சாதி சண்டைகள், அரசின் புறக்கணிப்புகளை எதிர்கொள்ளும் தலித் பெண்கள்
புதுடெல்லி, லக்னோ, ஹத்ராஸ்: மேற்கு சாதர் பிரதேசத்தின் (உத்திரப்பிரதேசம்) ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள தனது கிராமமான பூல்காரியில், பாலியல் பலாத்காரம் பற்றியே அனைத்து பேச்சுக்களும் இருந்தது கண்டு, உயர்சாதி தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த மீரா சிங் (35) மிகவும் ஆச்சரியப்பட்டார். 19 வயது தலித் பெண்ணை நான்கு தாகூர் ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுவது ஒரு முறைகேடாகும் என்று அவர் கருதினார்.
"எங்கள் கிராமம் எப்போதும் பாதுகாப்பாக உள்ளது, இதுபோன்ற ஒன்று நடப்பது இதுவே முதல்முறை" என்று, தனது கணவரின் குடும்பத்திற்கு சொந்தமான வயல்களில் கால்நடைகளை வளர்த்து வரும் சிங் கூறினார்.
கிராமம் முழுவதும் தலித்துகள் வசிக்கும் பகுதிகளில், பாலியல் வன்முறைகள் பொதுவானவை என்று பேசிக் கொண்டார்கள் - இங்குள்ள கிட்டத்தட்ட 250 வீடுகளில், நான்கு மட்டுமே தலித்துகளுக்கு சொந்தமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். "நாங்கள் எங்களது மகள்களை தனியாக நடமாட அனுமதிக்க மாட்டோம்" என்று ஒரு தலித் பெண் கூறினார். "பொதுவாக, தாகூர்கள் எங்களைத் தொடமாட்டார்கள்," என்று, தீண்டாமையின் பழைய பழக்கவழக்கத்தை அவர் குறிப்பிடுகிறார், "ஆனால் பலாத்காரத்திற்கு எங்களது பெண்களை அழைத்துச் செல்கிறார்கள்" என்றார்.
தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும் சாதிய நோக்கம், பூல்கரிக்கு மட்டுமே தனித்துவமானது அல்ல: இது உத்திரப்பிரதேசம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது - மாநிலத்தின் ஐந்து மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாவட்டங்களான ஹத்ராஸ், ஷ்ராவஸ்தி, உன்னாவ், ஜான்பூர் மற்றும் லக்னோ ஆகியவற்றில் பலாத்காரத்தில் இருந்து தப்பியவர்கள் மற்றும் தலித் ஆர்வலர்களுடன் நாங்கள் விரிவான நேர்காணல்களை மேற்கொண்டோம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கான மாநிலம் தழுவிய பொதுத்திட்டங்கள் - அதாவது திட்டங்கள், தங்குமிடம், உதவி எண்கள் போன்றவை- சில ஆண்டுகளாக செயலிழந்து அல்லது புறக்கணிக்கப்பட்டன; நிதி வடிகட்டப்பட்டன அல்லது வெறுமனே மூடப்பட்டன.
யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற 2017ம் ஆண்டு முதல், இத்தகைய அக்கறையின்மை போக்கு மேலும் மோசமடைந்ததாக, ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். "2017ம் ஆண்டுக்கு பிறகு உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து பெண் உரிமை இயக்கங்களுக்கும் எதிராக அரசியல் சூழல் உள்ளது" என்று பெண்களின் உரிமைகளுக்காக போராடும் உத்தரப்பிரதேச அரசின் உதவித்திட்டமான மகிளா சமகியாவின் முன்னாள் தலைவர் ஸ்மிருதி சிங் கூறினார்."தப்பிப்பிழைத்த தலித் பெண்களுக்கான நிறுவன உதவி மற்றும் உதவி உள்ளிட்டவைஅ, 2017-க்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட மறைந்தேவிட்டது” என்றார்.
கடந்த 2019 வரையிலான நான்கு ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பு, 66.7%; அதே காலகட்டத்தில் பட்டியல் சாதி (எஸ்சி) பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்குகளில் இரண்டாவது அதிகரிப்பு அதே காலகட்டத்தில் 20.67% என்றிருந்தது. இந்தியா முழுவதும், பட்டியல் சாதி பெண்கள் மீதான பாலியல் பலாத்கார வழக்குகள் 37%, தாக்குதல்கள் 20% அதிகரித்துள்ளது என்று கிரைம் இன் இந்தியா-2019 அறிக்கை அடிப்படையில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. மேலும், இந்தியா முழுவதும் பட்டியலின சாதியினருக்கு எதிரான 32.5% குற்றங்கள், 2009 மற்றும் 2018ம் ஆண்டுகளுக்கு இடையில், எஸ்.சி மற்றும் எஸ்.டி. (வன்கொடுமை தடுப்பு) சட்டம்-1989ன் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று, தலித் மனித உரிமைகள் தொடர்பான தேசிய பிரச்சாரத்தின் (NCDHR) நிலை அறிக்கை தெரிவிக்கிறது. எஸ்சி மற்றும் எஸ்டி (அமலாக்கம்) சட்டம் 1989 மற்றும் விதிகள் 1995, செப்டம்பர் 2020 இல் தொடங்கப்பட்டது.
"எல்லா பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, ஆனால் தலித் பெண்கள்தான் பாலினம் மற்றும் சாதி என்ற இரட்டை பாகுபாட்டை அனுபவிக்கின்றனர். ஆண்களுக்கு இடையிலான சண்டையில் பழிவாங்க, இந்த பெண்கள் எளிதான பகடைக்காய்களாக்கப்படுகின்றனர்” என்று லக்னோவை சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் தஹிரா ஹசன் கூறினார்.
கடந்த 2019ல், நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பலாத்கார வழக்குகளில் 11% எஸ்சி பெண்கள் தொடர்பானவை - அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 10 பேர் என்று க்ரைம் இன் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளுக்கு இடையில், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை என்ற அடிப்படையில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகியன அடுத்தடுத்த இடங்களில் இருந்ததாக, தலித் மனித உரிமைகள் தொடர்பான தேசிய பிரச்சாரத்தின் (NCDHR) நிலை அறிக்கை தெரிவிக்கிறது.
அக்டோபர் 13ம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில், எட்டு, 12 மற்றும் 17 வயதுடைய மூன்று தலித் சகோதரிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஆசிட் வீசி தாக்கப்பட்டனர்.
ஹத்ராஸ் சம்பவம் தொடர்பான எங்களது தொகுப்பை இங்கே பாருங்கள்:
வறுத்தெடுக்கப்பட்ட அரசு ஆதரவு வலையமைப்புகள்
பெண்கள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட உத்திரப்பிரதேச அரசின் பல திட்டங்கள் மூடப்பட்டிருக்கின்றன அல்லது நாங்கள் ஏற்கனவே சொன்னதுபோல் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. இது பெரும்பாலும் முழுமையான அல்லது பகுதியளவு நிதியைக் குறைப்பதே காரணமாகும் என்று நிபுணர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
உதாரணமாக, மாநிலத்தின் 19 மாவட்டங்களிலும், 78 ஒன்றியங்களிலும் பணியாற்றி மஹிளா சமக்யா அமைப்பு, பாலின வன்முறையில் கவனம் செலுத்தியது, மேலும் சட்டக்கருவிகளை பயன்படுத்தி பெண்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராட உதவுகிறது.
இந்த திட்டம் பல்வேறு மாவட்டங்களில் 250,000 பெண்களுக்கு உதவுவதோடு, 650 பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியது. "மதிப்பீட்டின் பெயரில், கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் நிதி முடக்கப்பட்டது. இந்த திட்டம் இன்னொன்றுடன் இணைக்கப்படும் என்று, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் எங்களுக்கு கடிதம் வந்தது," என்று முன்னாள் திட்டத்தலைவர் சிங் கூறினார். “[இணைப்பு பற்றி] எங்களிடம் எந்த விவரமும் இல்லை. திட்டத்தில் பணிபுரிந்து வந்த பெண்கள் தொகை பெறுவதை நிறுத்திக் கொண்டனர். அவர்கள் எதுவும் இல்லாமல் எப்படி வேலை செய்வார்கள்? படிப்படியாக அணி கலைக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய பெண்கள் தனித்துவிடப்பட்டனர். இது அதிர்ச்சியாக இருந்தது, ஏனெனில் அனைத்து தணிக்கை குழுக்களுமே எங்கள் வேலையால் திருப்தி அடைந்தன - காண்பிக்கக்கூடிய அளவில் எங்களுக்கு உண்மையான முடிவுகள் கிடைத்தன” என்றார்.
வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் 181, நிதி பற்றாக்குறையால் மூடப்பட்டது. "ஹெல்ப்லைன் மையத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ஒன்பது மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை" என்று லக்னோவை சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாத 181 ஹெல்ப்லைன் அதிகாரி ஒருவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
பாலியல் வன்முறை, பலாத்காரம் மற்றும் ஆசிட் தாக்குதல் போன்ற குற்றங்களில் இருந்து தப்பிப்பிழைப்பவர்களுக்கு மருத்துவ மற்றும் சட்ட உதவி வழங்க, மத்திய அரசு 2015ல் ’ஒன் ஸ்டாப் சென்டர்களை’ தொடங்கியது. 17 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்கள், தப்பி பிழைத்தவர்களுக்கு வேலை செய்யக்கூடிய திறன்களைப் பயிற்றுவிப்பதற்காகவே இருந்தன. ஆனால் பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் ஒருபோதும் கிடைக்கவில்லை என்று, மையத்தை சேர்ந்த ஒரு பெண் ஊழியர் எங்களிடம் கூறினார்.
"பெண்களுக்கு இனி [எந்த] வசதிகளும் கிடைக்காது, ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர், எனக்கு சம்பளம் கூட வழங்கப்படவில்லை," என்று அவர் கூறினார். கட்டிடம், படுக்கைகள் அல்லது உபகரணங்கள் இல்லாத வெற்று அறைகள் மட்டுமே இருந்ததால், மையம் பூட்டப்படவில்லை, ஆனால் அங்கு குடியிருப்பாளர்கள் யாரும் இல்லை என்றார் அவர். அதில் குடியிருப்போர், ஆன்லைன் எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்ய உதவிசெய்து, பின்னர் அனுப்பி வைக்கின்றனர்.
நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2013ல் அமைக்கப்பட்ட நிர்பயா நிதியம் பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று ஃபேக்ட்செக்கர்.இன் (FactChecker.in) டிசம்பர் 7, 2019 அறிக்கை தெரிவித்தது. உத்தரப்பிரதேசம் கிட்டத்தட்ட ரூ.325 கோடி நிதியை பெற்றபோதும் 66.7%ஐ மட்டுமே செலவிட்டது.
மாநிலம் முழுவதும் தப்பிப்பிழைத்தவர்களை நாங்கள் நேர்காணல் செய்ததால், இந்த புறக்கணிப்பின் முடிவுகள் தெளிவாகத் தெரிந்தன.
‘எங்கள் மகளை பாதுகாக்க லக்னோவுக்கு அனுப்ப வேண்டியிருந்தது’
மாநில தலைநகரான லக்னோவில் இருந்து கிட்டத்தட்ட 45 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில், 14 வயது தலித் சிறுமி, 2020 செப்டம்பரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அருகேயுள்ள காவல் நிலையம், முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்வதற்குப் பதிலாக, தப்பிப்பிழைத்தவரை எச்சரித்தது, இந்த விஷயத்தை பெரிதுபடுத்துவது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் "பிரச்சனையை வரவழைக்கும்" என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
இதுபற்றிய விவரங்களை அறிய, உள்ளூர் காவல் நிலையத்தை அக்டோபர் 14ல் இந்தியா ஸ்பெண்ட் தொடர்பு கொண்டது. இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதாகக்கூரி, காவல் நிலைய உதவி ஆய்வாளர் எங்களிடம் பேச மறுத்துவிட்டார்.
"இருவர் என்னை பலாத்காரம் செய்தபின், நான் மிகுந்த வேதனையில் இருந்தேன். அவர்கள் என்னை கடித்தபோது கத்தக்கூட முடியவில்லை" என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார். “நான் யாரிடமும் இதுபற்றி சொன்னால் இன்னும் மோசமானது நடக்கும் என்று மிரட்டினார்கள். அதனால் நான் இரத்தப்போக்குடன் வீட்டிற்கு நடந்தே சென்றேன்” என்றார்.
ஏறக்குறைய 4,000 வீடுகளைக் கொண்ட இந்த கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவை. அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த உயர் சாதிகளான தாகூர்கள், யாதவர்கள் மற்றும் மவுரியர்கள், பக்கத்து கிராமங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
"இதே ஆண்கள் எங்கள் மூத்த மகளை பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள், வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம் அவளை துன்புறுத்தினார்கள், எங்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தனர்" என்று உயிர் பிழைத்தவரின் தாய் கூறினார். "அவர் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்பே அந்த விஷயம் என்று எங்களுக்குத் தெரியும். எனவே அவரை பாதுகாக்க லக்னோவில் உள்ள ஒரு வீட்டு உதவியாளராக வேலைக்கு அனுப்பினோம்" என்றார்.
எனினும், மற்ற இரு மகள்களுக்காக அவர்கள் கவலைப்பட்டதால், காவல்துறையை அணுகியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். "எங்களிடம் அதிகாரம் இல்லாவிட்டாலும், இந்த மனிதர்களுக்காக மகள்களை தியாகம் செய்ய முடியாது" என்று தந்தை கூறினார்.
பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு, 22 வயது நிரம்பிய குற்றவாளிகளில் ஒருவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறை ஒப்புக்கொண்டது. ஆனால் அதில் அவரது வயது 17 ஆக பதிவு செய்யப்பட்டது, இதனால் சிறுவன் என்று காட்டப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
தப்பிப்பிழைத்த வளரிளம் பெண் கூறுகையில், காவல்துறை, தடயவியல் குழு மற்றும் தனது அண்டை வீட்டார் நடந்து கொண்ட அனுபவங்களால் தாம் அதிர்ச்சி அடைந்ததாக குறியடைந்தார் என்று டீன் ஏஜ் உயிர் பிழைத்தவர் கூறினார். "நான் கொடூரமான சம்பவத்தை 50 தடவைகளுக்கு மேலாக காவல்துறையினரிடம் விவரித்தேன், ஒவ்வொரு முறையும் அவர்கள் என்னிடம் அதே கேள்விகளைக் கேட்கிறார்கள்," என்று அவர் கூறினார். "இங்கிருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள கைசர்பாக்கில் உள்ள பால்ராம்பூர் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அவர்கள் ஒப்புக்கொள்வதற்கு முன்பு நாங்கள் மூன்று முறை லக்னோ செல்ல வேண்டியிருந்தது."
எந்த ஆலோசனையோ, ஆறுதலோ இல்லாமல், தனிமையில் அந்த பெண்ணுக்கு நடந்த பரிசோதனை திகிலூட்டுவதாக இருந்தது: “என் தலைமுடியும் நகங்களும் கிளிப் போடப்பட்டிருந்தன. அவர்கள் ஒரு சிறிய குச்சியை [துணியால்] என் வாயிலும், அந்தரங்கப்பகுதிகளிலும் செருகினர். நான் பயந்து நடுங்கினேன்” என்றார்.
சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, காவல் நிலையம், மருத்துவமனை மற்றும் நீதிமன்றத்திற்கு பலமுறை சென்று வந்ததால், அந்த குடும்பத்தினர் சோர்வடைந்தது மட்டுமின்றி பணமின்றி திண்டாடிஉனர். "உள்ளூர் போலீசாரின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களால், எங்கள் இளைய மகள்கள் தொடர்ந்து அச்சத்துடன் வாழ்கின்றனர். இப்படி எவ்வளவு காலம் தொடர முடியும்? ” என்று உயிர் பிழைத்தவரின் தந்தை கூறினார்.
இதேபோல், 6 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பற்றி குடும்பத்தினர் விவரித்தனர் - ஆறு வயது தலித் சிறுமி 2011ல் தனது பள்ளி கழிவறையில் பலாத்காரம் செய்யப்பட்டார், அங்கு அவர் நிர்வாணமாக, இரத்தப்போக்குடன் மீட்கப்படார். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை, ஏனெனில் அவர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கவர்கள்.
எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய ஊக்கப்படுத்துவதில்லை
ஓரங்கட்டப்பட்ட சாதிக் குழுக்களின் குடும்பங்கள் பலாத்கார வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது என்பதே எவ்வளவு கடினம் என்று மனம் வெதும்பினர். "பாதிக்கப்பட்ட தலித்துகள் பெரும்பாலும் ஏழைகள் மற்றும் காவல்துறையினரின் உதவியைப் பெற முடியவில்லை. காவல்துறையினர் பொதுவாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பார்கள். அதை அவர்களால் கொடுக்க முடியாது” என்று தலித் மனித உரிமைகள் தொடர்பான தேசிய பிரச்சாரத்தின் (NCDHR) நிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
எஃப்.ஐ.ஆர் தாக்கலுக்கு பிறகு நீண்ட நீதித்துறை செயல்முறைகள், ஏழைக்குடும்பங்களுக்கு கட்டுப்படியாவதில்லை - சட்டரீதியான கட்டணம், தினசரி ஊதியங்கள், போக்குவரத்து செலவுகள் உள்ளன. நாங்கள் சந்தித்த சில தலித் குடும்பங்கள், வழக்கைத் தொடர்வதற்காக தங்களது வேலையை நிறுத்தக்கூடிய நிலையில் இருந்தன. கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரை சேர்ந்த தலித் ஆர்வலர் ஷோபனா (அவர் ஒரு பெயரைப் பயன்படுத்துகிறார்) தெரிவித்தார். "[ஆனால்] உயர் சாதி குற்றவாளிகளுக்கு நிதி மற்றும் அரசியல் ஆதரவு இருப்பதால், தடையின்றி எளிதில் செல்கிறார்கள்” என்றார்.
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விசாரணைகள் அதிக விகிதத்தில் நிலுவையில் இருந்தன - அதாவது 33.8% ஆகும், இது அனைத்து அறியக்கூடிய ஐபிசி குற்றங்களில் 29.3% உடன் ஒப்பிடும்போது அதிகம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 7.6% வழக்குகளில் மட்டுமே விசாரணை முடிந்தது; பட்டியலின சாதிகளுக்கு எதிரான குற்றங்களில் இந்த எண்ணிக்கை 6.1% ஆகும். இவற்றில், 60% அல்லது அதற்கு மேற்பட்ட வழக்குகள், குற்றவாளிகளை விடுவிக்கப்பட்டதற்கு வழிவகுத்ததாக அக்டோபர் 9ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
கடந்த 2009 முதல் 2018 வரை விசாரணை முடிந்த எஸ்சி / எஸ்டி (PoA) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குற்றங்களுக்கான சராசரி தண்டனை விகிதம் 25.2% ஆகவும், விடுவிக்கப்பட்ட சராசரி விகிதம் 62.5% ஆகவும் இருப்பதாக என்.சி.டி.எச்.ஆர். அறிக்கை தெரிவிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் எஸ்.சி.க்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை விகிதம் 2019 இல் 66% ஆகும்.
"பெரும்பாலான சந்தர்ப்பங்களில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கூடாது என்று காவல்துறையினர் அழுத்தம் கொடுக்கிறார்கள்," என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் திவேதி கூறினார். "பொதுவாக பாலியல் வன்முறை விஷயங்களில், முழு செயல்முறையும் நான்கு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும், ஆனால் அது ஒருபோதும் நடப்பதில்லை. இதற்கிடையில் தப்பிப்பிழைத்தவர்களின் குடும்பங்கள் நீதிமன்ற எல்லைக்கு வெளியே குடியேற அல்லது அவர்களின் புகார்களை மாற்றித்தருமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றனர். எந்தவொரு சேமிப்பு அல்லது செல்வாக்கு இல்லாத ஒரு ஏழை தலித் மனிதனுக்கு இந்த செயல்முறை சாதகமாக இல்லை" என்றார்.
பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பிய ஆறு வயது சிறுமியின் 45 வயதான தந்தை, உயர் சாதியினருக்கு சொந்தமான நிலத்தில் ரூ. 200-250 என்ற தினக்கூலிக்கு வேலை செய்கிறார், அவரைப் போன்ற குடும்பங்களுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன: தங்கள் குடும்பங்களுக்கு உணவு தர வேண்டும் அல்லது வழக்கை கைவிட வேண்டும். "பணமும் அதிகாரமும் உள்ளவர்கள் மட்டுமே இந்த வழக்குகளை எதிர்த்துப் போராட முடியும்," என்று அவர் கூறினார்.
நிலம், அரசியல் தகராறுகளில் இலக்கு
கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டுக்கு இடையில் நாடு முழுவதும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், 18.8% அதிகரிப்பு காணப்படுகிறது என்று கிரைம் இன் இந்தியா அறிக்கை தெரிவித்தது. உத்தரப்பிரதேசத்தில் இந்த அதிகரிப்பு 42% ஆக இருந்தது. இதே காலகட்டத்தில், பட்டியலின பெண்கள் மீது பலாத்கார வழக்குகள் மாநிலத்தில் 21% உயர்ந்தன, இது ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது அதிகபட்சமாகும்.
"உத்தரப்பிரதேசத்தில் அரசு இயந்திரங்கள் சாதியத்தில் சிக்கிவிட்டன. ஹத்ராஸ் வழக்கில் உயர் சாதியினரை பாதுகாக்க அரசும் காவல்துறையும் எவ்வாறு முயன்று வருகின்றன என்பதை நாம் கண்டோம்," என்று லக்னோவை சேர்ந்த அகில இந்திய தலித் மஹிளா அதிகார் மஞ்ச் (AIDMAM) உடன் செயல்படும் ஷோபனா ஸ்மிருதி (அவர் ஒரு பெயரை பயன்படுத்துகிறார்) கூறினார். "அரசியல் விருப்பம் உயர் சாதி குற்றவாளிகளைப் பாதுகாப்பதும், தலித்துகள் மீது தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்த உதவுவதும் ஆகும். கூட்டாக கொலை, சமூகங்கள் மீதான தாக்குதல்கள், சிறுமியரை பலாத்காரம் செய்தல் மற்றும் கொலை செய்வது பொதுவான விஷயமாகிவிட்டது. அரசு நிர்வாகம் தங்களுக்கு எதிரானது என்று தலித்துகள் உணர்கிறார்கள், அவர்கள் நீதியை எட்டும் போதுகூட அதை எதிர்பார்ப்பதை நிறுத்திவிட்டார்கள்” என்றார்.
"உத்தரப்பிரதேசத்தில் சாதிப்பிளவு மிக முக்கியமானது மற்றும் பட்டியலின சாதிகள் வரலாற்று ரீதியாக கொள்கை புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. வன்கொடுமைகள் புதிதல்ல; ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், இப்போது மறைமுகமாக அரசு அனுமதி உள்ளது, ” என்று, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் (TISS) தொழிலாளர் ஆய்வுகள் மையத்தில் தற்போது உதவி பேராசிரியராக இருக்கும் சாதியியல் நிபுணர் ராகுல் சப்கால் கூறினார். மாநிலங்களில் தற்கொலை நடக்கும் போது யார் பொறுப்பு? தற்போதைய அரசு இயந்திரங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுதல் இல்லை, நிறுவனங்கள் அரசியல் எஜமானர்களால் வழிநடத்தப்படுகின்றன ” என்றார்.
மாநிலத்தை பலவீனமாகக் காட்டக்கூடிய பின்தங்கியவர்களின் நிலை குறித்த கேள்விகளை அடக்குவதற்கு அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று சப்கல் கூறினார். "அரசு இயந்திரத்தின் அமலாக்க மட்டத்தில் எந்த தலித் அல்லது ஆதிவாசி பணியாளர்களும் இல்லை. உணர்திறன் பயிற்சிகள் உயர் மட்டங்களில் நடக்கின்றன, ஆனால் காவல்துறையினருக்கு அல்ல, ”என்ற அவர், “ஒரு தாகூர் அதிகாரி தனது அகநிலைத்தன்மையை இந்த வழக்கிற்கு கொண்டு வருவார், அது அவரது வேலையில் தலையிடும்; காவல்துறையில் சாதியம் எவ்வாறு உள்ளது என்பதை அறிக்கைகள் காட்டுகின்றன. அரசு இயந்திரங்களுக்கு உணர்திறன் மற்றும் பிரதிநிதித்துவம் இல்லை, அதற்கு இரண்டும் தேவை” என்று குறிப்பிட்டார்.
கடந்த 2009 மற்றும் 2018ம் ஆண்டுக்கு இடையே உத்தரப்பிரதேசத்தில் பட்டியலின சாதியினருக்கு எதிரான மிக அதிக கொடுமைகள் நிகழ்ந்தன - நாடு முழுவதும் PoA சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் 22.4% இங்கு பதிவானது. இதைத் தொடர்ந்து பீகார் (19.6%), ராஜஸ்தான் (10.3%) என என்.சி.டி.எச்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 மற்றும் 2018-க்கு இடையில் பட்டியலின சாதியினருக்கு எதிரான அதிக குற்றங்களை பதிவு செய்த 10 மாநிலங்களில், ஏழு மாநிலங்களை பாரதீய ஜனதா / தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்து வந்துள்ளதாக, அறிக்கை குறிப்பிட்டது.
இந்த சாதிப்போர்களில், தலித் பெண்கள் எளிதான இலக்குகளாக மாறினர். "இது ஒரு நிலப்பிரச்சனை அல்லது அரசியல் சண்டையாக இருக்கலாம், பெண்கள் பழிவாங்குவதற்கான ஒரு கருவியாக மாறினர். ஆனால் அதிகாரத்தை வெளிப்படுத்தவும் இது உதவும்" என்று தஹிரா ஹசன் கூறினார். "சமூகம் அல்லது கிராமத்தின் மீது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்ட ஒரு பெண் வெறுமனே பலாத்காரம் செய்யப்பட்ட பல நிகழ்வுகளை நாங்கள் காண்கிறோம்" என்றார்.
அக்டோபர் 2 ஆம் தேதி மஹிளாபாத் தொகுதியில் 65 வயது தலித் பெண் ஒருவர் தாக்கப்பட்டார், அண்டை கிராமத்தைச் சேர்ந்த பிராமண ஆண்களால் துன்புறுத்தப்பட்ட தனது மருமகளை, அவர் பாதுகாத்தார். குற்றவாளிகள் தங்கள் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாகவும், தங்களை அடிபணியச் செய்வதற்காகவே தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் தலித் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 2014 முதல் 2018 வரை, PoA சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொத்த குற்றங்களில் 14.9% தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களாகும். இந்த குற்றங்களில் 95% வரை பலாத்காரம், அடக்குமுறை, கடத்தல் மற்றும் திருமணம் முடிக்க முயற்சித்தல் ஆகியவை என்று என்.சி.எச்.டி.ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலித் பெண்கள் இந்திய சமுதாயத்தில் கடைசி மற்றும் பலவீனமான நிலையை உருவாக்குகிறார்கள் - அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, வருவாயும் இல்லை, எந்தவொரு சொத்து அல்லது வளமும் இல்லை. வளங்களின் உரிமையின்மை இந்த சக்தி மாறும் மையத்தில் உள்ளதாக ஷோபனா ஸ்மிருதி கூறினார்.
கிராமப்புற இந்தியாவில் 9.23% பட்டியலின சாதிகள் மட்டுமே சொந்தநிலம் கொண்டுள்ளதாக, என்.எஸ்.எஸ்.ஓ.வின் நிலம் மற்றும் கால்நடை வைத்திருபோர் குறித்த கணக்கெடுப்பின் 70வது சுற்று தெரிவிக்கிறது. சொந்தமாக நிலம் செய்யும் தலித்துகளில், பெண்கள் நிலம் வைத்திருக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.
தங்கள் வீடுகளில் கூட தலித் பெண்களுக்கு அதிக அதிகாரம் இல்லை: பட்டியலின சாதி பெண்களில் 60% பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது பற்றி தெரியாது என்றனர்; அதேபோல், 46% பேருக்கு தனிநபர் வங்கிக் கணக்குகள் இல்லை, 46% பேரால் சந்தைக்கு தனியாக செல்ல முடியாது, 49% பேர் ஒரு சுகாதார மையத்திற்கு சுயமாக செல்ல முடியாது, 35.7% பேர் தங்கள் வீடுகளுக்குள் 15 வயதிற்கு பிறகு உடல் ரீதியான வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள் என்று, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (2015-16) நான்காவது சுற்று தெரிவித்தது.
(திவாரி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை நிருபர். பாண்டே லக்னோவை சேர்ந்த பகுதிநேர பணியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.