புதுடெல்லி: உலகில் பாம்பு கடித்த வழக்குகள் மற்றும் இறப்புகள் அதிக அளவில் இந்தியாவில் தான் உள்ளன. பாம்பு கடித்தால் உயிர் போகக்கூடும், அல்லது உயிர் பிழைத்தவர்கள் செயலிழந்து போகலாம். இருப்பினும் கூட, பாம்புக்கடிகள் தொடர்பாக பொதுவில் கிடைக்கக்கூடிய அரசுத் தரவு, ஒட்டு வேலையாகவே உ ள்ளது - வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் பரவலாக வெவ்வேறு எண்ணிக்கைகளை தருகின்றன.

பாம்புக்கடியால் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்கான வர்க்க பரிமாணமும் உள்ளது: பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் கிராமப்புறம், காடுகள் அல்லது விவசாயப் பகுதிகளில் வாழ்கின்றனர், அங்கு தான் பாம்புகள் வசிக்கின்றன, அவை சுதந்திரமாக அங்கு உலவுகின்றன.

"இது தொடர்பாக ஒரு தரவுகள் பதிவேடு கூட எதுவும் இல்லை. இது அரசு, காவல்துறையில் மற்றும் மருத்துவமனைகளால் சேகரிக்கப்படுகிறது. இது, தரவுத்தொகுப்புகளில் பாம்புக்கடிகளில் வெவ்வேறு தரவுகளை உருவாக்கியுள்ளது," என்று, ஆஸ்திரேலியாவின் ஜார்ஜ் ஹெல்த் ஃபார் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் இந்தியா அலுவலக ஆராய்ச்சியாளர் தீப்தி பெரி கூறினார். இந்தியாவில் பாம்பைக் கடிக்கும் தரவை, பெரி படித்து வருகிறார். அத்துடன், தரவு எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது என்பதில் பெரிய வேறுபாடுகளையும் , தரவுத் தொகுப்புகள் எண்ணிக்கையில் வேறுபாடுகளையும் அவர் கண்டறிந்துள்ளார்.

உதாரணமாக, பாம்புக் கடிகளைப் பற்றிய தரவை வழங்கும் இரண்டு அரசு தரவுத் தொகுப்புகளை பாருங்கள்: தேசிய சுகாதாரத்தகவல் (NHP) மற்றும் தேசிய குற்றப்பதிவு பணியகம் (NCRB). குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு (2018, 2017, 2016), தேசிய சுகாதாரத் தகவல் பதிவு செய்த பாம்புக் கடித்த வழக்குகளின் எண்ணிக்கை, தேசிய குற்றப்பதிவு பணியகம் பதிவு செய்த எண்ணிக்கையை விட 18 முதல் 22 மடங்கு ஆகும்.

இருப்பினும், பாம்பு கடித்த இறப்புகளில், தேசிய குற்றப்பதிவு பணியகம் பதிவு செய்த எண்ணிக்கையில் 10% முதல் 13% வரை மட்டுமே தேசிய சுகாதாரத்தகவல் பதிவு செய்துள்ளது.

மேலும், தேசிய குற்றப்பதிவு பணியகம் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான பாம்புக் கடித்த வழக்குகளை இறப்புகளாகப் பதிவு செய்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேசிய குற்றப்பதிவு பணியகம் தரவுகளின்படி, இந்த மூன்று ஆண்டுகளில் பாம்பு கடித்த அனைத்து மக்களுமே இறந்துள்ளனர்.

ஆனால் பாம்புக் கடியின் இறப்பு சதவீதம் 0.5% முதல் 0.7% வரை மட்டுமே உள்ளது என்று தேசிய சுகாதாரத் தகவல் காட்டுகிறது.


தேசிய குற்றப்பதிவு பணியக தரவுகளில் காணப்படும் ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான பாம்புக்கடி வழக்குகள் மற்றும் இறப்புகளுக்கு ஒரு சாத்தியமான காரணம், அவை தேசிய குற்றப்பதிவு பணியக காவல் வழக்கு இருக்கும்போது - இறப்பு ஏற்பட்டால் - போலீஸ் விசாரணை தேவைப்படும்போது, தரவுகளை காவல்துறை சேகரிக்கும்; மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது அல்ல என்று, ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் மருத்துவ மருத்துவரும் சுகாதாரக் கொள்கை ஆய்வாளருமான சவுமிதீப் பவுமிக் கூறினார். "இந்த சிக்கல்கள் அனைத்தும் பொது சுகாதாரத்தில் மேலும் ஆராய எங்களுக்கு உள்ள ஆராய்ச்சி கேள்விகள்" என்றார்.

"தரவு சேகரிப்பு வழிமுறைகளை நாம் எவ்வாறு வடிவமைக்கிறோம் என்பது முக்கியமானது" என்று, பாம்புக் கடித்தல் குறித்த தற்போதைய முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ள பவுமிக் கூறினார். "மருத்துவமனைக்கு வரும் மக்களின் பாம்புக் கடித்த வழக்குகளை மட்டுமே பதிவு செய்யும் வகையில் தரவு சேகரிப்பை நாம் வடிவமைத்தால், அது கிராமப்புற மற்றும் பழங்குடி சமூகங்களில், குறிப்பாக அருகில் மருத்துவமனை இல்லாததால் மக்கள் மருத்துவமனைக்குச் செல்லாத இடங்களில், பாம்புக்கடி வழக்குகளை கணக்கில் கொள்ளாது. அவர்கள் அதற்கு பதிலாக உள்ளூர் நாட்டு வைத்தியரிடம் குணப்படுத்தச் ச் செல்லலாம்" என்றார்.

இந்தியா முழுவதும் பரவலாக உள்ள உயர் இரத்த அழுத்தம் போன்ற நோயுடன், பாம்புக்கடியை ஒரு நோயுள்ள தன்மையை ஒப்பிட முடியாத நிலை உள்ளதாக, பவுமிக் விளக்கினார். பாம்புக்கடியானது, அது நிகழும் பகுதிகள், பாம்பு- மனித மோதல் மற்றும் சுற்றுச்சூழல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன. எனவே அதற்கான தரவு சேகரிப்பும் இந்த வேறுபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

பாம்புக் கடி பாதிப்புக்கான "அரசியல் குரல்" குறைவாகவே இருப்பதும் மக்களை பாதிக்கிறது, எனவே, அதை நிவர்த்தி செய்வதற்கான அவசரமும் அவசியமும் குறைவாக இருப்பதாக அவர் கூறினார்.

உள்ளூர்மயமாக்கப்பட்ட சிறந்த தரவு, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எங்கு குறுக்கிட வேண்டும், எந்த வகையான குறுக்கீடுகள் என்பதை அடையாளம் காண உதவும் என்று பெரி கூறினார். "எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பாம்புக்கடி ஏற்பட்டிருப்பது தெரிய வந்தால், அது விவசாயத்தில் ஏராளமானோர் ஈடுபடும் இடமாக இருக்கும் பட்சத்தில், வயல்களில் வேலை செய்பவர்களுக்கு ரப்பர் பூட்ஸை விநியோகிப்பது பாம்புகளால் கடிக்கப்படுவதற்கான அபாயத்தை குறைக்கும் வாய்ப்பாக இருக்கும்.

"இது, நம்மைப் பற்றி கவலைப்பட வேண்டியது பாம்புக் கடியால் ஏற்படும் இறப்புகளை பற்றி மட்டுமல்ல, இதனால் ஏராளமான மக்களுக்கு ஏற்படும் செயலிழப்பு, மனநலப் பிரச்சினைகள் மற்றும் சமூக களங்கம் [பாம்புக் கடியின் விளைவாக] ஆகியனவும் உள்ளன. பாம்புக் கடிகளைப் பற்றிய சிறந்த தரவு மற்றும் ஆராய்ச்சி மட்டுமே இதை நிவர்த்தி செய்ய நமக்கு உதவும் "என்று பவுமிக் கூறினார்.

இந்தியாவில் பாம்பு கடி இறப்பு எண்ணிக்கை

கடந்த 2011 ஆம் ஆண்டில், The Million Deaths Study (MDS) என்ற ஆய்வின் ஒருபகுதியாக ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் பாம்புக்கடி எண்ணிக்கை குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டனர், இது குழப்பத்தை நீக்குவதை நோக்கமாகக் கொண்டது.

எம்.டி.எஸ் திட்டம் இந்தியாவில் இறப்புக்கான பல்வேறு காரணங்களான தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், புற்றுநோய், மலேரியா, ஆல்கஹால், காயங்கள் மற்றும் தற்கொலை போன்றவற்றை ஆராய்ந்தது. இந்த ஆய்வு இந்திய பதிவாளர் ஜெனரலுடன் இணைந்து நடத்தப்பட்டது, மேலும் இது 24 லட்சம் வீடுகளில் கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை கண்காணித்தது. இந்த குடும்பங்களில் ஏற்படும் எந்தவொரு மற்றும் அனைத்து மரணங்களையும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

எம்.டி.எஸ். திட்டத்தின் ஒரு பகுதியாக பாம்புக்கடி இறப்புகள் குறித்த ஒரு முக்கிய கட்டுரை - 'இந்தியாவில் பாம்புக்கடி மரணம்: இறப்பு பற்றிய தேசிய பிரதிநிதித்துவ ஆய்வு' - என்பது, நாங்கள் சொன்னது போல் 2011ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியர்களில் நான்கு பேர், 2020 ஆம் ஆண்டில் மற்றொரு வெளியீடு - 'தேசிய அளவில் பிரதிநிதித்துவ இறப்பு ஆய்வில் 2000 முதல் 2019 வரை இந்தியாவில் பாம்பு கடித்த இறப்புகளின் போக்குகள்' - என்ற தலைப்பில் இந்த ஆராய்ச்சியை பின்தொடர்ந்தனர்

கடந்த 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் 46,000 பாம்புக்கடி இறப்புகள் நேரிட்டதாக, 2011 ஆம் ஆண்டு அறிக்கை மதிப்பிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆய்வறிக்கை, பாம்புக் கடியால் ஆண்டுதோறும் இறப்புகள் சராசரியாக 58,000 ஆக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது (2000 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கு இடையில் 12 லட்சம் பாம்புக்கடி இறப்பு). உலக சுகாதார அமைப்பு (WHO) இதை 2019 இல் ஒப்புக் கொண்டது, 2011 ஆம் ஆண்டு ஆய்வில், இந்தியாவில் பாம்புக்கடியால் நேரிட்ட இறப்புகளின் மதிப்பீடு இதே காலகட்டத்தில் இந்திய அரசு அளித்த எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகம் என்று, அது கூறியுள்ளது.

உலகளவில், பாம்புக் கடியால் ஆண்டுதோறும் 81,000-1,38,000 பேர் இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு 2019 இல் தெரிவித்தது. 2020 ஆய்வின் வெளிச்சத்தில் இதைப் பார்த்தால், பாம்புக் கடியால் இந்திய இறப்புகள் உலகளாவிய எண்ணிக்கையில் பெரும்பகுதியை கொண்டிருப்பதை அறியலாம்.

கடந்த 2011 மற்றும் 2020 ஆய்வுகளுக்கு இடையில் வருடாந்திர பாம்புக்கடி இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இரு ஆவணங்களிலும் ஆசிரியராக இருந்த பிரபாத் ஜா, இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சியுடன் இணைக்கிறார். "மக்கள்தொகை வளர்ச்சியால் பாம்புக் இறப்பு அதிகரித்துள்ளது. மக்கள்தொகைக்கான இந்த விகிதங்கள் இளைய வயதிலேயே குறைந்துவிட்டன, நடுத்தர வயதினரிடையே குறைவாக இருந்தன, ஆனால் அதிகமான மக்களுடன், மொத்தமாக பாம்பு கடித்த இறப்புகளின் எண்ணிக்கை சாதாரணமாக உயர்ந்தது," என்று, டொரொன்டோ பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணரான ஜா கூறினார்.

பாம்புக்கடி இறப்புகள் ஏன் குறைவாக கணக்கிடப்படுகின்றன

இந்தியாவில் பாம்புக்கடி வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக கணக்கிடுவது, உலகளவில் எண்ணிக்கையை பாதிக்கக்கூடும், 2011 ஆய்வறிக்கையின் ஆராய்ச்சியாளர்கள் விவரித்தனர்: "உலகளாவிய பாம்புக்கடிகளின் பெரும்பகுதி இந்தியாவில் இருந்து ஏற்படுவதால், உலகளாவிய பாம்புக்கடி மொத்த எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படலாம்".

இந்த கணக்கீட்டிற்கு ஒரு முக்கிய காரணம், மருத்துவமனைக்கு வருபவர்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டவர்கள் அல்லது இறப்புகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது, அதேசமயம் பலர் வீட்டிலேயே இறந்துவிடுவதால் இதுபற்றி சுகாதார நிலையத்திற்கு தகவல் அளிக்கப்படுவதில்லை.

எம்.டி.எஸ் கணக்கெடுப்பில், பாம்பு கடித்து இறந்தவர்களில் 23% மட்டுமே மருத்துவமனையில் இறப்பு பதிவானதாக, அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், மருத்துவமனை தரவு முழுமையாக இல்லை என்பதும், ஆனால் அதுதான் இந்தியாவில் பாம்புக்கடி இறப்பு தொடர்பான தரவுகளின் முக்கிய ஆதாரமாக உள்ளது என்பதாகும்.

மருத்துவமனைகளின் தரவுகளை மட்டுமே பதிவு செய்வதன் மூலம் உருவாக்கப்பட்ட தரவு இடைவெளியை நிரப்ப, பாம்பு கடியால் நேரிட்ட இறப்புகளின் சமூக கண்காணிப்பு மிக முக்கியமானதாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சமூக கண்காணிப்பு வீட்டில் இறப்பு வழக்குகளை கணக்கில் எடுக்கும்.

மேலும், 2020 ஆம் ஆண்டு ஆய்வின்படி, தனியார் மருத்துவமனைகளில் அதிகமான இறப்புகள் ஏற்படக்கூடும், அவை அரசால் கணக்கில் எடுக்கப்படவில்லை, அவை அரசு பொது மருத்துவமனைகளில் இருந்து தரவை மட்டுமே சேகரிக்கின்றன. 13 ஆண்டு காலப்பகுதியில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து 154,000 பாம்பு கடித்த இறப்புகள் நிகழ்ந்தன, ஆனால் அதே காலகட்டத்தில் 15,500 இறப்புகள் மட்டுமே அரசு தரவுகளில் பதிவாகியுள்ளதாக, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் "வழக்கமான பதிவு செய்யும் முறையானது, மருத்துவமனை சார்ந்த இறப்புகளில் 10% ஐ மட்டுமே கண்டறிந்துள்ளது" என்பதாகும்.

இடைவெளியை எவ்வாறு நிரப்புவது

கடந்த 2020 ஆய்வின் ஆய்வாளர்கள், பாம்புக்கடியை ஒரு அறிவிக்கத்தக்க நோயாக இந்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர், அதாவது மருத்துவர்கள் ஒவ்வொரு வழக்கையும் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த தகவல்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தில் புதுப்பிக்கப்படும்.

2017 ஆம் ஆண்டில், புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலின் முதல் பிரிவில் உலக சுகாதார அமைப்பால் பட்டியலிடப்பட்டவற்றில் முதல் பிரிவில் பாம்புக்கடி இடம் பெற்றது. 2019 ஆம் ஆண்டில், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்பு மற்றும் செயலிழப்பை 50% குறைக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று, உலக சுகாதார அமைப்பு முன்மொழிந்தது. பாம்பு கடியால் நேரிட்ட உலகளாவிய மொத்த இறப்புகள் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக காரணமாக, இந்தியாவில் பாம்புக்கடி இறப்பு மற்றும் செயலிழப்பு ஆகியவற்றின் சிறந்த மதிப்பீடு, தேசிய மற்றும் உலகளாவிய எண்ணிக்கைகளை கையாள்வதில் மிக முக்கியமாக இருக்கும்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.