பதனம்திட்டா: தொற்று பயத்தால் ஏற்படும் கவலை; குற்றம், அவமானம் மற்றும் தனிமைப்படுத்தலின் போது கைவிடப்பட்ட உணர்வுகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை ஆகியன - கோவிட் 19 உள்ள பலரின் மன நலனை பாதிப்பது தெரிய வந்துள்ளது. இது புதுடெல்லி, தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரில், தற்கொலையில் தள்ளிவிட்டிருப்பதாக, கூறப்படுகிறது. கேரளாவில், சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஒருவரை, அவரது குடும்பத்தினர் தொற்றுநோய் பரவும் அச்சத்தால் திருப்பி அனுப்பியதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

தொற்றுநோயை எதிர்ப்பு நடவடிக்கையாக மக்கள் தனிமைப்படுத்தப்படுவது அதிகரித்து வருவதால், இந்த துயரில் இருப்பவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்குவதை உறுதி செய்வது மிக முக்கியம் என்று, கேரளாவின் பதினம்திட்டாவில் உள்ள கோசஞ்சேரி மாவட்ட அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவர் சுகேஷ் ஜி கூறினார். 2020 மார்ச் 18 ஆம் தேதி வரை, கேரளாவின் அதிக எண்ணிக்கையிலான கோவிட் 19 வழக்குகள் இந்த மாவட்டத்தில் தான் இருந்தன; மேலும் 7,200 க்கும் மேற்பட்டோர் வீட்டில் தனிமையில் இருந்தனர் (மார்ச் 31, 2020 நிலவரப்படி).

மார்ச் 8, 2020 முதல், பதினம்திட்டாவில் முதலாவது கோவிட் நேர்மறை நோயாளி என கண்டறியப்பட்டபோது, சுகேஷ் மற்றும் அவரது 50 பேர் கொண்ட மருத்துவர்கள், உளவியலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் குழு அழைக்கப்பட்டது. மனநல உதவி தேவைப்படுபவர்கள், குறிப்பாக 14 முதல் 28 நாள் தனிமைப்படுத்தப்பட்டு பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆலோசனை வழங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

.கேரள மாநிலத்தில், மாவட்ட மனநல திட்டக்குழுவில் (டி.எம்.எச்.பி) ஒருவராக சுகேஷ் உள்ளார். இந்த அமைப்பு, 2018 வெள்ளத்திற்குப் பிறகு மனநல உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்க அறிமுகம் செய்யப்பட்ட பரிக்ஷா என்ற ஒரு பரிச்சார்த்த முயற்சியாகும். இத்தகைய ஆதரவு இல்லாதது "நீண்ட கால ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கும்" என்று, கேரள வெள்ளத்திற்குப் பிறகு உணரப்பட்டது. மாவட்ட மனநல திட்டத்தின் ஒரு பகுதியாக, பேரிடருக்கு பிந்தைய மனநல உளவியல் ஆலோசனை பட்டறைகளில் அவர் கலந்து கொண்டார்; வெள்ளம் ஏற்பட்ட உடனேயே களப்பணிகள் மற்றும் சமூக தலையீடுகளை நடத்திய குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.

அவரது நேர்காணலில் இருந்து திருத்தப்பட்ட பகுதிகள்:

நோய் பரவல் போன்ற பெரிய அளவிலான நெருக்கடிகளின் போது மனநல ஆலோசனைகளை வழங்கும் வலையமைப்பின் அவசியத்தை மாநில அரசு எப்படி உணர்ந்தது?

கடந்த 2018 வெள்ளத்திற்கு பிறகு உளவியல் -சமூக அறிவுறுத்தல்கள் தேவைப்பட்டது. அதுவரை நாங்கள் அத்தகைய அறுவுறுத்தல்களை மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு ஒரு நீண்ட கால திட்டம் தேவை என்று முடிவு செய்யப்பட்டது. கேரளாவில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு வருட ஒப்பந்தத்தில் ஒரு ஆலோசகருடன், பரிக்ஷா திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. இதற்கு முன்பு, [மாவட்ட] மருத்துவமனைகளில் மனநல பிரிவுகள் இணைக்கப்பட்டிருந்தன, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு டி.எம்.எச்.பி இருந்தன. பரிக்ஷாவில் மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், மனநல சமூக சேவையாளர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மருந்தாளுநர்கள் உள்ளனர். இது ஒரு பெரிய அளவிலான ஆலோசனைக்கு போதுமானதாக இல்லை; அதனால் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆலோசகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் பெரும்பாலான மக்கள் என்ன வகையான மனநல ஆதரவை நாடுகிறார்கள்?

கடினமானவற்றில் ஒன்று, 14 முதல் 28 நாள் மருத்துவமனை அல்லது வீட்டில் தனிமையில் இருப்பது தான். [இந்த காலகட்டத்தில்], தனிமையில் இருப்பவர்களின் சுதந்திரம் குறைக்கப்படுகிறது, அவர்களிடம் சலிப்பு உள்ளது, மேலும் அவர்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் தொற்றுநோயைப் பரவுமோ என்று கவலைப்படுகிறார்கள் அல்லது குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். அவர்கள் மீதான பழி, மற்றொரு பெரிய பிரச்சினை. இது மருத்துவமனை ஊழியர்களையும் தனிமையில் பாதிக்கிறது. உங்கள் நெருங்கிய குடும்பம் எல்லா தகவல்தொடர்புகளையும் முறித்துக் கொள்ளாமல் போகலாம்; ஆனால் மற்றவர்கள் முறித்துக் கொள்ளலாம். அதன் தீவிரம் மாறுபடலாம், ஆனால் தனிமையில் இருப்பவர்கள் வெவ்வேறு நிலைகளில் பழியை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

பெரும்பாலும், நாங்கள் கவனித்ததில் மக்கள் எங்களை அழைக்க கவலைதான் காரணம். தனிமைப்படுத்தப்பட்ட அறிகுறி இல்லாத நபர்கள் வழக்கமான அடுத்த கோவிட் 19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. எனவே சோதனைக்கான அவர்களின் கோரிக்கைகள் ஏற்கவோ, மகிழ்வூட்டுவதாகவோ இல்லை. இது அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு நோயை பரப்பக்கூடும் என்ற கவலைக்கு வழிவகுக்கிறது. இது தூக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது. இரண்டாவதாக, சமூகத்தில் உள்ள மற்றவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம் பற்றி [வதந்திகள்] பேசுகிறார்கள்; இது மக்கள் அவர்களை தவிர்க்க வழிவகுக்கும்; ஒரு கடையில் அவர்களுக்கு ஏற்பாடுகள் மறுக்கப்படலாம். இது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.

நமது சமூகத்தில் மனநல பிரச்சினைகளை குறைவாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

ஆமாம். உடல் நோய்களை காட்டிலும் மனநலப்பிரச்சினைகளுக்கு குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அறியாமை, பழிச்சொல் உள்ளிட்டவை இதற்கு காரணாமாக உள்ளன. [2018] வெள்ளத்திற்கு பிறகு [மன ஆரோக்கியம் பற்றி] பெரிய உணர்தல் வந்தது. இது நீண்ட காலத்திற்கு நமது ஒட்டுமொத்த நல்வாழ்வை பாதிக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

உங்கள் குழு எவ்வாறு ஆதரவை வழங்குகிறது?

தனிமையில் இருப்பவர்களுக்கு ஏதேனும் மனநல பிரச்சினைகள் இருந்தால் எங்கள் குழு அழைக்கிறது மற்றும் பரிசோதிக்கிறது. அவர்கள் இல்லை என்று அவர்கள் கூறினாலும், எங்கள் தனிப்பட்ட எண்களையும், எதிர்கால பயன்பாட்டிற்காக அரசின் [சுகாதார] ஹெல்ப்லைன் எண்ணையும் [திஷா] தருகிறோம். 3-4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அழைக்கிறோம். கூடுதலாக, வீடு மற்றும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை நாங்கள் அழைக்கும் போது தனிமைப்படுத்தலை பின்பற்றுவதையும் [எங்கள் கட்டுரையை இங்கே படியுங்கள்] குழு சரிபார்க்கிறது. தேவைப்பட்டால், மனநல மருத்துவர்கள் மருத்துவமனையில் கோவிட் 19 நோயாளிகளுக்கு தனிப்பட்ட ஆலோசனையை வழங்குகிறார்கள்.

மனநல மருத்துவராக நீங்கள் எத்தனை முறை ஆலோசனை வழங்க வேண்டியிருந்தது?

நாங்கள் தினமும் அழைப்பு விடுக்கிறோம். நான் 100க்கும் மேற்பட்ட அழைப்புகளை செய்துள்ளேன் [மார்ச் 8, 2020 முதல், பதனம்திட்டாவில் கொரோனா நேர்மறையான நோயாளி முதலில் கண்டறியப்பட்ட பின்னர்]. ஆலோசகர்களை தவிர தற்போது மூன்று மனநல மருத்துவர்கள் உள்ளனர் [டி.எம்.எச்.பி. இல் இருந்து 22 பேரும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகளில் இருந்து 26 பேரும்]. நாங்கள் சராசரியாக 15 முதல் 20 நிமிடங்கள் பேசுகிறோம்.

அழைப்பு விடுப்பதற்கும் நேரில் ஆலோசனை செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இரண்டாவதில் நாம் வழங்கக்கூடிய ஆறுதல், அதிகமாக உள்ளது. மேலும் அதில் நம்ப வைக்கும் திறன் ஒப்பீட்டளவில் சிறந்தது.

முற்றிலும் புதிய நெருக்கடியான இந்த தொற்றுநோயை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

கடந்த 2018 ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட உடனேயே, நாங்கள் [மன ஆரோக்கியம் தொடர்பான] பல மாநில அளவிலான ஆலோசனை பட்டறைகள் நடத்தினோம். இப்பட்டறைகள் மனநல பிரச்சினைகள் மற்றும் ஒவ்வொன்றிற்கான ஆலோசனைகளை பற்றி விவாதித்தன. இருப்பினும் இது பெரும்பாலும் வெள்ளம் தொடர்பான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்பான அறிகுறிகளை- தூக்கம், போதைப் பொருள் துஷ்பிரயோகம், பதட்டம், தற்கொலை போன்ற நிர்வகித்தல் மற்றும் மதிப்பிடுவதைப் பார்த்தோம். எனவே பெரிய அளவிலான பேரழிவுகளைச் சமாளிக்க உதவும் உளவியல்-சமூக தலையீட்டிற்கான பரந்த வழிகாட்டுதல்கள் இப்போது எங்களிடம் உள்ளன.

அது ஒரு குடும்பம் என்றால், அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கவலைகள் இருக்கும் என்பதால், அவர்களுக்கு நாங்கள் ஒரே ஆலோசனை கூறலாம். இது மனநல கண்ணோட்டத்தில் ஒன்றாக இருக்க உதவுகிறது. நோயாளிகளுக்கு பொழுதுபோக்குக்காக புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வழங்கப்பட்டாலும், அவர்கள் சலிப்பை உணர்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது அதுவே அவர்களுக்கு ஒரு நிவாரணம்.

இந்த ஆலோசனைகளை முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும் விரிவுபடுத்துகிறீர்களா?

அறியாமை மற்றும் தகவல் இல்லாதது ஆகியவற்றில் இருந்து களங்கம் உருவாகிறது. ஒரு மருத்துவமனைக்குள் தனிமை வார்டில் பணிபுரிபவர்களும் கூட இத்தகைய களங்கத்திற்கு ஆளாகிறார்கள். டாக்டர்கள் தங்களது வீடுகளில் பூட்டப்பட்டிருந்த சம்பவங்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணிபுரிவதால், ஆண் செவிலியர்கள் அவர்களது தங்குமிடத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட சம்பவங்கள் உள்ளன. இதற்கு அடிப்படை காரணம் பயம். களங்கம், குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சிகிச்சையின்றி ஒரு நோய்க்கு எதிராக, சரியான விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களுக்கான தகவல் திட்டங்கள் மூலம் நிர்வகிக்க முடியும்.

ஆலோசனை வழங்குவோருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும் (பிபிஇ) தேவையா?

[கோவிட்-19 நோயாளிகளை கையாள] தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.) அணிய பயிற்சி பெற்றிருக்கிறோம். இது அணிவது சங்கடமாக, சுவாசிக்க சற்று கடினமாக இருக்கும். மேலும் அந்த நபருக்கு [ஆலோசனை வழங்கப்படுவதால்] நாம் சொல்வதை தெளிவாகக் கேட்க முடியாது. 10 நிமிடங்கள் கூட பேசுவது கடினம்; ஏனென்றால் நாம் பேசுவது, அவர்களுக்கு கேட்கும்படி சத்தமாக இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவர்களை அணுகுவதில் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; அவர்களின் பிரச்சினைகள் குறித்து நாம் கேட்கும்போது, அது அவர்களை அமைதிப்படுத்துகிறது. அவர்கள் கைவிடப்படவில்லை என்பதை இது வெளிப்படுத்துகிறது.

கோவிட் 19 தொடர்பான தற்கொலை புதுடெல்லியில் நிகழ்ந்ததாக ஒரு செய்தி உள்ளது. இதில் யாரேனும் தீவிர அழுத்தத்தில் இருப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

இத்தகைய எண்ணங்கள் பயத்தால் ஏற்படலாம் -‘இது கடுமையாகிவிட்டால் என்னவாகும் அல்லது எனக்கு சோதனையில் நோய் உறுதியாகிவிட்டால் எனக்கு என்ன நடக்கும்?’ அல்லது ‘என்னால் எனது குடும்பம் பாதிக்கலாமா? அவர்கள் என்னை கவனித்துக் கொள்வார்களா?’. எனவே எதுவும் நடப்பதற்கு முன்பு, அவர்கள் இந்த [தீவிர] நடவடிக்கையை எடுப்பார்கள். ஆனால் இதுபோன்ற பல நிகழ்வுகளை நாங்கள் சந்திக்கவில்லை. பொதுவாக இது பயம், தற்கொலை, கவலை அல்லது மனச்சோர்வு அல்ல. மனநல மருத்துவர்கள் இத்தகைய நிகழ்வுகளை கையாளுகிறார்கள்; ஆலோசகர்கள் பதற்றம் அல்லது தூக்கம் தொடர்பான சிறிய பிரச்சினைகளுக்கு அடிப்படை ஆலோசனைகளையே வழங்குகிறார்கள்.

ஆலோசனை வழங்கப்பட்டு இருந்தபோதும் கவலை கொண்ட ஒரு சிலருக்கு நாங்கள் மருந்துகளை வழங்க ஆரம்பிக்க வேண்டியிருந்தது. அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டால், நாங்கள் இங்கே மருந்து வழங்குகிறோம்; அல்லது டி.எம்.எச்.பி குழு மருந்துகளை ஊராட்சிகளில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு வழங்குகிறது.

விடுவிப்புக்கு பிந்தைய கட்டத்தில் நீங்கள் என்ன வகையான ஆதரவை காண்கிறீர்கள்?

களங்கம் ஏற்படுமோ என்பதில் ஆதரவு தேவைப்படும். ஆனால் பொதுவாக சமூக பரவல் இருந்தால், களங்கம் பற்றிய கேள்வியே இல்லை. இது நேரத்தில் குறையும் மற்றும் சமூகங்கள் முன்னேறும். மருத்துவமனை அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் அறிகுறிகள் இல்லாதவர்கள் உட்பட பெரிய சமூகத்திற்காக இதைச் செய்கிறார்கள் என்பதை ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். எங்களுக்காக அவர்களின் சுதந்திரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நேர்மறையான செய்தியை நாம் தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களை தனிமைப்படுத்தலில் சந்திக்க முடியாது என்பது புரிந்துகொள்ள முடியாதது; ஆனால் மக்கள் ஏன் அவர்களின் நல்வாழ்வைப் பற்றி அழைத்து விசாரிக்கக்கூடாது?

இந்த செய்தியை ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் கொண்டு செல்கிறோம். இப்போதைக்கு, அதிகரித்து வரும் நோயாளிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது; அதேநேரம், விடுவிக்கப்பட்டவர்களுக்கு எங்களது தொலைபேசி எண்கள் கிடைக்கின்றன.

(பால்லியாத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.