மும்பை: கடந்த ஐந்தாண்டுகளில் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலகின் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என, தி லான்செட் கவுண்ட்டவுன் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வெளிப்பாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும், பல நாடுகளைப் போலவே, காலநிலை மாற்றத்தின் ஆரோக்கிய விளைவுகளைத் தடுக்க, குறைக்க அல்லது கையாள இந்தியா தயாராக இல்லை.

புதைபடிவ எரிபொருட்களை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலமும், மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப போதுமான அளவு செய்யத் தவறியதாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.அத்துடன் அவர்கள் பரவலான உணவு மற்றும் நீர் பற்றாக்குறை மற்றும் தீவிர காலநிலை ஆகியவற்றுக்கு ஆளாக நேரிடும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 270 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ள நாட்டிற்கு, தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, ஆய்வின் கண்டுபிடிப்புகளை அவசர எச்சரிக்கையாக கருதி செயல்பட வேண்டும் என்று, நாங்கள் பேட்டி கண்ட தனிப்பட்ட இந்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.

காலநிலை மாற்றம் மற்றும் உடல்நலம் தொடர்பான 44 அளவுருக்களைக் கண்காணிக்கும் வகையில், 43 கல்வியியல் ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சியான தி லான்செட் கவுண்ட்டவுன் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி, பாதிப்பு, தழுவல், தணிப்பு, பொருளாதாரம் மற்றும் பொது மற்றும் அரசியல் ஈடுபாடு போன்ற முக்கியப் போக்குகள் மோசமடைந்து வருவதால், இந்த ஆண்டு அறிக்கை "மிகவும் கவலையளிக்கும்" கண்ணோட்டத்தை முன்வைக்கிறது. .

இங்கிலாந்தின் கிளாஸ்கோவில், அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடைபெறவுள்ள 26வது மாநாட்டுக்கு உலகத் தலைவர்கள் தயாராகி வரும் நேரத்தில், தி லான்செட் கவுண்டவுன் சமீபத்திய அறிக்கை வெளிவந்துள்ளது. சராசரி உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் வரை, தொழில்துறை காலத்துக்கு முந்தைய நிலைகளை விட குறைக்க வேண்டும், குறிப்பாக வளரும் நாடுகளில் பயனுள்ள காலநிலை மாற்றத்திற்கு நிதி திரட்ட வேண்டும் என்ற பாரிஸ் உடன்படிக்கையின் நோக்கத்தை, தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அதிகரித்து வரும் நோய்கள்

காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவாக உயரும் வெப்பநிலை மற்றும் மாற்றப்பட்ட மழைப்பொழிவு முறை ஆகியவை, தொற்று நோய் பரவுவதற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்குகின்றன என்று அறிக்கை கூறுகிறது. டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஜிகா, மலேரியா மற்றும் காலரா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான பல தசாப்த கால முன்னேற்றத்தை இது செயல்தவிர்க்க முடியும். மேலும் இறப்புகள், பயிர் தோல்விகள், மனநலப் பிரச்சனைகள், கர்ப்ப கால சிக்கல்கள் மற்றும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் தொடர்பான நோயுற்ற தன்மை ஆகியவை குறித்தும் அறிக்கை எச்சரித்துள்ளது.

"வெப்ப அலைகள், ஆரோக்கியத்தில் ஏற்படும் நேரடி தாக்கங்களான வெப்ப சோர்வு, பக்கவாதம் மற்றும் நீரிழப்பு மற்றும் பயிர் திரும்புதலின் அடிப்படையில் மறைமுக தாக்கங்கள் இரண்டையும் பார்ப்போம், அதாவது பயிர்கள் வேகமாக முதிர்ச்சியடையும் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து இருப்பினை இழக்கும். இது ஊட்டச்சத்து பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும், அல்லது மக்கள் சத்தான உணவைப் பெற இயலாமைக்கு வழிவகுக்கும் என்று, இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் (PHFI) சுற்றுச்சூழல் சுகாதார மையத்தின் துணை இயக்குனர் பூர்ணிமா பிரபாகரன் கூறினார். "ஊட்டச்சத்து குறைபாடு அதன் அனைத்து வடிவங்களிலும், மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையின் தீவிர தாக்கத்தையும் காணலாம். அதிகமான மக்கள் பதப்படுத்தப்பட்ட உணவை நம்பியிருப்பதால், நாங்கள் அதிக எடை அல்லது உடல் பருமனை நோக்கி நகர்வோம்" என்றார்.


பல நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகள், காலநிலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கு -தற்போதைய மற்றும் எதிர்காலத்திற்கு, சரியாகத் தயாராக இல்லை. 2021 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் உடல்நலம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த ஆய்வில், கணக்கெடுக்கப்பட்ட 91 நாடுகளில் 45 நாடுகள் மட்டுமே (49%) தங்களிடம் தேசிய சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றத் திட்டம் அல்லது உத்தி இருப்பதாகக் கூறின. தங்களது குடிமக்களின் ஆரோக்கியத்தில் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றிய மதிப்பீடுகளின் அடிப்படையில், மனித மற்றும் நிதி ஆதாரங்களை ஒதுக்கியதாக, எட்டு பேர் மட்டுமே கூறியுள்ளனர். 69% நாடுகள் போதுமான நிதியுதவி திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாக கூறியுள்ளன.

வறட்சி, உணவுப் பாதுகாப்பின்மை

கடந்த 2020 ஆம் ஆண்டில், உலகளாவிய வெப்பம் உலகெங்கிலும் உள்ள பிரதான பயிர்களைத் தாக்கியது, இது 1981-2010 உடன் ஒப்பிடும்போது மக்காச்சோளம் (6%), குளிர்கால கோதுமை (3%), சோயாபீன் (5.4%) மற்றும் அரிசி (1.8%) ஆகியவற்றின் உற்பத்தியில் சரிவுக்கு வழிவகுத்தது என, அறிக்கை கூறியது.உலகளவில், 2020 ஆம் ஆண்டில், உலகளாவிய நிலப்பரப்பில் 19% வரை கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது, இது 1950 மற்றும் 1999 க்கு இடையில் 13% ஐ விட அதிகமாக இல்லை என்று அறிக்கை கூறுகிறது. காலநிலை மாற்றம் வறட்சி நிகழ்வுகளின் அதிர்வெண், தீவிரம் மற்றும் கால அளவு அதிகரிப்பதற்கு உந்துதலாக உள்ளது, நீர் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் உணவு உற்பத்தியை அச்சுறுத்துகிறது, மேலும் காட்டுத்தீ மற்றும் மாசுபாடுகளின் ஆபத்தை அதிகரிக்கிறது.

இந்தியா, 2015 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், 2017 தவிர, பரவலான வறட்சியை சந்தித்து வருகிறது என்று, ஏப்ரல் 2019 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 42% நிலப்பரப்பு வறட்சியை எதிர்கொண்டதாக, வறட்சி கண்காணிப்பு தளத்தின் தகவல் தெரிவிக்கிறது. இதற்கு பருவமழை தோல்வி முதன்மைக் காரணமாகும்.

சமமற்ற தாக்கம்

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் குழந்தைகள், முதியோர்கள், சமூக-பொருளாதார ரீதியாக ஏழ்மையான சமூகங்கள் மற்றும் அடிப்படை சுகாதார பிரச்சனைகள் உள்ளவர்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள், காலநிலை மாற்றத்தால் மிகவும் ஆபத்தில் உள்ளன. உதாரணமாக, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகள், 2020 ஆம் ஆண்டில், சராசரியான உலகளாவிய சராசரியான 88 வேலை நேரங்களுக்கு எதிராக, வெப்ப வெளிப்பாட்டின் காரணமாக ஒரு தொழிலாளிக்கு 216-261 மணிநேர சாத்தியமான வேலையை இழந்தன.


வெப்பம் தொடர்பான இறப்புகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில், 2019 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 345,000 இறப்புகளை எட்டியுள்ளன என்று அறிக்கை கூறுகிறது. 2018 மற்றும் 2019 க்கு இடையில், ஐரோப்பாவைத் தவிர அனைத்து பிராந்தியங்களும் இந்த பாதிக்கப்படக்கூடிய வயதினரில், அதிக வெப்பம் தொடர்பான இறப்புகளைக் கண்டன.

"மாற்றும் காலநிலை வடிவங்களில் பரவும் நோய்களுக்கு சாதகமானவை மற்றும் இமயமலையின் மேல் பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியா போன்ற இந்த போக்கைக் காணாத நாடுகளின் சில பகுதிகளை பாதிக்கும்" என்று பிரபாகரன் கூறினார்.

இந்தியாவில் வெப்ப அலை 'பேரிடர்' இல்லை

2020 ஆம் ஆண்டில், சுமார் 100 இந்திய நகரங்கள் மற்றும் 23 மாநில அரசாங்கங்கள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) இணைந்து வெப்ப செயல் திட்டங்களை உருவாக்கின. இத்தகைய திட்டங்களுக்கு துல்லியமான வானிலை தரவு மற்றும் முன்னறிவிப்புகள், அத்துடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மற்றும் வளர்ந்து வரும் சுகாதார அச்சுறுத்தல்களின் கண்காணிப்பு தேவை. ஜூன் 2020 இல் நாங்கள் தெரிவித்தது போல், கடுமையான வெப்பத்தை திறம்பட சமாளிக்க இந்தியா அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில், மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் சுகாதாரத் தயார்நிலை மற்றும் பதிலை வலுப்படுத்தும் நோக்கத்துடன், காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான தேசிய செயல் திட்டத்தை, தேசிய சுகாதார இயக்கம் உருவாக்கியது என்று, பி.எச்.எப்.ஐ.- இன் பிரபாகரன் கூறினார். தற்போது, ​​இது தேசிய அளவில் செயல்படுத்தும் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது, மாநிலங்கள் தங்கள் சொந்த பாதிப்புகளுக்கு பொருத்தமான திட்டங்களுக்கான டெம்ப்ளேட்டாகப் பயன்படுத்துவதற்குப் பரப்ப வேண்டும்.

இந்தியாவில், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வெப்ப அலைகள் பேரிடராகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை, நிவாரணம் மற்றும் பின்னடைவைக் கட்டியெழுப்புவதற்கும், முன்னெச்சரிக்கை உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும், அரசின் பேரிடர் மறுமொழி நிதியை, அது இழக்கிறது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தயார்நிலை குறித்த தகவல்களை கோரி, நாங்கள் தொடர்பு கொண்டோம். பதிலைப் பெறும்போது, இக் கட்டுரையைப் புதுப்பிப்போம்.

மாசுபடுத்தும் எரிபொருட்களுக்கான நிர்பந்தம் தொடர்கிறது

இந்தியாவைப் போன்று ஏற்கனவே ஆபத்தில் உள்ள நாடுகள், தூய்மையான எரிசக்திக்கு மாற வேண்டிய அவசியத்திற்கு, திறம்பட பதிலளிக்கவில்லை என்று அறிக்கையின் முதன்மை ஆசிரியரான மரினா ரோமானெல்லோ, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "நிலக்கரியை படிப்படியாக வெளியேற்றுவது மற்றும் காற்று மாசுபாட்டை சிறப்பாக கட்டுப்படுத்துவது போன்ற பயனுள்ள கார்பன் நீக்க பாதைகளைப் பின்பற்றும் நாடுகள், ஆரோக்கியத்தில் குறைந்த தாக்கத்தைக் கண்டன" என்று அவர் கூறினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், புதுப்பிக்கத்தக்கவைகளுக்கு மாறுவதற்கு நாடுகள் உறுதியளித்த போதிலும், அறிக்கைக்காக மதிப்பாய்வு செய்யப்பட்ட 84 நாடுகளில், 65 நாடுகள் 2018 இல் புதைபடிவ எரிபொருட்களுக்கு மானியங்களை வழங்கியுள்ளன. பல சந்தர்ப்பங்களில், இந்த மானியங்கள் தேசிய சுகாதார பட்ஜெட்டின் கணிசமான விகிதத்திற்கு சமமாக உள்ளன.

செப்டம்பர் 2019 இல், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், நிலக்கரி மானியங்களை நிறுத்துமாறும், 2020க்குப் பிறகு நிலக்கரி ஆலைகளை உருவாக்க வேண்டாம் என்றும் நாடுகளை வலியுறுத்தினார். உலகெங்கிலும் உள்ள நாடுகள், ஒப்பீட்டளவில் மலிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஆதரவாக நிலக்கரியில் இயங்கும் ஆலைகளை புறக்கணித்து வரும் நிலையில், நிலக்கரியை மாசுபடுத்துவதில் தனியார் முதலீட்டிற்கு இந்தியா அழுத்தம் கொடுத்தது என்று, ஜூன் 2020 இல் நாங்கள் தெரிவித்தோம்.

மனித வளர்ச்சிக் குறியீட்டில் மோசமாக உள்ள நாடுகளில் உள்ள கிராமப்புற குடும்பங்களில் 5% மட்டுமே 2019 இல் சமையலுக்கு சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்தியது, அதற்கு பதிலாக உயிரி எரிபொருளை பெரிதும் நம்பியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. வீடுகளில் இந்த தீங்கு விளைவிக்கும் காற்று மாசுபடுத்திகளின் வெளிப்பாடு, 2019 இல் உலகளவில் 6.67 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்தியது.


2020 ஆம் ஆண்டின் முதல் ஊரடங்கின் போது, ​​இந்தியாவில் வீட்டுக் காற்று மாசுபாடு 2% அதிகரித்தது என்று, ஜூலை 2020 இல் தெரிவித்தோம். ஏற்கனவே இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள்தொகையில் சுமார் 78% பேர், தங்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தேவைகளுக்கு, திட எரிபொருளைப் பயன்படுத்துகின்றனர், இதனால் இதய நோய், பக்கவாதம், சுவாச நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஆபத்து உள்ளது.

மாற்றத்திற்கான சாளரம்

செப்டம்பர் 2021 இல், ஐநா சபையில் காலநிலை நெருக்கடி மற்றும் தடுப்பூசி ஏற்றத்தாழ்வு குறித்து, ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு உலகத் தலைவர்கள் அழைப்பு விடுத்தபோது, தொற்றுநோய் சர்வதேச அளவில் சுகாதார மற்றும் காலநிலை மாற்ற ஈடுபாட்டைத் தொடங்கியது. காலநிலைத் தணிப்பு மற்றும் தூய்மையான எரிசக்திக்கான உலகளாவிய அணுகல் மீதான அவசர நடவடிக்கை, காற்று மாசுபாடு மற்றும் ஆரோக்கியமான உணவுகளின் வெளிப்பாடு ஆகியவற்றால் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான இறப்புகளைத் தடுக்கலாம், அதே நேரத்தில் உலகளவில் சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க பங்களிக்கின்றன என்று, அறிக்கை குறிப்பிட்டது.

காலநிலை மாற்ற பேரிடர்களின் ஆரோக்கிய விளைவுகளை எதிர்கொள்ள, இந்தியா தனது சுகாதார செலவினங்களை, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆக அதிகரிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 2020 கட்டுரையில் குறிப்பிட்டோம்.

தேசிய சுகாதார திட்டம் 2019 இன் படி, 2017-18 ஆம் ஆண்டில் இந்தியா தனிநபர் ஆரோக்கியத்திற்காக ரூ.1,657 செலவிட்டுள்ளது. ஆனால், காலநிலை மாற்றத்தின் கூடுதல் நிர்பந்தங்களை சமாளிக்க, ஒரு நபருக்கு ரூ. 4,000க்கு மேல் செலவழிக்க வேண்டும் என்று, சுகாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்தியாவிலும் சுகாதாரப் பயிற்சியாளர்கள் குறைவு: உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நாட்டில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 778 மருத்துவர்கள் உள்ளனர்.

"பொது சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களை வலுப்படுத்த அரசு நிறுவனங்கள் மற்றும் நிதியிடம் இருந்து நமக்கு அர்ப்பணிப்பு தேவை. சுகாதாரம் அல்லது சுற்றுச்சூழல் அமைச்சகத்துடன் மட்டுப்படுத்தப்படாமல், அமைச்சகங்கள் முழுவதும் எங்களுக்கு குறுக்குவெட்டு பதில்கள் தேவை,"என்று பி.எச்.எப்.ஐ- இன் பிரபாகரன் கூறினார். பருவநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் சுகாதாரக் கேடுகளை எதிர்த்துப் போராடுவதற்கு, நாட்டின் தயார்நிலை குறித்த பதிலுக்காக, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தைத் தொடர்புகொண்டோம். பதிலைப் பெறும்போது கட்டுரையைப் புதுப்பிப்போம்.

கூடுதல் செய்தி,, தரவு பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தலை, நுஷைபா இக்பால் மேற்கொண்டார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.