டெல்லி: தடுப்பூசியின் தினசரி விகிதத்தில், மே மாதத்தில் ஒரு நாளைக்கு 1.9 மில்லியன் டோஸ் என்பதில் இருந்து, 2021 ஆகஸ்டில் 5.4 மில்லியனாக உயர்ந்து, 181% அதிகரிப்பு இருந்த போதும், டிசம்பர் 2021 க்குள் அனைத்து பெரியவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி போடும் இலக்கை, இந்தியா தவறவிட வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு தற்போதைய 5.4 மில்லியன் டோஸ் என்ற விகிதம் தொடர்ந்தால், தகுதியுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் 2022 ஏப்ரல் நடுப்பகுதியில் தான் தடுப்பூசி போட்டு முடிக்க முடியும்.

இந்திய அரசு மே 2021 இல், வரும் டிசம்பர் 2021 க்குள் 1.08 பில்லியன் இந்தியர்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கை அறிவித்தது. அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக ஆகஸ்ட் 23, 2021 இல் இருந்தாவது, ஒவ்வொரு நாளும் இந்தியா சுமார் 9.6 மில்லியன் டோஸ் வழங்க வேண்டும் என்று, எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. தடுப்பூசி இயக்கத்தின் ஏழு மாதங்களுக்கு மேலான நிலையில், இந்தியா ஒருநாளில் கூட 9.6 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளை வழங்கியதில்லை. அதிகபட்சமாக, 8.8 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஆகஸ்ட் 16 அன்று நிர்வகித்து வழங்கப்பட்டன.

ஜூன் 26, 2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் 2021 க்கு இடையில் 1.35 பில்லியன் தடுப்பூசிகளை வாங்க முடியும், இது வயது வந்தோருக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இருக்கும் என்று சொன்னது -இந்த தடுப்பூசிகள் உண்மையில் கிடைத்தால், மற்றும் 9.6 மில்லியன் டோஸ் தினசரி நிர்வகிக்கப்படலாம்.

தடுப்பூசி என்பது கோவிட் -19 ஆல் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் இறப்பதையும் குறைப்பதற்கான உறுதியான வழியாகும். இது சுகாதார அமைப்பின் நெருக்கடியை எளிதாக்குவது மட்டுமல்லாமல், சார்ஸ்-கோவ்-2 வைரஸ் உருமாற்ற பிறழ்வுகளின் சாத்தியத்தையும் குறைக்கும். ஆகஸ்ட் 22 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியா 582 மில்லியன் டோஸ் வழங்கப்பட்டது, மேலும் வயது வந்தோருக்கான மக்கள்தொகையில் 9.8% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசர அவசியமாகி வருகிறது.

இந்தியா தனது தடுப்பூசி போடும் நடவடிக்கையை ஜனவரி 16, 2021 அன்று பல கட்டங்களாகத் தொடங்கியது. முதல் கட்டத்தில், சுகாதாரப் பணியாளர்கள் (HCW) மற்றும் முன்களப் பணியாளர்கள் (FLWs) மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆகஸ்ட் 22, 2021 க்குள், 49.4 மில்லியன் டோஸ் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது, மேலும் 79% சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 62% முன்களப் பணியாளர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் கட்டத்தில், மார்ச் 1, 2021 முதல், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோயுள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதியுடையவர்கள். ஏப்ரல் 1,2021 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடுவதற்கான தகுதியுடையவர்கள், மே 1, 2021 முதல், அனைத்து பெரியவர்களும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.