இந்தியாவின் கோவிட் தடுப்பூசி பிற நோய்த்தடுப்பு திட்டங்களைத் தகர்த்துவிடும்
இந்தியாவில் கோவிட்-19 மற்றும் தாய்-சேய் நோய்த்தடுப்பு திட்டங்கள் இரண்டுமே, லட்சிய இலக்குகளைக் கொண்டுள்ளன. கோவிட்-19 தடுப்பூசி பணிகளுக்கு தாய்-குழந்தை நோய்த்தடுப்பு திட்டத்தின் உள்கட்டமைப்பு எடுத்துக் கொள்ளப்படுவதால், அந்த திட்டம் பாதிக்கப்படக்கூடும் என்று எங்கள் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
புதுடெல்லி: ஜூலை மாதத்திற்குள் 500 மில்லியன் டோஸ் வரை தடுப்பு மருந்து வழங்குவதற்கான இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசி இலக்கு, இது நாட்டின் தற்போதைய வழக்கமான நோய்த்தடுப்புத் திட்டத்திற்கான கட்டமைப்பை சிரமப்படுத்தக்கூடும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏறத்தாழ, 12 நோய்களுக்கு சுமார் 390 மில்லியன் சொட்டு மருந்துடன், ஆண்டுதோறும் 56 மில்லியன் மக்களை -- 26.7 மில்லியன் கைக்குழந்தைகள் மற்றும் 29 மில்லியன் தாய்மார்கள்-- குறிவைக்கும் இந்தியாவின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டம் (UIP) உலகின் மிகப்பெரிய ஒன்றாகும். இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தையும், இந்தியா தொடங்கியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரியான மனித வளங்களையும், உள்கட்டமைப்பையும் பயன்படுத்தி இணையாக செயல்படுத்தப்படுகின்றன.
ஒருங்கிணைந்த இந்திரதனுஷ் இயக்க (IMI) முன்முயற்சியின் கீழ், தேசிய அளவில் வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகளை 90% ஆக உயர்த்த வேண்டும் என்று நாடு கருதும் சூழலில், அதே இலக்கை அடைவதற்கான ஒரு முயற்சியாக, ஒருங்கிணைந்த இந்திரதனுஷ் இயக்கம் 3.0 என்ற திட்டத்தை, பிப்ரவரி மாதம் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்தார் ; கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகளுக்கான 90% பாதுகாப்பு இலக்கை எட்டுவதில் இந்தியா தோல்வியுற்றுள்ளது.
தற்போது நாடு கூடுதலாக கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தில் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாஸ்பெண்டிடம் பொது சுகாதார வல்லுநர்கள் கூறுகையில், இரண்டு நோய்த்தடுப்பு திட்டப் பணிகளை ஒன்றாகவோ அல்லது கூடுதல் ஆதாரங்களுடன் செயல்பட மத்திய அரசு பரிசீலித்தால், அது கூடுதல் அழுத்தத்தை தரும் என்றனர்.
இந்த ஆண்டு இந்தியாவுக்கு மூன்று பெரிய சுகாதார சவால்கள் உள்ளன: கோவிட் தடுப்பூசி என்ற மிகவும் லட்சியத் திட்டம், வழக்கமான நோய்த்தடுப்பு இலக்கு, அத்துடன் (காசநோய், ஊட்டச்சத்து போன்ற) பிற பொது சுகாதார பிரச்சினைகள். இத்திட்டங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று, உள் மருத்துவ நிபுணரும், The Coronavirus: What you Need to Know about the Global Pandemic ஆசிரியருமான ஸ்வப்னீல் பாரிக் கூறினார். "இந்த ஆண்டு அளவிடப்பட்ட யுஐபி இலக்குகளை நம்மால் எட்ட முடியவில்லை. ஆனால் முந்தைய ஆண்டுகளை விட நாம் அளவைக் குறைக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,"என்று பாரிக் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.
வழக்கமான நோய்த்தடுப்பு தரவு எதைக் குறிக்கிறது
ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசத்திலும் நோய்த்தடுப்பு அளவுகளுக்காக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS) ஐந்து சுற்றுகளின் தரவுகளில் இருந்து யு.ஐ.பி கவரேஜ் அதிகரிப்பது மெதுவான, பல தசாப்த கால முயற்சியாகும்; முதல் கணக்கெடுப்பின் தரவு 1992-93 ஆம் ஆண்டுகளில் இருந்தும், மிக சமீபத்திய தகவல்கள் 2019-20 ஆம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 இல் இருந்து கிடைத்தவை.
இந்தியாவின் தேசிய நோய்த்தடுப்பு நிலை (அனைத்து அடிப்படை தடுப்பூசிகளையும் பெற்ற 12 முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளின் சதவீதம்) தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்-1 (1992-93) இல் 36% கவரேஜில் இருந்து தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்-2 (1998) இல் 42% ஆக உயர்ந்துள்ளது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -2 இல் (1998-99) 42% வரை, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -3 இல் (2005-06) 43.5% மற்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 இல் 62% (2015-2016); தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5 இன் படி அகில இந்திய பாதுகாப்பு இதுவரை கணக்கிடப்பட்டு வெளியிடப்படவில்லை, ஆனால் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தரவு வெளியிடப்பட்ட 17 மாநிலங்களில் 70%-க்கும் மேலாக தடுப்பூசி விகிதங்கள் காணப்பட்டன.
உதாரணமாக, 1992-93 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -1 தரவு, இந்தியாவில் மிகக் குறைந்த நோய்த்தடுப்பு பாதுகாப்பு நாகாலாந்தில் 3.8% என்று காட்டியது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -2 (1998-99) பீகார் மாநிலத்தில் மிகக் குறைந்த நோய்த்தடுப்பு பாதுகாப்பு 11% என பதிவு செய்தது. மூன்று அடுத்தடுத்த ஆய்வுகளின் தரவுகள் நாகாலாந்தில் மீண்டும் மிகக் குறைந்த அளவிலான நோய்த்தடுப்பு பாதுகாப்பு விகிதத்தை பதிவு செய்கின்றன, இதில் 21% பாதுகாப்பு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-3 (2005-06), 36% தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 (2015-16) மற்றும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-20) இல் 58% ஆகும்..
சமீபத்திய தரவு சுட்டிக்காட்டியபடி, 90% யுஐபி கவரேஜ் இலக்கை எட்டுவதை இந்தியா தொடர்ந்து தவறவிட்டது, இதற்காக டிசம்பர் 2018 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நோய்த்தடுப்பு அளவை 90% ஆக உயர்த்த, ஒரு புதிய ஐஎம்ஐ திட்டத்தை 2017 இல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
கடந்த 1998-99 முதல், யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை மட்டுமே தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (2019-20) இல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி 94.9% கவரேஜை (அதுவும் ஒரு முறை) அடைய முடிந்தது. முந்தைய கணக்கெடுப்புகளின் தரவுகளின்படி, வேறு எந்த மாநிலமும் 90% பாதுகாப்பு இலக்கை அடையவில்லை.
"வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகள் அதிகரிக்க கடினமாக இருப்பதற்கும், தரவுகளில் ஏன் மாறுபாடு இருப்பதற்கும் ஏற்கனவே பல காரணங்கள் உள்ளன,"என்று, புதுடெல்லியில் உள்ள தேசிய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் மேம்பாட்டு ஆய்வுக் கழகத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி யென்னபு மாதவி கூறினார். "எடுத்துக்காட்டாக, சில நேரங்களில் மக்கள் முதல் மற்றும் இரண்டாவது சொட்டுகளை எடுத்துக் கொள்வார்கள், ஆனால் மீதமுள்ளவற்றுக்கு வரமாட்டார்கள். தடுப்பூசி பெற ஒருநாள் செலவழிப்பதற்கு பதிலாக, தாய்மார்கள் கூலி செய்து காசு பார்க்கும் வாய்ப்பை தேர்வு செய்யலாம் " என்றார்.
முந்தைய இரண்டு ஐஎம்ஐ முயற்சிகள் யுஐபிக்கான 90% கவரேஜ் இலக்குகளை அடைவதில் குறுகிய வீழ்ச்சியை ஈடுகட்டும் என்று நம்பப்பட்டன. 90% கவரேஜை அடைவதற்கான மத்திய அரசின் செயல் திட்டம், நோய்த்தடுப்பு இலக்குகளை அடைவதில் சமூகங்களில் இருந்து போதுமான தேவையை பெறவில்லை. செயல்திட்டங்களின்படி தடுப்பூசி தயக்கத்தை நிவர்த்தி செய்வதும், தடுப்பூசிகளைத் தொடர்ந்து ஏற்படும் பாதகமான நிகழ்வுகளின் பயத்தைத் தணிப்பதும் தேவையை அதிகரிப்பதற்கான ஒரு வழியாகும். நம்பிக்கையை வளர்ப்பதற்கான தொடர்பு முக்கியமாக இருக்கும், மேலும் தடுப்பூசி பற்றி பரவலாக பேச பள்ளி குழந்தைகள் அல்லது மதத்தலைவர்களை தூதர்களாகப் பயன்படுத்த அரசு அறிவுறுத்துகிறது, தடுப்பூசி மற்றும் மக்களுக்கு நிதி அல்லாத சலுகைகளை வழங்குவது பற்றி அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக மக்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறுவதை உறுதி செய்கிறது.
இந்த சவால்களுடன் தொற்றுநோயும் சேர்ந்து கொண்டது. 2020 ஆம் ஆண்டில் ஏராளமான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உள் நாட்டு புலம் பெயர்ந்தவர்கள் வழக்கமான தடுப்பூசிகளைத் தவறவிட்டதாக அரசின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் ஒப்புக் கொண்டுள்ளது. இப்போது ஐ.எம்.ஐயின் மூன்றாவது திட்டத்தின் மூலம், நோய்த்தடுப்பு இலக்கை 90% ஆக அதிகரிக்க மத்திய அரசு மீண்டும் உறுதியளித்துள்ளது. ஐ.எம்.ஐ 3.0 க்கு மத்திய அரசு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை என்றாலும், கோவிட்-19, உள்நாட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்த முடியும் என்று கருதுகிறது.
இந்தியா தனது கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தில் இறங்கியுள்ள அதே நேரத்தில் தான், இந்த பணிகள் அனைத்தும் திட்டமிடப்பட்டுள்ளன. மார்ச் 2, 2021 நிலவரப்படி, கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அல்லது இரண்டாவது டோஸாக - 15.4 மில்லியன் தடுப்பூசிகளை இந்தியா செலுத்தி இருக்கிறது. இது ஜூலை 2021 வரை, 500 மில்லியன் சொட்டுகள் என்ற இலக்கை எட்ட வேண்டியதில் வெறும் 3% ஆகும். எஞ்சியுள்ள 97% தடுப்பூசி மருந்துகள், அடுத்த 20 வாரங்கள் / ஐந்து மாதங்களில் விரைவாக செலுத்தப்பட வேண்டும் என்பதையே இது குறிக்கிறது.
இதை சரிசெய்ய, 2021 மார்ச் 1 ம் தேதியில் இருந்து, கோவிட் -19 தடுப்பூசி வழங்க தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. "இதன் மூலம் அரசு பொது மருத்துவமனைகள் மீதான சுமையை குறைக்க முடியும், பின்னர் வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகளில் மீண்டும் கவனம் செலுத்த முடியும்," என்று, இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீநாத் ரெட்டி கூறினார்.
சிக்கல் என்னவென்றால், இரண்டு தடுப்பூசி திட்டங்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்கான அரசின் திறனுக்கு அப்பாற்பட்டது என்று பரிக் சுட்டிக்காட்டினார். இது பக்க விளைவு இருக்குமா -- வழக்கமான நோய்த்தடுப்புக்கான குறைந்த தேவைக்கான தற்போதைய காரணங்கள் மற்றும் கோவிட் -19 தடுப்பூசி போடத் தயங்குவதற்கான புதிய சிக்கல்கள் -- என்ற எண்ணத்தில், மற்ற இரண்டு திட்டங்களையும் மெதுவாக்கும் என்று அவர் கூறினார்.
வளங்கள் கோவிட்-19க்கு திருப்பி விடப்பட்டன
கோவிட்-19 தொற்றுநோய்களின் போது வழக்கமான நோய்த்தடுப்பு வழங்கல் பணிகள் குறைந்தன, ஜனவரி 2020 உடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2020 இல் 1 மில்லியனுக்கும் குறைவான குழந்தைகள் பேசில் கால்மெட்-குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசியைப் பெற்றதாக, ஆகஸ்ட் 2020 இல் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.
யுஐபியைப் போலவே, கோவிட் -19 தடுப்பூசி திட்டமும் இலக்குகளை அடைய போராடுகிறது. தொடங்கப்பட்ட ஒரு மாதம் ஆன பிறகும் கூட மிக மந்தமாக உள்ளது, ஜூலை 2021 க்குள் 500 மில்லியன் தடுப்பூசிகளின் இலக்கை இத்திட்டம் அடைய வேண்டியுள்ளது என்று, இந்தியாஸ்பெண்ட் பிப்ரவரி 16 கட்டுரை தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வளங்களையும் உள்கட்டமைப்பையும் பகிர்ந்துகொள்வது இரு திட்டங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார நிபுணர்களை மேற்கோள் காட்டி, இந்தியாஸ்பெண்ட் அக்டோபர் கட்டுரை தெரிவித்துள்ளது. இந்தியாவின் யுஐபி திட்டம், ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் 26 மில்லியன் குழந்தைகளின் பிறப்புகளை கையாண்டு வருகிறது, மற்றும் "அதை நீட்டக்கூடாது", என்று, கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்த உலக சுகாதார அமைப்பின் பணிக்குழு உறுப்பினர் ககன்தீப் காங், இந்தியாஸ்பெண்டிடம் அப்போது தெரிவித்திருந்தார்.
நோய் தடுப்பூசி திட்டங்களுக்கு, குளிர்சாதன சங்கிலி மற்றும் தடுப்பூசி தளவாடங்கள்முக்கியமானவை. இந்த உள்கட்டமைப்பு, இரண்டு தடுப்பூசி திட்டங்களின் இலக்குகளையும் பூர்த்தி செய்யவில்லை. கோவிட்-19 க்கு முன்னர், அரசால் 27,000 க்கும் மேற்பட்ட குளிர்சாதன சங்கிலி புள்ளிகள் இருந்தன, இது 2020 டிசம்பருக்குள் 28,947 ஆக அதிகரித்தது - 390 மில்லியன் (வழக்கமான நோய்த்தடுப்பு) சொட்டுகளில் இருந்து கூடுதலாக 500 மில்லியன் சொட்டுகளுக்கு (கோவிட்-19 நோய்த்தடுப்பு) கிட்டத்தட்ட இரண்டு மடங்கு தடுப்பூசிகளை வழங்க, வெறும் 1,947 மட்டுமே அதிகரிக்கப்பட்டது.
அனைத்து சவால்களும் கருத்தில் கொள்ளப்பட்டால், இந்தியாவுக்கு 2021 என்பது ஒரு முக்கியமான ஆண்டாகும், மேலும் நோய்த்தடுப்பு இலக்குகள் இரண்டிலும் சிறப்பாக செயல்பட நாடு ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். "கோவிட்-19 என்பது இங்கு நாம் எதிர்கொள்ளும் ஒரேயொரு சுகாதாரச்சவால் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று பரிக் கூறினார். "காசநோய், ஊட்டச்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, நிமோனியா மற்றும் பிற அனைத்து தடுப்பூசிகளும் கலந்து கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்றார் அவர்.
(திருத்தியவர், மரிஷா கார்வா).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.