புதுடெல்லி: பீட்டர் பிரேமும், அவரது மனைவியும், கோவிட்19 நேர்மறையை உறுதி செய்த பிறகு, ஆகஸ்ட் 2020 இல் பெங்களூரு செயின்ட் ஜான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் லேசான அறிகுறிகள் இருந்தன, ஆறு நாட்களில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் பிரேமின் விடுவிப்பு (discharge) அறிக்கை, எதிர்பாராத நோய் இருப்பதை - அதாவது அவருக்கு நீண்டகால சிறுநீரக நோய் இருப்பதை- காட்டியது. இதற்கு முன்னர் அவருக்கு இதுபற்றி எதுவும் தெரியாது.

பிரேமின் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் மற்றும் அல்லைய்டு இன்ஷூரன்ஸ், மருத்துவ சிகிச்சைக்கான தொகையை செலுத்த மறுத்தது. ஏனென்றால், அவரது சிறுநீரக நோய் “நீண்டகாலமானது” என்றும், அதன் வரலாற்றைக் கண்டறிய முடியாது என்றும் கூறியது, பிரேமிற்கு அவர்கள் அனுப்பிய ஆவணங்களை இந்தியா ஸ்பெண்டால் மதிப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.

தனது காப்பீட்டுக் கொள்கையை வெளியிடுவதற்கு முன்பு முறையான மருத்துவப்பரிசோதனையில் சிறுநீரக பிரச்சினை எதுவும் காட்டப்படவில்லை என்று, நிறுவனத்திடம் பிரேம் தெரிவித்தார். அவர் மருத்துவமனை மீதும் குற்றம்சாட்டினார், அவரது வெளியேற்ற அறிக்கையில் சிறுநீரக நோய் பற்றி குறிப்பிடப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை, ஆனால் சிறுநீரக நோய் பற்றி குறிப்பிடாத திருத்தப்பட்ட, விடுவிப்பு அறிக்கையை பிரேமிற்கு அனுப்பியது.

“எனது தந்தையின் மருத்துவக்காப்பீடு உரிமைகோரலுக்கு தங்களால் ஏற்க முடியாது என்று காப்பீட்டு நிறுவனத்தின் உதவி மையம் எங்களிடம் கூறியது, ஏனெனில் அவரது காப்பீடு ஊரடங்கு காலத்தில் இருந்தது, மேலும் அதில் கோவிட் தொற்று சேர்க்கப்படவில்லை” என்று பிரேமின் மகன் ஆண்ட்ரே பீட்டர் கூறினார். பிரேமின் காப்பீடு, ஊரடங்கு காலத்தில் (ஒருவர் பாலிசியை வாங்கும் போது ஒருவர் உண்மையில் அதைப் பயன்படுத்தலாம்) ஒரு மாதத்தையே கொண்டிருந்தது. அதாவது அவருக்கு கோவிட19 ஏற்படும் ஒரு மாதத்திற்கு முன்பு ஜூலை மாதத்தில் காப்பீடு செய்தார். வயதான தம்பதியினரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பினர், ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி கர்நாடக அரசு உதவி மையம், அவர்களுக்கு அறிவுறுத்தியது. ஆரம்பத்தில் மருத்துவமனையை விட்டு வெளியேற விரும்பிய பிரேம், தனது கட்டணத்தை செலுத்தி விடுவித்துக் கொண்டார். காப்பீட்டு நிறுவனம், இதற்கான தொகையைச் செலுத்தக்கோரி, அந்த குடும்பத்தினர் இப்போது ஒரு நீண்ட கடிதப்பணியில் ஈடுபட்டுள்ளது.

இதேபோல் காப்பீடு தொகை பெற போராடி வரும் இந்தியாவில் உள்ள வேறுசில குடும்பங்களுடன் இந்தியாஸ்பெண்ட் பேசியது. இக்குடும்பத்தினர், கோவிட்19 சிகிச்சைக்காக காப்பீட்டு உரிமைகோரல்களைப் பெற போராடியது மற்றும் பல காரணங்களால்- அதாவது தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணம், முன்பே இருக்கும் வியாதிகள் அல்லது கோவிட்டின் 'லேசான தன்மை' ஆகியவற்றால் அவை திருப்பி விடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது.

"தொற்றுநோய் காரணமாக, தனியார் சுகாதாரத்துறையை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பொது சுகாதாரமோ பலவீனமாக உள்ளது மற்றும் காப்பீடுகளும், மக்களுக்கு சுகாதார சேவையை அணுக உதவவில்லை என்பதையே காட்டுகிறது. வலுவான மற்றும் இலவச பொது சுகாதார முறையை வளர்ப்பதற்கு உண்மையில் மாற்று எதுவும் இல்லை” என்று ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் இந்திரனில் முகோபாத்யாய் கூறினார்.

எங்களது ‘கோவிட்டிற்கான விலை’ என்ற தொடரில் தொற்றுநோய்களின் போது சுகாதார அணுகலுக்கான கட்டணங்களில் உள்ள சிதைவுகளின் பல்வேறு அம்சங்களை விவரித்துள்ளோம். இந்த எட்டாவது பகுதியில், காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு ஒழுங்குபடுத்துவோர் இடையே சிகிச்சைக்கான செலவு மற்றும் காப்பீட்டாளர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை குறித்து மூன்று வகை மோதல்களாக காப்பீட்டில் உள்ள நோயாளிகள் கூட தங்கள் சொந்த கோவிட் பராமரிப்புக்கு எவ்வாறு பணம் செலுத்துகிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் விவரிக்கவுள்ளோம்.

நகர்ப்புற இந்தியாவில் 80.9%, கிராமப்புற இந்தியாவில் 85.9%- க்கும் மேற்பட்ட மக்களுக்கு எந்தவொரு சுகாதார செலவின காப்பீடும் இல்லை, என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு- 2018 இன் தரவுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு காப்பீடு உள்ளவர்களில் பெரும்பாலோர், அரசு காப்பீட்டுத் திட்டங்களால் பலன் பெறுவோர் என்று, கணக்கெடுப்பு கூறுகிறது. 80% க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் சொந்த தொகையை, தனியார் மருத்துவமனைகளில் செலுத்தி வருவதாக, இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்துள்ளது.

சிகிச்சை விலை குறித்த விவாதம்

கட்டுரையில் வெளிவருவது இதுதான்: சிகிச்சை மற்றும் மீண்டு வெளிவரும் முடிவில், கோவிட் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளால் கணிசமான கட்டண பில் வழங்கப்படுகின்றன. அதை அவர்களின் காப்பீட்டு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த மறுக்கக்கூடும், மேலும் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை, ஆனால் அவர்களின் சொந்த பாக்கெட்டில் இருந்து பணம் செலுத்துவார்கள்.

கோவிட்-19 சிகிச்சைக்கான காப்பீட்டுக்கான சாலைத் தடைகளை எதிர்பார்த்து, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) இந்த தொற்றுநோய்களின் போது சில முக்கிய சுற்றறிக்கைகளை வெளியிட்டது. முதலாவதாக, ஏற்கனவே உள்ள ஒரு காப்பீட்டின் கீழ் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அது கோவிட்19 சிகிச்சையையும் உள்ளடக்கும் என்று அது கூறியது. கோவிட்19 உரிமைகோரல்களை "விரைவாக" செயலாக்கவும், இதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் இந்த நிறுவனம், காப்பீட்டாளர்களைக் கேட்டுக்கொண்டது. காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பாக கோவிட்19 க்காக காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்கும்படி கேட்கப்பட்டன.

கோவிட்-19 சிகிச்சையில், மருத்துவமனையில் சேர்க்க ஆகும் அதிக செலவுகள் குறித்து கவலை கொண்ட மக்கள், புதிய சுகாதார காப்பீட்டை வாங்க முயற்சிக்கிறார்கள் அல்லது தற்போதுள்ள காப்பீடுகளை பயன்படுத்துகிறார்கள். காப்பீட்டு நிறுவனங்கள் இதை எதிர்பார்த்து தற்போதுள்ள பிரீமியங்களில் டாப்-அப்கள் போன்ற புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளன.

கோவிட்19-ஐ பிரத்தியேகமாக உள்ளடகும் வகையில் “கோவிட் கவசம் (Kavach)” என்ற பாலிசிகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக, மேக்ஸ் பூபா இரண்டு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை கோவிட் காப்பீட்டுத் தொகையை ரூ.1,039 என்ற பிரீமியத்தில் இருந்து வழங்குகிறது. ஸ்டார் ஹெல்த் நிறுவனம், ஒரு கோவிட் கவரேஜ் பாலிசியை வழங்குகிறது, இது மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் மற்றும் வீட்டு சிகிச்சை 14 நாட்கள் வரை திருப்பிச் செலுத்துவதாக உறுதியளிக்கிறது.

"தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கின்றன, மேலும் இந்த செலவுகளை காப்பீடு செய்ய நிர்பந்திக்கப்படும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இது ஒரு பிரச்சினையாகும்," என்று, ஸ்டார் ஹெல்த் மற்றும் அல்லைய்டு இன்ஷூரன்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.பிரகாஷ் கூறினார். "காப்பீட்டுத் துறை ஒழுங்குபடுத்தப்படுவதைப் போலவே, தனியார் மருத்துவமனைகளும் அவற்றின் கட்டணங்களும் ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டாளரின் கீழ் வர வேண்டும்," என்று அவர் கூறினார்.

இந்தியாவைச் சுற்றியுள்ள கோவிட்19 சிகிச்சையின் இடையூறாக உள்ள கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியாக ஏற்கனவே இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்தபடி, மாநில அரசுகள் சிகிச்சை கட்டணத்தை ஈடுகட்ட முயற்சித்தன. இந்த நிர்ணயம் செய்வதற்கு முன்னர், டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை போன்ற கார்ப்பரேட் மருத்துவமனைகள், ஐ.சி.யு. மற்றும் வென்டிலேட்டர் சிகிச்சைக்காக ஒருநாளைக்கு ரூ.72,000 செலுத்த வேண்டும் என்று கூறின. இதே சிகிச்சையானது கர்நாடகாவில் அதிகபட்சமாக ரூ.25,000 ஆகவும், ராஜஸ்தானில் குறைந்தபட்சம் ரூ.4,000 ஆகவும் இருந்தது.

ஆனால் கேப்பிங் மற்ற வகையான விளைவுகளை ஏற்படுத்தியது - காப்பீட்டு நிறுவனங்கள் இப்போது மூடிய கட்டணத்தில் பில்களை திருப்பிச் செலுத்த விரும்புகின்றன, ஆனால் காப்பீட்டு நோயாளிகள் அதிக மற்றும் கட்டுப்பாடற்ற விலைகளை செலுத்த மருத்துவமனைகளே விரும்புகின்றன, நாங்கள் கண்டறிந்தோம். இந்த அமைப்பு நாடு முழுவதும் மாறுபட்டது, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா போன்ற சில மாநிலங்கள் காப்பீட்டு இல்லாதவர்களுக்கு மூடிய விகிதங்கள் பொருந்தும் என்று கூறுகின்றன.

புகார்கள் உள்ளன, தீர்மானம் இல்லை

ஜூலை மாதம் கோவிட்19-க்கு நேர்மறையை பரிசோதித்த பிறகு, சன்னி குலியானி தனது 61 வயதான தாயை டெல்லியின் மூல்சந்த் மருத்துவமனையில் அனுமதித்தபோது, இத்தகைய அனுபவங்களை சந்தித்தார். அவர் 10 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரது சிகிச்சை மற்றும் தங்குவதற்காக குடும்பத்தினருக்கு ரூ.3.73 லட்சம் கட்டணம் கோரப்பட்டது. ஆரம்பத்தில், இதுபற்றி குலியானி கவலைப்படவில்லை, ஏனெனில் அவரது தாயார் ரூ. 5 லட்சம் காப்பீடு செய்திருந்தார்.

கட்டணம் செலுத்துமிடத்தில் தான், தனது தாய் காப்பீடு செய்யப்பட்டிருந்த எச்.டி.எஃப்.சி. - ஈ.ஆர்.ஜி.ஓ நிறுவனம், வெறும் ரூ.1.24 லட்சம் மட்டுமே செலுத்தும் என்பதை, குலியானி அறிந்தார். டெல்லி அரசின் மூடிய விகிதங்களின் கீழ் இது இருக்கும் என்று நிறுவனம் கூறியது. ஆனால் காப்பீடு இல்லாதவர்களுக்கு மட்டுமே குறைந்த விகிதங்கள் கிடைக்கும் என்று மருத்துவமனை வாதிட்டதாக, குலியானி இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

குலியானிக்கு இப்போது யார் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உறுதியாக தெரியவில்லை: "ஒருபுறம், மருத்துவமனை மூடப்பட்ட கட்டணங்களை வசூலித்திருக்க வேண்டும். மறுபுறம், காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கு பணம் செலுத்த வேண்டும். இது குறித்து டெல்லி அரசு உட்பட பல அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன் ”என்று குலியானி கூறினார். இந்தியா ஸ்பெண்டின் கேள்விகளுக்கு பதிலளிக்க, எச்.டி.எப்.சி. - ஈ.ஆர்.ஜி.ஓ. நிறுவனம் மறுத்துவிட்டது.

தனியார் மருத்துவமனை சங்கங்களான அசோசியேஷன் ஆஃப் ஹெல்த்கேர் பிரவாய்டர் ஆப் இந்தியா (AHPI - ஏ.எச்.பி.ஐ), மூடிய விகிதங்கள் தங்கள் வணிகங்களுக்கு மிகக் குறைவு என்பதை சுட்டிக்காட்டி ஐ.ஆர்.டி.ஏ.ஐ.க்கு மனு அளித்துள்ளது என்று, சங்கத்தின் தலைவர் அலெக்சாண்டர் தாமஸ் கூறினார். ஏ.எச்.பி.ஐ தனது சொந்த செலவு பகுப்பாய்வை ஐஆர்டிஏவுக்கு வழங்கியுள்ளது, காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு பாலிசி கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு அதிக மற்றும் தடையற்ற கட்டணங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறது.

கோவிட் காப்பீடு ஆபத்து இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை

காப்பீட்டு நிறுவனங்களின் பணமில்லா உரிமைகோரல்களை பெற முயற்சிப்பது சவாலானது: 2018-19 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ரூ. 2,927.88 கோடி (399 மில்லியன் டாலர்) மதிப்புள்ள பணமில்லா காப்பீட்டு உரிமைகோரல்கள், 11.2 லட்சம் உரிமைகோருவோருக்கு நிலுவையில் உள்ளன என்று, ஐஆர்டிஏவின் மிக சமீபத்திய தரவுகள் (சுகாதார மற்றும் விபத்து காப்பீட்டு பிரிவில்) தெரிவிக்கின்றன. இதே தரவுகளின்படி, செலுத்தப்பட்ட ஒவ்வொரு 7.6 உரிமைகோரல்களில் ஒன்று நிலுவையில் உள்ளது.

கோவிட்19 பரவுவதால் இந்தியாவில் சுகாதாரக்காப்பீட்டிற்கான தேவை அதிகரித்துள்ளதாக, ஜூன் 2020 பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அறிக்கை மதிப்பிட்டுள்ளது. ஆனால் நோயின் ஆபத்து தற்போதுள்ள காப்பீடுகளில் இன்னும் காரணியாக இல்லை என்பதால், திருப்பிச் செலுத்துதல் கோரிக்கை என்பது காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஒரு சுமையாக இருக்கக்கூடும் என்று அது கூறியுள்ளது. நோய்த்தொற்று, அதன் சிகிச்சையின் விலை மற்றும் நோயாளியின் சுயவிவரங்கள் பற்றிய தகவல்கள் மிகக்குறைவாகவே உள்ளன, மேலும் இது பிரீமியங்களின் ஆபத்து மற்றும் கட்டணத்தின் துல்லியமான எழுத்துறுதிகளை பாதிக்கிறது. இது "அவர்களின் தயாரிப்புகளை குறைவாகவோ அல்லது அதிக விலைக்கு வாங்கவோ" வழிவகுக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது.

கடந்த 2019-20ம் ஆண்டில் மோட்டார் காப்பீட்டிற்கு பிறகு (36.6%) சுகாதாரக் காப்பீடு(27.3%) இந்தியாவில் இரண்டாவது பெரிய ஆயுள் அல்லாத காப்பீட்டுத் துறையாகும். 2019-20 ஆம் ஆண்டில் இந்திய நுகர்வோர் செலுத்திய சுகாதார காப்பீட்டு பிரீமியங்களின் மொத்த மதிப்பு ரூ.51,637 கோடி (7.03 பில்லியன் டாலர்), இது 2018-19ம் ஆண்டைவிட 17% அதிகரித்துள்ளது. பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அறிக்கை, சுகாதார காப்பீட்டுத்துறை அதன் மொத்த பிரீமியங்களில் 80% உரிமைகோரல்களாக செலுத்துகிறது, ஆனால் தொற்றுநோயுடன், உரிமைகோரல்களின் அதிகரிப்பு இருக்கும், இது காப்பீட்டுத் துறையை "காயப்படுத்தக்கூடும்".

விரைவாக திருப்பிச் செலுத்துவதை கோரும் மனுக்கள்

இந்த நிச்சயமற்ற தன்மைகள், அதிக விலை கொண்ட கோவிட்19 சிகிச்சையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, சுகாதாரக் காப்பீட்டை வாங்கிய அல்லது வாங்க விரும்பும் நோயாளிகளை பாதிக்கின்றன. ஐ.ஆர்.டி.ஏ.ஐ போன்ற அரசு நிறுவனங்களின் ஒழுங்குமுறைக்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் -19 சிகிச்சை கட்டணங்களை கட்டுப்படுத்தவும், காப்பீட்டு நிறுவனங்களின் உரிமைகோரல்களை திருப்பிச் செலுத்தாதது குறித்து புகார் செய்யவும் பல்வேறு நீதிமன்றங்களை அணுகியுள்ளனர்.

ஆகஸ்ட் 2020ல், இந்த விவகாரத்தில் ஒரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, காப்பீட்டு நிறுவனங்களை தண்டித்தது: "ஒரு தொற்றுநோய் பரவிய சூழலில், காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் கைகளை கண்டிக்க் கொண்டிருக்க முடியாது" என்றது.

"தனியார் மருத்துவமனைகளால் அதிகரிக்கப்படும் கட்டணம், காப்பீட்டுத் துறையில் ஒரு கவலையாக இருக்கக்கூடும் என்றால், கொழுத்த பணப்பையோ அல்லது திருப்பிச் செலுத்துவதற்கான காப்பீட்டுத் தொகையோ இல்லாத ஒரு சாதாரண மனிதனின் நிலை, அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தேவை என்ற நிலையில், என்னவாக இருக்கும் என்று அது கேட்டது ”என்று உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் அந்த மனு கூறுகிறது.

ஊரடங்கு எதிரொலியாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பல நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் பணம் செலுத்த போதிய தொகை இல்லை, இதனால் காப்பீட்டு நிறுவனங்கள் பணமற்ற உரிமைகோரல்களைப் பெற வேண்டும் என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அனைத்து உரிமைகோரல்களையும் அரசு மூடிய விலையில் தீர்க்க, காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு அது நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நடந்து வருகிறது.

(பூயான், இந்தியா ஸ்பெண்ட் ஒரு சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.