேமிப்பது ஒருநாளைக்கு ரூ.200-250 மட்டுமே" என்று சர்மா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். 2020 டிசம்பரில், தெற்கு டெல்லியி ஆர்.கே. புரம் அருகேயுள்ள முகமதுபூர் மண்டிக்குச் சென்றபோது தக்காளி ஒரு கிலோ ரூ.80 க்கு விற்கப்பட்டது கண்டு, அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று, அவர் தனது அத்தியாவசிய மளிகை பொருட்களை வாங்கவில்லை. "நாங்கள் சிறிது காலம், காய்கறிகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, அரிசி மட்டுமே சாப்பிட்டோம். சில நாட்களில், நாங்கள் உப்புடன் பரோட்டாக்களை சாப்பிடுவோம். விலைவாசி விரைவில் குறையும் என்று நம்புகிறேன்; இல்லையென்றால் எங்களைப் போன்ற ஏழை மக்களுக்கு ஒரேயொரு வழி இருக்கிறது: நாங்கள் இறந்துவிடுவதுதான், "என்று சர்மா கூறினார். "நான், நான்கு மகள்களுக்கு உணவளித்தாக வேண்டும்" என்றார்.

ஷர்மாவின் வேதனையானது, இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான குறைந்த வருமானமுள்ள, ஏழை குடும்பங்களுக்கும் பொருந்தக்கூடியது. ஏனெனில் அவர்கள் பொருளாதார துயரங்களை அனுபவிக்கிறார்கள். தொற்றுநோய், இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, வேலையின்மை அதிகரிப்பதற்கும் ஊதியங்களைக் குறைப்பதற்கும் வழிவகுத்த நிலையில், தொடர்ச்சியான அதிக உணவு பணவீக்கம் இப்போது லட்சக்கணக்கான குடும்பங்களை உணவுக்கு செலவிடுவதை குறைக்க நிர்பந்திக்கிறது. இது ஊட்டச்சத்து வறுமை மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

தேக்கமடைந்து வருவதாலோ அல்லது வருமானம் ஈட்டாததாலோ குடும்பங்கள் தங்கள் சேமிப்பில் கை வைக்கும் போது, ​​இந்தியாவின் மொத்த வீட்டு சேமிப்பும் குறையக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர், இதனால் எதிர்கால நுகர்வு குறைந்து பொருளாதார மீட்சியை, அது பாதிக்கும். இது முதலீட்டாளர்களின் உணர்வை குறைக்க வழிவகுக்கும், ஏனெனில் இந்தியாவின் நுகர்வோர் சந்தை கட்டுப்படுத்தப்பட்ட வீட்டு சேமிப்புடன் குறுகிவிடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். உதாரணமாக, உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை நுகர்வோர் செலவழிக்க குறைந்த செலவழிப்பு பணத்தை கொண்ட சந்தையில் வைக்க ஊக்குவிப்பார்கள், இதன் மூலம் புதிய திட்டங்களில் முதலீடுகள் குறைக்கப்படுவதற்கு வழிவகுக்கும், இது வேலைவாய்ப்பை குறைக்கும்.

அதிகரிக்கும் வறுமை, பசி

அக்டோபரில், உணவு பணவீக்கம் 11% ஆக உயர்ந்தது, ஆனால் இது நவம்பரில் 9.43% ஆக குறைந்தது. தொற்றுநோய்க்கு முன்பே, இந்தியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டாய 6% உயர் வரம்பை விட உயர்ந்தது, ஏனெனில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இதுவரை இல்லாதபடி குறைந்த அளவிற்கு சரிந்தது. இந்தியாவை தொற்றுநோய் தாக்கிய பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் அறிவிப்பான தேசிய அளவிலான ஊரடங்கு என்பது, விவசாய விநியோகச் சங்கிலியை சீர்குலைத்தது. இதன் விளைவாக கடந்த சில மாதங்களில் இந்தியா எதிர்கொண்ட உணவு பணவீக்கம் அதிகரித்ததாக, நிபுணர்கள் தெரிவித்தனர்.


உணவு பணவீக்கத்தின் தொடர்ச்சியான அதிகரிப்பு, இந்தியாவில் வசிக்கும் ஏழைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். உணவுக்கான அதிக விலைகள், வருவாய்க்கு அழுத்தம் கொடுக்கும், அவை ஏற்கனவே மிகக் குறைவாக உள்ளன, மேலும் நாட்டில் பரவலான பொருளாதார வலி இருக்கும் நேரத்தில், வீட்டு சேமிப்பு குறையும் என்று அவர் கூறினார்.

"வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்கள் சரிந்த நேரத்தில் விலைவாசியும் உயர்ந்து வருகிறது," என்று, அபிவிருத்தி பொருளாதார வல்லுனரும் சர்வதேச அபிவிருத்தி பொருளாதார அசோசியேட்ஸ் (IDEA) நிர்வாக செயலாளருமான ஜெயதி கோஷ் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "தொற்றுநோய்களின் போது வேலை இழந்த பலர், பொருளாதார மந்தநிலை காரணமாக முன்பே, புதிய வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வேலை உள்ளவர்கள் பெரும்பாலும் கணிசமாக குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறார்கள், பெரும்பாலான சுயதொழில் செய்பவர்களின் வருமானம் அவர்களின் முந்தைய நிலைகளில் ஒரு பகுதியே.வறுமை மற்றும் பசியின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை" என்றார்.

எரிபொருள் பணவீக்கத்தின் மீதான வரி

எரிபொருட்களுக்கான வரிகளை அதிகரிக்கும் அரசின் கொள்கை, அதிக பணவீக்கத்திற்கு பின்னால் ஒரு பெரிய காரணியாக இருந்தது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர். இது லட்சக்கணக்கான சுயதொழில் செய்யும் இந்தியர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், அவர்கள் பல்லாயிரக்கணக்கான முறைசாரா துறை ஊழியர்களுடன் சேர்ந்து பொருளாதார சேதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக பணவீக்கத்தின் தற்போதைய போக்கு "செலவு-உந்துதல் பணவீக்கத்தின் தன்மையில் உள்ளது", இது சில விநியோக சங்கிலி இடையூறுகளின் விளைவாகும், மேலும் பொருளாதார நெருக்கடியின் போது அதன் வரி வருவாயை அதிகரிப்பதற்காக எரிபொருள் மீதான வரிகளை அதிகரிக்க அரசின் யற்சி என்றார் கோஷ்.

இந்நேரத்தில் வரி வருவாய்க்கு அரசு ஆசைப்பட்டாலும், எரிபொருள் மீதான வரிகளை அதிகரிப்பது சரியான கொள்கை கருவி அல்ல என்று, புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதார வல்லுனரும், திட்டக் கமிஷனில் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கும் முன்னாள் தலைவருமான சந்தோஷ் மெஹ்ரோத்ரா எச்சரித்தார். "தொற்றுநோய்க்குப் பிறகு வரிவருவாய் பாதிக்கப்படவில்லை; பொருளாதாரம் மந்தமாக இருந்ததால் அதற்கு முன்பே அவை சுருங்கி வருகின்றன. டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வரிகளை அரசு உயர்த்திக் கொண்டிருப்பது பொருளாதாரம் முழுவதும் பணவீக்கத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பு காரணியாகும், ஏனெனில் டீசல் எல்லாவற்றிலும் உள்ளீடாகும்" என்றார்.

இந்தியாவின் சரக்கு போக்குவரத்து உதாரணத்தை மெஹ்ரோத்ரா மேற்கோள் காட்டினார், அவர்களில் பெரும்பாலோர் மைக்ரோ மற்றும் சிறு வணிகங்களின் கீழ் வருகிறார்கள். "ஒன்று அவர்களிடம் மிகக் குறைந்த லாரிகள் உள்ளன அல்லது அவர்கள் ஒரு டிரக் மூலம் சுயதொழில் செய்கிறார்கள். நீங்கள் கச்சா எண்ணெய் மீதான வரியை உயர்த்தும் போது, போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ள இந்த வாகன போக்குவரத்துக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இது, மக்கள் மீது மிகவும் தீங்கு விளைவிக்கும், "என்று அவர் கூறினார்.

இந்தியாவின் போக்குவரத்துத் துறை சுமார் 20% சுருங்கிவிடும் என்று, மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ, ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. ஆனால் டீசல் விலை இதுவரையில்லாதபடி உயர்ந்த நிலையில் இருப்பதால், பெரும்பாலான சிறிய போக்குவரத்து தொழில் செய்வோரின் செலவுகள் கணிசமாக உயரக்கூடும்; இந்த துறை மெதுவாக மீட்கும் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கி இருந்தது. இலாப வரம்புகள் தொடர்ந்து சுருங்கி வருவதால் பல சிறு போக்குவரதுக்காரர்கள் தங்கள் தொழில்களை நிறுத்திக் கொள்ளக்கூடும் என்று மெஹ்ரோத்ரா கூறினார்.

பணவீக்கம், சுருங்குதல் மற்றும் உணவு விநியோகம்

கடந்த சில மாதங்களில், நுகர்வோர் உணவு விலை மற்றும் சில்லறை விற்பனையின் அதிகரிப்பு, இந்தியப் பொருளாதாரத்தின் சாதனைச் சுருக்கத்துடன் ஒத்துப்போனது, மேலும் பல பொருளாதார வல்லுநர்கள் பல்லாயிரக்கணக்கான ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சமாதானப்படுத்த அரசு போதிய நிதி செலவிடவில்லை என்று விமர்சித்துள்ளனர். அதிக நிதி பற்றாக்குறை குறித்து அரசு கவலைப்படுவதால் அதிக செலவு செய்ய முடியாது என்று டிசம்பர் மாதத்தில் நிதி அமைச்சகம் கூறியதுடன், செப்டம்பர் காலாண்டில் செலவினங்களை சுமார் 22% குறைக்கும் தனது முடிவை அது பாதுகாத்தது.

எவ்வாறாயினும், அதிக செலவு செய்யத் தவறியது இந்தியாவின் பொருளாதார சுருக்கத்தின் பின்னணியில் உள்ள ஒரு பெரிய காரணியாகும் என்று பொருளாதார வல்லுநர்கள், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

"நம்முடையது, பல லட்சம் ஏழை மக்களைக் கொண்ட ஒரு நாடு, அதுவே மற்ற நாடுகளில் இருந்து நம்மை வேறுபடுத்துகிறது" என்று மெஹ்ரோத்ரா கூறினார். "உலகின் எந்த நாட்டிலும் இல்லாதபடி அதிக ஏழைகள் இங்கு இருப்பதற்கு நாம் காரணம். எனவே, இந்திய பொருளாதாரம் சுருங்குவது, அவர்களுக்கு ஒரு முழுமையான பேரழிவு. மற்ற ஜி -20 நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இந்தியாவின் சுருக்கம் மிக மோசமானது. எனவே அரசு பொருளாதாரத்தை நிர்வகித்த விதத்தில் மிகவும் மோசமான தவறு இருக்க வேண்டும்" என்றார்.

ஊரடங்கு அமலான சில மாதங்களில் உணவு பணவீக்கம் அதிகமாக இருந்தபோதும் -- இது வேலையின்மை மற்றும் குறைந்த கிராமப்புற ஊதியங்களின் போக்குடன் ஒத்துப்போகிறது -- நவம்பர் மாதத்திற்கு பிறகு, பிரதம மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா (PMGKAY) இன் கீழ் அரசு தனது இலவச தானிய விநியோக திட்டத்தை தொடரவில்லை. ஆனால் பொருளாதார வல்லுநர்கள் இது ஊட்டச்சத்து வறுமை அதிகரிக்க வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள், ஏனெனில் அதிக விலை, குறைந்த வருமானம் போன்றவை, ஏழை குடும்பங்களை உணவு செலவினங்களைக் குறைக்க கட்டாயப்படுத்தும்.

"பொதுச் செலவு மற்றும் உணவு விநியோகம் ஆகிய இரண்டிலும் அரசின் அணுகுமுறை ஒரு முழுமையான மர்மமாகும்" என்று ஐடிஇஏவின் கோஷ் கூறினார். "பொருளாதாரத்தில் உண்மையில் சுதந்திரமாக செலவழிக்கக்கூடிய ஒரே நிறுவனம் அரசாக இருக்கும் நிலையில், ​​தொற்றுநோய்களின் போது ஏன் குறைவாக செலவிட வேண்டும்? சர்வதேச நாணய நிதியம் கூட இந்திய அரசிடம் அதிக செலவுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

ஜனவரி மாதத்தில் இந்திய உணவு கார்ப்பரேஷன் (FCI) இடமிருந்து அதிகப்படியான உணவு தானியங்களை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும், இது ஜனவரி மாதத்தில் இரு மடங்குக்கும் அதிகமான இருப்புகளை வைத்திருக்கும் என்று கோஷ், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

"பசியின் இத்தகைய பெரும் அதிகரிப்புகளுக்கு முகங்கொடுக்கும் போது, நாம் பேசுக் கொண்டிருக்கும்போதுகூட சில இருப்புகள் வீணாகிப் போயிருக்கலாம்" என்று கோஷ் கூறினார். ஊரடங்கின் போது, ​​ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், இந்திய உணவு கார்ப்பரேஷன் குடோன்களில் சுமார் 1,500 டன் தானியங்கள் சேதமடைந்தன. எஃப்.சி.ஐ.யில் 2020 நிதியாண்டு முழுவதும் 2,000 டன் தானிய வீணானது என்று தெரிவிக்கப்பட்டது. "ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இந்த வழியில் நடந்துகொள்வதை கற்பனை செய்வது பார்ப்பதுகூட கிட்டத்தட்ட சாத்தியமற்றது, அடிப்படை நல்வாழ்வு மற்றும் அதன் குடிமக்களின் உயிர்வாழ்விற்கான அக்கறை கூட இல்லை" என்று கோஷ் மேலும் கூறினார்.

மேலும் பலர் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படலாம்

தனது குடும்பச் செலவுகளைச் செலுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கான பல வாரங்களுக்குப் பிறகு ஒருநாள், சர்மா இதற்கு முன்பு அரிதாகவே செய்ததைச் செய்தார்: அவர் தனது வங்கிக்குச் சென்று தனது வாழ்நாளில் சேமித்த கிட்டத்தட்ட ரூ.20,000 சேமிப்பைத் திரும்பப் பெற்றார். "வேறு வழி இல்லையே?" என்று அவர் சோகத்துடன் கூறினார், "நான் இந்த விஷயங்களைப் பற்றி பேசவில்லை ... என் குடும்பத்தினரிடம் மட்டுமல்ல, யாரிடமும் தான், ஆனால் பலமுறை நான் அழுவதைப் போல உணர்ந்தேன்" என்றார்.

பொருளாதார வல்லுநர்களிடையே இது ஒரு பெரிய கவலையாக உள்ளது, பரவலான பொருளாதார வலியின் போது அதிகரிக்கும் விலைவாசி ஏழை குடும்பங்களை தங்கள் சேமிப்பில் கைவைக்கச் செய்கிறது. இதனால் வீட்டு நிதி சேமிப்பு -- இது பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த சேமிப்பில் பெரும் பகுதியை உருவாக்குகிறது -- மற்றும் எதிர்கால நுகர்வு குறைகிறது.

"ஒரே நேரத்தில் சேமிப்புடன் இரண்டு வெவ்வேறு விஷயங்கள் நடக்கின்றன என்று நான் நினைக்கிறேன்: இதை அப்பட்டமாகக் கூறினால், நியாயமான அதிக வருமானம் உள்ளவர்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்கிறவர்கள், ஏழைகள் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் அதே வேளையில் அவர்களின் சேமிப்பு கரைகிறது, மேலும் அவர்களின் சேமிப்பு மூழ்கும் வாய்ப்பு அதிகம் " என்று, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் (NIPFP) சபியாசாச்சி கர், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "அவர்களின் எதிர்ப்புகள் அதிகரித்து, இந்த குடும்பங்கள் கடன் வலையில் சிக்கினால் நான் மிகவும் கவலைப்படுவேன். மக்கள் தங்கள் சேமிப்பை எடுப்பது பற்றி நாம் பேசும்போது கூட, நாம் இன்னும் ஏழைகளாகாதவர்கள் பற்றி பேசுகிறோம் என்று நினைக்கிறேன், ஏனென்றால் ஏழைகளுக்கு எந்தவிதமான சேமிப்பும் இல்லை. எனவே எந்தவொரு பெரிய அதிர்ச்சியும் இந்த மக்களை வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளும்" என்றார்.

தொற்றுநோய்க்கு முன்பே, இந்தியாவின் பொருளாதாரம் மந்தமடைந்து வந்ததாகவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் நான்கு இயந்திரங்களில் (நுகர்வு, முதலீடு, ஏற்றுமதி மற்றும் பொதுச்செலவு) எதுவும் வலுவாக இருக்கவில்லை என்றும் மெஹ்ரோத்ரா கூறினார். "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதமாக வீட்டு சேமிப்பு [GDP] 2012ம் ஆண்டில் [சுமார்] 24% இலிருந்து 2018 இல் 17% ஆக குறைந்துள்ளது. இது ஒரு பெரும் வீழ்ச்சி. இதற்கு மேல், வீட்டு சேமிப்பு 17% ஆக இருந்தது, இது 1991 ல் இருந்ததை விட அரை சதவிகிதம் அதிகம், "என்று அவர் கூறினார். இது, மெஹ்ரோத்ராவின் கூற்றுப்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் மக்கள் நுகர்வு பராமரித்து வந்தால், அவர்கள் ஏற்கனவே தங்கள் சேமிப்பைச் செலவழிப்பதன் மூலம் அவ்வாறு செய்கிறார்கள் - தொற்றுநோய்க்குப் பிறகு மோசமடைந்த ஒரு போக்கு, வேலை இழப்புக்கு வழிவகுத்தது.

"எனவே, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வேலை இழப்புக்கள் மற்றும் குறைந்த ஊதியங்கள் ஆகியவற்றின் கலவையாக நீங்கள் இருந்தால், முறைசாரா துறையில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்" என்று மெஹ்ரோத்ரா கூறினார். நிறைய வேலைகள் திரும்பி வந்தாலும், இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் சுயதொழில் செய்பவர்கள் அல்லது முறைசாரா துறையில் வேலை செய்கிறார்கள், அவர்கள் வேலைக்கான குறைந்த தேவை காரணமாக குறைவான நேரமே வேலை செய்கிறார்கள். இவை அனைத்தும், மெஹ்ரோத்ராவின் கூற்றுப்படி, இந்தியாவின் வீட்டு சேமிப்புக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். "இந்த நிதியாண்டில் வீட்டு சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15% க்கும் அதிகமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று மெஹ்ரோத்ரா கூறினார். இது, அவரைப் பொறுத்தவரை, எதிர்கால பொருளாதார மீட்சிக்கு ஒரு பெரிய கவலை ஆகும்.

நவம்பர் 2020 இல், சிகாகோ பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில், ருஸ்டாண்டி சென்டர் ஃபார் சோஷியல் செக்டர் இன்னவேஷன் நடத்திய ஆய்வில், ஊரடங்கு அமலில் இருந்த சில மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் "பல வீடுகளுக்கு தொடர்ச்சியான வலுக்கட்டாய சூழல் என்ற அறிகுறிகள்" கிடைத்தன, மேலும் வேலைவாய்ப்பு மற்றும் வருமான இழப்புகள் இருந்தன: இந்திய குடும்பங்களுக்கு உண்மையான எதிர்மறை நலத்திட்ட விளைவுகள் ". ஆய்வின்படி, வேலை இழப்பு மற்றும் ஊதியங்கள் குறைக்கப்பட்டதால் குடும்பங்கள் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கான செலவைக் குறைத்துள்ளன.

உயர்ந்த வரி, அதிக செலவு

போதுமான செலவு செய்யாமல், அரசு தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருகிறது என்பது கோஷின் கூற்றாகும். "அரசு தனது நிதிப் பற்றாக்குறையை, மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கும்போது, ​​அதன் சொந்த செலவினங்களைக் குறைப்பதன் மூலம், அரசு உண்மையில் அதற்கு நேர்மாறாகவே செயல்படுகிறது. அது செலவழித்திருந்தால் இருந்ததை விட குறைந்த வரி வசூலைப் பெறும், எனவே நிதிப் பற்றாக்குறை இன்னும் பெரியதாக இருக்கும், மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சியடையும் (குறிப்பாக என்ன இருந்திருக்கலாம் என்பதோடு ஒப்பிடுகையில்), மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விகிதத்திற்கான நிதி பற்றாக்குறை அதிகரிக்கும், "என்றார்.

அரசு உடனடியாக மாநில அரசுகளுக்கும், வேலைத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற உயர் பெருக்க விளைவைக் கொண்ட மத்திய திட்டங்களுக்கும் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோஷ் பரிந்துரைத்தார். ஆனால் மிக முக்கியமாக, செலவு-உந்துதல் பணவீக்கத்தைக் குறைக்கும் விநியோகச் சங்கிலி சிக்கல்களை அரசு சரிசெய்ய வேண்டும். நிதிப் பற்றாக்குறை குறித்து அரசு அக்கறை கொண்டிருந்தாலும், கூடுதல் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

"இந்த அதிகரித்த செலவினங்களில் சில பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பில் இருந்து அதிகரித்த வரி வருவாயால் தானாகவே நிதியளிக்கப்படும். தொற்றுநோய்களின் போது (அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கருதப்படுவது போல) பலனடைந்த பெரும் செல்வந்தர்கள் மீது செல்வ வரிகளை கொண்டு வருவதன் மூலம் அதில் சிலவற்றிற்கு நிதியளிக்க முடியும், மேலும் சில வரி விதிகளை மாற்றுவதன் மூலம், எம்.என்.சி.களை அவற்றின் இலாபங்களை, குறைந்த வரி அதிகார வரம்புகளுக்கு மாற்றாமல், உள்நாட்டு நிறுவனங்களின் அதே விகிதத்தில் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றன," என்று கோஷ் கூறினார். ஆனால் உலகளாவிய நிறுவனங்களுக்கு அதிக வரிகளை கட்டாயப்படுத்துவது, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் பெருகிய முறையில் வியட்நாமிற்கு தளத்தை மாற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசின் தற்போதைய உந்துதலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

எவ்வாறாயினும், வீட்டு சேமிப்பு வீழ்ச்சியடைவது (இது பொருளாதாரத்தில் முதலீடுகளை ஊக்கப்படுத்தும்) அரசுக்கு தீவிரமான கவலை ஏற்படுத்தும் மற்றும் போக்கை மாற்றியமைக்க அரசுய் பல்வேறு கொள்கை திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.

கடந்த 1991ஆம் ஆண்டுகளில் தாராளமயமாக்கப்பட்டதில் இருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பிரமிட்டின் உச்சியில் ஒரு சிறிய பிரிவினரால் இயக்கப்படுகிறது என்று, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PMEAC) முன்னாள் உறுப்பினர் ரத்தீன் ராய் போன்ற பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். முதல் 100 மில்லியன் இந்தியர்களின் நுகர்வு இந்தியாவின் வளர்ச்சிக் கதையை உந்தியுள்ளது, இது இந்தியாவில் திட்டமிடப்பட்டதை விட மிகச் சிறிய நடுத்தர வர்க்கத்தை குறிக்கிறது என்று ராய் 2018 செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார். ஆனால் தொற்றுநோயால் வழிநடத்தப்பட்ட பொருளாதார சேதம், இந்தியாவின் மொத்த வீட்டு சேமிப்பு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் நிலையில், இந்த குழுவையும் குறைப்பதற்கான அச்சுறுத்தல் உள்ளது.

பொருளாதாரத்தில் ஏற்படும் வலியைக் குறைக்க, வீட்டு மட்டத்தில் அரசு தலையிட வேண்டும் என்று மெஹ்ரோத்ரா கூறினார். அவ்வாறு செய்வதற்கான ஒரு வழி, சமூக பாதுகாப்புக் குறியீட்டின் வாக்குறுதியுடன் முன்னேறி, ஏற்கனவே 60 வயதுக்கு மேற்பட்ட அமைப்பற்ற தொழிலாளர்களுக்கு முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவதாகும். "ஓய்வூதிய வயதைத் தாண்டிய தொழிலாளர்களுக்கான பெரிய கூட்டுறவு உள்ளது, அவர்கள் எதையும் பெறவில்லை மற்றும் வருமான ஆதாரமும் இல்லை. அவர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள்; இது அரசுக்கு நிறைய செலவு செய்யாது" என்றார்.

இந்த கொள்கை நடவடிக்கை என்ன செய்யும், மெஹ்ரோத்ராவின் கூற்றுப்படி, இது வயதான தொழிலாளர்களை தொழிலாளர் திறனில் இருந்து வெளியேற்றுவதோடு, தொழிலாளர் பங்களிப்பு வீதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நேரத்தில், இளைய தொழிலாளர்கள் நுழைவதற்கு வழிவகுக்கும்.

இந்தியாவின் பொருளாதாரம், கோவிட்டுக்கு முந்தைய வளர்ச்சி பாதையில் திரும்புவதற்கான சாத்தியங்கள் குறித்து, என்.ஐ.பி.எப்.பி.-யின் சபியாசாச்சி கருக்கு பெரிய கவலையாக உள்ளது. அவரது ஒரு மாதிரியின்படி, பொருளாதாரம் கடிகாரங்கள் சுமார் 7% வளர்ச்சி விகிதத்தை வழங்கியிருந்தால், இந்த வளர்ச்சி பாதையில் இந்தியா திரும்புவதற்கு சுமார் 13 ஆண்டுகள் ஆகும். ஆனால் வீட்டு வருமானம் மற்றும் சேமிப்பு குறைந்து வருவதால், பொருளாதாரத்தில் எதிர்கால நுகர்வு மந்தநிலையின் உண்மையான அச்சுறுத்தல் உள்ளது, இது பொருளாதார மந்தநிலையின் மற்றொரு பிழைக்கு வழிவகுக்கும். உதாரணமாக, வீட்டு சேமிப்பு குறைதல் மற்றும் அரசு செலவினங்களின் பற்றாக்குறை (இது ஏற்கனவே இந்தியாவின் இறுக்கமான உள்நாட்டு சந்தையை சுருக்கிவிடும்) எதிர்மறை முதலீட்டாளர்களின் உணர்வுக்கு வழிவகுக்கும், முதலீட்டு சுழற்சியை பாதிக்கும், இது பொருளாதாரத்தில் மந்தநிலையைத் தொடங்கும் .

"இந்தியாவின் வளர்ச்சி குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். வருமான மறுபங்கீடு ஏழை மக்களுக்கு எதிராக வளைக்கப்படும்,"என்றார் கர்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.