சண்டிகர்: இந்தியாவில் அதிக செலவு செய்யும் குடும்பங்களில் முதல் 20% குடும்பங்கள், ஒருநாளைக்கு 1.9 டாலருக்கும் (தற்போதைய மாற்று விகிதத்தில் ரூ.140) குறைவாக செலவழிக்கும் ஏழைகளைவிட, ஏழு மடங்கு உமிழ்வுகளுக்கு காரணம் என்று ஜப்பானை சேர்ந்த மனிதநேயம் மற்றும் இயற்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஒவ்வொரு இந்தியரின் சராசரி கார்பன் தடம், ஆண்டுக்கு 0.56 டன் என மதிப்பிடப்பட்டுள்ளது - இது ஏழைகள் தனிநபர் மத்தியில் 0.19 டன் மற்றும் பணக்காரர்களுக்கு இடையே 1.32 டன் ஆகும்.

கார்பன் உமிழ்வில் உலகளாவிய பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் இருந்து வெளியேறும் உமிழ்வு அளவு 2.46 பில்லியன் மெட்ரிக் டன், அதாவது உலகளாவிய மொத்த உமிழ்வில் 6.8% ஆகும். இருப்பினும், இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு, அமெரிக்காவின் 16.21 டன்னுடன் ஒப்பிடும்போது இதுவரை குறைவாக 1.84 டன்னாகவே உள்ளது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பின் (NSSO) 2013 கணக்கெடுப்பில் இருந்து, வீட்டுச்செலவின தரவுகளை உலகளாவிய வழங்கல் தொடர்பான தரவு சங்கிலியுடன் இணைக்கும் ஆய்வின்படி, சமூக பொருளாதாரக்குழுக்களில் இந்தியாவில் அதிக உமிழ்வைக் கொண்டிருக்கும் இரண்டு பகுதிகள் உணவு மற்றும் மின்சாரம் ஆகும். பணக்காரர்கள் இடையே, பிற அதிக உமிழ்வு ஏற்படுத்தும் செலவுகள் தனியார் போக்குவரத்து, நீடித்த பொருட்கள் மற்றும் தானியங்கள் அல்லாத உணவுப் பொருட்களுடன் தொடர்புடையவை, இதுபற்றி பின்னர் நாம் விவரிக்கிறோம்.

ஆய்வில், வீட்டு கார்பன் கால்தடங்களில் பரவலான மாறுபாடு குறைந்த மற்றும் நடுத்தர செலவின வீடுகளுக்கு இடையில் அல்லாமல், அதிக மற்றும் மிக அதிகம் செலவு செய்யும் வீடுகளுக்கு இடையே காணப்படுகிறது.

வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள், மக்கள்தொகையில் 20%-ஐ குறைந்த செலவின வகைக்கு நகர்த்த முற்படுகின்றன, இதனால் கார்பன் உமிழ்வில் 1.97% மட்டுமே உயரும், இது ஏழை சார்பு வளர்ச்சி சிறிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் குறிக்கிறது என, ஆய்வு முடிவு செய்தது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் அதன் பணக்கார மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்திற்கு தொடர்ந்து உதவினால், இது உண்மையல்ல: அதன் நடுத்தர செலவின குடும்பங்களை அதிக செலவுக் குழுவிற்கு நகர்த்தினால் கார்பன் வெளியேற்றம் 10% அதிகரிக்கும். எல்லா இந்தியர்களும் பணக்காரர்களைப் போலவே நுகரத் தொடங்கினால், கிட்டத்தட்ட 50% உமிழ்வு அதிகரிக்கும்.

தேசிய அளவில் காலநிலை நெருக்கடியைக் கட்டுப்படுத்த, இந்தியா ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரை அதிக செலவு என்ற அடைப்புக்குறிக்குள் செல்ல அனுமதித்தால், உணவு மற்றும் எரிசக்தி பயன்பாடு குறித்த அதன் கொள்கைகளை மறுசீரமைப்பதன் மூலம், உமிழ்வுகளில் ஏற்படக்கூடிய பரவலை இந்தியா கட்டுப்படுத்த முடியும்.

"பணக்கார இந்தியர்கள் எல்லா வகையான பொருட்களையும் அதிகமாக உட்கொள்கிறார்கள், எனவே ஒரு பெரிய கார்பன் தடம் உள்ளது என்று ஆய்வு காட்டுகிறது. மறுபுறம், ஏழைகள் மிகக் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள், ஆனால் வெப்ப அலைகள், சூறாவளிகள், வெள்ளம் மற்றும் பிற தீவிர வானிலை நிகழ்வுகளின் வடிவத்தில் இருந்தாலும் காலநிலை நெருக்கடியின் அதிகபட்ச பாதிப்பை அவர்கள் தாங்குகிறார்கள், " என்று, இந்தியாவின் உலக வள நிறுவனத்தின் காலநிலை திட்ட இயக்குநர் உல்கா கெல்கர் கூறினார்.

இந்த ஆய்வானது, 623 மாவட்டங்கள் மற்றும் 203,313 வீடுகளில் உள்ள நுகர்வுத் தரவைப் பயன்படுத்தி, கார்பன் தடம் குறித்த முதலாவது நாடு தழுவிய, பிராந்திய மற்றும் வகுப்பு சார்ந்த மதிப்பீட்டை முன்வைக்கிறது. இருப்பினும், இது அரசுகள் மற்றும் வணிகங்களின் உமிழ்வை உள்ளடக்குவதில்லை.

பணக்காரர்களுக்கு கார்கள், ஏழைகளுக்கு சோப்புகள்

இந்தியா மீதான கண்டுபிடிப்புகள், உலகளாவிய ஆராய்ச்சியின் முந்தைய முடிவுகளுக்கு ஏற்ப உள்ளன - 1990 மற்றும் 2015ஆம் ஆண்டுக்கு இடையில், உலக மக்கள்தொகையில் 1% பணக்காரர்கள், மனிதகுலத்தின் ஏழ்மையில் பாதியை உருவாக்கும் 31 லட்சம் மக்களை விட, கார்பன் மாசுபாட்டிற்கு இரு மடங்கிற்கும் அதிக காரணமாக இருந்தனர்.

இந்தியாவின் குறைந்த மற்றும் நடுத்தர அளவிலான செலவின வீடுகளில், கார்பன் தடம் முதன்மையாக மின்சாரம் (0.19 டன் / தலா), உணவு (0.12 டன் / தலா) மற்றும் நுகர்பொருட்கள் (0.07 டன் / தலா) ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.

சவர்க்காரம், சோப்புகள் மற்றும் ஆடை போன்ற நுகர்வோர் பணக்காரர்களைக் காட்டிலும் குறைந்த செலவு வீடுகளில் அதிக கார்பன் கால்தடங்களை செலுத்தினர், இது மொத்த உமிழ்வில் 17% ஆகும். நீடித்த பொருட்களுக்கான அதிக தேவை (8.3%) மற்றும் தனியார் போக்குவரத்து (7.2%) ஆகியவை உமிழ்வை ஏற்படுத்தும் காரணிகளின் பட்டியலை மற்றவர்களை விட அதிக செலவு செய்யும் வீடுகளில் அதிகம் வழிநடத்தியது.

ஆற்றல் மற்றும் உணவு - மிகப்பெரிய உமிழ்ப்பான் குழுக்கள்

மின்சார நுகர்வு அனைத்து சமூக-பொருளாதார குழுக்களிலும் அதிகபட்ச வீட்டு கார்பன் உமிழ்வை ஏற்படுத்தியது, குறைந்த கணக்கிடப்பட்ட வீடுகளில் 26% முதல், பணக்காரர்களிடையே 36% வரை என்று கணக்கிடப்பட்ட ஆய்வு தெரிவித்தது. கல்வி, எரிவாயு, மருத்துவப் பராமரிப்பு மற்றும் எரிபொருள், சாணம் மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பிற ஆற்றலுக்காக செலவழிப்பதன் மூலம், மிகக் குறைந்த வசதியுள்ள வீடுகளில் உமிழ்வு ஏற்பட்டது.

நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை நம்பியிருப்பதால், இந்தியாவின் கார்பன் வெளியேற்றத்திற்கு மின்சாரம் மிகப்பெரிய இயக்கியாகும்: இந்தியாவின் மின்சார உற்பத்தியில் நிலக்கரி 74% பங்கு ஆகும், இது நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் மூன்றில் ஒரு பங்காகும்.

கார்பன் உமிழ்வின் இரண்டாவது பெரிய இயக்கியாக இருப்பது உணவு. ஆனால் ஆய்வின் படி நுகர்வு முறைகள் பெரிதும் வேறுபடுகின்றன. குறைந்த மற்றும் நடுத்தர செலவின குடும்பங்கள் பெரும்பாலும் தானியங்களை (41-49%) நம்பியிருந்தாலும், பணக்காரர்கள் தங்கள் உணவுக்கூடையில் 28.7% தானியங்களை மட்டுமே காட்டினர். குறைந்த செலவின வீடுகளில் விலங்கு சார்ந்த பொருட்கள், ஆல்கஹால், பிற பானங்கள், தின்பண்டங்கள் மற்றும் உணவகங்களுக்காகவும், பழத்திற்குமாகும் செலவைவிட பணக்கார இந்தியர்கள் மூன்று மடங்கு அதிகமாகவும் செலவிடுகிறார்கள்.

பயிர்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்ட விவசாயம் 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 22% பங்கிற்கு வழிவகுத்தது. உணவுப் பொருட்கள் தொடர்பான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் சுமார் 87%, உற்பத்தியின் போது நிகழ்கிறது, அதைத் தொடர்ந்து தயாரிப்பு (10%), செயலாக்கம் (2%) மற்றும் போக்குவரத்து (1%) ஆகியன பங்கு வகிப்பதாக, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) 2010 இல் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உரங்களை உற்பத்தி செய்யும் போது உமிழ்வுகளில் 44% உரம் உற்பத்தி மற்றும் பயன்பாடு, மற்றும் நீர்ப்பாசனம் & இயந்திரங்கள் முறையே 38% மற்றும் 18% என்ற விகிதத்தை கொண்டிருப்பதாக, 2019 ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் விவசாய பயன்பாட்டிற்கான மின்சார நுகர்வு ஆண்டுக்கு 200,000 ஜிகாவாட் மணி நேரத்திற்கு மேல் இருந்தது, இது மொத்த தேசிய நுகர்வுகளில் 18% ஆகும்.

ஆட்டிறைச்சி உள்ளிட்டவை அடங்கிய அசைவ உணவு அதிக அளவு பசுமை இல்ல வாயு உமிழ்வை ஏற்படுத்தியது (980 கிராம் CO2-க்கு சமம்), அடுத்து, (இந்தியாவில் மிகவும் பொதுவான தினசரி உணவான) பாலில் 700 கிராம் கார்பன் உள்ளதாக ஐ.ஏ.ஆர்.ஐ ஆய்வு தெரிவிக்கிறது. காய்கறிகள் மற்றும் கோழிகள் அல்லது முட்டைகளை கொண்ட உணவுகள் 653 கிராம் கார்பனை கொண்டு, மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன; சைவ உணவுகளில் 544 கிராம் கார்பன் என்று, மிகக்குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றன.

அரிசி மற்றும் கோதுமை அதிக நீர்ப்பாசனத் தேவைகள் இருப்பதால், அதிக ஆற்றல் கொண்ட தானியங்களாக இருந்தன.

கிழக்கை விட அதிகமாக உமிழும் மேற்கு, சமூகங்களும் வேறுபடுகின்றன

கார்பன் உமிழ்வு கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் பரவலாக வேறுபடுகிறது. மும்பை, புதுடெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற மெகா நகரங்கள் கார்பன் கால்தடங்களை, தேசிய தனிநபர் சராசரியான 0.56 டன்னுக்கு மேல் காட்டியுள்ளன. இதற்கான தரவரிசையில் 2.04 டன்களுடன் குருக்ராம் முதலிடத்தில் உள்ளது, இது ஒடிசாவின் மத்திய மாவட்டமான பவுத் வெளியேற்றும் கார்பன் அளவைவிட 10 மடங்கு அதிகமாக உள்ளது. பவுத் மாவட்டம், மிகக் குறைந்த கார்பன் தடம் 0.21 டன்னாக இருப்பதாக தெரிவித்தது.

கிழக்கை விட மேற்கு இந்தியாவில் பெரிய கார்பன் தடம் அதிகமாக இருந்தது, உள்நாட்டுப் பகுதிகள் கடலோரப்பகுதிகளை விட சிறப்பாக செயல்பட்டன. "வித்தியாசம் என்னவென்றால், கடற்கரைகளில் அமைந்துள்ள பெரிய நகரங்கள் மற்றும் கேரளா போன்ற ஒரு மாநிலம் உள்நாட்டுப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் வளர்ச்சியைக் கொண்டுள்ளன" என்று கெல்கர் கூறினார்.

வீட்டு கார்பன் தடத்தை பொருத்தவரை, சமூகங்களுக்கு இடையே வேறுபாடு இருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முக்கிய மதக் குழுக்களில், சீக்கிய மற்றும் புத்த குடும்பங்கள் முறையே 0.69 டன் மற்றும் 0.62 டன்னாக தனிநபர் சராசரி கார்பன் தடத்தை வைத்திருந்தன. அடுத்து கிறிஸ்தவ குடும்பங்கள் (0.58 டன்), இந்துக்கள் (0.56 டன்) மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் (0.53 டன்). பணக்காரர்களில், சீக்கிய குடும்பங்களில் மிக உயர்ந்த தடம் இருந்தது, அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ வீடுகளும் இருந்தன.

சராசரியாக, பவுத்தர்கள் மொத்த உணவு கூடைக்கு ஒப்பீட்டளவில் குறைவாகவே செலவழித்திருந்தாலும், விலங்கு பொருட்களுக்காக பவுத்தர்கள் மிகக்குறைவாகவும், சீக்கியர்கள் அதிகமாகவும் செலவிட்டனர். முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பால் மற்றும் இறைச்சி பொருட்களுக்கு சம பங்கை செலவிட்டனர்; இந்துக்கள் மற்றும் சமணர்கள் முக்கியமாக பால் பொருட்களை உட்கொண்டனர்.

சமூகங்களிடையே மின்சாரம் மற்றும் போக்குவரத்தைப் பயன்படுத்துவதில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருந்துள்ளன: சீக்கிய குடும்பங்கள் மின்சாரம் மற்றும் போக்குவரத்துக்கு அதிக செலவு செய்ய முனைகின்றன. இந்தியாவில் எந்தவொரு மதக் குழுவினரின் போக்குவரத்திலும் கிறிஸ்தவர்கள் அதிக செலவு செய்தாலும், சீக்கியர்கள் தனியார் போக்குவரத்திற்கு அதிக செலவு செய்கிறார்கள், அவர்களின் சராசரி தனிநபர் கார்பன் தடம் 0.03 டன் அதிகரிக்கும்.

ஆற்றல், உணவு கொள்கை ஆகியவற்றில் தேவையான மாற்றங்கள்

நிலக்கரியை வெளியேற்றுவது, புதுப்பிக்கத்தக்கவற்றில் முதலீடு செய்வது மற்றும் உணவு மற்றும் பிற நுகர்பொருட்களின் ஆற்றல் திறனுள்ள உற்பத்தியை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலம், இந்தியா தனது கார்பன் உமிழ்வைக் குறைக்க முடியும் என்று ஆய்வு பரிந்துரைத்துள்ளது. இந்தியா ஏற்கனவே அதன் மொத்த ஆற்றல் கலவையில் புதைபடிவம் அல்லாத எரிபொருள் ஆற்றலின் பங்கை 2030ம் ஆண்டுக்குள் 40% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளது.

பொருளாதார வளர்ச்சியானது அதிக நடுத்தர வர்க்க இந்தியர்களை அதிக வருவாய் வகைக்கு நகர்த்தினால், இந்தியா பொது போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் கார்பன் நட்பு நுகர்வு நிர்வகிக்க பொருட்கள் மற்றும் சேவைகளின் கார்பன் விலையை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆனால் கார்பன் விலை நிர்ணயம், கார்பன் உமிழ்வில் அதிக மதிப்பெண் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி அல்லது செஸ் ஆகியன, இந்தியச்சூழலில் ஒரு தந்திரமான கருத்தாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். "பல நாடுகள் பல ஆண்டுகளாக இந்த யோசனையுடன் விளையாடுகின்றன, ஆனால் வரி விதிக்கப்படுவது சரியாகச் செய்யாவிட்டால் ஏழைகளுக்கு சுமையை ஏற்படுத்தும் என்ற கவலை உள்ளது," என்று, காலநிலை நெருக்கடிகள் குறித்த தெற்காசிய மக்கள் நடவடிக்கை (SAPACC) அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுமியா தத்தா தெரிவித்தார். இது, காலநிலை கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் செல்வாக்கு செலுத்துவதிலும் கவனம் செலுத்திய அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் அமைப்பாகும். "உதாரணமாக, இந்தியா கடந்த சில ஆண்டுகளாக டீசல் மீதான வரியை அதிகரித்து வருகிறது, ஆனால் இது ஒரு பணக்கார எஸ்யூவி உரிமையாளரை விட நீர்ப்பாசன பம்பை இயக்க எரிபொருளை சார்ந்திருக்கும் சிறு விவசாயிக்கு தீங்கை விளைவிக்கிறது. கார்பன் விலை நிர்ணயத்தில் கவனம் செலுத்துவது மற்றும் தடைசெய்யப்பட்டால் மட்டுமே இது சரியாக வேலை செய்ய முடியும். கார்களுக்கு ரூ.25,000 வரி விதிப்பது மக்களை வாங்குவதைத் தடுக்காது. ரூ.2 லட்சம் வரி தடைசெய்யக்கூடியது, ஆனால் அரசியல் நிர்பந்தங்களால் அது சாத்தியமில்லை" என்றார்.

ஆற்றல் நுகர்வு காரணமாக உமிழ்வை இந்தியா எவ்வாறு கொண்டிருக்க முடியும்? "வீட்டில் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பல வாய்ப்புகள் உள்ளன. உணவு தொடர்பான போக்குவரத்து உமிழ்வு அவ்வளவு பெரியதல்ல, ஆனால் உணவு தொடர்பான உமிழ்வைக் குறைக்க உணவு மாற்றம், குறைந்த வீண்டிப்பு மற்றும் குறைந்த கார்பன்-தீவிர உற்பத்தி ஆகியவை முக்கியமானவை, " என்று ஆய்வின் முதல் எழுத்தாளர் ஜெமியுங் லீ, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

குடும்பங்களில் தினை போன்ற தானியங்கள் மற்றும் கீரை வகை காய்கறிகளை தங்கள் உணவுகளில் சேர்த்தால், இந்தியாவின் விவசாய பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் 25% வரை குறையக்கூடும், இது ஊட்டச்சத்து குறைபாடுகளை எதிர்த்துப் போராட உதவும் ஒரு மாற்றம் என்று, கொலம்பியா பல்கலைக்கழகம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அப்ளைடு சிஸ்டம்ஸ் அனாலிசிஸ், இந்திய பொது சுகாதார நிறுவனம் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் 2018 ஆய்வுரை கண்டறிந்தது.

கடந்த 1960களில் பசுமைப் புரட்சி வந்ததில் இருந்து, இந்திய அரசு அதிக மகசூல் தரக்கூடிய ஆனால் குறைந்த ஊட்டச்சத்து கொண்ட கோதுமை மற்றும் அரிசியை ஊக்குவித்து வருகிறது, இது நாம் முன்பு கூறியது போல் அதிக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுகிறது. இந்த மாற்றம், குறைந்த கார்பன் தடம் கொண்ட அதிக சத்தான உள்நாட்டு வகை தானியங்களின் விலையில் வந்தது. எனவே, அரிசியில் இருந்து கோதுமை, மக்காச்சோளம், பஜ்ரா மற்றும் ராகிக்கு மாறுவதன் மூலம் உமிழ்வு குறைப்புகளை அடைய முடியும்; மற்றும் மாட்டிறைச்சி, முட்டை ஆகியவற்றில் இருந்து கோழி மற்றும் பருப்பு வகைகளுக்கு மாறுவதால் அடையலாம் என்று ஆய்வு கூறியது.

"பணக்கார மற்றும் உயர் நடுத்தர வர்க்கங்கள் கவர்ச்சியான, இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் ஆற்றல் மிகுந்த உணவுப் பொருட்களுக்கு பதிலாக, தினை போன்ற காலநிலை நட்புக்குரிய பயிர்களுக்கு மாற வேண்டும். உணவு விரயத்தை குறைப்பது மற்றும் நமது காலநிலை, மண் மற்றும் நீர் ஆகியவற்றிற்கு ஏற்ற உணவை வாங்குவது நமது இயற்கை வளங்களில் நுகர்வு பழக்கத்தின் மோசமான தாக்கத்தை குறைக்க உதவும் "என்று கேல்கர் கூறினார்.

ஆய்வின் வரம்புகள்

இந்தியாவின் பெரிய முறைசாரா பொருளாதாரம், நுகர்வு மற்றும் கார்பன் உமிழ்வு குறித்த விரிவான தரவுத்தொகுப்பை உருவாக்க அனுமதிக்காது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

"முறையான அமைப்புகள் வழியாக செல்லும் விஷயங்களை மட்டுமே தரவுகளில் கண்டறிய முடியும். இதனால்தான் எரிபொருள் அல்லது உயிரி பயன்பாட்டின் கார்பன் தடம் கணக்கிடுவது என்பது கடினமாக உள்ளது, ஏனெனில் இது பெரும்பாலும் முறைசாரா முறையில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது, " என்று, அசோகா டிரஸ்ட் ஃபார் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய காலநிலை பள்ளியான டெர்ரா.டு (Terra.do) பயிற்றுவிப்பாளரான சவுமியாஜித் பார் கூறினார்.

"வரம்புகள் இருந்தபோதிலும், ஆய்வு உண்மையான தோற்றத்திற்கான பதிலி ஆகும். இது சரியான போக்குகளை கண்டறிகிறது. எனவே இதை நம்பலாம் "என்று கெல்கர் கூறினார். "வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இந்தியாவில் உணவு, எரிசக்தி மற்றும் போக்குவரத்துக்கான தனிப்பட்ட நுகர்வு செலவு மிகக்குறைவு என்பதையும் இது காட்டுகிறது" என்றார்.

இருப்பினும், கார்பனை பார்ப்பது குறிப்பாக இந்திய சூழலில் தவறாக வழிநடத்தும் என்று பார் கூறினார். "உதாரணமாக, வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு மின்சாரம் பயன்படுத்துவது உமிழ்வுகளாகக் கருதப்படுகையில், அந்த பம்புகள் நிலத்தடி நீர் கிடைப்பதை எவ்வாறு பாதிக்கிறது. அதற்காக, நாம் ஒரு தண்ணீர் தடம் வைத்திருக்க வேண்டும். உமிழ்வு மற்றும் புவி வெப்பமடைதலை அளவிடுவதில், உள்ளூர் வள பற்றாக்குறை பிரச்சினையை நாம் இழக்கக்கூடாது (இது) மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதிக்கிறது, "என்று அவர் கூறினார்

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.