உச்சநீதிமன்ற விதிமுறை இருந்தும், 5 மாநிலங்களின் பள்ளிகள் 75% குழந்தைகளிடம் ஆதார் கேட்டன
மும்பை: ஐந்து மாநிலங்களில் 75%-க்கும் மேற்பட்ட குழந்தைகள், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, தங்களின் பள்ளிச்சேர்க்கைக்கு ஆதார் அட்டை (12 இலக்க, பயோமெட்ரிக் அடிப்படையிலான தனித்துவ அடையாள எண்) வழங்க வேண்டியிருந்தது என, நவம்பர் 25, 2019இல் வெளியான ஆதார் அறிக்கை 2019 தெரிவித்தது.
நாடு முழுவதும், சேர்க்கையின் போது ஆதார் வழங்குவது என்பது சுமார் 73% குழந்தைகளுக்கு கட்டாயமாக இருந்தது என அந்த அறிக்கை கூறியது: "2018 உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் கூட, பல குடும்பங்கள் குழந்தைகளின் பள்ளி சேர்க்கைக்கு ஆதார் வழங்க வேண்டியிருந்தது".
ஆதார் திட்டத்துக்காக பணிபுரியும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (யுஐடிஏஐ), டிசம்பர் 2018 இல் “பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கேட்பது சட்ட விதிகளின்படி இல்லை” என்று கூறியதோடு, ஆதார் இல்லாத குழந்தைகள் சேர்க்கைக்கு மறுக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பள்ளிகளை கேட்டுக் கொண்டது.
உச்ச நீதிமன்றம், செப்டம்பர் 2018 இல் அளித்த தீர்ப்பில், பள்ளிகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போன்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குவோர், பள்ளி / கல்லூரி சேர்க்கை, வங்கி கணக்கு தொடங்குதல், மொபைல் இணைப்பு பெறுதல் போன்றவற்றுக்கு ஆதார் கோருவதை தடை செய்திருந்தது. நிரந்தர வருமானவரி கணக்கு எண் (பான்) மற்றும் நலத்திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் இணைப்பதை அது உறுதிப்படுத்தியது. டிஜிட்டல் ஐடி திட்டத்தால் தொடர்ந்து சேவை மறுப்பவதாக விமர்சனங்கள் எழுவது கவலையை ஏற்படுத்துவதோடு, சேவை மறுப்பு, அதேபோல் தனிப்பட்ட தகவல் மற்றும் பயோமெட்ரிக் எவ்வாறு கண்காணிப்பு கருவிகளாக பயன்படுத்தப்படலாம் என்ற கேள்வியும் உண்டாகிறது.
ஆயினும்கூட, கணக்கெடுக்கப்பட்டவர்களில் சுமார் 92% பேர் ஆதார் குறித்து திருப்தி தெரிவித்தனர்; 90% பேர், இது தங்கள் தரவை பாதுகாப்பாக வைத்திருப்பதாகக் கூறினர்; 61% பேர், இது மற்றவர்கள் தங்களது நலஉதவியை அணுகுவதில் இருந்து தடுப்பதாக தெரிவித்தனர்; வெறும் 8% பேர் மட்டுமே ஆதார் தவறாக பயன்படுத்தப்படுமோ என்ற கவலையை தெரிவித்ததாக, அறிக்கை கூறுகிறது. அத்துடன், 80% பயனாளிகள் பொது விநியோக முறையில் (பி.டி.எஸ்) உணவுப் பொருள் பெறுதல், ஓய்வூதியம், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் பெறுவதற்கு ஆதார் மிகவும் நம்பகமானது என்றனர்.
ஆதார் அல்லது உலகின் மிகப்பெரிய தேசிய டிஜிட்டல் ஐடி பயன்படுத்தும் முதன்மை தரவுத்தொகுப்பாக உள்ளது; இருப்பினும் கீழ்கண்ட கேள்விகளுக்கு ஆய்வு பதிலளிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டதாக அறிக்கையின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்: ‘ஆதார் காரணமாக எந்த அளவிற்கு நன்மைகள் மற்றும் சவால்களை உணர முடிந்தது என்று கூற முடியும்? ஆதார் தொடர்பாக தனியுரிமை மற்றும் கண்காணிப்பு பற்றிய ‘குடியிருப்பாளர்கள்’ கவலைக்கு பதில் என்ன?’ ‘அரசுக்கு ஆதார் எந்த அளவிற்கு பயனளித்தது?’ மற்றும் ‘ஆதார் தனியார் துறைக்கு எந்த அளவுக்கு பயனளித்தது?’ என்பனவாகும்.
இது விமர்சனத்திற்கு வழிவகுத்தது; சர்ச்சைக்குரிய யு.ஐ.டி.ஏ.ஐ. மற்றும் ஆதார் கண்டுபிடிப்புகள் அதிகப்படியான பாராட்டுக்குரியவை என்று சில எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
இந்த அறிக்கையில் முக்கிய பங்களிப்பு என்னவென்றால், ஆதார் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரையும் சென்றடைந்துள்ள நிலையில், அதற்கான அணுகலை வழங்குவதும், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வதும் ஒரு முடிக்கப்படாத நிகழ்ச்சி நிரலாகும் என்று, டால்பெர்க் ஆலோசகர்கள் அறிக்கையின் இணை ஆசிரியர்களில் ஒருவரான பெட்ரா சோண்டெரெகர் கூறினார்."மற்றவர்களை விட வீடற்றவர்கள் ஆதார் பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை வழங்குவதில் உள்ள சிக்கலை கருத்தில் கொண்டு இதற்கு ஆதரவு தேவைப்படலாம்" என்றார்.
ஆராய்ச்சி
இந்திய பொருளாதார மையம் மற்றும் காந்தர் பொது கண்காணிப்பு குழுமம் ஆதார் அறிக்கை 2019 (SOAR) இதுபற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டது; இதில் கிடைத்த விவரங்களை, அறிக்கை தயாரிப்பு ஆலோசனைக்குழுவின் டால்பெர்க் ஆய்வு செய்தார். ஆமிதார் நெட்வொர்க் இந்தியா, 2016இல் இருந்து ஆதார் குறித்த ஆராய்ச்சிக்கு நிதியளிப்பது இது மூன்றாவது முறையாகும் - ஆமிதார் நெட்வொர்க், இந்தியா டிஜிட்டல் அடையாள அட்டை, சிக்கல்களை கண்டுபிடிப்பது மற்றும் கல்வி உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் உதவக்கூடிய முதலீட்டாளர் ஆகும்.
இந்த ஆராய்ச்சி 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 167,077 குடியிருப்பாளர்களின் அனுபவம் மற்றும் முன்னோக்குகளை மூன்று முறைகளை பயன்படுத்தி உள்ளடக்கியது: பதிலளித்த 1,47,868 பேரிடம் 10 நிமிட கணிப்பு ஆய்வு; 16 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் பதில் தந்த 19,209 பேரிடம் 45 நிமிட ஆழமான கணக்கெடுப்பு; மற்றும் நான்கு மாநிலங்களில் 103 நபர்களுடன் (பதில் அளித்தவர்களிடம் முக்கிய நேர்காணல்) ஆழ்ந்த நேர்காணல்கள் - 2019 மே முதல் செப்டம்பர் வரை மேற்கொள்ளப்பட்டது.
"ஆதார் ஐடியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் நபர்களின் முன்னோக்கு ஆதாரைச் சுற்றியுள்ள விவாதத்தில் முக்கியமானது" என்று சோண்டெரெகர் கூறினார். "இந்த அறிக்கையில் நாடு முழுவதும் முதல்முறையாக இத்தகைய முன்னோக்கு கைப்பற்றப்பட்டுள்ளது: ஆதார் தினசரி பயனர்களுக்கு என்ன வேலை செய்கிறது அல்லது வேலை செய்யாது” என்றார் அவர்.
எல்லா இடத்திலும் ஆதார்; குழந்தைகளும் சுமையை தாங்குகிறார்கள்
அறிக்கையின்படி, 120 கோடி மக்கள் அல்லது நாட்டின் 90% க்கும் அதிகமான மக்கள் 12 இலக்க ஆதார் எண்ணை கொண்டிருக்கின்றனர். சுமார் 10.3 கோடி மக்கள், அல்லது 8% பேரிடம் இல்லை. இதில், 7.5 கோடி அல்லது 73% பேர் குழந்தைகள்; அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அல்லது 2.5 கோடி பேர், ஐந்து வயதுக்குட்பட்டவர்கள்.
பள்ளி குழந்தைகளில் சுமார் 13% பேருக்கு, ஆதார் தர முடியாததால் பள்ளி சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டது. மொத்த குழந்தைகளில் நான்கில் ஒரு பகுதியினர், அல்லது 10 லட்சம் பேர், பள்ளிகளில் சேரவில்லை; ஆனால் அவர்களை சேர்க்க பெற்றோர்கள் விரும்பினர். எனினும் ஆதார் காரணங்களால் அவ்வாறு செய்ய இயலவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது.
"ஆதார் பெற குழந்தைகளை கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது," என்று வளர்ச்சி பொருளாதார நிபுணர் ரீதிகா கெரா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "நீதிமன்ற தீர்ப்பை அரசு கவனிப்பதாகத் தெரியவில்லை. பள்ளி சேர்க்கைக்கு இது கட்டாயமாகும். அங்கன்வாடிகளில் (ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளை) சேர்க்க மறுப்பதற்கும் இதை சாக்காக கூறுகிறார்கள். பெற்றோர் என்ன செய்கிறார்கள்? அரசுக்கு எதிராக ஒரு பயனற்ற போராட்டம் நடத்தி சண்டையிடுவதை விட, குழந்தைகளை சேர்ப்பதற்காக, 'நடைமுறை'க்கு உகந்தவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பையே தேர்வு செய்கிறார்கள்” என்றார்.
ஆதார் இல்லாததால் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதையும், அதன் மூலம் சேர்க்கை மற்றும் வருகையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட அரசின் மதிய உணவு திட்டத்தின் கீழ் பல குழந்தைகள் இலவச சூடான உணவைப் பெறத் தவறிவிட்டனர். ஆதார் தொடர்பான சிக்கல்களால் கிட்டத்தட்ட 1.5 கோடி குழந்தைகள், அல்லது 8% பேர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மதிய உணவை தவறவிட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.
தங்கள் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை இல்லையென்றால், குடும்பங்களும் பிற நலத்திட்டங்களை இழக்க நேரிடும். உதாரணமாக, அனைத்து வீட்டு உறுப்பினர்களும் பொது வினியோக திட்டத்தில் ரேஷனில் உணவுப்பொருள் முழுமையாக பெற ஆதார் எண் வழங்கப்பட வேண்டும்.
"இதுபோன்ற நிராகரிப்புகள் களையப்படுவது மிக முக்கியமானது" என்று ஆமிதார் நெட்வொர்க் இந்தியாவின் சுபாஷிஷ் பத்ரா கூறினார். “ஆதார் எங்கே கட்டாயம், எங்கே இல்லை என்பதையும் நாம் மக்களுக்கு உணர்த்த வேண்டும். கடைசி கட்ட சேவை வழங்குவோரும் சமீபத்திய விதிமுறை மற்றும் நடைமுறைகளை உணர வேண்டும்” என்றார்.
டிஜிட்டல் அடையாள கருவிகளின் வடிவமைப்பு மற்றும் அவற்றின் பயன்பாட்டு வழக்குகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிக்கையின் ஆலோசனைக் குழுவில் இருந்த டெல்லியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியர் சுபாஷிஸ் பானர்ஜி கூறினார். இப்போதுள்ளவை தொடர்ந்தால், குழந்தை மற்றும் மனித உரிமைகளுக்கு கடும் எதிர்மறையான விளைவுகளுடன் ஆதார் மிகவும் விலக்கப்படலாம். அரசு இதை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்.
முதல் அடையாள அட்டை
இந்த அறிக்கையின்படி, ஆதார் 8% பேருக்கு- அதாவது 6.7 கோடி பேருக்கு முதலாவது அடையாள அட்டையாகும். " மற்ற மக்கள்தொகையில் 8% உடன் ஒப்பிடும்போது, வீடற்ற மற்றும் மூன்றாம் பாலித்தவர்களில் 15% பேருக்கு இது முதல் அடையாள அட்டை" என்று சோண்டெரெகர் கூறினார். "இவர்களில் சிலரிடம் நாங்கள் பேசியதில் ஆதார் அட்டை இருப்பதால், மனிதநேயமற்ற தனிமனித துன்புறுத்தலில் இருந்து விடுபட, அது உதவுவதாக கூறினர்" என்றார்.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களில், மொத்தம் 459 மூன்றாம் பாலின நபர்கள்,478 வீடற்ற நபர்கள், 845 முதியவர்கள் (70 வயதுக்கு மேற்பட்டவர்கள்)மற்றும் 3,271 தொழிலாளர்கள் ஆய்வுக்காக பேட்டி காணப்பட்டனர். 459 மூன்றாம் பாலின நபர்களில் (27%) கிட்டத்தட்ட 124 பேரும், 478 வீடற்றவர்களில் (30%) 143 பேருக்கும் ஆதார் அடையாள அட்டை இல்லை என்று சோண்டெரெகர் கூறினார்.
"இவர்களில், சுமார் 85% மூன்றாம் பாலினத்தவர்; 84% வீடற்றவர்கள் ஆதார் பெற முயன்றும் அதை பெற முடியவில்லை" என்று அறிக்கை கூறியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாதது வீடற்றவர்களுக்கு ஒரு பெரிய தடையாக இருந்தும், மூன்றாம் பாலின நபர்கள் மற்றொரு தடையை எதிர்கொண்டனர்: அதாவது, ஏற்கனவே உள்ள அடையாள அட்டையில் அவர்களின் பாலினம் ஆதார் சேர்க்கை நேரத்தில் அவர்களின் அடையாளம் அல்லது தோற்றத்துடன் பொருந்தவில்லை. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களின் ஆதார் அட்டையில் பாலின தரவுகளில் பிழை ஏற்படுவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுடன் பணிபுரியும் நபர்களின் கூற்றுப்படி, வீடற்ற மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்தவொரு அடையாள அட்டை பெறுவது என்பது ஒரு கடினமான பணியாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இன் படி 17 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அல்லது இந்தியாவின் மக்கள் தொகையில் 0.14% பேர் வீடே இல்லாதவர்கள். வீடு அல்லது குடியிருப்பு இல்லாதவர்கள் "திறந்தவெளி அல்லது சாலையோரங்கள், நடைபாதைகள், ராட்சத குழாய்கள், மேம்பாலங்களின் கீழ்ப்பகுதி, வழிபாட்டுத் தலங்களில் வசிப்பவர்கள்" என்று வரையறுக்கப்படுகிறார்கள். வீடற்றவர்களில் எத்தனை பேர் அடையாள ஆவணத்தையும் வைத்திருக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அரசு தரவு எதுவும் இல்லை.
வீடற்றவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பின்தங்கிய குழுக்கள் தான் என்று வீடற்றவர்களுக்காக வேலை செய்யும் ஆஷ்ரே அதிகார் அபியான் என்ற அமைப்பை சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா தெரிவித்தார். அவர்களை எதிர்கொள்ள அரசு அதிகாரிகள் விரும்பவில்லை; எனவே உண்மையான வேலை எதுவும் களத்தில் நடக்காது. இது ஒரு வாக்காளர் அட்டை அல்லது ஆதார் அட்டை தேவை என்றாலும், அதற்கு ஒரு முகவரி தேவை. ஆனால் இந்த மக்கள் இடம் பெயரும் இயல்புடையவர்கள்; அடிக்கடி இடம் மாறுவார்கள்” என்ற அவர், “விழிப்புணர்வு இல்லாதது மற்றொரு பிரச்சினை. அடையாளச்சான்றின் உண்மையான முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை” என்றார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு-2011, இந்தியாவில் 487,803 ‘பிற பாலின’ நபர்களைப் பதிவு செய்தது. 2019 பொதுத்தேர்தல்களுக்கான வாக்காளர்களை பற்றிய தேர்தல் ஆணையத்தின் தரவு, அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, அவர்களில் சுமார் 8% அல்லது 38,325 பேர் வாக்காளர் அடையாள அட்டைகளைக் கொண்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது.
ஆதார் விண்ணப்பங்களின் போது துணை ஆவணங்களை வழங்குவது திருநங்கைகளுக்கு சிக்கலானது என்று சென்னையை சேர்ந்த திருநங்கைகளின் உரிமை ஆர்வலர் கிரேஸ் பானு கூறினார். "திருநங்கைகள் வாடகை வீடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் நிரந்தர வசிப்பிடத்திற்கான ஆதாரங்களை வழங்குவது கடினம்" என்றார் அவர். “திருநங்கைகள், தங்களது அறுவை சிகிச்சை சான்றிதழை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது நல்சா (NALSA) தீர்ப்பின் உத்தரவுகளை மீறுகிறது. பல திருநங்கைகள் அறுவை சிகிச்சையைத் தேர்வு செய்வதில்லை, எனவே அவர்களுக்கு சமர்ப்பிக்க சான்றிதழ் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள நடைமுறையை மேற்கோள் காட்டிய பானு, திருநங்கை ஒருவர் வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பினால், அவர்கள் முதலில் திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்: "நல வாரியத்தில் இருந்து அடையாளஅ ட்டை பெற குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் ஆகும். எனவே ஒவ்வொரு அடையாள அட்டையையும் பெறுவது மிகவும் கடினம்" என்றார்.
எதுவுமே இல்லாதவர்களுக்கு ஆதார் ஒரு அடையாளத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக, வளர்ச்சி பொருளாதார நிபுணர் கெரா சுட்டிக்காட்டினார். "ஆனால் 0.03% மட்டுமே அறிமுக வழியை பயன்படுத்தினர்; மீதமுள்ளவர்கள் அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான சான்றுகளை சமர்ப்பித்து பெற்றனர்," என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் யுஐடிஏஐ விடம் பெற்ற 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளின் தகவல் விசாரணையில் அடிப்படையில் அவர் கூறினார். "[ஆதார் அறிக்கை] கண்டுபிடிப்புகள், தொடங்க எந்த அடையாளமும் இல்லாதவர்களும் ஆதாரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்துகிறது" என்றார் அவர்.
ஆமிதாரின் பத்ராவோ, இத்தரவை வேறு வகையில் காட்டுகிறார். வீடற்ற மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் அதிக விகிதத்தில் உள்ளனர் (15%); அனைத்து மக்களிடையே (8%) ஆதார் அவர்களின் முதல் அடையாள ஆவணம் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். "இவர்கள் [வீடற்ற மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்] தங்கள் ஆதாரை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கவும், சிம் கார்டுகளை வாங்கவும், முதல்முறையாக உணவுப் பொருட்களைப் பெறவும் செய்துள்ளனர். எனவே, லட்சக்கணக்கான புதிய நபர்களை ஆதார் உள்ளடக்கி உள்ளது. சில பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக உள்ளது,” என்றார் பத்ரா.
ஆதார் இந்தியாவில் கிட்டத்தட்ட அனைவரையும் சென்றடைந்தாலும், அதற்கான அணுகலை வழங்குவதும், அது சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்காக பணி செய்வதை உறுதி செய்வதும் ஒரு நிறைவு பெறாத நிரலாகும் என்று டால்பெர்க்கின் சோண்டெரெகர் கூறினார். "மற்றவர்களை காட்டிலும் வீடற்றவர்கள் பதிவு செய்வது கடினம் என்பதால் தேவையான ஆவணங்களை வழங்குவதில் அவர்களுக்கு இலக்குடன் ஆதரவு தேவைப்படலாம்" என்றார்.
கணக்கெடுப்பு தரவுத்தொகுப்பு 2 கோடிக்கும் அதிகமான தரவு புள்ளிகளை கொண்டுள்ளது; மேலும் இது www.stateofaadhaar.in என்ற இணையதளத்தில் இலவசமாக அணுகக்கூடியது என்று பத்ரா கூறினார். "ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தரவுத்தொகுப்பை பயன்படுத்தி பகுப்பாய்வை இயக்க முடியும்; அதே நேரம் சிவில் சமூகம் இந்தியர்களின் வாழ்ந்த அனுபவங்களை நன்கு புரிந்து கொள்ளக்கூடும். இது கள செயல்பாட்டை புரிந்து கொள்ளவும், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும் அரசுகளுக்கு உதவும்” என்றார்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.