கோவிட் -19: இந்தியா தனது விலங்கு, இறைச்சி சந்தைகளை கட்டுப்படுத்த வேண்டும்
பெங்களூரு:இறைச்சி மற்றும் உயிருடன் இறைச்சிக்காக விலங்குகளை விற்கும் பல சந்தைகளை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் - குறிப்பாக கோவிட்19 பரவலால்- இதுபோன்ற வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், மக்களை விலங்குகளை வர்த்தகம் செய்யத் தூண்டும் சமூக மற்றும் பொருளாதார தேவைக்கான காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலமும், வனவிலங்குகளை பாதுகாத்து, அவற்றின் வாழ்விடங்களை மீட்டமைக்கலாம் என்று, வல்லுநர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.
இதுபோன்ற ஏராளமான சந்தைகள் நாடு முழுவதும் செயல்படுவதாக, அரசுசாரா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான, வனவிலங்கு பாதுகாப்பு சங்கம்-இந்தியா (WCS- India)அளித்த, ஏப்ரல் 2020 அறிக்கையில்கூறப்பட்டுள்ளது. இச்சந்தைகள் விலங்குவழி நோய்களின் - அதாவது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கிருமிகளால் ஏற்படும் தொற்று - ஆபத்தை அதிகரிக்கின்றன. ஏனெனில், அந்த சந்தைகள், நீண்ட நேரம் மன அழுத்த சூழ்நிலையில் உள்ள ஏராளமான உயிரினங்களைக் கொண்டுள்ளன.
இதுபோன்ற சந்தைகள் ஒழுங்குபடுத்தப்படாவிட்டால், வனவிலங்குகளின் சட்டவிரோத வர்த்தகத்தை தடை செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ள, தொடர்ந்து பரவி வரும் கோவிட்-19 தொற்றுநோயை நாம் பார்க்க வேண்டும்.
ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோய்த்தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதல் 41 நோயாளிகளில், மூன்றில் இரண்டு பங்கு ஹுனான் கடல் உணவுச்சந்தையில் இருந்து வெளிப்பட்டுள்ளது. அந்த சந்தை, "இலாபகரமாக வனவிலங்குகளை விற்பனை செய்யும் வர்த்தகத்தின் ஒரு முக்கிய மையமாகவிளங்குகிறது - அங்கு சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் விற்பனை நடக்கிறது". ஒழுங்குபடுத்தப்படாத, சுகாதாரமற்ற சந்தையில், விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கு வைரஸ் பரவுவதற்கு உகந்த அனைத்து சூழ்நிலைகளும் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஜூன் 9, 2020 நிலவரப்படி, உலகளவில் 4,00,000க்கும் அதிகமானோர் கோவிட்-19 நோயால் இறந்துவிட்டனர், 70 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையத்தின்தகவல்கள் காட்டுகின்றன. இந்தியாவில் 2,66,598 வழக்குகள் பதிவாகியுள்ளன; 7,466 நோயாளிகள் இறந்துள்ளதாக, ஹெல்த்செக்தரவுத்தளமான கொரோனா வைரஸ் மானிட்டர் தரவுகள்தெரிவிக்கிறது.
கடந்த 1960ம் ஆண்டு மற்றும் 2004-க்கு இடையில் தோன்றிய சுமார் 335 அடையாளம் காணப்பட்ட நோய்களில் குறைந்தது, 60%விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றிக் கொண்டவை. 2020 மார்ச் மாதத்தில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரைகூறியபடி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 250 கோடி பேருக்கு உடல்நல பாதிப்புகளையும், உலகளவில் 27 லட்சம் பேரின் இறப்புகளுக்கும் விலங்குவழி தொற்று நோய்ப்பரவல் காரணமாகிறது.
இந்த சந்தைகள் எங்கே உள்ளன
இந்தியாவின் வனவிலங்கு கடத்தல் தடுப்பு (CWT) திட்டத்தின்உறுப்பினர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு மதிப்பிடப்பட்ட, ஆன்லைனில் வெளிப்படையாகக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த வரைபடம் அமைந்துள்ளது. வனவிலங்கு கடத்தல்காரர்களைக் கண்டறிதல், அடையாளம் காணுதல், விசாரித்தல், கைது செய்தல், வழக்குத் தொடுப்பது மற்றும் தண்டித்தல் ஆகியவற்றை அமலாக்க நிறுவனங்களுக்கு இடையே திறனை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.
"மேலே உள்ள வரைபடத்தில் இருந்து நீங்கள் பார்க்க முடிந்த வகையில், வனவிலங்குகள் விற்கப்படும் சந்தைகள், நாடு முழுவதும் பரவலாக உள்ளன," என்று டபிள்யு.சி.எஸ். இந்தியாவுக்கான வனவிலங்கு கடத்தல் தடுப்பு திட்டத்தை வழிநடத்தும் சாஹிலா குடல்கர் கூறினார். "ஆனால் இந்த வரைபடம் இந்தியா முழுவதும் மிகவும் பரவலான பிரச்சினையை மட்டுமே காட்சிப்படுத்துவதாக நான் சந்தேகிக்கிறேன்," என்றார் அவர்.
நொய்டாவை சேர்ந்த விலங்கு பாதுகாப்பு அமைப்பான, வைல்டுலைப் டிரஸ்ட் ஆப் இந்தியாவின்பாதுகாவலர் ஜோஸ் லூயிஸ் கூறுகையில், “வனவிலங்கு வர்த்தகத்தின் இயக்கவியல் மாறி வருகிறது” என்றார். "கடந்த சில ஆண்டுகளில், பெரிய, ஒழுங்கமைக்கப்பட்ட புலி வேட்டையாடும் வலையமைப்புகளை காண முடிவதில்லை. ஆனால் உயிருள்ள விலங்குகளை விற்கும் சந்தைகள், குறிப்பாக சிறு பாலூட்டிகள் மற்றும் ஆமைகள் போன்ற ஊர்வனவற்றின் விற்பனை அதிகரித்து வருகின்றது. உள்ளூர் [வனவிலங்கு] இறைச்சி சந்தைகள் கூட இதற்கு பெரும் பிரச்சினையாகி வருகின்றன” என்றார்.
புதியதல்ல
"மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற நகர்ப்புற சந்தைகள், பல ஆண்டுகளாக வனவிலங்குகளை விற்பனை செய்து வருகின்றன; தொடர்ந்து அதை மேற்கொண்டு வருகின்றன" என்று குடல்கர் கூறினார். வரைபடத்தில் உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் இத்தகைய சந்தைகளின் அதிக நிகழ்வு, செய்திகள் சார்ந்த சார்பு காரணமாக இருக்கலாம் என்று அவர் விளக்கினார். "இந்த இரண்டு மாநிலங்களும் சர்வதேச நன்னீர் ஆமை மற்றும் ஆமை கடத்தல் வலையமைப்பில் முக்கியமான பகுதிகள் என்பதையும் நினைவில் கொள்வது அவசியம்" என்றார்.
"உத்தரப்பிரதேசத்தின் பரந்த நதிப்படுகைகளில் இருந்து ஏராளமான நன்னீர் ஆமைகள் மற்றும் ஆமைகள் சேகரிக்கப்படுகின்றன, பின்னர் அவை, மேற்கு வங்க மாநில சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு, விற்கப்படுகின்றன" என்று குடல்கர் விளக்கினார். "பெரும்பாலும், மேற்கு வங்கம் என்பது இத்தகைய உயிரினங்களை கறுப்புச் சந்தைக்கு கொண்டு செல்வதற்கான ஒரு இடைநிறுத்தமாகும், பின்னர் அவை நில எல்லையைத்தாண்டி வங்கதேசத்துக்கோ அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு விமானம் மூலமோ அனுப்பப்படுகின்றன" என்றார்.உத்தரபிரதேசத்தின் பல நகரங்கள் பாதுகாக்கப்பட்ட பூர்வீக பறவைகளான கிளிகள், குருவி, நாரைகள், ஆந்தைகள் மற்றும் மலைப்பகுதி மைனாக்களையும் விற்பனை செய்கின்றன.
கடத்தல்காரர்களை பொறுத்தவரை, வனவிலங்குகள் "வர்த்தகம் என்பது, போதைப்பொருள், ஆயுதங்கள், கலைப்பொருட்கள் போன்ற பிற பொருள்களை போல, மதிப்புள்ள மற்றொரு பொருளாகவும் கருதப்படலாம், " என்று டபிள்யு.சி.எஸ். இந்தியாவின் வன விலங்குகள் கடத்தல் பிரிவு திட்டத்தின் முன்னணி வனவிலங்கு குற்ற ஆய்வாளர் அரிஸ்டோ மெண்டிஸ் கூறினார். சர்வதேச எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் இத்தகைய வர்த்தகம் பிரதானமாகும்; “இது வனவிலங்கு கடத்தலை தடுப்பதற்கு, இத்தகைய பிராந்தியங்களில் கவனம் செலுத்துவது முக்கியம்” என்று மெண்டிஸ் கூறினார்.
அதற்கு முன்பாக, நாட்டில் வனவிலங்கு விற்பனை சந்தைகள் பரவலாக இருப்பது பற்றிய முழுமையான மதிப்பீடு தேவை, குறிப்பாக நாம் ஒரு விலங்குவழி பரவும் தொற்றுநோயால் வாழ்ந்து வரும் சூழலில், இது அவசியம் என்று மெண்டிஸ் கூறினார்.
இந்தியாவில் வனவிலங்கு சந்தைகளின் அளவு மற்றும் தாக்கம் குறித்த உண்மையான தோற்றத்தைப்பெற, ஆராய்ச்சியாளர்கள் பல அமலாக்க முகவர், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் (உள்ளூர், பிராந்திய, மாநில அளவிலான மற்றும் பன்மொழி செய்திகள் ஆதார வளங்கள்) ஆகியவற்றில் இருந்தும் அது தொடர்புடைய இணையதளங்கள் வாயிலாகவும் பெறப்பட்ட வனவிலங்கு தொடர்பான குற்றங்கள் குறித்த தரவை ஒன்றிணைக்க வேண்டும் என்று மெண்டிஸ் பரிந்துரைத்தார்.
மிக எச்சரிக்கையுடன் வனவிலங்கு வர்த்தகம் புரிவது சட்டவிரோதமானது
வனவிலங்கு குற்ற கூட்டமைப்பு பிராந்திய, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு நிலைகளில் இயங்குகின்றன; அதில் பலர் உள்ளனர். எனவே, எந்தவொரு ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோத வர்த்தக கூட்டமைப்பிலும் ஒவ்வொரு வீரரும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை கண்டறிவது கடினம்.எடுத்துக்காட்டாக, ஜூலை 2019 இல் அசாமில் காண்டாமிருக வேட்டையாடும் குழுக்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ‘துப்பாக்கியால் சுடுவோரை’ பணியமர்த்துவதன் மூலமும், அவர்களுக்கு தேவையான துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வழங்குவதன் மூலமும் வர்த்தகத்தை எளிதாக்குவதில் வளையத்தில் மாஸ்டர், முக்கிய பங்கை வகித்தது வெளிப்பட்டது. அசாமில் உள்ள வேட்டையாடும் பகுதிகளில் இருந்து நாகாலாந்து மற்றும் மணிப்பூருக்கு காண்டாமிருகக் கொம்புகளை கடத்துவதன் மூலம் ‘மாஸ்டர்’ முக்கிய பங்கு வகித்தார், அங்கிருந்து அண்டை நாடான மியான்மருக்கு அவை கடத்தப்பட்டன.
செப்டம்பர் 2019 விசாரணையில், எறுப்புண்ணி கடத்தல் வலையமைப்பில் “கூட்டமைப்புக்குள் உள்ள சில நபர்கள் கடத்தலை எளிதாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன; அவர்கள், வனவிலங்கு வர்த்தகம் சட்டவிரோதம் என்பதை தெளிவாக அறிந்தவர்கள்” என்று மெண்டிஸ் கூறினார்.
"என் அனுபவத்தில், வனவிலங்குகளை விற்பனை செய்வது அல்லது வாங்குவது சட்டவிரோதமானது என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கிறார்கள்," என்று சி.டபிள்யூ.டி திட்டத்தின் குடல்கர் கூறினார். “அகர்தலாவில் உள்ள பட்டாலா சந்தை போன்ற இடங்களில், உள்ளூர் அதிகாரிகள் வனவிலங்குகளின் விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளனர், ஆனால் நன்னீர் ஆமைகள் மற்றும் ஆமைகளின் விற்பனை தொடர்கிறது” என்றார்.
கடத்தலைத் தடுப்பது எப்படி
சூராஜ் பால் வழக்கில், வலுவான அமலாக்க நடவடிக்கை மட்டும் என்ன செய்துவிட முடியும் என்பதைக் காட்டுவதாக, குடல்கர் கூறினார்:குற்றம் சாட்டப்பட்டவர் பணமோசடி தடுப்பு சட்டம், 2002 (PMLA) இன் கீழ் கடுமையான விதிகளின்படி தண்டிக்கப்பட்டார்; அந்த சட்டம், சொத்துக்களை முடக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது; வனவிலங்கு கடத்தல்காரர்களின் நிதி ஆதாரங்களை தடுக்கச் செய்கிறது. "பி.எம்.எல்.ஏ இன் கீழ் குற்றவாளிகளை தண்டிப்பது என்பது, ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல் நெட்வொர்க்குகளை அகற்றுவதில் நீண்ட தூரம் செல்லக்கூடும்" என்று குடல்கர் கூறினார்.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறியும் பணி மேற்கொள்ளும் பல்வேறு அலுவலகங்கள் மற்றும் முகமை நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த தகவல்தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கைக்கு வழிவகுக்கும். "கடந்த ஆண்டில் மட்டும், மாநில வனத்துறைகள் மற்றும் எல்லைப்பாதுகாப்புப் படை மற்றும் சஷஸ்திரா சீமா பால் போன்ற பாதுகாப்புப் படைகளின் அதிகாரிகளுக்கு இடையில் தொடர்பு கொள்வதற்கு நாங்கள் பல நிகழ்வுகளைச் செய்துள்ளோம்; இது ஆமைகள், பச்சோந்தி, உடும்பு கடத்தல் தொடர்பான வழக்குகளில் வெற்றிகரமான நடவடிக்கைக்கு வழிவகுத்தது, ”என்றார் குடல்கர்.
அமலாக்கத்துறையால் இயக்கப்படும் தீர்வின் முக்கியமான செயல்பாடு, தற்போது நாம் வைத்திருக்கும் தடையை விட - வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதாகும். "ஒரே இரவில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (WLPA) இறைச்சிக்காக வனவிலங்குகள் வேட்டையாடுவதையும், நுகர்வு செய்வதையும் தடைசெய்தது, இது ஆபத்தான உயிரினங்களில் இருந்து வந்ததா அல்லது பொதுவானதா என்பதை பொருட்படுத்தவில்லை," என்று, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து செயல்படும் அரசுசாரா அமைப்பான சூழலியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான அசோகா ஆராய்ச்சி அறக்கட்டளையின்அபி டி. வனக் கூறினார்.
. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் (WLPA) 5வது அட்டவணையின்கீழ் “பூச்சிகள்” என்று பட்டியலிடப்பட்டுள்ள ஒரு சில உயிரினங்களை தவிர, காட்டு விலங்குகளை கொன்று உட்கொள்வது சட்டவிரோதமானது. "சில மாநிலங்களில் விவசாயத்திற்கு தொந்தரவு செய்வதாகக்கூறி, பெரும்பாலான காட்டு பன்றிகள் அல்லது மான் போன்றவற்றை சுடுவதற்கு அனுமதி உள்ளபோதும், அவற்றை உடகொள்ள அனுமதி கிடையாது. இது நீடித்த அறுவடை என்ற கொள்கைகளுக்கும் எதிரானது”என்று வனக் குறிப்பிட்டார். "ஆபத்தான உயிரினங்களை வேட்டையாடவோ அல்லது கொல்லவோ அனுமதிக்காததற்கு சிறந்த காரணங்கள் உள்ளன; ஆனால் நிலப்பரப்பில் பாதுகாக்கப்படும் சிட்டல் போன்ற இனங்கள் அந்தமான் தீவுகளில் ஆக்கிரமித்தவையாக கருதப்படுகின்றன, அவை அங்குள்ள் அபூர்வீக தாவரங்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கிறதா? ” என்று கேட்டார் வனக்.
இருப்பினும், சில வனவிலங்குகளை வேட்டையாடுவதை அனுமதிப்பது மற்ற பிற வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். "கொல்லப்பட்ட பிறகு அது என்ன விலங்கு என்று சொல்வது கடினம், குறிப்பாக இறைச்சி மட்டுமே என்றால் ...அதுவும் சமைத்த இறைச்சியாக இருந்தால் கடினம்" என்று, பெயர் வெளியிட விரும்பாத அமலாக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
"மக்கள் வனவிலங்கு வர்த்தகத்தின் ஒரு பகுதியாக மாறாமல் இருப்பதை உறுதி செய்ய, பின்வரும் பிற கேள்விகளுக்கு நாம் தீர்வு காண வேண்டும்: வறுமைதான், மக்களை வனவிலங்குகளை வேட்டையாடி விற்க தூண்டுகிறதா? வேட்டை என்பது உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியா? உள்ளூர் சந்தைகளில் வனவிலங்குகளின் விற்பனை சந்தர்ப்பம் என்பது இயற்கையானதா? ” என்றார் குடல்கர். "நிச்சயமாக, [சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை சமாளிப்பதற்கான] முதல்படி, வலுவான மற்றும் நேரடி அமலாக்க நடவடிக்கை ஆகும், ஆனால் நீண்ட காலத்திற்கு பல சமூக மற்றும் பொருளாதார தலையீடுகள் இதற்கு தேவைப்படலாம்" என்று குடல்கர் விளக்கினார்.
வனவிலங்குகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுப்பது போன்ற பெரிய பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்தியா என்ன செய்ய முடியும்? வனவிலங்கு பகுதிகளிய பாதுகாத்தல், சட்டதிட்டங்களை வலுப்படுத்துதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட மற்றும் பிற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்குள்சுரங்கம் மற்றும் நீர்மின் நிலையம் போன்ற பெரிய வளர்ச்சித் திட்டங்களை முற்றிலுமாக தடைசெய்ய வேண்டும் என்று குடல்கர் கூறினார்.
(பர்திகர், பெங்களூரை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.