கேரளாவின் கோவிட் -19 'தோல்வி' இந்தியாவின் 'வெற்றி' குறித்து என்ன சொல்லும்
இந்தியாவில் இப்போது செயலில் உள்ள இரண்டு கோவிட் -19 வழக்குகளில் ஏறக்குறைய ஒன்றை, கேரளா கொண்டுள்ளது; நோய் பரவுவதால் கேரளா தனது ஆரம்பகால வெற்றியை பலி கொடுக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகையில், அதன் பொருள் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதாகும்.
சென்னை: இந்தியா, 2020 செப்டம்பர் நடுப்பகுதியில், 10 லட்சம் செயலில் உள்ள கோவிட் -19 வழக்குகள் என்ற உச்சத்தை கண்டது, தொடர்ந்து சீரான சரிவு ஏற்பட்டு, 2021 பிப்ரவரி 7ம் தேதி நிலவரப்படி அது 0.15 மில்லியனாக குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற அதிக கோவிட்-19 நோயாளிகளின் சுமையை கொண்டிருந்த பிற பெரிய மாநிலங்களும், இதேபோன்ற பாதையைக் கண்டன. ஆனால், ஒரு மாதத்திற்குப் பிறகு 2020 அக்டோபரில் கேரளாவில் செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகள் உச்சபட்சமாக காணப்பட்டன, அதன் பின்னர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவும் ஏற்படவில்லை.
இந்தியாவின் முதல் மூன்று கோவிட்-19 வழக்குகள், 2020 ஜனவரி 30ம் தேதி, கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டன, வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹானில் இருந்து திரும்பிய மூன்று மருத்துவ மாணவர்கள் - அரசால் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 14 அன்று, முதல் மூன்று நோயாளிகளும் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், "கொரோனா வைரஸுடனான போரில் கேரளா வெற்றி பெற்றுள்ளது" என்று ட்வீட் செய்தார். "மார்ச் முதலாவது வாரத்திற்குள் கேரளாவை கொரோனா வைரஸ் இல்லாததாக அறிவிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா, ஒரு வாரத்திற்கு முன்பே கூறியிருந்தார்.
ஆனால், இந்த கொண்டாட்டம் எல்லாம் முதிர்ச்சியற்றதாக இருந்தது, இன்னும் பல டஜன் வழக்குகள் அடுத்தடுத்து கண்டறியப்பட்ட போதும், 2020 மே மாத தொடக்கத்தில் கோவிட் நோய் பரவுவதை கேரளா கட்டுப்படுத்தியதுபோல் தெரிந்தது. கேரளாவின் "நோயாளிகள் நடமாட்டம் குறித்த வரைபடங்கள்" அல்லது அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் தொடர்பு கண்டறியும் சோதனைகள், வரைபடங்கள், வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டன. மே இரண்டாவது வாரத்தில், உலகின் கோவிட்-19 தொற்றை வெற்றிக்கரமாக கையாண்ட ஒன்றில் கேரளாவும் இடம் பெற்றது, அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், கேரளாவில் 20-க்கும் குறைவான செயலில் உள்ள வழக்குகளே இருந்தன.
பின்னர், நாடு தழுவிய கோவிட்-19 ஊரடங்கால் வெளியே சிக்கித் தவித்த கேரள மக்கள் சிறப்பு ரயில்களிலும், வெளிநாட்டில் உள்ளவர்கள் விமானம் வாயிலாகவும் சொந்த ஊருக்கு திரும்பத் தொடங்கியதால், அங்கு கோவிட் வழக்குகள் அதிகரிக்கத் தொடங்கின. ஜூன் மாதத்திற்குள், செயலில் உள்ள வழக்குகள் 700 என்றளவில் இருந்தன. ஜூலை மாதத்திற்குள் இது 2,100 மேல் என்று அதிகரித்தது, ஆகஸ்ட் மாதத்திற்குள் ஐந்து மடங்காக பெருகியது. பிப்ரவரி 7, 2021 நிலவரப்படி, இந்தியாவில் செயலில் உள்ள இரண்டு வழக்குகளில் கிட்டத்தட்ட ஒன்று கேரளாவில் உள்ளது.
கேரளாவின் மாறுபட்ட கோவிட் -19 பாதை, அதன் வெற்றி அல்லது தோல்வியை சுட்டிக்காட்டுகிறதா? கேரளாவின் குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் -- அடர்த்தியான மக்கள் தொகை, வயதான மக்கள் அதிகம் இருப்பது மற்றும் நோயுள்ளவர்களின் அதிகரிப்பு -- ஆகியவற்றை, கேரள அரசின் கோவிட்19 ஆலோசகர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் மற்ற மாநிலங்களை விட அரசு அதன் உண்மையான கோவிட் வழக்குச்சுமையை மிகத் துல்லியமாக தெரிவித்திருக்கக்கூடும் என்றார். வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் கேரளாவின் ஆரம்ப வெற்றி ஓரளவுக்கு காரணம் என்ற அவரது கருத்தில், மருத்துவர்கள் மற்றும் பிற நிபுணர்கள் உடன்படுகிறார்கள். இதன் பொருள் என்னவென்றால், மாநிலத்தில் குறைவான மக்களே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி உள்ளனர். மேலும், ஓணம் பண்டிகை போன்ற பெரியளவில் மக்கள் கூடுமிடங்களில், கேரள அரசு தனது பாதுகாப்பைக் குறைத்துவிட்டது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கேரளாவின் கோவிட் -19 உச்சம், பிற பெரிய மாநிலங்களைவிட ஒரு மாதத்துக்கு பிறகு வந்தது
கோவிட் -19 வழக்குகளில் கேரளாவின் உயர்வு, முதன்முதலில் மே நடுப்பகுதியில் தொடங்கியது, ஆரம்பத்தில் சிக்கித் தவித்த குடிமக்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு வசதியாக, உள்நாட்டு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன. மே 7 ஆம் தேதி, முதலாவது திருப்பி அழைத்து வரும் விமானம் கொச்சிக்கு வந்தது. ஒரு வாரம் கழித்து, டெல்லியில் இருந்து முதலாவது ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பயணிகள் ரயில், திருவனந்தபுரத்திற்கு வந்தது. இரண்டு மாதங்களுக்குள், அரை மில்லியனுக்கும் அதிகமான மலையாளிகள் பல்வேறு பயண முறைகள் வாயிலாக, மாநிலத்திற்கு திரும்பினர். மே மாத நடுப்பகுதியில் இருந்து ஜூலை நடுப்பகுதி வரை கேரளாவில் பதிவான 9,776 வழக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு உள்நாட்டு பயணிகள்.
அப்போது முதல், இந்தியாவின் பிற பகுதிகளை போலவே வழக்குகள் சீராக உயர்ந்தன. ஆனால் மீதமுள்ள இடங்களில் இருந்து கேரளா வேறுபட்டது, செப்டம்பரில் இருந்துதான் அதன் பாதை வேறுபட்டது. பெரும்பாலான பெரிய மாநிலங்களில் பதிவான வழக்குகள் செப்டம்பர் நடுப்பகுதியில் உயர்ந்தன, பின்னர் குறையத் தொடங்கினாலும், கேரளாவின் உச்சநிலை அக்டோபரில் தாமதமாக ஏற்பட்டது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற பிற பெரிய மாநிலங்களில் பெருமளவு வழக்குகளில் சரிவு ஏற்பட்டாலும், கேரளாவில் அந்த நிலை தொடரவில்லை.
இதன் விளைவாக, தற்போது இந்தியாவில் கோவிட்-19 செய்திகளில் கேரளா அதிகளவில் இடம் பிடித்துள்ளது. இப்போது ஒவ்வொரு இரண்டு புதிய வழக்குகளில் ஒன்று, மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் 13 வது பெரிய மாநிலமான கேரளாவில் பதிவாகி வருகிறது.
தங்கள் பாதுகாப்பை யார் குறைத்துவிட்டார்கள்?
கேரளாவில், வைரஸின் பாதையை மிகவும் வேறுபடுத்தியது எது என்று நிபுணர்களிடம் கேட்டோம். கேரளா அதன் சொந்த வெற்றிக்கு பலியானது என்று, மாநிலத்தின் முன்னாள் சுகாதாரச் செயலாளரும், இப்போது கோவிட்-19 தொற்றுக்கான முதலமைச்சரின் ஆலோசகராகவும் உள்ள ராஜீவ் சதானந்தன், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "டிசம்பர் கடைசி வாரத்தில் இருந்து கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வந்துள்ளன [மீண்டும்]. நிலைமை முடிந்ததைப் போலவே மக்கள் நடந்து கொள்வதில் இருந்து இது உருவாகிறது, "என்று அவர் கூறினார். "நாட்டின் பிற பகுதிகளில், யாரும் முகக்கவசம் அணியவில்லை அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. இதைப்பார்த்து, கேரளாவில் உள்ளவர்களும் அதே வழியில் நடந்து கொள்ளத் தொடங்கினர். ஆனால் கேரளா ஆரம்பத்தில் தொற்றுநோயை நன்றாகக் கட்டுப்படுத்தியதால், [இது] பாதிக்கப்படக்கூடிய மக்களிடையே ஒரு பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது" என்றார்.
சதானந்தன் மேலும் கூறுகையில், "பீகார் தேர்தல் அல்லது விவசாயிகள் போராட்டம் போன்ற காட்சிகளை இங்குள்ள மக்கள் பார்த்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் கூடிவந்ததை பார்த்து இங்குள்ளவர்களும் கோவிட் கட்டுப்பாடுகளை கைவிட்டனர். தொற்றுநோயை நாங்கள் எவ்வளவு சிறப்பாகக் கட்டுப்படுத்தி வந்தாலும், வைரஸ் அபாயத்தை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். இப்போது வைரஸ் வேலையை காட்டத் தொடங்கிவிட்டது, மக்களை வாட்டி வதைக்கிறது" என்றார்.
கேரளாவின் தற்போதைய அனுபவம், ஐரோப்பாவிலோ அல்லது வட அமெரிக்காவிலோ காணப்பட்ட இரண்டாவது அலைகளுக்கு ஒத்ததா? இதை சதானந்தன் ஏற்கவில்லை. "கேரளாவில், வழக்குகளின் எண்ணிக்கையை எழுச்சித்திறனுக்குக் குறைவாக வைத்திருப்பது எப்போதும் நோக்கமாக இருந்தது. மருத்துவமனைகளில் புதிதாக சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அப்படியே இருந்தது, இது ஒரு வசதியான சமநிலையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களுக்கு ஒருபோதும் ஒரு தொற்றுநோய் ஏற்படவில்லை. அது கட்டுப்பாட்டில் இருந்தது. மருத்துவமனை படுக்கைகள் இல்லாததால் நாங்கள் மக்களை இழக்கவில்லை. ஆனால் அந்த ஆறுதல் மண்டலம் இப்போது தொலைந்துவிட்டது" என்றார். எவ்வாறாயினும், கேரளாவிலும் தொற்றுநோய் குறைந்து வருவதாக சதானந்தன் நம்புகிறார். "அரசு அதை மிகவும் தீவிரமாக எடுத்து வருகிறது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில், கடைசி உச்சம் முடிந்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம், இப்போது வழக்குகள் குறைந்து வருகின்றன" என்றார்.
கேரளாவின் ஆரம்பகால வெற்றியின் அர்த்தம், குறைந்த அளவிலான மக்களே கோவிட் -19 நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொண்டதாக, மற்ற வல்லுநர்களும் கூறினர். "மக்கள்தொகையில் பாதிக்கப்படக்கூடிய நபர்களில் அதிகமானவர்கள் இருந்தால், நோயின் பயனுள்ள 'ஆர்' மதிப்பு அதிகமாக இருக்கும், அதாவது சராசரியாக ஒரு பாதிக்கப்பட்ட நபர், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கச் செய்கிறார். கேரளாவின் ஆரம்பகால வெற்றியின் அர்த்தம், மாநிலத்தில் ஒப்பீட்டளவில் சிலருக்கு மட்டுமே இந்நோய் இருந்தது மற்றும் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றது. எடுத்துக்காட்டாக, இரண்டாவது தேசிய பரவல் தன்மை கணக்கெடுப்பில் ஆகஸ்ட் மாதத்திற்குள் கேரளாவில் IgG [எதிர்ப்பு புரதங்கள்] நோயெதிர்ப்புகள் 0.8% மட்டுமே காணப்படுகின்றன. பாதிக்கப்படக்கூடிய மக்களில் பெரும் பகுதியினருக்கு தற்போதைய நிலைமையை குறைந்தபட்சம் ஓரளவாவது நிச்சயமாக விளக்க வேண்டும், " என்று, இந்தியாவின் கோவிட் -19 தரவுகளை ஆராய்ந்து வரும் இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் கணித விரிவுரையாளர் முராத் பனாஜி, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
அதற்கான காரணத்தின் ஒரு பகுதியாக இது இருக்க வேண்டும் என்பதை கேரள மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். "இது பரவலின் ஒரு பகுதி என்பது நிச்சயமான உண்மை," என்று, கேரளாவின் பாலக்காட்டில் உள்ள மருத்துவர் அருண் மாதவன், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்; இவர், கடந்த காலங்களில் கோவிட் -19 இறப்புகள் பற்றி அறிக்கை செய்யக் கூடியதாக மாநிலத்தை விமர்சித்தவர், "இந்த துயரத்திற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்க வேண்டும்" என்று கொச்சியை சேர்ந்த வாத நோய் நிபுணர் பத்மநாபா ஷெனாய் ஒப்புக் கொண்டார்.
மூன்று நாடுகளை தழுவி எடுக்கப்பட்ட, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கணக்கெடுப்புகளின் கோவிட்-19 பரவல் தன்மை குறித்த தரவு, இந்தியாவின் பல பகுதிகளை விட கேரளாவில் தொடர்ந்து மற்றும் கணிசமாக குறைந்த பரவல் இருப்பதைக் காட்டுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தேசிய செரோ பாதிப்பு கிட்டத்தட்ட 7% ஆக இருந்தது, அதே நேரத்தில் கேரளாவில் இது 1% க்கும் குறைவாக இருந்தது, இது இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும். மும்பை மற்றும் புனே போன்ற சில பெரிய நகரங்கள் ஏற்கனவே செரோ-பரவல் அளவை ஒப்பிடும்போது 40% ஐ எட்டியுள்ளன. டிசம்பர்-ஜனவரி மாதத்திற்குள், தேசிய செரோ பாதிப்பு கிட்டத்தட்ட 22% ஆக இருந்தது, அதே நேரத்தில் கேரளாவில் இது 11.6% ஆக இருந்தது, கேரளா இன்னும் தேசிய சராசரியைப் பின்தொடர்ந்தாலும், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் 2020 க்கு இடையில் மிக வேகமாக பரவியது என்பதைக் காட்டுகிறது.
எவ்வாறாயினும், கேரளாவிலும் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன என்பது மறுக்க முடியாதது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "ஆம், இந்த நோய்" திறக்கப்படாத "பகுதிகளில் அதிகமாக பரவக்கூடும். எவ்வாறாயினும், இது பரவுவதை அனுமதிப்பதை நியாயப்படுத்தாது மற்றும் ஆரம்ப கட்டத்தில் தணிக்கும் வெற்றிக்கு, தற்போதைய தோல்விகளை காரணம் கூறுகிறது, " என்று, இந்தியாவில் வைரஸ் பரவுவதைப் பற்றி ஆய்வு செய்த மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பயோஸ்டாடிஸ்டிக்ஸ் தலைவரும், பொது சுகாதாரத்துறை தொற்றுநோயியல் பேராசிரியருமான பிரமர் முகர்ஜி, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "தொடர்புத் தடமறிதல் மற்றும் சோதனை மூலம் நாம் தொற்று தணிப்பைத் தொடர வேண்டும், இதனால் சமூக வைரஸ் சுமை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு கீழே செல்கிறது, மேலும் கட்டுப்படுத்தக்கூடிய நிலைக்குள் ஒருவர் செல்ல முடியும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தைவான், சிங்கப்பூர், தென் கொரியாவைப் பாருங்கள் ... வழக்கு எண்ணிக்கையில் அவர்கள் கவனமாக கண்காணித்தனர். உயர்வை கண்டவுடன் அவர்கள் தடுப்பு நடவடிக்கைகளை இரட்டிப்பாக்கி, நோயை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். சூப்பர்ஸ்ப்ரெடர் நிகழ்வுகளைக் கண்டுபிடிப்பதில் பெரும் முயற்சிகளும் இதில் அடங்கும்,"என்று அவர் மேலும் கூறினார்.
ஆகஸ்ட் மாத இறுதியில் மற்றும் செப்டம்பர் தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் போது பெரியளவில் மக்கள் கூடினர், தொடர்ந்து மக்கள் கூடும் வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வந்ததாக, மாதவன் மற்றும் ஷெனாய் இருவரும் கூறினர். அந்த நேரங்களில் அரசால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
கேரளாவின் அதிக கோவிட் வழக்குகளுக்கு, சதானந்தன் மேலும் ஒரு காரணத்தை அளிக்கிறார் - கேரளா மற்ற மாநிலங்களை விட அதன் உண்மையான நோய்ச்சுமையை துல்லியமாக தெரிவிக்கும் மிகச்சிறந்த வேலையைச் செய்கிறது. அது ஒரு முழுவிளக்கமாக இருக்க முடியாது; மற்ற மாநிலங்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லேசான வழக்குகளின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்ளாததும், அந்தந்த சுகாதார அமைச்சக அதிகாரிகள் பத்திரிகையாளர் சந்திப்புகளில் இவ்வாறு கூறுவதும், உண்மையான சரிவைக் குறிக்கிறது.
கேரளாவின் அதிக கோவிட்-19 எண்ணிக்கைகளுக்கு சில கூடுதல் புள்ளிவிவர காரணிகளை சதானந்தன் குறிப்பிடுகிறார். "ஒரு காரணம் கேரளா மிகவும் அடர்த்தியான மக்கள் கொண்ட மாநிலம். கேரளா முழுவதும் ஒரு தொடர்ச்சியான நகரம் போன்றது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகையும் மிக அதிகமாக உள்ளது - இது நாட்டிலேயே மிக அதிகம். கேரளாவில் மூத்தவர்களும் அதிக நடமாட்டத்தில் இருந்து வருகின்றனர்"என்றார். "ஏற்கனவே நோய் பாதிப்பு அதிக விகிதம் மற்றும் வயதானவர்கள் எண்ணிக்கை ஆகியன, அதிக எண்ணிக்கையிலான வழக்குகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே கேரளாவில் தொற்று எண்ணிக்கை வெளிச்சத்திற்கு வருகின்றன. இளைய மக்கள்தொகை மற்றும் குறைவான நோய் உள்ளவர்களை கொண்ட மாநிலங்களில், இவை அறிகுறியற்ற வழக்குகளாக இருந்திருக்கலாம் மற்றும் தவறவிட்டிருக்கலாம் "என்று ஷெனாய் கூறினார்.
கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கேரளா இந்தியாவின் நான்காவது அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும், அதிக மக்கள்தொகை கொண்ட மூன்றாவது மாநிலமாகவும் உள்ளது. இது ஒப்பீட்டளவில் வயதான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது, மேலும் மேம்பட்ட வயது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள கோவிட்-19 நோயாளிகளின் மோசமான விளைவுகளுடன் வலுவாக தொடர்புடையது, 2020 நவம்பரில் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது.
தொற்றா நோய்கள் உள்ளவர்கள் -- அவர்கள் கோவிட்19 விஷயத்தில் நோயுள்ளவர்களாக மாறுவர் -- கடுமையான கோவிட்-19 நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளனர். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு, 2019-20 இன் ஒன்றாம் கட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ள 17 மாநிலங்களில் வேறு எந்த மாநிலத்தையும் விட, அதிக எடை மற்றும் பருமனான பெரியவர்களின் எண்ணிக்கையில், கேரளா25-க்கும் அதிகமான உடல் நிறை குறியீட்டால் அளவிடப்படுகிறது. உயர் இரத்த சர்க்கரை அளவைக் கொண்ட பெரியவர்களில் கேரளாவிலும் அதிக விகிதம் உள்ளது, மேலும் உயர் இரத்த அழுத்தம் உள்ள ஆண்களின் விகிதாச்சாரத்தில் சிக்கிம் மற்றும் மணிப்பூர் மட்டுமே அடுத்து உள்ளன. இவை அனைத்தும் தீவிர கோவிட்-19 நோய்க்கான ஆபத்து காரணிகள்.
எப்படியானாலும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து கேரளா ஏன் இத்தகைய வித்தியாசமான பாதையை அனுபவிக்கிறது என்பதை, இந்த காரணிகள் மட்டும் போதுமான அளவில் விளக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"கொள்கை அளவில், [கேரள] நிர்வாகிகள் சரியாக இருந்திருப்பார்கள் [கட்டுப்பாட்டுடன் கூடிய ஆரம்ப வெற்றி தற்போதைய அதிக எண்ணிக்கையை விளக்குகிறது], இந்த முறையை விளக்க இந்தியாவின் பிற பிராந்தியங்களில் பரவல் தன்மை மிக அதிகமாக இருக்க வேண்டும். முந்தைய பரிமாற்றத்தில் கணிசமான வேறுபாடுகள் பரவன் தன்மையில் ஒரு இடத்தில் 10%, மற்றொரு இடத்தில் 30% ஆகியன போதுமானதாக இருக்காது; இதன் விளைவாக அடுத்தடுத்த பரவல் தன்மை 30% கொண்ட இடத்தில் பெரிதும் குறைக்கப்படுகிறது. முந்தைய பரவல் "கூட்டம் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி" விளைவித்ததாக மக்கள் நினைத்த பல எடுத்துக்காட்டுகள் (மிக சமீபத்தில், பிரேசில் மனாஸ் உட்பட) உள்ளன, பின்னர் வழக்குகள் அதிகரிப்பதை காண முடிந்தது," என்று, சாண்டா குரூஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பரிணாம உயிரியல் துறை பேராசிரியரும், தொற்றுநோய் குறித்த முன்னணி உலகளாவிய நிபுணருமான ஏ. மார்ம் கில்பாட்ரிக், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "முந்தைய பரவுதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றில் குறைந்தபட்சம் முக்கியமானதாக இருக்கும் என்று நான் நம்புகின்ற வழக்குகளில் உள்ள வேறுபாடுகளுக்கான பிற காரணங்கள் பின்வருமாறு: ஊடக அறிக்கைகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முந்தைய வெளிப்பாடு, தலையீடுகள், பாதிக்கப்பட்டவர்களின் வயது வரம்பில் உள்ள வேறுபாடுகள் (இளையவர்கள் தொற்றுநோயாக மாறுவதால் குறைவான "வழக்குகள்" கண்டறியப்படும்), சோதனை திறன் மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களில் எளிதில் வேறுபாடுகள், மற்றும் சமீபத்தில் வெவ்வேறு வைரஸ் மாறுபாடுகளின் சாத்தியம்"என்று கில்பாட்ரிக் கூறினார். இருப்பினும், சதானந்தன் புதிய கோவிட்-19 வகை பரவல் என்பதை நிராகரித்தார்.
கேரளாவின் தற்போதைய இக்கட்டான நிலை, நாட்டின் பிற பகுதிகளைப் போலவே மாநிலத்தை பற்றியும் இருக்கலாம். ஒப்பீட்டளவில் குறைந்த ஆரம்ப பரவல் கேரளாவின் தொடர்ச்சியான அதிக எண்ணிக்கையை விளக்குகிறது என்றால், இந்நோய் முன்னர் அறியப்பட்டதை விட நாட்டின் பிற பகுதிகளில் மிகவும் ஆழமாகவும் வேகமாகவும் பரவுகிறது என்பதை இது குறிக்கலாம். இந்தியாவின் செப்டம்பர் உச்சநிலை மற்றும் சரிவு வெற்றிகரமான தணிப்பின் விளைவாக அல்ல, மாறாக ஓடிப்போன தொற்றுநோயின் விளைவாகவும், அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியிலும் இருந்தது என்பதையும் இது குறிக்கும். செப்டம்பர் உச்சநிலை மற்றும் வீழ்ச்சியை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதன் மூலம் அல்லது மந்தைக்கு அருகேயுள்ள நோய் எதிர்ப்பு சக்தியால் விளக்கலாம் என்று, ஐ.சி.எம்.ஆரின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் இயக்குநரும், ஐ.சி.எம்.ஆரின் தேசிய செரோ-கணக்கெடுப்புகளின் முன்னணி ஆய்வாளருமான மனோஜ் முர்ஹேகர், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "தனிப்பட்ட முறையில், நான் பிந்தைய விளக்கத்தின் பக்கத்தில் இருப்பேன்" என்றார்.
பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் கேரளா வெற்றி பெற்றதா இல்லையா என்பது, நாட்டின் பிறபகுதிகள் தோல்வியுற்றதா இல்லையா என்பதோடு, நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.