மும்பை: இந்தியாவில் மொத்த கால்நடை வைத்திருப்போரில் மாடுகள் வைத்திருப்போரின் எண்ணிக்கை 2007ல் 37% ஆக இருந்து 2019 ல் 35% ஆக குறைந்துள்ளது; அதே நேரம் எருமைகள், செம்மறி ஆடுகள் மற்றும் ஆடு வைத்திருப்போர் அதிகரித்துள்ளதாக, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட, 2019 கால்நடை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்த கணக்கெடுப்பில் இருந்து வெளிவரும் ஒரு குறிப்பிடத்தக்க போக்கு என்னவென்றால், மொத்த உள்நாட்டு / தனிப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை, 2012ம் ஆண்டில் 151.17 மில்லியன் என்பதில் இருந்து 142 மில்லியன் ஆக, அதாவது 6% குறைந்துள்ளது. 2019இல் 11 மில்லியன் என்பதுடன் ஒப்பிடும் போது, 2007-12 கால்நடைகளின் கணக்கெடுப்பு காலத்தில் இந்த சரிவு சுமார் 9% ஆக இருந்தது. அவ்வகையில் ஆண் கால்நடைகளின் எண்ணிக்கை 2012ல் 61.95 மில்லியனில் இருந்து, 2019ல் 43.94 மில்லியனாக குறைந்துள்ளது; பெண் கால்நடைகளின் எண்ணிக்கை 10% அதிகரித்துள்ளது - அதாவது 2012ல் 89.22 மில்லியனில் இருந்து 2019ல் 98.17 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், மத்திய அரசின் மே 2017 பசுவதை தடைச்சட்டம் (இது, உள்நாட்டு கால்நடை இனங்களை பாதுகாத்து மேம்படுத்துவதற்கும், மாடுகள், கன்றுகள் மற்றும் பிற கால்நடைகளை இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடை செய்கிறது), விவசாயிகளின் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் தனிப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். கேரளா, மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் தவிர இந்தியாவில் எல்லா இடங்களிலும் பசுவதை தடை அமல் செய்யப்பட்டுள்ளது.

.கால்நடை விஞ்ஞானியும், பொருளாதார நிபுணருமான சாகரி ஆர் ராம்தாஸ், இந்திய உணவு இறையாண்மை இயக்கத்தில் (Food Sovereignty Alliance) உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு, மலைவாழ் மக்கள், தலித், கால்நடை வளர்ப்போர், நிலமற்ற சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான ஒரு தளமாகும். உணவு இறையாண்மை இயக்கமானது, மக்கள் தங்கள் சொந்த உணவு மற்றும் விவசாய முறைகளை வரையறுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்கிறது. தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள குடாலி இன்டர்ஜெனரேஷனல் கற்றல் மையத்தில் கல்வித்திட்டத்திற்கும் ராம்தாஸ் தலைமை தாங்குகிறார், இது தலித்துகள் மற்றும் மலைவாழ் மக்களுக்களுக்கான கற்றல் இடமாகும்.

புனேவை சேர்ந்த மகளிர் கால்நடை விஞ்ஞானிகளது அமைப்பான ஆந்த்ரா-வின் நிறுவனர் மற்றும் முன்னாள் இயக்குநரான ராம்தாஸ், சிறு மற்றும் குறு விவசாய சமூகங்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக பணி புரிந்துள்ளார். தெலுங்கானாவின் அரியவகை கருமை நிற டெக்கனி ஆடுகளின் கம்பளியில் இருந்து நெய்யப்பட்ட கோங்காடி, நூலிழை பெறும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். பாலினம், உணவு இறையாண்மை, கால்நடைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆளுமை குறித்து அவர் விரிவாக வெளியிட்டுள்ளார்.

அவருடனான நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

பசு கண்காணிப்பு மற்றும் பசு வதை தடுப்புச் சட்டங்களால் விவசாயிகள் தங்களில் கால்நடைகளுக்கான உரிமையை இழந்துவிட்டதாக கால்நடை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றனவா?

சமீபத்திய கால்நடைகள் கணக்கெடுப்பில் கீழ்கண்ட மூன்று அம்சங்கள், கால்நடைகள் வைத்திருப்போரின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்த சரிவை, சுட்டிக்காட்டுகின்றன - தீவிரமான பசு வதை தடுப்பு சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு தோற்றத்திற்கு விவசாயிகள் அளித்த பதிலில் இருந்து, குறிப்பாக உள்நாட்டில் கால்நடைகளை கொண்டு செல்வதில் உள்ள முழுமையான தடை மற்றும் கண்காணிப்பு என்பது, கால்நடைகளை விற்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. அவை:

i) கடந்த பல கால்நடை கணக்கெடுப்புகளுடன் ஒப்பிடும்போது, 2012 மற்றும் 2019 க்கு இடையில் காளைகளின் எண்ணிக்கையில் எதிர்பாராத சரிவு.

ii) பசு வதை தடை சட்டம் இல்லாத மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பசு வதை சட்டத்தை கடுமையாக்கிய மாநிலங்களில், 2007-2012ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2012-2019ம் ஆண்டில் பசுக்களின் எண்ணிக்கை குறைந்த சதவீதமே அதிகரித்துள்ளது.

iii) பசு வதை சட்டங்கள் மற்றும் கால்நடைகளை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல தடை விதிக்கப்பட்ட மாநிலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரித்துள்ளது. பசு வதை சட்டம் இல்லாத, அவற்றை கொண்டு செல்வதற்கு தடை இல்லாத மாநிலங்களில் கால்நடை எண்ணிக்கை[அதிகரிப்பு] 15% முதல் 100% வரை (மத்திய பிரதேசத்தில் பிந்தையது) மிகவும் தெளிவாக உள்ளது.

இதில் முதலாவது பற்றி பார்த்தால், 1980களின் பிற்பகுதியில் இருந்து விவசாயத்துறையில் இயந்திரமயமாக்கல் (மாடுகளுக்கு பதில் உழவுக்கு டிராக்டர்கள் பயன்பாடு) தொடங்கியதில் இருந்து மாடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2007 மற்றும் 2012 க்கு இடையில் -18% ஆக இருந்த அகில இந்திய சரிவு, 2019க்குள் கிட்டத்தட்ட இரு மடங்காக (-30%) அதிகரித்தது.

விலங்குகளை மாநிலங்களுக்கு இடையே வாகனங்களில் கொண்டு செல்வது எவ்வாறு குற்றச்செயலாகிறது; குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வதை தடுப்பு சட்டங்கள் எவ்வாறு கடுமையாக்க உள்ளன; ‘சட்டவிரோத ’ இறைச்சிக்கூடங்கள் என்று சொல்லி, உ.பி. [உத்தரப்பிரதேசத்தில்] அவை எவ்வாறு வலுக்கட்டாயமாக மூடப்படுகிறது என்பன போன்ற கதையை, மாநிலங்களில் உள்ள மாடுகளின் எண்ணிக்கை குறித்த தரவுகள் சொல்கிறது. அவற்றின் உரிமங்களை புதுப்பிக்க அரசு தவறியதால் (இவை அனைத்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்தன) வன்முறை கண்காணிப்புடன் சேர்ந்து, அந்த மாநிலங்களில் மாடுகளின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்க செய்துவிட்டன.

முக்கிய விவசாய சீசன் முடிந்தவுடன், விவசாயிகள் தங்களது பாரம் சுமக்கும் கால்நடைகளை விற்பனை செய்வது வழக்கம், பின்னர் அடுத்த சீசனுக்கு புதிய ஜோடி கால்நடைகளில் மீண்டும் முதலீடு செய்வார்கள். வலுவான மாட்டிறைச்சி, ஆஃபல்கள் மற்றும் தோல் சந்தை வாய்ப்புகள் உள்ள நிலையில் விற்கப்பட்ட விலங்கு, வேலைக்கு தகுதியற்றதாக இல்லாவிட்டால், அதன் அசல் விலையில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்கிற்கு தான் விலை போகும். விலங்கு சந்தைகள் பெருமளவில் சரிவை ஏற்படுத்திய விழிப்புணர்வு மற்றும் கால்நடைகளை விற்க இயலாமை ஆகியன, நம்பமுடியாத அளவிற்கு அதிக விகிதத்தில் விவசாயிகள் தங்கள் காளைகளை மாற்றுவதை நிறுத்தியுள்ளன. பாரம் சுமக்கும் கால்நடைகளுக்கு பதிலாக டிராக்டர்கள் மற்றும் ரசாயன உரங்கள் என்று மாறிப்போயின.

பசுக்களை பொறுத்தவரை, விவசாயிகள் வழக்கமாக தங்கள் நான்காவது அல்லது ஐந்தாவது கன்று ஈன்ற பிறகு பாலூட்டும் தருணத்தில் அவற்றை விற்கிறார்கள்; மேலும் இவை இறைச்சிக்காக, அனுமதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும். இளைங்கன்று வாங்குவதற்கான செலவை ஓரளவு ஈடுசெய்ய இந்த பணம் பயன்படுத்தப்படும். முந்தைய கணக்கெடுப்போடு ஒப்பிடும்போது பசுக்களின் எண்ணிக்கையில் மிக மெதுவான சதவீதம் அதிகரிப்பு என்பது, இதன் மூலம் மீண்டும் தெளிவாகத் தெரிகிறது.

பசு வதைக்கு தடை இல்லாத மேற்கு வங்க மாநிலத்தில் பசுக்களின் எண்ணிக்கையில் 34% அதிகரித்துள்ளது. தனிப்பட்ட கால்நடைகளுக்கு சந்தை மதிப்பு இல்லாவிட்டால் என்ன நடக்கும்? அவை புறக்கணிக்கப்பட்டு பட்டினி கிடக்க நேரிடும். ஏற்கனவே கலப்பின வளர்ப்பு காளை கன்றுகளில் இதுதான் நடக்கிறது; அவை நாட்டு இன கால்நடைகளுடன் ஒப்பிடும்போது வேளாண் பணிகளில் மோசமாக செயல்படுபவை.

பாரம்பரியமாக வயதான கால்நடைகள் என்னவாகின?

அவை எப்போதும் இறைச்சிக்காக விற்கப்பட்டு வந்துள்ளன. மாட்டிறைச்சி நமது பாரம்பரியமாக உணவு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, மேலும் தோல் மற்றும் இன்னும் பிற பொருட்கள், பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும்.

பசுவதை தடைக்கு பிறகு, தனிப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநிலங்களவையில் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. வயதான கால்நடைகள் விவசாயிகளை எவ்வாறு பாதிக்கின்றன?

தனிப்பட்ட கால்நடைகள் யாருக்கும் சொந்தமானதல்ல; ஆனால் அவையும் சாப்பிட்டாக வேண்டும். எனவே அவை மேய்ச்சல் பகுதிகள், வயல்களில் நுழைகின்றன; பயிர்களை மேய்கின்றன; எந்த வகையிலாவது தண்ணீரை பருக முயற்சிக்கின்றன. விவசாயிகள் விலங்குகளை வெளியேற்ற, அவற்றை துரத்த, அடிக்கின்றனர்; துன்புறுத்துவது என எந்தவொரு வழியையும் கையாளுகின்றனர். இது, கால்நடைகளை கோபப்படுத்தி, அவை தாக்குகின்றன.

வயதான கால்நடைகள் ஏழை விவசாய குடும்பங்களுக்கு ஒரு பொருளாதார மற்றும் தொழில் ரீதியான பெரும் சுமையாகும். அவர்கள் பெரும்பாலும் தலித், வெகுஜன மக்கள் மற்றும் முஸ்லீம்கள் ஆக உள்ளனர். அவர்களுக்கு உணவு, மேய்ச்சல், நீர்ப்பாசனம், சுத்தம் மற்றும் சுகாதாரம் தேவைப்படுகிறது. இந்த உழைப்பை யார் தருகிறார்கள்? பெண்கள். ஊதியம் பெறாத பெண்களின் உழைப்பு நேரம் தான், பிராமணத்தின் புனித பசு கலாச்சாரத்தை நிலைநிறுத்துகிறது. மாட்டு சாணம் மற்றும் கோமியம் விற்பனையால் கிடைக்கும் வருமானம், மேற்கூறியவற்றை சிறிதும் ஈடுசெய்யாது.

உத்தரப்பிரதேசத்தில் இறைச்சிக்கூடத்தின் மீதான ஒடுக்குமுறை காரணமாக, இறைச்சிக்கடைக்காரர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஆனால், கார்ப்பரேட் வணிகங்ளுக்கு பாதிப்பின்றி ஆதாயம் பெற்றதாக, ஜூலை 2017 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. உங்கள் ஒரு கட்டுரையில், பசு இறைச்சி கூடங்களுக்கு தடை விதித்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய சந்தையில் நுழைய முடியும் என்று சொன்னீர்கள். அது எப்படி என்பதை விளக்க முடியுமா?

இந்த முடிவுகள், மாட்டிறைச்சி விநியோக சங்கிலியை எவ்வாறு முற்றிலுமாக சீர்குலைத்துள்ளன என்பதை உங்கள் கட்டுரை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இது முதன்மையாக முஸ்லிம் குடிமக்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பாக இருந்தது. ஆகவே, சட்டபூர்வமான மற்றும் சுகாதாரத்தின் கீழ், முஸ்லிம்களை வேண்டுமென்றே குறிவைக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழிக்கவும் அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதை செய்வதன் மூலம், மாட்டிறைச்சியில் உள்ள பெரிய தனியார் பங்களிப்பாளர்கள், ஏற்றுமதி புள்ளிகளாக உருவாக்கப்பட்டு, உள்நாட்டு மாட்டிறைச்சி சந்தைகளில் ஏகபோக உரிமையை உறுதிப்படுத்தியுள்ளனர். ‘சட்டவிரோத இறைச்சிக்கூடங்கள்’ என்று அழைக்கப்படுவது மூடப்படுவது, சந்தையின் ஏகபோக உரிமையை ஏற்படுத்தியுள்ளது. மாட்டிறைச்சியை விற்கும் சிறு கசாப்புக் கடைக்காரர்களை, இத்தகைய பெரிய ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்க கட்டாயப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உணவு பதப்படுத்துதல் மற்றும் கால்நடை வளர்ப்பில் 100% அன்னிய நேரடி முதலீடு [எப்.டி.ஐ.] உள்ளது. இந்திய பால் சந்தைகள், லு-லாக்டாலிஸ்- திருமலை பால், ஃபோன்டெர்ரா-பியூச்சர் பால், டானோன்-எபிகாமியா போன்ற உலகளாவிய பால் நிறுவனங்களுக்கு தான். இதுபோன்ற வர்த்தக கூட்டாண்மை மற்றும் கூட்டு முயற்சிகளை நாங்கள் ஏற்கனவே கண்டிருக்கிறோம். எனவே, இந்திய மாட்டிறைச்சித் தொழிலில் இருந்து பெற வேண்டிய சில இலாபங்களை கைப்பற்றுவதில் உலகளாவிய மாட்டிறைச்சி நிறுவனங்களின் ஆர்வத்தை கற்பனை செய்வது சாத்தியமான எல்லைக்கு வெளியே இல்லை.

சமீபத்தில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ இந்தியாவுக்கு வந்த போது, 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் ஒன்று கால்நடை வளர்ப்பு. இந்தியாவிற்கும் பிரேசிலுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதே அந்த நாட்டு தூதுக்குழுவின் முதன்மை நோக்கம் என்று தொழில் அறிக்கைகள் வெளியாகின. உலகளாவிய மாட்டிறைச்சி சந்தையில் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜே.பி.எஸ் உள்ள நிலையில், வேளாண், உணவு பதப்படுத்துதல் மற்றும் இறைச்சி மற்றும் கோழிப்பண்ணை தொழிலில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

பசு வதைக்கு தடை என்பது விவசாயிகளுக்கு உதவியதா? உள்நாட்டு இனங்களை அது பாதுகாக்கிறதா? உள்நாட்டு கால்நடை இனங்கள் இந்தியாவில் 2012ம் ஆண்டில் 151 மில்லியனில் இருந்து 2019இல் 142.1 மில்லியனாகக் குறைந்துவிட்டன; அதே நேரத்தில் கலப்பினங்கள் 39 மில்லியனில் இருந்து 50 மில்லியனாக அதிகரித்தன.

இதுபற்றி நான் முன்பே எழுதியுள்ளேன்; மற்றும் வழிநடத்தும் கொள்கைகளின் 48வது பிரிவு --“நவீன மற்றும் விஞ்ஞான அடிப்படையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஒழுங்கமைக்க அரசு முயற்சிக்கும்; குறிப்பாக, இனங்களை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், பசுக்கள், கன்றுகள் மற்றும் பாலை தரும் மற்றா கால்நடைகளை வதை செய்வதை தடை செய்யும்”-- அதன் வெளிப்பாடு, அடிப்படையில் குறைபாடுடையது என்பதை மீண்டும் கூறுகிறேன். கால்நடைகள் உட்பட உயிரினங்களின் பாதுகாப்பை நோக்கி விலங்கு உற்பத்தியின் சுழற்சியை நீடித்த முறையில் செயல்படுத்துவதற்கும் சமநிலைப்படுத்துவதற்கும், வதைக்கூடங்கள் இருக்கும் நிலையில், அவை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தவறாக, பிரிவு 48 இல், கால்நடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வதைத்தல் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த 22வது பிரிவு, இன்று வரை நம்மைத் தொடர்ந்து வேட்டையாடுகிறது மற்றும் மோசமான முடிவுடன் சேவை கையாளப்படுகிறது.

அடுத்து கலப்பினங்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் நாட்டு இனங்களின் வீழ்ச்சியைப் பார்ப்போம். 1960களில் இருந்து பல்வேறு ‘புரட்சிகள்’ வழியாக பல்வேறு மாநில கொள்கை முடிவுகளுக்கு, விவசாயிகள் தந்த பதில்கள் இனப்பெருக்க கலவையில் மாற்றத்திற்கான ஒரு உந்து காரணியாகும், அவை: பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு ‘கால்நடைகள்’. 1960களில் அதிக நீர்ப்பாசன பகுதிகளில் தொடங்கிய விவசாயத்தின் இயந்திரமயமாக்கல், பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு, உலர் நிலப்பகுதிகளில் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருந்து, விவசாய நடவடிக்கைகளை இயந்திரமயமாக்குவதில் விமர்சன ரீதியாக ஈடுபட்டது.

கடந்த 1972 மற்றும் 2007 க்கு இடையில், இந்தியாவின் பாரம் இழுக்கும் / பணிக்கான கால்நடைகளின் எண்ணிக்கையில் விரைவான சரிவு ஏற்பட்டது; இது 20 மில்லியனுக்கும் அதிகமாக சரிந்தது. விவசாய நடவடிக்கைகளின் விரைவான இயந்திரமயமாக்கலுக்கு இந்த சரிவு கல்வி ஆய்வுகள் தெளிவாகக் கூறுகின்றன. வரைவு விலங்குகளின் பங்களிப்பு 1971 மற்றும் 1991ம் ஆண்டுக்கு இடையில் 61% முதல் 23% வரை கணிசமாகக்குறைந்தது. 1980களில் இந்த சரிவு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். 1996-97ம் ஆண்டில், விலங்குகளின் பங்களிப்பு 14% ஆகவும், இயந்திர மற்றும் மின்சக்தி 79% ஆகவும் அதிகரித்தது. இந்தியாவில் இயந்திரமயமாக்கலில் இருந்து விவசாய மின்சாரம் 1971-72ல் ஒரு ஹெக்டேருக்கு 0.32 கிலோவாட் (கிலோவாட் / எக்டர்) என்று இருந்தது, 2000-2001ல் எக்டருக்கு 1.21 கிலோவாட் ஆக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மனித மற்றும் கால்நடைகளின் சக்தி 58% முதல் 17% வரை குறைந்துள்ளது என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை வளர்ப்பு மூலம் பால் உற்பத்தி பெருக்கத்தை இலக்காகவும் தீவிர இலக்காக கொண்ட வெண்மைப்புரட்சி, கால்நடைகளின் திறனை ஓரங்கட்டியது. கால்நடை வளர்ப்புக்கு ஒதுக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பட்ஜெட் திட்டங்கள், முக்கியமாக பால் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக இருந்தன; அதிக மரபணு திறன் கொண்ட கால்நடை இனங்களான ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன்ஸ் மற்றும் ஜெர்சி ஆகியவற்றிடம் இருந்து பெறப்பட்ட ஊட்டமுள்ள விந்துவை, உள்ளூர் நாட்டு மாடுகள் செலுத்தி கலப்பின கால்நடைகளை மேம்படுத்துவதன் மூலம், அவை பால் உற்பத்தியை அதிகரிக்கும்.

இத்தகு எச்.எஃப் / ஜெர்சி மற்றும் உள்ளூர் மாட்டினங்களின் சந்ததிகளான கலப்பினங்கள், நாட்டு மாட்டினங்களை விட சராசரி பால் விளைச்சலின் மரபணு திறனைக் கொண்டுள்ளது. இருந்தபோதும் , இன்றும் அது ஆதிக்கம் செலுத்துவது தொடர்கிறது; ‘இந்தியாவில் ஒரு பசுவின் சராசரி பால் உற்பத்தி என்பது, அமெரிக்கா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் பசுவின் சராசரி பால் உற்பத்தியை விடவும் மிகக்குறைவு; அதன் உற்பத்தித்திறனை நாம் மேம்படுத்த வேண்டும்’.உள்நாட்டு கால்நடை இனங்கள் நான்கு நோக்கம் கொண்டவை: பாரம் இழுத்தல், பால், சாணம் மற்றும் இறைச்சி / மாட்டிறைச்சி. விவசாயம், உணவு, வருமானம் மற்றும் மண் ஆகியவற்றின் பல தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவை வளர்க்கப்பட்டன.

முறையான / ஒழுங்கமைக்கப்பட்ட பால் சந்தைகளின் -- இந்தியாவில் 300 மில்லியன் வலுவான நடுத்தர மற்றும் உயர் வர்க்கங்கள் மற்றும் மேலாதிக்க சாதிகளின் அடிமட்ட விருப்பத்தை சந்திக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் தயாரிப்பு-- விரிவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பால் தேவையை மேலும் உயர்த்தியுள்ளன. விவசாயிகள் தங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தி, பழங்குடியினரைக் காட்டிலும் கலப்பின வளர்ப்பு மாடுகளை வளர்ப்பதன், இதற்கு பதிலளித்தனர்.

உள்நாட்டு இனங்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பசு வதைக்கு எந்த தொடர்பும் இல்லை. சில மாநிலங்களில் தற்போது பசுவதைக்கு தடை இருந்தபோதும், கால்நடைகளை மாநிலத்திற்கு வெளியே கொண்டு செல்லும் திறன், விவசாயிகளுக்கு அவர்கள் விரும்பிய கால்நடைகளில் மீண்டும் முதலீடு செய்ய உதவியது.

இந்தியாவின் தோல் தொழிற்துறை ஏற்றுமதி, 2013-14 ஆம் ஆண்டில் 18%க்கும் அதிகமான வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2018-19 நிதியாண்டில் 5%; 2017-18 முதல் காலாண்டில் 3% குறைந்துள்ளது, சமீபத்திய புள்ளி விவரங்களை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தரவுகள் தெரிகிறது. பசுவதை தடை விவசாயத்தைத்தவிர மற்ற துறைகளை எவ்வாறு பாதித்தது?

உங்களது புள்ளி விவரங்களே உண்மை நிலவரத்தை பேசுகின்றன - இது தோல்கள் மற்றும் தோல் சார்ந்த பொருட்களின் உற்பத்தியை சார்ந்துள்ளவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட்டது. இந்தியா ஏன் இன்று அமெரிக்காவில் இருந்து கால்நடை தோல்கள் மற்றும் அது தொடர்புடைய பொருட்களை இறக்குமதி செய்கிறது மற்றும் சீனாவில் இருந்து தோல் பொருட்களை பதப்படுத்துகிறது? உள்ளூர் வீழ்ச்சியுடன் இதற்கு நேரடியாக தொடர்பு இருக்கலாமே? அதே நேரத்தில், தோல் மற்றும் அதுசார்ந்த பொருட்களுக்கான ஏற்றுமதி வரிகளை இந்தியா 60%ல் இருந்து 40% ஆகக் குறைத்து இருக்கிறது. இதற்கு, தோல் தொழில் செய்வோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோ ரக்ஷக்குகள் (பசு பாதுகாவலர்கள்) பசுக்களின் சட்ட பரிவர்த்தனைகளுக்கு உதவுகின்றனர்; அதே நேரத்தில் கோசாலைகள் (மாட்டு தொழுவம்) பழைய மாடுகளை கவனித்துக்கொள்ள உதவுகின்றன என்று, ராஷ்டிரிய காமதேனு ஆயோக் (தேசிய பசுக்கள் ஆணையம்) தலைவர் வல்லப் கட்டாரியா, இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அவருடைய கருத்தில் நீங்கள் உடன்படுகிறீர்களா?

இந்தியாவின் கால்நடை செல்வத்தை சார்ந்து பின்னிப் பிணைந்திருக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பதில் தான் பசு பாதுகாவலர்களும், கோசாலைகளும் வெற்றிகரமாக பங்களிப்பு செய்கின்றன. கொலை செய்யப்படுவோமோ என்ற பயம் விவசாயிகளை, கால்நடைகள் (ஆண், பெண்) மற்றும் விவசாயிகள் அல்லாதவர்கள் கால்நடைகளை வர்த்தகம் செய்வதை தடுக்கிறது. கால்நடைகள் மிகவும் கொடூரமான சூழ்நிலையில் வாழ நிர்பந்திக்கப்படுகின்றன; பட்டினியால் இறந்து, நெரிசலான கால்நடை முகாம்களில் சிக்கித் தவிக்கின்றன. இது கொடுமை அல்லாமல் வேறென்ன?

பசுவதை தடுப்பு சட்டங்களும், அதிகாரத்தில் இருப்பவர்களின் பசு பாதுகாப்பு சித்தாந்தங்களுடன் இணைந்து, இதுபோன்ற பசு பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்வோருக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குகின்றன.

இறுதியாக, உற்பத்தி செய்யப்படாத பசுவை அப்புறப்படுத்துவதில் வேண்டுமென்றே தரவு இடைவெளிகள் நிறைய உள்ளன, அவை நேர்மையாக பதிவு செய்யப்படாமல் பொதுகளத்தில் வெளியிடப்படுகின்றன. உண்மையில் மாடுகளுக்கு என்ன நடக்கிறது? உதாரணமாக வளர்ந்து வரும் கலப்பின பசுக்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வோம். பசு சார்ந்த விவசாயப்பகுதிகள் (நிச்சயமாக இப்போது எருமை சார்ந்த பெல்ட்) இந்தியாவில் எங்கே? குஜராத் அல்லது மகாராஷ்டிரா அல்லது ராஜஸ்தான். அங்குள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது பாலூட்டுதல் கலப்பின மாடுகளை என்ன செய்வது? ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து சட்டப்பூர்வமாக சாத்தியமான முறைகளில் கால்நடைகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அவை எங்கே மர்மமாக மறைந்து போகின்றன?

கால்நடைகளின் தவறான எண்களின், தற்போதைய அவற்றின் எண்ணிக்கை கணக்கெடுப்புத் தரவு (பசு தங்குமிடங்களில் உள்ள மாடுகளின் எண்ணிக்கையில் முற்றிலும் இல்லாத தரவுகளுடன்) ஒவ்வொரு ஆண்டும் இட மாற்றம் செய்யப்பட வேண்டிய கால்நடைகளின் எண்ணிக்கை வரை இல்லை. விவசாயிகள் வெளிப்படையாக இந்த கால்நடைகளை அப்புறப்படுத்துகிறார்கள் - தற்போதைய எண்ணிக்கை கணக்கெடுப்பில் கால்நடைகளின் தவறான எண்ணிக்கையை பெருமளவில் குறைத்து மதிப்பிட்டுள்ளனர் அல்லது உற்பத்தி செய்யாத பசுக்களில் பதிவு செய்யப்படாத வர்த்தகம் உள்ளது. உதாரணமாக, பசு வியாபாரத்தில் கோ ரக்ஷக்குகளின் பொருளாதார நலன் பற்றி சில அறிக்கைகள் கூறினால், இது விளக்கமாக இருக்கலாம்.

இன்று இந்தியாவை ஆளும் பிராமணிய இந்திய கலாச்சார மற்றும் அரசியல் படைப்பிரிவின் கொடூரமான அரசியலமைப்பற்ற வன்முறைக்கு பயந்து, அரசு கால்நடை மருத்துவர் உட்பட அனைவரும் உண்மையை தெரிவிக்க அஞ்சுகின்றனர்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.