புதுடெல்லி: பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் நிதிகளை மலிவு விலையில் அணுகுவதன் மூலம், லட்சியமிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கான இந்தியாவின் முயற்சியை, அமெரிக்கா (US) ஆதரிக்கும் என்று, காலநிலை தொடர்பான அமெரிக்க குடியரசுத் தலைவரின் சிறப்பு தூதர் ஜான் கெர்ரி, ஏப்ரல் 7 ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

கெர்ரி-மோடி சந்திப்பு, காலநிலை குறித்த மெய்நிகர் அளவிலான உலகத் தலைவர்களது உச்சி மாநாட்டிற்கு 15 நாட்களுக்கு முன்னதாக நடந்தது, உச்சி மாநாட்டின்போது 40 நாடுகள் துணிச்சலான காலநிலை உறுதிமொழிகளை அளித்து, எதிர்கால தசாப்தங்களுக்கு இலக்குகளை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகர-பூஜ்ஜிய இலக்குகளை நோக்கி செல்ல இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது - அதாவது, பசுமை இல்ல வாயுக்களின் (GHG -ஜிஹெச்ஜி) பூஜ்ஜிய நிகர உமிழ்வை எப்போது நெருங்கும் என்ற ஆண்டை அறிவிக்க கோரப்படுகிறது. நாடுகள் தங்கள் உமிழ்வை கணிசமாகக் குறைத்தால், காடு வளர்ப்பு மற்றும் விலையுயர்ந்த கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மீதமுள்ள உமிழ்வை அகற்றினால், இது நிகழலாம். (இவை நிலத்தடி சேமிப்பு மற்றும் மறுபயன்பாட்டிற்காக தொழில்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கைப்பற்றுவதை உள்ளடக்குகின்றன).

அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு, உலகின் பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, காலநிலை மாற்றம் தொடர்பான எந்தவொரு உலகளாவிய நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது காலநிலை அபாயங்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும், மேலும் துணிச்சலான செயல்களால் பயனடையக்கூடும்.

சீனாவும் அமெரிக்காவும் தங்களின் காலநிலை நடவடிக்கை திட்டங்களை சுட்டிக்காட்டியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஐ.நா பொதுச்சபையின் 75வது அமர்வில், 2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் தனது கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை அதிகப்படுத்தவும், 2060 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தில் நடுநிலைமை தன்மை அடையவும் இலக்கு வைத்திருப்பதாக அறிவித்தார். ஏப்ரல் உச்சிமாநாட்டிற்கான உலகத் தலைவர்களுக்கான அழைப்பில், வெள்ளை மாளிகை, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஒரு லட்சிய 2030 உமிழ்வு இலக்கை மாநாட்டில் அறிவிப்பதாகக் கூறியது. மேலும், கடந்த மாதம், மூன்று ஜனநாயகக்கட்சியை சேர்ந்த அவை உறுப்பினர்கள் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒரு புதிய காலநிலை மசோதாவை அறிமுகம் செய்தனர், அதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் 80% சுத்தமான மின்சாரத்தையும், 2035 ஆம் ஆண்டுக்குள் 100% ஐயும் எட்டுவது இதன் நோக்கமாகும்.

பொருளாதாரம் அளவிலான நிகர பூஜ்ஜிய இலக்கை அறிவிக்க இந்தியா உள்ளதா? இதற்கு விடை, பல்வேறு புதைபடிவ எரிபொருள் துறைகளில் ஆற்றல் மாற்றங்கள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களை மறுவாழ்வு செய்வது, மற்றும் தூய்மையான ஆற்றல் மற்றும் வளர்ச்சிக்கான மாற்றங்களுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துதல் போன்ற காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று காலநிலை ஆராய்ச்சியாளர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர். நிகர பூஜ்ஜியத்திற்கு விரைவாக மாறுவதை நோக்கமாகக் கொண்டது, நிலக்கரி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளை பாதிக்கும் பொருளாதார அதிர்வலைகளுக்கு வழிவகுக்கும்.

நிகர பூஜ்ஜியம் ஏன்

நிகர பூஜ்ஜியத்தை அடைவது அல்லது நிகர பூஜ்ஜிய இலக்கை நெருங்குவது ஆகியவற்றால், 1.5 டிகிரி செல்சியஸில் புவி வெப்பமடைதலை தடுக்கச் செய்ய வேண்டியது அவசியம் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழு (IPCC - ஐபிசிசி) தனது அக்டோபர் 2018 அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் இதை அடைய, இந்த பூமிக்கு 2050 ஆம் ஆண்டு வரை மட்டுமே நேரம் உள்ளது. இதுவரை, 77 நாடுகள், 10 பிராந்தியங்கள் மற்றும் 100 நகரங்கள் நிகர பூஜ்ஜிய இலக்குகளை சட்டங்களை இயற்றுவதன் மூலம் அல்லது செயல் திட்டங்களை வெளியிட்டு, இதற்கு ஆதரவாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

2017 ஆம் ஆண்டில் ஸ்வீடன், 2045 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்ப்பாளராக மாற ஏதுவாக ஒரு சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் 2018 ல் நடைமுறைக்கு வந்தது. இதேபோல், இங்கிலாந்து அதன் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவருவதற்கான ஒரு சட்டத்தை 2019 இல் நிறைவேற்றியது.

துணிச்சலான காலநிலை நடவடிக்கை அல்லது நிகர பூஜ்ஜிய இலக்கை ஏற்றுக்கொள்வதன் மூலம் பல நன்மைகள் உள்ளன என்று, உலக ஆராய்ச்சி நிறுவனமான உலக வள நிறுவனத்தின் (WRI) இந்தியாவிற்கான காலநிலை திட்டத்தின் இயக்குனர் உல்கா கெல்கர் கூறினார். "ஆரம்பத்தில், காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய முயற்சிக்கு இந்தியா இன்னும் பங்களிக்கும் மற்றும் காற்று மாசுபாடு & நீர் பாதுகாப்பு போன்ற இணை நன்மைகளை பெறும்" என்று அவர் கூறினார்.

"பல நாடுகள் துணிச்சலான உறுதிமொழிகளை தருவதால், இது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளைத் தூண்டக்கூடும். இது இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது" என்றார்.

'ஆற்றல் திறன் கொண்ட பாதைகளில் வளர்ச்சி இருக்க வேண்டும்'

டெல்லியை சேர்ந்த எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) அமைப்பின் சமீபத்திய பகுப்பாய்வு, நிகர பூஜ்ஜிய இலக்குகள் குறித்த எந்தவொரு முடிவிலும் உச்சநிலையை கருத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. ஒரு நாட்டின் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு உச்சம் அடைந்து வீழ்ச்சியடையத் தொடங்கிய காலமே உச்சத்தில் உள்ளதாகும்.

மார்ச் 2021 இல் வெளியிடப்பட்ட பகுப்பாய்வு, குறுகிய கால இலக்குகள், நீண்ட கால இலக்குகளுக்கு மாற்றாக இருக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியது. அனைத்து துறைகளும் திட்டமிடவும் குறைந்த கார்பன் வளர்ச்சிக்குத் தயாராகவும் உதவ வலுவான கொள்கை சமிக்ஞைகள் மற்றும் தைரியமான இலக்குகள் தேவை என்றும் அது கூறியது. உதாரணமாக, புதைபடிவ எரிபொருட்களுக்கு பதிலாக மின்சாரத்தை எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய உற்பத்தித் துறைகளை இந்தியா அடையாளம் காண வேண்டும்.

இந்தியா 2030-ஐ அதன் உச்ச ஆண்டு மற்றும் 2050-ஐ அதன் நிகர பூஜ்ஜிய ஆண்டாக தேர்வு செய்தால், கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்கள் வணிக ரீதியாக இயலாது எனில், இந்தியாவின் 83% ஆற்றல் புதுப்பிக்கத்தக்க பொருட்களிலிருந்து (நீர் மின்சாரம் தவிர) வர வேண்டும் என்று எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) மதிப்பிட்டுள்ளது. மேலும், முதன்மை ஆற்றல் கலவையில் புதைபடிவ எரிபொருள் ஆற்றலின் பங்கு 2030 க்குள் 73% (2015) இலிருந்து 5% ஆக குறைக்கப்பட வேண்டும் என்று, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.

"பல வளர்ந்த நாடுகள் ஏற்கனவே உமிழ்வை எட்டியுள்ளன, அவற்றைப் பொறுத்தவரை, நிகர பூஜ்ஜியத்தைச் சுற்றியுள்ள பிரச்சனைகள், அதை தீர்ப்பதற்கான வழிகளைச் சுற்றியே உள்ளது," என்று, எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் ஊழியரும் பகுப்பாய்வின் ஆசிரியருமான வைபவ் சதுர்வேதி கூறினார். "இருப்பினும், பொருளாதார ரீதியாகவும் அதன் உமிழ்வைப் பொறுத்தவரையிலும் இந்தியா இன்னும் உச்சத்தில் இல்லை" என்றார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் ஆற்றல் மற்றும் உமிழ்வு தீவிரத்தை விட ஒரு உயர்ந்த ஆண்டை தீர்மானிக்கும் போது காரணியாகுதலின் முக்கியத்துவத்தையும் சதுர்வேதி சுட்டிக்காட்டினார். "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சி இருக்கும்போது, ​​அது ஆற்றல் மற்றும் உமிழ்வு தீவிரத்தை குறைப்பதை வெல்லும்" என்று அவர் கூறினார். "இந்தியாவைப் போல் அல்லாமல், சீனா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் தொடர்ச்சியான காலகட்டத்தைக் கொண்டிருந்தது, அது 2030 ஐ உச்ச ஆண்டாகவும் 2060 நிகர பூஜ்ஜிய ஆண்டாகவும் அறிவித்தது. அதன் வளர்ச்சி விகிதங்கள் ஏற்கனவே குறைந்து வருகின்றன. அடுத்த 10-15 ஆண்டுகளில் நாம் உச்சத்தை அடைய விரும்பினால், நமது வளர்ச்சி குறைந்த கார்பன் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட பாதையில் நடக்க வேண்டும். இந்த வழியில், நாம் விரைவில் உமிழ்வுகளின் உச்சத்தை அடைய முடியும்" என்றார்.

நிலக்கரி சார்ந்த பகுதிகளில் பாதிப்பு

உச்சநிலை ஆண்டைத் தீர்மானிப்பது, காலநிலை அபாயங்கள், உச்சநிலை ஆண்டு மற்றும் நிகர பூஜ்ஜிய ஆண்டுக்கு இடையிலான இடைவெளி, எரிசக்தி துறையில் சிக்கித் தவிக்கும் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வர்த்தக பரிமாற்றங்கள் போன்றவற்றையும் கருத்தில் கொள்ளும் என்று சதுர்வேதி கூறினார்.

உதாரணமாக, குறைந்த கார்பன் வளர்ச்சியை நோக்கி இந்தியா விரைவான மாற்றத்தைத் தேர்வுசெய்தால், அது நிலக்கரி சார்ந்த மாநிலங்களான ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா போன்றவற்றின் வருவாயைப் பாதிக்கும். இது நிலக்கரித் துறையில் வேலையில் உள்ள அரை மில்லியன் மக்களை வேலைவாய்ப்பற்றவர்களாகவும், ரயில் பயணிகள் கட்டண உயர்வுக்கும் வழிவகுக்கும் என்றும் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. நிலக்கரி சரக்கு என்பது இந்திய ரயில்வேயின் வருவாயின் முக்கிய ஆதாரமாகும், நிலக்கரி நுகர்வு குறைவதால் பயணிகளிடம் இருந்து வருவாய் இழப்பை மீட்டெடுக்க, ரயில்வே நிர்பந்திக்கக்கூடும்.

நிகர பூஜ்ஜியத்திற்கான இந்தியாவின் அணுகுமுறை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும், வெற்றிச்சின்னத்தை காட்டுவதோடு நிற்காமல், சாத்தியமான துறைகளில் மாற்றங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று கொள்கை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஒருங்கிணைந்த அரசு குழுவின் (ஆறாவது மதிப்பீடு) ஆசிரியருமான நவ்ரோஸ் துபாஷ் கூறினார்.

உமிழ்வு அதிகரித்து வரும் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, குறுகிய காலத்தில் செய்ய வேண்டியவற்றிற்கு நிகர பூஜ்ஜியம் ஒரு நல்ல வழிகாட்டியாக இல்லை. "நாம் துணிந்து உறுதிமொழி அளிக்காவிட்டால் நாம் இழக்கும் விஷயம் வெளிப்படையாக [வெறும்] இராஜதந்திர பிரவுனி புள்ளிகள். (அமெரிக்க அதிபர்) பிடென் நிர்வாகத்தின் முக்கிய கேள்வி என்னவென்றால், தயவுசெய்து தீவிரமான மற்றும் துணிச்சலான ஒன்றைச் செய்யுங்கள் என்பதாகும். நாம் தைரியமாக நினைப்பதை வரையறுப்பதே நமது பங்கு" என்று துபாஷ் கூறினார். இவற்றில் வளர்ச்சி மற்றும் தணிப்பு இரண்டையும் ஊக்குவிப்பதன் மூலம் வேகமாக மாறிவரும் முக்கியத்துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் குறைந்த கார்பன் மாற்றம் குறித்த அதன் தீவிரத்தை இந்தியா சமிக்ஞை செய்ய வேண்டும் என்றார்.

"மின்சாரம் நிச்சயமாக அந்த துறைகளில் ஒன்றாகும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும். மின்சாரத்துறையில் கார்பன் அகற்றலை துரிதப்படுத்தப் போகிறோம் என்று நாம் அடிப்படையில் சொல்லலாம், அதாவது நிலக்கரி, நமது ஆற்றல் கலவையில் அதன் எதிர்கால பங்கு மற்றும் சமூக மாற்றங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி நாம் இன்னும் தெளிவாக இருக்க வேண்டும். நிலக்கரி சார்ந்த பிராந்தியங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த உரையாடலை நாம் தொடங்க வேண்டும்," என்று துபாஷ் கூறினார்.

புதுப்பிக்கத்தக்க இலக்கு

இந்தியாவின் இருபது ஆண்டு புதுப்பிப்பு அறிக்கை (BUR) -III ஐ.நா.வின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பின் மாநாட்டில் (UNFCCC) சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உமிழ்வு தீவிரத்தில் 33-35% குறைப்பு என்ற தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்கை அடைவதற்கான பாதையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி கலவையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) இன் பங்கு அதிகரித்ததன் காரணமாக இந்த குறைப்பு ஏற்படுகிறது என்று அறிக்கை காட்டுகிறது.

இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறனில் புதைபடிவ அல்லாத எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தியின் பங்கு, 2020 நவம்பரில் 38.18% ஆக இருந்தது என்று அறிக்கை தெரிவிக்கிறது. பிப்ரவரி 28 நிலவரப்படி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஒட்டுமொத்த நிறுவப்பட்ட திறன் (பெரிய நீர் மின் திட்டங்களைத் தவிர்த்து) 92.97 ஜிகாவாட் (ஜி.டபிள்யூ) என்று, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்திக்கான மாநில அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஆர்.கே. சிங், மார்ச் 25 அன்று மக்களவை அறிக்கையில் தெரிவித்தார். மின்துறை அமைச்சின் தரவுகளின்படி, மார்ச் 14, 2021 வரை மொத்தமாக நிறுவப்பட்ட எரிசக்தி திறன் 379.13 ஜிகாவாட் ஆகும். இதன் பொருள், நாட்டின் நிறுவப்பட்ட மின் உற்பத்தியில் 24% க்கும் மேலாக, புதுப்பிக்கத்த ஆற்றல் துறை பங்களிப்பு செய்துள்ளது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் பின்னர் இந்தியாவின் சாதனைகள் அதன் குறுகிய கால இலக்குகளின் ஒரு பகுதியாக அளித்த உறுதிமொழிகளுக்கு அப்பாற்பட்டவை என்று உலக வள நிறுவனத்தை சேர்ந்த உல்கா கெல்கர் கூறினார். "450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கு சர்வதேச அளவில் செய்யப்பட்ட உறுதிமொழி அல்ல. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஆற்றல் தீவிரத்தை குறைக்கும் எங்கள் இலக்குக்கு இது பங்களிக்கிறது. காலநிலை நடவடிக்கை குறித்த முன்னேற்றங்கள் முதலில் திட்டமிடப்பட்டதை விட சிறப்பாக இருந்தன என்றும், வாக்குறுதியளிக்கப்பட்ட செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாத பல விஷயங்கள் நிகழ்ந்தன, ஆனால் நம் நடவடிக்கைகளை விரைவுபடுத்த உதவியுள்ளன என்றும் நான் கூறுவேன்," என்று கெல்கர் கூறினார்.

இப்போது முக்கியமான கேள்வி என்னவென்றால், வரையறுக்கப்பட்ட நிலம் கிடைப்பதை நாம் அதிகமாக செய்ய முடியுமா, என்று அவர் கேட்டார். "கார்பன் மூழ்கும் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், வாழ்வாதாரம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதற்காக, உணவை வளர்ப்பதற்கும், விலங்குகளை மேய்ச்சுவதற்கும், காடுகளைப் பாதுகாப்பதற்கும் நாம் நமது நிலத்தைப் பார்க்கிறோம். சூரிய சக்தி மற்றும் காற்றுக்கும் நிலம் தேவை. வெளிப்படையாக, இது கடினம் மற்றும் சில தேர்வுகள் செய்யப்பட வேண்டும். நிலம் எங்கள் விருப்பங்களுக்கு கடுமையான வரம்பை வைக்கிறது. இந்த சூழலில், அரசு செயல்முறைகள் மற்றும் ஆலோசனைகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன," என்று அவர் கூறினார்.

"இறுதியில் இலக்கை அடைய, பாரிஸ் ஒப்பந்தத்தில் எப்போதுமே இரண்டு கூறுகள் இருந்தன - குறுகிய கால இலக்குகள் (என்.டி.சி) மற்றும் டிகார்போனிசேஷனுக்கான நீண்ட கால இலக்குகள். 2050 வரை நமக்கு அவகாசம் இருக்கிறது என்று அறிவியல் சொல்கிறது. மீதமுள்ள 30 ஆண்டுகளை ஒரு நீண்ட கால திட்டத்திற்கு நாம் பயன்படுத்த வேண்டும், எனவே ஒரே இரவில் மாற்றம் இல்லாமல் நமது இலக்குகளை அடைய முடியும், "என்று அவர் மேலும் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.