புதுடெல்லி: தெற்கு குஜராத்தின் சவுராஷ்டிரா கடற்கரையை மே 17 அன்று தாக்கிய மிகக் கடுமையான சூறாவளி புயல் டவ் தே, இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பலத்த மழையை தந்தது. இதனால், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன; குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை, புயல் சேதப்படுத்தியது. புயல் கரையை கடந்த போது, குஜராத்தில் சுமார் 150,000 மக்களை வெளியேற்ற வேண்டியிருந்தது. குறைந்தது 90 பேர் புயலுக்கு இறந்தனர்.

மேற்கு கடற்கரையில் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த சேதமானது, தங்குமிடங்கள், அனைத்து வானிலைக்கும் ஏற்ற சாலைகள் மற்றும் கட்டுமானங்கள் போன்ற போதுமான பேரழிவை எதிர்கொள்ளக்கூடிய உள்கட்டமைப்பின் தேவை மீது கூரிய கவனத்தை ஈர்த்துள்ளது. எவ்வாறாயினும், இந்த உள்கட்டமைப்பை நிறுவுவது என்பது, இந்த பிராந்தியத்தில் வேகத்தை அதிகரிக்கவில்லை என்று அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மற்றும் மாநில அரசுகளால் ஜனவரி 2015 முதல் செயல்படுத்தப்படும் தேசிய புயல் அபாயத்தைக் குறைக்கும் திட்டத்தின் (NCRMP - என்.சி.ஆர்.எம்.பி) இரண்டாம் கட்டத்தை, மேற்கு கடற்கரை மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா - மற்றும் மேற்கு வங்கத்தின் கிழக்கு மாவட்டங்களில் நிறைவேற்றத் தொடங்கின. மேற்கு கடற்கரை மாநிலங்கள் எதுவும் என்.சி.ஆர்.எம்.பி.யின் கீழ் பல்நோக்கு புயல் முகாம்களைக் கட்டுவதற்கான இலக்குகளை பூர்த்தி செய்யவில்லை. குஜராத் அதன் திட்டமிட்ட தங்குமிடங்களின் இலக்குகளில் பாதிக்கும் குறைவாகவே கட்டியிருந்த நிலையில், மகாராஷ்டிரா எதையும் கட்டவில்லை. கிழக்கு கடற்கரையில் மேற்கு வங்கம், இதற்கு மாறாக, திட்டமிட்டவாறு அனைத்து தங்குமிடங்களையும் கட்டியுள்ளது. அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதற்காக, உவர்ப்பு நீர் தடுப்பு கரைகள் மற்றும் நிலத்தடி கேபிளிங் போன்ற பிற முக்கியமான உள்கட்டமைப்புகளை நிறுவுவதிலும், ஆரம்ப எச்சரிக்கை பரவல் முறைகளை உருவாக்குவதிலும் மேற்கு மாநிலங்கள் பின்தங்கியுள்ளன.

இந்தியாவின் கிழக்கில் உள்ள வங்காள விரிகுடாவை விட, அரபிக்கடல் கடற்கரையானது, வரலாற்று ரீதியாக குறைந்த அளவே புயல்களை அனுபவித்திருக்கிறது, பொதுவாக ஆண்டுக்கு ஒரு புயலை மட்டுமே காண்கிறது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும், 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நிசர்கா புயல் மகாராஷ்டிராவின் ராய்காட்டை தாக்கிய பின்னர், ஒரு வருடத்திற்குள் மேற்கு கடற்கரையில் நிலச்சரிவை ஏற்படுத்திய இரண்டாவது தீவிர புயலான, ஐஎம்டி தரவுகளின்படி, 2019 முதல் அரபிக்கடலில் உருவாகும் எட்டாவது புயல்தான் டவ் தே. ஆகவே, டவ் தே புயலானது, கடல் வெப்பமயமாக்குவதன் மூலம் அரபிக்கடலில் உருவாகும் புயல்களின் அதிர்வெண் அதிகரிப்பதற்கான சமீபத்திய சான்றுகள் மட்டுமே என்று காலநிலை மாற்ற நிபுணர்கள் கூறுகின்றனர். உலகளாவிய வெப்பம் காரணமாகவே மேற்கு கடற்கரையில் புயல்களின் தீவிரம் மற்றும் அதிர்வெண் இரண்டின் அதிகரித்துள்ளது என்று, 2018 ஆம் ஆண்டின் என்.டி.எம்.ஏ ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டமிடலுக்கு பின்னால் தணிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல்

அரபிக்கடலில் பொதுவாக வருடத்திற்கு ஒரு புயல் உருவாக்குவதைக் காண்கிறது. 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கு இடையில், அரபிக்கடலில் புயல் தொந்தரவுகள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட நான்கு ஆகவும், சூறாவளிகள் மற்றும் கடுமையான புயல்கள் சராசரியாக ஆண்டுக்கு இரண்டாகவும் அதிகரித்தன. "இது தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகும், இது அரபிக் கடலில் பருவமழைக்கு முந்தைய சூறாவளியைக் கண்டோம். இந்தியாவின் மேற்கு கடற்கரைக்கு மிக அருகில் ஒரு சூறாவளி புயல் வந்துள்ள மூன்றாவது தொடர்ச்சியான ஆண்டாகும். கடந்த நூற்றாண்டில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக உயர்ந்துள்ளது, இது அரபிக்கடலில் சூறாவளிகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது," என்று, புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனத்தின் விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.


உலக வங்கி, மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்டு வரும் என்.சி.ஆர்.எம்.பி எனப்படும் தேசிய புயல் அபாயத்தைக் குறைக்கும் திட்டம், 2011 முதல் 13 சூறாவளி பாதிப்புக்குள்ளான கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. இது பேரிடர்களில் இருந்து ஆபத்தைத் தணிப்பது தொடர்பான இரண்டு முக்கிய கூறுகளை உள்ளடக்கியது - பல்நோக்கு சூறாவளி தங்குமிடங்கள், வெளியேற்றுவதற்கான சாலைகள் மற்றும் ஆரம்ப எச்சரிக்கை பரவல் அமைப்புகளின் வளர்ச்சி போன்ற உடல் உள்கட்டமைப்பை உருவாக்குகிறது. 2011 முதல் 2018 வரையிலான முதலாம் கட்டம், வங்காள விரிகுடாவில் ஆந்திரா மற்றும் ஒடிசாவை உள்ளடக்கி இருந்தது. மேற்கு அரபிக்கடல் கடற்கரையில் -- குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா -- மற்றும் கிழக்கில் மேற்கு வங்காளத்தை உள்ளடக்கிய அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்த திட்டம், தற்போது அதன் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. முன்னதாக மார்ச் 2021 க்குள் முடிக்க திட்டமிடப்பட்ட இந்த திட்டம், பின்னர் செப்டம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள தமிழ்நாடு என்.சி.ஆர்.எம்.பி. திட்டத்தில் இருந்தாலும், இது கடற்கரையோர இயற்கை பேரிடர்களை தணிக்க, உலக வங்கி நிதி உதவியுடன், 2013 முதல் கடலோர பேரிடர் அபாயக் குறைப்பு திட்டத்தை (CDRRP - சி.டி.ஆர்.ஆர்.பி) செயல்படுத்தி உள்ளது. சி.டி.ஆர்.ஆர்.பியின் கீழ், அரசு முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை நிறுவி, 121 பல்நோக்கு வெளியேற்றும் முகாம்களைக் கட்டியுள்ளது.

பல்நோக்கு புயல் முகாம்கள் (MPCS - எம்.பி.சி.எஸ்) என்பது அதிவேக காற்று மற்றும் வெள்ளத்திற்கு எதிரான முதல் வரியாகும் என்று என்.டி.எம்.ஏ தெரிவித்துள்ளது. மேற்கு கடற்கரையில் உள்ள எந்த மாநிலங்களும் எம்.பி.சி.எஸ் கட்டமைப்பதற்கான என்.சி.ஆர்.எம்.பி.யின் கீழ் அந்தந்த இலக்குகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை தரவு காட்டுகிறது. மூன்று கிழக்கு மாநிலங்களான ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகியன, திட்டமிட்ட அனைத்து தங்குமிடங்களையும் கட்டியுள்ளன.


டவ் தே புயலின் அதிகபட்ச சீற்றத்திற்கு ஆளான குஜராத் மாநிலம், 76 எம்.பி.சி.எஸ்ஸை உருவாக்கவிருக்கிறது, ஆனால் பாதிக்கும் குறைவானதை மட்டுமே முழுமையாக நிறைவு அடைந்திருக்கிறது, 42 இன்னும் கட்டுமான அளவிலேயே உள்ளன.

குஜராத்தின் செயல்திறன், அண்டை நாடான மகாராஷ்டிராவை விட சிறந்தது, மகாராஷ்டிராவில் என்.சி.ஆர்.எம்.பி.யின் கீழ் திட்டமிடப்பட்ட 11 க்கு எதிராக ஒரு தங்குமிடம் கூட கட்டப்படவில்லை. 2020 ஜூன் மாதத்தில் உருவான நிசர்கா புயலால், மகாராஷ்டிராவில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். ஆரம்பத்தில் ஏலம் பெறப்படாததால் தங்குமிடங்களுக்கான டெண்டர்களை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று, மகாராஷ்டிரா அரசு அதிகாரி ஒருவர் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். மேலும் அரசு இப்போது கூடுதல் நிதியுதவியைத் தேடும் மற்றும் விரைவில் பணிக்கான ஆணைகளை வழங்கும்.

கோவாவில், 12 புயல் பாதுகாப்பு தங்குமிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஒன்று மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. கோவாவில் எம்.பி.சி.எஸ் பணிகள் தாமதமாகிவிட்டன, வழங்கப்பட்ட 10 ஒப்பந்தங்களில் மூன்று செயல்திறன் இல்லாததால் நிறுத்தப்பட்டன, மேலும் அவை மீண்டும் டெண்டர் செய்யப்பட வேண்டும் என்று திட்ட அமலாக்கம் குறித்த உலக வங்கி ஆய்வு 2019 இல் குறிப்பிட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டில், ஒக்கி புயலின் போது மீனவர்களின் பெரும் உயிர் இழப்பைக் கண்ட கேரளா, திட்டமிட்ட 17 எம்.பி.சி.எஸ்ஸில் ஏழை மட்டுமே நிறைவு செய்துள்ளது.

ஏற்கனவே திட்டமிடப்பட்ட 11 இல் எட்டு கட்டப்பட்ட நிலையில், கர்நாடகா தங்குமிடம் கட்டுவதற்கான இலக்குகளை பூர்த்தி செய்வதற்கு மிக நெருக்கமாக இருந்தது. "கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் முகாம்களின் வடிவமைப்பில் சில சிக்கல்கள் காரணமாக எங்கள் இலக்கை நிறைவு செய்வதில் தாமதங்களை எதிர்கொண்டோம். கடைசி இரண்டு முகாம்களும் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று, கர்நாடகாவின் என்.சி.ஆர்.எம்.பி., திட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் பூஜாரி, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். கர்நாடகாவில், உலக வங்கி மதிப்பாய்வு ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுப்பதில் கடும் தாமதங்கள் குறித்து ஒரு குறிப்பை வெளியிட்டது.


விவசாய வயல்களில் கடலில் உவர்ப்பு நீர் சேருவதைத் தடுக்கும் வகையிலான உவர்நீர் தடுப்பு கரைகள் கட்டுமானத்தை மாநிலங்கள் இன்னும் முடிக்கவில்லை. நிலம் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக கோவாவில் பணிகள் முடங்கி உள்ளன, மகாராஷ்டிரா திட்ட மேம்பாட்டு ஆவணங்களை பூர்த்தி செய்திருந்தது, கேரளாவில் 22 கி.மீட்டருக்கு உவர் நீர் தடுப்பு கரைகள் கட்டப்பட்டிருந்ததாக, உலக வங்கி மதிப்பீடு தெரிவித்தது.

கோவா, மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் என்.சி.ஆர்.எம்.பி திட்டத்தின் ஒரு பகுதியாக மின் கம்பங்கள் விழுவது போன்ற புயலால் ஏற்படும் ஆபத்துகளை தடுக்க, நிலத்தடியில் மின்சார கேபிள் பதிக்கப்படுகிறது. கோவாவில், 98 கி.மீ.க்கு மேல் நிலத்தடி கேபிள்களை இடுவதற்கான பணிகளில் 80% நிறைவடைந்துள்ளன, மேலும் 20% செயல்பாட்டில் உள்ளதாக தரவு காட்டுகிறது. மகாராஷ்டிராவில், கடலோர பால்கர், ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் திட்டமிடப்பட்ட 471 கி.மீ நிலத்தடி கேபிள் பதிப்பில், 144 கி.மீட்டர் நீள பணிகளே முடிந்தன; 327 கி.மீ (69%) பணிகள் நிலுவையில் உள்ளன.

அதேநேரம், மேற்கு வங்கம் திட்டமிட்ட 500 கி.மீ தூர நிலத்தடி கேபிள் பதிப்பு பணியில் 472.46 கி.மீ பணிகளை நிறைவு செய்துள்ளது. 27.54 கி.மீ மட்டுமே இன்னும் நிலுவையில் உள்ளது.


இது என்.சி.ஆர்.எம்.பி.யின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள கேபிளிங் பணிகளின் முன்னேற்றம் மட்டுமே. இந்த திட்டங்கள் போதுமானதா என்பது கோவாவின் சில பகுதிகளில் மின் விநியோகத்தை மீட்டெடுப்பதில் பல நாட்கள் தாமதமானதால், சந்தேகம் எழுந்துள்ளது, டவ் தே புயலால் மின் கம்பங்கள் சரிந்து வீழ்ந்த பின்னர், கம்பிகள் சேதம், மின்மாற்றிகள் நாசமடைந்தன. நிலத்தடி கேபிளிங்கைக் கொண்டிருந்த கோவாவின் சில பகுதிகளில் மின்சாரம் விரைவாக மீட்டெடுக்கப்பட்டாலும், மாநிலத்தில் புயலை தொடர்ந்து ஏற்பட்ட பலத்த மழையால் மூன்று நாட்களுக்குப் பிறகு, மே 19 அன்று பல பகுதிகளில் மின்சாரம், புயலுக்கு முந்தைய நிலைகளை எட்டவில்லை. இதற்கிடையில், ஆக்சிஜன் சிலிண்டர் தேவையுடன் உள்ள கோவிட் -19 நோயாளிகளுக்கு, மின்சாரம் தடைபடாமல் இருக்க ஜெனரேட்டர்கள் தேவை குறித்து, அந்த குடும்பங்கள் சார்பாக, சமூக வலைதளங்களில் மின்சார தேவை குறித்த தகவல்களை கோவாவாசிகள் பதிவுகளை வெளியிட்டனர்.

உலக வங்கி மதிப்பீட்டின்படி, சில மாநிலங்களில் வெளியேற்றுவதற்கான பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை செய்தல் அமைப்புக்கான பணிகளையும் நிலுவையில் வைத்துள்ளன.

"மோசமான வானிலை, உள்ளூர் -- நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ளம், நிலச்சரிவுகள் உட்பட-- களச்சூழல், நிலம் கிடைப்பது, திட்டத்திற்கு நிலம் கையகப் பரிமாற்றம், ஏலம் / ஏலதாரர்கள் பங்கேற்காததால் மீண்டும் ஏலம் விடுதல், மற்றும் பல காரணங்களால் செயல்படுத்தல் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. கோவிட் -19 தொற்று பரவலின்போது (மார்ச் 2020 ஊரடங்கில் இருந்து) பணிக்கு யாரும் கிடைக்காதது போன்றவற்றால் தாமதமாகி இருக்கின்றன," என்று உலக வங்கி செய்தித் தொடர்பாளர், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "தாமதங்களுக்காக காரணங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன, அதாவது திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து முதலீடுகளும் 2022 ஆம் ஆண்டில் திட்டத்தின் முடிவிற்கு முன்பே முடிக்கப்படுகின்றன" என்றார்.

என்.சி.ஆர்.எம்.பி செயல்படுத்தல் தொடர்பாக இந்தியாஸ்பென்ட் என்.டி.எம்.ஏ மற்றும் அதன் திட்ட பொறுப்பான என்.சி.ஆர்.எம்.பி. தரப்பில் விளக்கம் கேட்டுள்ளது; அவர்களிடம் இருந்து பதில் கிடைத்தால், இக்கட்டுரையை நாங்கள் புதுப்பிப்போம்.

என்.சி.ஆர்.எம்.பி என்பது புயல் ஆயத்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான திட்டமாகும், மேலும் இது அரபிக்கடலில் சமீபத்திய புயல்களின் வரவால், புதுப்பிக்கப்படுவதில் அதிக கவனம் தேவை என்று, டெல்லியைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) புரோகிராம் லீட் அபினாஷ் மொஹந்தி, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். மைக்ரோ-லெவல் காலநிலை இடர் மதிப்பீடுகள் மற்றும் பாதிப்பு அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் ஆகியன, தேவைப்படும் முன்னெச்சரிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்குவதாக அவர் கூறினார். "புயல்கள் பல ஆபத்து நிகழ்வுகளை ஏற்படுத்துகின்றன, மேலும் புயல்களின் அதிவிரைவான தீவிரத்திற்கு முன்பாக, பதில் நடவடிக்கைக்கான நேரத்தின் சாளரம் சிறியது என்பதை நாங்கள் கண்டோம். இதனால், தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஆரம்ப எச்சரிக்கை முறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

காலநிலை அறிவியல் கண்டுபிடிப்புகளை உள்ளூர் செயல் திட்டங்களில் இணைப்பது மற்றும் காலநிலை-நெகிழக்கூடிய உள்கட்டமைப்பைக் கருத்தில் கொள்வது முக்கியம் என்று சர்வதேச காலநிலை நடவடிக்கை வலையமைப்பின் மூத்த ஆலோசகர் ஹர்ஜீத் சிங் கூறினார். "கடல் மட்ட உயர்வு மற்றும் புயல் தொடர்பான தாக்கங்களை நாம் கவனிக்கிறோமா? கிடைக்கக்கூடிய அறிவியல் தரவுகளின் அடிப்படையில், தற்போதுள்ள கட்டிடங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும். புயல்களை தொடர்ந்து ஏற்படும் வெள்ளத்தால் ஏற்படும் சுகாதார மற்றும் பொது சுகாதார பிரச்சினைகளுக்கு நாம் எவ்வாறு தயாராகி வருகிறோம்? இந்த தாக்கங்களுக்குத் தயாராவது மிகவும் முக்கியமானது, குறிப்பாக சமூக மட்டத்தில்," என்று, இந்தியாஸ்பெண்டிடம் சிங் தெரிவித்தார்.

இதை மொஹந்தி ஒப்புக்கொண்டார். "சமூக அடிப்படையிலான தகவமைப்பு திறன்களை உருவாக்குவது முக்கியம், அதற்காக நமக்கு ஒருங்கிணைந்த நடவடிக்கை அமைப்பு தேவை. புகுஷிமா பேரழிவு ஏற்பட்டபோது, ​​குடிமக்கள் உட்பட அனைவருக்கும் அவர்களின் பங்கு தெரியும். சமூக மட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்புகள் நம்மிடம் இல்லை,"என்றார் மொஹந்தி.

புயல் முகாம்களின் பயன்பாட்டை மதிப்பீடு செய்தல்

கடந்த 2013 ஆம் ஆண்டில், ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பைலின் புயல், நிலச்சரிவை ஏற்படுத்துவதற்கு முன்பு, மாவட்டத்திலிருந்து 1,80,000 பேர் வெளியேற்றப்பட்டனர். 1999 ஒடிசா சூப்பர் புயலுக்கு பிறகு இந்திய கடற்கரையை கடந்த மிகத்தீவிரமான புயல், பைலின் ஆகும்.

புயலின் போது ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதில் புயல்கால தங்குமிடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றாலும், இந்த கட்டமைப்புகளின் பயன்பாடு மற்றும் உண்மையான கட்டமைப்பு பாதுகாப்பு, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு அருகாமையில் இருந்து அடிப்படை வசதிகள் மற்றும் உரிமையாளர் பிரச்சினைகள் வரை பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது என்று, டிசம்பர் 2020 ஆய்வில் கண்டறியப்பட்டது. ஒடிசா மற்றும் ஆந்திராவில் புயலால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட மக்களின் நேர்காணல்களின் அடிப்படையில், பைலின், டிட்லி, ஹுதுத் மற்றும் ஃபானி ஆகிய நான்கு சூறாவளிகளின்போது வகித்த பல்வேறு வகையான முகாம்களை ஆய்வு மதிப்பீடு செய்தது.

தங்குமிடங்களாக பயன்படுத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற பொது கட்டிடங்களை விட மக்கள் குறிப்பாக, புயல் முகாம்களை விரும்பவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புயலின் போது ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தின் சத்ராபூர் ஒன்றியத்தில், ஒரு புயல்கால தங்குமிடத்தில் தங்கியிருந்த, நேர்காணலில் பங்கேற்றவர்களில் சிலர், தங்கவைக்கப்பட்டுள்ள மண்டபத்தை சுற்றிலும் மழை நீர் தேங்கியதாகவும், புயலின் தாக்கத்தை கட்டிடத்தில் உணர முடிந்ததாகவும் கூறினார்.

புயலாலும், அலையாலும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் பல்நோக்கு சூறாவளி முகாம்களைப் பயன்படுத்துவது பற்றி மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று ஆய்வு பரிந்துரைத்தது. "பள்ளி, சமுதாயக்கூடங்கள் போன்ற பொது கட்டிடங்களாக எம்.பி.சி.எஸ் பயன்படுத்துவது, புயல் காலத்திற்கு அப்பால் அதன் செயல்பாட்டில் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் புயலின் போது (sic) போதுமான பாதுகாப்பை வழங்குவதில் இது சாத்தியமானதாக இருக்க வேண்டும்" என்று ஆய்வு, அதன் முடிவில் குறிப்பிட்டது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.