மும்பை: இந்தியாவின் கோவிட் -19 பாதித்தோர் எண்ணிக்கை, 1024 ஆக (மார்ச் 29 அன்று இரவு 7.30 மணி நிலவரப்படி) உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க, 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு ஆறாவது நாளில் இருந்தது. முன்பே இருக்கும் சுவாச நோய்களான காசநோய் இருந்தாலோ அல்லது வயதானவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தெரிந்தாலும், குழந்தைகள், கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் தாய்மார்களுக்கும் கோவிட் - 19 அபாயங்கள் பற்றி அதிகம் தெரியவில்லை.

அமெரிக்காவின் மேரிலேண்ட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் -யுஎம்எஸ்ஓஎம் (UMSOM) பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்கள் மற்றும் குழந்தை மருத்துவ நிபுணர் கரேன் கோட்லோஃப், 2020 மார்ச் 24ல், பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையம் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த இத்துறையில் அனுபவம் உள்ள அவர், அமெரிக்காவிலும் வளரும் நாடுகளிலும் தடுப்பூசிகளை பயன்படுத்துவதன் மூலம், தொற்று நோய்களிய தடுப்பதில் கோட்லோஃப் கவனம் செலுத்தியுள்ளார். யுஎம்எஸ்ஓஎம் -இன் தடுப்பூசி மேம்பாட்டு மையத்தில் தடுப்பூசி சிகிச்சை மற்றும் மதிப்பீட்டு பிரிவின் முதன்மை ஆய்வாளராகவும் உள்ளார்.

இதுவரை கோவிட் - 19 பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 90% பேருக்கு அது பெரிய விளைவை ஏற்படுத்தவில்லை என்று கோட்லோஃப் கூறினார்; ஆனால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பரவினால் எவ்வாறு அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றார். இதற்கு தடுப்பூசி கண்டறிதல் என்பது குறைந்தது 12-18 மாதங்கள் ஆகலாம் என்று அவர் கூறினார்.

நேர்காணலின் திருத்தப்பட்ட பகுதிகள்:

நமது பொதுவான பார்வை, கோவிட் 19 குழந்தைகளை விட பெரியவர்களை மிகவும் பாதிக்கிறது. அது ஏன்?

இந்த நோயில் இதுவரை கிடைத்த அனுபவவே அதுவாகத்தான் உள்ளது. உண்மையை சொல்வதானால், அது ஏன் என்று எங்களுக்கும் தெரியாது. அதில் ஒரு சில கோட்பாடுகள் உள்ளன. குறிப்பாக சுவாரஸ்யமான ஒரு கோட்பாடு: கோவிட்-19 உள்ள பெரியவர்களுக்கு என்ன நடக்கிறது என்று நீங்கள் பார்த்தால், முதல் வாரத்தில் அவர்களுக்கு சுவாச நோய் உள்ளது; அதில் இருந்து முன்னேற கூட தொடங்கலாம். இரண்டாவது வாரத்தில், சுவாச நோயின் அடிப்படையில் அவர்கள் உண்மையிலேயே தீவிர சிக்கலை எதிர்கொள்கிறார்கள். இது அவர்களின் தீவிரமான நோயெதிர்ப்பு செயல்பாடுகளுக்கு மத்தியில் இரண்டாவது வாரத்தில் நுரையீரலில் நோயை தூண்டுகிறது என்பதை நாங்கள் அறிவோம். நோய்த்தொற்றுக்கான குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியில், இது எவ்வாரு வேறுபாடு உள்ளது என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். எனவே, அவர்கள் மேல் சுவாச நோய்த்தொற்றின் முதல் வாரத்தைப் பெறுகிறார்கள், ஆனால் அவர்களின் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் அழற்சியின் பரவலை அவர்கள் பெறவில்லை. நோய்த்தொற்றுக்கான நோயெதிர்ப்பு செயலில் இந்த வேறுபாடு குழந்தைகளின் முந்தைய அனுபவம் மற்றும் கொரோனா வைரஸ்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி அல்லது வேறு ஏதேனும் உள்ளார்ந்த வேறுபாடு ஆகியவற்றுடன் தொடர்புடையதா என்பது எங்களுக்கு இன்னும் தெரியாது.

கோவிட்-19 க்கு ஆளான குழந்தைகளுக்கு இது ஏதேனும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறதா?

இங்கே இது குறித்து நிறைய கேள்விக்குறிகள் உள்ளனவோ என்று நான் பயப்படுகிறேன். எங்களுக்கு தெரிந்த விஷயம் என்னவென்றால், இதுவரை பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு, அது லேசாகவே இருந்துள்ளது. சுமார் 10% பேருக்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். உண்மையில், இந்த தொற்றுநோயால் இறப்பது ஒரு சில குழந்தைகள் மட்டுமே. இதுவரை நம்மிடம் உள்ள தகவல்களில் இருந்து நாம் உறுதியாக உணரக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால், குழந்தைகள் பெரும்பாலும் நன்றாகவே இருக்கிறார்கள்; இச்ய்தியின் மிக அற்புதமான பகுதி இது என்று நான் நினைக்கிறேன்.குழந்தைகளுக்கு அதிக ஆபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு என்ன நேரிடும் என்பதை அறிய, இந்த நேரத்தில் நம்மிடம் போதிய தகவல்கள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எங்களுக்கும் தெரியாது. கோவிட்- 19 குழந்தைகளுக்கு லேசாக தாக்குகிறது, இது ஒரு அற்புதமான செய்தி என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.

குழந்தைகளுக்கு கோவிட்-19 தாக்கம் இருப்பதில் பிராந்திய அளவில் வேறுபாடு உள்ளதா?

எச்.ஐ.வி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றின் நோயெதிர்ப்பு விளைவுகளில், பிராந்திய அளவில் வேறுபாடுகள் இருப்பதையும், சிலருக்கு இன்னும் கடுமையான நோயை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் மற்ற வைரஸ்களில் இருந்து நாம் அறிவோம். ஆனால், கோவிட்-19 இன் நிலை இதுதானா என்பது எங்களுக்கு இன்னமும் தெரியாது. நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களில் நோயின் கடுமை குறித்த பல அறிக்கைகளை நாங்கள் இன்னும் இதுவரை பார்த்ததில்லை. இது ஒரு முக்கிய அடிப்படை நோய்களில் ஒன்றல்ல. எனவே நோயின் அளவை தீர்மானிக்க இது ஒரு முக்கிய காரணியாக இருக்காது. ஆனால் உண்மையை சொல்வதானால், குழந்தைகளை பற்றிய ஒரே தகவல் சீனாவில் இருந்தும், இத்தாலியில் இருந்து கொஞ்சம், இப்போது அமெரிக்காவில் இருந்து சிறிது கிடைத்திருக்கிறது.

எனவே, ஊட்டச்சத்து குறைபாடு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா போன்ற இடங்களில், இதனால் குழந்தைகளுக்கு என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது.

நைஜீரியா அல்லது இந்தியா போன்ற மக்கள் அடர்த்தியான நாடுகளை நாம் கையாளும் போது, வைரஸை கட்டுப்படுத்த உதவும் சிறந்த கருவிகள் யாவை?

ஒருவருக்கு ஒருவர் பரவும் நோய்த்தொற்றுகளை பொருத்தவரை நாம் தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பது என்னவென்றால், பரவலை தடுக்க முயற்சிக்கும்போது சமூக சூழலையும் அரசியல் சூழலையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான். எனவே சீனாவில் எது வேலை செய்கிறது, இத்தாலியில் எது வேலை செய்யவில்லை என்பதை குறிப்பிட்டு, அமெரிக்காவில் அதை செயல்படுத்த முடியாது. குறிப்பாக ஆப்பிரிக்காவில், நான் அதிகம் பணிபுரியும் இடங்களில், அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் குடும்பங்கள் உள்ளன; அதில் 200 பேர் சமையலை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் ஒரே வீடாக கருதப்படுகின்றனர், அது திறந்த வெளி பகுதியாக இருந்தாலும் கூட, ஒரே வளாகத்தில் இருக்கிறார்கள்.

எனவே சமூக விலகல் பற்றி நாம் பேசும்போது, அது சாத்தியமில்லை, இது போன்ற சூழலில், அது வேலை செய்யப்போவதில்லை. இந்த நோய்த்தொற்ரு ஆப்பிரிக்காவில் பரவத் தொடங்குவதாக நாம் கருதினால், அப்போது அதை எவ்வாறு நாம் அணுகுவோம் என்பது பற்றி தீவிரமாக சிந்திக்கத் தொடங்க வேண்டும்; அதற்கு பொருந்தக்கூடிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை கொண்டு வர வேண்டும். அந்த அளவிலான ஒரு தடுப்பூசி அல்லது சில வகையான தடுப்பு உண்மையில் இது போன்ற சூழல்களில் விடையாக இருக்க வேண்டும் என்று என்பதே என் கவலை.

அதிக அளவு வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகள், பணக்கார நாடுகளின் குழந்தைகளை விட அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்களா?

அவர்கள் அதிக வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்றால் அநேகமாக நோய்த்தொற்றுக்கு அவர்கள் ஆளாக நேரிடும் என்று நினைக்கிறேன். அந்த இணை நோய்த்தொற்றுகள் (எச்.ஐ.வி / காசநோய்) அவர்களின் நோயை இன்னும் கடுமையாக மாற்றாது என்பது எனது நம்பிக்கை. ஆனால் அது வெளிப்பட்டால், அதை இன்னமும் கவனிக்க வேண்டியிருக்கும்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்துவது?

இது எல்லோரையும் ஆபத்தில் ஆழ்த்தும், பரவக்கூடிய சூழ்நிலையாக இருக்கலாம். நீங்கள் அகதி முகாம்களில் குறைந்த வள அமைப்புகளைக் கொண்டிருக்கும்போது இதுவே உண்மையாகும். நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்னவென்றால், முடிந்தவரை சோப்பு மற்றும் தண்ணீரை வழங்குவதும், மக்களை முடிந்தவரை பிரிப்பதும் தான்.

கர்ப்பத்தில் இது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்?

நாங்கள் அதை கண்காணிக்கிறோம். சுவாச வைரஸான ஃப்ளூ காய்ச்சல் போன்ற சில தொற்றுநோய்களின் போது, கர்ப்பிணிகள் மிகவும் கடுமையான தொற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இது மிகவும் கவனமாக பார்க்கப்படுகிறது. சார்ஸ் (SARS) பரவலின் போது மோசமான கர்ப்ப விளைவுகளின் ஆபத்து அதிகமாக இருந்ததால், இதையும் நாங்கள் கண்காணிக்கிறோம். ஆனால் இதுவரை, நாம் பார்த்ததில், கோவிட்-19 கர்ப்பிணிகளை மிகக்கடுமையாக பாதிப்பதாக தெரியவில்லை.

கர்ப்பத்தில் ஏற்படும் விளைவுகளை பொறுத்தவரை, குழந்தைக்கு என்ன நடக்க வாய்ப்புள்ளது என்றால், முன்கூட்டியே குழந்தை பிரசவம் நடக்கலாம். ஆனால் கோவிட்-19 பாதிப்பால் முதிர்ச்சியற்ற குழந்தை பிரசவிக்கும் ஆபத்து அதிகரித்துள்ளதா என்பது தெரியாது. அதற்கு சிறிது நேரம் ஆகும். முதல் வயது குழந்தைகளுக்கு, வயது முதிர்ந்த் பிற குழந்தைகளுக்கு இருப்பதை விட சற்று கடுமையாக நோய்த்தொற்று இருக்கலாம் என்று சீனாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அக்குழந்தைகளில் பலரும் இன்னும் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள்.

கர்ப்பிணி பெண்ணிடம் இருந்து கருவில் உள்ள குழந்தைக்கு கோவிட்-19 பரவுதல் பற்றி ஏதாவது தெரியுமா?

இதற்காக ஒரு சில கர்ப்பங்கள் பார்க்கப்பட்டன. கர்ப்ப காலத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு செல்லும் என்பதற்கான ஆதாரங்களை இதுவரை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இதற்கு கூடுதல் ஆய்வுகள் தேவைப்படும், ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் தாய்ப்பால் புகட்டலாமா?

இது நிறைய பேர் யோசிக்கும் ஒன்று, இது சூழ்நிலையை பொருத்தது. ஆனால் நோய் ஆபத்தைவிட தாய்ப்பால் புகட்டுவதிலே நன்மை என்று அதிகம் தோன்றுகிறது. தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த பெண்கள் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம், ஆனால் முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது தாய்க்கு முகக்கவசம் அல்லது மூக்கு மற்றும் வாயை மறைக்க ஒரு வழி இருந்தால், அவர் அதை செய்ய வேண்டும்; குழந்தையைத் தொடுவதற்கு முன்பும், கைகளை நங்கு கழுவ வேண்டும்; பம்பிங் வாய்ப்பு இருப்பின் அதன் வாயிலாக தாய்ப்பால் புகட்டலாம். ஆனால் தாயின் கைகள் சுத்தமாக இருப்பதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.